Advertisement

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம:

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ||  ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்

12. தேர் நகர்ந்தது.

ராமர் சென்ற ரதம் எழுப்பிய புழுதி அடங்கும் வரை, தசரதரின் பார்வை அந்த திசையிலேயே நிலைபெற்று நின்றது. பின் தன் நிலை தடுமாறி அவர் தரையில் வீழ, அருகே நின்ற கௌசல்யையும் கைகேயி-யும் அவரை தாங்கி பிடித்து எழுப்ப முன்வந்தனர். அப்போது மன்னர் கைகேயியைப் பார்த்து, “தீச்சிந்தையுடையவளே, என்னைத் தொடாதே, நீ என் மனைவியுமல்ல, என் உறவுமல்ல, உன்னைக் கண்ணால் காணக்கூட நான் விரும்பவில்லை. பொருள் ஒன்றிலேயே கருத்தினைக் கொண்டவளும் தர்மத்தை கைவிட்டவளுமான உன்னையும், உன் செயலை சரியெனக் கொள்ளும் உனக்கு அடங்கி நடக்கும் உன் பணியாளர்களையும் நான் நிராகரிக்கிறேன்”

“அக்னி சாட்சியாக கைப்பிடித்த உன்னை இன்றோடு கைவிடுகிறேன். பரதன் இந்த அகண்ட அயோத்யா ராஜ்யத்தை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டானேயானால், அவன் செய்யும் பிதுர் காரியங்கள், அளிக்கும் பிண்டம் முதலியன என்னை வந்து சேரா”, என்று கோபத்தோடு மொழிந்து புழுதி படிந்த உடலோடு நின்ற தசரதர் கௌசல்யையோடு மாளிகையை நோக்கி நடந்து சென்றார்.

தெரிந்தே ஒரு *அந்தணனைக் கொன்றவன், கொழுந்து விட்டெரியும் தழலுக்குள் கைவிட்டவன் எவ்வாறு துயருறுவானோ அந்த நிலையில் தசரதர் இருந்தார். ரதம் சென்ற பாதையையே திரும்பி திரும்பி பார்த்து சென்ற மன்னரின் முகம் ராகுவால் பீடிக்கப்பட்ட சந்திரனை ஒத்திருந்தது.

(அந்தணன் / பிராமணனை கொன்றால் ப்ரஹ்மத்தி தோஷம் ஏற்படும் என்பது அந்நாளைய கருத்து. அதுபோல, பிராமணன் என்பவன் அந்நாளில்..  குரு ஸ்தானத்தில் விளங்குபவர். அவருக்கு அதீதமான கட்டுப்பாடுகள் உண்டு. பொருள் சேர்ப்பதோ, பொருளின் மீது ஆசை கொள்வதோ, தர்மத்திற்கு புறம்பாக நடப்பதோ, அனாவசியமாக தனது சக்தி / தபோவலிமையை பிரயோகிப்பதோ ஒரு பிராமணன் செய்யக்கூடாதவை.

பிராமணன் என்பவன் பிறப்பினால் அந்த ஸ்தானத்தை பெறுபவன் அல்லன், அவன் தனது நடத்தையினால் ப்ராஹ்மணன் ஆனவன். சிறந்த எடுத்துக்காட்டு, விசுவாமித்திரர், இவர் பிறப்பால் க்ஷத்ரியர், ஆனால் ப்ரஹ்மரிஷி பட்டம் பெற்றவர். ராமருக்கு குரு.

பிராமணர்கள் அவர்களை சுற்றியுள்ள சமூகத்திற்காக பிரார்த்திக்க, மன்னர்களுக்கு இறையின் அனுக்கிரஹம் கிடைக்க, மக்களுக்கு நல்லவைகளை எடுத்து சொல்ல.. கடமைப்பட்டவர்கள். கண்டிப்பாக தன்நலம், சுயம், அழுக்காறு நீங்கியவர்களாய் இருக்க வேண்டியவர்கள்.

