விவேக் வீட்லதான் எல்லாரும் போய்ட்டாங்கல்ல.. இப்பவாவது என்னை கூட்டிட்டுப்போய் விடுங்க..” என்று ரகுவிடம் கெஞ்சினாள்.
‘பெரிய இவ மாதிரி வண்டியில ஏறி உக்கார்ந்துகிட்டு வாயடிப்ப..‚ இப்ப போடி பார்க்கலாம்..”என்று பைக் சாவியை அவளிடம் தூக்கிப்போட்டு சிரித்தான்.
ஓஹோ.. எனக்கு பைக் ஓட்டத்தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா..? என்று மனதில் நினைத்தவள் இப்பன்னு பார்த்து சாரியில வேற இருக்கோமே.. என யோசித்து.. ‘சரி.. நான் ஆபீஸ்க்கு மூனு மணிக்கு மேல போய்க்கிறேன். இப்ப மணி இரண்டுதான ஆகுது.. வாங்க.. வீட்டுக்கு போலாம் அங்க போய் இந்த சாரியை முதல்ல மாத்திக்கிறேன் அப்புறமா உங்க பைக்கிலயே ஆ பீஸ்க்கு வந்துக்கிறேன்..” என்றாள்.
‘சரி.. வா..” என்றழைத்துப்போனான்.
அவளின் ரூமிற்குள் சென்று தாழ் போட்டவள் பத்தே நிமிடத்தில் நீலநிறத்தில் முழுக்கையோடு இருக்கும் லாங் டாப்சும் டார்க் ஜீன்சும் அணிந்து ‘வாங்க போலாம்..” என்று வெளியே வந்தாள்.
பார்வதி ஸ்கூட்டியை எடுக்காமல் பைக் பக்கத்தில் போய் நிற்கவும் ‘ஒழுங்கா உன் ஸ்கூட்டியிலயே போய்க்கோ.. என்கூட வந்தின்ன அப்புறம் வண்டி ஆ பீஸ்க்கு போகாது..”
‘அது எப்படி போகாதுன்னு நானும் பார்க்கிறேன்..‚” என்று நகராமல் நின்றாள்.
‘ஓஹோ.. அந்தளவுக்கு தைரியம் வந்திடுச்சா..? சரி வா பார்த்துக்கலாம்..” என்று ரகு பைக்கில் உக்கார்ந்து கீயை போட்டான். ‘முதல்ல இறங்குங்க..” என்றாள்.
‘இப்ப என்ன பிரச்சணை உனக்கு..?” என்று இறங்கினான்.
பைக்கை நீங்க ஓட்டினாஇ அது ஆ பீஸ்க்கு போகாதுன்னு எனக்கு தெரியாதா..? பின்னாடி உக்காருங்க..‚” என்று பைக்கில் உக்கார்ந்து இ ‘ம்ம்.. உக்காருங்க…” என்று அழகாய் புருவத்தை தூக்கியபடி ரகுவை ஒரு பார்வை பார்த்து பைக்கை முறுக்கினாள்.
‘ஏய்.. விளையாடாத பார்வதி விழுந்திடப் போற இறங்கு..” என்று சாவியை எடுத்தான்.
‘என்னவோ பெரிய இவமாதிரின்னு என்னை சொல்லி சாவியை தூக்கிப்போட்டிங்க..‚ இப்ப என்ன உங்களுக்கு பயமா இருக்கா..?” என்றாள்.
‘சரி.. நீ பெரிய்…ய இவதான்.. நான் ஒத்துக்கிறேன்.. இறங்கு.” என்றான்.
‘அது எப்படி..? நான் நிரூபிச்சாத்தான் நீங்க ஒத்துக்கனும்.” என்று அவன் கையிலிருந்து சாவியைப் பிடுங்கி மீண்டும் ஸ்டார்ட் செய்து ஒரு ரவுண்ட் போனவள்.. மீண்டும் ரகுவிடம் வந்து.. ‘வா ரகு சீக்கிரம்…” என்றாள்.
அவள் பெயர் சொல்லி அழைத்ததை கூட கவனியாமல் ‘இதை எப்ப கத்துக்கிட்ட…?” என்றான் ஆச்சரியமாய்.
‘நீ பைக்ல ஸ்டைலா வரும்போது ரொம்ப அழகாயிருப்பியா..? அதுதான் ஓட்டிக் கத்துக்கலாம்னு தோணுச்சிஇ நம்ம எஸ். ஐ. அங்கிள் பைக்லதான் அப்பாக்கு தெரியாம ஓட்டிக் கத்துக்கிட்டேன்.” என்றாள்.
