Advertisement

ஸ்ரீ குருப்யோ நம:

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்.

தசரதர் இறை நிலை எய்துதல் 

அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தசரதர், நடு நிசியில் விழித்தெழுந்தார்.  அப்போது திடீரென்று அவருக்கு தான் எப்போதோ செய்த பாவச் செயல் ஒன்று நினைவுக்கு வந்தது. இன்று தனது உயிரினும் மேலான மகனைப் பிரிந்து துன்பத்திற்கு உழல்வதற்கு முன்பு தான் அறியாமல் செய்த அந்த தவறே காரணம் என்று உணர்ந்து, கௌசல்யா தேவியிடம் அதை பகிர ஆரம்பித்தார். 

தேவி, நான் இளைஞனாக இருந்த போது செய்த பாப காரியத்துக்குண்டான வினையோ இது?”, என்று பேச  ஆரம்பித்த தசரதர், “முன்பு நான் இளைஞனாக இருக்கும்போது ஒலி வரும் திசையை வைத்தே இலக்கு எங்கே உள்ளது என்பதை தீர்மானித்து அம்பெய்து, இலக்கினை அங்குலம் பிதாகாது தாக்கும் வில்லாளனாக இருந்தேன். அப்போது நமக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை.”

“ஒரு முறை நான் வேட்டைக்குச் செல்லும்போது சரயு நதிக்கரையில் யானை ஒன்று நீர் அருந்துவது போன்ற ஓசை கேட்க, என் மனம் அந்த ஓசையில் லயித்து யானை எங்கே இருக்கும் என்பதை அனுமானித்து, என் பானத்தை தொடுத்தேன். ஆனால்.. ஆனால் தேவி..”

“அங்கே தூரத்தில் இருந்து ஒரு அவலக்குரல் கேட்டது. அது ஒரு மனிதனின் குரல். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே என் மனம் பரிதவிக்க ஆரம்பித்தது.”

“மேலும் அக்கூக்குரல், ‘தாகத்தில் இருக்கும் பெற்றோருக்கு தண்ணீர் கொண்டு செல்ல வந்த என்னைக் கொல்லத் துணிந்தது யார்? மரவுரி தரித்து ஜீவகாருண்யத்தை மேற்கொண்டு, எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காத என்னை அம்பு துளைத்தது ஏன்? என் மீது அம்பெய்தவனுக்கு நான் செய்த அபராதம் என்ன? நானில்லாவிட்டால் தள்ளாமையில் உள்ள என் வயதான பெற்றோர் என்னாவர்? ஒரு அம்பினால் எங்கள் மூவரையும் கொன்ற அந்த பாவி யார்?’, என்று யாரோ ஒருவன் புலம்பி அழுதது என் காதில் விழுந்தது. அதைக் கேட்ட அதிர்ச்சியில் என் கையிலிருந்த வில்லும் அம்பும் தானே கீழே விழுந்தன. ‘என்ன பாதகம் செய்துவிட்டேன்?’, என்று மனம் பதைத்து தாங்கொணா வேதனையோடு அக்குரல் வந்த திசைக்கு ஓடினேன்.” 

“அங்கே ஒரு தபஸ்வி தன் அங்கம் முழுதும் ரத்தம் வடிந்தோட தரையில் புரண்டபடி வேதனையில் கிடந்ததை பார்த்து செய்வதறியாது நின்றேன். அவர் அருகே நீர் நிரம்பிய குடம் ஒன்று விழுந்து கிடக்க, அதிலிருந்த தண்ணீர் கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தது.” 

“என்னை தனது தீட்சண்யமான கண்களால் பார்த்த அந்த இளந்துறவி, ‘அரசே, நான் உனக்கு என்ன தீங்கிழைத்தேன்? ஏன் இப்படி செய்தாய்? பிறக்கும் ஒவ்வொரு உயிரும் நிச்சயமாக ஒருநாள் காலனை சென்றடையும் என்ற உண்மை நானறிவேன், எனவே என் மரணத்திற்கு நான் அஞ்சவில்லை. ஆனால், என்னை நம்பி இருக்கும் என் பெற்றோரை நிர்கதிக்கு ஆளாக்கி செல்கின்றேனே என்பதே என் வேதனை. விளையாட்டாக ஒரு பானத்தைத் தொடுத்து, வயதான தாய் தந்தையின் தாகத்திற்கு நீர் கொண்டு செல்ல வந்த என்னை இப்படி கொன்றுவிட்டாயே? இனி அவர்களுக்கு யார் காப்பு?”,என்றார். 

