Advertisement

அத்தியாயம் – 13
விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸ என்னை என் பையன்கிட்ட கூட்டிட்டுப் போகமுடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“கண்டிப்பாக வாங்க மேடம்” என்று அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையில் டாக்டர் குழந்தையை பரிசோதித்துக் கொண்டிருக்க¸ கீதன் கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
அங்கே வந்து அமைதியாக நின்ற மீராவைப் பார்த்த அவன் அவளருகில் வந்தபோது¸ டாக்டர் வெளியே வந்தார். டாக்டரைக் கண்டதும் திரும்பி அவரிடம் மகனது உடல்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
சிரித்தவாறே வந்தவர்¸ “உங்க பையனுக்கு சின்ன மயக்கம்தான் கீதன்¸ இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்… ஆனாலும் ஒரு டிரிப்ஸ் போட்டிருக்கேன்” என்றார்.
“டாக்டர் எதனால மயக்கமானான்?” என்று கேட்டான் அவன்.
“பையன் இப்பவே தைரியசாலியா இருக்கான்… பொதுவா குழந்தைப் பருவத்தை பாம்பு பிடித்து விளையாடுற வயசுன்னு சொல்லுவாங்க¸ உங்க பையன் தேளைப் பிடித்து விளையாடியிருக்கான். அது அவனைக் கொட்டியிருக்கு¸ அது தெரியாமல் தேளை கையிலேயே வைத்திருந்திருக்கிறான்… எல்லாவிதமான தேளுக்கும் விஷம் உண்டு¸ இது குறைந்த விஷமுடையது. அதனால்¸ குழைந்தைக்கு தலைசுற்றி மயக்கம் ஏற்பட்டிருக்கு. அவ்வளவுதான் வேறு பயப்பட ஒன்றுமில்லை” என்று சொல்லிச் சென்றார்.
மீரா அறைக்குள் சென்று மகனைப் பார்த்தாள்.
அவ்வளவு நேரமும் மீராவுக்குத் துணையாக நின்ற விமலை அனுப்பிவிட்டு அபர்கீதன் வந்தான்.
அபியின் தலைமுடியை வருடிக் கொண்டிருந்தாள் மீரா. அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன்¸ கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான். உடனே அவள் தலையைக் கவிழ்த்தாள்.
தலைகுனிந்து நின்றவளிடம்¸ “ஏன் மீரா இப்படி பண்ணினே? என்னை விட்டுப்போக உனக்கு எப்படி மனசு வந்தது?” என்று கேட்டான் வருத்தத்துடன்.
அவள் அப்படியே நிற்கவும் “பதில் சொல்லு மீரா… நான் கேட்டுட்டே இருக்கேன்¸ நீ இப்படி தலைகுனிந்து நின்றால் என்ன அர்த்தம்?” என்று அவளது தோளைப் பிடித்து உலுக்கியவன்¸ அவளது பார்வையைக் கண்டு அப்படியே அவளை  அணைத்துக் கொண்டான்.
சிறிதுநேர அமைதிக்குப் பின் “நீ என்னைவிட்டு பிரிந்து போவேன்னு நான் நினைக்கவில்லை மீரா¸ நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். என்னை மன்னித்துவிடு” என்றபடி இறுக அணைத்துக் கொண்டான்.
அவனது அந்த அணைப்பிலும் அழுது கொண்டிருந்தவளின் தோளை வருடியவாறு “நீ இல்லாமல் நான் எவ்வளவு தவித்துவிட்டேன் என்று உனக்குத் தெரியாது மீரா…” என்று அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தவன்¸ அவளை விலக்கி நிறுத்தி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
  
மீண்டும் அவன் “சொல் மீரா… ஏன் என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்? நான் மற்றவர்களின் முன்னால் தலைகுனிந்து நிற்க நேரிடும் என்பதைக் கூடவா நீ எண்ணவில்லை…? என்னை தான் வெறுத்தாய்… ஆனால்¸ வீட்டில் அம்மா¸ ஜானகி ஆன்ட்டி இவர்களையும் விட்டுச் செல்ல அப்படியென்ன காரணம் உனக்கிருந்தது என்று நீ சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றான் விடாப்பிடியாக.
அவளிடம் சற்று கண்டிப்பைக் காட்டியவன் “ஆனால்… மீண்டும் என்னை விட்டுப் போகும் முடிவை மட்டும் எடுத்துவிடாதே மீரா. நீ பிரிந்து சென்றால் நிச்சயம் என் உயிர் பிரிந்துவிடும்” என்றான் இறுக்கமான குரலில்.
