ஒரு வாரத்திற்கு பிறகு.. விவேக் சுகுனாவின் வீட்டிற்கு வெளியே நின்று காலிங் பெல்லை அழுத்தினான். சுகுனாவின் அம்மா கதவை திறந்து ‘வாங்க தம்பி..” என்றார்.
விவேக்கின் கண்கள் சுகுனாவை தேட.. அவளை காணவில்லை என்றதும் ஒருவேளை ரூமில் இருக்கிறாளா..? என்று எட்டிப்பார்த்தான். கதவு கொஞ்சம்தான் திறந்திருந்தது. அதனால் ஒன்றும் தெரியாமல் போகவும் ஏமாற்றமாக உணர்ந்தான்.
‘வாங்க தம்பி..” என்றபடி தம்பிதுரை வந்தார்.
‘அப்பா வர புதன் கிழமை நாள் நல்லாயிருக்குன்னு இங்க வரமாதிரி முடிவு பண்ணியிருக்காங்க. அதை சொல்லத்தான் வந்தேன்..” என்றான்.
‘சரி தம்பி.. நீங்க அன்னைக்கே வாங்க..” என்றார்.
சுகுனாவின் ரூமிற்குள் இருந்தபடி இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தனக்கு திருமணமாகாமல்.. ராஜா திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னதும் தன் மீதுள்ள பாசத்தால்தான் திருமணம் ஆன பின்பும் ரகு பார்வதியோடு வாழாமல் இருக்கிறான் என்று சொன்னது.. முக்கியமாக.. தன் அப்பாவின் மன நிம்மதி.. என்று ஒரு வாரமாக யோசித்து தாம் வேறு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி செய்தால்தான் அணைவருக்கும் நிம்மதி. என்ற முடிவிற்கு வந்திருந்தாள். அதனாலேயே.. விவேக்கின் குரல் கேட்கவும்.. சுகுனா படபடப்பாய் உணர்ந்தாள்.
டீ யை குடித்து முடித்தவன்.. ‘சுகுனாவை நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்கக் கூடாதுதான்.. என்னை மன்னிச்சிடுங்க.. அவளுக்கு நிச்சயம்னு கேள்விபட்டதும்.. கொஞ்சம் டென்சனாய்ட்டேன்.. மத்தபடி நான் அவளை அப்படி நினைக்கலை..” என்றான்.
‘உள்ளதான்ப்பா இருக்கா.. சுகுனா.. கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா..” என்றார்.
இங்கையே இருந்துகிட்டுதான் வெளிய வராம இருந்தாளா..? என்று கடுப்பானான். தம்பிதுரை வரசொல்லியும் அவள் வெளியில் வராமல் இருக்கவும்.. ‘பரவாயில்லை.. இப்பதான டீ குடிச்சேன்.. அதனால தண்ணி வேண்டாம்.. அவகிட்ட நான் சாரி சொன்னேன்னு மட்டும் சொல்லிடுங்க.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பிவிட்டான்.
தம்பிதுரை சுந்தரம் வீட்டிற்கு வந்திருந்தார். சுகுனா விவேக் கல்யாண விசயத்தை சொன்னதும் அணைவரும் மிகுந்த சந்தோசமடைந்தனர். சுகுனா மனதை புண்படுத்தி விட்டோமே என்று சுந்தரம்தான் மிகுந்த குற்ற உணர்ச்சியோடு இருந்தார். இப்போது தன் மனபாரம் நீங்கியவராய்.. ‘சுகுனா சம்மதிச்சிட்டாளா..? துரை..” என்றார் ஆர்வமாக.
‘ராஜா சம்மதிக்க வச்சிட்டான் ..” என்று அன்று விவேக் வந்தபொழுது நடந்ததை சுந்தரத்திற்கு விளக்கினார். பிறகு.. ராஜா சுகுனாவிற்கு சொன்ன புத்திமதியையும் சொன்னார். ராஜாவை நினைத்து பெருமையாய் உணர்ந்ததனர் சுந்தரமும் சுசிலாவும்.