‘நீ நல்லாத்தான் ஓட்ற இறங்கு நான் ஓட்றன்..” என்றான்.
‘வேற ஊர்னா ஓ.கே. இங்க எல்லாரும் நமக்கு தெரிஞ்சவங்க.. இன்னொரு நாளைக்கு வரேன் இப்ப இறங்கு..” என்றான் கெஞ்சுதலாய்.
‘உங்ககிட்ட இருக்கிற பிரச்சணையே இதுதான்.. ஒரு புருசன் பொண்டாட்டி வண்டியில போறதுக்கு யார் என்ன சொல்வாங்க..? உக்காருங்க..” என்று அன்று ரகு சொன்னதை அவனைப்போலவே சொல்லிகாட்டினாள்.
சத்தமாக சிரித்தவன்.. ‘இன்னைக்கு ஒரு முடிவோடதான் நீ இருக்கிறயாட்டங்குது..” என்று அவள் பின்னால் உக்கார்ந்து ‘எவனெல்லாம் என்னை காமெடி பீசா பார்க்கப்போறான்னு தெரியலையே..?” என்று புலம்பிக்கொண்டே போனான்.
‘ஏய்.. இந்த பக்கம் எதுக்குடி போற..?” என்று பதறினான். ஏனென்றால் ரகுவின் அலுவலகக்கட்டிடம் அங்குதான் இருக்கிறது. ரகுவின் அலுவலகத்திற்குள் வந்ததும் ரகுவின் பைக் சத்தம் கேட்டு உள்ளே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வெளியே எட்டிப்பார்த்தனர். கிட்டதட்ட பாதிக்கு மேற்பட்டோர் ரகு பார்வதி பின்னால் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டனர். அதை உணர்ந்து… ரகுவை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள்.. தனது அலுவலகத்திற்கு போகும்பாதையில் வண்டியை ஓட்டினாள்.
தூரத்தில் ஒரு கார் வருவதைப் பார்த்தவள்.. ‘ஏங்க.. இது உங்கப்பா கார்தான..?” என்று பதட்டமாய் கேட்டபடி வண்டியை நிறுத்திஇ ‘சீக்கிரம் இறங்குங்க..” என்று பதறினாள். ரகு இறங்கி இவள் இறங்குவதற்குள்.. கார் பக்கத்தில் வந்து நின்றது.
காரில் இருந்து வேமாக இறங்கி வந்த சுந்தரத்தை பார்த்து பார்வதிக்கு பயத்தில் வேர்த்துவிட்டது. இருவரும் ஒன்றாக வண்டியில் வந்ததற்குத்தான் கோபப்படுகிறார் என்று பார்வதி நினைத்திருக்க..
‘அறிவிருக்கா உனக்கு…? “ என்று தன் மகனைப் பார்த்து கேட்டார். சுந்தரத்தோடு அவரது மனைவி ராஜா நந்தினி என்று அணைவரும் இருந்தனர். ரகு அமைதியாக நிற்கவும் ‘கர்பமா இருக்கும்போது.. வண்டியில போறதே தப்பு இதுல டிரைவிங்வேற..? அதுவும் பைக்கல..” என்று பார்வதியைப் பார்த்து கோபமாக சொன்னவர் ரகுவை பார்த்து முறைத்தார். பார்வதி அமைதியாய் நின்றியருந்தாள்.
‘அண்ணி.. நீங்க பைக்கெல்லாம் ஓட்டுவிங்களா…? என்ன புரோ சொல்லவேயில்ல..” என்று ஆச்சர்யமாய் கேட்ட ராஜாவிடம் ‘ஆமா.. இப்ப இது ரொம்ப முக்கியம்.. வந்து பைக்கை எடுடா..” என்று ராஜாவிடம் தன் கோபத்தை காட்டினார் சுந்தரம்.
‘அப்ப கார் யாரு ஓட்றதுப்பா..?” என்றான் ராஜா.
‘ஏன்…? உங்கண்ணகாரனுக்கு ஓட்டத்தெரியாதா..? வாடான்னா..?” என்று கோபமாய் சொல்லவும் ராஜா பைக்கை எடுக்க.. சுந்தரம் பின்னால் உக்கார்ந்துகொண்டு ‘வீட்டுக்கு போ..” என்று சுந்தரம் சொல்லவும் இருவரும் கிளம்பிவிட்டனர்.
