Advertisement

ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்.
ஶ்ரீ ஆஞ்சனேயம் ப்ரஸன்னாஞ்சனேயம்
ப்ரபாதிவ்யகாயம் ப்ரகீர்தி ப்ரதாயம்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம் 
15. சுமந்திரர் அயோத்தி திரும்பினார் 
சீதா ராம லக்ஷ்மணர்கள் பரத்வாஜ முனிவரை சந்தித்தது, பின்னர் சித்ரகூடம் சென்று பர்ணசாலை அமைத்தது முதலான தகவல்களை தனது சேவகர்கள் மூலமாக குகன் தெரிந்து கொண்டான். அங்கிருந்த சுமந்திரரும் இவ்விடயங்களை அறிந்து மனம் மிகவும் வேதனையுற்றவராக அயோத்யா திரும்பினார். 
அவ்வாறு அவர் அயோத்தி திரும்புகையில் அந்நகரம் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் அவரது தேர் நகரின் உள்ளே நுழைந்ததும், அவ்வோசையைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுமந்திரரின் அருகே வந்தனர். அவரது ரதத்தைச்  சுற்றி நின்று, “ராமர் வரவில்லையா?” என்று நிராசையோடு கேட்டார்கள். 
கங்கைக் கரையில் ராமரை விட்டு விட்டு வந்ததாக சுமந்திரர் சொல்லவும் மக்கள் “ராமா ராமா”, என்று வாய் விட்டு அழுதனர். அவர்களை மெல்ல விலக்கி விட்டு, கடை வீதிகளைக் கடந்து தசரதரின் மாளிகையை சுமந்திரர் அடைந்தார். 
அவர் வருவதைப் பார்த்த அங்கிருந்த பெண்கள், “சுமந்திரர் ராமனில்லாமல் வந்திருக்கிறாரே? இங்கே உயிருக்குயிரான மகனை பிரிந்து ‘தனக்கு இன்னும் சாவு வரவில்லையே?’ என்று வாடும் கௌசல்யா தேவியைப் பார்த்து இவர் என்ன சொல்லப் போகிறாரோ?”
“நினைத்த காலம் வாழ்வது மட்டுமல்ல, நினைத்த போது இறப்பதும் கடினமே, இல்லையென்றால் இந்நேரம் கௌசல்யாதேவி தன் உயிரை விட்டிருப்பார்களே?”, என்று பலப் பல விதமாக பேசி அவர்களது ஆற்றாமையை வெளிப்படுத்தினர். இவையனைத்தும் சுமந்திரரின் காதில் விழுந்தாலும், எங்கேயும் எவருக்கும் நின்று பதிலுரைக்காது, நேரே அரசர் இருந்த இடத்திற்கு சென்றார். 
அங்கே தசரதரைக் கண்டு வணங்கிய பின்னர், ராமர் அவருக்குச்  சொன்ன விடயங்களை மன்னரிடம் பகிர்ந்தார். அதைக் கேட்டு துக்கத்தில் தசரதர் மயங்கிச்  சரிந்தார். அருகிருந்த சுமித்திரையும் கௌசல்யையும்  அவரை தூக்கி ஆசனத்தில் அமர வைத்தனர்.
அப்போது மிகுந்த மாணவருத்தத்தில் இருந்த கௌசல்யை, “ஒருவரும் செய்யத்துணியாத காரியத்தை செய்த என் மகனின் தூதுவன் காட்டில் இருந்து வந்திருக்கிறான். அவனிடம் பேசாமல் ஏன் இந்த மௌனம்? இதே கைகேயிக்கு வரங்களைத் தரும்போது விரைவாகவும் மகிழ்வோடும் செய்தீர்களே? இப்போது அதைக் குறித்து வெட்கமும் வருத்தமும் படுவது ஏனோ? ஒருவேளை, ராமனைப் பற்றி கேட்டால் கைகேயி கோபிப்பாளோ என்று எதுவும் கேட்காமல் இருக்கிறீர்களா? அவள் இங்கு இல்லை அதனால் தாராளமாக நீங்கள் சுமந்திரரிடம் பேசலாம்”, என்று குத்தலாக பேசிவிட்டு சௌசல்யை தடுமாற்றதோடு தரையில் அமர்ந்தார். 
மனைவின் சுடுசொல் மனதை பாதித்தாலும் மறுமொழி கூறாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார் மன்னர். இருவரையும் கண்ட அரண்மனைப் பெண்டிர் தங்களுக்குள் பேசி புலம்பி அழ, சேடியர்கள் மாளிகைக்கு வெளியே சென்று இவ்விஷயம் கூறி வருந்தினர். நகரமே ராமர் அயோத்தியை விட்டுச் சென்ற அன்று எவ்விதம் துக்கித்து இருந்ததோ அப்படி துக்கத்தில் தத்தளித்தது. 
