Advertisement

ஸ்ரீ குருப்யோ நம:

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் |

ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்||

ஸ்ரீ ராமதூதாய நம:

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்யாகாண்டம்

13. குகன் சந்திப்பு.

அயோத்தியில் இருந்து புறப்பட்ட சீதா ராம லக்ஷ்மணர்கள், மூன்று உலகங்களிலும் பாயும் தெய்வீகமான நதியும், குளிர்ந்த நீரோட்டம் கொண்டதும்,  முனிவர்களால் வணங்கப்படுவதுமாகிய புண்ணிய நதியான கங்கையை வந்தடைந்தனர்.

அவ்விடம் சிருங்கவேரபுரம். மலர்களும் தளிர்களும் நிறைந்து ரம்மியமாக காட்சி தந்த புங்க மரத்தின் அடியில் தங்கலாம் என்று ராமர் முடிவு செய்தார். மூவரும் ரதத்திலிருந்து இறங்கி அந்த மரத்தை சென்று அடைந்தனர். தேரோட்டியான சுமந்திரரும் குதிரைகளை அவிழ்த்து மேய்ச்சலுக்கு விட்டு, மரத்தின் அருகே நின்றார்.

அப்போது ராமரின் நெடுநாளைய நண்பரும், நிஷாதக வகுப்பைச் சேர்ந்த குகன் என்ற பெயருடைய அந்தச் சிருங்கவேரபுரத்தின் தலைவன், தனது அமைச்சர்கள் மற்றும்  உறவினர்களோடு ராமரைக் காண வந்தான்.
அவர்கள் வருவதைக் கண்ட இராமரும் லக்ஷ்மணரும், எதிர்கொண்டு நடந்து சென்று அவர்களை சந்திப்பதற்கு விரைந்தனர்.
ராமரை தவக்கோலத்தில் கண்ட குகன் மிகவும் மன வேதனை பட்டு, “ராமா, தங்கள் வரவு நல்வரவாகட்டும். அயோத்தி எப்படியோ, அப்படியே இந்த சிருங்கவேரபுரமும் உங்களுடையதே. நான் தங்களுக்கு என்ன சேவை செய்யட்டும்? தயை கூர்ந்து தாங்கள் இந்த நாட்டை ஏற்று எங்களுக்கு நல்லாட்சி வழங்குங்கள். நீங்கள் புசிப்பதற்காக பல்வகை அன்னங்கள், துகையல் வகைகள், இனிப்பு பலகாரங்கள், பால் போன்ற பானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உங்களுக்கு நல்ல படுக்கை வசதியும், குதிரைகளுக்கு தீனியும் தருவிக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேணும்” என்றான் குகன்.
அவனது நயந்த பேச்சில் மகிழ்ந்து, குகனை தன்னோடு சேர்த்து ஆரத்தழுவிக் கொண்டார் ராமர். “குகனே! உனது உபசாரத்தில் மனம் களித்தேன். நீயும் உன் சுற்றத்தாரும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் உள்ளதைக் கண்டதே எனக்குப் பெரும் பேறு. உன் நண்பர்கள் சுகமா? ராஜாங்க வரவு செலவு அனைத்தும் சரியாக உள்ளதா?” என்று வினவி, “தவறாக எடுத்துக்கொள்ளாமல், நீ கொணர்ந்த அனைத்தையும் திரும்ப எடுத்துச் செல். நீ கொண்டு வந்தவைகளில் குதிரைக்கான தீனியைத் தவிர எனக்கெதுவும் வேண்டாம். நான் காட்டில் கிடைக்கும் உணவினை மட்டும் எடுத்துக்கொள்ள விரதம் மேற்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