இன்று அப்படி ஒரு பிராமணன் எங்கேனும் இந்த நியதிப்படி இருக்கின்றானா என்று கேட்டால்.., என் சிற்றறிவுக்கு எட்டியவரை இல்லையென்பதே என் பதில். இது ஏதும் ஜாதி துவேஷத்தோடு சொல்லும் வார்த்தைகள் ஆகா, இயலவில்லை என்ற ஆதங்கத்துடன் வெளிவரும் வார்த்தைகள், சரி கதைக்கு வருவோம்)

எந்த மகனை ஒரு கணம் பார்த்தாலும், தன் மனம் சொல்லொணா மகிழ்வினை அடையுமோ அந்த மகன் நகர எல்லையை அடைந்து விட்டான் என்பதை அறிந்த தசரதர் மனம் வெதும்பி, “ராமனை ஏற்றிச்சென்ற புரவியின் குளம்பு சுவடுகள் தென்படுகின்றன, ஆனால் என் செல்வனைக் காணவில்லையே?, வாசனையான முகில் சந்தனம் பூசி, சுற்றிலும் பணியாட்கள் சாமரம் வீச, ஹம்சதூளிகா மஞ்சத்தில் படுத்துறங்கிய என் மகன், இன்று மரத்தடியிலோ, பாறையிலோ தலைவைத்து படுத்துறங்கப் போகிறான். தூசும் தும்புமான மேனியோடு அருவிகள் சூழ்ந்த பிரதேசத்தில் வாழும் களிறைபோல் உறங்கி எழுவான். மாவீரனும் உலகைக் காக்க பிறந்தவனுமாகிய (இங்கே அரச பட்டத்தை குறிப்பதாக கொள்ள வேண்டும்) ராமனும், லக்ஷ்மணனும், சுக சம்பத்துகளோடு வாழ வேண்டிய ஜனக புத்திரியும், காலில் முட்கள் தைக்க நடந்து செல்லப் போகிறார்கள். அங்கிருக்கும் மிருகங்களின் கர்ஜனையைக் கேட்டு மிருதுவான சுபாவமுடைய சீதை பயத்தால் நடுங்கப்போகிறாள்”

“அடி கைகேயி, புருஷோத்தமனான அவனின்றி நான் உயிர் தரிக்க மாட்டேன் என்பதை அறிந்தும் நீ இப்படியான வரம் கேட்டாய். கைம்பெண்ணாக இந்நாட்டையும் அதன் செல்வத்தையும் நீயே ஆள்வாய்”, என்றார் தசரதர்.

அவர் நடந்து மாளிகைக்கு செல்லும்போது, அயோத்தி நகர வீதிகள் வெறிச்சிட்டிருந்தன. வீடுகளின் உள்ளும் புறமும் ஆளரவமற்று இருந்ததையும், கடை வீதிகள், ஆலயங்கள் மூடப்பட்டிருந்ததையும், ராஜவீதியில் மக்கள் நடமாற்றமின்றி இருந்ததையும், அங்கிங்கு காணப்பட்ட ஒன்றிரண்டு மனிதர்களும் களைப்பு-தளர்ச்சி-சோகம் இவற்றால் பீடிக்கப்பட்டவர்களாயும் இருந்ததையும் கண்ணுற்று புலம்பியவாறே சென்றார். (அவரது மாளிகையில் இருந்து கொஞ்ச தூரம்வரை மகனை பின் தொடர்ந்து வந்தார் அல்லவா?).

