Advertisement

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

ஸ்ரீ குருப்யோ நமஹ:

Koojantham Rama Ramethi maduram madsuraksharam,
Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்

2. தசரதர் ராமரிடம் பேசுவது

தசரதரின் அரசவையில் ராமருக்கு இளவரசாக பட்டம் சூட்டுவது என்ற முடிவினை அறிவித்ததும் அவையோரின் கரகோஷங்கள் விண்ணை எட்ட, மனதில் அளவில்லா மகிழ்ச்சியுடன் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அங்கு கூடியிருந்தோர் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

குலகுரு வசிஷ்டர் சுமந்திரர் முதலான அதிகாரிகளிடம், “தங்கம், ரத்தினங்கள், நெல், பயறு வகைகள்,பொரி, தேன், வஸ்திரங்கள், ரதங்கள், ஆயுதங்கள், சதுரங்க சேனைகள், யானைகள், குதிரைகள், வெண்கொற்றக குடை, சாமரங்கள், தங்கத்தினாலான குடங்கள், சுத்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் இருக்கும் காளைகள், குறைகளில்லாத புலித்தோல். சந்தன குங்கும வகையறாக்கள், புஷ்பங்கள், யாகத்திற்குண்டான சுள்ளிகள் (ஸமித்துக்கள்), நன்கு தொடுத்த வெண்ணிற மலர் மாலைகள் முதலானவற்றை, யாகசாலையில் காலை தயாராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்”, என்று கூறிவிட்டு, “கோட்டை கொத்தளங்கள், அந்தப்புர வாயில்கள், நகரத்திலிள்ள வீடுகள் முதலானவைகளை சந்தனம், குங்குமம் இவற்றால் அலங்கரிக்கப்படட்டும், மாலைகள் தோரணங்கள் இன்னமும் அவற்றுக்கு அழகு சேர்க்கட்டும்.  ராஜவீதியில் பன்னீர் தெளிக்கப்பட்டு வண்ணக்  கோலங்களால் அவை அழகுற மிளிரட்டும், பாடுவோர், ஆடுவோர் அரண்மனையில் தங்க இடம் ஏற்பாடு செய்யுங்கள். வருபவர்கள் அனைவர்க்கும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அன்னாஹாரங்கள் தானங்கள் வழங்கப்படட்டும், அதிகாரிகளே! நாளை காலையில், முதல் வேலையாக மங்கள வார்த்தைகளை சொல்லும் சடங்கு  (ஸ்வஸ்திவாசனம்) நடைபெறப்போகிறது அதற்குண்டான ப்ராஹ்மணர்களுக்கு தகுந்த ஆசனம் போடப்பட்டு தயாராய் இருக்கட்டும். அவர்களுக்கு இந்நிகழ்வை  தெரியப்படுத்தி அழைத்துவரவும்’, என்று அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டரும் வாமதேவரும்  முன்னின்று செய்து முடித்தனர்.

இதனை தசரதரிடம் வசிஷ்டரும் வாமதேவரும் தெரிவிக்க, தசரதர் சுமந்திரரிடம் ராமரை அழைத்துவருமாறு கூறினார். அரசவையிலிருந்த அனைவரும் ராமரின் வரவுக்காக காத்திருந்தனர், அயோத்திக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு முதனால திசைகளில் இருக்கும் மன்னர்களும், அருகிலிருந்த சிறு குறு நில தலைவர்களும், நகர முக்கிய பிரதிநிதிகளும், மக்களும் சூழ இருந்த மன்னர் தசரதர், இந்திர சபையில் வீற்றிருக்கும் தேவேந்திரன் போல காட்சியளித்தாராம்.