தன் மகனைப் பார்த்தவாறே “இவனுக்காக தான் உங்களை விட்டுச் சென்றேன்” என்றாள் அவள்.
“அபிக்காகவா…? அப்போ நீ வீட்டை விட்டுப் போகும் முன்பே உனக்கு இவன் வயிற்றில் இருப்பது தெரியுமா? அதை ஏன் நீ என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டான் அவன் தொடர்ச்சியாக.
அவள் பதில் சொல்லத் தயங்கினாள்.
“எதுவாக இருந்தாலும் சொல்லு மீரா… இனிமேல் நமக்குள் எந்த ஒளிவுமறைவோ¸ அதன் காரணமாக பிரிவோ இருக்கக்கூடாது. அதற்காகவாவது சொல்லு” என்று வற்புறுத்தினான்.
“சரி சொல்கிறேன். நீங்கள்தான் உங்கள் குழந்தை என் வயிற்றில் வருவது பிடிக்கவில்லை என்றீர்கள்… தெரிந்தால் என்னைப் போல் தான் பிறக்கும் என்று சொல்லி அழித்துவிட சொன்னால் என்ன செய்ய முடியும் என்றுதான் சொல்லவில்லை” என்றாள்.
“மீரா… குழந்தை என்று தெரிந்தபின் வேண்டாம் என்று சொல்வேனா என்று யோசிக்க வேண்டாமா?” என்றான் அவன்.
“எனக்கு நீங்கள் அழகுபற்றி பேசியதுதான் நியாபகம் வந்தது. குழந்தை பற்றிப் பேசும்போதுக் கூட ‘இப்போதைக்கு வேண்டாம்¸ கொஞ்சநாள் சென்றபின் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள்தான்¸ நான் கேட்ட உடனே ‘உன் வயிற்றில் என் குழந்தையா? சான்ஸே இல்லை’ என்றீர்கள்” என்று அவனது வார்த்தைகளையே உபயோகப்படுத்தினாள்.
அவனை வருத்த வேண்டி அவள் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆனால்¸ அவை அவளுக்கு அந்த நாளை நினைவுறுத்த அவள் வருந்தினாள்.
“மீரா… ஐயம் சாரிம்மா… வெரி வெரி சாரி மீரா… அன்று நான் பேச பதிலுக்கு நீயும் பேச¸ அத்தோடு என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியாமலும் போகவேதான் அப்படி நடந்தது… ஒன்று சொல்லட்டுமா மீரா… நான் தொட்ட முதல் பெண் என் மனைவியான நீதான். என் முதல் குழந்தையும் நம் அபிதான்” என்று சொன்னவன் சிரித்தான்.
“பின்னே… பெண் தேவைக்காக மட்டுமே என்னை மணந்ததாக அன்று சொன்னீர்கள்” என்றாள் அவள் இன்னும் வருத்தம் விலகாமல். 
“ஆமாம் மீரா¸ அப்படித்தான் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அன்போ ஆசையோ வைத்தால் கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால்¸ நானே அறியாமல் உன்மேல் ஆசை¸ அன்பு இரண்டுமே அதிகமாகிவிட்டதால் தான் வார்த்தைகளைக் கடுமையாக்கினேன்…” என்றான்.
தொடர்ந்து அவனே “ஒரு உண்மையைக் கேள் மீரா. நான் காதலித்ததாக சொன்னேன் இல்லையா? அவள் சாகவில்லை” என்றான்.
“என்ன சாகவில்லையா!” என்று ஆச்சரியப்பட்டாள்.
“ஆமாம்¸ அத்தோடு அவள் வயிற்றில் வளர்ந்தது என் குழந்தையுமில்லை”
மீராவிற்கு அடுத்த ஆச்சரியம்.
“ஆமாம் மீரா¸ உண்மைதான். உன்னைக் கண்டுபிடிப்பதற்காக பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க சென்றபோது அந்த கல்பனாவின் அண்ணனைப் பார்த்தேன். அவன் என்னைக் கண்டதும் பதுங்கி செல்ல முயன்றான்¸ ஏன் இப்படி என்று அவனைத் தொடர்ந்து சென்றேன். அங்கே தான் அந்த கல்பனாவைப் பார்த்தேன். அவளருகில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ஓடிவந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்” என்று நிறுத்தினான்.
