Advertisement

ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர:

कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम्‌ ।

आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்யாகாண்டம்

4. கைகேயி கேட்ட வரம்.

தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டு, நாளைய நிகழ்ச்சி குறித்து தானே நேரில் தன் மனைவியிடம் கூறவேண்டும் என்ற பேராவலுடன் தனக்கு பிரியமான மனைவி கைகேயியின் அந்தப்புரத்திற்கு வந்தார். அவரது அறையில் கைகேயி இல்லை என்பதைப் பார்த்து, பணிப்பெண்ணிடம் அவரது இருப்பு எங்கேயென விசாரித்தார். அதற்கு அப்பணிப்பெண், “அரசியார் மிகுந்த கோபத்துடன் கோபக்கிரஹ அறையில் இருக்கிறார்” என்று கூறினார்.

துணுக்குற்ற தசரதர், அவ்வறைக்கு சென்று கைகேயின் நிலையைப் பார்த்ததும், வானுலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட  தேவதையைப் போல், பசுங்கொடி ஒன்று அறுந்து தரையில் கிடைப்பதுபோல, வலையில் சிக்கிய பக்ஷி போல தன் பிரியமான மனைவி கிடப்பதைப் பார்த்தார். அம்பினால் காயப்பட்டுக் கிடக்கும் தன் பிடியினைப் பார்க்கும் களிறினைப்போல, கைகேயியின் அருகில் அமர்ந்து, மெல்ல அவர் தலையைத் தடவிக் கொடுத்தவாறே மிகப் பரிவுடன் கேட்டார், “ப்ரியமானவளே! நீ கோபம் கொண்ட காரணம் என்ன? உன்னை யாரேனும் தூஷித்தார்களா? அவமானப் படுத்தும் வண்ணம் ஏதேனும் பேசினரா? என்னையறியாது ஏதேனும் தவறிழைத்து விட்டேனா? நான் உயிரோடிருக்க இப்படி நீ புத்தி சுவாதீனம் இல்லாதவள்போல தரையில் புழுதி படிய படுத்திருக்கலாமா?”

“தேவி, உன் உடல் நலத்தில் ஏதேனும் கோளாறா? உடனடியாக வைத்தியர்களை வரவழைத்து நொடியில் குணப்படுத்துவேன். உனக்கு விருப்பமில்லாத காரியத்தை எவனேனும் செய்யத் துணிந்தானா? அவனை உடனடியாக சிறையில் தள்ளுகிறேன். யாருக்காவது உபகாரம் செய்ய நினைக்கிறாயா? அவனை செல்வந்தனாக்குகிறேன், அல்லது அபகாரமாயினும் செய்ய சித்தமாக இருக்கிறேன். நானும் என்னைச் சேர்ந்தவரும் உனக்கு விருப்பமானதை அன்றி வேறு செய்வோமா?”

“என்னுயிரைக் கொடுத்தாவது உன் கோபத்தைத்  தணிக்கிறேன்.  சூர்ய கிரணங்கள் தழுவும் அனைத்துப்  பிரதேசங்களும் நமது ஆளுகைக்கு உட்பட்டது, அனைத்து தேசங்களில் இருந்து பொன், வெள்ளி, வைர வைடூர்யங்களை தருவிக்கிறேன்,  இன்னமும் தானம் தான்யம் அங்குள்ள அபூர்வப் பொருட்களை உனக்கு காணிக்கையாக்குகிறேன்”

“உன் விருப்பமென்னவோ அதைக் கேள், அதை விடுத்து இப்படி தரையில் படுத்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே. என்னிடம் உனக்கு பயமெதற்கு? சொல், என்ன வேண்டும்? ஆதித்யன், சிறு புல்லின் மீதிருக்கும் பனித்துளியை ஒரு நொடியில் கபளீகரம் செய்வதுபோல உனது துயரத்தையும், பயத்தையும் நீக்குகிறேன்” என்றார்.

