Advertisement

அத்தியாயம் – 11
                     ‘அழகே! அழகே! உன்னை மீண்டும் மீண்டும்
                                  அழைத்தேன் அழைத்தேன் வரவேண்டும் வேண்டும்’
அபர்கீதனின் செல்போன் தான் அவனை இப்படி அழைத்துக் கொண்டிருந்தது. எடுத்து “ஹலோ” என்றான்.
“ஹாய் ப்ரோ… குட்மார்னிங்! ஹவ் ஆர் யு…?” என பேசிக் கொண்டே இருந்தான் ஒருவன்.
அபர்கீதன் எரிச்சலுடன் “யாரு?” என்று கேட்டான்.
“ஹேய் ப்ரோ… நான் தான் விமல்¸ இன்றைக்குக் காலையில் ரெயில்வே ஸ்டேஷன் வர சொன்னேன். மறந்துட்டீங்களா?” என்று கேட்டான் அந்த விமல்.
“ஆங்… இதோ இப்பவே புறப்பட்டு வர்றேன்” என்று போனை கட் செய்துவிட்டு புறப்பட்டான் ரயில் நிலையத்துக்கு.
“கீதன் எங்கேப்பா காலையிலேயே கிளம்பிவிட்டாய்?” என்று கேட்டபடி வந்தார் அபிராமி.
ஆம் அவர் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மீரா அவனை விட்டுச் சென்று சரியாக இரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஆகிறது.
அவரது மகள் வழிப் பேரனும் அவர்களுடன் இங்கேதான் இருக்கிறான்.
“விமல் இன்றைக்கு வருவதாக சொன்னாம்மா. அவனை கூட்டிட்டுப் போய் அவன் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று தாயாரிடம் சொன்னவன்¸ “பைடா குட்டி” என்று மருமகனிடமும் விடைபெற்றான்.
“அபிக்குட்டி பாட்டிக்கிட்ட சமத்தா இருக்கணும். அம்மா போய் உனக்கு பிஸ்கட்¸ தண்ணீர் வாங்கிட்டு வர்றேன்” என்று பாட்டி ஒருவரிடம் மகனை ஒப்படைத்துவிட்டுச் சென்றாள் மீரா.
சிறுவன்¸ அவர் கவனிக்காத நேரத்தில் அங்கு போன் செய்து கொண்டிருந்த இளைஞன் அருகில் சென்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கீதனுடன் பேசி முடித்து இருக்கையில் அமர சென்ற விமல்¸ சிறுவனைப் பார்த்ததும் ‘யாரு இப்படி குழந்தையை ஸ்டேஷனில் விட்டுச்சென்றது?’ என்று நினைத்தவாறு யாராவது அவனைத் தேடி வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே குழந்தையிடம் “வருகிறாயா?” என்று கையை நீட்டினான். உடனே குழந்தை அவனிடம் வந்துவிட்டான்.
அந்நேரம் “அபிமன்யு…” என்றழைத்தபடி வந்தார் ஒரு பாட்டி.
விமல் அவரிடம் “இது உங்க குழந்தையா பாட்டி?” என்று கேட்டான்.
“ஆமாம் தம்பி¸ என் பேத்தியோட பையன். ஒரு இடத்தில் இருக்கமாட்டான்¸ ஒரே விளையாட்டுத் தான்” என்று அவனைப் பற்றிப் பேசினார்.
“சரி¸ பாட்டிகிட்ட போறியா?” என்று விமல் கேட்க¸ அவன் ‘இல்லை’ என தலையசைத்தான்.
“அபிகுட்டி அம்மா தேடுவாங்க… நாம அங்க போய் இருப்போம்டா கண்ணா¸ வா…” என்று பாட்டி அவனை இழுக்கப் பார்க்கவும்¸ சிறுவன் விமலின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
“தம்பி உங்களை சிரமப்படுத்துறான்” என்றார் பாட்டி.
“இருக்கட்டும் பாட்டி¸ நான் என் அண்ணன் வந்த பின்தான் போவேன். நீங்க இங்கேதானே இருப்பீங்க… நான் போகும்போது இவனை உங்களிடம் தந்துவிட்டுப் போகிறேன்” என்று அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு¸ அவனுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டான்.
“ஏய்! விமல் வரும்போதே குழந்தையுடன் வந்திருக்கே… மனைவி எங்கே?” என்று சுற்றிப் பார்த்தான் அபர்கீதன்.
“என்ன ப்ரோ… என்னைப் பார்த்தால் சொல்லாமல் கொள்ளாமல் மேரேஜ் பண்றவன் போலவா இருக்கு?” என்று கேட்டான் அவன்.
