அணைவரும் சாப்பிட வரவும்.. சுகுனாவின் அறையில் இருந்து அழுகை சத்தம் கேட்டது. ‘ராஜா.. என்னன்னு போய் பாரு..” என்று ரகு சொன்னான்.
‘ரகுமாமா.. என்கிட்ட பேசவேயில்ல.. என்மேல இருக்கிற கோபம் இன்னும் அவருக்கு போகலை.‚” என்று மீனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகுனா. இதைக் கேட்ட ராஜா.. உள்ளே சுகுனா பேசியதை ரகுவிடம் சொன்னான்.
‘பார்வதி.. நீ போய் சுகுனாவை நான் கூப்பிட்டேன்னு சொல்லு..” என்றான்.
‘சுகுனா.. உன் மாமா உன்னை கூப்பிடுறார்..” என்றாள் பார்வதி.
சுகுனா விவேக் என்று நினைத்து.. ‘அவனுக்கு வேற வேலையில்ல.. சும்மா ஒரு நிமிசத்துக்கு ஒருதரம் மெசேஜ் பண்ணி என்னை டார்ச்சர் பண்றான்.” என்றாள்.
‘நான் உன்மாமான்னு சொன்னது விவேக்கை இல்ல உன் ரகுமாமாவை சொன்னேன்..” என்று சிரித்தாள் பார்வதி.
‘நிஜம்மாவா..?” என்று வெளியே வந்து ‘கூப்பிட்டிங்களா மாமா..?” என்று கண்களில் கண்ணீரோடு வந்து நின்றாள் சுகுனா. விவேக்கும் ரகுவோடுதான் உக்கார்ந்திருந்தான்.
‘ஏங்க.. உங்களுக்குத்தான் சுகுனாமேல ரொம்ப பாசம். ஆனா சுகுனா அப்படியில்லஇ நான் உன்மாமா கூப்பிடுறார்ன்னுதான் சொன்னேன்.. நான் மாமான்னு சொன்னதும் சுகுனாக்கு முதல்ல விவேக்கைத்தான் நியாபகம் வந்தது..” என்று சிரித்தாள்.
விவேக் சுகுனாவை நம்பாத பார்வை பார்க்க அதைப் பார்த்த சுகுனா இப்பொழுதும் உள்ளே ஓடப்பார்க்கவும் அவளின் கைப்பிடித்து தன்னருகில் உக்கார வைத்தான் ரகு. உடனே ரகுவின் தோள்மீது சாய்ந்து.. ‘என்னை மன்னிச்சிடுங்க மாமா..” என்று அழுதாள்.
‘நீ சின்னப் பொண்ணுடா.. உன்னை மன்னிக்கிற அளவுக்கு நீ ஒரு தப்பும் பண்ணல அழாத..” என்று அவளைத் தட்டிக் கொடுத்தான். விவேக் பொறாமையாய் பார்த்துக்கொண்டிருக்க.. பார்வதி பெருமையாய் பார்த்திருந்தாள். ரகு பார்வதியை சுந்தரம்.. பிரம்மிப்பாய் பார்த்திருந்தார்.
அங்கு வந்த துரையிடம்.. ‘அப்பா.. என்னால இந்த சாப்பாடு சாப்பிடமுடியாது ஒரே குமட்டலா இருக்கு.. என்னை தப்பா நினைக்காதிங்க..” என்று பார்வதி சொல்லவும்..
‘புள்ளத்தாச்சிப் புள்ளைக்கு இதெல்லாம் ஒத்து வராதுன்னு எனக்கு தெரியாதா துரை..? பார்வதிக்கு தனியா.. காரச்சட்னியும் தக்காளிச்சட்னியும் செய்ய சொல்லி அப்பவே சொல்லிட்டேன். உன்னோட ரூம்க்கு கூட்டிட்டுப்போய்.. அவளுக்கு சாப்பிடக்கொடு. அது ஒன்னும் பண்ணாது..” என்று சுசிலா சொன்னார்.