சுந்தரம் சென்றதும் ‘கார்ல வந்து ஏறு பார்வதி..” என்று சுசிலா அழைக்க.. ‘இங்கயிருந்து ஆபீஸ் பக்கம்தான் நான் நடந்து போய்க்குவேன்..” என்று தயக்கமாய் சொன்னாள் பார்வதி.
‘நீ வா..” என்று பார்வதியின் கையைப் பிடித்து காருக்குள் இழுத்துப்போனான் ரகு. சுசிலா பின் சீட்டில்தான் அமர்ந்திருந்தார். ‘நந்தினி.. நீ ரகுவோட முன்னாடிபோய் உக்காரு.. நான் பார்வதியோட கொஞ்சம் பேசனும்” என்று சொல்லிவிட்டு ‘பார்வதி நீ இங்க வா..” என்று தன் பக்கத்தில் உக்கார வைத்து ‘இப்ப உடம்பு பரவாயில்லையா..?” என்றார்.
‘மறுபடியும் செக்கப் போகும்போது சொல்லு ஹாஸ்பிட்டலுக்கு நானும் வரேன்..” என்றார்.
சரி என்று தலையசைத்தவளிடம் ‘நீ என்னவோ பெரிய வேலை பார்க்கிறியாம்..? என்ன வேலை..?” என்று சுசிலா வெள்ளந்தியாய் கேட்டார்.
‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்கத்தை.. யார் எந்த வேலை செய்தாலும் அதை சரியா செய்தாங்கன்னா.. எந்த வேலையா இருந்தாலும் அது பெரிய வேலைதான்.. உதாரணத்துக்கு… நீங்க எப்படி வீட்டையும் உங்க புள்ளைங்களையும் மாமாவையும்.. ரொம்ப அக்கறையாப் பார்த்துக்கிறிங்க..? அப்ப அதுவும் ஒரு பெரிய வேலைதான..?” என்றாள்.
கண்ணாடி வழியாக பார்வதியைப் பார்த்து சிரித்தான் ரகு. ‘என் புருசனைவிட உன் புருசனை பார்த்துக்கிறதுதான் ரொம்ப பெரிய வேலையா இருக்கு..‚ நீ எப்ப அவனை பக்கத்தில இருந்து பார்த்துகிட்டு எனக்கு ரெஸ்ட் கொடுக்கப்போற..?” என்றார்.
உடனே பார்வதி கண்கலங்கி ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள். பார்வதியின் கன்னத்தை பிடித்து தன்புறம் திருப்பிய சுசிலா ‘அழாத.. சுகுனா கல்யாணம் முடிஞ்சதும்.. உங்க மாமாவே இதுக்கு ஒரு வழி பண்ணிடுவார். இன்னைக்கெல்லாம் அவர் உன்னையேத்தான் பார்த்திட்டு இருந்தார். இப்பவெல்லாம் அவருக்கு உன்மேல கோபமில்ல..”
பார்வதி வேலைசெய்யும் இடம் வந்ததும் காரை நிறுத்தி வெளியே வந்த ரகு. தன் எஸ்டேட்டில் வேலை செய்யும் இராமுவிற்கு போன் செய்து ‘பார்வதியோட ஸ்கூட்டி அவளோட வீட்ல இருக்கும்.. “ எனும்போதே ‘ஸ்கூட்டி வேண்டாம்.. நான் ஆபீஸ் ஜீப்ல போய்க்கிறேன்..” என ரகுவிடம் சொல்லி சிறு தலையசைப்போடு அலுவலகத்துக்குள் சென்றாள்.
ரகு வீட்டிற்குள் போனதும்.. ‘ரகு.. அண்ணி எப்படி பைக்கெல்லாம் ஓட்றாங்க..? நீ கத்துகொடுத்தியா..?” என்றான்.
‘அவ அவங்க அப்பாக்கே தெரியாம அந்த எஸ்.பி. கிட்ட சொல்லி கத்துருக்காடா.. அவ பைக் ஓட்டுவான்னு எனக்கே இன்னைக்குதான் தெரியும்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. பார்வதியிடமிருந்து ரகுவிற்கு வீடியோ கால் வரவும்.. ‘பார்வதிதான் பண்றா.. “ எனும்போதே ராஜா வெளியே போக எழுந்தான்.