“சரி… குழந்தை யாருடையது?” என்று கேட்டவாறு குழந்தையை கையில் வாங்கினான்.
அபர்கீதனின் தோளில் அமர்ந்துகொண்டு “ம்மா… ம்மா…” என்று யாரையோ பார்த்து அழைத்தான் குழந்தை. கடையில் நின்ற மீரா அவனுக்குக் கைகாட்டிவிட்டுத் திரும்பிய சமயம் “எங்கேடா உன் அம்மா?” என்று அபர்கீதனும் திரும்பிப் பையன் பார்த்த திசையில் பார்த்தான்.
அங்கே நின்றிருந்த பெண்ணின் நீளக் கூந்தல் அவனுக்கு மீராவை ஞாயபகப்படுத்தியது.
‘மீரா¸ நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதுக்குள் அவளிடம் கேட்டவாறு அப்படியே நின்றான். அந்தப் பெண்ணையே பார்த்தவாறு நின்றவனிடம் “என்ன ப்ரோ… அண்ணிகிட்ட சொல்லட்டுமா?” என்று கேட்டான் விமல் விளையாட்டாக.
விமலை ஒரு பார்வை பார்த்துவிட்டு “சரி போகலாம்¸ நேரமாகுது” என்று சொல்லிவிட்டு குழந்தையை இறக்கிவிட முயன்றால்¸ அவன் இப்போது அபர்கீதனின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
“விமல் என்ன இவன் பசை போல ஒட்டிக்கிட்டான்” என்று சிரித்தான்.
“ப்ரோ¸ இவன் அப்படியே உங்களுக்கு மேட்சா இருக்கான். அப்படியே இருங்க¸ ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என்று எடுத்தான்.
பிறகு பாட்டியிடம் சென்று குழந்தையைக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
மீரா வந்ததும் அபியை அவளிடம் ஒப்படைத்துவிட்டு¸ “அட்ரஸ் பத்திரம்¸ அங்கே போனதும் அந்த லெட்டரைக் கொடு. அந்த இடம் உனக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்¸ நாங்க புறப்படுகிறோம்” என்று சொல்லி கணவருடன் ரயிலில் ஏறி அமர்ந்தார் . சற்று நேரத்தில் ரயில் புறப்பட்டது.
கையில் மகனையும் இரண்டு லக்கேஜையும் சுமந்தவாறு வெளியே வந்து¸ ஆட்டோவில் ஏறிப் புறப்பட்டாள் புதிதாக வேலை செய்யப் போகும் வீட்டிற்கு.
ஆட்டோ சென்று கொண்டிருந்தது. குழந்தை ஏதேதோ பேசியவாறு வந்தவன்  சற்று நேரத்தில் தூங்க ஆரம்பித்தான்.
கண்மூடி அமர்ந்தவள்¸ தான் வீட்டை விட்டு வெளியேறியபின் நடந்தவைகளைப் புரட்டினாள்.
மதுரைக்கு சென்றவுடனே வேலையில் சேர்ந்துவிட்டாள்.
ஏழு மாதங்கள் வரை அவளுக்கு எந்த பிரச்சனையுமில்லை. திடீரென ஒருநாள்¸ அந்த ஆஸ்ரமத்தில் டிரைவராக வேலை பார்க்கும் ஒருவன் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளிடம் தவறாக நடக்க முயற்ச்சித்தான். அது இரவு நேரமானதால்¸ அவளது சத்தம் கேட்ட உடனே பலர் வந்து அவளைக் காப்பாற்றி¸ அந்த டிரைவரை போலீசில் ஒப்படைத்தனர்.
பயந்து நின்ற மீராவை¸ மேற்கொண்டு அவளுக்கு பிரச்சனை எதுவும் வராமலிருக்க அவளை அருகிலேயே ஒரு வயதான தம்பதியிடம் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.
அவர்கள் நாகராஜன் – கோமதி தம்பதியினர். அவர்களுக்கு ஒரே மகன்¸ அவனுக்குத் திருமணமாகி நாகலாந்தில் வேலை பார்க்கிறான். அதனால் அவர்களுக்குத் துணையாக அவர்களுடனே தங்கி வேலை செய்ய வேண்டுமென்றனர். அவளும் சரியென்று அங்கே போனாள். அவளை ஒரு மகளைப் போலவே பார்த்துக் கொண்டனர். பிரசவ காலத்தில்¸ அவளையும் குழந்தையையும் நன்றாக கவனித்துக் கொண்டனர்.