ஆச்சரியமாய் தன் மாமியாரைப் பார்த்தாள் பார்வதி. போய் சாப்பிடு என்பதுபோல் ஆதரவாய் கண்ணசைத்தார் சுசிலா. ‘அக்கான்னா.. அக்காதான். என் வீட்டுக்காரிக்கு இப்படி பொறுப்பெல்லாம் வரவே வராது.” என்று பெருமையாய் சொல்லி ‘பார்த்தியாம்மா..? உன் அத்தையை.. உன்மேல எவ்ளோ அக்கறையா இருக்காங்கன்னு..‚ வா சாப்பிடலாம்..” என்று தனதறைக்கு அழைத்துச்சென்றார். பார்வதியின் பின்னாலே ரகுவும் வர.. ‘நீங்க அங்க போய் சாப்பிடுங்க..” என்றாள்.
ரகு அவளை முறைத்தான். ‘ஏன்.. உங்களுக்கும் மசக்கையா இருக்கா..?” என்று கிசுகிசுப்பாய் கேட்டாள்.
‘மசக்கையா இல்ல.. ஆனா இந்த டிரெஸ்ல உன்னைப் பார்த்ததிலிருந்து ஒரே மப்பா இருக்கு..” என்று காதலுடன் சொல்லவும் மீண்டும் அவனை முறைத்தாள். ஆனாலும் ரகு நகர்வதாய் தெரியவில்லை.
‘சரி.. வாங்க நானும் ஹால்லையே உக்கார்ந்து சாப்பிடறேன்..” என்று இட்லியை எடுத்துக்கொண்டு வந்து உக்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தவன்.. அங்கு பரிமாறிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘இட்லி கொண்டு வா..” என்றதும்.. ‘வேண்டாம்..” என்று அந்த பெண்ணிடம் அவசரமாக மறுத்தவள்.. ‘நீங்க இப்ப எல்லாரும் சாப்பிடறதை சாப்பிடலைன்னா.. நான் எழுந்து போய்டுவேன்..” என்று மிரட்டினாள்.
‘ஏய்.. என்ன..? ஓவரா மிரட்டுற…?” என்றான்.
‘சரி.. எனக்கு இட்லியும் வேண்டாம்..” என்று எழப்போனவளின் கையைப்பிடித்து உக்காரவைத்தவன் ‘மிரட்டாத.. எனக்கு பயமாயிருக்குன்னுதான் சொல்லவந்தேன்…‚ சாப்பிடு..” என்று தானும் சாப்பிட்டான். அங்கு வந்த நந்தினி.. ‘என்ன ரகு..? இப்பதான் சாப்பிடறியா..?” என்றாள்.
‘நான் சாப்பிடறது இருக்கட்டும்.. மாமா சாப்பிட்டாறான்னு முதல்ல போய் கவனி..”
‘ஏன் என்னை துரத்துற..? என்கூட பேசினா..? உன் பொண்டாட்டி திட்டுவாளா..?”
‘ஏன்.. நீ என்ன அவளுக்கு எதிரியா..? அவ என்னை திட்றதுக்;கு..‚” என்றான்.
‘எனக்கு எதிரி.. இவளா..?” என்று கேவலமாய் ஒரு பார்வையை பார்வதிமீது பதித்தவள்.. ‘எனக்கு எதிரியா இருக்கிறதுக்கு இவளுக்கு என்ன தகுதி இருக்கு..?” என்றாள்.
‘ஓ.. நான் உனக்கு இவ எதிரியான்னு கேட்டதும்.. இவளுக்கு ஈக்வலா நீ உன்னை நினைச்சிட்டியா…? உன்கிட்ட எவ்ளோ சொத்து இருந்தாலும்.. நீ வெளில போனின்னா…? உனக்கு யாராவது சல்யூட் அடிப்பாங்களா..? ஆனாஇ இவளுக்கு அடிப்பாங்க. இவளை யாருன்னு நினைச்ச…? எஜிகேசுனல் ஆபீசர். மிசஸ். பார்வதிவதிரகுராம்.. படிப்பிலையும் சரி.. பவர்லயும் சரி.. நீ எப்படி இவளுக்கு ஈக்வலாவ..?” என்றான்.
