Advertisement

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: 

ஸ்ரீ குருப்யோ நம: 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் 

ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் 

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
 ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்

9. சுமந்திரர் கோபம்.

லக்ஷ்மணன் அனைவரிடமும் விடைபெற்று வந்ததும், பெரும் செல்வங்களை அந்தணர்கள், வறியவர்கள், வசிஷ்டரின் மகனாகிய ஸுயக்ஞர், ஊழியம் செய்பவர்கள் போன்றோருக்கு தானமாக வழங்கினார் ராமர். எப்படியென்றால் வறுமையுள்ள மனிதன் திருப்தி அடைகிற விதமாக அவரது தானங்கள் இருந்தது.

உதாரணமாக, த்ரிஜடர் என்ற ஒரு அந்தணர் வறுமையின் பிடியில் வாட, தனது மனைவியின் உந்துதலில் பேரில் ராமரிடம் யாசகம் பெற வந்தார். கிழிந்த துணியோடு அரண்மனைக்கு வந்த அந்தணரின் முகத்தில் இருந்த அருளினைக் கண்டு, வாயிற்காவலர்கள் அவரை தடுக்காமல் விட்டனர். தானங்கள் செய்து கொண்டிருந்த ராமரை அணுகிய அவ்வந்தணர், “நல் வீரனே, நிகரற்றவனே, நானும் எனது குடுமபத்தோரும் வறுமையில் வாடுகிறோம், சற்றே கருணை காட்டு” என்றார்.

ராமர் அவரை பார்த்து புன்னகை பூத்து, “ப்ராமணரே,  இங்கே ஆயிரக்கணக்கான பசுக்கள் உள்ளன. உங்கள் கையிலிருக்கும் கழியை உங்களால் முடிந்தவரை வேகமாகத்  தூக்கி வீசுங்கள், அது எதுவரை செல்கிறதோ அவ்விடம் வரை இருக்கும் பசுக்கள் உமக்கே சொந்தமாகும்”, என்றார்.

மனம் மகிழ்ந்த அந்த மனிதர், மிகுந்த ஆர்வத்தோடு அவரால் ஆனமட்டும் பலமாக அவரது கழியை தூக்கி வீசினார். அது சரயு நதிக்கரையை தாண்டி, பல்லாயிரக்கணக்கான பசுக்களை தாண்டிச் சென்று வீழ்ந்தது. ‘இவை அத்தனையும் உமக்கே’ என்று அவரிடம் கூறி, “இவரது ஆசிரமத்திற்கு இப்பசுக்களை அழைத்து செல்லுங்கள்”, என்று  காவலர்களுக்கு கட்டளையிட்டார்.

பின் அவரை ஆரத்தழுவி, “உங்கள் ஆன்மபலம் எவ்வளவு என்று அனைவர்க்கும் தெரியச் செய்யவே, உங்களை கழி எறியக் கூறினேனே அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை, இன்னும் என்னவும் வேண்டுமென்றாலும் அனைத்தையும் பெற்றுச் செல்லுங்கள்.”, என்றார்.

த்ரிஜடர் பெரிதும் மனம் குளிர்ந்து, “உன் கீர்த்தி, பராக்கிரமம் திக்கெங்கும் பரவட்டும். அனைத்து செல்வங்களும் உன்னை வந்து சேரட்டும்”, என்று ஆசீர்வதித்து விடை பெற்றார்.

இவ்வாறு அனைவரின் தேவையை அறிந்து தான தர்மங்கள் செய்துவிட்டு சீதையும் லக்ஷ்மணரும் பின் தொடர தசரத மன்னரிடம் ஆசி பெற, அவரது அரண்மனையை நோக்கி புறப்பட்டார் ராமர். அம்மூவரும் நடந்து செல்லும் காட்சியைக் கண்ட மக்கள் மனம் விம்மினர். “தேரும் படைகளும் சூழ பவனி வரவேண்டிய ராமரும், தேவதைகளே பார்க்க அஞ்சிய சீதையும் இப்போது தெருவிலே நடக்கின்றனர். உத்தமமான பிள்ளையை காட்டுக்கு அனுப்பத்  துணிந்த தசரதரை எதோ துஷ்ட சக்திகள் பீடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்படி ஒரு காரியத்தை அவர் செய்வாரா? புஷ்பமும் சந்தனமுமே தொட்ட சீதையின் மேனியை இனி வெய்யிலும் மழையும் வாட்டப்போகின்றது”

“குணம் கேட்ட மகனைக்கூட ஒரு தந்தை இப்படி தண்டிக்க மாட்டான், கல்வி கேள்விகளில் சிறந்து, இந்திரியங்களை அடக்கி, அன்பு கருணை தயை இவற்றின் இருப்பிடமாக இருக்கும் ராமரை காட்டுக்கு அனுப்ப எப்படி அவருக்கு மனம் வந்தது?”

