Advertisement

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: 

ஸ்ரீ குருப்யோ நம: 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் 

ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் 

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
 ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்

11. ராமர் புறப்பட்டார்

மாபெரும் வீரரும் அயோத்தி சக்ரவர்த்தியுமான தசரதர் மயக்கம் தெளிந்து எழுந்து, கண்களில் நீர் திரையிட, “முன் ஜென்மங்களில் என்ன பாவம் செய்தேனோ?, பசுக்களை அவைகளின் கன்றுகளிடமிருந்து பிரித்தேனோ? மேலும் பல ஜீவராசிகளை குரூரமாக வதைத்தேனோ? இல்லாவிட்டால் இப்படி ஒரு கஷ்டம் எனக்கு வருமா? இது என் கர்மாவை அனுபவிப்பதற்காக எடுத்த பிறவி போலும். சூரியனுக்கு நிகரான என் புதல்வன், பட்டுப்போன்ற மென்மையான ஆடைகளை துறந்து, இங்கு இன்று மரவுரி தரித்து நிற்பதை கண்டும் இன்னும் என் உயிர் போகாமல் இருக்கிறதே? ஆனால் அதற்கான காலம் வரும் வரை உயிர் பிரியாதல்லவா? தீய எண்ணம் கொண்ட ஒரு பெண்ணினால் ஏற்பட்ட விளைவு. தன் லாபத்திற்காக இத்தனை ஜனங்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்” என்று புலம்பினார்.

பின் சிறிது நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தவர், தன் மந்திரி சுமந்தரரைப் பார்த்து,”ராமனை அழைத்துச் செல்ல உத்தமமான குதிரைகளைப் பூட்டிய தேரை தயார் செய்யும்படி கூறியவர், ஒழுக்கமானவனும் மாவீரனும் பக்திமானும் ஆகிய ராமன் தனது தந்தையினாலும் தாயாலும் நாடு கடத்தப்படுகிறார். நல்லவர்களுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் போலும்” என்றார்.

அரச கட்டளையை நிறைவேற்றுவதற்காக சுமந்திரன் தேரைத் தயார் செய்ய சென்றார். உத்தமமான குதிரைகளைப் பூட்டிய தேரை கொண்டு வந்தபின், ராமரிடம், “நீ புறப்படுவதற்கு அனைத்தும் சித்தமாக இருக்கிறது” என்று உரைத்தார்.

அப்போது தசரதர் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, “பதினான்கு ஆண்டுகாலம் காட்டிலே வசிக்கப் போகும் என் மருமகளான சீதைக்கு விலை உயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கொண்டு வாருங்கள்” என்று ஆணையிட்டார்.

மன்னரின் ஆணைக்கு ஏற்ப அவற்றை அணிந்த ஸீதை, சூரிய உதயத்தின் போது வானம் எப்படி செந்நிற ஒளியுடன் பிரகாசமாய் இருக்குமோ அப்படி சீதையின் காந்தி அந்த இடமெங்கும் பிரகாசித்தது.

கௌசல்யாதேவி சீதையினிடத்து வந்து, ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து,”வைதேகி, மேன்மையான தர்மத்தை கடைப்பிடிக்க ஆயத்தமாகி நிற்கிறாய். உனக்கொன்று கூறிக்கொள்கிறேன், துர்நடத்தையுடைய பெண்கள் பொருட்களில் நாட்டமுடையவர்கள், கணவன் மேலான பதவி மற்றும் அந்தஸ்தில் இருக்கும் போது மரியாதையாக நடப்பார்கள். இதே அவர்கள் நிலை சற்றே தாழ்ந்தால், அலட்சியப்படுத்துவதும், தூஷனை செய்வதுமாய் அப்பெண்களின் மனமே மாறிவிடும். இத்தனை நாட்கள் அனுபவித்த வாழ்க்கை வசதிகளெல்லாம் அவன் மூலமே என்பதை சமயத்தில் மறந்து விடுவர். நிலையற்ற புத்தியைக் கொண்டவர்களாய், பொய் பேசுவதில் விருப்பமுள்ளவர்களாய், உணர்ச்சியின் பிடியில் முடிவெடுப்பவர்களாக, இரக்கமின்றி நடப்பவர்களாக இருப்பர்”

“நற்குணமுடைய பெண்களோ நல்ல சொற்களையே பேசுவது, நற்சிந்தனையில் இருப்பது, பெரியோரின் வார்த்தைகளை மதித்து நடப்பது, கணவனை தெய்வமெனக் கொண்டு வாழ்வது என்று இருப்பர். என் மகன் காலத்தின் கோலத்தால் காட்டிற்கு போக நேர்ந்தாலும், உன்னால் மதிக்கத் தகுந்தவன். செல்வம், பதவி, நாடு போன்றவை இருந்தாலும் இல்லாமல் போனாலும், அவன் உனக்கு தெய்வமாவான்.”

