Advertisement

அத்தியாயம் – 2
பேச்சு முடிந்து வருத்தத்துடன் தன்னிடம் வந்த பாட்டியிடம் “கால் வலி இப்ப பரவாயில்லையா பாட்டி?” என்று கேட்டாள் மீரா சிறு புன்னகையுடன்.
“என் கண்ணு! உன்னால மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி சிரிக்க முடியுதோ!” என்று பேத்தியின் கன்னத்தைத் தடவினார். விநாயகத்தின் கைவிரல் தடம் பதிந்து சிவந்திருந்தது.
“விடுங்க பாட்டிம்மா… இது என்ன புதுசாவா நடக்குது? தாராவுக்கும் சாராவுக்கும் நேரம் போகலைன்னா அவங்களுக்கு விளையாட பொம்மையாத்தான் நான் இருந்திருக்குறேன். அட்லீஸ்ட் இப்படியாவது நான் ஒருத்தி இந்த வீட்ல இருக்குறேன்னு ஞாபகமிருந்தால் அதுவே சந்தோஷம்” என்று பேசியவாறு பாட்டியை அழைத்துச் சென்று அவரது அறையில் விட்டுவிட்டு “பாட்டி நான் பிறந்தபோது ரொம்ப கருப்பா இருந்தேனாம்… அப்படியா பாட்டி?” என்று கேட்டாள்.
“குழந்தைகள் எந்த நிறத்தில் பிறக்க வேண்டுமென்று அவர்களா முடிவெடுக்கிறார்கள்? இன்னார் இப்படி இந்த நிறத்தில்¸ இந்த உயரத்தில்¸ இந்த முக அமைப்பில் பிறக்க வேண்டுமென்பது கடவுளின் விருப்பம். அப்படியிருக்கையில் சிறு குழந்தைகளை நீ அழகில்லை என்று சொல்வதும் அதற்காக அவர்களை வெறுப்பதும் அந்தக் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்பதை பலபேர் அறிந்து கொள்ளாமலே இருந்துவிடுகிறார்கள்” என்று வருத்தப்பட்டார் பாட்டி.
“ஏன் பாட்டி நான் பார்க்க அழகா இ..ல்லை…யா…?” என்று திக்கினாள் மீரா.
“அப்படியெல்லாம் இல்லடா… நீ கண்ணுக்கு நிறைவா இருக்கிறவ! அத்தோட நீ பிறக்கும்போது கருப்பென்று இல்லை¸ உன் அக்கா தங்கையை விட சற்று நிறம் குறைவு அவ்வளவுதான்!” என்று அவளை சமாதானப்படுத்தவென்று உண்மையை சற்று விளக்கமாகக் கூறினார்.
“என்னை யாருக்கும் பிடிக்காதாம்..! அப்படியா பாட்டி?” என்று கேட்டாள் அவள் இன்னமும் சமாதானமாகாமல்.
“ஐயோ மீரா! ஏன்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாயோ?” என்றார் அவர் வருத்தத்துடன்.
“சொல்லுங்க பாட்டி” என்று கெஞ்சினாள் அவள்.
“மீரா நிச்சயமா ஒருநாள் உன்னை எல்லோருக்கும் பிடிக்கும்” என்று ஆருடம் சொன்னவர்¸ “எனக்கு எப்பவும் நீதான் பேரழகு!” என்றும் சேர்த்து சொல்லிவிட்டு “என் செல்லம்” என்று நெட்டி முறித்தார்.
“நான் போகிறேன் பாட்டி” என்ற மீரா வெட்கத்துடன் தன் அறைக்குச் சென்றாள்.
காமாட்சி தன் மருமகன் விநாயகத்தைக் காண அவரிருந்த இடம் நோக்கிச் சென்றார்.
“மாப்பிள்ளை!”
“வாங்க அத்தை… உட்காருங்க!” என்றார் விநாயகம் மிடுக்காக.