‘ராஜா இப்ப வந்திட்டு இருக்கேன்னு கொஞ்சம் முன்னாடிதான் சொன்னான். ரகு வீட்லதான் இருக்கான்..” என்றார்.
தம்பிதுரை வந்ததில் இருந்து அவர் பேசுவதை உள்ளிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தான் ரகு. ஆனால் அவரை நேரில் பார்த்து பேசும் தைரியமற்றவனாய் குற்ற உணர்வோடு உள்ளேயே இருந்தான்.
‘ரகு.. “ என்றழைத்தார் தம்பிதுரை.
‘வாங்க மாமா.. எப்ப வந்திங்க..?” என்று வெளியே வந்தான்.
‘நீ என்னய்யா தப்பு பண்ணின..? எதுக்கு இப்படி என்கிட்ட என்னைக்கும் இல்லாம பொய் பேசற..? நான் கேட் கிட்ட வரும்போதே நான்தான் வரேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவ..? இப்ப நான் வந்ததே தெரியாத மாதிரி கேக்கிற..?” என்றார்.
‘சரி.. பரவாயில்ல.. “ என்று விட்டுக்கொடுத்தவர்.. ‘நம்ம சுகுனாவை புதன் கிழமை பொண்ணு பார்க்க வராங்க.. வேலையிருக்குன்னு கிளம்பிடாத.. நேரமாவே வந்திடு..” என்றார்.
‘என்னை மன்னிச்சிடுங்க மாமா.. நான் வரலை.. ஆனா.. ராஜா வருவான் அவன் எல்லாத்தையும் என்னைவிட நல்லா பார்த்துப்பான்..” என்றான்.
‘ராஜாவும் வரவேணாம் ரகு அவனுக்கு மட்டும் வேலையிருக்காதா..? நீங்க யாருமே வரவேணாம்.. நான்தான பெத்தேன்.. நானே பார்த்துக்கிறேன்..‚” என்று வெளியே போனார்.
‘மாமா..” என்று துரையின் கையைப் பிடித்தவன்.. ‘நான் வந்தா தேவையில்லா பேச்சு வரும். அது சுகுனாவைத்தான் பாதிக்கும். அதனாலதான் அப்படி சொன்னேன்..” என்றான்.
‘நீ வரலைன்னா மட்டும் தேவையில்லாத பேச்சு வராதா..? அப்படி தேவையில்லாத பேச்சு பேசறவங்களை விட எனக்கு நீதான் முக்கியம்..‚ உன்னால வர முடியுமா…? முடியாதா..?”
‘நான் எந்த முகத்தோட சுகுனாவைப் பார்ப்பேன்..?” என்று வேதனையாய் கேட்டான்.
‘ரகு.. நீ சுகுனாவை கல்யாணம் பண்ணினாலும் செத்துடுவேன்தான சொன்ன..? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நிச்சயத்தை நடத்தியது எங்க தப்பு.. எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிவ..? ஒருவேளை நாளைக்கே நான் செத்துட்டன்னாலும் வரமாட்டியா..?” என்றார்.
‘மாமா..” என்று பதறியவன்.. ‘நான் பார்வதியை காதலிக்கலைன்னாலும் என்னால சுகுனாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் அவளை அப்படி நினைக்கலை. இரெண்டு பேரும் ஒரே வீட்லதான் வளர்ந்தோம். அவளைப் பார்த்துக்கிட்ட மாதிரிதான் என்னையும் பார்த்துக்கிட்டிங்க. நாங்க சின்ன வயசில சொப்பு வச்சி விளையாடும்போது கூட.. நீ ரொம்ப உயரமா இருக்க.. அதனால நீ எனக்கு அப்பாவா இருக்கியான்னுதான் கேப்பா.. அதே நினைப்போடதான் எனக்கு விபரம் தெரியும் வரை அவளோட பேசிப்பழகினேன். அவதான் விபரம் புரியாம என்னை தப்பா நினைச்சிட்டான்னா.. அப்பாவோட சேர்ந்திட்டு நீங்களும்..” என்று தன் மாமாமீது கோபத்தை காட்ட முடியாமல் முகம் திருப்பினான்.
