Advertisement

அத்தியாயம் 3
மீராவின் ஒரே துணை அவளுடன் படிக்கும் தோழி விமலா மட்டும்தான். தன் வீட்டில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் அவளிடம் சொல்வதுண்டு. நல்ல தோழியான அவள் மீராவின் மனதிற்கேற்றவாறு பேசி அவளை நல்ல மூடிற்கு கொண்டு வந்து சிரிக்கவும் வைத்துவிடுவாள்.
வீட்டில் தாராவும் சாராவும் எங்கு செல்ல அனுமதி கேட்டாலும் கிடைக்கும். ஆனால் மீரா பக்கத்திலுள்ள தோழியின் வீடு செல்ல அனுமதி கேட்டால்கூட குடும்ப கௌரவம் கெட்டுப் போகுமென சொல்லி விநாயகம் மறுத்துவிடுவார். இதே காரணத்தைக் கூறி அவளை பள்ளி¸ கல்லூரி சுற்றுலாவிற்கும் அனுமதித்ததில்லை.
அவளும் அதனால் அதிகமாக வெளியே செல்ல விரும்புவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் மற்ற இருவரும் செல்வதைப் பார்க்கும்போது இவர்கள் இருவரும் செல்லும்போது போகாத மானம் நான் போகும்போது மட்டும் எப்படிப் போகும்? என கேட்கத் துடிக்கும் நாவை அடக்கிக் கொள்வாள்.
தன் வீட்டின் நிலைமை இப்படி இருந்ததால் மீரா கல்லூரியில் இருக்கும் நேரத்தை மிகவும் ரசித்தாள்.
‘இன்னும் மூன்று மாதத்தில் கல்லூரியும் முடிந்துவிடும். அதன்பின் என்ன நடக்கும்? அவர்களின் தேள் கொட்டும் வார்த்தைகளையும் உதாசீனப் பார்வைகளையும் தாங்கிக் கொண்டு எப்படி அங்கு வாழ முடியும்?’ இதை நினைத்து அவள் மன உளைச்சலும் கொண்டாள். “எனக்கு இதிலிருந்து விடிவே கிடையாதா?” என்பதாகவே அவள் பேச்சுமிருந்தது.
“ஏய் ஏன்டி இப்படி விரக்தியாய் பேசுறே?” என்று கேட்டாள் விமலா.
“எனக்கு எப்படா அங்கிருந்து வெளியே போவோம் என்றிருக்கிறது விமலா”
“என்ன மீரா உன் பாட்டி உன்மேல் எவ்வளவு பாசம் வைச்சிருக்காங்க! அதை மறந்துட்டியா?”
“இல்லடி… இப்போ எல்லாம் அக்காவும் தங்கையும் வேண்டுமென்றே என்னை குறை சொல்றாங்க”
“இது எப்பவும் நடக்குறதுதானே! அதுக்கு ஏன் நீ புதுசா வருத்தப்படுறே?” என்று தனக்குத் தோன்றியதைக் கேட்டாள் அவள்.
“அப்படி அவங்க பேசும்போது எனக்கு என்னையே பிடிக்காமல் போகுதுடி. அதிலும் இப்போ தாராவுக்கு வரன் பார்க்குறாங்க. அன்றிலிருந்து ‘உனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? என்னையே சிலபேர் வேண்டாம்னு சொல்றாங்க… இவ்வளவு அழகான என்னையே வேண்டாமென்றால் உன் நிலைமை!! அய்யோ பரிதாபம்!’னு சொல்லி சிரிக்கிறாங்கடி” என்று வருந்தினாள்.
“விட்டுத்தள்ளு மீரா… எப்படியும் உனக்காகவும் ஒருத்தன் பிறந்திருப்பான் இல்லையா? அவனுக்கு உன்னைப் பிடிக்கும்¸ உன் கல்யாணமும் நடக்கும்” என்று அவளைத் தேற்றினாள் தோழி.
“ஒருவேளை அவனுக்கும் என்னைப் பிடிக்கவில்லையென்றால்?” என்று மறுகேள்வி கேட்டாள் அவள்.
“நிச்சயமாக பிடிக்கும்! உனக்காகப் பிறந்தவனுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும்¸ அவன் உனக்காகவே வாழ்வான்” என்றாள் அவள் நம்பிக்கையுடன்.