“ஏன் மாப்பிள்ளை மீராவை இப்படி கஷ்டப்படுத்துறீங்க?” என்று நேரடியாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டார்.
“அந்த மூதேவியைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க” என்றார் அவர் எரிச்சலைக் காட்டி.
“அவ நீங்க பெத்த பொண்ணு மாப்பிள்ளை…” என்று நினைவுபடுத்தினார் பாட்டி.
“என் பொண்ணுங்கன்னா அது தாராவும் சாராவும் மட்டுந்தான். அந்த மீரா என்னை¸ என் தொழிலை அழிக்க வந்த பிசாசு. அவளை இன்னும் இங்க தங்க வைச்சிருக்குறதே உங்களுக்காகத்தான். மேற்கொண்டு அவளுக்காக பரிஞ்சிக்கிட்டு என்னிடம் எதுவும் பேச வேண்டாம். எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு¸ நான் போயிட்டு வர்றேன்” என்றவர்¸ துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
காமாட்சி முன்பு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தார்.
காமாட்சி – ரங்கதுரையின் ஒரே மகள் விசாலாட்சி. ஏகப்பட்ட சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. ஆனால்¸ நிறம் மட்டும் கருப்பு. கல்யாண சந்தையில் கருநிற பெண்களுக்கு மட்டும் நம் நாட்டில் கொஞ்சம் மவுசு குறைவுதான். அதற்காக அவர்கள் யாருக்கும் மாப்பிள்ளை கிடைக்காமல் இல்லை. அப்படி விசாலாட்சிக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து திருமணமும் நெருங்கி வந்தது. திருமணத்திற்கு முதல்நாள் பட்டு கட்டுதல்¸ மறுநாள் காலை முகூர்த்தம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அப்படி பட்டுக்கட்ட வந்த போதுதான் மாப்பிள்ளை செல்வம் விசாலாட்சியைப் பார்த்தது¸ அவனுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. ஏனெனில் கல்யாணப் பெண் என்று காட்டப்பட்ட போட்டோவில் இருந்த பெண் வேறு. பட்டு கட்டிய அன்றிரவு நிறைய யோசித்து காலையில் திருமணத்தின்போது எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று மணமேடையிலிருந்து எழுந்துவிட்டான் செல்வம்.
“என்ன மாப்பிள்ளை இப்படி திடீர்னு குண்டைத்தூக்கிப் போடுறீங்க?” என்ற ரங்கதுரையிடம் “யோவ் நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாய்யா?” என்று காறிதுப்பினான்.
“என்ன தம்பி பெரியவருக்கு மரியாதை கொடுக்காமல் இப்படி பேசுறீங்க?” என்று கேட்ட ஊர் பெரியவரிடம்¸  “நான் போட்டோவில் பார்த்த பெண் வேறு” என்று அவன் பதிலளித்ததும்¸ ரங்கதுரை செல்வத்தின் தந்தையிடம் “சம்பந்தி நான் என் பெண்ணைப் பற்றி எல்லாம் சொல்லித்தான் போட்டோ தந்து அனுப்பினேன். ஆனால் உங்க பையன் வேறுமாதிரி பேசுறார்” என்றார்.
“நாங்கதான் தப்பு பண்ணிவிட்டோம்! மண்டபத்திற்கு வந்தபிறகு மறுக்கமாட்டான்; என்று நாங்கள் நினைத்தது தப்பு… எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று கூறி சீர்வரிசை அனைத்தையும் திரும்ப வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
விசாலாட்சியின் அழுகையைப் பார்த்து “என் மகளின் வாழ்க்கை இனி அவ்வளவுதானா..?” என்று புலம்பியபடி இருந்தவரிடம் “ஐயா¸ நீங்கள் மறுக்கவில்லையென்றால் நான் உங்கள் மகளைத் திருமணம் செய்துகொள்ளட்டுமா?” என்று அனுமதி கேட்டு நின்றான் ஒரு இளைஞன்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தார் ரங்கதுரை.
