Advertisement

5. தசரதரின் துக்கம்.

தோழமைகளே! இந்த ராமர் வனவாசம் செல்லும் நிகழ்வினை, (தசரதரின் துயரம், லக்ஷ்மணரின் கோபம், அன்னை கௌசல்யா தேவியின் பரிதவிப்பு, சீதை உடன் வருவதாக கூறும் நிகழ்வு) முடிந்தவரை சுருக்கமாக, ஆனால் எந்த ஒரு விபரங்களையும் தவறவிடாது பதிவு செய்ய முனைந்திருக்கிறேன்.

கைகேயியின் சூளுரையைக் கேட்ட தசரதர், மனமும் உடலும் நொந்து, இமை கொட்டாமல் அவரையே பார்த்து சித்தம் கலங்கி, இடி விழுந்த மரம் போல செயலற்று “ராமா…” என்று சொல்லி தரையில் வீழ்ந்தார். தன்னிலை மறந்து புலம்ப ஆரம்பித்தார்,”கெடுமதி கொண்டவளே! பேய் பிடித்ததா உனக்கு? இதுவரை நீ இப்படியாக இல்லையே? யார் சொல்லி வந்த மாற்றமிது? உலகிற்கு, உனக்கு, உன் கணவனாகிய எனக்கு அனைத்திற்கும் மேலாக உன் மகன் பரதனுக்கு நன்மையை விரும்பினால் இந்த கேடான எண்ணத்தை தொலைத்துவிடு. ஒன்றை நன்றாக புரிந்து கொள், ராமன் அமராத சிம்மாசனத்தை பரதன் அலங்கரிப்பான் என்று கனவு காணாதே”

“இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து, வயதுக்குறிய முதிர்ச்சியோ, மன்னனுக்குரிய விவேகமோ இல்லாத தசரதன், இளையவனை யுவராஜாவாக அமர்த்தினார்” என்றல்லவா ஊராரும் பல நாட்டு மன்னர்களும் கேலி பேசுவார்கள்? அவர்கள் ஒப்புக்கொள்ளும் மறுமொழியாக என்ன சமாதானம் கூறுவேன்? ‘என் இளைய மனைவியின் தொல்லை தாங்காமல், ராமனை வனத்திற்கு அனுப்பினேன்’ என்று சொன்னால் ஊர் கூடி நின்று என்னை இகழாதா? அரசவையில் ரிஷிகள், பல நாட்டு தலைவர்கள், மக்கள் முன் ராம பட்டாபிஷேகம் என்று நான் சொன்ன வார்த்தைக்கு விரோதமல்லவா அது? மக்கள் எப்படி அதை ஒப்புவர்?”

“ராமனை வனத்திற்கு அனுப்ப முடிவெடுத்தால் கௌசல்யை  என்னை ஏச மாட்டாளா? அவளுக்கு இப்படியொரு தீங்கைச் செய்துவிட்டு, என்னவென்று சமாதானம் கூறுவேன்? இதுவரை எனக்கு நல்ல தோழியாக, தாதியாக, உடன் பிறந்தவளைப் போலவும், தாயைப்போலவும் பணிவிடை செய்த அவளுக்கு நான் தரும் கைம்மாறு இதுவா? உனதன்பை பெரிதென எண்ணி, அவளை முறையாக நடத்தாமல் போன பலனை இப்போது அனுபவிக்கிறேன். உன் பேச்சைக் கேட்டு ராமனை கானகம் அனுப்பினால், சுமித்திரை என்னை மதிப்பாளா? மிதிலையின் ஆரணங்கான சீதைக்கு இவ்வித துன்பம் நிகழலாமா? சோகத்தில் புலம்பி தன் உயிரையே அவள் விட்டுவிடுவாளே? ராமன் வனம் சென்று, சீதா துன்பப்படும்போது நான் மட்டும் உயிர் வாழ்வேனா? மாட்டேன், ராமன் காட்டுக்கு சென்றால் அந்த நிமிடமே என் உயிர் பிரியும்.  நீ விதவையாகி, உன் மகனோடு சௌக்கியமாக இந்த நாட்டை ஆட்சி செய்”

