அணைத்து சுபநிகழ்வுகளும் இனிதே நிறைவேற.. விவேக்.. சுகுனா திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு வீராச்சாமியையும் அழைத்ததால் அவரும் வந்திருந்தார்.
‘வாங்க..” என்று வீராச்சாமியை சுந்தரமும் சிவகாமியும் வரவேற்றார். சம்மந்தி என்ற முறையில் வீராச்சாமியை நன்றாக கவனித்தனர். வீராச்சாமியின் ஆசைப்படி.. பார்வதி தங்கநிற பார்டரில் ஏலக்காய்பச்சசை நிற பட்டு சாரியில்.. கல்வைத்த நகைகளோடு.. தேவதையாய் ஜொலித்தாள். அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி அவளுக்கு தனிஅழகை கொடுக்க.. அவளையே பார்த்திருந்தான் ரகு. அதற்கு நேர்மாறாக.. பார்வதி ரகுவை பார்க்கவேயில்லை சுசிலாவோடு மட்டும்தான் கொஞ்சம் சிரித்துப்பேசினாள்.
‘அண்ணி ஏன் டல்லா இருக்கிங்க..?” என்று அக்கறையாய் கேட்டான் ராஜா.
‘நான் நல்லாத்தான் இருக்கேன்.. “ என்று முதன்முறையாக ராஜாவிடம் சகஜமாக பேசினாள்.
அதில் சந்தோசமடைந்த ராஜா.. ‘மாமியார்கிட்ட மட்டும்தான் பேசுவிங்களா..? உங்க தங்கச்சிகிட்ட பேசமாட்டிங்களா..?” என்று மீனாவை காண்பித்தான்.
மீனாவை அழைத்து.. ‘நீ எப்படி இவ்ளோ முடியை மெயின்டன் பண்ற..?” என்று அவளின் நீண்ட பின்னலை ரசித்தவள்.. ‘இந்த பட்டு தாவனியில நீ ரொம்ப அழகாயிருக்க..” என்றாள்.
‘நீங்கதான் இங்க இருக்க எல்லாரையும் விட ரொம்ப அழகாயிருக்கிங்க..” என்றாள்.
‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அழகு. நம்ம சுகுனாவைப்பாரு அவகிட்ட இருக்கிற இன்னொசென்ட்தான் அவளுக்கு தனிஅழகை கொடுக்குது.” என்று நிறைய பேசினார்கள். ஆனால் ரகுவை பார்க்கவேயில்லை.
பொறுத்துப்பொறுத்து பார்த்த ரகு.. ‘பார்வதி வா சாப்பிடலாம்..” என்றான்.
‘நான் எங்கப்பாவோட சாப்பிட்டுக்கிறேன்.. நீங்க போய் சாப்பிடுங்க.” என்றாள்.
‘நான் மாமாவை இப்பதான் சாப்பிட வச்சேன். ஸ்டேசன்ல இருந்து அவருக்கு போன் வந்தது. அவர் கிளம்பிட்டார். இப்ப நீ வரப்போறியா..? இல்லையா..?” என்றான் அழுத்தமாக.
‘போய் சாப்பிடும்மா..” என்று சுசிலாவும் சொன்னார். பிறகு எழுந்து வந்தவள்.. ரகுவைப் பாராமலே அவனருகில் உக்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவன் பிறகு பார்வதியை மண்டபத்திற்கு பின்புறம் அழைத்துப்போனான்.
‘எதுக்கு என்னை இழுத்திட்டு வந்திருக்கிங்க..?” என்று அவன் முகம்பாராமல் கேட்டாள்.
‘முதல்ல என்னை பார்த்து பேசு..” என்றான்.
‘ஏன்..? இந்த பதினைஞ்சு நாளா.. பார்க்காமத்தான இருக்கேன்..‚ இப்ப மட்டும் என்ன..?” என்று விலகப்போனவளை.. விலகமுடியாதபடி சுவற்றை ஒட்டி நிற்க வைத்து அவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றினான்.
‘இப்ப என்னை விடப்போறிங்களா..? இல்ல கத்தட்டுமா..?”
‘விடமாட்டேன் கத்து.. யாராவது வந்து கேட்டா என்னன்னு சொல்வ..? என் புருசன் என்னை விடமாட்றான்னு சொல்வியா..?” என்றான் கோபமாக.
