Advertisement

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

ஸ்ரீ குருப்யோ நமஹ:

koojantham rama ramethi, madhuram madhuraksharam aruhya kavitashakham, vandhe valmiki kokilam

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்

3. கைகேயி மந்தரை சம்பாஷணை

அயோத்தி மக்கள் ராமரின் பட்டாபிஷேகம் குறித்து கேள்வியுற்றதிலிருந்து, வீதி வீடுகளையும், மாட மாளிகைகளையும் ஸ்தம்பங்களையும் கமுகு, வாழை, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து மஞ்சள் குங்குமம் சந்தனம் மெழுகி அயோத்தியை சுகந்த மனம் வீசும் இந்திர லோகம் போல மாற்றியிருந்தனர்.  சுற்றியிருந்த கிராமத்து மக்களும் அயோத்தி நகரம் வந்தடைந்ததால் வீதியெங்கும் சளசளவென்ற பேச்சும் ஜெய கோஷமும் இடையறாது கேட்டுக் கொண்டிருந்தது.

ராஜ வீதியில் வாத்தியங்களின் முழக்கம், பாணர்களின் இசை, மக்களின் உற்சாகம் முதலான சந்தடிகளை கைகேயி மாளிகையின் மாடியில் இருந்து மந்தரை எனும் தாதி கண்ணுற்றார்.

[இந்த மந்தரை எனும் கூனி பற்றிய, அவரது பிறப்பு வளர்ப்பு குறித்து வால்மீகி ராமாயண காவியத்தில் ஏதும் காணப்படவில்லை. ஆனால், கைகேயி திருமணம் முடிந்து வரும்போது அவரின் உதவிக்கு என, கைகேயினுடைய தந்தையால் இந்த தாதி உடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்று தெரிகிறது. இவரது சுபாவமே கொடுஞ்சொல் பேசுவது, தீதை நினைப்பது, பொறாமை கொள்வது.. என்பது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது. (இதை பதிவுகளில் காண்போம்) தவிரவும், இவர் கைகேயிக்கு நெருக்கமானவராக இருக்கிறார், அதாவது கைகேயியை இடித்து கூறி, அறிவுரை கூறும் அளவுக்கு.

ஆனால், இதே மந்தரை மஹாபாரதத்தில் கந்தர்வ கன்னியாக உருவகிக்கப்படுகிறார். முற்பிறவியில் ராவணாசுரனால் வதை பட்ட பெண்ணாக, அடுத்த ஜென்மத்தில் அவர் சம்ஹாரத்திற்கு பிரதான உத்வேகமாக உருவெடுப்பாய் என்று ப்ரம்மனிடம் வரம் பெற்றவராக கூறப்படுகிறார்.

துளசிதாஸ ராமாயணத்தில், ராவண சம்ஹாரம் என்பது ராமரின் அவதார நோக்கம். அது நிறைவேற அவர் சீதையோடு கானகம் செல்லவேண்டும். இந்த காரணத்திற்காக தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சரஸ்வதி தேவி மந்தரையின் சிந்தையுள் சென்று அவர் மனத்தைக் கலைத்து, கைகேயிக்கு துர்போதனை கூறினாள் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து கம்பநாட்டாழ்வார் மந்தரை பற்றி கூறுவது, ராமர் அவரது வில்லால் சிறுபிராயத்தில் மண் உருண்டைகளாலான அம்பினால் மந்தரையை துன்புறுத்தினார், அதனால் ராமர் மீது மந்தரைக்கு கோபம் உண்டு என்கிறார். ஆனால், மந்தரை கொடுங்குணம் கொண்டவர் என்று அழுத்தமாகவே கூறியிருக்கிறார்.]

மந்தரை, வெண் பட்டாடை கட்டி மலர்ந்த கண்களுடன் சென்ற ஒரு தாதியை அழைத்து, “கௌசல்யாவின் மாளிகை முன் அதிக கூட்டம் இருக்கிறதே? கைப்பொருள் கைவிட்டு செல்வதை விரும்பாத, எளிதில் செல்வத்தை தானமாக தர மனமற்ற கௌசல்யா, எதற்காக எல்லோருக்கும் தனம், பொருள் இவற்றை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறாள்?, இந்த ஜனங்கள் ஏன் இவ்வளவு உற்சாகத்துடன் இருக்கிறார்கள்? இவர்கள் இப்படி சந்தோஷப்படும் படி அரசர்  என்ன செய்தார்? உனக்குத் தெரிந்தால் சொல்”, என்று வினவினார்.