கண்களில் பரிதவிப்புடன், கையறுநிலையில் நின்ற என்னைப் பார்த்து, “மன்னனே,உடனே அவர்களிடம் செல், அங்கே சென்று எனக்கு நேர்ந்த நிகழ்வைக் கூறு. அவர் சாபமிடுவாரோ என்று கலங்காதே, இது அஜாக்கிரதையால் ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்பதை தபஸ்வியான அவர் புரிந்து கொள்வார். அப்படி அவரிடத்துச் செல்லும்முன் தயை கூர்ந்து என் உடலில் துளைத்து நிற்கும் உன் அம்பினை எடுத்துவிடு. இது எனக்கு மிகவும் வேதனை தருகிறது’, என்றார் அத்துறவி.

“அத்துறவியின் உயிரை மீட்டு வருவது இயலாத காரியம் என்பது தெரியுமாகையால், அவரது வாதனைத் துயரையாவது குறைப்போம் என்றெண்ணி, அவர் உடலில் இருந்து எனது பானத்தை அகற்றினேன். சிறிது நேரத்திலேயே அவர் இறந்ததை வேதனையோடு கண்ணுற்றேன்.”

“அடுத்து என் செய்வது? என்று மனம் கிலேசமுற்றாலும், அங்கிருந்த குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டு,  இறந்த துறவியின் ஆசிரமத்திற்குச் சென்றேன். அங்கே இருந்த வயதான சிறகிழந்த பறவைகள் போலிருந்த அப்பெற்றோரைக் கண்டதும் என் மனம் சொல்லொணா துயரை அடைந்தது.” 

என் காலடியோசை கேட்டதும், “கண்ணே, தண்ணீர் கொண்டுவர ஏன் இத்தனை நேரம்? பார் அதற்குள்ளாகவே உன் தாயார் உனக்கு என்னாயிற்றோ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள். ஏன் ஏதும் பேசாமல் நிற்கிறாய்?”, என்று பார்வையிழந்த தந்தை கேட்டார்.

“இப்போது நான் இவரிடம் சொல்லப்போகும் விஷயத்தால் அடுத்து என்னாகுமோ என்ற அச்சம், அதனினும் கூடுதலாக துயரம் என் மனதை அரிக்க, ‘ஐயா, நான் உங்கள் புத்திரனல்ல, என் பெயர் தசரதன், க்ஷத்திரியன். வேட்டையாடுவதற்காக கானகம் வந்தேன். தடாகத்தில் யானை நீர் அருந்தும் ஓசை கேட்டு அம்பெய்தினேன். ஆனால், எதிர்பாராத விதமாக அது உங்கள் பிள்ளைமேல் பாய்ந்து அவர் இறந்துபோனார். இது எனது கவனக் குறைவால் ஏற்பட்ட துயரம். இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களா அப்படி செய்ய சித்தமாய் உள்ளேன்’, என்று சொல்லி அமைதியாக அவர்கள் முன் நின்றேன்.”

“அரசே, இப்படி கோரமான காரியத்தை செய்து விட்டு எங்களுக்கு தெரிவிக்காமல் சென்றிருந்தால், என் சாபத்தின் பயனாக இந்நேரம் உன் தலை சிதறியிருக்கும். வானப்பிரஸ்தம் செய்யும் ஒருவனை..,  ஒரு க்ஷத்திரியன் தனது சுய புத்தியில் இருக்கும்போது தெரிந்தே கொன்றிருந்தால் அவன் தேவேந்திரனானாலும் சரியே, பதவியிலிருந்து தள்ளப்படுவான்.”

” ‘ஆனால் நீயோ என்ன காரியம் செய்கிறோம் என்பதை அறியாமல் இப்படி செய்து விட்டாய், அதோடு உன் குற்றத்தை உணர்ந்து இங்கே எங்கள் முன் வந்து நிற்கிறாய். நீ இன்னமும் உயிர் தரித்து நிற்க அதுவே காரணம். இல்லையெனில் இந்நேரம் உன் குலமே  அழிந்திருக்கும்’, என்று சொன்ன தபஸ்வி, கண்ணில் நீரோடு, ‘என் மகனிருக்கும் இடத்திற்கு இப்போதே எங்களை கூட்டிச்செல்’, என்றார்”