‘இப்படி மடக்கிப் பேசறதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல..” என்று முனகினாள்.
‘சரி.. வா நாம வெளில போலாம்.” என்றான்.
‘உங்க கூட ஊர்சுத்தவெல்லாம் எனக்கு நேரமில்ல நிறைய வேலையிருக்கு..”என்று கடுப்பாக சொன்னாள்.
‘அந்த வேலையே இல்லாத பண்ணிடுவேன்..‚ ஒழுங்கா வா..” என்றான்.
‘வேலையில்லன்னா.. வெங்காயமாச்சி இந்த பதினைஞ்சு நாளா இருந்தமாதிரியே நான் இருந்துக்கிறேன் எங்கையும் உங்ககூட வரமாட்டேன்.. உங்களால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கிங்க..‚” என்று அவளும் ஆத்திரமாக சொன்னாள்.
‘நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்கேன்னுதான் நான் உன்னை பார்க்க வரலை..” என்று பொறுமையாய் சொன்னான் ரகு.
‘இப்பவும் டிஸ்டர்பாதான் இருக்கேன்.. போங்க இங்கயிருந்து..” என்று கத்திவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு போனாள்.
சுந்தரம் சுசிலாவிடம்.. ‘எவ்ளோ நேரம் உன்மருமகளும் நீயும் பேசிட்டு இருந்திங்க.. பார்வதி என்ன சொன்னா.. ரொம்ப டல்லா இருக்கிமாதிரி இருக்கா..?” என்று கேட்டார்.
‘பார்வதி நீ ஏன் இப்படி பிகேவ் பண்றன்னு எனக்கு தெரியும் நான் எது செய்தாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. தேவையில்லாம உன்னை நீயே வருத்திக்காத..” என்றான்.
ரகுவிற்கு பதில் சொல்ல வந்தவள்.. அருகில் அணைவரும் இருப்பதை உணர்ந்து.. தனியாக போய்.. தன் மொபைலை எடுத்து.. எது எனக்கு நல்லது..? என்னை இப்படி தனியா தவிக்கவிடடுறியே அதுவா..? என்று குறுஞ்செய்தியை ரகுவிற்கு அனுப்பி கண்ணீர் வடித்தாள்.
அவளை வாஞ்சையோடு பார்த்த ரகு. அவள் பக்கத்தில் போவதற்குள்.. பார்வதியை ஓரு படையே சூழ்ந்துகொண்டது. டிப்பார்ட்மெண்டில் வேலைசெய்யும் அலுவலர்கள்.. ஒரு சில தலைமை ஆசிரியர்கள்.. என்று ரகுவின் சொந்தங்களாகவும் இருக்க அணைவரும் சுகுனாவின் கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.
பார்வதியை மரியாதையோடு பார்த்தவர்கள்.. ’மேடம் என்ன தனியா உக்கார்ந்திருக்கிங்க..? எங்க உங்க ஹேண்சம் கணவர்..? அவரை ஏமாத்திட்டு போன்லயே ஆ பீஸ் ஒர்க் பார்த்திட்டு இருக்கிங்களா..?” என்று வழக்கடித்தனர்.
‘அப்படியெல்லாம் இல்ல அவர்தான் ரொம்ப பிசியா இருக்கார்..” என்று சிரமப்பட்டு புன்னகையை வரவழைத்தாள். பிறகு அங்கு வந்துகொண்டிருந்த பழனியைப் பார்த்து.. ‘வாங்க பழனி.. “ என்றவள்..
‘பழனி.. யாருக்கோ பயந்துதான் அன்னைக்கு அப்படி நடந்துகிட்டிங்கன்னு நான் கூட தப்பா நினைச்சிட்டேன் இன்னைக்குதான தெரியுது..? இந்த மட்டையும் எங்க குடும்பகுட்டைலதான் ஊறிட்டு இருந்திருக்குன்னு..‚ ஆபீஸ்க்கு வாங்க… உங்களை பேசிக்கிறேன்..” என்று மிரட்டியபடியே சிரித்தாள்.
‘ஐயோ.. மேடம்..” என்று பதறி.. ‘சார் எதாவது சொல்லுங்க சார்.. இப்படி அமைதியா இருக்கிங்களே..” என்று பழனி ரகுவிடம் உதவியை நாட..