பின் தனது மரவுரியை அங்கவஸ்திரமாக்கி மாலைக் கடன்களை செய்து முடித்து, லக்ஷ்மணர் கொண்டு வந்த நீரை மட்டும் பருகி, அங்கே அந்த மரத்தடியில் தன் சகதர்மிணியோடு படுத்துறங்கினார் ராமர். தன் தம்பியையும் படுத்து உறங்கச் சொல்ல, மௌனமாய் மறுதலித்து அவரது கால்களை சுத்தம் செய்த லக்ஷ்மணர், கொஞ்சம் தள்ளி இருந்த மரத்தின் அருகே நின்று காவல் காத்தார். குகனும் சாரதியும் கூட இளவலுடன் விழித்திருந்து ராமரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது குகன் லக்ஷ்மணரை பார்த்து,”நாங்கள் இங்கிருக்க நீங்கள் பாதுகாப்புக் குறித்து கவலை கொள்வதேன்? நீங்கள் ராஜபுத்திரர்கள், இந்த படுக்கை உங்களுக்காக தருவிக்கப்பட்டது. நீங்கள் இதில் உறங்கி இளைப்பாருங்கள். இங்கே நாலாபுறமும் நாங்கள் அரணாக நின்று யாதொரு துன்பமும் உங்கள் மூவரையும் அணுகாதவாறு காக்கிறோம்” என்று சொன்னான்.
அதற்கு லக்ஷ்மணர்,”குகனே, தர்ம நியாயத்திலிருந்து விலகா மனம் கொண்ட நீ இருக்கையில் எங்களுக்கு பாதுகாப்புக்கு குந்தகம் விளையுமா? தசரத புத்திரர், யுவராஜாவாக ஆகவேண்டியவர் இப்படி புல் தரையில் மனைவியுடன் உறங்குவது கண்டும் எனக்கு நித்திரை வருமா? தேவாசுரர்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் யாரை வெல்ல இயலாதோ, அவர் இங்கே அமைதியாக மரத்தினடியில் உறங்குகிறார். இதைக் கண்டும் என் மனம் அமைதியான உறக்கத்தை தழுவுமோ?”
“தந்தை தசரதர் பல்வேறு யாக யக்ஞங்கள் செய்து பிறந்த மூத்த புத்திரரான ராமரின் மீது உயிரையே வைத்திருக்கிறார். அவரைப் பிரிந்து அதுவும் தன் பொருட்டால் அவர் துயருறுகிறார் என்பதை எண்ணி எண்ணி மாய்ந்து, தந்தை உயிர் நீப்பார். அவர் இறந்தால் கௌசல்யா தேவியும், அதன் பின் என் தாய் சுமித்ரையும் உயிர் துறப்பார்கள். இந்த வனவாசம் முடித்து நல்லபடியாக நாங்கள் கீர்த்தி மிகுந்த அயோத்தி நகர் சென்று எங்கள் தாய் தந்தையரை மீண்டும் காண்போமா?” என்று பலவாறாக புலம்பினார்.
ராஜகுமாரனாகிய லக்ஷ்மணனின் துயரத்தைக் கேட்ட குகனின் மனநிலை  சொல்லொணா உடல் உபாதையால் துன்புறுகிற யானையைப் போல் இருந்தது. முடியா இரவே என்று அனைவரும் நினைக்குமளவுக்கு இருந்த அந்த இரவு ஒரு வழியாய் நிறைவுற்று பொழுது புலர்ந்தது.
(வால்மீகி ராமாயணத்தில் குகன் ராமரின் நண்பர் என்றும், அவர் குறுநில மன்னன் என்று சொல்கிறார். ஆனால், கம்பரோ, அவரை ஆயிரக்கணக்கான ஓடங்களைக் கொண்ட ஒருவன் என்று கூறுகிறார். அதுபோல, கடுகடு முகம் கொண்டவன், பலவான், சிம்மக்குரலோன் என்று வர்ணிக்கிறார்.
அடுத்து, வால்மீகி தராத ஒரு சிறப்பை குகனுக்கு தந்தார் கம்பர். ராமர் அவரை தன சகோதரனாக ஏற்றுக் கொண்டார் என்பது தான் அது. அப்பாடல்,
முன்பு உளெம், ஒரு நால்வேம், முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.
பொருள்: முன்பு நாங்கள் நால்வராய் இருந்தோம், முடிவு இருக்கின்றது என்று சொல்ல இயலாத அன்பு கொண்டோம், எனவே இனி  நாம் ஐவரானோம், என்று குகனை தம்பியாக ஏற்றுக்கொண்டதாக கம்பர் வர்ணிக்கிறார் ]
ராமர் லக்ஷ்மணரிடம், கங்கையை கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த, அவர்கள் செல்ல ஒரு அழகான படகு கொண்டுவரப்பட்டது.
