Advertisement

அத்தியாயம் – 9
கோவை வந்தபின்னர் அபர்கீதனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம். ஷோரும்  சென்றால் இரவு லேட்டாகத் தான் வருவான். அத்தோடு அவன் மாடியிலேயே வேறு அறையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். தேவைக்கு அவளிடம் வருபவன் ஆசை தீர்ந்ததும் உடனே சென்றுவிடுவான்.
நான் இவனின் இந்தத் தேவையை மட்டுமே நிறைவேற்றவா பிறப்பெடுத்தேன் என்று நொந்துகொள்ள ஆரம்பித்தாள் மீரா. இது இப்படியே தொடர்ந்தது.
மாதங்கள் சில சென்றன. அபிராமி மாதம் ஒருமுறையாவது கேட்பார் “என்னம்மா நல்ல செய்தி உண்டா?” என்று.
காமாட்சி பாட்டியும் “தாராவுக்கு இது ஐந்தாவது மாதம்¸ நீ எப்போது…?” என்று சிரித்தார்.
அபர்கீதன் இப்படி அவளிடம் சரியாகப் பேசாமலும்¸ அவனை சரியாகப் பார்க்க முடியாமலும் போகவே¸ ஒருநாள் மருத்துவமனைக்கு சென்று பெண் மருத்துவரை சந்தித்துப் பேசினாள்.
அவளின் சந்தேகத்தைக் கேட்டவர்¸ “உங்கள் தாம்பத்ய உறவு எப்படி?” என்று கேட்டார். அந்த நேரத்தில் கீதன் எப்படி நடந்து கொள்வான் என்பதைப் பற்றி சொன்னாள்.
அதன்பின் அவளை பரிசோதனை செய்த டாக்டர் சொன்ன செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. “டாக்டர்¸ இப்படிக்கூட நடக்க வாய்ப்புண்டா?” என்று கேட்டாள் சந்தேகத்துடன்.
“ஆமாம்மா¸ இது உண்மைதான்” என்றார் அவர்.
“கிட்டத்தட்ட ஏழு மாசமாகுது டாக்டர். அதில் ஒரு தடவை கூடவா எங்கள் தாம்பத்யம் முழுமை அடையவில்லை என்று சொல்றீங்க…? ஆனால்¸ ஏன் இப்படி?” என்று கேட்டாள்.
“இதுக்கு பதில் நீங்க உங்க கணவர்கிட்டத்தான் கேட்கணும். மற்றபடி உங்ககிட்ட எந்த விதமான பிரச்சனையுமில்லை” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
வீடு வந்த பின்பும் மீராவால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவளின் மாதவிடாய் நாட்களைத் தவிர அவளை அதிகம் நெருங்குபவன் சடடென விலகி சென்றதன் காரணம்¸ தனக்கு ஒரு குழந்தை வருவதை அவன் விரும்பவில்லையா? அல்லது அவனின் ஆண்மை குறைபாடா? என்ன காரணம் என்று அவனிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைத்தாள்.
அன்றிரவு அறைக்கு வந்தவனிடம் பேச வேண்டும் என்றாள். “எதுவாக இருந்தாலும் காலையில் பேசு. இப்பொழுது வா” என்று அழைத்தான்.
“காலையில் உங்களை எங்கே பார்க்கிறது? அதுதான் முடியாததாயிற்றே?” என்று விலகிச் சென்று அமர்ந்தாள்.
அவன் எரிச்சலுடன் “என்ன?” என்று கோட்டான்.
“அத்தையும் பாட்டியும் என்னை எப்பவும் தொந்தரவு பண்றாங்க” என்றாள்.
“எதுக்கு?”
“எப்பொழுது நல்ல செய்தி சொல்லப் போறேன்னு கேட்குறாங்க”
“என்ன நல்ல செய்தி?”
‘இவன் இதைப் புரியாமல் தான் கேட்கிறானா? இல்லை…’, “நமக்கு எப்பொழுது குழந்தை வரும் என்று கேட்கிறார்கள்” என்று சொல்லி அவன் முகம் பார்த்தாள்.
“நம்ம குழந்தையா?” என்று கேட்டான் அவன் ஒரு மாதிரியாக.
“ஆமா…”
“அதாவது எனக்கும் உனக்குமான நம்ம குழந்தையா?”
