Advertisement

அத்தியாயம் – 5
“ஹாய் அஸ்வி!  பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது.
“மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?” என நலம் விசாரித்தவன்¸ அவளது கேள்விக்கு பதிலாக “அம்மாவா? ம்… நல்லா இருக்காங்க. ஆன்ட்டியும் சூப்பரா இருக்காங்க… நீதான் இந்த பக்கம் எட்டிகூட பார்க்க மாட்டேங்கிற” என்றான் குறையாக.
அவள் “நீ சீக்கிரம் பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… நான் வந்து ஒரு மாசம் டேரா போடுறேன்” என்றாள்.
“அப்படின்னா நான் அடிக்கடி கல்யாணம் பண்ணிக்கணுமே!” என்றான் அவன்.
“என்னண்ணா சொல்றே?”
“ஆமா அஸ்வி… நீ இப்பதானே சொன்னாய்¸ நான் கல்யாணம் செய்தால் ஒருமாதம் தங்குவேன் என்று. அப்படியானால் உன்னை வரவழைக்க வேண்டுமென்றால் வருடம் இரண்டு முறையாவது நான் திருமணம் செய்ய வேண்டாமா?” என்று வெகு சீரியஸாக கேள்வி எழுப்பினான்.
அவனது கேள்வியை உள்வாங்கியவள் “அண்ணா உனக்கு ரொம்பவே ஆசைதான்… உதைபடுவே ஜாக்கிரதை!” என அவள் செல்லமாக மிரட்டவும்¸ “ஐயோ! அஸ்வி என் காதில் ரத்தம் வருது” என்றான்.
“அண்ணா…” என்று அவள் சிணுங்கினாள். சற்றுநேரம் அவளிடம் விளையாட்டாகப் பேசிவிட்டு “சொல்லு அஸ்வி” என்றான்.
“அம்மா வருத்தப்படறாங்கண்ணா. நீ இப்படியே இருந்தால் பாவம் அவங்க என்னதான் செய்வாங்க” என்று பரிந்து பேசினாள்.
“ஏய்! அப்படி என்ன வயசாயிடிச்சி எனக்கு இவ்வளவு அவசரப்படறதுக்கு” என்றான் கீதன்.
“எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற வயசுதான். உன்னைவிட ரெண்டுவயசு சின்னவர் தான் என் ஹஸ்பன்ட்¸ அவருக்கே கல்யாணமாகி ஒரு குழந்தையிருக்கு தெரிஞ்சுக்கோ” என்றாள் அவள்.
“யாரோட கல்யாணமாகி குழந்தையிருக்கு அஸ்வி?” என்று கேட்டான் அவன் விளையாட்டாக.
“அண்ணா பேச்சை மாத்தாதே பீ சீரியஸ்”
“ஓ.கே. சீரியஸ். சொல்லு”
“பெண் பார்க்க சொல்லவா?”
“சரி சொல்லு. ஆனால்¸ அது உங்க சாந்தோஷத்திற்காகத்தான்” என்றான் அவன்.
“ஏன் அண்ணா? உனக்கு சந்தோஷம் இல்லையா?”
“ம்… தெரியலையே அஸ்வி”
“சரிண்ணா¸  நாம இதைப் பத்தி அப்புறம் பேசலாம். இப்ப நான் அம்மாகிட்ட பேசணும்”
“எனக்கு வெளியே போகணும்¸ நீ வீட்டு நம்பருக்கு போன் பண்ணு” என்று சொல்லி பேச்சை முடித்தான்.
மாலை வீடு வந்தவனிடம்¸ “கீதன் ரொம்ப சந்தோஷம்ப்பா… நீ கல்யாணத்திற்கு சம்மதித்ததே எனக்கு போதும்” என்று அவனை அருகில் அமர்த்திக் கொண்டார்.
