Advertisement

அத்தியாயம் 4
தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக கண்ணில் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும்” என்றார்.
விசாலத்திற்கும் மீராவைப் பற்றித் தெரியும்தான். மற்ற இருவரையும்விட சற்று நிறம் மட்டுந்தான் குறைவு. மற்றபடி அவள் அவர்கள் இருவரையும் விட அழகிலும் குணத்திலும் சிறந்தவள்தான். இருந்தும் என்ன செய்வது? அவளால்  எதிர்த்துப் பேச முடியாதே.
அப்படி ஒருமுறை பேசி கேட்கக்கூடாத பேச்செல்லாம் வாங்கிக்கட்டிக் கொண்டது போதும். ‘அவளுக்கு என்ன நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அதன்படியே எல்லாம் நடக்கட்டும்’ என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவளை ஓடீவந்து வரவேற்றாள் தோழி விமலா. பெரியம்மா பிள்ளைகள் என இருவர் வந்திருந்தனர். அவர்களிடமும் தன் பெற்றோரிடமும் அவளை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினாள்.
விமலாவின் தாய் மீராவின் தாடையைப் பிடித்து தன் உதட்டில் வைத்துவிட்டு¸ “நீ ரொம்ப அழகா இருக்கேம்மா” என்றபோது முதன்முறையாக ஒருவர் தன்னை பாராட்டி கூறியது வெட்கத்தைத் தர விமலாவைப் பார்த்தாள்.
“ஏன்டி என்னைப் பார்க்கிறே? அம்மா எப்பவும் உண்மைதான் பேசுவாங்க. வா என் ரூமிற்கு போகலாம்” என அழைத்துச் சென்றவளிடம்¸ “உன் பிரண்ட் எங்ககூட எல்லாம் பேசமாட்டாங்களா?” என்று கேட்டான் விமலாவின் பெரியம்மா மகன் கபிலன். அவன் திடீரென்று அப்படி கேட்கவும் மிரட்சியுடன் தோழியின் பின்னால் பதுங்கினாள் மீரா.
“ஏய் அண்ணா நீ இப்படி கேட்டதும் அவங்களைப்  பாரு பயந்துட்டாங்க” என்றாள் அவனது சொந்தத் தங்கை கவிதா.
“எதுக்கு பயப்படணும். நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன் விமலா?” என்று கேட்டான் மீராவைப் பார்த்தபடி.
“அவள் கண்ணுக்கு அப்படித்தான் தெரியுதோ என்னமோ…வா மீரா” என கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். மீராவின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
கவிதாவும் அவர்களுடன் வந்து அமர்ந்து கொன்டாள். மதிய சாப்பாடு நேரம் வரை பேசிக் கொண்டே இருந்தனர்.
கபிலன் தான் வந்து “உங்க யாருக்கும் பசிக்கவில்லையா? எனக்கு பயங்கரமா பசிக்குது. சித்தி உங்க எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டாங்க” என்று சொல்லி கவிதாவை கையோடு அழைத்துச் சென்றான்.
தங்கையிடம் “மீரா எப்படி உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.  
               
“ரொம்ப பிடிச்சிருக்குண்ணா. இவங்க எனக்கு அண்ணியா வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றாள்.
சாப்பிடும்போது கபிலன் மீராவைப் பார்த்தபடி இருக்க¸ அவளாள் இயல்பாக சாப்பிட முடியவில்லை. ‘இவன் ஏன் இப்படி பார்க்கிறான்?’ என்று மனதிற்குள் நினைத்தாள் ‘விமலா உன் அண்ணனை இப்படிப் பார்க்க வேண்டாமென்று சொல்லு’ என சொல்ல நினைத்த நேரம் “அண்ணா வேடிக்கை பார்க்காமல் சாப்பிடு” என்றாள் விமலா.
அதன்பின் இயல்பாக சாப்பிட்டாள் மீரா. “கொஞ்ச நேரம் விளையாடலாம் விமலா” என்றான் கபிலன்.
“என்ன விளையாடலாம்?”
“கார்ட்ஸ் விளையாடுவோம். மீரா உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் “இல்லை எனக்கு இந்த மாதிரி விளையாட்டுகள் பிடிக்காது. நீங்க விளையாடுங்க நான் வேடிக்கை பார்க்கிறேன்” என்றாள்.
கபிலன் விமலாவைப் பார்த்தான்.