“மெச்சத்தக்க அழகுடையவள் என்று உன்னை நினைத்திருந்தேன், ஆனால் நீ மனித உருக்கொண்ட பேய் என்று இப்போது தெளிந்தேன். சுவையின்பால் கவரப்பட்டு நஞ்சை உண்டவனாக இருக்கிறேன். மதுரமான சொற்களால் என்னை மகிழ்வித்து வஞ்சித்து விட்டாய். வேற்றுக் குரலில் பேசி வேடன் எப்படி மானை வலையில் சிக்க வைப்பானோ அப்படி என்னை வீழ்த்திவிட்டாய்”

“கள் அருந்தும் பிராமணனை எவ்வாறு மக்கள் நடு வீதியில் அவதூறு பேசுவார்களோ, அப்படி என்னைப் பற்றியும் இகழ்ந்து பேசுவார்கள். உன்னை மனைவியாக ஏற்று செய்த பாவத்திற்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறேன். இந்த இக்கட்டை என்னால் தாங்க முடியவில்லையே! நீ என் தூக்குக் கயிறாக அல்லவா வந்து சேர்ந்தாய்? இத்தனை நாள் இது தெரியாமல் உன்னை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருந்தேனே? நீயே என் வாழ்வு என்று நினைத்தேன். ஆனால் நீ என் ம்ருத்யு. நல்ல பாம்பைக் கையில் பிடித்து விளையாடும் குழந்தைபோல, உனைப் பற்றி தெரியாமல் உன் கரம் பிடித்தேனே? பெண்ணின் வார்த்தையைக் கேட்டு பிள்ளையை காட்டுக்கு அனுப்பிய மாபாதகன் என்ற பழிச்சொல் எனக்கு வருமே? பெண் பித்து கொண்டவன் என்றல்லவா உலகம் என்னை ஏசப்போகிறது?  எனக்கா இப்படி ஒரு இழிவு?” என்று பலவாறாக தசரதர் புலம்பினார்.

“நான் ராமனை அழைத்து காட்டிற்கு செல் என்று கூறினால், ‘ஏன்?’ என்று ஒரு வார்த்தை அதட்டிப் பேசி, ‘காரணம் சொல்லுங்கள்?’, என்று கேள்வி கேட்பவனாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால்  என் மகன் ராமன், மறுபேச்சு பேசாமல் அப்படியே ஆகட்டும் என்பவனாயிற்றே? அவன் அவ்வாறு சென்றுவிட்டால், என் செயலுக்கு மன்னிப்பே கிடையாது. என் உயிர் நிச்சயமாக பிரிந்து விடும். நானும் ராமனும் இல்லாத இந்த தேசத்தை, என் பிள்ளைகளை போன்ற இந்நாட்டு பிரஜைகளை நீ என்ன கொடுமைகள் செய்வாயோ? நீ உன் மகன் இருவரைத்தவிர அனைவரையும் துக்கக்கடலில், பேராபத்தில் முழ்கடித்து நீ மட்டும் சுகமாக வாழ்வாயாக. நாட்டை பெரும் குழப்பத்தில் விட்டு நீ ஏகபோகமாக வாழ்வாயாக”

“ஒன்று தெரிந்துகொள், ராமன் காட்டுக்கு செல்வதை பரதன் ஏற்றானென்றால், அவன் எனது இறுதிச் சடங்கை செய்ய தகுதியற்றவனாகிறான். பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தாயாக உன் ஆசை கூட ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதே, ஆயினும், ராமனை காட்டிற்கு போக சொல்வது எங்கனம் நியாயமாகும்?”