“ஆமாம். நாம் இருவரும் கணவன் மனைவி என்றால் நமக்குப் பிறக்கும் குழந்தை நம் குழந்தை தானே?” என்று கேட்டாள்.
“இருக்கலாம் மீரா… ஆனால்¸ என் குழந்தை எப்படி இருக்க வேண்டுமென்று எனக்கு சில ஆசைகள் உண்டு. அதனால் என் குழந்தை உன் வயிற்றில் என்றால் சான்ஸே இல்லை” என்றான்.
“நான் உங்க மனைவி¸ உங்க குழந்தையை நான் சுமக்காமல் வேறு யார் சுமப்பார்கள்?” என்று கேட்டாள் வருத்தத்துடன்.
“வேறு யாறும் சுமப்பார்களோ இல்லையோ… நிச்சயமாக நீ சுமக்கப் போவது இல்லை” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“என்ன சொல்றீங்க நான் ஏன் உங்கள் குழந்தையை சுமக்கக்கூடாது?” என்று கேட்டாள்.
“நீ எப்பவாவது உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா மீரா?” என்று கேட்டவன்¸ அவளைப் பிடித்து இழுத்து கொண்டு கண்ணாடி முன்போய் நிறுத்தினான். அவளருகில் தானும் நின்று¸ “ஏதாவது பொருத்தம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“பார்த்த அனைவரும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக கூறினார்களே…” என்றாள் மனதில் வலியுடன்.
“ஆங்… அவர்கள் எல்லாரையும் தான் சொல்வார்கள். உனக்குத் தோன்றுகிறதா?” என்று கேட்டான்.
மனதின் வலி அதிகமாகவே¸ “என்னை விடுங்கள்… நானா உங்களிடம் வந்து என்னை கல்யாணம் பண்ண சொல்லிக் கேட்டேன்? நீங்கள்தானே அன்று என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி திருமணத்திற்குக் கேட்டீர்கள்…” என்றாள்.
தொடர்ந்து அவளே “அன்று மட்டும் இந்த குறை உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டாள்.
“தெரியாமல் இல்லை”
“அப்படியானால் அழகாகத் தெரிகிற யாராவது ஒரு பெண்ணை¸ இல்லையென்றால் நீங்கள் பெண் பார்க்க வந்த தாராவையே கல்யாணம் செய்திருக்கலாமே…” என்று அவள் சொன்னபோது¸ “அவள் உன்னைப் போல் பொறுமையாக இருக்க மாட்டாளே” என்றான்.
“புரியவில்லை உங்கள் பேச்சு”
“புரியும்படியாகவே சொல்றேன். கொஞ்சம் கொச்சையாக இருக்கும்¸ பரவாயில்லை இன்று மட்டும்தானே கேட்டுக்கொள்… என் வயதிற்கு எனக்கு ஓர் பெண் தேவைப்பட்டாள். அது நான் திருமணம் செய்த பெண்ணாக இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதனால் நான் அழகான பெண்களைத் தேடவில்லை¸ கோவைக்குப் பக்கமாகவும் தேடவில்லை. உன் அக்காவைப் பார்க்க வந்தபோது¸ எதனாலோ அந்த வீட்டில் உள்ளவர்கள் உன்னை வெறுப்பதை புரிந்துகொண்டேன். உன்னை மணந்தால் நீ அந்த வீட்டிற்கு செல்லமாட்டாய்¸ வேறு எங்கும் செல்லவும் விரும்பமாட்டாய் என்று நினைத்தேன்…” என்று அவன் பேச்சை நிறுத்தவும்¸ மீரா வெடித்தாள்.
“நான் உங்ககிட்ட வந்து சொன்னேனா? எனக்கு என்வீடு பிடிக்கவில்லை¸ என்னைக் கூட்டிட்டுப் போங்கன்னு… உங்களுக்குத் தேவை ஓர் பெண்தான் என்றால் பணம் கொடுத்து போக எத்தனையோ இடங்கள் இருக்கிறது. நீங்க வசதியானவர் தானே அப்படிப் போயிருக்க வேண்டியதுதானே” என்று பேச்சில் தன் கோபத்தைக் காட்டினாள்.
“நான் அந்த மாதிரி போறவன் இல்லை மீரா” என்றான் அவன் அமைதியாகவே.