அதற்கு அந்த தாதி மிகவும் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் பூத்து, “நல்ல விஷயம் நடக்கப் போகிறது, நாளை புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், ராமரை யுவராஜாவாக தசரத மன்னர் முடி சூட்டப் போகிறார். மாசில்லாத ராமரை இனி நாம் யுவராஜாவாக காணப் போகிறோம்”, என்று முகமும் அகமும் மலர பதிலுரைத்தார்.

அந்த தாதியின் வார்த்தையைக் கேட்டு மந்தரையின் மனதில் சொல்லொணா கோபமும் வேகமும் ஏற்பட்டது.  கையிலாயமலை போன்றிருந்த கைகேயி-யின் மாளிகையிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தார். எதிலும் தீமையைக் காணும் மந்தரை கைகேயி உறங்கி கொண்டிருந்த அறையின் உள்ளே சென்று, தூங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி, “அட முட்டாளே, உன்னை நோக்கி மிக பயங்கரமான ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அதையறியாமல் ஏன் இப்படி உறங்குகிறாய்?, ஏதுமறியாதவளே, உள்ளொன்று வைத்து புறமொன்று காண்பிக்கும் உனது கணவனை நம்பிக் கொண்டிருக்கிறாயே? கோடையில் நதிகள் வற்றிப்போவதுபோல உனது சுகங்கள் அனைத்தும் அழியப்போகிறது, தனது இரண்டு மனைவிகளைவிட அதிக அன்பினை உன்னிடம் தசரதர் வைத்திருப்பதாய் பெருமையடிப்பாயே, எல்லாம் போயிற்று, இப்போதாவது விழித்துக் கொள்”, என்று கூறவும்,

பதறி விழித்த கைகேயி, மந்தரையைப் பார்த்து, “ஏதாவது அசுபமாக நடந்து விட்டதா? உன் முகம் துக்கத்தினால் மிகவும் வாடியிருக்கிறது. என்ன விஷயம்? எல்லாரும் நலம்தானே?” என்று வருத்தமான பாவனையில் கேட்க..

தன் முகத்தை இன்னமும் சுருக்கி, “கைகேயி, நீ மகிழ்வோடு இருப்பதையே நான் என்றென்றும் விரும்புகிறேன் என்பதை நீ அறிவாய், உன் துன்பம் என் துன்பம், உனக்கு கெட்ட  நேரம் என்றால் அது எனக்கும்தான். இதோ இப்போது அந்த நேரம் ஆரம்பித்து விட்டது போலும். தசரதர் ராமனுக்கு இளவரசு பட்டம் கட்டப் போகிறார். இந்த காரணத்தால், உன் நன்மையைத்  தவிர வேறெதுவும் விரும்பாத  என்னை துக்கமும் சோகமும் அலைக் கழிக்கின்றன. பயமெனும் குளத்தில் மூழ்கியவளாக, நெருப்பினால் சுடப்பட்டவளாக நான்  உன்னைத் தேடி வந்தேன்”

“நீ சிறப்பாய் இருந்தால்தான் நான் மகிழ்சியுடன் இருக்கமுடியும் என்பதை எள்ளளவும் சந்தேகமின்றி நீ அறிவாய். அரச குலத்தில் பிறந்தவள் நீ, சக்ரவர்த்தியான தசரதரின் மனைவியாக இருந்த போதினும் ராஜதந்திரங்களை இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். உனது கணவன் வாயால் பெருந்தன்மையாக பேசுகிறான், உள்ளுக்குள் பயங்கரமானவனாக இருக்கிறான்.”

“பரதனை நாட்டை விட்டு அனுப்பிவிட்டு, அவன் இல்லாதபோது தந்திரமாக ராமனுக்கு எவ்விதமான இடையூறுமின்றி முடி சூட்டி வைக்கப் பார்க்கிறான். பாலைப்போல் வெண்மையான மனம் கொண்டவள் நீ, அதனால்தான் உன் கணவனின் கெட்ட எண்ணத்தை தெரிந்து கொள்ளவில்லை. கவனி, கௌசல்யைக்கு புகழும் பெரும் செல்வமும் சேரப்போகிறது, நீ உனது சொந்தங்களுடன் அழியப்போகிறாய். இப்போதாவது விழித்துக் கொள்.  சந்தர்ப்பத்தை நழுவ விடாதே, தசரதர் வந்து எந்த சமாதானம் கூறினாலும் அதை ஏற்காதே, எது உனக்கு நன்மையை பயக்குமென தெளிவோடிரு. உன்னை அண்டியிருக்கும் என்னையும் உன் மகனையும்  காப்பாற்று”, என்றார் மந்தரை.