“எதற்காக?” என்று கேட்டாள் மீரா.
“நானும்  இதையேதான் கேட்டேன் எதற்காக என்று. அவள் சொன்னாள்… அவர்கள் என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக நடித்திருக்கிறார்கள். அவளது அண்ணன் என்று சொன்னவன் தான் அவளது கணவனாம். அப்புறம் அம்மா என்றவர் மாமியாராம்… குழந்தை விஷயம்கூட பொய் சொல்லியிருக்கிறார்கள். நான்தான் அதை உண்மையாகவே நினைத்து முதலில் அம்மாவையும்¸ பின்னர் உன்னையும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன்” என்று முடித்தான்.
“ச்சே… எப்படித்தான் இந்த மாதிரியெல்லாம் அடுத்தவங்களை ஏமாற்ற முடியுதோ!” என்று முகம் சுளித்தாள் அவள்.
அவர்கள் பேச்சு முடியும் நேரத்திற்கு சரியாக அபி எழுந்து “ம்மா…” என்று அழைக்கவும்¸ “என் செல்லம்” என்று அவனிடம் சென்றாள்.
அவன் தன் கையைத் தூக்கிக் காண்பித்து வண்டு கடித்ததாக சொன்னான்.
“ஆமான்டா¸ ஆட்களை நன்றாக பயமுறுத்திவிட்டு இப்போ சொல்லு” என்று செல்லமாகக் கடிந்துவிட்டு¸ அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அபர்கீதனைப் பார்த்ததும் சிரித்துவிட்டு அவனிடம் சென்றான்.
“என்னடா இவன் எப்பவும் நம்மளைப் பார்த்தவுடன் ஓடி வருகிறானே எந்த ஜென்மத்து பந்தமோ என்று நினைத்தேன் மீரா. ஆனால்¸ இவன் இந்த ஜென்மத்து உறவு என்று தெரியாமல் இருந்துவிட்டேன்” என்றான்.
“அது என்னுடைய தவறு” என்று ஒப்புக்கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
“மீரா நம்ம வீட்டிற்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அவள் சரி சொல்லவும் புறப்பட்டனர்.
அதற்கு சற்று முன்னர்தான் டாக்டரை சந்தித்துவிட்டு வந்திருந்தான் அபர்கீதன். அவர் இனி பயப்பட ஒன்றுமில்லை என்பதால் உடனே டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றார்.
அபிராமிக்கு போன் செய்து தெரிவித்தான். மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்¸ அவர்கள் வீட்டை அடையும்போது ஆரத்தி எடுத்து மருமகளையும் பேரனையும் இன்முகத்தோடு வரவேற்றார்.
மகனின் முகத்தில் புதியதாக இருந்த உற்சாகத்தைக் கண்டவர் “மறுபடியும் கீதனை விட்டுட்டுப் போயிடாதே மீரா… அவன் எந்த தவறு செய்தாலும் என்னிடம் சொல்லு. நான் அவனுக்குப் புரிய வைக்கிறேன்¸ சரியா?” என்று சொன்னவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
அபியிடம் “அபிக்குட்டி இவங்க உன் அப்பம்மாடா கண்ணா… போ” என்று சொல்லி அவரிடம் போகச் சொன்னான் கீதன்.
“அவன் தான் என்னைப் பார்க்க அடிக்கடி வருவானே…” என்று சொல்லியவாறு அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டார்.
மூவரும் அமைதியாக அபியின் விளையாட்டைப் பார்ப்பதிலே கவனம் செலுத்தினர். மற்றபடி¸ அவர்கள் எதைப் பற்றியும் பேசிக்கொள்ளவில்லை.
தருண் பள்ளி விட்டு வந்ததும்¸ அபி அவனை கையைப் பிடித்து அழைத்து வந்தான்.
வீட்டினுள் நுழைந்ததும் மீராவைப் பார்த்தவன்¸ “மாமா… இது நம்ம அத்தைதானே?” என்று கீதனிடம் கேட்டவாறே அவளிடம் சென்றான்.
அவனை அழைத்து அவனது தலையை வருடியபடியே கன்னத்தில் முத்தமிட்டாள் மீரா.
அபிமன்யு தனது மாமன் மகன் என்பதை அறிந்தவுடன் “அப்போ! இவன் நிஜமாவே என்னோட தம்பிதான் இல்ல பாட்டி…” என்றபடி குதூகலித்தான்.