“போனாலும் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை… இப்போ நீங்க இந்த ரூமை விட்டு வெளியே போங்க” என்று வாசலை நோக்கிக் கை காட்டினாள்.
“இது என் வீடு மீரா¸ பேசாமல் வா” என்று அவன் மீண்டும் அழைக்கவும்¸ “உங்களுக்கு வெட்கமாக இல்லை¸ கூட படுக்கிறதுக்கு மனைவி வேண்டுமாம் ஆனால்¸ அவள் உங்க குழந்தையை மட்டும் சுமக்கக்கூடாது… சேச்சே அபிராமி அத்தைக்கு இப்படி ஒரு மகன் பிறந்திருக்கவே கூடாது… இது உங்க வீடாகவே இருந்தாலும் பரவாயில்லை¸ நீங்க வெளியே போங்க. இல்லையென்றால் நான் சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிவிடுவேன்” என்றாள்.
அதற்குமேல் தொந்தரவு பண்ணாமல்¸ “இன்னும் எத்தனை நாளைக்கு என்று பார்க்கிறேன்” என்று சென்றுவிட்டான்.
மீரா அன்றிரவு முழுவதும் அழுது கொண்டேயிந்தாள். ‘பாட்டி எனக்கானவன் என்னை எனக்காகவே திருமணம் செய்து கூட்டிப் போவான் என்று சொல்வீர்களே… இவனுக்கும் என்னைப் பிடிக்கவில்லை¸ என் பெண்மையை மட்டும்தான் பிடித்திருக்கிறதாம் ’என்று தன் பாட்டியிடம் மனதிற்குள்ளாகவே கேட்டுக் கொண்டாள். வெகுநேர அழுகையினூடே அவள் தூங்கியும் விட்டாள்.
காலையில் எழுந்தவளுக்கு பயங்கர வயிற்று வலி. மாதாந்திர பிரச்சனை. ‘ஏன்தான் கடவுள் இப்படி ஒரு பிரச்சனையை பெண்களுக்குக் கொடுத்தாரோ?’ என்றெண்ணியவாறே சென்று குளித்துவிட்டு ஜானகியிடம் சென்றாள்.
அவளை பார்த்ததும் ‘என்னம்மா?’ என்று கேட்டு சுடுநீரில் முட்டை கலந்து குடிக்கக் கொடுத்தார். அதன்பின் மீரா தன் அறையில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவளது மாதாந்திர பிரச்சனைகள் எல்லாம் சரியான பின் ஒருநாள் அபர்கீதன் மீண்டும் அவளிருந்த அறைக்கு வந்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.
படுக்கையை உதறி கொண்டிருந்தவளிடம் வந்து ஒரு பார்சலை நீட்டினான். அவள் எதுவும் பேசாமல் அவனை உணர்ச்சியற்றுப் பார்க்கவும்¸ “உனக்குத் தான்” என்று பார்சலை பிரித்துக் காட்டினான்.
அழகான மணிமாலை ஒன்று இருந்தது.
அதைப் பார்த்ததும் “இது எதுக்கு நான் இன்று உங்களுடன் சேர்ந்து இருப்பதற்கு கூலியா?” என்று கேட்டாள்.
அவன் பதிலேதும் பேசாமலே இருக்கவும் “இதற்கென்றே இருப்பவர்களிடம் கொண்டு போய் கொடுத்தால் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்துவார்கள்” என்று சொல்லிச் சிரித்தவள்¸ “அவர்கள் என்னை மாதிரி உங்களிடம் குழந்தை¸ அதுஇதென்று நச்சரிக்க மாட்டார்கள். சீக்கிரம் போங்கள்” என்று விரட்டினாள்.
அவன் எதுவுமே சொல்லாமலிருக்கவும்¸ கடைசியாக “அத்தோடு எனக்கு சீக்கிரம் டிவோர்ஸ் வேண்டும்” என்றாள்.
அதுநேரம் வரை பேசாமலே இருந்தவன் “டிவோர்ஸ்… எதுக்கு?” என்று கேட்டான்.
“என்னால் இந்த மாதிரி மட்டும் இருக்க முடியாது” என்று பதிலளித்தாள்.
“நான் டிவோர்ஸ் தரமாட்டேன்” என்றான் அவன்.
“ஏன்? நான் செத்துப்போனால் தான் விடுவீர்களோ?”