“அவ இருக்கட்டும். நீ கார்டை எடுத்து அடுக்கு” என்றாள்.
அவர்கள் விளையாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் மீரா எழுந்து டிவி பார்த்து கொண்டிருந்த விமலாவின் அம்மாவிடம் சென்று அமர்ந்து கொள்ள இருவரும் பேச ஆரம்பித்தனர்.
சற்றுநேரத்தில் “ரெண்டுபேரும் என்ன பேசிட்டு இருக்குறீங்க?” என்று கேட்டுக்கொண்டு விமலாவும்¸ கூடவே கபிலன்¸ கவிதாவும் சேர்ந்துகொள்ள பேச்சு சுவாரசியமாகச் சென்றது. சிறிது நேரத்தில் “இனி நான் கிளம்புகிறேன் விமலா” என்று எழுந்தாள் மீரா.
விமலாவின் அம்மா கட்டிய மல்லிகைச் சரத்தை மீராவின் தலையில் வைத்துவிட புன்னகை புரிந்தவாறே வீட்டைவிட்டு வெளியேறினாள்.
டூவீலரில் அமர்ந்தவளிடம் “மீரா என் அண்ணன் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம். கேட்டுட்டுப் போயேன்” என்று அவளை நிறுத்திவிட்டு¸ கபிலனைத் தவிர மற்ற இருவரும் விலகிச் சென்றனர். கபிலன்  நெருங்கி வரவும் வண்டியை அழுத்தமாகப் பிடித்து தன் பதற்றத்தை குறைத்தாள் மீரா.
“மீரா பயப்பட வேண்டாம் ப்ளீஸ்” என்றான். அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
சிறு புன்னகையுடன் “எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்கவும்¸ மீரா பலமாக அதிர்ந்தாள்.
“ஸாரி¸ எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை. அத்தோடு எனக்கு மூத்த சகோதரி இருக்கிறாள். நீங்க எதுவும் பேச வேண்டுமென்றாள் வீட்டில் பேசுங்கள்” என்றாள் மீரா.
“வீட்ல சரி சொன்னால் உங்களுக்கு சம்மதம்தானே?” என்று கேட்டான் அவன் விடாமல்.
“வீட்டில் பேசுங்கள்¸ அப்புறம் என் சம்மதத்தைப் பார்க்கலாம். பை” என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள்.
“அண்ணா… காயா? பழமா?” என்றபடி வந்தனர் இருவரும்.
“அதை மீராவோட அப்பா¸ அம்மா தான் சொல்லணும்” என்றான்.
வழக்கம்போல காலேஜ்¸ கணினி வகுப்பு என்று மீராவின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
தாராவைப் பெண் பார்ப்பதற்கென அடிக்கடி மாப்பிள்ளை வீட்டினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். வந்த மாப்பிள்ளைகளை ஒவ்வொரு குறையாகக் கூறி மறுத்துக் கொண்டிருந்தாள் தாரா.
ஒருநாள் மீரா காலேஜ் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் சாரா வந்து “மீரா உன் வண்டியில என்னை டிராப் பண்ணுவியா?” என்று கேட்டாள்.
                       
‘என்னடா அதிசயமா இருக்குது!’ என நினைத்தவள்¸ “ஏன் உன் காருக்கு என்னாச்சு?” என்றாள்.
“நேற்று ஒரு சின்ன ஆக்சிடென்ட்… காரை சர்வீசுக்கு விட்டிருக்குறேன்…” என்று அவள் சொன்னதும்¸ “அடி எதுவும் படவில்லையே?” என்று கேட்டாள் இவள் உண்மையான அக்கறையோடு.
“அதெல்லாம் இல்லை… என்னை டிராப் பண்ண முடியுமா..? முடியாதா..?” என்றாள் எடுத்தெறிந்தாற்போல.
“வா போகலாம்” எனறு வண்டியைக் கிளப்பினாள்.
காலேஜ் சென்று கொண்டிருந்தவர்களை வழியில் மடக்கியது ஒரு கார். மீரா திட்ட வாய் திறக்கவும்¸ கார் கண்ணாடி இறங்கியது. பின்னாலிருந்து “மௌலி!” என்று சாராவின் குரல் கேட்கவும் அமைதியாகிவிட்டாள்.