“சரி¸ வாப்பா தருண் நீ சாப்பிட்டுட்டு அப்புறமா விளையாடு” என்று அவனை சாப்பிட அழைத்துச் சென்றார். அவன் அபியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.
சற்றுநேரம் எதுவும் பேசாமலிருந்த அபர்கீதன்¸ மீராவை மாடியிலிருந்த தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.   
உள்ளே சென்றதும் “தவறாக நினைக்காதே மீரா” என்று சொன்னவன்¸ அவளைப் பின்னாலிருந்தவாறே அணைத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு¸ அவன் கைகளைப் பற்றியவாறு கேட்டாள் அவள் “நான்தான் அழகானவள் கிடையாதே கீதன்… இருந்தும் நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்ய நினைத்தீர்கள்?” என்று.
“மீரா இதுவே நாம் இதைப்பற்றிப் பேசுவது கடைசியாக இருக்க வேண்டும். இதுபற்றி நாம் மேற்கொண்டு எந்த நாளிலும் பேசவே கூடாது… அப்புறம் இதைக்கேட்டு நீ வருந்தவும்கூடாது¸ சரியா?” என்று அவளிடம் சொல்லிவிட்டு தான் ஆரம்பித்தான்.
“அழகு அப்படின்ற வார்த்தையே ஒருத்தரை பலவீனப்படுத்த சொல்லப்படுற வார்த்தைதான்…” என்று அவன் சொன்ன உடனே¸ “எப்படி… எப்படி…?” என்று கேட்டாள் அவள்.
“இரு சொல்கிறேன். மீரா¸ எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் அழகில்லை என்றும்¸ அதே நபரின் மூலம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் அவரையே புகழ்ந்து பேசினால் என் வேலை நடக்கும் என்பதால் புகழவும் செய்யலாம். நிறம் எல்லாம் எப்பவும் நிரந்தரம் கிடையாது மீரா… இன்றைக்கு அழகாகத் தெரியக்கூடிய மனிதன்கூட பத்து பதினைந்து வருடம் சென்றால் எப்படி இருப்பான் என்பது அவனுக்கே தெரியாது…”
“இவ்வளவு ஏன் உன் அப்பாவே சொன்னாரு¸ அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டதில் முகத்தில் கண்ணாடித் துகள்கள் பட்டு முகம் முழுவதும் தழும்புகளாக உள்ளது. ‘சொந்த மகளையே மூதேவி என்றும் அழகற்றவள் என்றும் கூறி ஒதுக்கியிருக்கிறேன் மாப்பிள்ளை… இப்போது என்னைக் கண்டால் சிலர் அருவறுக்கும் போதுதான் எனக்கு அந்த வேதனை தெரிகிறது… எனக்கு இந்த தண்டனை தேவைதான்’ என்று வருந்தினார்” என்று அவளது தந்தையின் மாற்றத்தைப் பற்றியும் தெரியப்படுத்தினான்.
“ஓ…” என்று கற்பனையில் அவரது முகத்தைப் பார்த்தவள் வருந்தினாள். “எல்லாம் கடவுள் செயல் அதை நாம் மாற்றமுடியுமா…?” என்றாள்.
“அது முடியவே முடியாதுதான் மீரா” என்றான் அவன்.
“என்னது முடியாது?”
“கடவுள் செயலைத்தான் சொல்கிறேன் மீரா. உன் அக்காவைப் பெண் பார்க்க வந்த நான் உன்னைப் பெண் கேட்டதும்¸ இரண்டு பேர் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள கேட்டு நீ மறுத்ததும் அந்த கடவுளால் தானே…!”
“நான் மறுத்ததற்கு காரணம் எனக்காகப் பிறந்தவர் அவர்கள் இருவரும் இல்லை என்று பாட்டி சொல்லியதால்…” என்றவள்¸ அவனிடம் “நீங்கள் எதனால் மறுத்தீர்கள்?” என்று கேட்டாள்.
“உன்னால்தான் மீரா” என்றான் அவன் சிரிப்புடன்.
“என்னாலா…? எப்படி?”
“மீரா நீங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தீர்கள்¸ நினைவிருக்கிறதா?” என்று கேட்டான்.
“ஆமாம்¸ அம்மா ஒரு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று சொன்னதால் என்னையும் அழைத்து வந்திருந்தார்கள்”
“அங்கே உன் சகோதரிகள் இருவரும் உன்னைக் கடல் நீரில் தள்ளிவிட இழுத்துப் போனது நியாபகமிருக்கிறதா?” என்று கேட்டு சிரித்தான்.