பின்னர் அவர் கேட்டுக்கொண்டதின் பேரில், பணியாட்கள் அவரை சௌசல்யையின் மாளிகைக்கு கைத்தாங்கலாக அழைத்து சென்று அங்கே ஒரு இருக்கையில் அமரவைத்தனர். நிலவில்லா வானம் போல், இரு புதல்வர்களும் மருமகளும் இல்லாத அம்மாளிகை காட்சியளித்தது. தனது கையை தூக்கி, “அட ராமா எங்களை விட்டு போனாயே!, நீ உன் வனவாசம் முடித்து திரும்பி வரும்வரை உயிரோடிருந்து உன்னை பார்த்து பரவசம் அடைபவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள்”, (அது வரை அவர் உயிர் தங்காது என்பதைப் புரிந்தவராக) புலம்பி, “கௌசல்யா, அருகே இருக்கிறாயா? ராமனை பின்தொடர்ந்து சென்ற என் பார்வை இன்னும் மீளவில்லை, என்னைத் தொட்டு நீ என் அருகில் இருப்பதை உணர்த்து”, என்றார்.

கௌசல்யாவின் நிலையோ தசரதரை விட மோசம். பின் அவரென்ன செய்வார்? அவரும் தன பங்கிற்கு கணவரின் அருகே அமர்ந்து புலம்ப ஆரம்பித்தார், “நச்சுப்பாம்பான கைகேயி, சமயம் பார்த்து என் மகன் மேல் விஷம் உமிழ்ந்து விட்டாள். அடிக்கடி தோலை உரிக்கும் பாம்புபோல இனி இங்கே சுற்றித் திரிவாள். நல்லபாம்பு வீட்டில் சுற்றினால் அச்சமடைவதை தவிர்க்க இயலுமோ? அவள் மனம் மகிழ்வதற்கென, உங்களால் காட்டுக்கு அனுப்பப்பட்ட செல்வங்கள் இனி என்ன துன்பம் காணப்போகிறார்களோ?”

“அவர்கள் மூவரையும் அயோத்தி மாநகர மக்கள் மனமுவந்து மலர்தூவ, அந்தணர்கள் வாழ்த்தொலிக்க சீரும் சிறப்புமாக நான் காணும் நாள் எப்போதோ? இந்த அயோத்தி மீண்டும் தனது பொலிவை என்று அடையுமோ?”

“எந்த பிறவியிலோ, கன்றுக்கு பால் தர தயாராய் நின்ற பசுவின் காம்புகளை நான் வெட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் இந்நிலை எனக்கு ஏற்படுமா? கொடுங்  கோடைச் சூரியன் அவனியை பொசுக்குவதுபோல ராமனின் பிரிவு என்னைக் கொல்கிறது. நான் இனி உயிர்வாழ மாட்டேன்”, என்று பலவாறாக புலம்பினார்.

அப்போது அவர் அருகே இருந்த கலங்காத திடசித்தமுடைய சுமித்திரை, “நல்ல குணங்கள் நிரம்பிய புருஷோத்தமனனான ராமனை நினைத்து வருந்துவதேன்? அதில் ஏதேனும் பயனுண்டோ? அவன் தந்தையின் சொல்லக் காக்க, அவர் பெருமையை நிலைக்க செய்ய வனம் சென்றுள்ளான். அவன் பலசாலி, தர்மவான். பெரியோர் அறிவுறுத்திய நன்னெறியை கடைபிடித்து தர்மத்தின் வழி நடக்கின்றான். இக்காரியத்தினால் அவனுக்கு மேன்மையான கீர்த்தியும், நல்லுலகும் கிடைக்கும். அனைத்து உயிர்களுக்கும் மித்ரனாகியவனும், பாபம் என்ற சொல்லையே அறியாதவனுமாகிய லக்ஷ்மணன் ராமனின் பணிவிடையை மேற்கொள்ள சென்றுள்ளான்”