‘ரகு..” என்று கத்திய நந்தினி. ‘ஏய்.. என் தம்பியை எனக்கு எதிரா பேசவச்சி வேடிக்கை பார்க்கிறியா..?” என்றாள் பார்வதியைப் பார்த்து.
அதுவரை அமைதியாய் இருந்த பார்வதி ‘உங்களோட தம்பியை உங்களுக்கு எதிரா என்னால எப்பபடி பேச வைக்கமுடியும்..? நான் அப்படி நினைக்கல ஒரு வேளை நீங்க அப்படி நினைச்சிங்கன்னா..? உங்க தம்பியைப் பொருத்தவரை உங்களை விட எனக்கு அதிக பவர் இருக்கிற மாதிரி ஆய்டும். அது உங்களுக்குத்தான் அசிங்கம்..” என்று பொறுமையாய் சொல்லி நந்தினி பதில் பேசும்முன் கைகழுவுவதற்காக எழுந்து போய்விட்டாள்.
‘அப்பா.. அவன் பொண்டாட்டி முன்னாடியே என்னை அசிங்கப்படுத்திட்டான்..” என்றாள் தன் அப்பாவிடம்.
‘ரகு பேசறதுக்கு முன்னாடி நீ என்ன பேசினேன்னும் நான் கேட்டுட்டுதான் இருந்தேன். நீ பேசினதும் தப்புதான..? பார்வதி கழுத்தில நம்ம ரகு தாலிகட்டியிருக்கான். அந்த பொண்ணு உன் தம்பி பொண்டாட்டிங்கிற நினைப்பு உன் மனசில இருக்கனும். உனக்கு பிடிக்கலைன்னா நீ அந்த பொண்ணுகிட்ட பேசாத. அதைவிட்டுட்டு நீ இப்படி பண்ணுனின்னா.. அப்புறம் ரகு உன்னை வெறுக்க ஆரம்பிச்சிடுவான்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவ்வழியாக வந்த பார்வதி..
‘எனக்காக அவர் யாரையும் வெறுக்க மாட்டார். அப்படியான ஆசை எனக்கும் இல்லை. நான் இவங்களை அசிங்கப்படுத்தனும்னு நினைக்கல.. என் தன்மானம் பாதிக்கிறமாதிரி இவங்க பேசினாங்க. அப்படி பேசினா எனக்கு பிடிக்காதுன்னு இவங்களுக்கு புரியவைச்சேன் அவ்ளோதான்.” என்று தன்மையாய் சொல்லிவிட்டுப் போனாள் பார்வதி. சுந்தரமும் நந்தினியும் வாயடைத்து போனார்கள்.
பார்வதிக்கு ஆ பீசிலிருந்து கால் வரவும்.. எழுந்து வெளியில் வந்தாள். யாரையும் கவனியாமல் பார்வதி பேசிக்கொண்டிருக்க… அங்கிருந்த சுந்தரமும் தம்பிதுரையும் பார்வதி ஆங்கிலத்தில் பேசும் தோரணையும் அதிலிருக்கும் அதிகார கண்டிப்பும் அவளின் பதவிக்கான மிடுக்கு அவள் முகத்தில் இருந்ததையும் பார்த்து.. அசந்துதான் போனார்கள்.
‘ரகுமாமா உங்களை கூட்டிட்டு வரசொன்னாங்கக்கா..” என்று பார்வதியிடம் துளசி சொன்னாள். துளசியைப் பார்த்ததும்.. அவளின் முகபாவங்கள் அப்படியே இலகுவாக மாறியது.. ‘அபிசியல் கால் பேசிட்டிருக்கேன்.. இப்ப வந்திடறேன்னு சொல்லுடா..” என்று கெஞ்சலோடும் அன்போடும் துளசியிடம் சொல்லியனுப்பினாள்.