“தேவதேவா! சிங்கம் போன்றவரே! தங்களை அழைத்துச் செல்ல படகு தயாராய் உள்ளது, அடியேனுக்கு அடுத்த ஆணை என்னவோ?”,  என்று குகன் வேண்டி நிற்க, “எமக்கு தேவையானவைகளை எங்கள் மனம் குளிரும் வண்ணம் நீ செய்தாகி விட்டது. நாங்கள் கொண்டு வந்த பொருட்களை படகில் ஏற்றி எங்களை வழியனுப்பி வைத்தால் போதுமானது” என ராமர் மொழிந்தார்.
தேரோட்டியாக வந்த மந்திரி சுமந்திரரை அயோத்திக்கு செல்லுமாறு ராமர் வலியுறுத்த,”ராமா! தங்களைப் போன்றவர்களுக்கே இந்த நிலை வந்ததென்றால், விரதம், வேத பாராயணம், கருணை, நேர்மை இவற்றால் என்ன பயன்? உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டாமென்று கூறி, பாவமே உருவாகக் கொண்ட கைகேயியின் ஆளுகைக்கு எம்மை விட்டு விட்டீர்” என்று வருத்தத்தோடு தெரிவித்தார்.
“சுமந்திரரே! இக்ஷ்வாகு வம்சம் உங்களைப்போன்ற அபிமானிகளாலே ஜீவித்திருக்கிறது. என் தந்தை வயதில் பெரியவர். அவரை என்னைப் பற்றிய கவலையினை விடுத்து, மற்ற ராஜரீக காரியங்களில் திசை திருப்புங்கள். கைகேயியின் விருப்பத்தை நிறைவேற்ற மன்னர் எதைக் கூறினாலும் அதை நிறைவேற்ற ஒரு கணமேனும் தயங்காதீர்கள்.”
“மன்னருக்கு என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்ளுங்கள். எங்கள் மூவருக்கும் இந்த வனவாசத்தினால் யாதொரு அசௌகரியமும் ஏற்படவில்லை என்று தெரிவியுங்கள். தாயார் கௌசல்யா தேவியிடம் எங்களது பணிவான வணக்கங்களை தெரிவித்து நாங்கள் நலமுடன் இருப்பதையும் பகிருங்கள். பரதனை வரவழைத்துப் பட்டாபிஷேகம் நடத்தியபின், அவனை மூன்று தாயாரிடமும் பிரியமாக இருக்கும்படி சொல்லுங்கள். என் வாழ்த்துகளையும் அவனுக்கு தெரிவியுங்கள்” என்று ராமர் கூறினார்.
“தயை கூர்ந்து என் விண்ணப்பத்தை கேட்க வேண்டும். நீங்கள் இல்லாமல் நான் எப்படி அயோத்தி திரும்புவேன்? நான் நுழையும் முன்பே ராமர் எங்கே? என்ற அவலக்குரல் நகரெங்கும் கேட்குமே அவர்களுக்கு நான் எங்ஙனம் பதிலுரைப்பேன்? நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று எவ்வாறு துணிந்து கௌசல்யா தேவியிடம் பொய் உரைப்பேன்? (காட்டில் சீதா ராம லக்ஷ்மணர்கள் கஷ்டப்படுகிறாரல்லவா?) நீங்கள் இல்லாது இந்த குதிரைகளும் கூட தேரை இழுக்காது. என்னை தயவுசெய்து காட்டில் உங்களுடன் வசிக்க அனுமதி தாருங்கள். நீங்கள் வனவாசம் முடித்து திரும்ப அயோத்தி செல்லும்போது இதே தேரில் உங்களோடு நாடு செல்கிறேன். நீங்கள் இதை மறுத்தால், இக்கணமே தேரோடு தீயில் வீழ்வேன்” என்று கதறினார் சுமந்திரர்.
“சுமந்திரரே! உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். ஆனால் இப்போது நீங்கள் அயோத்தி செல்ல வேண்டிய கட்டாயத்தினையும் வலியுறுத்துகிறேன், கேளுங்கள். நீங்கள் தேரோடு திரும்பி நகருக்குச் செல்லாவிட்டால், நான் மனம்மாறி ஒருவேளை அயோத்தி திரும்பி விடுவேனோ என்ற அச்சமும், சந்தேகமும் கைகேயிக்கு வர வாய்ப்புண்டு. மன்னரின் வார்த்தையில் அவநம்பிக்கையும், மனக்கிலேசமும் அவருக்கு எப்போதும் இருக்கும். அஃதன்றி, நீங்கள் சென்று ராமன் கானகம் ஏகினான் என்று உரைத்தீரேயானால், அவர் மனம் நிம்மதியுறும். தந்த வாக்கினை காப்பாற்றினோம் என்ற மன திருப்தியாவது மன்னருக்கு மிஞ்சும். என் வார்த்தைப்படியும், மன்னரின் ஆணையை நிறைவேற்றவும் தாங்கள் நிச்சயம் அயோத்தி சென்றே ஆகவேண்டும். அத்துடன் நான் சொன்ன விஷயங்களையும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்” என்று ராமர் கூறினார்.