அவரது இந்த உரையில் சிறிதளவு சமாதானமான கைகேயி, கேட்டதைக் கொடுக்கும் எண்ணத்தில் தசரதர் இருக்கும்போதே, அப்படிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தபின்னரே தனது எண்ணத்தை வெளியிட முடிவெடுத்தார். [அப்படித்தானே  மந்தரையின் போதனை?] எனவே தசரதரைப் பார்த்து, “எனக்கு உடல் நலத்தில் ஏதும் குறையில்லை, மேலும் நீங்கள் கூறிய யாதொரு பொருளும் எனக்கு வேண்டாம்,  என் எண்ணத்தை சாத்தியப்படுத்துவதற்கும் அசாத்தியமாக்குவதற்கும் உங்களால் இயலும், அதை ஈடேற்றுகிறேன் என்று உறுதியாக சொல்லுங்கள், பின் எனது எண்ணத்தினை கூறுகிறேன்” என்றார் கைகேயி.

கைகேயிக்கு மறுமொழியாக அவரது தலை முடியை மெல்ல வருடி தலையைத் தூக்கி தனது மடியில் வைத்து, “அழகில் ஈடு இணையற்றவளே, மனிதருள் ராமனையும், பெண்களுள் உன்னையும் விட முக்கியமானவர்களென்று எனக்கு எவரும் கிடையாது, தோல்வியை அறியாதவனும், சத்ருக்கள் இல்லாதவனும், குணங்களில் மேம்பட்டவனுமாகிய ராமனின் மேல் ஆணையிட்டு கூறுகிறேன், உன் எண்ணம் எதுவோ அதை நிறைவேற்றுவேன். யாரை ஒரு முஹூர்த்த காலம் காணாமல் இருந்தால் என் உயிர் தரிக்காதோ, அந்த ராமன் மீது அறுதியிட்டுக் கூறுகிறேன், உன் விருப்பம் நிறைவேறும். புத்ர, மித்ர, பந்துக்களை, ஐஸ்வர்யங்களை, ஏன் என் உயிரைவிட  மேலாக நான் நினைக்கும் ராமனின் மீது திண்ணமாக கூறுகிறேன், நீ நினைத்தது நடக்கும். நீ உனது மனக்கிலேசத்தை விட்டொழித்து, உன் அபிலாஷையை சொல், என்மீது உனக்கிருக்கும் அதிகாரத்தை அறிந்தும், நீ இப்படி தயங்கலாகாது. இதுவரை நான் செய்த புண்ணியத்தின் மீதுமாக உறுதியாக சொல்கிறேன், என்ன உன் விருப்பம் கேள்?” என்றார் மிகுந்த ப்ரேமையுடன்.

தசரதரின் வாக்குறுதியில் திருப்தியடைந்த கைகேயி, கேட்க கூடாததை,  கேட்டால் தசரதரின் உயிர் போகும் அபாயம் உண்டெனத் தெரிந்தும், தன் எண்ணத்தினை  வெளிப்படுத்தத் துவங்கினார். “அரசே! நீங்கள் எனக்கு தந்த வாக்குறுதிக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள், அவர்களது தலைவனான இந்திரன், சந்திர, சூரிய, ஆகாயம் முதலானவைகள் சாட்சி, கிரகங்கள், திசைகள், லோகங்கள், கந்தர்வ ராக்ஷசர்கள், தேவதைகள், பூதங்கள், மற்றும் பூமி நீவிர் கொடுத்த சத்தியத்திற்கு சாட்சியாகட்டும்”

“மன்னரே! முன்பொருமுறை தேவாசுர யுத்தம் நடைபெற்றபோது, ஒரு கட்டத்தில் நான் உங்கள் உயிரினை காப்பாற்றினேன், அது தங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்போது கண்ணைக் கூட இமைக்காமல் உங்களை நான் பாதுகாத்தேன். அதை மெச்சி நீவிர் எனக்கு இரண்டு வரங்களை தந்தீர், ஆனால் நானோ, தேவைப்படும் சமயத்தில் கேட்கிறேன் என்றேன். நீங்களும் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டீர்கள். அதை மீறினீர்களானால், உங்களால் அவமானப்படுத்தப்பட்டவளாக நான் இக்கணமே உயிர் துறப்பேன்” என்று கைகேயி கூறியதும்,

