Advertisement

அத்யாயம் — 13
         அடுத்த  நாள்  காலை  பார்வதி   குளித்து  முடித்து  எப்பொழுதும்  போல்  உடையணிந்து  வரவும்  அதைப்  பார்த்த  வீராச்சாமி..   ‘என்னம்மா…?  இந்த  டிரெஸ்  போட்டிருக்க..?” என்றார்.
     ‘ஏன்ப்பா…?  இது  புதுசுப்பா  நல்லாயில்லையா..?” என்றாள்.
     ‘என்  பார்வதி  செல்லத்துக்கு  எது  போட்டாலும்  நல்லாதான்  இருக்கும்  ஆனா..  இன்னைக்கு  இந்த  டிரெஸ்  வேண்டாம்.  சாரி  போட்டுக்கோம்மா..” என்றார்.
     ‘சாரியா…?” என்றாள்.
     ‘முதன் முதலா..  உன்  புகுந்த   வீட்டோட  விசேசத்துக்குப்  போற..‚  எல்லார்  கவனமும்  உன்மேலதான்  இருக்கும்.  அதுவுமில்லாம  இந்த    பங்சனுக்கெல்லாம்  சாரிதான்மா  கட்டனும்..”
     ‘சரிங்கப்பா..” என்று  உள்ளே  செனறவளிடம்  ‘இரும்மா..  நானே  வந்து  செலக்ட்  பண்றேன்.” என்று  பார்வதியின்  ரூமிற்கு  வந்து..  பீரோவில்  உள்ள  சாரியைப்  பார்த்து.. ‘இவ்ளோ  சாரி  இருக்கா..?  இதெல்லாம்   எப்பம்மா  எடுத்த..?” என்றார்.
     ‘இதெல்லாம்  அம்மா  எனக்காக  எடுத்ததுப்பா.. “ என்று  லேசாய்   கண்கலங்கினாள்.
     ‘என்  பொண்டாட்டியோட  கலெக்சென்  நல்லாத்தான  இருக்கு    அப்புறம்   எதுக்கு  அழற..?” என்று  சிரித்து..  பிறகு..  ‘இந்த  பேபி  பிங்க்  சாரி  போட்டுக்கம்மா..” என்று  எடுத்துக்கொடுத்தார்.
    ‘அப்பா..  இது  பட்டு  சாரி..  ரொம்ப  கிராண்டா  இருக்கும்…” என்றாள்.
    ‘இல்லம்மா   பார்டர்  சின்னதாதான்  இருக்கு.  அதனால  ரொம்ப  கிராண்டாவெல்லாம்  இருக்காது..  நீ  இதையே  போட்டுக்கம்மா..” என  சொல்லி  வெளியில்  வந்தார்.
     பார்வதி  புடவையைக்   கட்டிகொண்டு  வெளியே  வந்ததும்  ‘அப்படியே   தேவதைமாதிரி  இருக்கடா..   இந்த  நகைகளை  போட்டுக்கோ…” என்று  கட்டியணைத்து   அவள்  நெற்றியில்   முத்தமிட்டார்.  வெளியில்   நின்று  பார்த்துக்கொண்டிருந்தான்  ரகு.
     ‘அப்பா.. இதெல்லாம்  ரொம்ப  ஓவர். போங்கப்பா  இந்த  வேசமெல்லாம்  எனக்கு  செட்டாகாது.” என்று  திரும்பியவள்  அங்கு  ரகு  நின்றுகொண்டிருப்பதைப்  பார்த்தாள்.  அவளின்  பார்வை  வெளியில்  நிலைத்திருக்கவும்  வெளியில்  பார்த்து  ‘உள்ள  வரச்சொல்லுமா..” என்றார்.
    ‘வாங்க..” என்றாள்.
    ‘என்  மாமனார்  கூப்பிட்டாத்தான்  நான்  வருவேன்.. “ என்று  அங்கிருந்தே  கத்தினான்.