‘கீதன் டிரேடர்ஸ்’ என்னும் பெயர்ப்பலகை மின்விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது.
நகரின் மையப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிகஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூம். பொங்கலை ஒட்டிய நேரமென்பதால் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஷோரூம் மூடும்வரை கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விதவிதமான சலுகைகள். கடையின் விற்பனைப் பெண்கள்¸ விற்பனை ஆண்கள் என அனைவரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையான பொருட்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு தம்பதியினர் கடைப்பையன் ஒருவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். “அதுக்கு இது இலவசம்னு சொல்லிட்டு ரெண்டுக்கும் சேர்த்து விலைபோட்டு விற்குறீங்களே!  இது உங்களுக்கே அநியாயமாகத் தெரியவில்லை?” என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“அமைதியாகப் பேசுங்க சார்¸ எல்லாரும் பார்க்குறாங்க” என்று அந்தப் பையன் சொல்ல¸ “பார்க்கட்டுமே!” என்று அவர் இன்னமும் குரலை உயர்த்திப் பேசவும்¸ வாடிக்கையாளர்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அவர் பலமாக சத்தம் போட்டதால் அவரிடம் பேசுவதை விடுத்து¸ “மேடம்¸ சார்கிட்ட சொல்லுங்க மேடம்” என்று அவரருகில் நின்றுகொண்டிருந்த அவரது மனைவியிடம் வேண்டினான் அவன்.
“ஏன் தம்பி என்கிட்ட சொல்றே? அவர் சரியாகத்தானே கேட்கிறார்! நீங்க ரெண்டுக்கும் சேர்த்து விலைபோடத்தானே செய்றீங்க¸ இது ஏமாத்துவேலை தானே!” என்றார் அந்த பெண்மணி.
“மேடம்¸ எங்க கடை அப்படி மக்களை ஏமாத்தினது இல்லை. நீங்க பொருள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை¸ கிளம்புங்க!” என்றபோது¸ “என்ன சார் உங்க பிரச்சினை?” என்று கேட்டபடி அவர்களிடம் வந்து நின்றான் ஒரு இளைஞன்.
தன் சார்பாகப் பேச ஒரு ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் “பாருங்க தம்பி! இந்த ‘ஃப்ரிட்ஜ்’  வாங்கினா இந்த மாடல் போன் இலவசம்னு போட்டிருந்தது. ஆனால் பில் போடும்போது ரெண்டையும் அதோட விலையிலேயே போட சொல்றான் இந்தப் பையன்” என்று அவசர அவசரமாக நிலைமையைக் கூறினார் அந்த மனிதர்.
கடைப் பையனிடம் திரும்பிய அந்த இளைஞன் “என்ன தம்பி சார் சொல்றது உண்மையா?” என்றான்.
“சார்…! அவர் கேட்கிற மாடல் ஃப்ரிட்ஜ் பற்றி விளம்பரத்தில் போடவில்லை என்று சொன்னால் புரிஞ்சுக்காமல் கோபப்படுகிறார்” என்றான் அவன்¸ நீங்களாவது புரிய வையுங்களேன் என்ற தோனியில்.
“இல்லை தம்பி¸ இவன் பொய் சொல்றான். இங்கே பாருங்க!” என்று தான் கொண்டு வந்திருந்த செய்தித்தாள் துண்டை எடுத்துக் காட்டினார்.
அதை வாங்கிப் பார்த்தவன் “சார் நீங்க சொல்ற மாடலுக்கு எந்த ஆஃபரும் போடவில்லையே! சரியாகத்தான் பார்த்தீர்களா?” என்று கேட்க¸ அவனது கையிலிருந்த பேப்பரை வாங்கி ‘குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டுமே இந்த சலுகை! அதுவும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!’ என போடப்பட்டிருந்ததை பார்த்துவிட்டு¸ தன் முன்பாக இருந்த ஃப்ரிட்ஜை திரும்பத் திரும்ப பார்த்தவர் அடுத்த நிமிடத்தில் மன்னிப்பு கோரினார்.