“ராமனின் மனைவி, விதேகநாட்டு இளவரசி சீதையும் கணவனின் காலடியை  தொடர்ந்து நடக்க சித்தம் கொண்டு உடன் சென்றுள்ளாள். எல்லா கர்மங்களை விடவும் தர்மத்தை கடைப்பிடிப்பதே முதலானது என்று நிச்சயத்துள்ள ராமனின் புகழ் மூவுலகும் பரவும். அவன் கொண்ட கொள்கையின் நிலைப்பாடுணர்ந்த ஆதவ கிரணங்கள் அவனை சுடா. சந்திரனோ தண்மையான ஒளி கொடுக்கும், காற்று தென்றலாய் வருடி செல்லும். விசுவாமித்திரர் அளித்த அஸ்திரங்கள் அவர்களைக் காக்கும்”

“தன் தோள்வலிமையில் நம்பிக்கையுடைய ஆண்சிங்கம் அவன், காட்டிலிருந்தாலும் அரண்மனையில் இருப்பதைப்போன்றே மன நிறைவுடன் இருப்பான். எவருடைய அம்புக்கு குறி தப்பாதோ, அவரைப் பார்த்து இந்த அகிலமும் அடங்கும். ராமன் சூரியனுக்கு ஒளி தருபவன்; தூய அக்னிக்கு புனிதம் தருபவன்; மேன்மைக்கு மேன்மை தருபவன்; புகழுக்கு கீர்த்தி அவன்;  பொறுமையின் பொறுமை அவனால் வந்தது. இவ்வளவு மேன்மையானவனுக்கு யார் தீங்கிழைக்க இயலும்?”

“விரைவில் நாடு திரும்பி மன்னனாக ராமன் முடிசூட்டிக் கொள்வதை நீ பார்க்கத்தான் போகிறாய். இன்று வழியும் உன் சோகக்கண்ணீர் அன்று ஆனந்தக் கண்ணீராய் மாறும்”

“தேவி, கௌசல்யா, கானகம் கிளம்பும்போது ராமனின் முகத்தில் கிஞ்சித்தளவு சோகமோ, அமங்கலமான அறிகுறிகளோ காணப்படவில்லை. எனவே அவன் சீதா லக்ஷ்மண சமேதராக விரைவில் நாடு திரும்புவதை நீங்களும் இந்நாட்டு மக்களும் கண்டு ஆனந்திக்க போகிறீர்கள்”, என்று பலவாறாக சமாதானம் கூறி கௌசல்யையை, சுமித்திரை ஆற்றுப்படுத்தினார்.

இது இவ்வாறிருக்க, அங்கே காட்டை நோக்கி சென்ற ராமரின் தேரை மக்கள் கூட்டம் பின்தொடர்ந்தபடி இருந்தது. அவர்களை ராமர் திரும்ப செல்லுமாறு பலமுறை வேண்டியும், தேரைத் தொடர்ந்தபடியே வந்தனர். பண்டிதர்கள் பலரும், முதுமையடைந்த பெரியோர்கள் கூடவும் அந்த கூட்டத்தில் இருக்க, ராமர் தேரில் இருந்து இறங்கி அவர்களோடு கால்நடையாக நடக்கலானார்.

அவர்களிடம் ராமர், “நீங்கள் என்மீது எத்தனை பாசம் வைத்து இருக்கிறீர்களோ அதேபோல் தம்பி பரதனிடமும் அன்பு செலுத்திட வேண்டும். அவன் தர்மம் தெரிந்தவன். நல்ல நீதிமான். அமைதியான சுபாவம் கொண்டவனாயிருந்தாலும் அவன் மாவீரன். சர்வ லக்ஷணங்களையும் கொண்டவனாயிப்பதால் அன்றி சக்ரவர்த்தி அவனை இளவரசனாக நியமிக்க உத்தேசம் கொள்வாரா? நான் மட்டுமல்ல நீங்களும் மன்னரின் கட்டளைக்கு உடன்படவேண்டியவர்கள் அல்லவா? எனக்கு நன்மையை எண்ணும் நீங்கள், நான் கானகம் சென்றபின் வருத்தப்படாமல் இருந்தால் அதுவே எனக்கு மகிழ்வைத்தரும் விஷயமாகும்”, என்றார்.

