Advertisement

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர:

 ஸ்ரீ குருப்யோ நம:

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே 
ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
8. ஸீதையின் வாதம்

ராமரின் மாளிகையில் இருந்த சீதைக்கோ இவ்விபரங்கள் ஏதும் தெரியாமல், பூஜை முடித்து, தசரதரின் மாளிகைக்கு சென்ற ராமரின் வரவினை எதிர்பார்த்து காத்திருந்தார். சற்று நேரத்தித்தில் ராமர் வர, அவர் முகம் கண்டதுமே சீதை துணுக்குற்று, “என்ன விஷயம்? ஏன் உங்கள் முகம் வாட்டமோடு இருக்கிறது? வெண்குடையோடு பாணர்கள் பாட்டிசைக்க, அந்தணர்கள் வேத ஒலி எழுப்ப, மந்திரிகளும் மக்களும் பின் தொடர அலங்கரிக்கப்பட்ட யானை மற்றும் கட்டியங்கூறுபவன் முன்னே வந்து உங்கள் வரவை பறையறிவிக்க, புரவிகள் பூட்டப்பட்ட தேரில் வரவேண்டிய தாங்கள் இப்படி கவலையான வதனத்துடன் வருவது ஏன்?”, என்று கேட்டார்.

சுருக்கிய புருவத்துடன் தன் மீதான கவனம் மேலுற கேட்ட சீதையைப் பார்த்து, “ஸீதே! வணக்கத்துரிய தந்தை என்னை கானகம் செல்ல பணித்திருக்கிறார். ஜானகி (ஜனக நந்தினி), ஏன் இப்படி சொன்னார் என்பதை விளக்கமாக சொல்கிறேன் கேள். முன்பொருமுறை தேவாசுர போரின் போது தன்னைத் தக்க சமயத்தில் காப்பாற்றியதாக கைகேயி தேவிக்கு  இரு வரங்கள் தந்தார். பட்டாபிஷேக ஏற்பாடுகள் முடிந்துள்ள இன்றைக்கு கைகேயி தந்தையிடம் அந்த இரு வரங்களை கேட்டுள்ளார். சொன்ன சொல் தவறாத தசரதர் வாக்கினை காக்க நான் பதினான்கு வருடங்கள் வனவாசமும், பரதனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகமும் நடந்தேற வேண்டும். இதை உன்னிடம் தெரிவித்து விடைபெறவே நான் இங்கு வந்தேன்”

“நாடாளப்போகும் பரதன் உனக்கும் அரசனே, அதனால் எப்போதும் அவன் முன் என்னைப் புகழ்ந்து பேசாதே, பெரிய பதவியில் இருப்பவர்கள் அவர்கள் முன் மற்றவர்கள் புகழப்படுவதை விரும்பமாட்டார்கள். உனக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்று மன வருத்தம் கொள்ளாதே. நான் காட்டிற்கு சென்ற பின் தந்தையையும் தாயாரையும் நன்கு கவனித்துக்கொள். எனது மற்ற தாயார்களும் என்னைப் பெற்றவர்களுக்கு சமமானவர்களே. அவர்களது பணிவிடையிலும், தெய்வ வழிபாட்டிலும், விரதங்கள் முதலானவற்றில் உனது சிந்தையை செலுத்து.”

“மீண்டும் சொல்கிறேன், பரதனுக்கு மனவருத்தம் வரும்படி நடந்து கொள்ளாதே, வைதேகி (விதேக புத்ரி), மன்னருக்கு எதிராகவோ, அவர்களின் ஆணைக்கு உட்படாமலோ யாரேனும் நடந்துகொண்டால், சொந்த பந்தமே ஆனாலும் அரசனால் புறக்கணிக்கப்படுவார்கள். தங்களுக்கு அனுசரணையாக நடப்பவர்கள் ரத்த சம்பந்தம் இல்லாதவர்களாயினும் அவர்களை அரசர்கள் ஏற்பார்கள். இதை நினைவில் வைத்து பெரியவர்களை பணிந்து, தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு அயோத்தியில் வாழ்வாய். எவர் மனதும் புண்படும்படி நீ நடந்து கொள்ளலாகாது. எனக்கு விடை கொடு நான் போய் வருகிறேன்” என்றார் ராமர்.