தந்தை அழைப்பை ஏற்று தசரதரைக் காண தனயன் ராமர் அரண்மனைக்கு வந்தபோது, கோடை வெயிலில் தகித்து இருப்பவர்கள், மழைதரும் கார்மேகந்தனை எப்படி வாஞ்சையுடன் பார்ப்பார்களோ அப்படி பார்த்தாராம், தசரதர் ராமரை.   மகனைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதுபோன்ற பிரமை தசரதருக்கு ஏற்படுமாம். பொலிவான முகம், முழங்கால் வரை நீண்ட கைகள், தோள் கண்டார் தோளே கண்டார், என்று ராமரின் தோளுக்கு நிகர்த்துக் கூற ஏதுமில்லாமல் அவரது தோளையே நிகராக கூறும் அளவிற்கு திண்ணிய தோள்களையும், மத யானையை ஒத்த  அவரது நடையினை பார்க்கும்போதெல்லாம் இவன் என் மகன் என்று விம்மிதம் கொள்ளுமாம் தசரதரின் நெஞ்சம்.

தந்தையின் அருகே வந்த ராமர், அவர் பாதம் வணங்கி நிற்க, அவரை மார்போடு தழுவிக் கொண்ட தசரதர், அருகிலிருந்த ரத்தினங்கள் இழைத்த ஆசனத்தில் ராமரை அமரச் சொன்னார். அவ்வாறு அவையில்  ராமர் வீற்றிருந்தது, நட்சத்திரங்கள் அணி வகுத்து நிற்கும் வானத்தில்,  தண்ணொளியுடன்  மிளிரும் சந்திரனைப்போல் இருந்தது.

“எனது மூத்த மகனும் உத்தமமான குணங்கள் நிரம்பியவனும் அவையோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனும் ஆகிய உனக்கு நாளை யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய நிச்சயத்திருக்கிறோம். சுபாவத்திலேயே நற்பண்புகள் நிரம்பப் பெற்றவனான உனக்கு அறிவுரை ஏதும் தேவையில்லை. எனினும் சில வார்த்தைகள் சொல்கிறேன் கேள். அடக்கத்தை ஒருபோதும் கைவிடாதே, பதவியேற்றபின் உன் அமைதியும் அடக்கமும் இன்னமும் வளரவேண்டும். நற்குணங்கள் நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள். பொருளீட்ட, காக்க, பொக்கிஷத்தை முறையாக மக்களுக்காக வகுக்க (பயன்படுத்த) தவறாதே. ஆயுதசாலையை நன்கு பராமரிப்பது, உணவு தானியங்களை சேமித்து வைப்பது போன்றவற்றை ஒரு கணமும் தவறிவிடாதே, அமைச்சர்களுக்கு நீ நேரடியாகவும் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் மூலமாகவும் கட்டளையிட வழக்கப்படுத்திக் கொள். மகனே,  காமக்ரோதங்களை வென்று ஐம்புலன்களையும் அடக்கியவனாக இருப்பாய். மன்னர்களை எளிதில் தொற்றும் ஏழு தீய குணாதிசயங்கள் உன்னை அணுகாதிருக்கட்டும்”, என்று அறிவுரை கூறினார்.

அது என்ன ஏழு தீங்கிழைக்கும் குணாதிசயங்கள்? மதுபானம் அருந்துதல், தேவையற்ற இடத்தில் அர்த்தமற்று பேசுதல், பிற பெண்களின் மீது ஆசை, அவசியமின்றி வேட்டையாடுதல், தர்ம சாஸ்திரத்தின் வழி நில்லாமல் எதேச்சாதிகாரமாக குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தல், மக்களின் வரிப் பணத்தை மனம் போன போக்கில் செலவளித்தல், சூதாட்டத்தில் ஈடுபடுதல் போன்றவற்றை மன்னர்களுக்கு எளிதில் வரும் ஏழு தீய குணங்கள் என்று தசரதர் குறிப்பிடுகிறார். அதாவது பதவி வந்தால் தான் என்ற அகங்காரம் மிகும், அந்த கர்வம் மற்றைய அனைத்து நல்ல குணங்களையும் விலக்கி வைக்கும். அதனால்தான் தசரதர் அறிவுரை கூற ஆரம்பிக்கும் போது எடுத்த எடுப்பிலேயே ‘ராமா, அடக்கமாக இரு, முன்னிலும் அடக்கமாக இரு’ என்று கூறுகிறார்.