    ரகுவின்  கத்தலை  தாங்க  முடியாமல்..  ‘உள்ள  வாங்க..” என்று   சொன்னார்.
    சிரித்துக்கொண்டே  உள்ளே  வந்தவன்..  மாலா  அப்பொழுதுதான்  சமையல்  செய்து  கொண்டிருப்பதைப்  பார்த்து..  ‘இன்னும்  சமையல்  முடியலையா..?  எத்தனை  மணிக்கு  வந்திங்க..?” என்றான்.
    ‘ஐஞ்சு  மணிக்கே  வந்துட்டேன்…  சமையல்  ரூமெல்லாம்  ரொம்ப  அழுக்கா  இருந்ததுங்க  சார்.  அதைக்  கிளீன்  பண்ணிட்டு  சமையலை  ஆரம்பிச்சேன்..  அவ்ளோதான்  முடிஞ்சது..”
     மாலாவின்   பேச்சில்  திருப்தியாய்  உணர்ந்த  ரகு..   பார்வதியைப்  பார்த்து  பிரம்மித்துப்   போனான்.  அப்படி  பார்க்காதே  என்று  கண்களால்  எச்சரித்தாள்.   இப்பொழுது  தன்  அப்பாவைப்  பார்த்தாள்.  வீராச்சாமியும்  தன்  மகளை  மெய்மறந்து  பெருமையாய்  பார்த்துக்கொண்டிருந்தார்.
     ‘என்னப்பா  அப்படிப்  பார்க்கிறிங்க..?  ஆமா..  இந்த  நகை  என்ன  புதுசா  இருக்கு..?  அம்மா  வாங்கியிருந்தா   எனக்கு   காட்டியிருப்பாங்களே..? “ என்றாள்.
    ‘இது  அம்மா  வாங்கினது  இல்லம்மா.    நான்  வாங்கினது.   போனவாரம்தான்   வாங்கினேன்.    இது  ரொம்ப  ஸ்பெசலான   நகை.   என்  செல்லத்தோட   உழைப்பும்   இதுல  கலந்திருக்கு..  என்று  பெருமையாய்  சொன்னவர்…   ரகுவைப்  பார்க்காமல்.. ‘இதை  அவர்கிட்ட  கொடு..” என்று  ஒரு  தங்கச்  சங்கிலியையும்  பிரேசிலெட்டையும்   கொடுத்தார்.
     ‘மாமா..  நான்  நகையே  போடமாட்டேன்..  பரவாயில்ல..  எனக்கு  வேண்டாம்..” என்றான்.
     ‘இந்த  நகை  சிவகாமி  உயிரோட  இருக்கும்போதே  எடுத்தது.   பார்வதிக்கு  தேவையான  நகை  இருக்கு..  அவளுக்கு  கல்யாணம்  முடிவானா..  மாப்பிளைக்கு  போடறதுக்கு  நகை  வேணுமில்ல  அதனால  இப்பவே  அதை  வாங்கி  வச்சிடலாம்னு   சொன்னா.     நகை  வாங்கும்போது..  மாப்பிள்ளைன்னு   வேற  யாரையோ  நினைச்சி  சிவகாமி  சொல்லியிருந்தாலும்..   நான்  உங்களை  நினைச்சித்தான்  வாங்கினேன்..  அப்புறம்  உங்க  இஷ்ட்டம்..” என்றார்.
      ‘சரி..  கொடுங்க..” என்று  வாங்கி  செயினை  எடுத்து  கழுத்தில்  போட்டுக்கொண்டு.. ‘நல்லாயிருக்கா  மாமா..?  இந்த  பிரேசிலெட்டை  எப்படி  எனக்கு  கரெக்ட்  சைஸ்ல  வாங்கினிங்க..?” என்றான்.