“பொருளே சதமென எண்ணிவிட்டவளே! அதர்மத்தில் நாட்டம் கொண்டவளே! ராமன் காட்டுக்குச் சென்று விட்டான் என்ற செய்தி மக்களை எட்டினால் அனைவரும் துயருறுவர். தொழில் செழிக்காது, உறவு உயிர்க்காது, நாடு குழம்பிப்போகும், எதிரிகள் குதூகலமடைவர்”

பின் கோபம் கொண்ட தசரதர், ” கொடியவளே! அனைவருக்கும் துன்பம் தரும் இச்செயல் நான் செய்ய மாட்டேன். நீ இப்போதே தீயில் விழுந்து இறந்து போ, எவ்வாறேனும் மடிந்து போ. கணவனிடம் அன்பில்லாதவளே! உன்னை உயிரோடு  பார்க்க நான் விரும்பவில்லை” என்று சொன்னார்.

பின் தனது கோபத்தை விட்டு, கைகேயிக்கு தான் தந்த வாக்கினால் கட்டுப்பட்டு இருப்பதை உணர்ந்து, மீண்டும் கழிவிரக்கம் மேலிட, கைகேயியிடம் “ராமனில்லாமல் நான் எப்படி உயிர் வாழ இயலும்? உன் காலில் விழுகிறேன் என் மீது கருணை காட்டு” தரையில் விழுந்து மன்றாடினார்.

ஆதவன் உதித்ததும் ராமன் காடு செல்லவேண்டும் என்ற கைகேயியின் பிடிவாதத்தால் மனம்  உழன்ற தசரதர், “என் வேண்டுகோளை ஏற்று இரவே நீ விடியாதே. பகலே தயவுசெய்து புலராதே. இல்லை… அதற்கு வாய்பில்லையெனில், உடனடியாக கதிரே நீ வருக! இக் கொடிய பாதகியை பார்க்கும் துன்பத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கட்டும்”

பின் இரு கைககளையும் கூப்பி கைகேயியிடம், “நான் வயதில் முதிர்ந்தவன், சத்தியம் தவறாதவன், உன்னையே கதியென கொண்டு வேண்டி நிற்கிறேன், நீயே ஆட்சியை ராமனுக்கு கொடுத்ததாக இருக்கட்டும் அப்படி நீ செய்தால், உன் புகழ் பரவும், ராமனுக்கும், எனக்கும், பரதனுக்கும் நன்மை செய்தவளாவாய்” என்று கேட்டார். ஆனால் கைகேயி அதை அலட்சியம் செய்தார்.

தசரதர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு விடியாதே என்றால் கதிர் காணாமல் போகுமா?

ஒன்றைப் பற்றி அந்த ஒன்றே சதமென, ஒன்றின் சுகமே வாழ்வென நின்று, அந்த ஒன்றுக்கு ஆபத்து எனத் தெரிந்ததும், சூரியனே நீ உதிக்காதே என்று, இயற்கைக்கு ஆணையிட்ட நளாயினியா? [அந்த ஒன்று – அவரது கணவர் ]

விடிந்தது, அதை அரண்மனை அந்தப்புரத்திற்கு தெரிவிக்கும் வண்ணம் தாதிகள் வாத்தியங்களை முழங்கினர். ஆனால் அந்த இனிமையான ஒலி கூட மன்னருக்கு அபஸ்வரமாக காதில் விழ,  அந்த சப்தத்தை நிறுத்துமாறு பணித்தார். சோர்வுடன் தன் நிலை மறந்து தரையில் சுருண்டு கிடக்கும் தசரதரைப் பார்த்து, “என்ன இது?, ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குகிறீர்கள்? வாக்களித்துவிட்டு மாட்டேன் என்பது சரியாகுமா? ஆறாம் பொருள், இன்பம், வீடுபேறு அனைத்துமே சத்தியத்தில் நிலைத்திருப்பதை நீர் அறியவில்லையா?  தர்மத்தின் வழி நின்று, வாக்களித்தபடி நடங்கள். ராமன் இன்றே காடு செல்ல வேண்டும். இதை நான் மூன்று முறை சொன்னதாக கருதி, உடனடியாக அதற்காக ஆவண செய்யுங்கள் இல்லையெனில், நான் இக்கணமே உயிரை விடுவேன்”, என்று நிர்தாட்சண்யமாக கைகேயி கூறினார்.