மெல்லத் தெளிந்த தசரதர் சுமந்திரரிடம், “ராமன், சீதா, லக்ஷ்மணன் மூவரும் காட்டில் எவ்வாறெல்லாம் சிரமப்படுகின்றனரோ?”, என்று பலவாறு அங்கலாய்த்து, “சுமந்திரா, நீ உடனிருந்து பார்த்தாயல்லவா அவர்கள் வனத்தில் என்ன செய்தனர்? விபரமாக சொல்?” என்று மிகவும் மன உளைச்சலோடு கேட்டார். 
 சுமந்திரரும், “ராமர் சொன்னதை அப்படியே சொல்கிறேன் மன்னரே”, என்றுவிட்டு, “மகா ஞானியும், அனைத்து ஜீவராசிகளாலும்  வணங்கத்தகவருமான என் தந்தைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவியுங்கள். அரண்மனைப் பெண்களுக்கு என் நமஸ்காரங்களை தெரிவியுங்கள். எனது தாயார் கௌசல்யையிடம் நான் நலமாக இருப்பதாய் தெரிவியுங்கள். தெய்வத்தை வணங்குவதுபோல என் தந்தையை வணங்கச் சொல்லுங்கள். அவருக்கு பிரியமான கைகேயியிடத்தும் இணக்கமாக இருக்கச் சொல்லுங்கள்.அரசன் என்ற தகுதி இருந்தால் அவர்கள் வணங்கத்தக்கவர்களே. எனவே, பரதனை வயதில்  இளையவன் என்று கருதி மரியாதைக்கு குறைவாக நடக்கலாகாது, என்று என் அன்னையிடம் சொல்லுங்கள்”
“தம்பி பரதனுக்கு என் க்ஷேமத்தை தெரிவித்து, அவனிடம் எங்களது மூன்று தாய்மார்களிடத்தும் ஒரே மாதிரியாக நடக்கச் சொல்லுங்கள். இளவரசனாக பட்டம் சூட்டப் பெற்றாலும் தசரதரே அயோத்தியின் மன்னர் என்பதால், அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க அறிவுறுத்தியதாக தெரிவியுங்கள்”, என்று சொல்லி.. கடைசியாக மீண்டும் ஒருமுறை, “தாயார் என்பவர் எப்போதும் போற்றுதற்குரியவர், எனவே பரதனிடம் மாற்றாந்தாய் என்ற வித்தியாசம் பாராமல் தாயார்கள் மூவரையும் ஒன்று போல பாவிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்”, என்று ராமரின் வார்த்தைகளை கண்ணீர் மல்க தெரிவித்தார் சுமந்திரர்.
“மன்னரே, ராமர் எவ்வளவுக்கெவ்வளவு  நிதானமாக பேசினாரோ  அவ்வளவுக்கவ்வளவு லக்ஷ்மணர் கோபமாக பேசினார். ‘ராமரிடத்தில் என்ன  குறை கண்டு தசரதர் அவரை காட்டுக்கு அனுப்பினார்? ராமருக்கு இளவரசனாக பட்டம் சூட்டுகிறேன் என்று மக்கள் முன்பாக வாக்கு தந்துவிட்ட பிறகுதானே, தசரதரிடம் கைகேயி பரதன் நாடாளவும் ராமர் வானப்ரஸ்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற வரம் கேட்டது?’
‘நான் ராமனை இளவரசனாக முடிசூட்டுவதாக முன்பே மக்களுக்கு வாக்களித்து விட்டேன், எனவே இந்த வரங்களை உனக்கு தரலாகாது, என்று மன்னர் மறுத்து கூறியிருக்கலாமே?   அவ்வாறு செய்யாமல் மனம் போனபடி, ஸ்ம்ருதிகள் முற்றிலும் ஆதரிக்காத காரியத்தை மன்னர் செய்திருக்கிறார். இது மன்னரின் விருப்பமோ அல்லது விதியின் செயலோ, இது தர்மமல்லாதது. எனவே இதை செய்த தசரதர் இனி என்  தந்தையில்லை. இதோ என் முன் நிற்கும் என் சகோதரர் ராமரே என் தந்தை, அவரே என் எஜமானர். தர்மத்தை அணுவளவும் பிசகாதவரும், மக்களுக்கு ப்ரியமானவருமான ராமரை காட்டிற்கு துரத்திய தசரதர் சக்ரவர்த்தியாக இருக்கும் அருகதையை இழந்தவராகிறார் என்று சொல்லுங்கள்’  என்று உஷ்ணப் பெருமூச்சோடு சொன்னார் இளவல்”, என்று லக்ஷ்மணனைப் பற்றி தசரததரிடம் தெரிவித்தார் சுமந்திரர். 