மந்தரையின் வார்த்தைகளைக் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து வந்த கைகேயி-ின் முகம் அன்றலர்ந்த தாமரையாக மலர, மனதின் பேருவகை முகத்தில் பிரதிபலிக்க, கழுத்திலிருந்த ஒரு ஆபரணத்தை கழட்டி கூனிக்குப் பரிசாகக்  கொடுத்து, “நல்ல செய்தி கூறினாய் மந்தரை, எனக்கு மிகவும் மகிழ்ச்சியினைத் தரக்கூடிய விஷயத்தை சொல்லியிருக்கிறாய், இதைக் கூறிய உனக்கு  இன்னும் வேறு என்ன பரிசு வேண்டும் கேள், தப்பாமல் தருகிறேன். ராமனோ, பரதனோ, இருவரையும் நான் பாகுபடுத்தி வித்தியாசம் கண்டதில்லை. அதனால் அரசன் ராமனுக்கு முடி சூட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் தகவலாகும், இதை விட என் மனத்துக்குகந்த செய்தி ஏதும் இருக்க முடியுமா? இந்த நல்ல செய்தியை சொன்ன உனக்கு எதுவேண்டுமானாலும் தருகிறேன் கேள்”, என்றார்.

கைகேயியின் வார்த்தைகள் மந்தரையின் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. ஆற்றாமையும் துக்கமும் பொங்க,  கைகேயி கொடுத்த நகையை வீசி எறிந்து விட்டு, ” அறிவிலியே, எப்போது எதற்காக மகிழ்வுறவேண்டும் என்பது கூட அறியா பெண்ணே, நீ பெரும் துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது கூட தெரியாது அதையே சந்தோஷம் என்கிறாயே?,  உன்னைப் பார்த்தால்,  உன் அறியாமையை நினைத்தால் வேதனை ஏற்பட்டாலும் சிரிக்கத் தான் தோன்றுகிறது. சக்களத்தி ஈன்றெடுத்த மகன் காலனுக்கு நிகரானவன் அல்லவா? அவன் பதவிக்கு வருகிறான் என்றால் உன் பகைவன் பலம் பெறுகிறான் என்றல்லவா அர்த்தம்? இதை அறியாது மகிழும் உன்னைக் கண்டு வருந்தாமல் வேறு என்ன செய்வது?”

“இப்படிப் பட்ட உனக்கு பிறந்தானே ஒருவன், அவனை நினைத்துத்தான் எனக்கு துக்கமாக இருக்கிறது. உன் மகன் பரதன் தன் பதவிக்கு போட்டிக்கு வந்துவிடுவானோ என்பதுதான் ராமனின் பயம். கவனி பெண்ணே, எவனுக்கு பயம் உள்ளதோ அவன் அந்த பயத்துக்கு காரணமானவனை அழிக்க நினைப்பான். அதற்குத்தான் நான் கவலைப் படுகிறேன். லக்ஷ்மணன் நல்லவன். ராமனே சகலமும் என்று இருப்பவன். அதே போல சத்ருக்னன் பரதனைச் சார்ந்து இருக்கிறான். இவர்கள் இருவரும் பரதனுக்கு இளையவர்கள்.  ராமனுக்கு அடுத்துப் பிறந்தவன் பரதனே. அதனால் ராஜ்யத்திற்கு உரிமை கொண்டாட, ராமனுக்கு போட்டியாக வரக் கூடியவன் பரதன் ஒருவனே, அந்த ஒரு காரணத்திற்காகவே ராமனுக்கு பரதனிடத்தில் பயம்”.

“ராமனோ ராஜரீக தர்மத்தை முற்றிலும் அறிந்தவன், மிகச்சிறந்த கல்வி, தனுர் வித்தைகள் கற்றவன், எங்கே எதிரி உண்டாவான் என்பதை அறிந்து அதை வேரிலிருந்து கிள்ளி எறியும் வேலையை தப்பாமல் முடிப்பவன். அதனால் உன் மகன் பரதன் ராமனிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  கௌசல்யையின் மகனான ராமன் இளவரசனாக முடி சூட்டிக் கொண்டால், மற்ற இரு மனைவியரை விட அவள் அந்தஸ்து பெருகும். மன்னனின், நாட்டு மக்களின் மதிப்பினைப் பெற்று அதிர்ஷ்டசாலியாக இருக்கும் அவளுக்கு நீ வேலைக்காரியாக குற்றவேல் செய்யப்போகிறாய்.  தாயான நீயே கௌசல்யைக்கு பணிவிடை செய்யும்போது, உன் மகன் பரதன் ராமனுக்கு அடிமைப்படுவதைத்தவிர வேறு வழியில்லை. பரதனையும் உன்னையும் சார்ந்த பெண்கள் பெரும் மனவேதனை அடையப்போகிறார்கள்”, என்றார் மந்தரை.