[ அடிக்கடி இந்த காம க்ரோத லோப மோஹ மத மாச்சர்யங்கள் என்று கேள்விப்படுகிறோமல்லவா? அப்படின்னா என்ன-ன்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி வரும். எனக்குத் தெரிந்த விளக்கம்.

காமமென்பது : தனம் , தான்யம், சகி, புத்திர,  பொருட்கள் மேல் அதிக பாசம் வைத்தல் ;
குரோதமென்பது : ஒருவருக்கு கெடுதி விளைவிக்க பிரயத்தனம் செய்ய இச்சை கொள்ளுதல்;
லோபமென்பது :  தனது சொத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்க கூடாது என்னும் எண்ணம். (லோபி – கருமி )
மோஹமென்பது : தனக்கென்று இருக்கும் பொருள் போதாதென்று, இன்னும் அதிகமாய்  வேண்டும் என்னும் தீரா ஆசையை கொள்ளுதல்;
மதமென்பது : பணம் பொருள் பலம் செல்வாக்கு அதிகம் சேர்த்து அதனால் மற்றவர்களை அலட்சியம் செய்தல்;
மாச்சர்யங்கள் என்பது: மற்றவர்  சுகம் அனுபவிப்பதை பொறுக்காமல் தீமை விளைவிக்கும் மனோ பாவத்தை மாச்சரியம் என்று சொல்லலாம். ]

தசரதர் இவ்வாறு ராமருக்கு அறிவுரை கூறுவதைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். அங்கிருந்த ராமரின் நண்பர்கள் வெகு வேகமாக கௌசல்யா தேவியின் அரண்மனைக்குச் சென்று, இந்த செய்தியை தெரிவித்தனர். அவரும் அகமகிழ்ந்து ரத்தின, வைர வைடூர்யங்களை இந் நற்செய்தி கொண்டு வந்தவர்களுக்கு பரிசாக கொடுத்தார்.

அதே நேரத்தில் ராமர் தசரதரின் அரசவையிலிருந்து வணங்கி விடைபெற்று தனது மாளிகைக்கு  விரைந்தார். அவ்வாறு அவர் செல்லும்போது யுவராஜ்ய பட்டாபிஷேகம் குறித்து அறிந்த மக்கள் அவர் மீது பூமாரி பொழிந்து வாழ்க வாழ்க வென வாழ்த்தினர்.

தசரதரின் அவையிலிருந்த மற்ற மன்னர்கள், கிராம நிர்வாகிகள் நகர பிரதிநிதிகள் அனைவரும் விடைபெற்று சென்றதும், தனது அறைக்கு சென்ற தசரதர் பட்டாபிஷேக நிகழ்வுகளை பற்றி யோசித்து, “நாளை பூச நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ராமனுக்கு இளவரசனாக பட்டம் சூட்டிவிடலாம்”, என்ற நினைவுடன், ராமரை மீண்டும் ஒருமுறை அழைத்து பேசலாம் என்று கருதி, மந்திரி சுமந்திரரிடம் மீண்டும் ராமரை அழைத்து வரச் சொன்னார்.

சுமந்திரரும் ராமரின் இருப்பிடத்திற்கு போய் தான் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்க, ராமருக்கு, “இதென்ன இப்போதுதானே அங்கிருந்து வந்தோம்? , சரி என்னவென்று அறிவோம்”, என்று மனதில் தோன்றியது. சுமந்திரர் வந்ததும், “ஏதேனும் அவசர காரியமா? என்ன விஷயம் மறுபடி வந்திருக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் கூறுங்கள்”, என்றார்.

“அரசர் தங்களை காண வேண்டுமென கூறினார், அதனால்தான் வந்தேன், இனி அவரைக் காண்பதும் மறுப்பதும் உங்கள் சித்தம்”, என்றார் சுமந்திரர். இவ்வாறு அவர் கூறியதும், ராமர் உடனடியாக தசரதரைக் காணச் சென்றார்.