“புருஷர்களில் உத்தமமானவரே! உங்கள் வார்த்தைகள் மூலம் என்னை அல்பமானவளாக உருவகப்படுத்துகிறீர். அஸ்திர சாஸ்திரங்கள் முழுமையாக அறிந்த அரசகுமாரன் பேச்சினைபோல் இல்லை உங்கள்  வார்த்தைகள். ஒரு மனிதனின் தாய், தந்தை, சகோதரன், மகன், மகள் அனைவரும் அவரவர் முன்ஜென்ம பாப புண்ணியங்களுக்கேற்ப்ப பலாபலன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் மனைவி மட்டும் அவனிடம் வாழ்ந்து அம்மனிதனின் பாப புண்ணியங்களை தானும் சேர்ந்து அனுபவிக்கிறாள். உங்களை மன்னர் வனவாசம் செல்ல ஆணையிட்டார் என்றால், உங்களில் நானும் அடக்கமல்லவா? ப்ரபோ! பெண்ணிற்கு யார் அடைக்கலம்? தந்தையா? மகனா? சகோதரனான? பந்துக்களா? செல்வமா? எதுவுமில்லை, கணவனைத்தவிர அவளுக்கு அடைக்கலம் தரக்கூடிய வேறொரு உறவு கிடையாது”

“அழகிய வேலைப்பாடமைந்த ரதங்களில் போவதைக் காட்டிலும், அரண்மனை சுகபோகங்களை விடவும், சொர்கத்தை விடவும் கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்ணிற்கு மேலானதல்லவா?, ஒரு நல்ல மனைவி கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு என் பெற்றோர்கள் பலமுறை உபதேசித்திருக்கிறார்கள். கணவன் எந்த நிலையில் இருந்தாலும் அவனுக்கு அடங்கி தொண்டு செய்து நடப்பதே அவளது மேலான தர்மம். உங்களோடு காட்டிற்கு வருகிறேன், உங்களை நாடி எத்தனை மனிதர்கள் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வல்லமை தங்களுக்கு உண்டு என்பதால் நான் உங்களுக்கு ஒரு சுமையாக இருக்கமாட்டேன். கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வசிப்பது எனக்கு ஒரு சிரமம் அல்ல. இது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழும் பேறாக எண்ணி உங்களோடு கானகம் வருகிறேன். உங்களை பிரிந்து சொர்கத்திலே வாழ்வதை விட உங்களோடு காட்டில் வாழ்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி. தயவுசெய்து என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் சீதா.

“ராஜ வம்சத்தில் பிறந்து போற்றத்தக்க குணங்களைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேள். காடென்பது பெரும் துன்பம் தரக்கூடியது, அங்கு வருகிறேன் என்று சொல்வதை விடு, உன் நலதிற்காகத் தான் சொல்கிறேன், அங்கு குகைகளில் வசிக்கும் சிங்கம் மட்டுமல்ல, அருவிகளின் சப்தம் கூட கலவரத்தை ஏற்படுத்தும், வனவிலங்குகள் எந்நேரமும் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. முதலைகளோடு எண்ணற்ற சுழல்கள் கொண்ட கடக்க முடியாத காட்டாறுகள் பல இருக்கும். பாதைகள் முட்புதராய் மண்டி இருக்கும், கரடு முரடானவைகளாக இருக்கும். பகலெல்லாம் உணவு தேடி சலித்து, கிடைத்தவைகளை உண்டு வாழவேண்டும். இரவானாலோ கொடும் மிருகங்களுக்கு இரையாகிவிடாமல் கவனமுடன் இருக்க வேண்டும். அங்கு படுக்க ஹம்சதூளிகா மஞ்சம் இருக்காது, உதிர்ந்த சருகுகள் மேல் படுக்க வேண்டியிருக்கும்.”

“புயற்காற்று, கடுமையான விஷமுடைய பாம்புகள், கோர  மிருகங்கள் இவையனைத்தையும் கொண்டதனால் காடு மனிதர்கள் வாழ்விடமாக இருக்க தகுதியற்றதாக இருக்கின்றது. கானகம் துன்பம் விளைவிக்கக்கூடியது. எதற்கும் அச்சமடையத் தேவையின்றி தகுந்த பாதுகாவலுடன் அரச சுகத்தில் மேன்மையாக வாழ்ந்த நீ இவையனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும். எனவே, உனது எண்ணத்தை மாற்றிக்கொள்”, என்றார் ராமர்.