‘பார்த்திங்களா.. மாமா..? என்னதான் பெரிய வேலையில் இருந்தாலும் யார்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு பார்த்து நடந்துக்கிறா பார்வதி. போன்ல பேசும்போது பார்த்திங்களா..? நம்ம ரகு பிஸ்னஸ் விசயமா பேசும்போது எப்படி கம்பீரமா பேசுவானோ.. அதேமாதிரிதான் பார்வதியும் பேசுறா.. நம்ம ரகுக்கு ஏத்த பொண்ணு பார்வதிதான் மாமா. கொஞ்ச நேரம்தான் அவளோட இருந்தேன் அதுக்குள்ள என்னோட பொண்ணுமாதிரி அவளை எனக்கு உணரவச்சிட்டா..” என்று பூரிப்பாய் சொன்னார் தம்பிதுரை.
பார்வதி பேசி முடிக்கவும்… அங்கு வந்த ரகு.. ‘முக்கியமான பங்சன்ல இருக்கேன்னு சொல்லி கட் பண்ண மாட்டியா..? இந்த தொல்லைக்குத்தான் கல்யாணம் பண்ணினா வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னேன்..‚ இப்பவே உன்னை ரிசைன் பண்ண வச்சிடுவேன்.. உங்கப்பாக்காக பார்க்கிறேன்.” என்று கடுப்பாக சொன்னான்.
‘சரி.. போனைக் கொடுங்க.. இனி பேசமாட்டேன்..” என்று சமாதானத்திற்கு வந்தாள்.
‘இந்த அறிவு முதல்லையே இருந்திருக்கனும்..‚ உன்னை ஆபீஸ்ல கொண்டு போய் விடும்போது தரேன் வா..” என்று கையைப் பிடித்து இழுத்துப்போனான். பொண்டாட்டிக்கிட்டையும் இப்படித்தான் எகிறிட்டிருக்கானா..? என்று நினைத்தார் சுந்தரம்.
எந்த ஒரு முக்கிய முடிவு என்றாலும் ரகுராமிடம் கலந்து ஆலோசித்தப்பின்னரே முடிவெடுக்கும் சுந்தரம் இம்முறை ரகுராமை பார்ப்பதற்கு தயங்கிக்கொண்டு அமைதியாக இருந்தார். தம்பிதுரை சுந்தரத்தைப் பார்க்க.. ‘துரை உன் மாப்பிள்ளைகிட்டயும் கேட்டுட்டு ஒரு முடிவெடுத்துக்கலாம்.. எதுன்னாலும் இன்னைக்குள்ள அவங்களுக்கு சொல்லிடறேன்னு சொல்லு..” என்று துரையிடம் ரகசியம் பேசினார் சுந்தரம்.
தன் அப்பா தன்னைப் பார்ப்பாரா என்று சுந்தரத்தையே பார்த்துக்கொண்டிருந்த ரகுவிற்கு அவர் தன் மாமாவிடம் பேசியது நன்றாக புரியவும் ‘மீனா.. அந்த காலாண்டரை எடு..” என்று சற்று நேரம் அதைப் பார்த்தவன்.. பார்வதியிடம் ‘இந்த டேட் ஓக்கேவான்னு சுகுனாகிட்ட போய் கேட்டுட்டுவா பார்வதி…” என்றனுப்பினான். பார்வதி சுகுனாவிடம் கேட்டு வந்து ரகுவைப் பார்த்து ஓ.கே. என்பது போல் தலையாட்டினாள்.
‘மாமா.. இன்னைல இருந்து.. பதினேழு நாள் கழிச்சி ஒரு நல்ல முகூர்த்த தேதி வருது. நம்ம சைடுல ஒரு பிரச்சணையும் இல்ல எல்லாம்.. நானும் ராஜாவும் பார்த்துக்கிறோம். மாப்பிள்ளை வீட்டுக்கு ஓ.கேன்னா.. அப்பவே வச்சிக்கலாம். “ என்றான் ரகு.
‘ரொம்ப சந்தோசம்ங்க.. அப்ப நாங்க கிளம்பறோம்… “ என்று கிளம்பினார்கள்.