“ஒரு மரத்தின் வேரை வெட்டினால் எவ்வாறு அதன் இலைகள், பூ பழங்கள் அனைத்தும் பாதிக்கப்படுமோ அவ்வாறு ராமரின் துன்பம் நம்மை அசைக்கிறது. அவர் மனித குலத்தின் வேர் அல்லவா?”

“ஒன்று செய்வோம், ராமரை பின் தொடரும் இளவலைப் போல நாமும் அவர் பின் செல்வோம். மனிதர்களே இல்லாத இந்த நாட்டை கைகேயி ஆளட்டும். நம்  நடமாட்டமின்றி எலிகள் குடியேறி பாழைடைந்து போகப்போகும் இந்த மாளிகைகளையும், குப்பை கூளமாய் இருக்கப்போகும் இடங்களையும் கைகேயி நன்றாக அனுபவித்து மகிழட்டும். நாம் கைவிடப்போகும் இந்த நாடு கொடும் மிருகங்கள் வாழும் காடாகட்டும், ராமரோடு சென்று அவர் இருக்குமிடத்தை அழகிய நகரமாக்கி மகிழ்வோடிருப்போம்”, என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

இவையனைத்தும் காதில் விழுந்தாலும், சிறு சலனமுமின்றி ராமர், மதயானையைப் போன்ற தனது நடையுடன் தசரதரின் மாளிகையை அடைந்தார். அங்கு சுமந்திரரைக் கண்டு, தான் வந்திருக்கும் செய்தியை மன்னருக்கு தெரியப்படுத்துமாறு கூறி, அவரின் அனுமதிக்காக காத்திருந்தார்.

தசரதரை நாடி சென்றார் சுமந்திரர். அவரோ கிரகணம் பீடித்த ஆதவனைப்போல,நீரின்றி வறண்டு கிடைக்கும் தடாகம் போல சாம்பலால் மூடியிருந்த தீயினைப்போல காணப்பட்டார். அவரிடம், “சூரியன் ஒளி மிகுந்த கிரணங்களோடு இருப்பதுபோல, நற்குணங்களை அணிகலனாக கொண்ட ராமர், காட்டிற்கு செல்லும் முன் தங்களைக் காண வந்துள்ளார்”, என்று தெரிவித்தார்.

சுமந்திரரிடம் தனது மனைவிகளை இங்கு வருமாறு சொல்லப் பணித்தார் தசரதர். அவர்கள் வந்ததும் ராமரை அழைத்து வருமாறு சொன்னார். தன்னைக் காண கூப்பிய கரங்களுடன் ராமன் வருவதை பார்த்த தசரதர், உட்கார்ந்திருந்த தனது ஆசனத்தில் இருந்து எழுந்து மகனை நோக்கி விரைந்தார். ஆனால், அந்தோ பரிதாபம்! ராமரை சென்று சேரும் முன்பே துயரம் தாங்காமல் கண்ணீர் திரையிட தரையில் விழுந்தார். துடித்து வந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும் அவரை ஆசுவாசப்படுத்தி, அமர வைத்தனர். அந்நேரத்தில் குழுமியிருந்த பெண்கள் ராமா! ராமா! என்று பாராட்டும் சப்தமும், அவர்கள் மார்பிலடித்து அழும்போது ஒலிக்கும் ஆபரணங்களின் ஓசையும் அயோத்தியின் துக்கத்தைப் பிரதிபலித்தது.

தசரதரைப் பார்த்து, “அரசே! தந்தையாகிய தாங்கள் எங்களுக்கு ஈஸ்வரனைப் போன்றவர். தண்டகாரண்யத்துக்கு செல்ல ஆயத்தமாகி வந்திருக்கும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். என்னோடு கூட சீதையும், லக்ஷ்மணனும் எத்தனை வேண்டாமென தடுத்தும் வருவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள், அவர்களுக்கும் உங்களது ஆசி வேண்டும். தவ நெறியைக் கைக்கொண்ட மகன்களுக்கு பிரம்மதேவன் விடை குடுத்ததைப்போல எங்கள் மூவரையும் நீங்கள் வாழ்த்தி அனுப்ப வேண்டும்” என்றார் ராமர்.

