Advertisement

அத்தியாயம் – 1
“ஸ்..ஸ்…அப்பப்பா! இந்த முட்டி என்ன வலி வலிக்குது” என்று தன் கால்களை தேய்த்து விட்டபடி “அம்மாடி தாரா கொஞ்சம் காலுக்கு தேய்க்க மருந்து எண்ணெய் எடுத்து வாம்மா” என்று சத்தமாக தன் பேத்தியை அழைத்தார் பாட்டி காமாட்சி..
    “போ பாட்டி! உனக்கு வேற வேலையே கிடையாது¸ எப்ப பாரு அங்க வலி இங்க வலின்னு சொல்லிக்கிட்டு. நான் தலை வாரிக்கிட்டு இருக்கேன் என்னால முடியாது” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் காமாட்சியின் மூத்த பேத்தி தாரா.
‘ஏன் இந்த பிள்ளைங்க ஒரு ஒத்தாசை கூட செய்ய மாட்டேங்குது’ என்று தனக்குள்ளே அலுத்துக் கொண்டவரிடம்¸ “பாட்டி நான் தேய்த்து விடட்டுமா?” என்று மருந்து பாட்டிலை எடுத்து வந்தாள் இரண்டாவது பேத்தி மீரா.
மீராவைப் பார்த்ததும் புன்னகையுடன் “நீ உள்ளேதான் இருந்தியாம்மா?” என்று கேட்டார்.
“இல்லை பாட்டி. நீங்க தாராகிட்ட சொன்னப்போதான் உள்ளே வந்தேன். அப்படியே போய் உங்க எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்துட்டேன்” என்று கூறியபடி பாட்டியின் காலில் தேய்த்து நீவிவிட்டாள் மீரா.
அவளது தலைமுடியை வருடியபடியே இருந்தவர் “ம்… போதும் மீரா. நீ போய் துணி மாத்திட்டு வா” என்று அனுப்பினார்.
மீரா படியேறும் போது சாரா வந்து “உன்னை அப்பா வரச் சொன்னாங்க வருவியாம்” என்று கூறிச் சென்றாள்.
“அப்பா கூப்பிட்டீங்களாமே! என்ன விஷயம்?” என்று சென்று நின்றாள் தந்தை விநாயகத்திடம்.
அவர் மனைவி விசாலாட்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நீ இன்னிக்கு காலையில் சாராவை திட்டினியாமே ஏன்?” என தன் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார் விநாயகம்.
மீரா “நான் ஒன்றும் அவளைத் திட்டவில்லை¸ அவள்தான் தேவையில்லாமல் என்னிடம் வம்பு செய்தாள்” என்றாள்.
“நான் அவ என்ன செய்தான்னு உன்கிட்ட கேட்கல. நீ அவளை திட்டினது உண்மையா? இல்லையா?” என்றார் கோபமாக.
“அப்பா என்ன நடந்துச்சுன்னா…” என ஆரம்பித்தவள் தந்தை தாய் விசாலத்தை பார்ப்பதை கவனித்தாள்.
தாய் எதுவும் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கவும் “ஆமாம்” என தலையசைத்தாள்.
அவள் தலையசைத்து முடிப்பதற்குள் எழுந்த விநாயகம் மீராவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்.
சட்டென கீழே விழுந்தவளிடம் “உன்கிட்ட நான் பல தடவை சொல்லியிருக்கிறேன் என் ரெண்டு பிள்ளைகளிடமும் நீ ஏதும் ஏசவோ பேசவோ கூடாதுன்னு. ஆனா நீ அது எதையும் கேட்காமல் இப்படி ஒரு மூஞ்சியை வச்சிக்கிட்டு எம்பொண்ணை குரங்குன்னு சொல்லியிருக்கே! உனக்கு எவ்வளவு திமிர்…” என்று பேச்சில் வெறுப்பை உமிழ்ந்தவர் “வா சாரா நாம் போவோம்” என்று தன் இளைய மகளை அழைத்துச் சென்றார்.
சாரா போகும்முன் கீழே தன் கன்னத்தைத் தடவியவாறு கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த மீராவைப் பார்த்து பழிப்பு காட்டிச் சென்றாள்.
விசாலாட்சி மகளைத் தூக்கி விட்டுவிட்டு “ஏன்டி இப்படி நடந்துக்குறே?” என்றார் மகளிடம்.
“நான் ஒன்னும் செய்யலைம்மா. இன்றைக்கு காலையில் அவதான் நான் காலேஜ் போக கிளம்பிக்கிட்டு இருக்கும்போது நான் போட்டிருந்த சுடிதாரை கழட்டிக் கேட்டாள். நான் தரமாட்டேன்னு சொன்னேன்” என்றாள்.
“ஏன் அவ கேட்டா நீ கொடுக்க வேண்டியது தானே?” என்றார் விசாலாட்சி.
“அம்மா நான் போட்டிருக்கிற இந்த டிரஸ் அவளுக்கென்று எடுத்ததுதான். அவளுக்கு இது பிடிக்கவில்லைன்னு வேறொரு துணி எடுத்துக் கொடுத்துவிட்டுத் தான் நீ எனக்கு இதை தந்தாய்… அந்த ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் மீரா தாயிடம்.
“சரி எப்படியிருந்தாலும் அவ உன் தங்கைதானே. கொடுத்தால் நீ என்ன குறைந்துபோயிடுவே” என்றார் கணவனுக்கு ஏற்ற மனைவியாக.
