Advertisement

ஸ்ரீ குருப்யோ நம:

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ; வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண: ; ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம். ; ய: பிபன் சததம்  ராம சரிதாம்ருத சாகரம் ; அத்ருப்த்தஸ்தம் முனிம்  வந்தே ப்ராசேதஸமகல்மஷம்.

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் | வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகண்டம்

சித்ரகூடம்

ஸ்ரீ சீதாராம லக்ஷ்மணர்கள் அந்த அடர் கானகத்தில் நடந்து செல்லும்போது மெல்ல நதி சஞ்சரிக்கும் ஓசை கேட்கலானது. அப்போது ராமர் தனது இளவலைப் பார்த்து, “லக்ஷ்மணா, கேட்டாயா? ஜலதாரையின் சப்தம் கேட்கிறது. கங்கையும் யமுனையும்  சங்கமிக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதோ பார். சற்றே தூரத்தில் புகை தெரிகிறது. அப்படியென்றால் அது அநேகமாக பரத்வாஜ முனிவரின் ஆசிரமாகத்தான் இருக்கும். செல்வோம் வா”, என்று ஆசிரமம் நோக்கி நடந்தார். 
வில்லேந்தி நடந்து சென்ற இவர்களைக்  கண்டு மிருகங்களும், பக்ஷிகளும் பயந்துபோய் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் சென்று தஞ்சமடைந்தன. மூவரும் முனியைக் காண வேண்டி சற்று தூரத்திலேயே நின்றனர். சிஷ்யர் ஒருவர் வந்து ‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’ என்று விபரம் கேட்க, தேவையான தகவல்கள் தந்து பரத்வாஜ முனிவரின் அருளாசி வேண்டும் என்று ராமர் சொன்னார். 
அவர்களை வரவேற்ற பரத்வாஜர், “அயோத்தியில் நடந்த நிகழ்வுகள் எங்கள் செவிகளையும் வந்தடைந்தது. இது இரண்டு பெரு நதிகள் சங்கமமாகும் இடம். புண்ணியமானது மட்டுமல்ல, அழகானதும் கூட. நீவிர் இங்கேயே தங்கி உங்களது தவ வாழ்வைத் துவங்கலாம்”, என்று கூறினார்.
ஆனால் ராமரோ, “அயோத்தியில் இருந்து இந்த இடத்தை சுலபமாக மக்களால் அடைந்துவிட இயலும். எங்களை காணவென்று மக்கள் சாரி சாரியாக வரத் துவங்கி விடுவர்.  அது எங்களுக்கு மட்டுமல்ல, அமைதியாக தவம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்றோருக்கும் சிரமம் தரும். எனவே, இங்கிருந்து சற்று தொலைவில் இன்னமும் ஆளரவமற்ற பகுதியில் நாங்கள் வசிப்பது சரியென தோன்றுகிறது”, என்றார்.
பரத்வாஜ முனிவர் சில நொடி சிந்தித்து, “அப்படியாயின் இங்கிருந்து அறுபது மைல்கள் சென்றீரானால் அங்கே அழகானதொரு வனப் பகுதி இருக்கின்றது. அங்கே ரிஷிகள் வசிக்கின்றனர். அந்த இடத்திற்கு சித்ரகூடமென்று பெயர்”, என்றார். 
அங்கேயே செல்வதாக முடிவெடுத்த ராமர், அன்று இரவு பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இரவு நெடுநேரம் வரை பரத்வாஜருடன் அளவளாவி துயின்றார் ராமர். 
மறுநாள் ஆதவனின் கிரணங்கள் பூமியைத் தொட பொழுது புலர்ந்தது. காலை சந்தியாவந்தனம் முதலான நித்யகர்மாக்களை முடித்து முனிவரை வணங்கிய ராஜகுமாரர்கள் இருவரும், சீதா தேவியும் விடை பெற்றனர்.