சாராவைப் பார்த்து¸ “ஹாய் ஸ்வீட்டி! உன் கார் என்னாச்சு?” என்று கேட்டான்.
அவள் சொன்னதும்¸ “என்னோட வர்றியா? சேர்ந்து போகலாம்” என்று அழைத்தான்.
“யா… வித் பிளசர்!” என்று ஸ்கூட்டியிலிருந்து இறங்கியவள் “மீரா நீ போ… நான் மௌலி கூட போறேன்” என்று சொல்லிவிட்டு அவளிடம் பதிலை எதிர்பாராமலே காரில் ஏறி அமர்ந்தாள்.
கார் கிளம்பியதும் “சாரா யாரந்த தேவதை?” என்று கேட்டான்.
“என்னப்பா உன் கண்ணுக்கு எல்லாருமே தேவதைதானா?” என்றாள் அவள்.
“எஸ் சாரா!  இந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் பசங்க மேரேஜ் பண்ணிக்க விரும்புவாங்க” என்று தான் நினைத்ததைக் கூறினான்.
“சரி¸ மத்தவங்களை விடு… நீ எப்படி?” என்று கேட்டாள்.
“சான்ஸ் கிடைச்சா நானே பண்ணிப்பேன்” என்று அவன் சொன்னபோது ஒரு எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது அவளுள்.
“அது என்னோட சிஸ்டர்தான் மௌலி… நீ அவகிட்ட பேசுறியா? நான் ஏற்பாடு பண்றேன்” என்று கேட்டாள்.
“ஓ..! தேங்க்ஸ் சாரா..!” என்று அவளது கைகளைப் பிடித்தான்.
மௌலி அவளது காலேஜ் சீனியர். கல்லூரி இளம்பெண்களுக்கு அவன் மீது ஒரு கிரேஸ் உண்டு. பெரும் பணக்காரன்¸ அழகானவன்… அப்படிப்பட்டவன் தன்னிடம் வலிய வந்து பேசியது ஆச்சரியம் என்றாலும்¸ மீராவை ஆண்கள் திருமணம் செய்ய ஏற்ற அழகு என்றது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
‘எந்தவித அழகும் இல்லாதவள்¸ அவளை இவன் புகழ்வதா?’ என்று கடுப்பானாள்.
அன்றுமாலை கபிலன் மீராவின் தந்தையைப் பார்க்க வந்தான். அவன் வந்தபோது மீரா வீட்டில் இல்லை¸ தன் கணினி வகுப்புக்குச் சென்றிருந்தாள்.
விநாயகம் வெளியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
“வணக்கம் சார்!”
“வணக்கம் தம்பி¸ யார் நீங்க?” என்று கேட்டார் அவர்.
“சார் நான் உங்க பொண்ணு மீரா…” என்று ஆரம்பிக்கும்முன்¸ “அடடே! அது நீங்கதானா தம்பி தரகர் நீங்க நாளைக்கு வருவதாகத் தான் சொன்னார். நீங்க இன்றைக்கே… அதுவும் தனியா வந்திருக்கிறீங்க…” என்று தானே பேசியவாறு உள்ளே அழைத்துச் சென்றார்.
விநாயகத்திற்கு கபிலனை பார்த்த உடனே பிடித்துவிட்டது. இதுவரை வந்த மாப்பிள்ளைகளைவிட பெர்ஸ்னாலிட்டியாக இருந்தான். தாராவிற்கும் பிடிக்கும் என நினைத்தவர் மனைவியை அழைத்து அவனை அறிமுகம் செய்து வைத்தார்.
“வணக்கம்!”
பதிலாக வணக்கம் சொல்லியபடி கணவனைப் பார்த்தார் விசாலம். அவர் கண்ஜாடைக் காட்டி தாராவை ரெடியாகி வர சொன்னார்.
விசாலம் சென்று தாராவை அழைத்தார்.
கபிலன் வீட்டினுள் நுழையும்போதே அவள் பார்த்துவிட்டாள். அப்பா தன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வர இருப்பதாக சொல்லியிருந்ததால் இது அவனாகத்தான் இருக்குமென்று எண்ணி அவள் தயாராகியிருந்தாள். தாயார் வந்ததும் அவருடன் சென்று காபி கலந்து எடுத்துச் சென்று கபிலனிடம் கொடுத்தாள்.
நன்றி சொல்லி வாங்கியவன் அவளை  நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
தாரா உடனே உள்ளே சென்றுவிட்டாள்.