தனது தர்மத்தை எடுத்துரைக்கவே கௌசல்யை இப்படி பேசுகிறார் என்பதை அறிந்த சீதை, கைகள் கூப்பி, “அம்மா! தங்கள் கட்டளைப்படியே நடக்கிறேன். இந்த விஷயங்களை முன்பே என் பெற்றோர் கூற நான் அறிந்திருக்கிறேன். எக்காரணம் கொண்டும் தீய பெண்டிரோடு என்னை ஒப்புமை செய்யாதீர். நிலவின் ஒளி எப்படி நீங்காதிருக்குமோ, அதுபோல என் நற்குணங்கள் மாறாத வகையில் நான் நடந்து கொள்வேன். தந்தியில்லா வீணை, சக்கரமில்லா தேர் உபயோகப்படுமா? அதுபோல, கணவனில்லா பெண்ணுக்கு எவ்வித சுகமுமில்லை. தந்தை மகன் சகோதரன் இவர்கள் செய்யும் உதவிக்கு எல்லையுண்டு. ஆனால், கணவன் இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலானவன். தெய்வத்திற்கு நிகரானவன் என்பதையும் மனைவியின் கடமைகள் என்ன என்பதை பற்றியும் பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறேன். என் கணவனுக்கு அவமதிப்பு நேர்கிற வகையில் நான் நடந்து கொள்வேனா? கவலையின்றி இருங்கள்” என்று சீதை சொல்லக்கேட்ட கௌசல்யை கண்ணீர் சிந்தினார்.

தாயை சமாதானப்படுத்தும் வகையில் ராமர், “அன்னையே! தவறியும் தந்தையின் கட்டளை குறித்து நீங்கள் வருந்தலாகாது. இந்த பதினான்கு வருடங்கள் நொடியில் காணாமல் போகும், தூங்கி எழும் நேரம் போல் விரைந்து சென்றுவிடும். எனவே இதற்காக நீங்கள் துக்கப்படக்கூடாது” என்று கூறிவிட்டு, இருகை கூப்பி அங்கிருந்த அனைவரையும் பார்த்து, “என் சொல்லாலோ, செயலாலோ உங்கள் யாருக்கேனும் என்னை அறியாது எதேனும் பிழை செய்திருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள். இப்பொது நான் வனம் செல்ல உத்தரவு பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.

மங்கள வாத்தியங்கள் மட்டுமே கேட்ட அந்த அரண்மனையில், அங்கு  கூடியிருந்த பெண்கள் கதறி அழும் அவல ஒலி எதிரொலித்தது. சீதா ராம லக்ஷ்மணர்கள் தசரதரையும் கௌசல்யையும் வணங்கி ஆசி பெற்றனர்.

லக்ஷ்மணர் தாய் சுமித்திரையின் பாதம் வணங்கி எழ,”மகனே லக்ஷ்மணா! காட்டில் வசிக்கும்போது, ராமனுக்கு எவ்வித குறையும் ஏற்படா வண்ணம் அவனுக்கு அரணாக நில். இளையோன் எப்போதும் மூத்த சகோதரனின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்பது நல்லோர் நடந்து காட்டிய தர்மம். தானம் மற்றும் யாகங்கள் செய்து உலகோரைக் காப்பதும், யுத்த களத்தில் உயிர் நீப்பதுவும் க்ஷத்ரிய லட்சணம். இப்போது சொல்லப் போவதை வேதமெனக் கொள். லக்ஷ்மணா! இனி ராமனே உனக்கு தசரதர், சீதையே உன் தாயாகிய நான். நீ பயணப்படும் வனமே உனக்கு அயோத்தி. இதை எப்போதும் மனதில் நிறுத்தி, மகிழ்வோடு சென்று வா” என்று வாழ்த்தினார்.