“பாட்டி நான்தான் உங்களுக்கு வேலை செய்ய வந்தேன். ஆனால்¸ நீங்க எனக்கு சேவை செய்றீங்க. என்னை மன்னித்துவிடுங்கள்” என்றவளிடம்¸ “என்னம்மா… இதுக்கு போய் மன்னிப்பு கேட்டுகிட்டு… என் மருமகளுக்கு செய்ய கொடுத்து வைக்கவில்லை. உனக்கு செய்கிறேன். பேரப்பிள்ளைகள் இல்லாத குறையை உன் மகன் தீர்க்கப்போகிறான் என்று நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். நீ என்னடான்னா என்கிட்ட மன்னிப்பு கேட்கிறே…” என்றார்.
மகனுக்கு அபிமன்யு என்று பெயர் வைத்தாள். அதை சுருக்கி அபி என்று அழைத்தாள்.
நாட்கள் சென்றது. அபி நடக்கப் பழகிய பின்னர்¸ அவன் பின்னால் யாராவது சென்று கொண்டே இருக்க வேண்டும். கோமதி பாட்டி அவன் பின்னாலேயே அலைவார். அதைப் பார்க்கும்போது தன் பாட்டிக்கு கொடுத்து வைக்கவில்லையே என நினைத்து வருந்துவாள்.
அபி அருகில் இருக்கும் சமயத்தில் சிரித்தே ஆளை மயக்கிவிடுவான். அதில் அவன் அப்பா மாதிரியே தான் என்று நினைத்ததும் அபர்கீதனின் ஞாபகம் வந்துவிடும். ‘என்னைத் தேடுவானா¸ இல்லை போய்த் தொலைந்தாள் என்று சந்தோஷம் அடைந்திருப்பானா?’ என்று நினைப்பாள். பிரிந்து வந்தபின் ஒருநாள் கூட அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லையே என்று பலநாள் மனம் வருந்தியிருக்கிறாள்.
இப்போது பாட்டியின் மகன் அவர்களை நாகலாந்துக்கு வரச் சொல்லியிருக்கிறான். அதனால் நாகராஜன்¸ அவருக்குத் தெரிந்த ஒருவரின் உறவினர் வீட்டுக் குழந்தைகளுக்கு டியுசன் எடுக்க ஆள் வேண்டும் என்ற விபரத்தைக் கேட்டு மீராவை கோவையில் விட்டுவிட்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
“ம்மா…” என்று அவளை அழைத்தான் அபிமன்யு. கண்விழித்தவள் “டிரைவர் அண்ணா¸ நான் சொன்ன அட்ரஸ் வந்துவிட்டதா?” என்று கேட்டாள்.
“ஆமா மேடம். இதுதான் நீங்க சொன்ன அட்ரஸ்” என்றதும் இறங்கி ஆட்டோவிற்கு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு¸ லக்கேஜையும் கீழே இறக்கினாள். ஆட்டோக்காரர் அவளை அந்த வீட்டின் காம்பவுண்டிற்குள் கொண்டு வந்து விட்டிருந்தார். கைப்பையுடன் அபியை தூக்கிக் கொண்டு சென்று காலிங் பெல்லை அழுத்தினாள்.
ஒரு சிறுமி ஓடிவந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு¸ “பாட்டி! ஒரு ஆன்ட்டியும் தம்பியும் வந்திருக்காங்க” என்று சத்தம் போட்டுக்கொண்டே ஓடினாள்.
“யாருடி அந்த ஆன்டி?” என்றவாறே வந்தார் ராஜம்மாள்.
அவரிடம் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தைக் கொடுத்துவிட்டு “வணக்கம்!” சொன்னாள்.
“வாம்மா… உள்ளே வா” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.
கடிதத்தைப் படித்துவிட்டு “என்னங்க உங்க நண்பர் கடுதாசி கொடுத்து அனுப்பியிருக்கார்” என்று சத்தம் போட்டுக் கணவனை அழைத்தார்.
ரத்தினம் வந்ததும் அவளது பெயர் மற்றும் சில விபரங்களைத் தெரிந்துகொண்டு¸ தன் மகளையும் தன் பேரன் பேத்திகளையும் அழைத்து அவளுக்கு அறிமுகம் செய்தார்.
“இது என் பொண்ணு ரஞ்சனி… இது பேத்தி சுப்ரியா… இவன் சூரஜ்¸ இவனுக்குத் தான் நீ டியுசன் எடுக்கணும். இங்கேயே தங்கியிருப்பதால் உனக்குப் பிரச்சனையில்லையே?” என்று கேட்டார்.