பின் குகனிடம்,”நான் இங்கே உனது ஆதரவோடு இருப்பது முறையாகாது. நாங்கள் துறவிகள் போல வாழ வேண்டும். எனவே, ஆலமரத்தின் பாலை கொண்டு வரச் சொல். அதை முடியில் தரித்து சடா முடியாக்கி முடிகிறோம்”, என்றார் ராமர்.
அங்கனமே குகனும் செய்ய, ராம லக்ஷ்மணர்கள் இருவரும் சடாதாரியானார்கள். பின், மூவரும் படகில் ஏறி கங்கையைக் கடந்தனர். சீதை பதினான்கு வருடங்கள் இனிதே கழிந்து மீண்டும் நல்ல நிலையில் நாங்கள் திரும்ப வேண்டும் என்று கங்கையிடம் ப்ரார்தித்துக் கொண்டார்.
அக்கரைக்கு சென்றதும், ராமர் லக்ஷ்மணரிடம், “சீதையை காக்கவேண்டியது நம் தலையாய கடமை. எனவே, நீ முன்னே செல், உன்னை சீதை தொடர்வாள், நான் இருவருக்கும் காவலாக வருகிறேன்” என்று கூறி, காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தனர். ஒரு பெரிய மரத்தடியை அடைந்து அங்கே இளைப்பாறி அன்றைய இரவை அங்கே கழிக்க முடிவு செய்தனர்.
குகனோடு கங்கையின் மறுகரையில் நின்ற சுமந்திரரோ, கண்ணில் நீர் வழிய படகு சென்ற திசையையே பார்த்து நின்றார்.
மரத்தடியில் இளைப்பாற அமர்ந்திருந்த ராமர், லக்ஷ்மணரைப் பார்த்து, “நாம் இனி இரவில் கூட விழிப்புடன் இருக்கவேண்டும், சுமந்திரரும் அருகே இல்லையல்லவா? சீதையைக் காக்கும் பொறுப்பும் உள்ளதே? புற்களையும், இலைகளையும் கொண்டு படுக்கையைப் போட்டு, அதில் இந்த இரவு வேளையை கழிப்போம்”, என்றார்.
அதேபோல இலை தழைகளை விரித்து படுக்கை தயாராக, அதில் அமர்ந்த ராமர்,”லக்ஷ்மணா, அயோத்தியில் தசரதர் இப்போது உறக்கமின்றி தவித்துக் கொண்டிருப்பார், கைகேயி தனது மனோரதம் நிறைவேறிவிட்டதென மகிழ்வார். தன் மகன் பரதனுக்கு முழு அரசுரிமையும் கிடைக்க நம் தந்தையை கொல்லுமளவுக்கு சென்றாலும் ஆச்சர்யமில்லை. அவரோ வயதானவர், கைகேயியின் பிடியில் இருப்பவர். அவரால் என்ன செய்ய முடியும்?”
“மனிதன் தர்ம, அர்த்த, மோக்ஷ விஷயங்களில் நாட்டம் கொள்வதைவிட காமத்தில் அதிக நாட்டம் கொள்கின்றான். தர்மத்தில் பற்றுக்கொண்டு நீதியை நிலைநாட்டுவதில், பொருள் ஈட்டுவதில், ஆன்மீக தேடுதலையும் விட இன்பத்தை துய்ப்பதில்தான் அதீத விருப்பமுடியவனாக இருக்கிறான். இல்லாவிட்டால், நன்கு கற்றறிந்த மன்னர், தனது மனைவியின் விருப்பத்திற்காக, மகனைப் பிரிய துணிவாரா? சரி நானோ காட்டுக்கு வந்துவிட்டேன், இனி பரதன் முடிசூட்டிக்கொள்ள எவ்விதமான எதிர்ப்பும் இருக்காது. இந்த இரு காரியங்கள் நடப்பதற்காகத்தான், கைகேயி, நம் தந்தையை மணந்தார் போலும்!”