      திருப்தியாய்  பார்த்தவர்.. ‘என்  கை  சைசைவிட  கொஞ்சம்  சின்னதா  வாங்கினேன்..” என்று    வீராச்சாமி இயல்பாய்  பதில்  சொல்லவும்  ஆச்சரியமாய்  பார்த்தான்  ரகு. 
      ‘இந்த  நகையெல்லாம்  எனக்கு  பெருசு  இல்லமாமா  ஆனா..  அதைவாங்கும்போது  என்னை  நினைச்சி  வாங்கினேன்னு  சொன்னிங்கல்ல..  உண்மையாவே  ரொம்ப   பெருமையா  இருக்கு..” என்றான்  ரகு. 
     பேச்சை  மாற்ற  எண்ணி..  ‘பார்வதி..  டைம்  ஆய்டுச்சி..  கிளம்பலையா..?”என்றார்.
     ‘சரிம்மா..  கிளம்புங்க..” என்று  வழியனுப்பினார்.
    வீட்டைவிட்டு   சற்று  தூரம்  போனதும்  ஆள்  நடமாட்டம்  இல்லாத  இடத்தில்  வண்டியை  நிறுத்தியவன்..   ‘பார்வதி.. “  என்று  ஏக்கமாய்  அழைத்து..  ‘நம்ம  எஸ்டேட்   பங்களாக்கு  போய்ட்டு  அப்புறம்  மாமாவீட்டுக்கு  போலாமா…?” என்று  கொஞ்சினான்.
    ‘கொன்னுடுவேன்..‚  நானே  அங்க  உங்கப்பாம்மா  என்னைப்   பார்த்திட்டு   என்ன  சொல்வாங்களோன்னு   பதட்டத்தில  இருக்கேன்..   ஆளப்பாரு  நினைப்பைப்பாரு..   முதல்ல  வண்டியை  எடுங்க..”  என்று  மிரட்டினாள்.
    ரகுவிற்கு  தம்பிதுரையின்  அழைப்பு  வந்தது.  ‘ம்ம்..  சொல்லுங்க  மாமா..?” என்றான்.
     ‘ரகு..  எட்டு  மணிக்கு  வரேன்னு  சொன்னவங்க இப்பவே  வந்துட்டாங்க..‚  நீ  எங்கைய்யா  இருக்க..?  கொஞ்சம்  சீக்கிரம்  வாய்யா..” என்றார்.
     ‘இன்னும்  ஐஞ்சி  நிமிசத்தில  வந்திடறேன்  மாமா..” என்று  ஏமாற்றமாய்  பார்வதியைப் பார்தான்  ரகு.      பாவம்போல்   ரகுவைப்  பார்த்து  சிரித்தாள்  பார்வதி.
     துரைவீட்டிற்கு   வந்து   இறங்கியதும்..  ரகுவின்  வண்டி  சத்தம்  கேட்டு  தம்பிதுரை  வெளியே  வந்து..  ‘வாம்மா.. “ என்று  வாஞ்சையாய்  அழைத்தார்.   வீட்டிற்குள்  வந்ததும்..  அங்கு  சுந்தரத்தைப்  பார்தவள்  தயங்கியபடி  நிற்க..  ‘ஏன்மா   தயங்கற..?”  என்று  அங்கிருந்த  சுந்தரம்  குடும்பத்தினர்  அணைவரையும்  சுட்டிக்காட்டி  ‘இவங்களுக்கெல்லாம்  இது  மாமன் மச்சான்  வீடுதான்.   ஆனா  உனக்கு..  இது  பிறந்தவீடு  மாதிரி.  நீ  தயங்காம  வா..” என்று  தைரியமூட்டி  அங்கிருந்த  சோபாவில்  உக்கார  சொன்னார்.   பார்வதி  அமைதியாய்   அமர்ந்திருந்தாள். 
      அணைவரும்   பார்வதியைத்தான்  கவனித்தனர்.  ‘யார்  இந்த  பொண்ணு….?  இப்படி  செப்பு  சிலையாட்டம்  இருக்கா..?” என்று  விவேக்  குடும்பத்தினர்  கேட்டனர்.   