ராம பட்டாபிஷேகம் நடந்தால் பரதனுக்கு ஆபத்து என்று மந்தரை சொல்லிய பின்னும் அவரைப் பார்த்து கைகேயி  ராமனுடைய உயர்வான குணங்களை வரிசைப்படுத்த துவங்கினார். “ராமன் தர்ம நெறி தவறாதவன், உன்னதமான குருவிடத்து கல்வி பயின்றவன், அவன் நான்கு புத்திரர்களில் முதல்வன், ஜனங்களுக்கு பிரியமானவன்.  அதனால் அவன் இளவரசனாக பதவியேற்க தகுந்தவனே. நிச்சயமாக அவன் தனது உடன்பிறந்தோர்களையும், மற்றவர்களையும் தந்தையைப்போல் நின்று காப்பான். மந்தரையே, இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று கேட்டு ஏன் வருந்துகிறாய்? பரதன் என் மகனே, ஆயினும் ராமன் அவனைக் காட்டிலும் மேம்பட்டவன், அவன் கௌசல்யா தேவிக்கு செய்த பணிவிடைகளைவிட எனக்கு அதிகமாக பணிவிடை செய்திருக்கிறான். உடன்பிறப்புக்களிடம் உயிரையே வைத்திருக்கிறான். ராமனுக்குப் பின் பரதன் இளவரசாவான். தவிரவும், ராமன் பதவி பெற்றான் என்றால் அது பரதன் பெற்றது போல. எனக்கு இருவரிடத்தும் பேதமில்லை”, என்றார் கைகேயி.

உலகத்தில் இருப்பதிலேயே மிக மிக வலிமையான ஆயுதம், மிகச் சாதுர்யமாக பேசக்கூடிய நாவன்மை.  அதிலும் மனதில் வஞ்சக எண்ணம் கொண்டிருந்த மந்தரை பேசினால்?, பார்ப்போம். “நீ உன் அறிவை எங்கேனும் தொலைத்து விட்டாயா? உனக்கு நிகழப்போகும் பேராபத்தைத் தெரிந்து கொள்ளாத உன் அறியாமையை நான் என்ன சொல்வது? சற்றே யோசித்துப் பார்,  ராமன் அரசனானால், அவனுக்குப் பின் அவன் மகன்தானே அரசனாவான்? அவனுக்கு பின் அவன் மகன் என்றுதானே வரும்? அப்போது பரதனும் அவனது வம்சமும் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்கள்தானே? ராஜ பதவி என்பது கூட்டுப் பொறுப்பல்ல, அதனால்தான் ஒரு அரசனின் மகன்களின் எவனொருவன் உத்தமமான குணங்களைக் கொண்டு சிறந்து விளங்குகிறானோ அவனை அடுத்த அரசனாக மன்னன் அறிவிக்கும் வண்ணம் இளவரசு பட்டம் தருவார். ஆனால், பரதனுக்கு தன் சிறப்புகளைக் கூற அவனது தாயான நீயே முன்வரவில்லையெனும் போது இனி அவனுக்கு அரச பதவி என்பது ஏது? நான் உனது நலனை எண்ணி  அறிவுரை சொல்ல வந்தேன். ஆனால்  நீயோ என்னை புரிந்து கொள்ளாமல் கௌசல்யை அடையப்போகும் கீர்த்திக்கு எனக்கு பரிசுகளைத் தருகிறாய்”

“பார் கைகேயி, எவ்வித அட்டியுமின்றி ராமன் ராஜ்யத்தை பெற்றபின், போட்டி தொல்லையில்லாமல் இருக்க பரதனை வேறு தேசம் அனுப்பி விடுவான். அதோடு நிறுத்துகிறானோ அன்றி   உலகத்தை விட்டே துரத்துகிறானோ? யாரறிவார்? ஒரு பாவமும் அறியாத பரதனை மாமன் வீட்டுக்கு நீயே அனுப்பி வைத்திருக்கிறாய்.  உனக்கு தெரியாததா? கண்ணில் இல்லாதது கருத்தில் நில்லாது, எப்பொருளும் அது அசைகின்றதாகட்டும் அல்லது செடி கொடி போன்ற அசையா தாவரமாகட்டும் அது கண்ணெதிரே இருந்தால் தான் அதன் மீது பாசமும் பிடிப்பும் ஏற்படும்”