அங்கு சென்று  தந்தையை வணங்கி நின்றபோது, தசரதர் ராமரை ஆரத்தழுவி ஓர் ஆசனத்தை காண்பித்து அதில் அமருமாறு கூறினார். பின் அவர், ராமா எனக்கு வயது முதிர்ந்து விட்டது அதற்கேற்ற அனுபவமும் சம்பாதித்து விட்டேன். பல யாகங்கள் செய்து தேவர்களைத் திருப்தி அடைய செய்திருக்கிறேன், வேதங்கள் பாராயணம் செய்து ரிஷிகளின் ஆசிர்வாதத்தை சம்பாதித்திருக்கிறேன். அளவற்ற அன்னதானங்கள், வெகுமதிகள் அனைவருக்கும் கொடுத்து அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ந்துள்ளனர். அனைத்து சுகங்களையும் அனுபவித்து ஆத்மாவிற்கும் சாந்தியைக் கொடுத்துள்ளேன். எனது கடமைகள் அனைத்தையும் இன்றுவரை சரிவர செய்துள்ளேன். இந்நாட்டு மக்கள் நீ அரசாள வேண்டும் என்று மிகுந்த விருப்பத்தோடு இருக்கிறார்கள். நீ உத்தமமான ஆற்றல்களை கொண்டுள்ள மகன் , உன்னிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுப்பதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடு சித்தமாக இருக்கிறேன். நாளை உனக்கு இளவரசனாக பட்டாபிஷேகம் செய்வது ஒன்றைத்தவிர வேறெந்த விருப்பங்களும் எனக்கு இல்லை”

“தவிர எனக்கு சில நாட்களாக கெட்ட கனவுகள் வருகின்றன பாதி எரிந்த கொள்ளிக்கட்டைகள் இங்கே இடியுடன் கூடிய சப்தத்துடன் விழுவது போல கனவு காண்கிறேன். தொடர்ந்து பல அபசகுனங்கள் தோன்றுகின்றன, என் ஜென்ம நட்சத்திரத்தில் சூரியன் செவ்வாய் ராகு போன்ற கிரகங்களின் பார்வை விழுவதால், அவை ஜோதிடப்படி அசுப பலன்களை குறிக்கின்றன. புத்தி சஞ்சலப்படுதல், மரணம் அல்லது அதற்கு நிகரான பேராபத்து வரும் என்று ஆருடம் கூறுகிறது.

எனவேதான் அதற்கு முன்பாக நான் விரைவில் உனக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தேன். இன்று புனர் பூசம், நாளை வர இருக்கும் பூச நட்சத்திரம், பட்டாபிஷேகத்திற்கு மிகப் பொருத்தமான நாளென்று பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இன்று நீ உனது மனைவியுடன் கடுமையான விரதங்களை மேற்கொள், இன்று முழுவதும் உபவாசம் இருந்து தர்ப்பையால் ஆன படுக்கையில் படுத்து, முற்றிலும் எந்த ஒரு இடையூறும் இன்றி தெய்வ சிந்தனையுடன் இரு”

“உன் தம்பி பரதன் இந்த நேரத்தில் இங்கே இல்லாதது வருத்தமே. அவன் குணவான், மகான்கள் இடத்து நம்பிக்கை வைத்தவன், இந்திரியங்களை வென்றவன் தர்மத்தில் முழுமூச்சாக ஈடுபடுபவன். ஆனால் ராமா, எப்போதும் தர்மத்தின் பக்கம் நிற்பவர்களுக்குக் கூட சுற்றி இருப்போரின் போதனைகளால் மன சஞ்சலங்கள் வர வாய்ப்புண்டு. அனைவரும் பிறருடைய உயர்வினை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொல்வதற்கில்லை அது ஒரு சிலரால் மட்டுமே முடியும்”, என்று கூறிவிட்டு ராமரை பார்த்து, “இனி நீ உனது மாளிகைக்குச் செல்லலாம்” என்றார் தசரதர்.