“சொல்லுப்பா… எப்படிப்பட்ட பெண் பார்க்கணும்? நம்ம ஊரிலிருந்து ரெண்டு மூணு வரன் வந்திருக்குது¸ அதில் ஒன்றைப் பேசி முடிப்போமா?” என்று கேட்டார்.
“பக்கத்தில் வேண்டாம்மா…”
“ஏன்ப்பா?”
“அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போயிடுவாங்க. நினைச்ச உடனே போகக்கூடிய தூரமா இருக்கக்கூடாது¸ குறைந்தது ஒரு நாளாவது ஆகணும்… அவ்வளவு தூரத்தில் இருக்கணும்” என்றான்.
“அப்போ அந்த பெண்ணுக்கு கஷ்டமாக இருக்காதாப்பா..?”
“கஷ்டத்தை இஷ்டமாக்கிக்க வேண்டியது வரப்போற பெண்ணோட பொறுப்பு” என்று முடித்தவன்¸ “ஜானு ஆன்ட்டி அம்மாவுக்கு ஸ்வீட் செய்து கொடுங்க¸ நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
பைல் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் எங்கிருந்தோ அந்த பாடல் கேட்டது.
                             
                                “நினைக்கத் தெரிந்த மனமே
                                உனக்கு மறக்கத் தெரியாதா?”
அருமையான வரிகள்.
‘ஒருவரைப் பற்றி நினைக்கத் தெரிந்தால் அவரைப் பற்றி மறக்கவும் தெரிய வேண்டும்¸ ஆனால்… இந்த மனதிற்குத் தெரியவில்லையே ஏன்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
அபர்கீதன் கேட்டமாதிரி ஒரு வரன் தரகர் மூலம் அமைந்தது.
ஊர் நாகர்கோவில்.
பெண்ணுடைய போட்டோவை அவன் பார்க்கவில்லை¸ நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான். ஒருவாரம் சென்றபின் வருவதாக தகவல் கொடுக்கச் சொன்னான்.
அபிராமிக்குத்தான் வருத்தமாக இருந்தது. “எந்த பெண்ணாவது தாய்வீடு செல்வதை விரும்பாமல் இருப்பாளா?” என்று கேட்டார் ஜானகியிடம்.
“விடு அபிராமி¸ நம்ம அஸ்வினி இல்லையா? என்ன மாசத்துக்கு ஒரு தடவைன்னு வந்த பொண்ணு இப்ப எப்படி வருது… போகப் போக பழகிடும்” என்று சமாதானப்படுத்தினார் அவர்.
“ஆமா… அதுவும் சரிதான்” என்று பெண் வீட்டிற்கு தகவல் கொடுத்தார் அபிராமி.
கபிலன் மீரா வீட்டிலிருந்து போகும் வழியிலேயே அவளைப் பார்த்துவிட்டான். வண்டியில் வந்து கொண்டிருந்தவளை நிற்க சொல்லிப் பேசினான். அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவள்¸ அவளது அப்பா மறுத்ததைப் பற்றி கூறியதும் முகம் வாடினாள்.
உடனே¸ “சரி கபிலன்¸ நான் போறேன்” என்று வண்டியை ஸ்டார்ட் செய்தாள். கபிலன் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்துவிட்டான்.
“கபிலன் என்ன விளையாட்டிது? சாவியைக் கொடுங்க… நான் வீட்டுக்குப் போகணும்” என்று சாவிக்காக கையை நீட்டினாள்.
“மீரா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்… நீ சம்மதம் சொன்னால் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு மும்பை போயிடலாம்” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.
“இல்லை கபிலன்¸ சரிப்பட்டு வராது”
“ஏன் மீரா?”
“ஆசைப்பட்ட எல்லாம் எல்லாருக்கும் நடப்பதில்லை கபிலன்”
“அப்படியென்றால்?”
“நீங்க வேற நல்ல அழகான பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்ங்க” என்றாள் அவன் மேலுள்ள அக்கறையில்.
“அப்ப நீ? உன் வாழ்க்கை?”