வேடனின் தந்திரத்தில் வலையில் வீழும் அப்பாவியான மான் போல், பதைத்துப் போனார் தசரதர். தொடர்ந்து கைகேயி, “எனக்கு தேவையான இரண்டு வரங்கள் இவையே, ராமருக்கு பட்டாபிஷேகத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட அதே நேரத்தில் என் மகன் பரதனுக்கு முடிசூட்டுவிழா நடக்க வேண்டும். மற்றொரு வரமாக, ராமன் பதினான்கு ஆண்டுகள் மரவுரி தரித்து, சடாமுடியுடன் கானகம் போக வேண்டும்”

“மன்னரே! சொன்ன சொல் தவறாதவர் என்று பெயரெடுத்துள்ளீர், அந்த நல்லொழுக்கத்தை கைவிட வேண்டாம். நீர் பிறந்த குலத்தின் பெருமையை காப்பாற்றுங்கள், பரதனின் பட்டாபிஷேகத்திற்கு இடையூறாக இருக்கும் ராமன் இன்றே காட்டிற்கு செல்வதை நான் எனது கண்களால் காணவேண்டும். வார்த்தையில் நிற்கும் மனிதர்களுக்கு மேலான பதவியைத் தரும் என்பது ரிஷிகளின் வாக்கு. அதை நினைவில் கொண்டு உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்” என்றார் கைகேயி.

[இப்போது பலராலும் உபன்யாசங்களிலும், புத்தகப் பிரதியிலும் கூறப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை இங்கே ஆராய வேண்டியுள்ளது. கைகேயியின் சார்பாக அவரது செயலை நியாயப்படுத்தும் விதமாக பேசப்படும் ஒரு விஷயம், தசரதருடனான அவரது திருமணத்தின் போதே, கைகேயியின் மகனுக்குத்தான் நாடாளும் உரிமை தரப்படும் என்று தசரதர் வாக்கு கொடுத்தார், என்ற ஒரு கருத்து.

அப்படியிருந்தால் தசரதரின் ராம பட்டாபிஷேக நிகழ்வு குறித்து கேட்கும்போது, அன்று சொன்ன சொல் என்னாயிற்று? என்றுதான் கைகேயி வாதிட வேண்டுமே தவிர, அதை இப்போது அவருக்கு நினைவுறுத்தி பரத பட்டாபிஷேகத்தை வலியுறுத்த வேண்டுமேயொழிய  அதை வரமாகக் கேட்டது ஏன்?

அடுத்ததாக.. தேவாசுர யுத்தம் நடந்தது, அதில் இரண்டு வரங்கள் மன்னர் தசரதர் தனக்குத் தந்தது என்று அனைத்து விஷயங்களையும் மந்தரையிடம் பகிர்ந்த கைகேயி, தனது திருமணத்தின் போது இப்படி ஒரு வாக்கினை ஒருவேளை தசரதர் தந்திருந்தால், அதை தெரிவிக்காமல் இருந்திருப்பாரா?

மற்றுமொன்று.. மந்தரை, கைகேயி பிறந்து வளர்ந்த கேகேய நாட்டில், அவரது  அரண்மனையில் தாதியாக இருந்து வந்தவர், தசரத கைகேயி திருமணத்தின் போது உடனிருந்து ஒத்தாசை செய்தவர், அப்படியிருக்க, இப்படி தசரதரால் கைகேயியின் திருமணத்தின் போது ஒரு உறுதிமொழி தரப்பட்டிருந்தால், அது மந்தரைக்குத் தெரியாமல் போக வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

அப்படி ஒருவேளை தசரதர் வாக்கு தந்திருந்தால், மந்தரை முதலில் அதைத்தான் நினைவு படுத்தியிருப்பாரே தவிர, தசரதர் உனக்கு தருவதாகக் கூறிய இரண்டு வரங்களைக் கேள் என்று சொல்லியிருக்க மாட்டார்.