தொடர்ந்து சீதா தேவியைப் பற்றி, “விதேக நாட்டு இளவரசியோ ஏதும் சொல்லாது திக்ப்ரமை பிடித்தாற்போல் அமைதியாய் இருந்தார். ராமரின் நிலை கண்டு மனம் வருந்தியதை அவர் கண்ணில் வழிந்த நீர் சொல்லியது”, என்றார்.   
 “மன்னரே, அவர்களை வணங்கிவிட்டு திரும்பும்போது என் உள்ளம் பட்ட பாடு சொல்லில் அடங்காது. அவர்கள் நிலை கண்டு என் குதிரைகள் கூட கண்ணீர் சிந்தின. அயோத்தியில் செடி கொடிகள் வாடி, நீர் நிலைகள் வற்றி, காட்டாறுகளில் உள்ள தாமரைகள் கூட வாடி வதங்கி வீழ்ந்து விட்டன. மக்கள் அழுதழுது பெருமூச்சு விடுகிறார்கள். புத்திரனை பிரிந்து தவிப்பது கௌசல்யா தேவி  மட்டுமல்ல, இந்த நகரமே தன் தலைமகனை இழந்து தவிக்கிறது”, என்றார் சுமந்திரர்.
தசரதர் இவையனைத்தையும் கேட்டு ஹீனமான குரலில் தட்டுத் தடுமாறி பேசத் துவங்கினார். ” ஒரு நீச குணம் கொண்ட பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்ற, கற்றறிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள் மற்றும் இந்த நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொள்ளும் அமைச்சர்களை யாரையும் கலந்து ஆலோசிக்காமல்  இப்படியொரு விபரீதமான முடிவை எடுத்தேனே?”
“சுமந்திரா, எனக்கொரு உதவி செய். என் உயிர் இந்த உடலில் இருந்து போவதற்கு முன்பாக ராமனிடம் என்னைக் கொண்டு சேர்த்து விடு.”
“இந்த இக்ஷ்வாகு குலத்தோர் செய்த முன் வினைகள் யாவும் இப்போது ஒருசேரத் திரும்பி நாசம் செய்கின்றதோ? ராமனையும் சீதையையும் ஒருமுறை பார்த்தால் கூட போதும். அவனைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டுமா? ராமா, லக்ஷ்மணா சீதா”, என்று அரட்டியவாறே இருக்கையில் சாய்ந்தார் தசரதர்.
சுமந்திரர் பேசியத்தைக் கேட்ட கௌசல்யா தேவி, “என்னை உடனேயே என் மகனிடம் அழைத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் நான் உயிரை விட்டு விடுவேன்”, என்று கதறினார். 
அதைக்கேட்ட சுமந்திரர் ராமரின் பெற்றோரைத் தேற்றும் விதமாக, வனத்தில் இருக்கும் அம்மூவரும் எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை, மகிழ்வுடனே இருக்கிறார்கள், அதனால் இப்படி கவலைப்பட வேண்டாம் என்று ஆற்றுப்படுத்தினார். 
அதிலெல்லாம் சமாதானமாகத கௌசல்யா தேவி தசரதரை நோக்கி, “மூவுலகும் போற்றும் நற்குணங்களை பெற்ற நீங்கள் உங்கள் இரு மகன்களையும், மருமகளையும் யோசித்துப் பாராமல் அவர்கள் என்னென்ன துயரங்கள் அனுபவிப்பார்களோ என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் மரவுரியோடு காட்டுக்கு அனுப்பிவைத்தீர்கள். பதினான்கு ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் ராமனிடம் கைகேயியின் மகன் பரதன் ஆட்சியை விட்டுக்கொடுப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒருவேளை அவன் விட்டுக் கொடுத்தாலுமே, ராமன் அதை ஏற்பானா?”
“புலி மற்ற மிருகங்கள் சாப்பிட்ட எச்சத்தை என்றேனும் உண்டு பார்த்திருக்கிறீரா? ஏனைய யாக காரியங்களுக்காக படைக்கப்பட்ட அரிசி நெய் போன்றவற்றை அடுத்த யாகத்தில் கற்றறிந்தோர்கள் பயன்படுத்துவார்களா?  அதுபோல தன் சகோதரன் அனுபவித்த ராஜ்யத்தை தான் அனுபவிப்பது இகழ்வு என்றுதான் என் ராமன் நினைப்பான்”
“அவன் போர் புரிய அஞ்சுபவன் அல்லன். எல்லா உலகும் எதிர்த்து ஓரணியில் நின்றாலும் வெல்லும் வல்லமை படைத்தவனாக இருந்தும் வலிமையால் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளாமல், உங்கள் வாக்கை காக்க கானகம் சென்றுள்ளான் என் மகன்.”