‘நான் பண்ணினது தப்புதான். அதை நான் உன் கல்யாணத்தப்பவே உணர்ந்திட்டேன். இப்பவும் நீ வரமாட்டியா..?” என்றார்.
‘வரேன் மாமா.. ஆனா நாளைக்கு வரலை. கல்யாணம் முடிவானதுக்கப்புறம் மத்த எல்லா பங்சனுக்கும் நான் வரேன். அவ முதல்ல விவேக் கூட பேசி பழகட்டும். அப்பதான் கட்டிக்கப் போறவனுக்கும் எனக்கும் உள்ள வித்யாசம் அவளுக்கு புரியும்..‚” என்றான்.
‘சரிப்பா.. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். விவேக்கை பத்தியும் அவங்க குடும்பத்தை பத்தியும்.. நீ தீர விசாரிச்சிட்டேன்னு ராஜா சொன்னான். அதுக்கப்புறம்தான் நான் இந்த சம்மந்தத்துக்கே ஒத்துகிட்டேன்.” என்றார்.
‘உண்மையாவே விவேக் ரொம்ப நல்லவன் மாமா..” என்றான்.
‘நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்..” என்று மீண்டும் சொல்லி கிளம்பினார் .
ரகுவைத்தவிர சுந்தரம் குடும்பத்தினர் அணைவரும் சுகுனாவீட்டில் இருந்தனர். ரகு சுகுனாவை எதனால் கல்யாணம் பண்ணிகொள்ள முடியாது என்ற காரணத்தை சொன்னதிலிருந்து.. ரகுமீதான கோபம் சுந்தரத்திற்கு வெகுவாய் குறைந்திருந்தது. அதனாலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு முகமலர்ச்சியோடு காணப்பட்டார். அங்கிருந்த அணைவரும் சந்தோசத்துடன்தான் இருந்தனர்.
டீ யாவது சுகுனா கொடுப்பாள் என்று விவேக் நினைக்க.. அந்த பணியினையும் சுகுனாவின் அம்மாவும் ரகுவின் அம்மாவும் சேர்ந்து.. செவ்வனே செய்து முடித்தனர். ராஜா விவேக்கை பார்த்தான். விவேக் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.. ராஜா சுகுனாவைப் பார்த்தான். சுகுனா அவளால் முடிந்தவரை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். பிறகுதான் விவேக்கின் நிலைபுரிய.. ‘சுகுனா.. விவேக்குக்கு டீ பிடிக்காதாம்.. வேற வழியில்லாம குடிச்சிட்டிருக்கான். நீ போய் ஒரு கா பி போட்டு எடுத்திட்டு வா.” என்றான்.
சுகுனா அருகில் இருந்த மீனாவிடம் கண்களால் உதவிகேட்க.. மீனா.. காபி போட்டு எடுத்து வரவும்.. ‘உன்னைத்தான பார்க்க வந்திருக்காங்க.. அதனால நீதான் கொடுக்கனும்..” என்று சற்று மிரட்டும் தோரணையில் சொன்னான்.
மீனாவிடமிருந்து கா பியை வாங்கியவள்.. அதற்கு பிறகுதான் முகம் நிமிர்ந்து விவேக் எங்கு அமர்ந்திருக்கிறான் என்றே பார்த்தாள். விவேக்கிடம் வந்து கா பியை நீட்டினாள். அவள் முகத்தை பார்த்தவாறு.. கா பியை எடுத்துக்கொண்டு நன்றியுடன் ராஜாவை பார்த்தான் விவேக்.