“வாக்கினால் கட்டுண்டு கிடக்கிறேன் ராமா, கைகேயி இப்படி வரங்களைக் கேட்பாளென அறியாது போனேன், செய்வது அநியாயமெனத் தெரிந்தும் கையாலாகாத மனிதனாய் நிற்கிறேன். ரகு வம்ச திலகா! புத்தி நிலையிலாத என்னை சிறைபிடித்து நீ ராஜ்யத்தை எடுத்துக்கொள்”, என்று கதறலாக கூறினார் தசரதர்.

“தந்தையே! நீங்கள் இன்னும் பல்லாயிரங்காலம் இந்த அரசாட்சியை நடத்த வேண்டும். எனக்கு இந்த ராஜ்ஜியம் மீது ஆசையில்லை. உங்கள் வாக்கினை காப்பதாக நான் உறுதி மொழிந்தேன். பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசித்து உங்கள் வாக்கினையும் என் வார்த்தையையும் காப்பாற்ற நீங்கள் அனுமதிக்க வேண்டும்”, என்று மன்றாடினார் ராமர்.

அப்போதும் கைகேயி அருகிருந்து ராமரை துரிதமாக அப்புறப்படுத்திவிடத்  துடிக்க, தசரதர் வேறு வழியின்றி, மகனுக்கு விடை கொடுக்கும் வகையில் பின்வருமாறு பேச ஆரம்பித்தார். “ராமா! சென்று வா, நீ செய்யப்போகும் இந்த செயலால் எந்நாளும் உலகத்தோரால் பேசப்படுபவனாய் கீர்த்தியுடனிருப்பாய். உனக்கு மங்கலமுண்டாகட்டும். ஆனால், இன்றொரு நாள் என்னுடன் இருந்து நாளை உன் பயணத்தை தொடங்கு. இன்னும் ஒரே ஒரு நாளாவது  உன்னை கண் குளிர பார்த்து மகிழ்கிறேன். நிச்சயமாக செல்கிறேன் ராமா, நீ காட்டிற்கு செல்வதில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை. ஆனால் நீறு பூத்த நெருப்பைப் போல் இதோ இங்கு நிற்க்கும் கைகேயியின் மனதில் தோன்றிய குரூரமான யோசனை இது. என் வாக்கினைக் காக்க நீ இவ்வாறு கானகம் ஏகுவது எனக்கு மனக்கிலேசத்தை உண்டாக்குகிறது.”

“அரசே! இன்று இங்கு அனுபவிக்கும் இந்த போகங்கள் நாளை காட்டில் கிடைக்குமா? இந்த சுகபோகங்கள், அரசுரிமை, மனதுக்குவந்த வாழ்க்கை இவற்றையெல்லாம் விட குடுத்த வார்த்தையை காப்பாற்றுவது மேன்மையானது அல்லவா?, “காட்டுக்குப் போ”, என்று கைகேயி தேவியார் இட்ட ஆணை, “போய்க்கொண்டே இருக்கிறேன்”, என்று நான் உறுதியளித்து விட்டேன். எனவே உடனே இங்கிருந்து புறப்படுவதுதான் சரியானதாகும். இந்த பதினான்கு ஆண்டுகள் நொடிப்பொழுதில் கடந்து விடும், காட்டு வாழ்க்கையை ஒரு சிரமும் இன்றி கடந்து வருவேன். சமுத்திர ராஜன் ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை, அலைக்கடலைப் போல் பரந்த மனத்துடைய நீங்களும் கண்ணீர் சிந்தலாகாது. இது ஒரு துயரம் என்று கருதாதீர்கள். மலைகளையும் ஆறுகளையும், விசித்திரமான மிருகங்களையும், வித விதமான பறவைகளையும் பார்த்து ஆனந்தமாய் இருப்பேன். உங்கள் துன்பம் அகலட்டும், பரதன் நாட்டை ஆளட்டும், உங்கள் வாக்கு காப்பாற்றப்படட்டும்”, என்று பதிலுரைத்தார்.

இவ்வாறு ராமர் பேசியவுடன், அவரை கட்டித் தழுவிக்கொண்டு தசரதர் மூர்ச்சையுற்றார். இதைக் கண்ட சுற்றியிருந்த அனைவரும் கதறினார்கள், ஒரு கைகேயியைத் தவிர. இதைப் பார்த்த தசரதரின் தேரோட்டியும் மந்திரியுமான சுமந்திரருக்கு கட்டுக்கடங்கா கோபமேற்பட்டது. கைகளை முறுக்கிக் கொண்டு, பல்களைக் கடித்து கைகேயியைப் பார்த்து,  கண்கள் ரத்தமென சிவக்க, உடம்பில் ஆக்ரோஷம் கொப்பளிக்க, “இந்த பூமிக்கே அதிபதியும் உங்களுக்கு பதியுமாகிய தசரதரை அழிப்பதென்றே முடிவு கட்டினீர்களா? குலத்தை வேரோடு நாசம் செய்யும், கணவனின் உயிரையும் துச்சமென நினைக்கும் பெண்ணாக உங்களை நான் பார்க்கிறேன். தசரதர் மலை போன்ற அசையா மனா உறுதியுள்ளவர், தேவேந்திரனும் வெல்ல இயலாதவர், அப்படிப்பட்டவரை உங்கள் செயல் இப்படி ஆக்கியுள்ளது கொடுமையே”