“இல்லை சார்” என்றதும்¸ “சும்மா அங்கிள்னு கூப்பிடும்மா” என்றார் ரத்தினம்.
“இவன் தான் உன் பையனாம்மா… பெயர் என்ன?” என்று அபியைப் பார்த்தவாறு கேட்டார்.
“அபி… அபிமன்யு” என்றாள் மீரா.
“அடடே சிங்கக்குட்டி அபிமன்யுவா? என்கிட்ட வா” என்று அவர் அழைத்ததும் ரத்திடம் போய்விட்டான்.
“ராஜம் வீட்டு சாவியை எடுத்துக் கொடு” என்று மனைவியிடம் சொன்னவர்¸ “ரஞ்சனி கூட போய்ட்டு வாம்மா” என்று அவளை அனுப்பி வைத்தார்.
மீரா மகனைப் பார்க்கவும் “இவன் இங்கேயே இருக்கட்டும். நீ வீட்டைப் பார்த்து செய்ய வேண்டியதை செய்துவிட்டு வா… சமையல் எதுவும் செய்ய வேண்டாம்” என்றார் ராஜம்.
வீட்டைத் திறந்து மீராவை உள்ளே அழைத்தாள் ராஞ்சனி.
“வாங்க மீரா¸ இதுதான் உங்க வீடு. இந்த லைனில் இருக்கும் வீடுகள் அனைத்திலும் இங்கு வேலை பார்ப்பவர்கள் தான் தங்கியிருக்கிறார்கள். இங்கே ஒரு பயமும் கிடையாது. நீங்க தைரியமா தங்கலாம்” என்று அவளது பயத்தைப் போக்கி¸ வீட்டை சுத்தம் செய்வதில் அவளுக்கு உதவினாள்.
“ரஞ்சனி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மீரா சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளை சற்று காத்திருக்கச் சொன்னவள்¸ வெளியே சென்று தங்களுடைய லக்கேஜை எடுத்து வந்தாள். அதன்பின் ரஞ்சனியின் உதவியுடனே வீட்டை ஒட்டடை அடித்து¸ பெருக்கித் துடைத்து¸ துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தனர்.
சிறிய வீடுதான். ஹால்¸ சமையலறை¸ பாத்ரூம் என மூன்றே மூன்று அறைகள் தான். இந்த வரிசையில் இருந்த அனைத்து வீடுகளும் அப்படித்தான் என்றாள் ரஞ்சனி.
சிறிது நேரத்தில்  அபியின் அழுகுரல் கேட்க வெளியே வந்தாள். அவன் “ம்மா…” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றான்.
“யாருடா இது நம்ம வீட்டில் சின்னக் குழந்தையின் சத்தம்” என்றபடி மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தான் விமல்¸ “அட அபி!” என்று சத்தம் கொடுத்தான். குரல் வந்த திசையில் மேலே நோக்கினான் அபி¸ அங்கு விமலைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு கைகளை மேலே தூக்கினான்.
ஹாலுக்கு வந்து அபியை தன் அறைக்குத் தூக்கிச் சென்றவன்¸ அவனைத் தன் அண்ணன் குழந்தைகளுடன் பழக விட்டான். அவர்களும் ‘தம்பிப் பாப்பா’ என்று அவனைக் கூடவே வைத்திருந்தனர்.
ரஞ்சனி வீட்டிலுள்ள அனைவரைப் பற்றியும் கூறினாள். சூரஜ்க்கு இந்த வருடந்தான் மேஜர் சர்ஜரி ஒன்று நடந்ததால் இந்த வருடம் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென டாக்டர் கூறிவிட்டார் என்றும்¸ அதனால் அவளுடைய பெரிய அண்ணன்தான் பையன் சோம்பேறி ஆகிவிடக்கூடாது என்று சொல்லி டியுசனுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும் சொன்னாள்.
“நீங்க என்ன பண்றீங்க ரஞ்சனி?” என்று கேட்டாள் மீரா.
“நான் எம்.ஏ. முடித்திருக்கிறேன். மேற்கொண்டு படித்தாலும் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். சரி வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க இந்த படிப்பு போதும் என்று நானும் வீட்டில் இருந்துவிட்டேன்” என்றாள். அப்படியே சற்று நேரம் படிப்பு மற்றும் பொதுவான விஷயங்களைப் பற்றி இருவரும் பேசினர்.
விமல் கீதனுக்கு போன் செய்தான்.
“இவன் மனுஷனை நிம்மதியா ஒரு வேலை செய்ய விடமாட்டான்” என்று எரிச்சல் பட்டவன் அப்படியே விட்டுவிட்டான்.