பார்ப்பதற்கு அவர் பார்த்த மாப்பிள்ளையைவிட நல்ல நிறம் மற்றும் அவர் பார்வையைப் புரிந்துகொண்டு¸ “என் பெயர் விநாயகம்¸ பி.ஏ. படிச்சிருக்கேன். ஐயாகிட்ட வேலை கேட்பதற்காக வந்தேன். மற்றபடி நான் யாருமில்லாதவன்” என்று சொன்னவனை ரங்கதுரைக்கு பிடித்திருந்தது.
திருமணம் நல்லபடியாக முடிந்தது.
ரங்கதுரை விவசாயத்தில் பெரும்புள்ளி. வேலைகளை விநாயகம் பார்த்துக் கொண்டான். இருப்பினும் நல்ல மருமகனாக நடந்துகொண்டான்.
அதே சமயம் விசாலாட்சி கணவனை கடவுளாக நினைக்க ஆரம்பித்தார். ‘யாரும் கட்டிக்க விரும்பாதவளை இவ்வளவு அழகும் படிப்பும் கொண்டவன் மணந்து கொண்டது அவள் செய்த புண்ணியம்’ என்றார் காமாட்சி.
முதல் குழந்தை பிறந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விநாயகம். ஏனெனில்¸ குழந்தை அவனுடைய முகச்சாயலில் நல்ல நிறத்தோடு பிறந்திருந்தது. விசாலாட்சி இரண்டாவது முறை கர்ப்பமான போது¸ அது ஆண் குழந்தை என்ற எதிர்பார்ப்போடு இருந்தவருக்கு அது பெண்ணாகப் பிறந்தது மட்டுமில்லாமல் விசாலாட்சியின் சாயலில் இருந்தது என மீரா பிறக்கும்போதே அவருக்கு வருத்தம்தான். மேலும் விவசாயத்தில் அவருக்கு சிறுசிறு தடங்கல்கள் வர ஆரம்பித்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல பாம்பு கொத்தி சாக கிடந்தவன் மருத்துவ உதவியால் பிழைத்து வந்தான். அத்தோடு மீராவை முழுவதுமாக வெறுக்கவும் ஆரம்பித்துவிட்டான்.
குணமாகி நடமாட ஆரம்பித்ததும் அவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரை நாடிச் சென்றான்.
அதில் அவனுக்கு இப்போது கிரகம் சரியில்லை கவனமாக இருக்க வேண்டுமென்றும்¸ முடிந்தால் இக்குழந்தையினைப் பார்க்காமல் இருப்பது அவனது உயிருக்கு நல்லது என்று சொல்லி அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டான் அந்த ஜோசியன்.
அதன்பின் தாரா அவனிடம் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமானாளோ அந்த அளவுக்கு மீராவை விலக்கி வைத்தான்.
மூன்றாவதாக விசாலாட்சி கருத்தரித்தபோதும் ஜோசியரை அழைத்து பார்க்கச் செய்தான். இந்தக் குழந்தை உங்கள் வாழ்வில் பெரும் ஒளியை ஏற்றும் என்று ஜோசியர் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான். இப்பொழுதும் பெண் குழந்தைதான். ஆனால் அதற்காக எல்லாம் அவன் கவலைப்படவில்லை. அவனிடம்தான் நிறைய சொத்து உள்ளதே¸ தாராவையும் சாராவையும் நன்றாக பார்த்துக் கொண்டான். நல்ல பள்ளியில் சேர்த்தான்.
மீராவை தாத்தா ரங்கதுரைதான் பள்ளியில் சேர்த்தார். அவளது எல்லா தேவைகளையும் அவரே பார்த்துக் கொண்டார்.