“அம்மா…” என்றவள் காலையில் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.
மீரா கல்லூரிக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் “ஏய் என்ன இவ்வளவு பந்தா பண்ணிக்கிட்டிருக்குறே… எவன்கூடயும் ஊர் சுத்தப் போறியா?” என்று கேட்டபடி வந்து நின்றாள் சாரா.
அவள் கேட்டதை சட்டை செய்யாமல் தன் வேலையை மட்டும் பார்த்து நின்றவளிடம்¸ “ஏய் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ…” என ஆரம்பித்தவள்¸ பேசுவதை நிறுத்தி தமக்கையை ஏற இறங்கப் பார்த்தாள்.
இளமஞ்சள் நிற சுடிதாரில் கருநிற கற்கள் பதித்த வேலைப்பாடு. அவளின் அடர்த்தியான நீள பின்னல்¸ அதில் தொங்கவிடப்பட்ட மல்லிகைச் சரம்¸ பாலில் ப்ருவைக் கலந்தாற்போன்ற அவளது சருமம் என எல்லாம் அவளது ஐந்தடி இரண்டு அங்குல உயரத்திற்கு பொருத்தமாக இருந்தது சாராவிற்கு ஏனோ பிடிக்கவில்லை.
‘இவள் என்னைவிட நிறமும் அழகும் குறைவுதான’; என மனதிற்குள் எண்ணியவள்¸ ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டபடி “நீ எப்படி கலர் கலராக டிரஸ் பண்ணினாலும் விதவிதமாக மேக்கப் போட்டாலும் எவனும் இந்த மூஞ்சியை சத்தியமா திரும்பிப் பார்க்கமாட்டான்” என்றாள்.
அப்போதும் மீரா எதுவும் பேசாமல் அமைதியாகக் கிளம்பவும் அவள்முன் வந்து தன் கையை தமக்கையின் முகத்தருகே நீட்டி “இதுக்கும் இதுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” என மீராவின் நிறத்தை சுட்டிக் காட்டினாள்.
அதுவரை பொறுமையாக இருந்த மீரா “இங்க பாரு சாரா பேசாமல் போயிடு. சின்னவளாச்சேன்னு பார்க்கிறேன்¸ இல்லைன்னா…” என்று இழுத்தவளிடம்¸ “இல்லைன்னா என்ன பண்ணுவே?” என்று கேட்டாள் ஏளனமாக.
“நான் உன்கிட்ட என் நிறத்தைப் பத்தி எதுவும் கேட்டேனா? இல்லை எனக்காக எதுவும் பையன் பார்த்து தரச் சொன்னேனா?” என்று கேட்டாள் மீரா.
“ம்… அப்படியே பார்த்துட்டாலும்! இந்த குரங்கு மூஞ்சியைப் பார்த்தவன் தலைதெறிக்க ஓடிவிடமாட்டான்” என்று சொல்லி சிரித்தாள்.
“குரங்கு மூஞ்சி யாரோடதுன்னு… அதுவும் வெள்ளைக் குரங்கு மூஞ்சி யாரோடதுன்னு உன் கண்ணாடியைப் பாரு தெரியும்” என்றவள் விருட்டென தன் கல்லூரி பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.
“ஏய்..!! என்னையா குரங்குன்னு சொன்னே!!” என்று மீராவின் அறையில் அடுக்கி வைத்திருந்த பொருட்களை விசிறி எறிந்தாள். அதன்பின்¸ “இன்று சாயங்காலம் அப்பா வரட்டும்… அப்போ இருக்கு உனக்கு கச்சேரி” என்று வெடித்தாள்.
இது வெளியே சென்று கொண்டிருந்த மீராவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
காலை சம்பவத்தை நினைத்துப் பார்த்தவள் அதைச் சுருக்கமாக தாயிடம் கூறினாள்.
கேட்டு முடித்த தாயார் “அவங்க ரெண்டுபேரும் நிறத்திலும் அழகிலும் உன்னைவிட கூடினவங்கதான். அதனால¸ நீ கொஞ்சம் தாழந்து போறது தப்பில்லை” என்றார்.
“என்ன தப்பில்லை?” எனக் கேட்டவாறு உள்ளே வந்தார் காமாட்சி பாட்டி.
“அது வந்தும்மா…” என தன் தாயிடம் நடந்த அனைத்தையும் அவரே விவரிக்க¸ “என்ன விசாலம்… தாராவையும் சாராவையும் மட்டுந்தான் நீ சுமந்து பெத்தது போலவும் மீரா யார் வீட்டிலிருந்தோ எடுத்து வந்த குழந்தை மாதிரியும் நீயே ஏன் ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கிற மாதிரி நடந்துக்குறே?” என்றார் மகளிடம் கோபமாக.
“நான் வேற என்னம்மா பண்ணுறது? அவருக்குப் பிடிக்காத எதுவும் எனக்கும் பிடிக்கக்கூடாதுன்னு நீதானம்மா சொல்லியிருக்குறே!” என்று தனக்குத் திருமணமான புதிதில் தாயார் கூறியதை நினைவுபடுத்தினார்.
“அதுவும் மீராவும் ஒன்றா?” என்று ஆதங்கப்பட்டார் காமாட்சி.
“எனக்கு அப்படித்தான்மா” என்று வெளியேறினார் விசாலம்.

Advertisement