      ‘இவங்கதான்  எங்க  வீட்டோட   மூத்த  மருமகள்.  ரகுவோட   வொய்ப்.   எஜிகேசன்  டிப்பார்ட்மெண்ட்ல  எ.இ.ஓ. வா   ஒர்க்  பண்றாங்க..” என்று  ராஜா  விளக்கமளித்தான்.
     ‘எல்லாரும்  வந்துட்டாங்கன்னா..   நல்ல  நேரம்  முடியறதுக்குள்ள  உறுதி  பண்ணிடலாம்..” என்றார்  விவேக்கின்   அப்பா.  சுகுனாவின்  அம்மாவோடு  ஒரே  ஒரு  தங்கைதான்  கூடப்பிறந்தவர்கள்  என்பதால்..  தாய்மாமன்  சாங்கியத்திற்கு  சுந்தரத்தை    தம்பிதுரை  அழைக்க..  அப்பொழுதுதான்  பார்வதியிடமிருந்து   தன்  பார்வையை  விலக்கினார்  சுந்தரம்.
     ‘சுகுனாவை   கூட்டிட்டு  வா  மீனா..” என்று  சுந்தரம்  மீனாவிடம்  சொன்னார். 
     ‘அது  என்ன..?  எனக்கு  பொண்டாட்டியா  வரப்போறவகிட்ட  மட்டும்  வேலை  சொல்றிங்க..  அண்ணி  மட்டும்  எந்த  வேலையும்  செய்யாம  ஜம்முன்னு  உக்கார்ந்திருக்காங்க..‚  மீனா..  அண்ணியையும்  கூட்டிட்டு  போ…” என்றான் ராஜா.
      பார்வதி  தடுமாற  ரகு  ராஜாவைப்  பார்த்து  சிரித்தான்.  ‘வாங்கக்கா..” என்று  மீனா  சுகுனாவின்  அறைக்கு   பார்வதியை   அழைத்துச்  சென்றாள்.
      பார்வதியைப்  பார்த்த  சுகுனா..  ‘என்னை  மன்னிச்சிடுங்கக்கா..  மாமா  எவ்வளவோ  சொன்னார்.  நான்  தெரியாம  உங்க  இரண்டு  பேர்  மனசையும்  நோகடிச்சிட்டேன்..” என்றாள்.
     ‘எனக்கு   உன்மேல  எந்த  வருத்தமும்  இல்ல..  சூழ்நிலை  புரியாம  நான்தான்  உன் ரகுமாமா  மேல  கோபப்பட்டுட்டேன்..” என்று  சமாதானம்  செய்தாள்.
      ‘மீனா..”  என்று    சுந்தரம்  அழைக்க..  ‘இதோ  வந்திட்டேன்  மாமா..” என்று  மீனா  சுகுனாவை  அழைத்து  வந்தாள்.  சுகுனா  வந்து  அமர்ந்ததும்  சீர்  வரிசையில்  இருந்த   நகைப்  பெட்டியை  எடுத்து..  ‘விவேக்..  இந்த    மோதிரத்தை   சுகுனாக்கு  போட்டுவிடு..” என்று  சொன்னார்  சுந்தரம்.
     விவேக்  சுகுனாவிற்கு  மோதிரம்  போட்டு  முடித்ததும் ‘சுகுனா..  இதை  மாப்பிளைக்கு  போட்டுவிடு..” என்று  மோதிரத்தை  கொடுத்தார்  சுந்தரம்.  வெக்கத்தில்   முகச்சிவப்போடு தலைநிமிராமல்  மோதிரத்தை  போட  வந்தவளிடம்..   ‘விவேக்கோட  கை  தானான்னு   பார்;த்து  போடு   சுகுனா..” என்று  ராஜா  சொல்ல   ராஜாவை  முறைத்தபடி..  விவேக்கிற்கு   மோதிரம்   போட்டு  முடித்தாள்   சுகுனா.   