“அங்கே சென்றதும் உயிர் நீத்த தனது மகனைத் தொட்டுத் தடவியபடி அவரது தாய் தந்தை இருவரும் கண்ணீர் உகுத்தனர். ‘மகனே இரவு நேரத்தில் சாத்திரங்கள் படிக்கும் உன் இனிய குரலை இனி எப்போது கேட்போம்? இதோ புத்தி பேதலித்துப்போய் அழுகிறாளே உன் தாய்.. இவளுக்கு எங்கனம் ஆறுதல் சொல்வேன்? எங்களை இப்படி அநாதரவாக விட்டு செல்லாதே, எங்களையும் உன்னோடு அழைத்துச் செல்’, என்று பலவாறு புலம்பியபடி, நீத்தாருக்கு செய்யும் அந்திம கிரியைகளை செய்தார் அந்த தபஸ்வி”. 

“அப்போது இறந்த அந்த துறவியை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தனது விமானத்தோடு தேவேந்திரன் தோன்றினான். அந்த இளந்துறவியின் ஆன்மா, ‘தந்தையே வருந்தாதீர்கள், உங்களுக்கு நான் செய்த பணிவிடையின் பயனாக உத்தமகதியை அடைந்தேன். நீங்களும் வெகுசீக்கிரத்தில் என்னோடு வந்து சேருவீராக’, என்று சொல்லி மேலுலகு செல்வதை என் கண்களால் பார்த்தேன்.

இச்சிறுவயதில் மகனது ஆன்மா தன் பூத உடல் நீங்கிச் செல்வதைக் கண்டு வருந்திய அந்த வயோதிக முனிவர், “அரசனே, என் புதல்வனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுவிடு. என்னால் அவனில்லாத உலகை கற்பனையிலும் காண இயலவில்லை.”

“அறியாமல் பிழை செய்த ஒரு காரணத்திற்காகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். ஆனால் ஒவ்வொரு வினைக்கும் விளைவு உண்டு. அதை நீ நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும். இதை யார் நினைத்தாலும் தவிர்க்க இயலாது. இப்போது உன் செயலால் நான் படும் இத்துன்பம் எதிர்காலத்தில் உனக்கும் நேரும்.  நீயும் என்போல உன் புத்திரனைப் பிரிந்து.. அச்சோகத்தின் காரணமாக உயிர் நீப்பாய்”, என்று சொன்ன அம்முனிவர், மகனின் சிதைக்கு தீ மூட்டி தனது மனைவியோடு அந்த நெருப்பிலேயே வீழ்ந்து மாண்டார்.”

“அன்று சப்தவேதி என்ற பானத்தை நான் அந்த இளம் துறவிமேலெறிந்த பாவத்தை இப்போது அனுபவிக்கிறேன் போலும்.”,

“நல்ல பல ஆகாரங்களோடு வயிற்றுக்கு ஒவ்வாத உணவையும் சேர்த்து உட்கொண்டால், எவ்வாறு உடலுக்கு ரோகம் ஏற்படுமோ அப்படி.. பற்பல நற்காரியங்கள் மூலம் விளையும் நல் வினைப்பயனை அனுபவிப்பது போல நாம் செய்த தவறுகளும் அதற்குண்டான எதிர்வினையை வழங்கியே தீரும் என்று அந்த வயோதிக துறவி சொன்ன வார்த்தைகள் இன்று பலிக்கின்றது.”

“அந்திமநேரம் நெருங்கியவனுக்கு பார்வை தெரியாதாம், கௌசல்யே நீ என் அருகே இருக்கிறாயா என்னால் உன்னைக் காண இயலவில்லையே? நற்குணம் கொண்டவளே சுமித்திரை நீ எங்கே? குலத்திற்கு கேடு விளைவிக்க வந்தவளே கைகேயீ, எமக்கு எமனாக வந்தவேளே, நீயும் இங்கேதான் இருக்கிறாயா?”, என்று பலவாறாக புலம்பி கதறி அழுதார் தசரதர். அன்று நள்ளிரவிலேயே அவரது உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றது. 

பொழுது புலர்ந்தது. மன்னரை தினமும் துயிலெழுப்பும் வழமையான மந்தர சப்தங்களும் வீணை முதலான வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. அவரது வரவுக்காக பணியாட்கள் காத்திருந்தனர். ஆயினும் வெகுநேரம்சென்றும் தசரதர் வராததால், பணிப்பெண்கள் மன்னரின் அருகே சென்று ம்ருதுவான குரலில் அழைத்து எழுப்ப முயன்றனர். 