பின் மாதலி என்ற ரதசாரதி தேவேந்திரனிடம் தெரிவிப்பதுபோல, ராமரின் அருகே சென்ற சுமந்திரர், “தசரத புத்ரா, புகழுடையவனே, உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும். ரதத்தில் ஏறுங்கள், இன்றே புறப்படுகிறேன் என்று கைகேயிடம் சொல்லவில்லையா?” என்றுவிட்டு அனைவரும் கேட்கும்வண்ணம், “இனி ராமன் தேரிலேறி காட்டுக்கு புறப்படட்டும், இன்றிலிருந்தே பதினான்கு வருடக் கணக்கு ஆரம்பமாகின்றது” என்றார்.

அங்கிருந்த தேரில், தேஜோவதியான சீதை முதலில் எறிக் கொள்ள ராம லக்ஷ்மணர்கள் அடுத்து ரதம் ஏறி அமர்ந்தார்கள். அவர்களது அஸ்திரங்கள், ஆயுதங்கள், மண்வெட்டி, கூடை போன்ற காட்டில் பயன்படும் உபகரணங்கள், சீதைக்கு தசரதரால் அளிக்கப்பட்ட ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தேரில் ஏற்றப்பட்டது.

சுமந்திரர் வாயுவேகத்தில் செல்லும் அக்குதிரைகளை நடத்தினார். இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் மனம் கலங்கினார். ஊரெங்கும் அழு குரல்கள் ஒலித்தன. வறண்ட பாலையில் தாகத்தில் தவிப்பவன், நீர் நிலையை நோக்கி ஓடி வருவதைப்போல ராமரை தேடி அயோத்தி மக்கள் கூட்டம் ஓடி வந்தது.

அலையென திரண்ட மக்கள், தேரின் பின் புறமாக, பக்க வாட்டில், முன் பக்கமாக என்று சூழ நின்று சுமந்திரைப் பார்த்து, “தேரை மெதுவாக நடத்துங்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் பொறுத்து ராமனை பார்க்கப்போகிறோமோ, ஒருமுறை ஆசைதீர ராமனை பார்த்துக் கொள்கிறோம்” என்று இறைஞ்சினர்.

“தன் ஒரே மகனை காட்டுக்கு அனுப்ப சம்மதித்தாளே கௌசல்யை, அவள் மனமென்ன இரும்பால் ஆனதா? இந்நிலையிலும் கணவனை நிழல் போல் தொடர்ந்து செல்கிறாளே சீதை, அவள் மகா புண்ணியவாதி. இவர்களோடு செல்கிறான் இளவல் லக்ஷ்மணன் அவன் தர்மவான். அறிவார்ந்த செய்கையுடையவன்” என்று பலவாறாக புலம்பலாக பேசிக்கொண்டே ரதத்தின் பின் சென்றனர்.

இங்கே அரண்மனையிலோ பரிதாபமாக நின்ற தசரதர், ” என் மகனை நான் ஒருமுறையாவது கண்ணாரக் கண்டு கொள்கிறேன்”, என்று தட்டுத் தடுமாறி வெளியே வந்தார். ஆண் யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் பொழுது, மற்ற பெண் யானைகள் சூழ்ந்து கொண்டு பிளிருவது போல, தன் முன்னால் பெண்கள் ஓ வென்று குரல் எடுத்து அழுவதைக் கண்டார்.

இப்படி தடுமாறி வெளியே வந்த தசரதர், ராமரின் தேரை நோக்கி ஓடி வந்தவர் கீழே விழுந்தார். அதை பார்த்த மக்களின் துன்பம் மேலும் அதிகமாகியது. “ராமா! ராமா!” என்று தசரதர் வர, அவரைத் தொடர்ந்து  கௌசல்யா தேவியும் வருவதைப் பார்த்த ராமர்,”தேரை வேகமாக செலுத்துங்கள்” என்றார்.

ரதத்திலேறி வெண்கொற்றக் குடையோடு, முன்னும் பின்னும் யானை குதிரை காலாட் படைகள் புடை சூழ பவனி வரவேண்டிய மன்னரும் பட்டத்து ராணியான கௌசல்யா தேவியும், “ராமா, லக்ஷ்மணா, சீதா…” என்று தெருவில் அரட்டியபடி வரும் காட்சி மக்களின் மனதை உருக்கியது.

தசரதர் தேரோட்டியிடம் தேரை நிறுத்து, தேரை நிறுத்து என்று பலமுறை கூறியும், ராமர் எடுத்த முடிவில் மாற்றமில்லாது, மனம் வருந்தினாலும், தேரோட்டும் சுமந்திரரிடம் “தேர் வேகமாக செல்லட்டும்” என்றே ஆணையிட்டார்.