‘பரவாயில்ல நீயும் இரு.. “ என்று அட்டென் செய்தான்.
‘ரகு.. ஆபீஸ்ல இருக்கவே பிடிக்கலை..” என்று கண்கலங்கிய பிறகுதான் பார்வதி ராஜா பக்கத்தில் இருப்பதை பார்த்து கண்களை துடைத்தாள்.
‘என்னாச்சி பார்வதி..?” என்று ரகுராம் பதற..
‘மாமா என்மேல கோபமா இருக்கும்போது கூட பரவாயில்லையா இருந்துச்சி இப்ப என்னடான்னா.. என்மேல அக்கறை வேற காட்றார். அத்தையும் என்கிட்ட அன்பா பேசறாங்க. இப்படியெல்லாம் நடக்கிறதால என் மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது.” என்றாள்.
‘நீ தேவையில்லாம யோசிக்காத.. “என்றான்.
‘நான் நினைக்கிறது தேவையில்லாத யோசனையா..?” என்று கத்தி கட் பண்ணி விட்டாள்.
‘என்ன ரகு இந்த வெடி வெடிக்கிறாங்க..?” என்றான் ராஜா.
‘அவளுக்கு நம்மளும் வேணும் அவங்க அப்பாவை விட்டுட்டும் வரமுடியலை.. பத்தாததுக்கு இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் வேற அன்பை காட்டிட்டாங்களா..? அதுதான் ரொம்ப டிஸ்டர்பா இருக்கா..” என்று விளக்கமளித்து பார்வதிக்கு ரகு வீடியோ கால் பண்ணினான்.
ஆன் செய்துஇ ‘என்ன..?” என்றாள் கடுப்புடன்.
‘நான் வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டுமா..?” என்றான் தன்மையாக.
‘ஒன்னும் வேணாம்..”என்று முறுக்கினாள்.
‘அண்ணி நானு…” என்றான் ராஜா.
‘நல்லா தெரிஞ்ச பேயும் வேணாம் கொஞ்சமா தெரிஞ்ச பிசாசும் வேணாம்..” என்று சொல்லி மீண்டும் கட் பண்ணினாள். ரகு பலமாக சிரித்தான்.
‘நான் பிசாசானா உங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு சந்தோசமா..?” என்று ராஜாவும் சிரித்து.. ‘ஆமா.. நீ கார்லதான கூட்டிட்டுப்போய் விட்ட..? இப்ப எப்படி வீட்டுக்கு போவாங்க..? நம்மளையும் வரவேணாம்னு சொல்றாங்க..” என்றான்.
‘அது சரி… ஒரு முக்கியமான விசயம்.. “ என்று இழுத்தவன்.. கூப்பிடறதெல்லாம் பேர்சொல்லி மட்டும்தானா..? இல்ல அதுக்கும்மேலையா..?” என்று ஐ பட வில்லன்களைப்போல் கேட்டான்.
‘இப்ப கொஞ்ச நாளா.. அதுக்கும் மேலத்தான் போய்ட்டிருக்கு” என்று ரகுவும் ராஜாவைப்போலவே சொல்லி சிரித்தான்.
‘பார்த்து ராஜா..‚ அவளுக்கு பிடிக்காம நமக்காக அவனை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்கப்போறா..” என்று கவலை தெரிவித்தான் ரகு.
‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரகு.. சுகுனாவை நான் கிண்டல் பண்ணும்போது வெக்கப்பட்டுட்டுதான் இருந்தா..‚ கோபப்படலை எது எப்படின்னாலும்.. இனிமே விவேக்தான் அவளுக்கு கரெக்ட் சாய்ஸ் உண்மையாவே அவன் ரொம்ப நல்லகேரக்டர் அவளைப் பத்தி நீ கவலைப்படாத..” என்று உற்சாகமளித்தான்.
‘சரி.. நான் ஆபீஸ் கிளம்பறேன் நீயும் வரியா..?” என்றான் ரகுராம்.
‘இல்ல ரகு அப்பா எஸ்டேட் வரைக்கும் போகனும்னு என்கிட்ட சொல்லியிருக்கார்.. நான் அவர்கூட போகனும்.. நீ போ..” என்றான்.