“எனக்காகப் பிறந்தவன் வரும்வரை நான் காத்துட்டு இருப்பேன்”
“அது நானில்லையா மீரா?”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றவளிடம்¸ “எப்படி சொல்றே?” என்று கேட்டான்.
“ஆமாம் கபிலன். விமலா என்னைப் பற்றி உங்களிடம் நிறைய சொல்லி¸ அதன் காரணமாக என்மேல் பரிதாபம் ஏற்பட்டு அதனாலே நீங்கள் என்னைத் திருமணம் செய்ய நினைத்திருக்கலாம்…” என்று அவள் பேச்சை முடிப்பதற்குள் “அப்படி நினைத்தது தப்புன்று சொல்றியா மீரா?” என்று கேட்டான்.
“தப்பென்று சொல்லவில்லை… ஆனால் சரிதான் என்றும் சொல்லமுடியவில்லை. அது சரியாக இருந்திருந்தால் என் அப்பாவிடமிருந்து சம்மதம் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் என்னை ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுக்கத்தானே செய்வார். அதை ஏன் உங்களுக்குத் தர வேண்டுமென்று நினைக்கவில்லை..? ஏன்னா… அது என் விதி. எனக்கு நீங்கள்தான் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை போல. ஸோ… நீங்க என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்” என்று சொல்லி சாவியை வாங்கிக் கொண்டு அவள் கிளம்பியதை பின்னால் வந்த சாரா பார்த்துவிட்டாள்.
ஏற்கனவே மௌலி விஷயத்தில் கோபமாக இருந்தவள் இப்பொழுது இன்னொரு அழகான இளைஞனுடன் மீரா பேசியதைப்  பார்த்ததும் அவளால் பொறுக்க முடியவில்லை.
‘அவளுக்கு ஏதாவது தண்டனை தர வேண்டும்… என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கலானாள்.
வீடு வந்ததும் சாரா மீராவைப் பார்த்ததைப் பற்றி தாராவிடம் கூற¸ அவளும் வீட்டில் நடந்ததைக் கூறினாள்.
“நாம ரெண்டுபேர் இவ்வளவு அழகா இங்கே இருப்பது எவன் கண்ணுக்கும் தெரியமாட்டேங்குது¸ அந்த கருவாச்சிதான் தெரியுறா… அவளுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்¸ அதுவும் அப்பாவை வைத்துத்தான் கொடுக்க வேண்டும். எப்படி?” என்று இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டினர்.
மறுநாள் காலையில் கல்லுரி புறப்பட்டுக் கொண்டிருந்த மீராவிடம் வந்து “மீரா இன்னக்கும் எனக்கு ஒரு உதவி செய்வியா” என்று கேட்டாள் சாரா.
“ஏன் இன்னிக்கும் உன்னை காலேஜ் கொண்டு விடணுமா” என்று கேட்டாள் மீரா.
“இல்லை இன்னிக்கு எனக்கு லீவு”
“ஏன் என்னாச்சு?”
அவள் தன்னுடைய காலைக் காட்டினாள் காலில் கட்டு போடப்பட்டிருந்தது. “அன்றைக்கு ஒரு சின்ன விபத்து என்று சொன்னேனில்லையா…? அதில் ஒரு ரத்தக்கட்டு ஏற்பட்டு இருந்திருக்கிறது நான் கவனிக்கவில்லை. நேற்று காலேஜில் வைத்து ஒரே வலி. ஹாஸ்பிட்டல் போனேன்¸ அவர்கள் கீறிவிட்டு மருந்துபோட்டு கட்டிவிட்டனர்” என்றாள் விளக்கமாக.
“ஓ… மருந்து சாப்பிட்டாயா?” என்று கேட்டாள்.
‘அப்பா என்ன அக்கறை!’ என்று மனதில் நினைத்துவிட்டு¸ “ம் ஆச்சு” என்றவளிடம் “சரி சொல்லு¸ நான் என்ன செய்யணும்?” என்று கேட்டாள் மீரா.