மன்னர் மற்றும் மன்னர் மகன் [எவன் ஒருவன் தேரில் அமர்ந்திருக்கிறானோ, அவரின் வார்த்தையையே தேரோட்டி கேட்க வேண்டும், இது நியதி], என்று இரு ஆணைகளினால் தவித்த சுமந்திரரிடம், “நீங்கள் அயோத்தி திரும்பியதும், மன்னர் தேரை நிறுத்த சொன்னது உங்கள் காதில் விழவில்லை என்று சொல்லிவிடுங்கள், என் பெற்றோர்கள் கதறி அழும் காட்சியை என்னால் காண முடியவில்லை” என்று கூறினார்.

[இதென்ன? இதிகாச நாயகன் ராமன், பொய் என்பதை அறியாத, உண்மையின் உரைகல் ஆன ராமன்… சுமந்திரரைப் பொய் சொல்லுமாறு கூறினாரா? ஆம். ராமர் அப்படிக் கூறியதாகத்தான் வால்மீகி ராமாயணம் சொல்கிறது. இது தவறில்லையா? என்று வாதிடுவோர் உண்டு. ‘பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த…”, என்ற திருக்குறளைத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி இருந்தாலும், தான் காட்டிற்கு போவதென்பது உறுதியான ஒன்று, அப்படியிருக்க இப்போது தந்தையின் ஆணைக்கிணங்கி தேரை நிறுத்தி மீண்டும் மீண்டும் அவரை வருந்தச் செய்வானேன்? என்று ராமர் நினைத்தது ஒரு காரணம் என்றால்,

இன்றே இப்போதே புறப்படுகிறேன் என்று கைகேயி தேவிக்கு வாக்கு கொடுத்தாயிற்று. இனியும் தாமதித்தலாகாது என்பது மற்றுமொரு காரணம். இதில் தவறேதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.]

தசரதரின் பின்னால் சென்ற அமைச்சர்கள், “யாராவது விடை பெற்று செல்லும்போது, அவர்கள் விரைவில் திரும்ப வேண்டுமெனில், இப்போது அவர்களை அதிக தூரம் பின் தொடரக்கூடாது” என்று அவருக்கு அறிவுறுத்தினர். அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு வியர்வை ஆறாய் பெருக, இருள் சூழ்ந்த முகத்துடன் ஏதும் செய்யத் தோன்றாது அங்கேயே நின்றார் தசரதர்.

நகர மாந்தர்கள் ராமரின் தேர் செல்வதைப் பார்த்து, “திக்கற்றவர்களுக்கு ஆதரவாய், எவரேனும் கடுஞ்சொல் பேசினாலும் இனிமையாய் பதிலளிக்கும் சுபாவமுடையவராய், அவரையும் சாமாதானப்படுத்துவதில் சமர்த்தராய், பிறரது துன்பத்தையும் தன்னதாய் நினைத்து வருந்தும் மனம் கொண்டோன், கௌசல்யயைப் போல் அனைவரையும் தாயாய் நினைக்கும் பாங்கினைக் கொண்டவருமான ராமர் எங்கோ போகின்றாரே?”

“கைகேயியின் வற்புறுத்தலால் வனம் செல்ல நேர்ந்த நம் பாதுகாவலன் (ரட்சகன்) எங்கோ செல்கின்றான், தசரதர் இப்படி மதிகெட்டு ராமரை காட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டாரே!”, என்று பெண்கள் அங்கலாய்த்தனர். அயோத்தி மாநகரம் தெய்வத்தால் கைவிடப்பட்ட நகரம் போல ஆனது.

[கம்பராமாயணத்தில் இந்நிகழ்வு..

  • ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம்’ என்பார்;
  • ‘காவா, அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்;
  • தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
  • மா வாதம் சாய்த்த மராமரம் போல்கின்றார்.
  • கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து
  • உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
  • பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?-
  • ‘வள்ளல் வனம்புகுவான்’ என்றுரைத்த மாற்றத்தால்.
  • ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
  • பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
  • காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
  • மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே. , என்று குறிப்பிடுகின்றார். இது எனைக் கவர்ந்த சில சந்த நயம் கொண்ட பாடல்கள் (கம்பருடையது அனைத்து வரிகளிலுமே அப்படித்தான் என்று சொல்லலாம்)]

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே:

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம் :

சர்வம் ஸ்ரீ உமாமகேஸ்வர பரப்ரஹ்மாற்பணமஸ்து:

Advertisement