இன்னமும் இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக தொடர்ந்து வரும் நிகழ்வுகளில், பரதனின் உரையாடல்களில் வரும், அதை அப்போது காண்போம்]

கைகேயியின் கர்ண கொடூரமான வார்த்தைகளைக் கேட்டு தசரதர் மனம் கலங்கி மூர்ச்சையாகி விழுந்தார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த தசரதர், ‘ஒருவேளை நான் ஏதும் கேட்ட கனவு கண்டேனோ?’ அல்லது ‘சித்தம்தான் கலங்கிவிட்டதோ?’ அஃதன்றி, ‘எனது முன்பிறவியேதும் நினைவில் வந்ததோ?’ இல்லை, ‘ஏதேனும் கொடிய நோய் என்னைப் பீடித்துள்ளதோ? அதனால்தான் இவ்வாறெல்லாம் மனப்பிரமை தோன்றுகிறதோ?’ என்று யோசித்தவர், அருகிலிருந்த கைகேயியைக் கண்டதும் புலியைப் பார்த்து நடுங்கும் மான் போல விதிர்விதிர்த்து, மீண்டும் மயங்கினார்.

பின் தெளிந்து எழுந்த தசரதர், “அடி பாதகி! குணங்கெட்டவளே! குலத்தை கெடுக்க வந்தவளே! ராமனோ, நானோ உனக்கு ஏதேனும் தீங்கிழைத்திருக்கிறோமா? பெற்ற தாயினும் மேலாக அல்லவா அவன் உன்மீது அன்பு வைத்திருக்கிறான்? அப்படிப்பட்ட அவனுக்கு நீ செய்யும் பிரதிபலனா இது? நீ கொடிய விஷம் கக்கும் நல்ல பாம்பு என்று தெரியாமல் உன்னை நடுவீட்டில் கொண்டு வந்து வைத்தேனே?”

“நாட்டு மக்கள் அனைவரும் ராமனின் புகழைப் போற்றி பாடுகின்றனர், அவ்வாறிருக்க என்னவென்று சொல்லி என் மனதிற்குகந்த அவனைப் புறக்கணிப்பேன்? கைகேயி! நீ கௌசல்யை, சுமித்திரை, என் நாடு, சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களை கேள், அவ்வளவு ஏன்? என் உயிரைக்கூட  கேள் உடனடியாக தருகிறேன். ஆனால் ராமனை கைவிட மாட்டேன். ஆதவனின்றி அகிலம் இயங்கலாம், நீரின்றி பயிர் வாழலாம், ஆனால் ராமனைப் பார்க்காமல் என்னால் உயிர் வாழ இயலாது, தினமும் அவனைப் பார்க்கும் கணம் என் மனம் புத்துயிர் பெறுகிறது, அவனைக் காணாத நேரத்தில் என் மனம் தடுமாறுகிறது. தீங்கிழைக்கத் துணிந்தவளே! இந்த எண்ணத்தைக் கைவிடு, இப்படி வஞ்சகமான எண்ணம் உனக்கு எப்படித் தோன்றியது?”

“நீயே பலமுறை,”ராமன் தர்மத்தின் மறு உருவம், அவனே எனது மூத்த மகன்”, என்று கூறியிருக்கிறாய். யார் சொல்லித்தந்த போதனையின் பேரில் இப்படி என்னை வதைக்கும் வார்த்தைகளைக் கூறினாய்? இது பரதனிடத்தில் எனக்கிருக்கும் அன்பு மெய்யோ பொய்யோ என்று அறிய நீ நடத்தும் சோதனையா?”