தான் வைத்திருந்த ஒரு பெரிய பேக்கை எடுத்துக் கொடுத்து¸ “உனக்கு ஸ்டார் ரெஸ்டாரன்ட் தெரியுமில்லையா? இன்று மதியம் அங்கு சென்று என் நண்பன் ஒருவன்… நேற்று நீ கூட பார்த்தாயே! மிஸ்டர் மௌலி அவரிடம் இதைக் கொடுத்துவிடு” என்றாள்.
பேக்கின் கணத்தைப் பார்த்துவிட்டு “என்ன இருக்கிறது?” என்று கேட்டாள்.
“அவர் ஒரு ஆஸ்ரமத்திற்கு நிதி திரட்டுகிறார். நான் ஏற்கனவே என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்திருந்தேன்¸ பழைய துணிகளும் கொடுக்கலாம் என்றார். நம் வீட்டில் தான் நிறைய இருக்கிறதே… நானும் அக்காவும் பயன்படுத்தியதை இதில் வைத்திருக்கிறேன். கொடுத்து விடுவாயா?” என்று கேட்டாள்.
“சரி” என வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.
அவளைப் பார்த்து சிரித்தபடி மௌலிக்கு போன் செய்து விபரம் சொன்னாள். அப்படியே தன் தந்தைக்கும் போன் செய்து “நேற்று நம் வீட்டிற்கு வந்திருந்தவனுடன் ஓடிப்போக மீரா திட்டமிட்டிருக்கிறாள்” என்று சொன்னவள்¸ அந்த ரெஸ்டாரன்டின் பெயரைச் சொல்லிவிட்டு¸ அங்கு அவர்கள் இருவரும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினாள். மறுமுனையில் அவர்¸  “அந்த ஓடுகாலிக்கு காலே இல்லாமல் பண்ணிவிடுகிறேன்” என்று போனை வைத்தார்.
மத்யானம் ஒரு மணியளவில் விமலாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அந்த ரெஸ்டாரன்டில் காத்துக் கொண்டிருந்தாள் மீரா.
விமலாவிற்கு தன் தோழி தன் அண்ணியாகும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தம்தான். ஆனாலும் தன் தோழமையை விட்டுக் கொடுக்கவில்லை.
சற்றுநேரத்தில் வந்த மௌலி பொதுவாக சற்றுநேரம் பேசிவிட்டு. அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி அவளது கையைப் பற்றினான்.
“சீச்சீ… இது என்ன பைத்தியக்காரத்தனம். கையை விடு” என்று அவள் சொன்னபோது¸ அவளது தலைமுடியை பற்றித் திருப்பினார் தந்தை விநாயகம்.
“அப்பா நீங்க?”
“எப்படி வந்தேன்னு அதிர்ச்சியா இருக்கா? ஓடுகாலி நாயே” என்று கன்னத்தில் அறைந்தார்.
“அப்பா நீங்க ஏதோ தப்பா…” என்று அவள் சொல்வதற்குள் மீண்டும் கையை நீட்டினார்.
மௌலி அவரைத் தடுத்து “சார் இது பொதுஇடம்.  அநாகரீகமாக நடந்துகொள்ள வேண்டாம்” என்றான்.
“ஏன்டா அதை நீ சொல்றியா? இவ்வளவு நேரமும் இவ கையைப் பிடிச்சி கொஞ்சினியே அது மட்டும் நாகரீகமா?” என்று அவன் மேல் பாய்ந்தார்.
“அப்பா¸ ப்ளீஸ். வீட்ல வந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்க¸ இங்க வேண்டாம்” என்று கெஞ்சினாள்.
“உன் தப்பு தெரிஞ்சிடுச்சேன்னு பயந்து வீட்டுக்கு வர்றேன்னு சொல்றியா…? நான் இங்கே வரலேன்னா இந்நேரத்துக்கு நீ இவனோட ஓடிப்போயிருப்பே அப்படிதானே?”