“தனது குஞ்சுகளை தானே உண்ணும் ஒருவித மீன் போல எனதருமை ராமன் அவனது தந்தையாலேயே அழிக்கப்பட்டான். இப்படிப்பட்ட உங்களுக்கு ரிஷிகள் கூறிய அரச லக்ஷணங்கள் இருக்கின்றதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது”
“ஹும். எந்த ஒரு பெண்ணுக்கும் அவளது சிறுபிராயத்தில் அவள் தந்தை ஆதாரம், பின் கணவன். அதன் பின் மகன். கைகேயி வசப்பட்ட, அவளது அந்தப்புரமே சதமெனக் கிடந்த உங்களை நான் என்றோ இழந்தேன். இப்போது தங்கள் தயவால் என் மகன் வனத்திற்குச் சென்றுவிட்டான். எனவே நான் அவனையும் இழந்தது போலத்தான். என் சுற்றத்தார் இருப்பதோ வெகு தூரத்தில். இனி யார் எனக்கு ஆதரவு? அவர்களிடம் நான் எங்கனம் செல்வேன்?”
 “மொத்தத்தில் எனக்கு கதியில்லாமல் செய்து விட்டீர்கள். கோசல தேசத்தையும் அழித்தீர். உங்களை அண்டி இருப்பவர்களையும் இந்நாட்டு மக்களையும் அழித்தீர். இந்த பரந்த தேசத்தில் உங்கள் மனைவி கைகேயியும் ஆசை மகன் பரதன் மட்டுமே இன்புற்று இருக்கிறார்கள்”, என்று பலவாறு நிந்தித்து பேசினார். 
இவையனைத்தையும் கேட்டுக்கொண்டு தசரதர், “ராமா ராமா”, என்று கதறியபடி இருந்தார். அதன் பின் தனது இரு கைகளையும் கூப்பியபடி, மனைவியைப் பார்த்து, “கௌசல்யா, உனக்கு அநீதி இழைப்பவர்களையும் மன்னிக்கும் சுபாவமுள்ளவள் நீ. நல்லவனோ,  அஃதில்லாதவனோ ஆனாலும் பெண்ணுக்கு கணவனே தெய்வம் அல்லவா? தர்மம் அறிந்தவளும், வாழ்வில் சகல இன்ப துன்பங்களை அனுபவித்துள்ளவளுமான நீ, ஏற்கனவே மகன் பிரிந்த துக்கத்தில் இருக்கும் என்னைப் பார்த்து இப்படி அமில வார்த்தைகளை பேசாதே”, என்றார்.
கன கம்பீரமாக, அரியணையில் வீற்று நாடாளும் மன்னனாகவே இதுவரை காட்சியளித்த தனது கணவன் தன்னை நோக்கி கைகூப்பி நா தழுதழுக்க பேசுவதைக் கண்டு கௌசல்யா மனம் பதைத்தார்.  அருகே வந்து தசரதரது இரு கைகளையும் பிடித்து,  “என்னை மன்னித்து விடுங்கள். மகனைப் பிரிந்த துக்கத்தில் உங்கள் மேன்மை தெரிந்திருந்தும் பேசத் தகாத வார்த்தைகளை பேசிவிட்டேன். கோபம் பரம சத்ரு, அது நமது தைரியத்தை அழிக்கிறது, நாம் கற்றதையும் கேட்டதையும் அனுபவத்தையும் சேர்த்து நாசம் செய்கிறது. இப்போது அது தெளிவாக புரிகிறது.”
“நம் மகன் அயோத்தியில் இருந்து சென்று இன்றோடு ஐந்து நாட்கள்தான் ஆகிறது ஆனால் இது எனக்கு ஐந்து வருடங்களைப்போல் தெரிகிறது. அந்த துக்கம் அவனைப் பற்றி நினைக்க நினைக்க மேலும் மேலும் பொங்குகிறது”, என்று சமாதானம் சொன்னார். 
அந்நேரத்தில் சூரியனும் அஸ்தமிக்க உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போயிருந்த  தசரதர் ஓரளவு ஆறுதல் பெற்று அயர்ந்து உறங்கினார். 

Advertisement