[இங்கே பரதனைப் பற்றி பூடகமாக ஒரு விஷயத்தை தசரதர் ராமருக்கு உரைக்கிறார், ஆனால் அது அவரது ஐயப்பாடே தவிர ஊர்ஜிதப்படுத்திய கருத்தாக எதுவுமில்லை, தவிர, தசரதர் அவருக்கு வந்த கெட்ட கனவுகள், மற்றும் அவரது ஜாதகத்தில் கிரஹ சஞ்சாரங்கள் சரியில்லாத நிலை போன்றவற்றால்  அவரது குழம்பிய மனம் அவரை இவ்வாறெல்லாம் யோசித்து பேச வைத்திருப்பதாக தோன்றுகிறதே தவிர, பரதன் பொறாமையுடையவன் என்று தசரதர் கருதினார் என்று பொருள் கொள்ளலாகாது. ஆனாலும் இங்கே ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு ஏதோ சிக்கல் நிகழப்போகிறது என்று அடிக்கோடிடப்பட்டது.]

தசரதரிடமிருந்து விடைபெற்ற ராமர் தனது மாளிகைக்கு சென்று, அன்னை கௌசல்யை தரிசித்து ஆசி பெற எண்ணி அவரது இருப்பிடத்திற்கு சென்றார். ஏற்கனவே ராமரின் பட்டாபிஷேகம் குறித்து அறிந்திருந்த அவர், பூஜை அறையில், தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பட்டாடை அணிந்து, மங்களமாக தெய்வங்களை துதித்துக்  கொண்டிருந்தார்.

ராமரின் பட்டாபிஷேக உற்சவம் கேள்விப்பட்டு, இளைய தாயார்  சுமித்திரை கௌசல்யாவின் மாளிகைக்கு வந்திருந்தார். கூடவே, ஸீதை, லக்ஷ்மணன் இருவரையும் கௌசல்யாவின் மாளிகைக்கு வரவழைத்திருந்தார். அங்கு வந்த ராமர் தாயை வணங்கிவிட்டு, “அன்னையே! நாளை எனக்கு பட்டாபிஷேகம் செய்ய தந்தை முடிவெடுத்திருக்கிறார். மக்களை காக்கும் பொறுப்பை நான் கையிலெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதால், இன்று சீதையும் நானும் அதற்குண்டான உபவாசமிருந்து சில சடங்குகள் சம்பிரதாயங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதை நீங்கள் எவ்வாறு செய்யவேண்டுமென முறைப்படுத்துங்கள்”, என்று கேட்டார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த கௌசல்யா தேவி, “ராமா! உனக்கு மங்களம் உண்டாகட்டும், நீண்ட ஆயுளோடு நீ வாழ்வாய். உனது தந்தை தசரதர், உனது நற்குணங்களைக் கண்டு பெரிதும் திருப்தி அடைந்திருக்கிறார். ராஜ்யத்தை அடையப்போகும் நீ, எனது பந்துக்களையும், சுமித்திரையின் சொந்தங்களையும் மகிழ்வுறச் செய், நல்ல நட்சத்திரத்தில் பிறந்து, வெகுநாட்களாக நான் இருந்த விரதத்தின் பலனாக உனக்கு இந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இதைக் கேட்டு என் மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது”, என்றார் கௌசல்யா தேவி.

[இங்கே ஒரு நிரடல் தெரிகிறதா?, அன்னை கௌசல்யா ராமரிடம் எனது மற்றும் சுமித்திரையின் சுற்றங்களை மகிழ்வுறச் செய்  என்கிறார். கைகேயி ஏன் இந்த சொல்லாடலில் வரவில்லை? அவரும் சுமித்திரையைப் போல ராமருக்கு ஒரு சிற்றன்னை தானே? ஏன் அவரது சுற்றத்தாரை பற்றி இங்கே கௌசல்யை குறிப்பிடவில்லை? ஆக, மனைவிகளிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது என்பது கண்கூடு.]