“மாமன் வீட்டுக்கு பரதனை மட்டுமல்லாமல் சத்ருக்னனையும் அனுப்பி வைத்திருக்கிறாய். லக்ஷ்மணன் ராமனுக்கு கூடவே இருப்பது போல பரதனுக்கு சத்ருக்னன். இப்போதோ பரதனைப் குறித்தும்,  அவனது உயர்வுகளை பற்றியும் சொல்ல சத்ருக்னன் கூட இல்லாமல் செய்தாயிற்று. ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அஸ்வினி குமாரர்கள் போல ஒற்றுமையானவர்கள். அதனால் லட்சுமணனுக்கு ராமனால் எவ்வித தீங்கும் நேராது. ஆனால் பரதனிடத்தில் ராமன் அப்படி இருப்பானா என்பது சந்தேகமே, இயன்றவரை பரதனை அடக்கி ஆளத்தான் முனைவான். அதனால் ஒன்று சொல்கிறேன் கேள், மாமன் வீட்டிலிருந்து நேராக உன் மகனை வனத்திற்கு சென்று விடச் சொல். அவனுக்கு அதுதான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. நீயும் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்வாய் என்று நினைக்கிறேன்”.

“தர்ம நெறிகளுக்கு பழுதின்றி ஆட்சி செய்யத்தக்கவன் பரதன், அவனது தந்தையைப்போல அரசாள அனைத்து தகுதிகளையும் உடையவன் அவன், அப்படியிருக்க ராமன் அவனை எதிரியாக பார்ப்பானேயன்றி எப்படி பரதனை தம்பியென்று தன்னுடன் சேர்ப்பான்?, யானையை சிங்கம் தாக்கி அழிக்க நினைக்கிறது, அதைத் தடுத்து, பரதனைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறது”

“இன்னொன்றை யோசித்தாயா? மூன்று மனைவிகளில் நீயே தசரதனுக்கு ப்ரியமானவள் என்பதால் நீ பலமுறை கௌசல்யையை அவமானப்படுத்தி இருக்கிறாய், அவள் ராஜமாதாவான பின் அந்த கோபம் திருப்பி வந்து உன்னைத் தாக்காது என்பது என்ன நிச்சயம்? ஆகவே, இந்த பட்டாபிஷேகம் நடந்தால், துன்பப்படப்போவது பரதன் மட்டுமல்ல, நீயும்தான் என்பது தெளிபு. இதைத் தவிர்க்க ஒரு உபாயம்தான் உள்ளது, கைகேயி, பரதன் நாடாள்வதும், மற்றவன் காடாள்வதும் உனக்கு நல்லது. அதற்கான யுக்தியை நீ கையாள்வாய்”, என்று நஞ்சை கைகேயியின் மனதில் அடிஆழம் வரை விதைத்தார்.

(இதுவரை மந்தரை பேசியது அவரது மனதில் தசரதரைப் பற்றி, கௌசல்யை மற்றும் ராமரைக் குறித்து அவரது மனதில் இருந்த கருத்துக்கள். கைகேயி ராஜமாதாவாக இல்லாமல் போனால், அவளது சேடிப் பெண்ணாகிய மந்தரை மற்றவர்க்கும் அடிபணிந்து நடக்கவேண்டுமே என்ற அவரது எண்ணம் காரணமாக வெளிப்பட்ட கருத்து, அதை ஏற்பதும் ஏற்காததும் நிச்சயமாக கைகேயியின் மனதை பொறுத்தே, அதாவது கெடுதல்கள் தூவப்பட்டும் அது நம் மனதை பாதிக்காத வண்ணம் இருந்தால் நாம் ஸ்திதப்ரஞன். உறுதியான மனம் கொண்டவன், அல்லாமல் சூழ்நிலைக்கேற்ப மாறினால் விளைவுகள் தாங்க முடியாத விபரீதமாகும். இனி மந்தரை தூவிய விஷ விதைக்கு விளைவினை காண்போம். இப்போது பேசுவது கைகேயியின் முறை… ]

மந்தரை இவ்வாறு  கூறியதும், அதிலும் முக்கியமாக கௌசல்யைக்கு கைகேயி பணிபுரிய அல்லது அடங்கி நடக்க வேண்டியிருக்கும் என்றும், அவரது மகனான பரதனின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்று கூறியதும், கைகேயி தன் நிலை மாறினார். கோபத்தில் முகம் செஞ்சாந்து நிறம் கொள்ள, “ராமனை இன்றைய தினமே, உடனே காட்டுக்கு போகும்படி செய்வேன். அதிவிரைவில் பரதனை இளவரசனாக முடி சூட்ட வைப்பேன். மந்தரை, என்ன ஆனாலும் சரி ராமன் இங்கிருந்து செல்லவேண்டும். யோசி, என்ன யுக்தி செய்து இதை செயல் படுத்துவது?,” என்று உள்ளக்கொதிப்புடன் ஆலோசனை கேட்டார்.