மக்கள் கூட்டத்தோடு சீதா ராம லக்ஷ்மணர்களின் தேர் தாமஸா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தது. அப்போது ராமர் லட்சுமணரைப் பார்த்து, “நமது வனவாசத்தின் முதல் நாளான இன்று, வெறும் நீரை மட்டும் ஆகாரமாக எடுத்துக் கொள்ளப் போகிறேன், இன்னொரு விஷயம் நம்முடன் வந்து கொண்டிருக்கும் மக்கள் நாம் இல்லாமல் அயோத்தி திரும்ப மாட்டார்கள் என்று தோன்றுகிறது. எனவே அவர்கள் நன்றாக உறங்கும் சமயம் நாம் இங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும். நமக்கேற்ப்பட்டிருக்கும் சோதனை அவர்களை பீடிக்க கூடாது”, என்றார்.

பின் தாமஸா நதிக்கரையை ஒட்டிய சமவெளி  பிரதேசத்தில், அனைவரும் அன்றைய இரவை கழித்தனர். மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கும் நேரமான அதிகாலையில் எழுந்த ராமர், “லக்ஷ்மணா, வீடு வாசல் பற்றி நினைவில்லாமல் மரங்களின் வேர்களில் தலையை வைத்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பார், இதுவே சரியான தருணம், இவர்கள் உறங்கும் போது நாம் ரதத்தில் ஏறி சென்று விட்டால் இன்னும் இவர்களுக்கு இடையூறுகள் நேரா”, என்றதும்..

“ஆம் நீங்கள் சொல்வது எனக்கும் சரி என்று தோன்றுகிறது சீக்கிரமாக தேரில் ஏறி நம் பயணத்தை துவங்குவோம்”, என்றார் லக்ஷ்மணர்.

உடனிருந்த சுமந்திரரைப் பார்த்து, “நாம்  விரைவாக காட்டிற்கு புறப்பட வேண்டும். ஆயத்தமாகுங்கள்”, என்றார். ரத சாரதியான சுமந்திரரும், குதிரைகளை விரைவாக தேரில் பூட்டி தயார் செய்தார். மூவருமாக ரதத்தில் ஏறி நீர்சுழல்கள் அதிகம் உடைய அந்த தாமஸா நதியை கடந்தனர்.

பின் சுமந்திரரைப் பார்த்து, “நீங்கள் தேரை வடக்கு நோக்கி நடத்திச் சென்று நாம் சென்ற வழியைக் குழப்பி,  நம் மக்கள் ரதத்தின் தடத்தினை அறிந்துகொள்ளா வண்ணம், இங்கு வந்து சேருங்கள், துரிதமாக செயல்பட்டு காரியத்தை முடியுங்கள்”, என்றார் ராமர்.

சுமந்திரரும் ராமரின் கட்டளைப்படியே செய்து இவர்களிடம் வந்து சேர, சீதா ராம லக்ஷ்மணர்கள் மூவரும் தேரிலேறி காட்டின் பாதையை நோக்கி செல்லவாரம்பித்தனர்.

இரவு முடிந்து பொழுது புலரும் நேரம் கண்விழித்த மக்கள், ராமரைக் காணாது திகைத்து, பின் இருமருங்கிலும் தேர் சக்கர தடயத்தைக் கண்டு, எவ்வழியாக ராமர் சென்றார் என்பதறியாது குழம்பி நின்றனர். சற்று நேரம் பொறுத்தே அவர்களுக்கு ராமரை நாம் தவற விட்டுவிட்டோம் என்பது புரிந்தது. ‘நம் தூக்கத்தினால் நமது நோக்கம் நிறைவேறாது போயிற்றே? நாம் அவர் பெற்ற பிள்ளைகளுக்கு நிகர் அல்லவா? நம்மை இப்படி கைவிட்டு சென்றுவிட்டாரே?’, என்று மிகுந்த மனவருத்தத்துடன் அம்மக்கள் அயோத்தி திரும்பினர், அவர்கள் திரும்புங்கால் ஒவ்வொரு வீட்டிலும் கைகேயி சபிக்கப்பட்டாள், அயோத்தி மாநகரம் நீர் முழுதும் வற்றிய நிலையில் உள்ள கடல்போட காட்சித் அளித்தது.