காபியைக் குடித்து முடித்தவன் தான் வந்த விஷயம் பற்றி பேச ஆரம்பித்தான். “நான் மீராவோட பிரண்ட் விமலாவின் பெரியம்மா மகன். என் சார்பாக பேச வீட்டில் பெரியவங்க கிடையாது¸ அதனால நானே பேசுறேன். எனக்கு ஒரு தங்கை மட்டும்தான்¸ ப்ளஸ்டூ படிக்கிறாள். நான் இண்டியன் ஏர்போர்ஸ்ல வேலை பார்க்கிறேன்…”
“அப்படியா! நல்லது தம்பி…”
“சார்¸ நான் விமலா வீட்டுக்கு மீரா வந்திருந்தபோது அவளைப் பார்த்தேன். எனக்கு அவளை ரொம்ப பிடித்திருக்கிறது… என் விருப்பத்தை அவளிடம் சொன்னபோது அவள் வீட்டில் உங்களிடம் பேச சொன்னாள். அதனாலதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று தான் வந்த விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து பேசினான்.
விநாயகம் கொதித்துப் போய்விட்டார்.
‘அவளுக்கு என்ன தைரியமிருந்தால் தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டு¸ அவனை என்னிடமே வந்து பேசச் சொல்லியிருப்பாள்’ மனதிற்குள் எண்ணிக் கொண்டவர் வந்தவனிடம் “தம்பி நீங்க போகலாம்” என்றார்.
“சார்¸ நான்…” என்றவனைப் பேசவிடாமல்¸ “இவ்வளவு நேரமும் உங்களை உட்கார வைத்து பேசினதுக்குக் காரணம் நீங்க என் மூத்த பெண் தாராவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை என்பதுதான். ஆனா நீங்க¸ அந்த மூதேவியைப் பத்தி பேச வந்திருக்குறீங்க என்று எனக்கு முதலிலே தெரியாமல் போய்விட்டது”.
“சார் மீராவைப் பற்றி அப்படி சொல்லாதீங்க” என்றான் கபிலன்.
“என் பொண்ணு!  நான் எப்படி வேணும்னாலும் பேசுவேன்.. அதைக் கேட்க நீ யார்?” என்று எடுத்தெறிந்து பேசினார்.
“சார் உங்க பெண்ணைப் பற்றி அடுத்தவங்க முன்னால நீங்களே இப்படி பேசலாமா?” என்று கேட்டான்.
முகம் கருத்தவர் “அக்கா ஒருத்தி இருக்கும்போதே தனக்கு மாப்பிள்ளை பார்த்தவளை என்ன சொன்னாலும் தப்பில்லை” என்றார் சற்று அழுத்தமாக.
இருந்தும் கோபப்படாமல் “நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னு சொன்ன உடனே உங்ககிட்டதான் பேசச் சொன்னாள்” என்று எடுத்துரைக்க முயன்றான்.
“அப்படியே இருந்தாலும் பரவாயில்லை… யாருமில்லாத அனாதைக்கு என் பெண்ணைக் கொடுக்கமாட்டேன்! நீ போகலாம்!” என்று வாசலை நோக்கிக் கைநீட்டினார்.
“நான் இனி மீராவிடம் பேசிக்கொள்கிறேன்” என்று சென்றுவிட்டான் கபிலன்.
தாரா வெகுநேரம் அழுதாள்.   
மீரா இங்கு இருக்கும்வரை தனக்குத் திருமணம் நடக்காது என்று தந்தையிடம் கூறினாள். அவர் விசாலத்தை நன்றாக திட்டினார். “நான் அவளை எங்கேயும் அனுப்பக்கூடாதுன்னு சொன்னால் நீ கேட்குறியா?” என்றார்.
காமாட்சிதான் மகளுக்கும் பேத்திக்குமாக பரிந்துவந்தார். “ஏன் மாப்பிள்ளை..? அந்த பையனுக்கு மீராவைப் பிடிச்சிருக்கு¸ பெண் கேட்டு வந்தான். அதில் என்ன தப்பு? பெண் பிள்ளைங்க பருவத்தில் இருந்தால் நாலுபேர் கேட்கத்தான் செய்வாங்க… அதுக்கு ஏன் இவளைத் திட்டுறீங்க?” என்று கேட்கவும் அடங்கிவிட்டார்.

Advertisement