“ஐயோ! சாரி தம்பி… நான் தெரியாமல் பேசிவிட்டேன்!” என்று சொன்னவர்¸ கடைப்பையனிடமும் “சாரி தம்பி” என்றார்.
அவர்கள் இருவரும் சிரித்த முகமாக தலையாட்ட அவர் அந்த இளைஞனிடம் பேச ஆரம்பித்தார்.
“ஒரு வருஷமா சேர்த்து வைத்திருந்த காசு தம்பி! பிள்ளைங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. நானும் இன்றைக்கு இதை வாங்கி வருவேன்னு…” என்று தொடர்ந்தவரிடம் “பரவாயில்லை சார்… நாங்க தவணை முறையிலும் பொருட்களை விற்கிறோம்¸ நீங்க வேணும்னா அப்படி வாங்கிக்கறீங்களா?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
‘நாங்கள்’ என்று அவன் சொன்னதை கவனித்தவர்¸ “அப்படின்னா தம்பி நீங்க..?” என்று இழுத்தவரிடம்¸ “இது என்னோட ஷோரூம்தான் சார்” என்று புன்னகைத்தான் ‘அபர்கீதன்’.
“ஓ..!” என்று சற்று வருத்தமாகவே கேட்டுக் கொண்டவர்¸ மனைவியிடம் திரும்பி “போகலாமா?” என்று கேட்க¸ “சார்¸ நீங்க ஃப்ரிட்ஜ் வாங்கவில்லையா?” என்று கேட்டான் கீதன்.
“தம்பி… தவணை முறையில் வாங்கினால் வட்டி நிறைய வரும். என்னால அத்தனை மாசம் இதுக்காக பணம் ஒதுக்கமுடியாது” என்று அவர் சொல்லவும்¸ “சார் வட்டி எல்லாம் போடமாட்டோம். இப்போ இருக்குற பணத்தைக் கொடுத்து வாங்குங்க¸ மீதியை ஒரு மாதம் கழித்து கொடுங்க… நான் உங்களுக்கு டிஸ்கவுன்ட் தர்றேன்” என்றான் அவன்.
“ரொம்ப நன்றி தம்பி” என்றவர்¸ ஃப்ரிட்ஜை வாங்கிவிட்டு கடைப் பையனிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பை வேண்டினார். போகும்முன் “உங்க முதலாளிக்கு ரொம்ப நல்ல மனசுப்பா” என்று சொல்லிச் சென்றார்.
அவர் விலகியதும்¸ “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? நமக்கு இந்தப் பொருள் மூலமா வரக்கூடிய மொத்த லாபமும் வராமல் போய்விடுமே” என்றான் அக்கறை உள்ளவனாக.
“இருக்கட்டும் ஜேம்ஸ்… இந்த மாதிரி யாராவது ஒருத்தர்தான் வருவாங்க¸ அதனால இதில் எனக்கு சந்தோஷம்தான்! நீ மற்ற வாடிக்கையாளர்களைப் பார்” என்றபோது அவனது அலைபேசி அழைத்தது.
வீட்டிலிருந்து அவனது தாயார்தான் அழைத்திருந்தார்.
“தம்பி ரொம்ப நேரமாகுதுப்பா¸ சீக்கிரம் வீட்டுக்கு வா” என்றழைத்தார் தாய் அபிராமி.
“அம்மா பொங்கல் சீசன் என்று தெரியும்தானே¸ வர்றதுக்கு கொஞ்சம் முன்னே பின்னே தான் ஆகும். நீங்க சாப்பிட்டுவிட்டுப் படுங்க… ஜானகி ஆன்ட்டிகிட்ட எனக்கு சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லி கதவை லாக் பண்ணிட்டு அவங்களையும் படுக்க சொல்லுங்க” என்றான்.
“இல்லை கீதன்¸ அம்மா உன்கிட்ட பேசணும்” என்றார் அவர்.
“காலையில் பேசுங்கம்மா… நான் போனை வைச்சிடுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
சீசன் டைம் என்பதற்காக கடையை அதிக நேரம் திறந்து வைத்ததால்¸ கடையில் வேலை செய்யும் பெண்களை கடையின் சொந்த வண்டியில் பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு¸ மற்றவர்களும் சென்றபின் தானே கடையை அடைத்தான்.