“இதுகாறும் நீ என்னிடம் கடுஞ்சொல் பேசியதில்லை, விரும்பத்தகாததை கூறி என்னை சஞ்சலப்படுத்தியதில்லை. ஒருபோதும் எனக்கு தீமையை நினைத்தவளுமில்லை. அப்படியிருந்த நீயா இப்படி பேசுவது? என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை”

“தர்மநெறி தவறாதவனை, மூவுலகும் போற்றும் குண நலன்கள் கொண்ட ராமனை நீண்ட நெடிய பதினான்கு ஆண்டுகள் கானகம் போக வேண்டும் என்பதை நீ எப்படி விரும்பினாய்? துன்பமென்பதையே அறியாத சிறுவனாகிய அவனை எவ்வாறு மனித நடமாற்றமற்ற கடும் மிருகங்கள் வசிக்கும் காட்டிற்கு அனுப்பவேண்டுமென துணிந்தாய்?”

“அவனைப் பற்றி இதுவரை ஏதேனும் ஒரு அபவாதம் வந்ததுண்டா? மக்கள் மனங்கவர்த்தவனல்லவா அவன்? தனது கோதண்டத்தினால் எதிரியை அழித்து முனிவர்களின் யாகத்தைக் காத்தான். கொடையாளியாதலால் ஏழைகள் மனதில் நின்றான். நல்ல பண்புகள் நிரம்பப் பெற்ற அவனுக்கு தீங்கிழைக்க எப்படி முடிவு செய்தாய்?”

“கைகேயி! வாழ்வின் இறுதிக் கட்டமாகிய முதுமைப் பிராயத்தில் இருக்கின்றேன், என் மனம்  மிகவும் வேதனையடைகிறது, உலகின் எல்லா நிகரற்ற செல்வங்களையும் கேள், தருவிக்கிறேன், உன் கால்களில் கூட விழுகிறேன், ராமனிடத்து தயை செய்” என்று புலம்பினார்.

அதற்கு கைகேயி, “வேந்தே, வரங்களை அளித்துவிட்டு, அதை நிறைவேற்றும்படி கூறினால்  தயங்கும் நீர் எப்படி தர்ம நெறி தவறாத மன்னராக முடியும்? அரசவையில் ரிஷிகளும், முனிபுங்கவர்களும் பெரியவர்களும் நிறைந்திருக்கும் பொழுது, இது குறித்துப் பேசினால் என்னவென்று மறுமொழி கூறுவீர்? “தனது சமயோஜித புத்தியால் என் உயிரைக் காத்த கைகேயி-க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை” என்பீரோ?”

“பருந்தாக வந்த இந்திரனுக்கு கொடுத்த வாக்கிற்காக, சிபி சக்ரவர்த்தி, தனது உடலில் இருந்து சதையை வெட்டி தந்தார், தேவர்களிடம் ‘கரை தாண்டுவதில்லை’, என்று தான் கொடுத்த உறுதியை காக்கும் பொருட்டு, இதுவரை சமுத்திரம் கரையை தாண்டாது இருக்கின்றது, அலர்கன் என்று ஒரு மன்னர், கொடுத்த வார்த்தைக்காக தனது இரண்டு கண்களையும் பிடுங்கி கொடுத்தார், இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு வந்து நீர் உமது வாக்கினைக் காப்பாற்றும்”

“அல்லது வாக்கு தவறி, ராமனுக்கு முடிசூட்டி, கௌசல்யாவுடன் சுகமாகயிருக்கலாம் என்று நினைத்தீர்களோ? வாக்கு கொடுத்தபின் அச்செயலின் நன்மை தீமை குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பது, பிரமாணம் செய்தவர்களுக்கு அழகல்ல. ராமனது தாய் கௌசல்யா அனைவரின் மரியாதைக்கும் பாத்திரமாவதை என்னால் கண் கொண்டு பார்க்க இயலாது. நாளை ராம பட்டாபிஷேகம் நடந்தால் அக்கணமே நான் விஷமருந்தி உயிர் துறப்பேன். இது என் மகன் பரதனின் மீது ஆணை, உம் மனைவியாகிய என் மீது ஆணை, ராமன் கானகம் சென்றேயாகவேண்டும், வேறு எதிலும் எனக்கு திருப்தி கிட்டாது”, என்று திண்ணமாக சொன்னார்.

Advertisement