அப்போது அருகில் கைகளைக் கூப்பியபடி இருந்த லக்ஷ்மணரைப் பார்த்து ராமர் புன் சிரிப்புடன், “இளவலே! என் இரண்டாவது உயிர் போன்றவனே! உனக்காகவே இந்த ராஜ்ஜியம் எனக்கு கிடைத்திருக்கிறது, இதில் அடையத் தகுந்த சுகங்களையெல்லாம் நீ அனுபவிப்பாய். உனக்காகவே இந்த பாக்கியங்கள் எனக்கு கிடைக்கப் பெறுகின்றன. நான் இவற்றை துய்ப்பதும், ஏன் உயிர் வாழ்தலும் கூட உன் பொருட்டே”, என்று அன்புடன் கூறினார். பின் அனைவரையும் வணங்கி சீதையுடன் தனது மாளிகைக்கு சென்றார்.

இதற்கிடையே ராமரை  வீட்டிற்கு அனுப்பிய தசரதர், ப்ரஹ்மரிஷி வசிஷ்டரைப் பார்த்து, “ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்திருப்பதால், அதற்குண்டான விரதம், உபவாசம் முதலானவற்றை அவன் தனது தர்மபத்னியாகிய சீதையுடன் கடைபிடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் அவனது மாளிகைக்கு சென்று செய்ய வேணுமென பணிவோடு விண்ணப்பிக்கிறேன்”, என்றார்.

அவரது வார்த்தைக்கு இணங்கி, தேரில் ஏறி வசிஷ்டர் வண மேக கூட்டம் போல விளங்கும் ராமனது மாளிகைக்கு சென்றார். வசிஷ்டர் வரும் செய்தியை அறிந்த ராமர், மாளிகையின் மூன்று கட்டுகள் வரை தேரில் வந்து கொண்டிருக்கும் வசிஷ்டரை, எதிர்கொண்டு அழைத்தார்.

ராமரின் பணிவைக் கண்டு மனம் உவந்து வசிஷ்டர், “நகுஷன் யயாதிக்கு இளவரசு பட்டம் சூட்டியதைப்போல, உனது நற்குணங்களால் சந்தோஷமடைந்துள்ள உனது தந்தை, நாளை உனக்கு இந்த ராஜாங்கத்தைக் கொடுக்கப் போகிறார். அதற்காக நீ உனது மனைவியுடன் இன்று ஏதும் சாப்பிடாமல் உபவாசமிருக்க வேண்டும்”, என்றார்.

அடுத்து, அதற்குண்டான மந்திரபூர்வமான ஏற்பாடுகளை செய்து ஆகம விதிப்படி ராமரையும் சீதையையும் உபவாசம் மேற்கொள்ளச் செய்தார், வசிஷ்டர். பின்னர் இருவருக்கும் விடைகொடுத்து, தசரதரின் அரண்மனைக்கு செல்ல தேரைச் செலுத்தினார். வழி நெடுகிலும் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடு அவரவர் இல்லங்களை வாழை, கமுகு போன்ற மரங்களால் அலங்கரிக்க ஆரம்பித்திருந்தனர். வீதிகளெங்கும் இதே பேச்சு விரவிக் கிடந்தது, அனைவரின் முகத்திலும் புன்னைகையோடு மகிழ்ச்சி தாண்டவமாடியது. வீதிகளில் இருந்த அசுத்தங்கள் நீங்கப் பெற்று நீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அங்கங்கே ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டிருந்தது.  இதை பார்த்தவாறே தசரதரின் மாளிகைக்கு சென்ற வசிஷ்டர், அவரிடம் “ராமனுக்கு உண்டான சடங்குகளை செய்வித்தாயிற்று”, என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட பின், வசிஷ்டருக்கு விடை கொடுத்த தசரதர், தம் அந்தப்புரம் சென்றார். அப்போது ராமரின் பட்டாபிஷேகம் குறித்து தசரதரின் மனதில்  சொல்லொணா உவகை பெருகி அவரது தேகம் சந்தோஷத்தின் வெளிப்பாடாக மிகுந்த தேஜஸுடன் மிளிர்ந்தது.

ஜெய் ஸ்ரீராம்

Advertisement