    ‘ஏன்   விவேக்..  சுகுனாவை    போன்  பண்ண  சொன்னியே  பண்ணினாளா..?” என்று  விவேக்கிடம்  ரகசியமாய்  கேட்டான்..  ராஜா.
    ‘ஒரு  மண்ணும்  பண்ணல..” என்று  கடுப்பாக  சொன்னான்  விவேக்.
    ‘சும்மாவா   விட்ட  அவளை..?” என்றான்.
    ‘ம்க்கூம்.   இத்தனை  பேர்  முன்னாடி  வேற  என்ன  பண்றது..?   பார்க்கலாம்..  எங்கம்மாகிட்ட   ஒரு  விசயம்  சொல்லியிருக்கேன்..  ஒர்க்  அவுட்  ஆகுமான்னு  தெரியலை  எல்லாம்  உங்க   துரைமாமா   கைலதான்  இருக்கு..” என்றான்.
     ‘டைம்  ஆய்டுச்சி..  வாங்க  முதல்ல  சாப்பிடலாம்..” என்று   தம்பிதுரை  அணைவரையும்  அழைக்க..  விவேக்கின்   அம்மா..  ‘ஒரு  முக்கியமான   விசயம்..  விவேக்  ஒரு  மாசம்   லீவ்  போட்டிருக்கான்.  அதுக்கப்புறம்   இவன்  அமெரிக்கா  போனான்னா..  வர  ஆறுமாசமாச்சம்   ஆகும்.  நீங்க  சம்மதிச்சிங்கன்னா..  இந்த  மாசத்திலயே   கல்யணத்தை  வச்சிக்கலாம்…” என்றார்.
      ‘ஒரு  மாசத்துக்குள்ள..  எப்படிங்க..? “  என்று    சுகுனாவின்   அம்மா ஆரம்பிக்கும்போது… ’அத்தை  நாங்கெல்லாம்   எதுக்கிருக்கோம்..?  நானும்  ரகுவும்   ஒரே  வராத்திலன்னாக்  கூட  எல்லாம்  ரெடி  பண்ணிடுவோம்..  நீங்க  கவலையேப்படாதிங்க.  விவேக்  நிலைமையும்   கொஞ்சம்   யோசிச்சிப்  பார்த்து   முடிவெடுங்க..” என்றான்  ராஜா.
      ‘ரகு..  நீ  என்னைய்யா  சொல்ற…?” என்றார்  துரை.
      ‘நான்  என்னமாமா   சொல்றது..?  எங்கப்பாவும்  நீங்களும்  அத்தையும்  முடிவெடுங்க..  ஆனா..  கல்யாணம்  எப்பண்ணாலும்..  சிறப்பா  முடிச்சிடலாம்..” என்றான்.
      ஒரு மாதத்திற்குள்  திருமணம்  என்றதும் சுகுனா  பதற.. ‘நீ  இப்படி  பதறினா  எனக்கு  ரொம்ப  பதட்டமாகுது  சுகுனா   உன்  கல்யாணம்  முடிஞ்சாதான்..  நான்  கல்யாணம்  பண்ணிக்குவேன்னு   எங்கப்பாகிட்ட  அவசரப்பட்டு..   சபதம்   வேற  போட்டிருக்கேன்.  என்  வாழ்க்கையும்   உன்  கையிலதான்  அடங்கியிருக்கு   உன்  கல்யாணத்தை  ஆறு  மாசத்துக்கு  தள்ளி  வச்சி  என்  கல்யாணத்தையும்  தள்ளி  வச்சிறாத..   உனக்கு   புன்னியமாப்  போகும்…” என்று   ராஜா  சுகுனாவிடம்  கெஞ்சுவது   போல்  பாவனை  செய்யவும் அணைவரும்  கேலியாய்  சிரித்தனர்.

Advertisement