அதன்பின் அபர்கீதன் கிளம்ப மணி பத்தாகி விட்டது. சாதாரணமாக ஒன்பது மணிக்கு அடைக்கும் கடையை பண்டிகைக் காலங்களில் பத்து மணிக்கு அடைப்பது அவனது வழக்கம்.
காரில்  ஏறி அமர்ந்தவன் அம்மா எதைப்பற்றி பேச நினைத்திருப்பார்கள் என யோசித்தான். வேறு என்னவாக இருக்கும் அவனது திருமணத்தை பற்றித்தான் இருக்கும் என்பதையும் அவனே கணித்துக் கொண்டான்.
காரில் சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருத்தவன்¸ வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
வீடு வந்து சேர்ந்தவன்¸ எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை பார்த்தபின்னரும் சாப்பிட விருப்பமின்றி சென்று தூங்கிவிட்டான்.
நாளை மறுநாள் பொங்கல்.
‘இன்றும் நாளையும் பயங்கர வேலையிருக்கும்’ என நினைத்தபடியே விழித்தவன் விரைவாக எழுந்து உடற்ப்பயிற்சியை முடித்து¸ குளித்து புறப்பட்டுச் சென்று அம்மாவைப் பார்த்தான்.
அபிராமி இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்¸ சூடு இருந்தது போலில்லை. “அம்மா” என அவரைத் தொட்டு எழுப்பினான்.
கண் விழித்தவர் மகன் ரெடியாகி நிற்பதைப் பார்த்துவிட்டு “விடிஞ்சிடிச்சாப்பா?” என்று கேட்டவாறே எழுந்தார்.
“ஏம்மா உடம்புக்கு முடியவில்லையா? மணி எட்டு முப்பது… இப்படி நீங்க ரொம்ப நேரம் படுத்திருக்கமாட்டீங்களே?” என்று கேட்டபடி அவரருகில் அமர்ந்தான்.
“என்னமோ தெரியலப்பா… ஆனால் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குறது போல இருக்கு” என்றார் தாயார்.
தன் தாய் தன்னால்தான் இப்படி பேசுகிறார் என்பது தெரிந்ததால் “அம்மா இன்னும் ரெண்டு நாள் பொறுத்திருங்க. பொங்கல் அன்னிக்கு முழுதும் உங்க கூடத்தான் இருப்பேன். அப்பொழுது உங்க மனசுல என்ன இருக்கோ அதை சொல்லுங்க. என்னால் முடிந்தால் நிச்சயம் அதைச் செய்வேன்” என்றவன்¸ “இப்போ நான் வரட்டுமா?” என சொல்லிப் புறப்பட்டான்.
மீராவின் வீட்டில் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
மீரா காலையிலேயே போன்  செய்து தோழி விமலாவுக்கு வாழ்த்து கூறினாள். வாழ்த்தை ஏற்று பதில் வாழ்த்தை தெரிவித்தவள்¸ தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாள்.
“வீட்ல கேட்டு பார்த்துட்டு முடிந்தால் வர்றேன்… கண்டிப்பா வருவேன்னு எதிர்பார்க்காதே” என்று சொல்லிப் போனை கட் செய்தாள்.
பாட்டியிடம் சென்று¸ அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்.
இதைப் பார்த்திருந்த தாரா “இப்படி காலில் விழுந்துதான் கிழவியை காக்கா பிடித்து வைத்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.
“அக்கா¸ இது நம்ம பாட்டி… நீ லூசு மாதிரி அவங்களை அப்படி சொல்லாதே” என்று கண்டித்தாள் மீரா.
“ஏய்..! யாரைப் பார்த்து லூசுன்னு சொன்னே?” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“ஏன் உனக்கு காது சரியா கேட்கலையா? உன்னைத்தான் சொன்னேன் லூசு” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள்.
உடனே கையை ஓங்கிவிட்டாள் தாரா. அடித்துவிடாமல் தடுத்த பாட்டி “ஆ…! ஊன்னா… கையை நீட்டிடுவீங்களே அப்பாவும் மகள்களும்! ஆளாளுக்கு அவளை அடிக்கிறதுக்கு அவ என்ன மனுஷியா..? இல்லை மிஷினா..?” என்று சத்தம் போடவும்¸ கண்ணைக் கசக்கியபடி சென்று தந்தையை அழைத்து வந்தாள் அவள்.