எங்கும் எதிலும் தீயனவற்றையே காணும் குணமுடைய மந்தரை கைகேயியின் பேச்சில் மனம் மகிழ்ந்து, “கைகேயி, இப்போதுதான் நீ நல்லபடியாக யோசனை செய்திருக்கிறாய். நீ எனக்கு முன்பொருநாள் கூறிய சங்கதிதான் இது. உனக்கு நினைவில் இல்லையா அல்லது நினைவில் இல்லாததுபோல் நடிக்கிறாயா? அல்லது நான் என்ன யோசித்து வைத்திருக்கிறேன் என்பதை என் மூலம் அறிந்துகொள்ள நினைக்கிறாயா?”, என்று கேட்டதும்,

பொறுமையிழந்த கைகேயி, தனது மஞ்சத்தில் இருந்து எழுத்தமர்ந்து, “ராமன் இளவரசனாகாமல் இருக்கவும், என் மகன் பட்டம் சூடிக்கொள்ளவும் தகுந்த யோசனையை உடனடியாக சொல்”, என்று உத்தரவிட்டார்.

ராமருக்கு தீங்கிழைக்கும் எண்ணத்துடன் இருந்த மந்தரை, “இது நீ எனக்கு தெரிவித்ததுதான், உன்மீது கொண்ட பிரியம் காரணமாக இன்றளவும் நான் இதை நினைவில் வைத்திருக்கிறேன், முன்பு ஒருமுறை தேவாஸுர யுத்தம் நடந்தபோது, இந்திரன் தசரதரிடம் உதவி கேட்டு நிற்க, ராஜரிஷிகளுடன் உன்னையும் அழைத்துக் கொண்டு போர்முனைக்கு  இந்திரனுக்கு உதவி புரிய சென்றார், நினைவில் உள்ளதா?, அப்போது நீ லாவகமாக தேரோட்டி அவரது உயிரை காத்தாய்.  அப்படி தசரதரின் உயிரை காப்பாற்றிய காரணத்தால் மனம் மகிழ்ந்து உனக்கு இரண்டு வரங்கள் தந்தார். நீயோ, அவற்றை பிறகு பயன்படுத்துவதாக கூறினாய்”

“இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது, பரதன் நாடாளவும், ராமனை  பதினான்கு வருடங்கள் காட்டுக்கு அனுப்பவும் அந்த இரண்டு வரங்களையும் பயன்படுத்து. ராமன் இல்லாத அந்த பதினான்கு வருடங்களில் மக்கள் ஆதரவு முழுவதும் பரதனுக்கு கிடைத்துவிடும், அவன் (பரதன்) ஆட்சியில் இருந்து அகற்ற முடியாதவனாகி விடுவான். அஸ்வபதி பெற்ற திருமகளே, உடனடியாக உனது ஆபரணங்களைக் கழட்டு, அழுக்கான உடைகளை அணிந்து தரையில் படுத்துக் கொள், அழுது புலம்பு, உன்னைக் காண அரசன் வருவார், அப்படி வந்தால் அவரை ஏறிட்டும் பார்க்காமல் மிகுந்த துக்கத்துடன் பலமாக அழு, அவராக வார்த்தைகளை விடும் முன்பாக நீ பேசாதே. நீ உன் கணவனுக்கு மிகப் பிரியமானவள். உனக்காக உன் வருத்தம் தீர்ப்பதற்காக அவர் நெருப்பிலும் குதிப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை”.

“நீ கோபத்துடன் இருந்தால் அவர் பொறுக்க மாட்டார், உன் வார்த்தையை மீறி எதுவும் செய்யவும் துணிய மாட்டார் என்பது நிச்சயம். அட மந்த புத்தியுடையவளே, உன் அழகின் மகிமையை நன்றாக புரிந்துகொள். அவர் விலையுயர்ந்த ஆபரணங்கள்  தருவதாக சொன்னாலும் அவற்றில் ஆசை வைக்காதே, இப்போது உனக்குத் தரவேண்டிய வரங்களை நினைவுறுத்து, அப்போது தரையில் படுத்திருக்கும் உன்னைத் தூக்கி நிறுத்தி என்ன வேண்டும் கேள் என்பார், கேட்பதை நிச்சயமாக தருவதாக அவரிடம் வாக்குறுதி வாங்கிக்கொள். அதன் பின் கேள் உனது வரங்களை, ‘ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு செல்லவேண்டும், பரதன் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்’, என்று”

“இதை நீ செய்துவிட்டால், பரதன் அவன் இந்நாட்டை ஆளும் காலத்தில் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று விடுவான், அவனது ஆட்சியும் ஸ்திரமாகிவிடும், ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யும்போது, இங்கு பரதன் எதிரி என்று எவரும் இல்லாமல் புகழடைவான்.  எனவே எந்த குழப்பமுமின்றி ராமனது பட்டாபிஷேகத்தை உடனே நிறுத்த என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்”, என்று மந்தரை உரைத்தார்.