மீரா பள்ளிப் படிப்பை முடித்த சமயம் ரங்கதுரை இறந்துவிட்டார். ஆனால் சாவதற்குமுன் தன் சொத்துக்களில் நான்கில் மூன்று பங்கினை மகள்¸ மருமகன் பெயருக்கும் ஒரு பகுதியினை தன் மனைவி காமாட்சியின் பெயருக்கும் பின்னர் அது மீராவை சென்றடையுமாறும் எழுதி வைத்திருந்தார்.
பிளஸ் டூவில் நிறைய மதிப்பெண் வாங்கியிருந்த மீராவுக்கு பேஷன் டிசைனிங் படிக்க ஆசை. விநாயகம் எப்போதும்போல அவளது ஆசையை மதிக்காமல் அவளது விருப்பப்படியெல்லாம் என்னால ஆட முடியாது. படிக்க வேண்டுமென்றால் ஏதாவது செலவு குறைந்த படிப்பு படிக்கட்டும்… இல்லையென்றால் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
“அப்பா அக்காவை மட்டும் நிறைய பணம் கட்டி இன்ஜினியரிங் படிக்க வைச்சீங்க. நானும் உங்க பொண்ணுதானேப்பா… அக்காவைப் போல என்னையும் படிக்க வைங்கப்பா” என்று சொன்னவளை¸ “வாய் பேசுறியா கழுதை!” என்று பெல்ட்டால் விளாசிவிட்டார். அன்று அவளுக்கு முதல் தடவையாக வலிப்பு வந்தது.
அதீத அதிர்ச்சி காரணம் என்றார் டாக்டர். விசாலாட்சி எதுவும் பேசாமலிருக்க பாட்டிதான் பயந்துபோய் “வயசுப்பொண்ணு… இதுக்கு முன்னாடி இப்படி வந்ததில்லையே டாக்டர்! இனிமேல் இப்படித்தான் வருமா?” என்று கேட்டார்.
“இல்லம்மா… அப்படி கட்டாயம் வரும் என்றில்லை¸ வராமலும் போகலாம்” என்றார் அவர்.
அதன்பின் உடல்நிலை சரியானதும் ஆர்ட்ஸ் காலேஜில் பி.எஸ்சி கணிதம் எடுத்து படித்தாள். இதோ இறுதியாண்டு படிக்கிறாள்.
அவள் மீதான விநாயகத்தின் வெறுப்பு சாரா கேட்காமலே அவளை பேஷன் டிசைனிங் படிக்க வைத்ததில் வெளிப்பட்டது.
விநாயகத்திற்கு மீராவைப் பிடிக்காது என்பது தெரிந்ததால் சிறுவயது முதலே தாராவும் சாராவும் அவளை அதிகமாகவே கஷ்டப்படுத்தினர். மீராவை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். விநாயகமோ ஏதேனும் குடும்ப விழாக்களுக்கு செல்லும்போது மீராவை அழைத்துச் செல்வதை விரும்பமாட்டார். மீரா இதனால் பாட்டியிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள்.
தன் வீட்டினர் தன்னிடம் நடந்துகொள்ளும் முறை மனதிற்கு கஷ்டமளித்தாலும் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்வாள். ஏதேனும் தேவை என்றால் பாட்டியிடம் சொல்லி வாங்கிக் கொள்வாள்¸ அப்படித்தான் கல்லூரி முடிந்ததும் மாலை நேரம் கணினி வகுப்பும் சென்று வருகிறாள்.
படிப்பு முடிந்ததும் படிப்புக்கேற்ற வேலையை தேடிக்கொண்டு விரைவில் இந்த வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்று நினைத்தாளே தவிர¸ காதல் என்று சொல்லி அவள் பின் சுற்றும் யாருடனும் ஓடிவிட நினைத்ததில்லை.
காமாட்சி பாட்டிதான் அவளை நினைத்து வருத்தம் கொள்வார். வீட்டில் உள்ளவர்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்றாலும் அவளைத் திருமணம் செய்து கொள்பவனாவது அவளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

Advertisement