‘சரி.. நான் கிளம்பறேன்..” என்று ரகுவின் அலுவலகத்திற்கு வந்தான். ஆனால் அவனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பார்வதி நினைவாகத்தான் இருந்தான். காதலிக்கும் காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை நேரில் பார்ப்பதற்கே பார்வதி அனுமதிக்கமாட்டாள். நான்கு வருடங்களாக அதிகம் போனில்தான் தினமும் பேசிக்கொள்வார்கள். ஆறு மாதத்திற்கு முன்பு பார்வதியின் பிறந்தநாள் வரவும் ரகு தனக்கு ட்ரீட் வேணும் என்று அடம்பிடித்து தனது எஸ்டேட் பங்களாவிற்கு அழைத்துப்போனான். அதன் பிறகு.. அவர்கள் நேரில் சந்திப்பதற்கு அந்த இடத்தையே வழக்கமாக்கிக்கொண்டார்கள். அப்பொழுதும் எத்தனை முறை கெஞ்சினாலும் மாதத்தற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும்தான் வருவாள். ஆனால் இப்பொழுது அதற்கு நேர் மாறாக ஒரு பத்து நாட்களாகவே.. அவள் எப்பொழுதும் தன்னோடே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள் என்று ரகுவும் அறிந்துதான் இருந்தான். ஆனால் என்ன நடந்தாலும் தன் அப்பாவே இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்.
‘சார்.. டீ ஸ்னாக்ஸ்.. எதாவது வேணுங்களா..?” என்று உதவியாளன் கேட்க.. ‘டைம் என்ன..? என்று பார்த்தான். இரவு ஏழுமணியானது. இவ்ளோ டைம் ஆச்சா..? என யோசித்து ‘எதுவும் வேணாம்.. நான் கிளம்பறேன்..” என்று நேராக பார்வதி வீட்டிற்கு சென்றான்.
பார்வதியும்.. அவளுடை அப்பாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுவைப் பார்த்ததும்… தனதறைக்குள் போய் கதவை தாழ்போட்டுக்கொண்டாள். கதவருகே போய் நின்றவன்.. ‘ரொம்ப நல்லதாப்போச்சி உள்ளையே இரு நான் என் மாமாவைப் பார்க்கத்தான் வந்தேன்..” என சொல்லி ‘மாமா.. நான் கொஞ்சம் உங்ககிட்ட தனியா பேசனும்.. வாங்க வெளிய தோட்டத்தில உக்கார்ந்து பேசலாம்..” என்று அழைத்துப்போனான்.
எதுவும் பேசாமல் ரகுவோடு வெளியே வந்ததும்.. ‘எல்லாரும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்கப்பா.. அப்படின்னு சந்தோசமாத்தான சொன்னா…? இப்ப என்ன உங்களைப் பார்த்ததும் இப்படி பிகேவ் பண்றா…?” என்றார்.
‘அங்க எல்லாம் ஒரு பிரச்சணையும் இல்லமாமா. இவளுக்குதான் கிறுக்கு பிடிச்சிருக்கு..” என்று சிரித்தான்.
‘உன்னுடைய சிரிப்பு பொய்யா இருக்கு..‚ அப்ப.. முதல் முறையா பார்வதி என்கிட்ட ஏதோ மறைக்கிறா..?” என்று சொல்லி வேதனையடைந்தார்.
‘நீங்க இப்படி வேதனைப் படற அளவுக்கு ஒன்னும் நடந்திடல ரிலாக்சா இருங்க..“ என சொல்லி சற்று நேரம் அமைதிகாத்தவன்.. ‘கன்சீவா இருக்கிறதாலோ என்னவோ தெரியலை மாமா.. இப்ப கொஞ்ச நாளா நான் அவளோடவே இருக்கனும்னு நினைக்கிறா.. அது எனக்கும் தெரியும் பார்வதியை பிரிஞ்சி இருக்கிறது அவளை விட ஆயிரம் மடங்கு எனக்குத்தான் ரொம்ப வேதனையா இருக்கு.. எங்கப்பா பார்வதியை மனசாற ஏத்துக்கனும் அவர் மனசில.. அவமட்டும்தான் நமக்கேத்த மருமகன்னும் நம்ம மகனுக்கேத்த பொண்டாட்டின்னும் நினைக்கனும் அதுக்காகத்தான் நான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். அப்புறம் இன்னொன்னு.. இது எல்லாம் நல்லபடியா முடிஞ்சாலும்.. எனக்கே பார்வதியை உங்ககிட்டயிருந்து கூட்டிட்டுப்போறதுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ என்னோட வந்திட்டா.. நீங்க ரொம்ப தனிமையா பீல் பண்ணுவிங்க.. அத்தை உயிரோட இருந்தாலுமே.. அவதான் உங்களுக்கு எல்லாமும்னு எனக்கு தெரியும்.” என்று இதுவரை சீரியசாய் பேசிக்கொண்டிருந்தவன்.. இவர்களைத் தேடிக்கொண்டு வெளியே வந்த பார்வதியைப் பார்த்ததும்.. சற்று இலகுவாகி.. ‘அதனால இன்னும் கொஞ்சநாள் கழிச்சி.. ஒரு குட்டி பார்வதியை உங்ககிட்ட கொடுத்திட்டு என் பார்வதியை நான் என்னோட கூட்டிட்டு போய்டப்போறேன்..” என்று சிரித்தான்.