“மீரா… அப்படியெல்லாம் பேசாதே. குழந்தை இல்லைன்னா வாழமுடியாதா என்ன?” என்று கேட்டான்.
“ஏன் உங்களால் இந்த மாதிரி இல்லாமல் இருக்க முடியாதா?”
“முடியாது” என்றான் அவன் உடனே.
“அப்படியானால் என்னாலும் சேர்ந்து வாழ முடியாது”
“மீரா¸ மீரா… என்னை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறே?”
“நான் எதுக்காக உங்களை புரிஞ்சிக்கணும்?”
“ஏன்னா¸ நான் உன் கணவன்” என்றான் அவன்.
“ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி அவளைத் தொட்டு விட்டால் மட்டும் ஒருவன் அவளுக்குக் கணவனாகிவிட முடியாது”
“என்னால் உன்னைத் தாயாக்க முடியாது மீரா”
“ஏன்…? நீங்கள் ஆண்மையற்றவரா இல்லை…” என்று அவள் ஆரம்பிக்கவும்¸ “என்னால் ஏற்கனவே ஒரு பெண் தாயாகியிருக்கிறாள்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் “நீங்கள் இவ்வளவு மோசமானவர் என்று நான் நினைக்கவில்லை” என்று முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்னை முழுதாக சொல்லவிடு மீரா” என்று அவன் சற்று எரிச்சலுடன் சொல்லவும்¸ அவள் அமைதியாகிவிட்டாள்.
“நான் படிப்பை முடித்து டிரேடர்ஸின் பொறுப்பை ஏற்றிருந்த சமயம் அது. அங்கு புதியதாக வேலைக்கு சேர்ந்திருந்த பெண் கல்பனாவை எனக்குப் பிடித்திருந்தது அவளுக்கும்தான். எங்கள் பழக்கம் அவள் வீட்டில் அவளது அண்ணனுக்கும் அம்மாவுக்கும் தெரியவந்தது. அவர்களுக்கும் சம்மதம்தான். ஆனால்¸ திடீரென ஒருநாள் அவள் கன்சீவ் ஆகியிருக்கிறேன் என்றபோது எப்படி என எனக்குப் புரியவில்லை. அதைக் கேட்டபோது அவர்கள் வீட்டில் ஒரு விருந்திற்காக அழைத்திருந்தார்கள்¸ அன்று அவள் அண்ணனுடன் நானும் சேர்ந்து குடித்துவிட்டு அவளிடம் அத்துமீறி நடந்ததாகக் கூறினாள்…”
“சரி இனி அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவெடுத்து¸ அதை அம்மாவிடம் சொல்வதற்குள் மாதம் எட்டாகிவிட்டது. அம்மாவிற்கு தெரிய வந்தபோது¸ என்னைத் திட்டினார்கள் ‘ஏன் இவ்வளவு அவசரம்’ என்று. எனக்கு அவமானமாக இருந்தது¸ அப்போதுதான் பொறுப்பை ஏற்றிருந்தேன்¸ அம்மா நிம்மதியாக இருக்க வேண்டும்¸ தங்கையை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்று நிறைய கடமைகள் இருந்த சமயத்தில் தனக்கென ஒன்றைத் தேடிவிட்டானே என அம்மா நினைப்பார்களோ என்று நினைத்திருந்தேன். ஆனால்¸ அம்மா அந்த மதிரி இல்லாமல் கல்பனாவிற்கு நிறைய நகைகள் வாங்கிக் கொடுத்தார்கள். ரொம்பவும் பாசமாகவே அவளை நடத்தினார்கள்”
“திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் என்ற நிலையில் அவளைக் காணவில்லை. வெளியூர் சென்றவள் திரும்பி வரவில்லை என்றனர் அவளது அண்ணனும் அம்மாவும். இரண்டே நாட்களில் நகைகளுக்காக கர்ப்பிணிப் பெண் கொலை என்று அவள் படம் போட்டு செய்தி வெளியாகியது. உடல் கூட முழுதாகக் கிடைக்கவில்லை. அவளோடு சேர்ந்து என் குழந்தையும் போய்விட்டது… அன்று முடிவு செய்தேன்¸ இனி என் வாழ்க்கையில் திருமணம்¸ குழந்தை இதற்கெல்லாம் இடமில்லை என்று. ஆனால்¸ அம்மாவின் அன்பு என்னைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது” என்று முடித்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்த மீரா “அம்மாவுக்காக திருமணம் செய்தீர்கள் என்றால்¸ தாலிகட்டி இங்கே அழைத்து வந்ததோடு நிறுத்தி இருக்க வேண்டியதுதானே…? அப்புறம் ஏன் என்னோடு… ச்சே” என்றாள்.