விவேக்கின் அம்மா.. தம்பிதுரையிடம்.. ‘அண்ணா.. எங்களுக்கு சுகுனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவசரமா வந்ததால ஒருவாரம்தான் லீவ் போட்டுட்டு வந்திருக்கானாம். உறுதி பண்றதை எப்ப வச்சிக்கலாம்னு சொன்னாதான் இவன் மேற்கொண்டு எவ்ளோநாள் இங்க இருக்கவேண்டி வரும்னு முடிவு பண்ணுவான்..” என்றார்.
‘என் பொண்ணுக்கப்புறம் எனக்கு எல்லாமே என் ரகுமாப்பிளைத்தான். இன்னைக்கு ஒரு அவசர வேலைன்றதால அவன் வரலை. நான் அவன்கிட்ட கலந்திட்டு உங்களுக்கு இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள தகவல் சொல்லிடறேன்..” என்றார்.
‘சரிங்கண்ணா.. அப்ப நாங்க கிளம்பறோம்..” என்று அணைவரும் வெளியே வந்தனர்.
ராஜாவின் கையைப் பிடித்து ‘தேங்ஸ் ராஜா..” என்றான் விவேக்.
‘எனக்கு தேங்ஸ் எல்லாம் வேணாம்.. அதுக்கு பதிலா நான் உன்கிட்ட ஒன்றை எதிர்பார்க்கிறேன் சுகுனாக்கு ஒன்னுன்னா.. எங்க துரைமாமாக்கு முன்னாடி ரகுதான் வந்து நிற்பான். சுகுனாமேல அவன் உயிரையே வச்சிருக்கான். ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இல்ல. இது வேற… ரகு எங்கண்ணியை விரும்பறான்கிறதால ஒரு கோபத்திலதான் அந்த நிச்சயத்தை எங்கப்பா ஏற்பாடு பண்ணிட்டார். மத்தபடி அந்த நிச்சயத்துக்கும் ரகுக்கும் சம்மதமே இல்ல. இதை காரணம்காட்டி என்னைக்கும் சுகுனாவை எதாவது சொல்லிடாத…” என்று வேண்டிக்கேட்டுக்கொண்டான்.
‘ஏய்.. ராஜா அன்னைக்கு ஏதோ டென்சன்ல அப்படி சொல்லிட்டேன். நீ கவலைப்படாத.. நான் அவ்வளவு கேவலமானவன் இல்ல..” என்றான்.
விவேக்கை லேசாய் அணைத்து அவன் தோளில் தட்டிகொடுத்து.. சந்தோசமாய் இம்முறை ‘தேங்ஸ்..” என்று ராஜா சொன்னான்.
‘எனக்கும் உன் தேங்ஸ் தேவையில்லை. அதுக்கு பதிலா நான் சுகுனாகிட்ட சாரி கேட்கனும். அவளை வெளிய வரசொல்லு..” என்று சிரித்தான்.
‘அதெல்லாம் இங்கயிருந்தே சொல்லு.. அவளுக்கு காது கேட்கும்..” என்று சிரித்தான்.
‘ஆனா.. சத்தமா சாரி சொல்ல எனக்கு வராதே..” என்று அவன் திருப்பினான்.
‘சரி.. நீ சாரி சொன்னேன்னு நான் சொல்லிக்கிறேன்.. நீ கிளம்பு..” என்றான் விடாமல்..
‘ஏண்டா இப்படி..?” என்று சலித்துக்கொண்டான் விவேக்.
‘ம்ம்.. அப்படி வா வழிக்கு.. எங்ககிட்ட ஆர்டர் எல்லாம் போடக்கூடாது. அன்பா இறங்கி வந்தாத்தான் எதையும் சாதிக்க முடியும்..” என்று.. ‘சுகுனா.. போனாப் போகுது.. ஒரு வாட்டி வெளிய வா..” என்றான்.