மீண்டும் அழைக்கவே¸ அட்டென்ட் செய்து “சொல்லு விமல்” என்றான்.
“ப்ரோ¸ நாம காலையில் ஒரு பொடியனைப் பார்த்தோமே…” என்றவனுக்கு¸ யோசித்துவிட்டு “ஆமா¸ அதுக்கென்ன?” என்று கேட்டான்.
“ப்ரோ அவங்க அம்மா இங்கே எங்கள் வீட்டிற்குத்தான் வேலைக்கு வந்திருக்காங்க. பையன் என்னைப் பார்த்தவுடன் என்கிட்ட வந்துட்டான். பையனோட அம்மாவும் சூப்பரா இருக்காங்க” என்றான்.
“டேய்! ஒரு குழந்தைக்கு அம்மாடா அவங்க” என்றான் இவன்.
“விடுங்க ப்ரோ” என்று போனை வைத்தான்.
காலையில் அபர்கீதனையும் அபியையும் சேர்த்து எடுத்த போட்டோவை கீதனுக்கு அனுப்பி வைத்தான்.
விமல் அதை அனுப்பியதிலிருந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தான் அபர்கீதன். தருணும் போட்டோவில் மாமாவுடனிருந்த பையனைப் பார்த்துவிட்டு “மாமா யாரிந்த தம்பி? அழகா இருக்கான்” என்றான். சிறுவனுக்கு பதிலளித்தவன்¸ அன்று முழுவதும் வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அன்றிரவு கனவில் ரயில்வே ஸ்டேஷனில் கீதன் அபியை வைத்திருக்க¸ ஒரு பெண் அபியை அவனிடமிருந்து பிடுங்கிச் செல்கிறாள். குழந்தை “அப்பா” என்று அவனை நோக்கி கையை நீட்டுகிறான். யாரந்த பெண் என்று பார்க்கிறான் கீதன். அதே நேரத்தில் அந்த பெண்ணும் திரும்பிப் பார்க்க¸ அவளை பார்த்த கீதன் அதிர்ந்தான்.
ஏனெனில் அந்த பெண் மீரா. ‘மீரா… நில் மீரா… போகாதே மீரா¸ நில்…’ என்று பின்னால் சென்றான்.
“மீரா…மீரா…” என்றழைத்தவாறு கைகளை நீட்டியபடி எழுந்து அமர்ந்தான்.
“ச்சே கனவு” யாரோ ஒரு குழந்தை. அவனின் தாயாக மீரா ஏன் தெரிய வேண்டும்? என்று குழம்பியவனுக்கு¸ ‘ஒருவேளை மீரா செல்லும்போது அப்படி இருந்திருக்குமோ’ என்று தோன்ற¸ மீரா செல்லும் முன் அந்த சம்பவத்திற்க்குப் பின் அவள் இங்கிருந்த சில நாட்களைப் பற்றி ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்க விடை கிடைத்தது.
‘மீரா நீ செல்லும் போது நம் குழந்தையை உன் வயிற்றில் சுமந்து சென்றாயா? ஐயோ மீரா… நீ எங்கிருக்கிறாய்?’ என்று அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
அவனும் தான் அவளைக் கண்டுபிடிப்பதற்கு பல முயற்சிகள் செய்தானே. அவள் அவனை விட்டுப் பிரிந்த சில மாதங்களில் அவளது போட்டோவைப் போட்டு¸ கண்பிடித்து தகவல் தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று விளம்பரம் கொடுத்தான். அதைப் பார்த்து மதுரையில் அவளைப் பார்த்ததாக தகவல் வந்தது. தகவல் வந்து அவன் கிளம்பிச் சென்று பார்ப்பதற்குள்¸ அவள் வேலையை விட்டுப் போய்விட்டாள் என்றார்கள். எங்கே போனாள் என்று கேட்டதற்கு யாருக்கும் சரிவரத் தெரியவில்லை.
அதன் பிறகு அவனே மீராவிற்கு ஒரு செய்தி சொல்லி விளம்பரம் கொடுத்தான்¸ ‘அறியாமையால் செய்த பிழையை மறந்து¸ மன்னித்து என்னை ஏற்றுக்கொள் மீரா’ என்று. அதற்கும் ஒரு பதிலும் இல்லை.
‘ஆனால் என் கனவு உண்மை என்றால்¸ குழந்தையுடன் அவள் நலமாக வாழட்டும்’ என்று கடவுளை வணங்கிவிட்டுப் படுத்தான்.

Advertisement