தசரதர் உடனே, “கைகேயி! உன்னை நான் இப்போது நம் திருமண பந்தத்தில் இருந்து விடுகிறேன், உன் மகன் பரதனையும் விட்டொழிக்கிறேன், இரவு முடிந்துவிட்டது, குலகுரு வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்காக சேகரித்து வைத்துள்ள புனித நீரினைக் கொண்டு எனது அந்திமக் காரியங்கள் நடக்கட்டும். இத்தனை தூரம் சொல்லியும், பிடிவாதத்தை விடாது, உன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் நீயோ, உன் மகனோ எனது இறுதிச் சடங்குகளில் பங்கேற்கக் கூடாது, என் நாட்டு மக்களை வாடிய முகத்துடன் காண எனக்கு துணிவு இல்லை”, என்றார்.

ஆனால் கைகேயியோ, “நீங்கள் உரைக்கும் பதில்கள் என் உடலைக் கூறு போடக் கூடியதாக இருக்கின்றது. பேசுவதை நிறுத்தி, ராமனை இங்கே வரவழைத்து உடனடியாக காட்டுக்கு அனுப்பி விடுங்கள். பரதனுக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டு, எனக்கு இணையானவர் நாட்டில் யாரும் இல்லை என்பதையறிவித்து விட்டு உங்கள் தர்மத்தை நிலைநாட்டுங்கள்”, என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

குதிரையை சவுக்கால் அடித்தால் எப்படி துடிக்குமோ அப்படித் துடித்த தசரதர், “என் வாக்கினால் நான் கட்டுண்டேன். இனி உயிர் வாழ்தல் என்பது எனக்கு கிடையாது, இந்நேரத்தில் நான் உத்தமமான ராமனை பார்க்க விரும்புகிறேன்” என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறினார்.

கைகேயியின் அரண்மனையில் இப்படி நடக்கையில், வசிஷ்டர் தனது சிஷ்யர்களுடன் ராஜவீதியில் நடந்தபடி, பட்டாபிஷேக ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு வந்த மந்திரி சுமந்திரரிடம், “குரு முதலானோர், அந்தணர்கள், நகரத்தார், வர்த்தகர்கள், கிராம மக்கள், அண்டை பிரதேச தலைவர்கள் அனைவரும் வந்தருளி ராமனின் புகழையும் , தசரதரின் பெருமைகளையும் அளவளாவிக் கொண்டு பட்டாபிஷேக நிகழ்சிக்காக காத்திருக்கின்றனர்.  இங்கே அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்று கூறி, மன்னரை துரிதமாக இங்கு வரச் சொல்லுங்கள்” என்றார்.

அவ்வாறே செய்ய சுமந்திரரும் கைகேயி அரண்மனைக்கு சென்று, தசரதரை காண வந்திருப்பதாக கூறி, அனுமதி கிடைத்ததும், மன்னரை புகழ்ந்து துதி பாடி, வசிஷ்டர் சொன்ன விஷயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட தசரதர், “உங்கள் புகழுரைகள் என் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தி வேதனை அளிக்கின்றன” என்று கூறவும், சுமந்திரர் சற்றே ஒதுங்கி நின்றார்.

தசரதர் அவர் இருக்கும் நிலையில் ஏதும் பேசப்போவதில்லை என்பதை அறிந்த கைகேயி,  “ராமனின் மீதுள்ள அன்பால் உறக்கமின்றி மன்னர் இவ்வாறு தன்னை மறந்த நிலையில் உள்ளார். நீர் உடனே சென்று ராமனை அழைத்து வாரும், துரிதமாக நடக்கட்டும்” என்று கைகேயி கூறினார். மன்னரது விருப்பத்தைத்தான் கைகேயி கூறுவதாக நினைத்த சுமந்திரரும் ராமரின் மாளிகைக்கு செல்ல ஆரம்பித்தார்.

********************

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம்

சர்வம் ஸ்ரீ க்ருஷ்னார்ப்பணமஸ்து.

Advertisement