“என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தேன் மீரா. ஆனால்¸ முடியவில்லை” என்றான் தலை குனிந்தவன்போல்.
“ம்… அப்போதே ஒரு பெண்ணிடம் அத்துமீறி அவளைத் தாயாக்கி இருக்கிறீர்கள். அதை என்னிடம் மறைத்து… எனக்கு உங்களைப் பார்க்கவே அருவறுப்பாக இருக்கிறது” என்றாள் அவள்.
“மீரா நீ அதிகமாப் பேசுறே”
“நான் அப்படிதான் பேசுவேன். கல்யாணம் என்னும் பேரில் என் வாழ்க்கையை வீணாக்கியவர் நீங்கள். நான் அப்படித்தான் பேசுவேன்” என்றாள் ஆவேசமானவள் போல்.
“நான் இவ்வளவு சொல்லியும் நீ புரிந்து கொள்ளமாட்டேன் என்றால் நான் என்ன செய்வது” என்று தோளைக் குலுக்கினான்.
“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். வெளியே போனால் போதும்” என்றாள்.
“உனக்கு நான் வெளியே போகணும்¸ அப்படித்தானே?”
“ஆமாம்” என்றவள் எழுந்து போர்வையை சரி பண்ண ஆரம்பித்தாள். “சே… எப்படித்தான் குழந்தையை சுமக்க ஒருத்தி¸ படுக்கையை பகிர்ந்துக்க ஒருத்தின்னு வாய் கூசாமல் சொல்ல முடிகிறதோ…” என்று வாய்விட்டு சொன்னவாறு தன் வேலையைச் செய்தவளின் அறையில் டிவி சத்தம் கேட்க ‘நான் போடவில்லையே¸ அப்புறம் எப்படி?’ என்றெண்ணியவாறு திரும்பினாள். அங்கே அறைக் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டிருந்தான் அபர்கீதன்.
அதைப் பார்த்தவள் “ஏன் கதவைப் பூட்டுறீங்க? நான் உங்களை வெளியே போக சொன்னேன்” என்றாள்.
“நான் இன்றைக்கு வந்த வேலை முடியாமல் வெளியே போகப்போறதில்லை” என்று அவள் கையைப் பற்றினான்.
“நான் கத்துவேன்¸ கையை விடுங்க” என்று அவள் சொன்னதும்¸ ரிமோட்டை எடுத்து சத்தத்தை அதிகரித்தான்.
அவளிடம் “இனி கத்து” என்றான்.
“இப்படிப் பண்ணினால் உங்க மேல வெறுப்புதான் வரும். பேசாமல் போங்க” என்றாள் அவள்.
“இதுக்கு முன்னாடியும் செய்தவன்தான் இப்போ மட்டும் முடியாது சொன்னால் விட்டு விடுவேனா? அப்போதும் உன் சம்மதம் கேட்கவில்லை¸ இப்போதும் கேட்கப் போவதில்லை” என்று அவளை இழுத்துக் கொண்டுபோய் கட்டிலில் போட்டவன்¸ “என் தேவையை நிறைவேற்றாமல் நான் போகப் போவதில்லை” என்று அவள் மேல் படர்ந்தான்.
அவள் எதிர்ப்பைக் காட்டவும் அவனது வேகம் அதிகரித்தது. கடைசியில் முடியாமல் போகவே¸ “எனக்கு வலிக்குது¸ விடு. ப்ளீஸ்… ரொம்ப வலிக்குது கீதன்¸ விட்டுடேன்” என்று கெஞ்சினாள். எங்கோ ஆழத்திலிருந்து கேட்பது போல் ஒலித்தது அவள் குரல்.
எழுந்தவன் “என்னையும் இப்படி கொடூரமா நடக்க வைச்சிட்டியே” என்று அவள் மேல் ஒரு போர்வையை இழுத்துப் போட்டுவிட்டு தான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றுவிட்டான்.
மீராவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது.

Advertisement