“ஆமாம்… ஆனால்¸ அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள்  ஆச்சர்யப்பட்டு.
“அவர்கள் உன் ஒரு கையைப் பிடித்திழுத்து சென்றார்கள். நீ இன்னொரு கையை நீட்டியவாறே ‘பாட்டி வந்து என்னைக் காப்பாத்துங்க’ என்று கத்தியவாறே சென்றவள்¸ வழியில் நின்ற ஒருவர் கையைப் பிடித்து நின்றாயே… அது என் கைதான்” என்றான் அவன்.
“என்ன? உங்க கையையா?” என்று கேட்டாள் மீரா நம்ப முடியாமல்.
“சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் கையைப் பிடித்து  வைத்துக்கொண்டு¸ பாட்டி என்னை காப்பாத்துங்க என்றால்¸ நான் என்ன செய்வேன்? சொல்…” என்றான்.
அவன் கேட்டதும் அன்றைய தினத்தை நினைவுக் கூர்ந்தாள் மீரா.
தாராவும் சாராவும் மீராவிற்கு கடலில் குளிப்பதென்றால் பயம் என்பது தெரிந்திருந்ததால்¸ கடற்கரை மணலில் பாட்டியுடனிருந்தவளை கடலை நோக்கி இழுத்துச் சென்றனர். பாட்டியை அழைத்தவாறே சென்றவள்¸ வழியில் ஒரு கை தன் கைக்கு அகப்பட்டதும் அதை கெட்டியாகப் பிடித்து கொண்டாள். மற்றவர்களால் அவளை அதற்குமேல் இழுக்க முடியவில்லை¸ தங்களால் முடிந்தமட்டும் முயற்சி செய்தனர். ஆனால்¸ சில நிமிடங்களுக்குள் “அவள்தான் பயப்படுறாளே… விடுங்க” என்று தன் கையைப் பற்றி யாரோ இழுத்தது நினைவிற்கு வந்தது. அந்தக் கரம் இழுத்த வேகத்தில் அவன் போய் கீழே விழ¸ அவன் மேல் விழுந்த தான் பதறியபடி எழுந்து பாட்டியிடம் ஓடியதும் நினைவிற்க்கு வந்தது.
அதை அப்படியே சொன்னவளிடம்¸ அவன் தான் சொல்ல வேண்டியதைக் கூறினான்.
“மீரா அன்றைக்கு நான் திரும்பிப் போகும்போது உன் பாட்டியிடம் நெருங்கி அமர்ந்திருந்தாய்… அன்றே நீ என் மனதிற்குள் வந்திருக்க வேண்டும். அதனால்தான் அம்மா திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் எனக்கு உன் நியாபகம் வரும். அப்புறம்¸ உங்கள் ஊர் என்றதும் தான் பெண் பார்க்க வர சம்மதம் தெரிவித்தேன்… ஆனால்¸ அங்கு வந்தும்கூட நான் உன்னை நிச்சயம் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லைதான். பார்த்த பின்பு விடமுடியவில்லை…”
“மீரா¸ நீ அடிக்கடி சொல்வது போல் நீ அழகில்லாமல் இல்லை. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் நாளிலே என் மனதில் இடம் பிடித்த அழகி நீதான். நீ நினைக்கலாம் நானே உன்னை அழகில்லை என்று சொன்னேனே என்று. ஆனால்¸ அப்படியில்லை மீரா… அது நான் உன்னைக் கயாப்படுத்த வேண்டி சொன்னது. அத்தோடு உன் வீட்டில் உன் சகோதரிகளால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை தான் நான் உன்னை அழகில்லை என்றதும்¸ அதை உன்னை ஏற்கச் செய்தது. இனிமேலும் அப்படி நினைத்து வருந்தாதே” என்று தான் சொல்ல வேண்டியவற்றை எல்லாம் பேசி முடித்துவிட்டான்.
கீதனையே பார்த்துக் கொண்டிருந்த மீரா புன்னகையுடன் ‘சரி’ என தலை அசைத்துவிட்டு¸ “ஆனால்… என்னோட ஊர் அதுதான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்” என்றாள் சந்தேகமாக.