“என்ன அத்தை… என்ன பிரச்சினை? விஷேச நாளும் அதுவுமா என் பிள்ளைகளை ஏன் அழ வைக்குறீங்க?” என்று கேட்டபடியே வந்தார் அவர்.
“அப்படியெல்லாம் இல்லை மாப்பிள்ளை” என்று நடந்ததைக் கூறினார் அவர்.
அவர் சொன்னவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டிருந்தவர்¸ “இது சாதாரணமாக பாட்டி பேத்திகளுக்குள்ள நடக்கிற பேச்சுதானே அத்தை” என்று அவரிடம் சொல்லிவிட்டு¸ “என்ன மீரா… வரவர உனக்கு வாய்ப்பேச்சு அதிகமாகிட்டே போகுது!” என்று அவளை மிரட்டினார்.
“இல்லைப்பா… அப்படி சொல்லாதேன்னுதான் சொன்னேன்” என்றவாறு தலையைக் குனித்தாள் அவள்.
அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு “இன்றைக்கு பொங்கல் அதனாலதான் உன்னை அடிக்காமல் போறேன்” என்று சொன்னவர்¸ தன் மகளை அழைத்துக் கொண்டு இடத்தை விட்டு அகன்றார்.
சற்றுநேரத்தில் தாராவும் சாராவும் தங்கள் தோழிகள் வீட்டிற்கு சென்றுவருவதாக சொல்லிக் கிளம்பிவிட்டனர்.
மீராவும் பொங்கல்¸ கரும்பு என சிலவற்றை வேலையாட்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த தாயிடம் வந்தாள்.
“அம்மா நானும் என் பிரண்ட் விமலா வீட்டுக்குப் போயிட்டு வரட்டுமா?” என்றாள்.
“அங்கே எதுக்கு போகணும்? சும்மா வீட்லயே இரு…” என்றவர் தன் வேலையைத் தொடர்ந்தார்.
“என்னம்மா நீயும் அப்பா மாதிரியே பேசுறே? அவங்க ரெண்டுபேரும் தனியா எங்கே வேணும்னாலும் போகலாம்… நான் மட்டும் போகக்கூடாதா..?” என்று பல நாட்களாக கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள்.
“நீ வெளியே போறது அப்பாவுக்குப் பிடிக்காது! அதனால போக வேண்டாம்… போய் வேற வேலை ஏதாவது இருந்தால் பாரு…” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது காமாட்சி அவர்களிடம் வந்தார்.
“ஏன்டி நீயும் அவளை ஒதுக்குறே? அவ எப்பவாவது இப்படி வெளியே போறதுக்கு கேட்டிருக்குறாளா? இன்னிக்கு மட்டுமாவது அவளும் சந்தோஷமா போயிட்டு வரட்டும்… அனுப்பி வை!” என்றார் மீராவிற்கு சப்போட்டாக.
“அம்மா அவர்கிட்ட சொல்லாமல் போனால் என்ன நடக்கும்னு தெரியுமில்லையா?” என்றார் விசாலம் கணவனை அறிந்தவராக.
“சரி… மாப்பிள்ளை எங்கே? நானே அவரிடம் கேட்கிறேன்…” என்று நடந்தவருக்கு¸ “கரும்பு ஆலைக்குப் போனார்” என்று பதிலளித்தார்.
மீராவை தன்னறைக்கு அழைத்துச் சென்று போன் செய்து “மாப்பிள்ளை நான் கோவிலுக்குப் போறேன்¸ மீராவையும் என்கூட கூட்டிக்கிட்டு போறேன்” என்று சொன்னவர் அவர் பதிலளிக்கும் முன் போனை வைத்துவிட்டார்.
“தேங்க்ஸ் பாட்டி¸ நீங்களும் வாங்க” என்று பாட்டியை உடன் அழைத்தாள் அவள்.
“இல்லைம்மா… பாட்டியால ரொம்ப நேரம் வண்டியில உட்கார முடியாது. நீ உன் அப்பா வர்றதுக்கு முன்னால வந்துவிடு” என்று அவளை அனுப்பி வைத்தார்.

Advertisement