“தேவீ! மூத்த மகனுக்கே அரசுரிமை என்பது மரபு, அதை மாற்ற முனைந்தீர், அப்படியே ஆகட்டும், பரதன் முடிசூட்டிக்கொள்ளட்டும். நாங்கள் அனைவரும் ராமரை பின்தொடர்ந்து போகப்போகிறோம். நீங்கள் ஆளும் இந்த நாட்டில் ஒரு அந்தணன், ஒரு நல்லவன் கூட தேடிப்பார்த்தாலும் இருக்க மாட்டான். நாணயமானவர்கள், நல்லவர்கள் இல்லாத இந்த நாட்டை உங்கள் மகன் ஆட்சி செய்வதில் என்ன பெருமையை காணப்போகிறீர்கள்?”

“இத்தனை சதிச்செயல்கள் செய்தும், இன்னும் பூமி பிளந்து தங்களை விழுங்காமலிருக்கிறதே? மாமரத்துக்கு பதிலாக வேம்பினை நட்டு வைத்து வளர்த்தால் என்ன பயன்? அதுதான் கிட்டியிருக்கிறது தசரதருக்கும். வேப்பமரத்திலிருந்து தேன் வடியுமா?  உங்கள் குணம் இவ்வாறில்லாமல் போனாலே ஆச்சர்யம். தாய்போல மகள் என்ற பழமொழியை நிரூபிக்கிறீர்கள். உங்கள் தாயாரைப் பற்றி நாங்கள் அனைவரும் கேட்டறிந்திருக்கிறோம்”

“முன்பொருகாலத்தில் எல்லா பிராணிகள் பேசுவதையும் புரிந்து கொள்ளும்படியான சிறப்பான வரத்தை உங்கள் தந்தைக்கு முனிவர் ஒருவர் வழங்கினார். அவ்வாறிருக்கும்போது, ஒரு நாள் இரவில் படுக்கையில் ஓர் எறும்பு பேசுவதைக் கேட்டு அவர் சிரித்தார். அருகிலிருந்த உங்கள் தாயார், ‘சிரித்ததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘எறும்பு பேசியதை கேட்டு சிரித்தேன், அது என்னவென்று உனக்கு சொன்னால், அக்கணமே எனக்கு மரணமேற்படும்’, என்று விளக்கினார். ஆனால், உனது தாய், “என்னவானாலும் சரி, எனக்கு இப்போதே காரணத்தை கூறுங்கள்”, என்று சற்றேனும் பயமின்றி பிடிவாதம் பிடித்தார்”.

அவளது கணவரும் உனது தந்தையாகிய கேகேய மன்னர், நேரே வரம் தந்த முனிவரை சந்தித்து, ‘இப்போது என்ன செய்வது?’, என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர், ‘உன் மனைவி என்னாவாகிலும் செய்து கொள்ளட்டும், விஷமே அருந்தட்டும், கத்தியினால் குத்திக் கொண்டு மாளட்டும், நீ ஒருநாளும் ரகசியத்தை வெளியிடாதே’, என்று ஆணையிட்டார்”

“அவர் சொன்னதினால் உன் தாயை கைவிட்டார் ( அவரது பிடிவாதத்தை வெல்ல முடியாததால், அவரையே கைவிடும்படி நேர்ந்தது என்று கொள்ளலாம்). பின் உனது தந்தையின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது. ‘தாயைப் போல பிள்ளை’ என்பதற்கு ஏற்ப, உங்கள் தாயாரை போலவே, நீங்கள் செய்யும் செயலின் வீரியமறியாது நீங்கள் செயல்படுகிறீர்கள். ராமர் காட்டுக்கு சென்றால், உங்களுக்கு தீராத அவப்பெயர் உண்டாகும். அதை தவிர்க்க, பட்டாபிஷேகம் நடக்கட்டும், இந்த ராஜ்யம் ராமனுக்கு நீங்கள் குடுத்ததாய் இருக்கட்டும், உங்கள் கணவனுக்கு அநியாயம் செய்யாதீர்கள்” என்று கடுமையான சொற்களால் சுமந்திரர் பேசியும் கூட, கைகேயி மனமிரங்கவில்லை. கடுகளவும் அவரது முகம் தயக்கத்தையோ, பயத்தையோ காண்பிக்கவில்லை.