“அங்கிள் மீராவைப் பத்தி தப்பா பேசாதீங்க” என்றாள் விமலா.
“நீதான் இவ பிரண்டா? நேற்று உன் அண்ணன் வந்தான்¸ இன்னிக்கு இவனை ஏற்பாடு செய்து கூத்தடிக்கிறியா?” என்று அசிங்கமாகப் பேசினார்.
“தயவுசெய்து நான் சொல்றதை கேளுங்கப்பா” என்று சொல்லிய மீரா¸ சாரா தந்துவிட்ட பேக்கைத் திறந்து காண்பித்தாள்.
பெட்டியைப் பார்த்ததும் இன்னும் ரௌத்தினமானார் விநாயகம். “ஏன்டி நாயே வீட்டில் உள்ள பணம்¸ நகை¸ உன்னோட துணியெல்லாம் நீ எடுத்து வந்துட்டு¸ என் மகள்மேல் பழி போடுகிறாயா?” என்று கேட்டு அடித்தவர்¸ யார் தடுத்தும் கேளாமல் அவளை இழுத்துச் சென்று காரில் தள்ளிவிட்டு¸ வீட்டிற்குப் புறப்பட்டார்.
வீட்டிற்குள் அவளைத் தரதரவென அழைத்து  வந்தவர்¸ இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டைக் கழட்டி விளாசிவிட்டார்.
“அப்பா நான் தப்பு செய்யவில்லைப்பா. என்னை நம்புங்கள்…” என்று கெஞ்சினால். அவர் அதைக் கேட்காமல் தொடர்ந்து அடிக்கவே¸ சாராவிடம் “சாரா நீயாவது சொல்லேன்¸ நடந்தது என்னவென்று உனக்குத் தெரியும்தானே¸ சாரா சொல்லுடி என்னால் வலி தாங்க முடியவில்லை” என்று அழுதாள்.
அப்போதுதான் அவர் அடிப்பதைப் பார்த்த காமாட்சி வந்து¸ “மாப்பிள்ளை¸ அவளை ஏன் இப்படி அடிக்கிறீங்க? அவள் என்ன தப்பு செய்திருந்தாலும் இப்படி காட்டுமிராண்டித்தனமா அடிச்சா எல்லாம் சரியாய் போயிடுமா?” என்று கேட்டு மீராவைத் தூக்கினார்.
“அத்தை இது எனக்கும் என் மகளுக்கும் உள்ள பிரச்சனை. நீங்க தலையிடாதீங்க…” என்றார் விநாயகம்.
“…இன்னிக்கு இவளைக் கொன்றாள்கூட என் ஆத்திரம் அடங்காது” என்று தொடர்ந்தவர்¸ சமையலறை சென்று கத்தியை பழுக்கக் காய்ச்சி எடுத்து வந்தார். “ஓடுகாலி நாயே! இனிமேல் உனக்கு இப்படி எண்ணம் ஒருநாளும் வரகூடாது” என்று சொல்லி அவள் காலில் ஒரு சூடு இழுத்துவிட்டார்.
வலியில் “அம்மா…..” என்று துடித்தவளுக்கு அன்று மீண்டும் வலிப்பு வந்தது.
காமாட்சி மருத்துவமரை அழைத்தார். வந்தவர்¸ “என்னம்மா இந்தப் பெண்ணை இப்படி கொடுமை படுத்தியிருக்குறீங்க!” என்று ஆவேசப்பட்டார். “இந்த சின்ன உடம்புல எத்தனை பெல்ட் அடி.  அத்தோடு தீச்சூடு வேற… இவர் மனுசஷனா¸ இல்லை மிருகமா?” என்று கொதித்தவர்¸ “அம்மா நான் போய் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார் காமாட்சியிடம்.
“இல்ல தம்பி. இனிமேற்கொண்டு இப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரை அனுப்பிவைத்தார்.
தாராவுக்கும் சாராவுக்கும் பயங்கர சந்தோஷம்.

Advertisement