ராமரின் தேர் செல்லும் வழியில் இருந்த கிராமங்களில் இருமருங்கிலும் நன்கு உழுகப்பட்ட நிலங்கள், நந்தவனங்கள், நீர் நிலைகள் இருந்தன. கூடவே, இவர் செல்லும் திசையை கைகாட்டி, தசரதர் கைகேயி இருவரை இகழ்ந்தும், ராமர் சீதா இவர்களை போற்றியும் பலவாறாக பேசிக்கொண்டனர். இவை அனைத்தும் காதில் வீழ்ந்தும், வீழாததுபோல் ராமரின் தேர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக கோசல நாட்டைக் கடந்து கானகம் நோக்கி சென்றவண்ணமே இருந்தது. இடையே வேதஸ்ருதி, கோமதி, ஸ்யந்திகா போன்ற ஆறுகளைக் கடந்து சென்றது.

ராமர் தேரோட்டி சுமந்திரரிடம், “இனி எப்போது மன்னருடனும் தாய் கௌசல்யாவுடனும் சேர்ந்து இருப்பேனோ?, சரயு நதியோர காடுகளில் வேட்டையாடி திரிவேனோ? வேட்டையில் பெரிதாக பிரியமில்லை, ஆயினும் மக்களைக் காக்க வேட்டையும் தெரிந்திருக்க வேண்டியது க்ஷத்ரிய தர்மமல்லவா? சூதாடுதல் மஹாபாவம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அது ராஜசூய யாகத்தில் ஒரு அம்சமாக ஆனதன்றோ? அப்படி வேட்டையும் ராஜ்ய பரிபாலனம் செய்பவர்களுக்கு ஒரு தர்மமே”, என்று அவ்வப்போது மனதில் தோன்றிய விஷயங்கள் குறித்து பேசியபடி சென்றார்.

அந்நாளில் (ஏன் இந்நாளில் கூட) தொலை தூர பிரயாணம் புறப்படும்போது அவர்கள் வசிக்கும் நகர தேவதையை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நியதி. அங்கு அயோத்தி மாநகரைத் தாண்டும்போது அதற்கு சந்தர்ப்பம் வாய்க்காததால் (மக்கள் பின் தொடர்ந்தது, அவர்களின் கூக்குரல் முதலானவற்றால்..), இப்போது தெற்கு கோசல எல்லையை தாண்டும்போது அயோத்தியை நோக்கி திரும்பி தன் வணக்கங்களைக் கூறி, தான் செல்லும் காரியம் விக்னமின்றி நடைபெற வேண்டும் என்று ப்ரார்தித்துக் கொண்டார் ராமர். அவ்வாறு விடைபெறும்போது, சுற்றியிருந்த அக்கிராம மக்கள் துயரம் மேலுற கண்ணீர் சிந்தினர். ‘நீங்கள் இன்னும் இருந்தால் உங்கள் துயரம் அதிகமாகுமே தவிர குறையாது, எனவே நீங்கள் உங்கள் காரியங்களில் கவனமாகுங்கள்’, என்று அவர்களுக்கு அறிவுறுத்தி ராமர் கிளம்பிவிட, அவரின் தேர் கங்கை நதிக்கரையை வந்தடைந்தது.

சர்வம் ஸ்ரீஉமாமோஸேஸ்வர பரப்ரஹ்மார்பணமஸ்து.

Advertisement