தசரதரின் உடலில் ஒரு சின்ன அசைவு கூட இல்லாமல் இருந்ததை அவதானித்த பணிப்பெண்கள் அவரது நாடியை சோதித்துப் பார்த்தனர். மன்னர் இறந்து விட்டார் என்பதை அறிந்து ‘ஓ’வென்றலறி அழுதனர். 

முந்தைய இரவு தசரதரோடு வெகுநேரம் புலம்பி அழுது கொண்டிருந்ததால், தாமதமாக உறங்கிய கௌசல்யா சுமித்ரா இருவரும் விஷயமறிந்து கதறி அழுதனர். அரண்மனை, அந்தப்புரம், நகரம், நாடு என கோசல ராஜ்யமே துயரத்தில் மூழ்கியது. 

அப்போது அங்கு அழுதுகொண்டிருந்த கைகேயியைப் பார்த்து, ‘தீயவளே, இனி உனக்குப் போட்டியாக எவருமில்லை, ஆட்சி அதிகாரத்தை ஆனந்தமாக அனுபவி. மந்தரையின் சொல் கேட்டு மங்கலத்தை இழந்து விட்டாய். ராமனை காட்டுக்கு அனுப்பி மன்னரைக் கொன்றுவிட்டாய். மகனுமில்லை, மன்னனுமில்லை, இனியும் நான் உயிர் தரிக்க மாட்டேன், அரசரோடு உடன்கட்டை ஏறுவேன்”, என்று கௌசல்யை புலம்பினார். 

மன்னரின் உடல் உடனடியாக எண்ணெய் நிரம்பிய தொட்டியில் வைக்கப்பட்டது. மகன்கள் நால்வர் இருந்தும் ஒருவரும் அவர் அருகே இல்லாத காரணத்தால் அவரது உடலை பாதுகாக்க வேண்டியதானது. குடும்ப புரோகிதர்கள் மற்றும் வசிஷ்டர் வழி நடத்த அந்த நேரத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. 

அடுத்து, ராஜரீக காரியங்களை கவனிக்கும் பெரியோர்கள் ஒருங்கிணைந்தனர். வாமதேவர், மார்க்கண்டேயர், மௌத்கல்யர், காச்யபர், காத்யாயனர், பெரும்புகழ் பெற்ற ஜாபாலி, கௌதமர் முதலானோர்கள் அதில் அடக்கம். அனைவரும் குலகுருவான வசிஷ்டரை பார்த்து தத்தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பின்வருமாறு தெரிவித்தார்கள்.

“மாமன்னர் தசரதர் மறைந்தார், அவரது மூத்த மகனான ராமனோ காடேகினான். தேஜஸ் பொருந்திய லக்ஷ்மணனும் அவனுடன் சென்றான். இளையோன் பரதனும், சத்ரு சம்ஹாரம் செய்வதில் சமர்த்னுமான சத்ருக்கனனும் தாய்வழி பாட்டன் வீட்டில் இருக்கிறார்கள்.”

“உடனடியாக இவர்களில் யாரையாவது அழைத்து அரசனாக பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும். மன்னரில்லாத நாடு அழியும். மகன் தந்தை சொல் கேட்க மாட்டான். மனைவி கணவனுக்கு அடங்கி நடக்க மாட்டாள். யாராலும் அவர்களுடைய உடமைகளை பாதுகாத்துக் கொள்ள இயலாது. பொதுமக்களின் வசதிக்காக செய்யப்படும் காரியங்கள் யாவும் நின்றுபோம். கதவைத் திறந்து வைத்து தூங்க இயலாது. காப்பான் இல்லாததால் எவனும் தோட்டம் வயல் வெளியில் விவசாயம் செய்ய மாட்டான். அன்ன சாலைகளையும் மடங்களையும் எவரும் நிர்மாணிக்க முன்வர மாட்டார்கள்.”

“நீர் வற்றிய நதியைப்போல, புல் பூண்டுகள் இல்லாத காட்டைப்போல, இடையனில்லாத பசுக்களைப்போல அரசனில்லாத ராஜ்ஜியம் அழிந்து போகும். அரசனே மக்கள் அனைவர்க்கும் தாயைப் போன்றவன். அவரே தந்தை, மன்னனே சத்யம், அவரே தர்மம். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த அரசன் இல்லாவிடில்,அந்நாடு இருள் சூழ்ந்த காடாக மாறும். எனவே வசிஷ்ட மகரிஷியே, இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஒருவருக்கு உடனடியாக பட்டாபிஷேகம் செய்து அரச பதவியில் அமர்த்துங்கள்.”      