அவர்களுக்கு ஆசி கூறிய முனிவர், ராமனைப் பார்த்து,”கங்கா, யமுனை சங்கமமாகும் இடத்தைக் கடந்த பின், காளந்தீ என்ற நதியைக் காண்பீர்கள். இது மேற்கு நோக்கிச் செல்லும் நதி. வேகமாக சுழித்துக் கொண்டு ஓடும். அது ஒரு புராதனமான புண்ய தீர்த்தம். அதன் பின் அம்சுமதி என்ற நதியை எதிர்கொள்வீர். அதையும் கடப்பீராயின், பசுமை நிறைந்த ந்யக்ரோத மரத்தை அடைவீர்கள்.”
“பசுமை போர்த்திய அடர்வனம் அது. அவ்விடத்தில் சித்தர்கள் வசிக்கிறார்கள். சீதை அவர்களை வணங்கி ஆசி பெறட்டும். நீங்கள் அங்கேயே கூட வசிக்கலாம். அல்லது மேற்கொண்டு இரண்டு மைல்கள் சென்றால் மலைகளும் ரம்யமான பதரி மரங்களும், மூங்கில் காடுகளும், வண்ண மலர்களும் சூழ்ந்த சித்ரகூடத்தைக் காண்பீர்கள்”, என்றார்.
பரத்வாஜரை வணங்கி புறப்பட்ட மூவரும், அவர் சொன்ன வழியிலேயே சென்று காளிந்தீ நதிக் கரையை அடைந்தனர்.  ப்ரவாகமாக செல்லும் அந்நதியைக் கடப்பதற்க்காக நீண்ட கட்டைகள், சிறிய மூங்கில் துண்டுகள், வாசனையுள்ள வேரான உசீரம் என்ற நாணல் வகை புல்லையும் சேர்த்து பெரிய படகாக கட்ட ஆரம்பித்தனர். சீதைக்கு நல்லதொரு ஆசனத்தையும் தயார் செய்து, காளிந்தீ நதியைக் கடந்தனர்.
பரத்வாஜர் சொன்னதுபோல பெரிய மரத்தைக் கண்ணுற்ற சீதாதேவி அதை வணங்க, மூவரும் தங்கள் ப்ரயாணத்தை தொடர்ந்தனர். வனத்தில் பக்ஷிகளின் கூக்குரல்களும், வானரங்கள் தாவிக் குதிக்கும் ஓசையும் காதில் கேட்டபடி சீதாராம லக்ஷ்மணர்கள் நடந்தனர். இரவு சூழ ஆரம்பிக்க அன்றைய இரவு அங்கேயே கழிந்தது. 
விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணனை ரகுநந்தனன் மெதுவாக எழுப்பினான். “சௌமித்ரே, காட்டு பக்ஷிகள் கூக்குரலிடுவதைக் கேள்.  நாம் கிளம்ப நேரம் ஆகி விட்டது. புறப்படுவோம்”, என்று சொல்லி அவர்களது நடையை முனிவர் சொன்னபடி, சித்ர கூடத்தை நோக்கி செல்லலாயினர்.
சற்று நேரத்தில் உயர மலைகளும் மிகவும் அழகான இயற்கை காட்சிகளும் பார்வைக்கு விருந்தாக அமைந்தது. “இந்த உயரமான சித்ர கூட மலை சிகரங்களைக் காணும் மனிதன்.., எல்லா கெட்ட எண்ணங்களும் நீங்கப் பெற்றவனாகிறான்; என்றார்.
எழில் மிகுந்த சித்ரகூடத்தை அடைந்த ஸீதாராம லக்ஷ்மணர்கள், நேரே வால்மீகி ஆசிரமம் சென்று முனிவரை வணங்கி அவரிடம் ஆசிபெற்று கொண்டனர். ராமரின் ஆலோசனையில் பேரில் லக்ஷ்மணர் அங்கே ஒரு பர்ணசாலையை அமைத்தார். அப்போது ராமர் அங்கிருந்த நதியில் நீராடிவிட்டு வந்தார்.
பின், சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி, முறைப்படி வாஸ்து பூஜை செய்து அங்கே மூவரும் வசிக்கலாயினர். இயற்கை எழில் மிகுந்த சித்ரகூடம், மால்யவதி நதிக்கரை, அரண் போல சுற்றிலும் மலைகளென்று ரம்யமாக அமைதியான சூழலில் இருந்ததால், அயோத்தியில் இருந்து வெளியேறிய நினைவுகளும் துயரங்களும் ராமரின் மனதில் இருந்து மெல்ல அகன்றது. 

Advertisement