சற்றுநேரம் முன்பு, ராமனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் என்றதைக் கேள்விப்பட்டவுடன் மனம் மகிழ்ந்து அவ்விஷயம் சொன்ன மந்தரைக்கு பரிசு கொடுத்த கைகேயி,  பரதனுக்கும் ராமனுக்கும் எனக்கு பாரபட்சமில்லை என்று சொன்ன கைகேயி, இப்போது மனம் மாறி ராமனை காட்டுக்கு அனுப்ப சித்தமானார்.

“நல்ல ஆலோசனையை தக்க சமயத்தில் கூறிய நீ கூனியாக இருந்த போதினும் அறிவில் சிறந்தவள். நீ ஒருத்தி மட்டும் தான் எப்போதும் எனக்கு நல்லதை எண்ணும் மனம் கொண்டவள், தாமரை வளைந்திருந்தால் அழகின்றிப் போகுமோ? அதுபோல் இயற்க்கையாகவே அழகான தேகம் கொண்டவளாக நீ இருக்க, உன் கூனலால் அழகு குறைந்துபோகுமா என்ன? பெண் அன்னம் போல இருக்கின்றாய். அசுர அரசனான சம்பரனிடத்து இருந்த ராஜ தந்திரங்கள், மாயா விசித்திர எண்ணங்கள் வருங்காலத்தை அறிந்துணரும் புத்தி அனைத்தும் உன்னிடம் ஒருங்கே நிரம்பப் பெற்றுள்ளன. இதோ என் ஹாரத்தை உனக்கு அணிவிக்கிறேன், ராமன் வனம் சென்று பரதன் ஆட்சிபீடத்தை அலங்கரிக்கும் போது, உன் கூர்மையான கூனலுக்கு அபரஞ்சிதத்தால் கவசம் செய்து தருகிறேன். சுத்த சந்தனத்தால் உன்னை அலங்கரித்து வாசம் நிரம்பியவளாக்குகிறேன். நெற்றியில் ரத்தினங்களாலான திலகம் சூட்டுகிறேன், ஆபரணங்களோடு நேர்த்தியான ஆடை அணிந்து, சந்திரனைப்போல காந்தியுடன் தேவதை போல வலம் வந்து, நம்மை துவேஷிப்பவர்களை ஏவல் செய். எனக்கு நீ சேடிப் பெண்ணாக இருப்பதுபோல, உனக்கு ஊழியம் செய்ய உன் போன்ற பல கூனிகளை வேலைக்கு அமர்த்துகிறேன்”, என்றார் கைகேயி.

இவ்வாறு கைகேயி தனது கடல் நுரையைப்போன்ற வெண்மையான படுக்கையில் அமர்ந்தவாறே மந்தரையைப் பார்த்து பேச, “அடீ பெண்ணே, கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், வெள்ளம் வரும் முன் அணை போடு, முதலில் ஆகவேண்டிய காரியத்தை செய், கோபம் வந்தால் செல்லும் அறைக்கு சென்று தரையில் படு, அரசனுக்காக காத்திரு”, என்று மந்தரை மேலும் கைகேயி செய்ய வேண்டியவற்றை அறிவுறுத்தி துரிதப்படுத்தினார்.

[அப்போதெல்லாம் யாருக்காவது கோபம் வந்தால் கோபக்ரஹம் என்னும் அறைக்கு சென்று விடவேண்டுமாம், இப்போது வீட்டில் அப்படி ஒரு அறை இருந்தால் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக அங்கே தான் இருப்பார்கள் என்று நிச்சசயமாக கூறலாம், அடுத்தென்ன? அந்த கோபாக்ரஹம் குருக்ஷேத்திர களம்தான்.]

மந்தரையின் ஆலோசனைப்படி கோபாக்ரஹத்திற்கு சென்ற கைகேயி,தனது அழகில் பெரிதும் கர்வம் கொண்டவளாக, தனது ஆபரணங்களை கழற்றி அங்கங்கு வீசி விட்டு தரையில் படுத்தார். பின் மந்தரையை நோக்கி, “மந்தரை, ராமன் வனவாசம் சென்றான், பரதன் இளவரசனாக முடிசூடப்பெற்றான் என்று என் தந்தையான கைகேய அரசனிடம் சென்று சொல், அஃதில்லையென்றால், கைகேயி கோபாக்ரஹத்திலேயே உயிரை நீத்தாள் என்று சொல். வைர வைடூர்ய நவரத்ன மாணிக்க பொன்னாலான ஆபரணங்கள் எதுவும் எனக்கு தேவையில்லை, ராமனின் யுவராஜ்ய பட்டாபிஷகம் நடந்தால் அக்கணமே என் உயிர் போய்விடும்”, என்று கூறினார்.