“அது ரொம்ப சிம்பிள் மீரா… நீங்க எல்லாரும் பேசும்போது ஒட்டுக் கேட்டதுல தெரிந்து கொண்டேன்” என்றான் அவன்.
அதன்பின் அவளிடம் “ஏன் மீரா உனக்கு கடல் என்றால் ரொம்ப பயம்?” என்று கேட்டான்.
“அது… முன்பு ஒருமுறை நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டில் சுனாமி வந்தது. எனக்கு வேளாங்கண்ணி சென்றடைவதற்கு முதல்நாள் காய்ச்சல் வந்துவிட்டதால்¸ ஒரு டீச்சர் துணையுடன் என்னை ஹோட்டலில் விட்டுவிட்டு மற்ற அனைவரும் அங்கு சென்றனர். அவர்கள் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போதுதான் சுனாமி அலை வந்து எல்லாரையும் இழுத்துச் சென்றதாம். அதில் எங்களுடன் வந்த பலரை நாங்கள் இழந்துவிட்டோம். அப்பப்பா… எவ்வளவு பெரிய அலையாக வந்தது என்பதை டி.வி.யில் பார்க்க நேர்ந்தது. அன்றிலிருந்து எனக்கு கடற்கரை பகுதி செல்வதே பயம்தான்… அவர்களுக்கு அது தெரிந்ததால்¸ என்னை பயங்காட்டுவதே அவர்கள் வேலை” என்றாள்.
அவள் சொல்லி முடிக்கும் நேரத்தில் “ம்மா…” என்று அபியின் குரல் கேட்டது.
அபியுடன் அங்கு வந்த தருண் “மாமா¸ பாட்டி உங்க ரெண்டுபேரையும் வர சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு¸ அபியை தன்னுடனே அழைத்துச் சென்றான்.
கீழே வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு¸ குழந்தைகள் தூங்குவது வரை பேசிக் கொண்டிருந்தனர்.
தங்கள் அறைக்கு செல்வதற்காக ஹாலில் தூங்கிவிட்ட அபியை தூக்கச் சென்ற மீராவைத் தடுத்த அபிராமி¸ “கீதன் ரெண்டுபேரையும் என் அறையில் படுக்க வை” என்று அவனை ஏவிவிட்டு¸ “நீ மேலே போம்மா… மருத்துவமனை நெடி இன்னும் போகவில்லை¸ போய் குளி” என்று அவளை அனுப்பி வைத்தார்.
குழந்தைகளை படுக்க வைத்து விட்டு வந்த கீதனிடம் “மீரா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. நீதான் அவளை கவனமாக பார்த்துக் கொள்ளணும்” என்று சொல்லிவிட்டு தானும் தூங்கச் செல்வதாக சென்றார்.
குளித்துவிட்டு வந்த மீரா தலைமுடியை உதறிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் வந்தவன் “மீரா¸ ஈரத்தலையோடு படுத்தால் சளி பிடிக்குமாமே… நல்லா துவட்டு” என்று சொல்லிவிட்டு¸ தான் குளிக்கச் சென்றான்.
வந்தபின் என்ன செய்வது என்று தடுமாறினான் கீதன்.
சமாளித்து அவளிடம் “மீரா¸ உனக்கு தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டான். 
அவளும் “இல்லை” என்றாள்.
“அப்ப நான் ஒரு பாட்டுப் பாடட்டுமா?” என்று கேட்டான்.
“தாலாட்டா பாடப்போறீங்க?” என்று கேட்டாள் விளையாட்டாக.
“இல்லை மீரா¸ எனக்கு பிடித்த பாட்டு. நீ என்னை விட்டுப் போனபின் நான் அடிக்கடி கேட்ட ஒரே பாடல் அதுதான். பாடவா?”
“சரி பாடுங்க” என்றாள்.
“அழகே! அழகே! உன்னை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வரவேண்டும்! வேண்டும்!”   என்று தன் இரு கைகளையும் விரித்தான் அபர்கீதன். மீரா சந்தோஷமாகச் சென்று அந்த கரங்களுக்குள் அடைக்கலமானாள்.
“ரொம்ப நல்லா பாடுறீங்க” என்றாள்.
“ஓ… பரிசு எதுவும் கிடையாதா?” என்று கேட்டான் குறும்புடன்.
“உங்களுக்கு இல்லாமலா…” என்று சொல்லித் தன் குதிகாலை உயர்த்தி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் கீதனின் அழகிய மீரா.
                                                     
                                                                    -முற்றும்-

Advertisement