‘பழனி நீ போய் முதல்ல சாப்பிடு என்று அனுப்பி வைத்தவன்.. ‘உண்மையா பழனி நம்ம சொந்தமெல்லாம் இல்ல ஆனா.. அவங்க தாத்தா.. அப்பான்னு எல்லாரும் நம்ம எஸ்டேட்லதான் வேலைசெய்தாங்க பழனிக்கு அவர் படிச்சிமுடிச்தும் இந்த வேலைகிடைச்சிடுச்சி ஆனாலும் பழனி நம்ம சொந்தமாதிரித்தான்.” என்று சிரித்தான்.
‘இளிக்காதிங்க.. நான் உங்களை ஒன்னும் கேக்கல..” என்று மிரட்டினாள்.
‘தனியா நீ மட்டும்தான் தவிக்கிறியா..? எனக்கு மட்டும் அந்த தவிப்பிருக்காதா…? என்னை பார்த்தா.. உனக்கு ரொம்ப டிஸ்டர்பா இருக்குன்னு நீதான சொன்ன..? அதனாலதான் நான் உன்னை பார்க்க வரலை..‚ அதுக்காக இப்படியா அழுவ..? நீயெல்லாம் கெஜட்டட்ன்னு வெளிய சொல்லிக்காத.. சிரிப்பாங்க..” என்றான்.
‘உங்ககிட்ட பேசினா உங்கமேல எந்த தப்பும் இல்லைங்கிற மாதிரி நீங்க ப்ரூவ் பண்ணிடுவிங்க..” என்றாள்.
‘ஆமா.. நீ பெரிய ஜட்ஜ்.. உன்கிட்ட நான் தப்பில்லைன்னு ப்ரூவ் பண்றேன்.. ஆளும் அவளும்..” என்று இழுத்தவன் ‘சரி.. எங்கையும் வெளில போக வேண்டாம் இன்னைக்கு கொஞ்சம் சேன்ஜ்சுக்கு வேற இடத்துக்கு போலாம்.” என்றான்.
‘நான் எங்கையும் வரலை நான் என்னோட வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கனும்..” என்றாள்.
‘அதைத்தான் நானும் சொல்ல வரேன்.. உன்னோட வீட்டுக்கு .. உன்னோட ரூம்க்கே போய்டலாம்.“ என்று சிரித்து கண்ணடித்தான். ஆனால் பார்வதியின் முகத்தில் சிரிப்பில்லை. மாறாக முகம் அவ்வளவு கடினமாக மாறியது. அத்தனை பேர் முன்னிலையிலும் ரகுவின் கையைப் பிடித்து ஒரு மறைவிடத்திற்கு இழுத்து வந்தவள்..
‘கல்யாணத்துக்கு முன்னாடி நாம ஒன்னா இருந்ததைப்பத்தி இப்பவரைக்கும் நான் வருத்தப்பட்டது இல்ல இன்னும் சொல்லப்போனா… அதை நமக்கான புரிதல் பரிமாற்றமாத்தான் பார்த்தேன். ஆனா.. இப்ப அப்படி தோணலை கல்யாணம் பண்ணியும் நாம இப்படி திருட்டுத்தனமா இருக்கிறது நம்மளை நாமே அசிங்கப்படுத்திக்கிறமாதிரி இருக்கு.” என்று கோபமாய் கத்தி ‘ஆனாலும் என்மனசு ஒவ்வொரு நிமிசமும்.. உங்களைத்தான் தேடுது. நான் என்ன பண்ணட்டும்..?” என்றவள் கண் கலங்கியது.
பார்வதியை அணைத்தவன்.. ‘நான் நாளைக்கே எங்கப்பாவோட வந்து உன்னை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப்போறேன்..” என்று சொன்னான்.
‘என்னைப்பத்தி எல்லாம் புரிஞ்சிருந்தும்.. ஏன் என்னை வந்து மாமா கூப்பிடலை..? எதோ ஒன்னு இருக்குன்னுதான அர்த்தம்..‚ அது விலகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். இனிமே நாம ஒன்னா இருக்கனும்னா.. அது நம்ம வீட்ல நம்மோட பெட்ரூம்லையாத்தான் இருக்கனும்..‚” என்று கண்டிப்புடன் சொல்லி ரகுவை விடுத்து மண்டபத்துக்குள் வந்தாள்.