“உங்கள் அருகில் நான் இருக்கும்போது காட்டு விலங்குகள் பற்றி என்ன கவலை? நீங்கள் அருகிலிருந்தால், தேவேந்திரன் கூட என்னை ஒன்றும் செய்ய முடியாதே, அப்படியிருக்க வனவிலங்குகள் எம்மாத்திரம்?”

“முன்பொரு சமயம், எனைப் பார்த்த ஜோதிடர்கள், என் அங்க லக்ஷணங்களைக் கண்டு,  நான் காட்டு வாழ்க்கையை வாழ நேரிடும் என்று என் தந்தையிடம் கூறினார்கள். அவ்வாறு அவர்கள் கூறக்கேட்டதிலிருந்து வன வாசத்தைப் பற்றி எனக்கு ஒரு அபிலாஷையே வந்துவிட்டது. கானகத்தின் துன்பத்தை எடுத்துச் சொன்னீர்கள், அவை திட புத்தியில்லாதவர்களுக்கே துன்பமாக தோன்றும். பெற்றோர்களால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டு எப்போது ஒரு பெண் ஒருவனை மணக்கிறாளோ, அவனே ஈரேழு லோகத்திற்கும் அவளுக்கு கணவன் என்பதை  சாத்திரங்கள் கூறுகின்றன. அப்படியிருக்க, என்னை உடன் அழைத்துச் செல்ல தயங்குவது ஏன்? நான் இத்தனை கூறியும் நீங்கள் என்னை நீங்கி சென்றால், நான் நீர் நிலையிலோ, நெருப்பிலோ, விஷம் குடித்தோ இறந்துபோவேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஆனாலும் ராமருக்கு சீதையை காட்டுக்கு அழைத்து செல்ல சம்மதம் தெரிவிக்காததால், மனம் வருந்திய சீதை கடுஞ்சொற்களைப் பிரயோகித்தார். “உங்களுக்கு என்னை தாரை வார்த்துக் கொடுக்கும்போது நீங்கள் ஆண்  வடிவில் உள்ள பெண் என்பதை அறியாமல் என் தந்தை பிழை செய்து விட்டாரோ? மனைவியை விட்டு கணவன் ஒருநாளும் பிரியக்கூடாதென்ற கொள்கையில் பிடிப்பு கொண்ட அவர், கானகத்தில் நீங்கள் என்னைக் காக்க சக்தியற்றவராய் இங்கே அரண்மனையில் விட்டுச் சென்றீர்களானால், முன்சொன்னது போலவே நினைப்பார்.  உங்களையே சதமென நம்பி இருக்கும் என்னை அசட்டை செய்து சென்றால்,  சூரியனைப்போல ஒளிவீசும் வதனம் கொண்ட ராமருக்கு தைரியம் என்பது சிறு துளியேனும் இல்லையோ என்று இந்த அயோத்தி மக்கள் நினைப்பர். உங்களோடு இருந்தால் எனக்கு அடர்வனமும் அயோத்தியே, முள்ளும் புதரும் பஞ்சு மெத்தையே, புழுதியும் சந்தனமே, உண்ணக் கிடைக்கும் எதுவும் அமிர்தமே, பெண் குலத்திற்கே இழி சொல் வரும் வகையில் நான் நடக்க மாட்டேன். மற்றவர்கள் பொறுப்பில் என்னை ஒப்படைத்து நீங்கள் சென்றால், நான் ஆலகால விஷமருந்தி உயிர்துறப்பேன்”, என்றார் சீதை.

தன் பிரிவைத் தாங்க முடியாது என்று கதறி அழும் மனைவியை அணைத்து, “நீயில்லாத சுவர்க்கம் எனக்கு நரகமென்பதை நீ அறியாயா? என்னால் உன்னை ஒருபோதும் விட்டுவிட முடியாது. உன் வார்த்தைகள் மூலம் உந்தன் மன உறுதியை அறிந்தேன். அனைத்தும் இறைச்செயல் எனும்போது எதைக் குறித்தும் எனக்கு அச்சமில்லை. உனது இந்த முடிவினால் நம் முன்னோர்கள் பெருமிதம் அடைவர். உன்னிடமிருக்கும் ஆடை ஆபரணங்கள் செல்வங்கள் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை அந்தணர்களுக்கும், யாசகர்களுக்கும், உன்னை நம்பி இருக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்து தானமாக கொடுத்துவிடு. அதை முடித்ததும் நாம் இருவரும் காட்டிற்கு புறப்படுவோம்.”