“புதிதாக பொருள் சேர்ந்த அகம்பாவத்தில் இப்போதே, அவர் நம் தாயார்களை அவமரியாதை செய்ய துவங்கி இருப்பார் என்றே தோன்றுகிறது.  எனது தாயார் எத்தனையோ விரதங்கள் மேற்கொண்டு என்னை ஈன்றார். அவர் வளர்க்கும் சாரிகை என்ற பக்ஷி, தன்னருகே இருக்கும் கிளியைப் பார்த்து, “கௌசல்யாவின்  ஜென்மபகையை கொத்தி துன்புறுத்து” என்று கூறுமாறு பழக்கும். அதைக்கேட்டு என் அன்னை மகிழ்வார். அந்த அற்ப சந்தோஷத்தைக்கூட என்னால் தர இயலாது போய்விட்டது. என்னை மகனாய் பெற்று அவர் அடைந்த நன்மை என்ன? அவர் துயருறும்போது அதை எதிர்க்க கதியற்று நான் இங்கே இருக்கிறேன்.”
“என் ஒரேயொரு பாணத்தால் இந்த ராஜ்யத்தை என்னால் அடைய இயலும், ஆயினும் என் வீரத்தை தந்தையிடமா காட்டுவது? அது தர்மமல்லவே? தர்ம வழி நடப்பவனுக்கல்லவா இகபர மோக்ஷம் கிட்டும் என பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்?” என்று  மன வருத்தத்தோடு பேசி, பின் இளவலைப் பார்த்து, “லக்ஷ்மணா! இனி சீதையும் நானுமாக வனவாசத்தை தொடர்கிறோம், நீ சென்று நம் தாய்மார்களுக்கு துணையாய் நில், நாம் இன்னும் அயோத்தியில் இருந்து வெகுதொலைவிற்கு வந்துவிடவில்லை” என்று கூறினார்.
ராமர் துக்கமுற பேசியதைக் கேட்டு லக்ஷ்மணர்,”நீங்கள் இவ்வாறு வருந்துவது நல்லதல்ல. உங்கள் பேச்சினால், நானும் சீதையும் மிகவும் சங்கடப்படுகிறோம். தவிர, என்னை அயோத்தி திரும்ப சொல்கிறீர்கள், தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டால் எத்தனை நாழிகை உயிரோடு இருக்குமோ, அத்தனை நாழிகை மட்டுமே உங்களை நீங்கி நான் உயிர் தரிப்பேன். அதனால் என்னை போவென்று சொல்லாதீர். எனக்கு நகரமோ, தாயோ, சகோதரன் சத்ருக்கனனோ, தசரதரோ தேவையில்லை. நீங்கள் இல்லாத இடம் சொர்க்கமே என்றாலும் எனக்கு அது நரகமே” என்று தழுதழுத்தார். தம்பியின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அமைதி காத்தார். அந்த ஏகாந்த இரவில், நிலவொளியில் இருவரும் இரு அரிமாவைப்போல் ஒளியோடு இருந்தனர்.
[ ராமர் இப்படி புலம்பலாமா? கேள்வி எழுகிறதா? ஆஹா! பேஷாக புலம்பலாம். ஒரு சாமான்யன் என்ன செய்வானோ, அதைத்தான் அவர் செய்திருக்கிறார். தர்மம் காக்க தந்தையின் வாக்கிற்கு கட்டுப்பட்டு கீழ்படிந்தாயிற்று. இதோ, வனவாசமும் ஆரம்பமாயிற்று, நேற்று வரை சுகபோக வாழ்விற்கு பழகியவர்கள் இன்று திடீரென காட்டில் வாழ வேண்டிய நிர்பந்தம். மறுக்கவோ, எதிர் பேசுவோரை தகர்க்கவோ எத்தனை நேரமாகும்? வீரம் விவேகமென்று என்று அவ்வாறு செய்யவில்லையே? தர்மம் எதுவோ அதைக் காக்க இன்னல்கள் அனுபவிக்க ஆரம்பித்தாயிற்று. ஆயினும் இந்நிலை புதிதல்லவா? ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறுகிறது, அது புலம்பலாய் வெளிப்படுகிறது. இது சாமானியனின் நிலை.]
இரவை அங்கேயே கழித்தவர்கள், மறுநாள் கால்நடையாக கணிசமான தூரத்தை கடந்தனர். வழியெங்கும், இயற்கை காட்சிகளையும், பூத்துக் குலுங்கும் பூக்களையும், ஆர்பரிக்கும் அருவிகளையும், நீர்நிலைகளில் நிறைந்திருக்கும் தாமரை, அல்லி போன்ற மலர்களையும் கண்ணுற்று மகிழ்ந்தார் சீதை.
சர்வம் ஸ்ரீ உமாமகேஸ்வர பரப்ரஹ்மார்ப்பணமஸ்து :

Advertisement