இப்படி பலவாறாக பெரியோர்கள்,ராஜதந்திரிகள் மற்றும் மந்திரிகள்  கருத்துக்களைக் கூற, அவர்களது ஆலோசனையை ஏற்ற வசிஷ்டர்..,சித்தார்த்தன்,ஜெயந்தன்,விஜயன், அசோகன் மற்றும் நந்தனன் முதலிய தூதர்களை வரவழைத்தார். 

“தூதர்களே கேளுங்கள், தனது தாய்மாமன் வீட்டுக்கு சென்றுள்ள பரத சத்ருக்கனனைப் பார்த்து,வசிஷ்டர் உங்கள் நலம் விசாரித்தார்.  நீ உடனடியாக  புறப்பட்டு அயோத்திக்கு  வரவேண்டும்.  உன்னால்  ஆக   வேண்டிய காரியம் ஒன்று  உன் வரவுக்காக காத்து இருக்கிறது.  என்று சொல்லுங்கள்.  பரதன் அங்கிருந்து புறப்படும்போது மன்னர் தசரதர் இறந்த விஷயத்தையும் ராமர்  காட்டுக்குச் சென்ற விஷயத்தையும் தெரிவிக்க வேண்டாம்’,  என்று ஆணையிட்டார்.

தூதர்கள் உடனடியாக புறப்பட்டு மனோ வேகம் வாயு வேகத்தில் போகக்கூடிய குதிரைகளில் கைகேய  நாடு சென்றார்கள். அப்படி அவர்கள் பரதன் வசித்து வந்த ராஜக்ருஹம் எனப்படும்  நகரத்தை சமீபிக்கும்போது, இரவு நேரத்தில் பரதனுக்கு ஒரு கனவு வந்தது..

தலைவிரி கோலமாக, அழுக்கானவராக தசரதர், மலை உச்சியில் இருந்து சாணக்குட்டை ஒன்றில் விழுவதை போலவும், அக்குட்டையில் மிதந்தவாறு தனது கரத்தில் இருந்த எண்ணெயைக் குடிப்பது போலவுமாக கனவு. கடல் வரள்வதுபோலவும், சந்திரன் கீழே விழுவது போலவும்,பூமி தீப்பற்றி எறிவது போலவும் அவனுக்கு கனவு வந்தது. கூடுதலாக, தசரதர் ஒரு இரும்பு ஆசனத்தில் கருப்பு உடை அணிந்தபடி இருக்க, அவரை மஞ்சள் ஆடை உடுத்திய பெண்டிர் கேலி செய்வது போலவும், அவர் கழுதை பூட்டிய ரதத்திலேறி தெற்கு நோக்கி செல்வது போலவும் நீண்டது அக்கனவு.

இது குறித்து பரதன் மனக்கிலேசத்தோடு இருந்ததால் நண்பர்களின் உற்சாகமூட்டும் பேச்சுகள் அவனது கவனத்தை திருப்பவில்லை. என்னாயிற்று என்று கேட்டவர்களுக்கு, தான் இப்படி ஒரு கனாக் கண்டதைத் தெரிவித்து, “இரவு முடியும் நேரம் வந்த கனவாதலால் இதற்குப் பலிதம் உண்டு என்று என் மனம் சொல்கிறது”, என்று வருத்தத்தோடு உரைத்தான்.   

தொடர்ந்து, “தசரத மன்னர், ராமர், லக்ஷ்மணர் மூவரில் ஒருவருக்கோ  அல்லது எனக்கோ மரணம் சம்பவிக்குமென எதிர்பார்க்கிறேன். கழுதை பூட்டிய ரத்தத்தில் செல்வதுபோல கனவு தோன்றினால் அவன் உடல் தீ மூட்டப்படும். என் தொண்டை வறண்டு விட்டது.பஏனோ அந்த மனம் ஒரு நிலையில் இல்லை”,என்று வருந்தும் சமயத்தில், வஷிஷ்டர் அனுப்பின தூதர்கள், அரசவை வந்து  உடனே பரதனை சந்திக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த செய்தி பரதனுக்குத் தெரிவிக்கப்பட அவன் உடனடியாக அரசவைக்கு வந்தான்.

ஜெய் ஸ்ரீராம்.

Advertisement