சுகுனா வராமல் இருக்கவும்.. ‘விவேக்.. ஒரு நிமிசம் வெய்ட் பண்ணி சாரி கேக்க மாட்டியா..? அதுக்குள்ள உள்ளே போறங்கிற..?” என்றதுதான் அடுத்த நொடி வெளியே வந்து நின்றாள்.
‘சாரி சுகுனா.. நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்கக் கூடாது..” என்றான் விவேக்.
சுகுனா அமைதியாக தலைகுனிந்து நிற்கவும்.. ‘எல்லா நேரமும் ராஜாவால துணைக்கு வரமுடியுமா…? உறுதி பண்ற பங்சனை என்னைக்கு வைக்கிறாங்கன்னு நீதான் எனக்கு சொல்லனும்.. இந்தா என்னோட விசிட்டிங் கார்ட். இந்த நம்பர்க்கு கால் பண்ணு..” என்று அவள் கையில் தன் கார்டை திணித்து கிளம்பினான்.
அங்கு என்ன நடந்திருக்குமோ என்று நினைத்துகொண்டிருந்த ரகுவிற்கு வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. பொருக்கமுடியாமல் ராஜாவிற்கு கால் பண்ணினான்.
‘சொல்லு ரகு.. “ என்றான் ராஜா.
‘ஏண்டா.. ஒரு மணியாகப்போவுது. இங்க ஒருத்தன் தவிச்சிட்டு இருக்கானேன்ற நினைப்பிருக்கா உனக்கு..? அங்க என்ன நடந்தது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதான்னு ஒரு போன் பண்ணமாட்ட..?” என்று கடுகடுத்தான்.
சுகுனா பக்கத்தில் இருக்கவும்.. ‘என்னவோ சுகுனாமேல நான் உயிரையே வச்சிருக்கேன்.. ஆனா அவ என்னை தப்பா புரிஞ்சிகிட்டதால இப்ப அவ மேல செம்ம கோவத்தில இருக்கேன். அதனால நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு இருந்த..? இப்ப மட்டும் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதான்னு எதுக்கு கேக்கிற..?” என்றான் ராஜா.
‘டேய் பக்கத்தில சுகுனா இருக்காளா..?” என்றான் ரகு.
‘என்னது..? சுகுனாகிட்ட பேசமாட்டியா..? ரகு.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி.. நீயே சுகுனாவை பார்க்கனும்னு நினைச்சாலும் அது முடியாது. ஏன்னா அவ அவளோட விவேக் மாமாவேட அமெரிக்காவுக்கு பறந்து போய்டுவா.. “ என்றான்.
ராஜாவின் பேச்சிற்கு.. இதுவரை அமைதியாக இருந்த சுகுனா.. ‘அவன் வேண்ணா அமெரிக்காவுக்கு போகட்டும்.. அவனோட நானெல்லாம் எங்க அப்பாவை விட்டு போகமாட்டேன். வேண்ணா லீவ்ல வந்து என்னை பார்த்துக்கட்டும்..” என்றாள்.
இதை கேட்ட ரகுவிற்கு அப்படி ஒரு சந்தோசம். ஆகமொத்தம் விவேக்கை கல்யாணம் பண்ணிக்கிற முடிவிற்கு வந்திட்டா. இதுவே போதும்.‚ என்று நினைத்துக்கொண்டான்.
‘என்ன…? அப்பவும் சுகுனா கல்யாணத்திற்கு வரமாட்டியா…? அவளே வந்து கூப்பிட்டாதான் வருவியா..? அதுவும் விவேக்கோட வந்து கூப்பிடனுமா..? வேண்டாம் ரகு.. சுகுனா பாவம். அவளுக்கு வெக்கமா இருக்குமில்ல.. ” என்றான்.
‘டேய்.. ராஜா உண்மையாவே அவ பாவம்டா.. விட்டுடு.. இதுக்கு மேல வேணாம்..” என்றவன் மனம் நிம்மதியாய் உணர்ந்தது.