மந்தரை இதைக் கேட்டதும் இன்னும் அவர்களது வாதத்தை வலுசேர்க்கும் விதமாக துர்போதனைகளை கைகேயிக்கு கூறி, அவருடைய நோக்கத்தை எவ்வாறேனும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு தூபமிட்டார். எவ்வாறெனில், கைகேயி ‘எனக்கு விருப்பமில்லாத செயலை தசரதர் செய்யத் துணிந்தாரே?’, என்று தசரதரை சந்தேகித்து மார்பில் கைவைத்து புலம்பும் அளவுக்கு மந்தரையின் போதனை இருந்ததாம்.

இயல்பான ஒரு விஷயத்திற்கு சந்தேகம் என்னும் சாந்து பூசிய மனம் எப்படியெல்லாம் குதர்க்கமாக யோசனை செய்யும் என்பதற்கு கைகேயியின் தற்போதைய மனநிலை ஒரு உதாரணம்.

[ இன்னமும் சிறப்பாக பெண்களின் சந்தேகத்தை எடுத்தியம்பும் ஒரு குறள் :

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

அதிகாரம் :புலவி நுணுக்கம் (காமத்துப்பால்)

தலைவனுக்கு தும்மல் வந்தது, அவர் அருகிலிருந்த இல்லக்கிழத்தி, இயல்பாக “நூறாண்டு” என்று வாழ்த்தினாளாம். வாழ்த்திய மறு நொடி உம்மை சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் நான்..,  இங்கு உமதருகில் இருக்கும் போது, வேறு யார் உம்மை நினைத்ததனால் தும்மினீர்? என்று கேட்டு சண்டையிடுவாளாம்.

தும்முதல் – இயல்பு; வாழ்த்துதலும் இயல்பே;

ஆனால் வேறு யாரோ நினைத்ததானால் தலைவன் தும்மினான் என்று சந்தேகித்து ஊடல் கொள்வது?  (வேற லெவல்)

அடுத்த குறளில் இன்னமும் ஒரு படி மேலே போவார் தலைவி.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்                        எம்மை மறைத்திரோ என்று.

தலைவன் தான் தும்மினால் ஊடல் கொள்கிறாள் மனைவி என்பதற்காக தும்மலை அடக்குவார், அதற்கும் பொங்குவார் தலைவி, என்னவென்று? உமக்கு வேண்டியவர் யாரோ உம்மை நினைப்பதை என்னிடம் மறைப்பதற்காக தும்மலை அடக்குகிறீரோ? என்று. ( இது எப்படி இருக்கு? )

ஆனா நட்புக்களே, போன வருஷம் வரைக்கும் இந்த குறள் படி சண்டை நடந்திருக்குமோ என்னவோ? ஆனா, இப்போல்லாம் அப்டியில்லங்க, தலைவனோ தலைவியோ யார் தும்மினாலும், அடுத்தவங்க கிடுகிடுன்னு கிச்சனுக்கு ஓடிப்போய் கபசுர குடிநீர் தயாரிக்க ஆரம்பிச்சிடறோம், கொரோனா புண்ணியம். சோ நோ ஊடல், (இதுவும் காமிடிதான், சோ, சிரிச்சிடுங்க) ]

மூத்த பிள்ளைக்கு இளவரசனாக முடிசூட்டுவது என்பது அந்தக்காலத்தில் மரபாக வரும் விஷயம். எனவே ராமருக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் என்பது மிக இயல்பான ஒன்று, அத்துணை தூரம் போவானேன்? விஷயம் தெரிந்ததும், அதை பகிர்ந்த மந்தரைக்கு பாராட்டி பரிசு கொடுத்ததும் இதே கைகேயிதான்.

ஆனால் அவர் இப்போது என்ன மனநிலைக்கு ஆட்பட்டுள்ளார்? ‘எனக்கு பிடித்தமில்லாததை தசரதன் செய்யத் துணிந்தாரே?” என்று மார்பிலடித்து புலம்பும் அளவுக்கு. மந்தரையின் வாக்கு சாதூர்யம் எவ்வளவு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.  புத்தி மாறிய கைகேயி இரவில் நட்சத்திரங்களில்லா வானம் போல, கோபத்தால் முகத்தில் இருள் படர, துக்கக் கடலில் மூழ்கியவராக காணப்பட்டார்.

ஜெய் ஸ்ரீராம்.

Advertisement