ஆனால் சுமந்திரர் பேசியத்தைக் கேட்ட தசரதர், “சுமந்திரரே! நம் சதுரங்க சேனைகள் அனைத்தும் ராமனை பின் தொடரட்டும், வியாபாரம் செய்யும் வணிகர்கள் தங்கள் செல்வத்துடன் அவனை பின் தொடரட்டும். போட்டிகளினால் அரசரை மகிழ்விக்கும் மல்லர்கள் அவன் பின் செல்லட்டும். மக்கள் நடமாட்டமில்லாத காட்டிற்கு செல்லும் ராமனுக்கு உதவியாக வேடுவர்கள் வழிகாட்டட்டும்.  அங்கிருக்கும் பயங்கர மிருகங்களை வேட்டையாடி அவனுக்கு உதவட்டும். நம்மிடமிருக்கும் பொக்கிஷங்களையும், தானிய களஞ்சியங்களையும் அவனோடு கூட அனுப்புங்கள். அங்கே ராமன் மேன்மையான ரிஷிகளை சந்தித்து ஆசி பெறட்டும், புண்ய ஸ்தலங்களில் நீராடி யாகங்கள் காண தர்மங்கள் செய்து மகிழ்வோடு வாழட்டும். இங்கே பரதன் நாட்டில் ஆட்சி செய்யம் காலத்தில், காட்டிலே இருக்கப்போகும் ராமனும் கவலையற்றிருக்க அனைத்து வசதிகளையும் செய்து தரப்படட்டும்” என்றார்.

அதைக் கேட்ட கைகேயி, “செல்வங்கள் அனைத்தையும் துடைத்துக் கொடுத்து விட்டு, வெறும் நாட்டை பரதனுக்கு தரபோகிறீர்களா? போதை விலக்கப்பட்ட மதுபானம் இன்பத்தை அளிக்குமா? பொக்கிஷங்களை இழந்த இந்நாட்டை பரதன் ஒருபோதும் ஏற்கமாட்டான்”, என்று வெறுப்போடு பேசினார்.

அதற்கு தசரதர், “அடீ பாதகி! தாங்க இயலாத பாரத்தை எருதின் மீது ஏற்றிவிட்டு, அது கஷ்டப்படும் போது, எவனாவது அதைக் குத்துவானா? உனக்கு தந்த வரங்களின்படி, ராமனை காட்டிற்கு அனுப்ப இசைந்து மனம் நோகக் கிடக்கிறேன், அப்படியிருக்கும்போது இன்னும் ஏன் என்னை ஹிம்சிக்கிறாய்?” என்று கேட்டார்.

“முன்பே தந்த வரங்களைத் தவிர, இன்னும் என்ன கேட்டேன் நான்? புதிதாக நீங்கள் வருந்துமளவுக்கு ஏதும் கேட்டு விடவில்லையே?” என்றார் கைகேயி செருக்காக.

“அல்ப சிந்தையுள்ளவளே! ராமனை காட்டுக்கு அனுப்புமாறு கேட்டபோது, சேனைகளை பொக்கிஷங்களை அனுப்பக்கூடாதென்று நீ ஏன் கூறவில்லை?, அப்படியேதும் நிபந்தனைகளை நீ சொல்லவில்லையே? பின் எதற்காக இப்போது ஆட்சேபிக்கிறாய்?” என்று கடிந்தார் தசரதர்.

“உங்கள் முன்னோர் குறித்து அறியாதவள் என்ற நினைவில் பேசுகிறீர்களா? சகர சக்ரவர்த்தி அவரது மகனான அசமஞ்சனை காட்டிற்கு அனுப்பவில்லையா? அப்போது இத்தனை செல்வத்தையும் சேனைகளையுமா தந்தனுப்பினார்?” என்று கேட்டார் கைகேயி.

‘அநியாயமாக இரு வரங்களை பெற்று, இப்போது அதில் இல்லாதவற்றையும் இந்த கைகேயி செய்யச் சொல்கிறாளே?’ என்ற கோபத்துடன், “சீ.. ச்சீ, வாயை மூடு” என்றார் தசரதர்.

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே:

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம் :

சர்வம் ஸ்ரீ உமாமஹேஸ்வர பரப்ரஹ்மார்ப்பணமஸ்து:

Advertisement