ராமரின் பேச்சை கேட்டு பெரும் நிம்மதி அடைந்த சீதை, தான தர்மங்கள் செய்ய துவங்கினார். இவ்விபரத்தை அறிந்த லக்ஷ்மணரோ, ராமரின் பாதத்தில் தலை வைத்து உள்ளம் குமுறி கண்ணீர் விட்டு அழுதார். “காட்டுக்கு செல்வது என்பது உங்கள் முடிவானால், உங்களோடு வந்து கையில் வில்லேந்தி உங்களுக்கு முன்பு நடந்து நான் பாதுகாப்பக்ளிக்கிறேன். நீங்கள் இல்லாத அரசாட்சியோ, மூவுலகோ, சொர்கமோ எனக்கு தேவையில்லை”

“லக்ஷ்மணா! நீயும் என்னோடு வந்தால் நம் அன்னை கௌசல்யை மற்றும் சுமித்திரையை  யார் பார்த்துக் கொள்வார்கள்? கருணை வடிவாய் இருக்க வேண்டிய அரசனாகிய நம் தந்தையோ, தீரா துயரின் பிடியில் இருக்கிறார். வரங்களின் மூலம்  இந்த அரசை அடைந்த கைகேயி நம் தாய்மார்களிடம் அணுசரணையாக இருக்க வாய்ப்பில்லை, அரசுரிமை பெரும் பரதனும் தாயார் சொல்லுக்கு கட்டுப்பட்டு நமது தாய்மார்களிடம் பரிவு காட்டமாட்டான். எனவே எனக்காக நீ இங்கிருந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டு இங்கே இருப்பாய்” என்று லக்ஷ்மணனின் கருத்தை மறுதலித்தார்.

“உங்கள் சத்தியத்தின் பாதை பரதனுக்கு வழிகாட்டும். பரதனுக்கு தர்மம் தெரியும், நம் தாய்மார்களிடம் அவன் பணிவாகவே நடந்து கொள்வான். அதில் எனக்கு சந்தேகமில்லை. ஒருவேளை அரசுரிமை பெற்ற அகந்தையால் மாறாக நடந்தானேயானால், அவனை ஒரு நொடியில் எமலோகம் அனுப்புவேன், அவனை மட்டுமல்ல, அவனை சார்ந்தவர்களையும், அவனுக்கு ஆதரவாக மூவுலகில் எவர்வரினும் அனைவரையும் அழிப்பேன். அது நிச்சயம். அண்ணா, தாய் கௌசல்யாதேவி தன்னையும் என் தாயாராகிய சுமித்திரையையும் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை உள்ளவர்.”

“மறுப்புக் கூறாமல், என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள், நீங்கள் காட்டில் நடக்கும்போது, அப்பாதையை மண்வெட்டியால் செப்பனிடுவேன், அங்கு கிடைக்கும் கனி, கிழங்கு வகைகளை தேடி தருவித்து உண்ணக் கொடுப்பேன். விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும், எல்லாவிதத்திலும் உங்களுக்கு உறுதுணையாக நின்று பணிவிடை செய்வேன்” என்றார் லக்ஷ்மணன்.

தம்பியின் வார்த்தையில் மனம் நெகிழ்ந்த ராமர், “இளவலே! நீ சென்று உன் சுற்றத்தோர் அனைவரிடமும் விடைபெற்று வா, நம் குலகுரு வசிஷ்டரிடம், இரண்டு தெய்வீக வில்களும், துளைக்க இயலாத கேடயங்களும், பாரம் தாங்குகின்ற அம்பறாத்துணிகளும் உள்ளன. அவற்றை அவரது ஆசியுடன் அதை பெற்று விரைந்து வா” என்றார்.

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே:

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம்:

சர்வம் ஸ்ரீ உமாமஹேஸ்வர பரப்ரஹ்மார்ப்பணமஸ்து :

Advertisement