‘உண்மையாவே பார்வதிக்காக நீங்க இவ்ளோதூரம் யோசிக்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. பார்வதி சின்ன வயசில இருந்து ஹாஸ்டல்லதான் அதிகம் இருந்தா.. என் சிவகாமி இருக்கும்போதே.. நானும் என் பொண்ணும் தினமும் கோவில்லதான் மீட் பண்ணுவோம் அதேமாதிரி இப்பவும் மீட் பண்ணிக்குவோம். அதுவுமில்லாம உங்க வீடு என்ன வெளியூர்லயா இருக்கு..? இரண்டு தெருதான இடையில இருக்கு எனக்கு பார்வதி சந்தோசம்தான் முக்கியம்..‚ எனக்காக நீங்க யோசிக்காதிங்க..” என்று தன் மகளுக்காக பேசினார்.
இவங்க இரண்டுபேரும் அப்படி என்ன பேசிக்கிறாங்க..? என்று யோசித்துக்கொண்டே அவர்கள் பக்கத்தில் வரவும்.. ‘மாமா.. நாம என்ன பேசறோம்னு ஒட்டுக்கேக்கிறாங்க.. அதனால நாம அப்புறம் பேசிக்கலாம்…” என்று சிரித்தான்.
‘என்ன..? எப்பப்பார்த்தாலும் இதைசொல்லியே என்னை மிரட்டுறிங்க..? வந்துக்கோங்க.. அப்படி என்னதான் பண்ணிடுறிங்கன்னு நானும் பார்த்திடறேன்..‚” என்றாள் திமிராக.
‘நான் சொன்னது… என் மாமனார் வேலைசெய்யிற இடம்.‚“ என்று எச்சரித்தான்.
‘ஏன்..? அவருக்கும் தாலிகட்டியிருக்கிங்களா..?” என்று கடுப்பாக கேட்டாள்.
‘கட்டிட்டாப் போச்சி..” என்று சிரித்தவன்.. ‘சரி.. ஒரே ஒரு கேள்வி.. காலைல நான்தான உன்னை கூட்டிட்டுப்போனேன்.. என்னை வரவேணாம்னு சொல்லிட்டு இவ்ளோ நாளா இல்லாம.. எதுக்கு இன்னைக்கு மட்டும் ஆ பீஸ் கார்ல வந்த..?” என்றான்.
‘அதெல்லாம் என் இஷ்ட்டம்.. எனக்காகத்தான கவர்ன்மெண்ட்ல அலாட் பண்ணியிருக்காங்க..‚ உங்களுக்கென்ன போச்சி..?”என்றாள்.
சிரித்துக்கொண்டே.. ‘எனக்கொன்னும் போகலை.. நாளைக்கு நான் பைக் எடுத்திட்டு வரேன்.. ரெடியா இரு..” என்றான்.
‘இப்ப.. என்ன..?” என்று அவனை முறைத்து.. ‘அப்பா.. அவங்கப்பா.. நேத்து இவர் என்னை பைக்ல கூட்டிட்டு வரதைப் பார்த்திட்டு கன்சீவா இருக்கும்போது இப்படி பைக்ல போறது நல்லதில்லைன்னு சொன்னார். அதனாலதான் பைக்ல வரலைன்னு சொன்னேன்.. “ என்று தன் அப்பாவிற்கு விளக்கமளித்து.. ரகுவைப் பார்த்து.. ‘போதுமா..”என்றாள்.
‘விளக்கமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஒரு சின்ன திருத்தம் என்கூட நீ பைக்ல வந்தியா..? இல்ல.. உன்கூட நான் பைக்ல வந்தேனா…?” என்றான்.