Advertisement

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: 

ஸ்ரீ குருப்யோ நம: 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் 

ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் 

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
 ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்

10. வசிஷ்டர் கோபம்

அப்போது அருகிலிருந்த சித்தார்த்தர் என்ற வயதில் முதிர்ந்த, தசரதரால் வெகு மரியாதையுடன் நடத்தப்படுகிற மந்திரி, “அசமஞ்சனென்ற இளவரசன் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை தூக்கிச்சென்று சரயு நதியில் மூழ்கடித்து, அவ்வாறு அப்பிள்ளைகள் இறக்கும்போது படும் அவஸ்தையைக் கண்டு மகிழ்ந்தான். மக்கள் சென்று அன்றைய மன்னரான சகரரிடம் முறையிடவே, விஷயம் அறிந்து, அவரது மகனை அவனின் மனைவியோடு காட்டிற்கு வெறும் மண் வெட்டியும் கூடையும் தந்து அனுப்பினார். இன்று ராமரை காட்டுக்கு அனுப்ப அப்படி ஏதேனும் காரணங்கள் உண்டா? உண்டென்றால் யாராயிருந்தாலும் இப்போதே சொல்லுங்கள், உடனடியாய் அவர் காட்டிற்கு செல்லட்டும்.”

“எங்களுக்கு தெரிந்தவரை சந்திரனிடத்தும் களங்கம் கற்பிக்கலாம், ராமரிடத்தில் ஒரு போதும் களங்கம் கற்பிக்க இயலாது.  கைகேயி, அடுத்தவர்க்கு யாதொரு கெடுதியும் செய்யாது, தர்மத்தின் பாதையில் வழுவாது நடக்கும் அவனிடம் என்ன குறை கண்டாய்? நீ செய்வது அதர்மம். இப்படிப்பட்ட அக்கிரமத்தை செய்தால் தேவேந்திரனைப்போல பராக்கிரமம் பொருந்தியவனாய் இருந்தாலும் அவன் சாம்பலாவான். தேவீ!  இந்த வீண் அபவாதத்துக்கு ஆளாகாதே. திட்டமிட்டபடி பட்டாபிஷேகம் நடக்கத் தடை சொல்லாதே” என்றார்.

ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காது கைகேயி நிற்பதைப் பார்த்து, “சித்தார்த்தர் கூறியது ஏதும் உன் மனதில் பதிந்ததா? நாடோ, நானோ உனக்கு முக்கியமின்றி போனாலும், உனது நலத்தையாவது நீ எண்ணிப் பார்த்தாயா? தர்மத்தின் பாதையில் நடக்காதவளே, ஒன்று தெரிந்து கொள், ராமனுடன் நானும் வனம் செல்லப் போகிறேன், அவனில்லாத இந்த ராஜ போகங்கள் எனக்கும் வேண்டா. என்னைப் பின்தொடர்ந்து அயோத்தி மக்களும் வருவார்கள், நீ உன் மகன் பரதனோடு நீண்ட நெடுங்காலம் அரசாட்சி நடத்தி ஆனந்தமாய் இரு” என்று தசரதர் கூறினார்.

சித்தார்த்தர் மற்றும் தசரதர் பேசுவதைக் கேட்ட ராமர், “இந்த போகங்களைத் துறந்து, காட்டில் கிடைக்கும் கனி, பழங்களை உண்டு வாழப்போகும் எனக்கு எதற்கு குதிரை, யானை மற்றும் காலாட் படைகள்?, யானையைத் துறந்த ஒருவனுக்கு எதற்கு அதன் அம்பாரி? நான் முன்பே கூறியதுபோல், ராஜ்ய பரிபாலனங்களோடு, பொக்கிஷம், சேனை முதலான செல்வத்தையும் பரதனுக்கு கொடுத்தேன். நான் புறப்படும் சமயம் நெருங்குகிறது, நான் உடுக்க வேண்டிய மரவுரியை வேலைக்காரர்களை அழைத்து கொண்டுவரச் செய்யுங்கள். கூடவே, கோடலி, மண்வெட்டி கூடை போன்றவற்றையும் கொண்டு வரச் செய்யுங்கள்” என்றார்.

இவ்வாறு ராமர் சொன்னதுதான் தாமதம், ஒரு நொடி கூட வீணாக்காமல் தானே சென்று அம்மூவருக்கும் உண்டான மரவுரியை சிறிதும் வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இன்றி கொண்டு வந்த கைகேயி.. ராமரிடம், “இதை அணிந்துகொள்”, என்றார்.

அதிலிருந்து இரண்டு மரஉரிகளை அமைதியாக வாங்கிய ராமர் அவரது சரிகை ஆடைகளைக் களைந்து, ஒரு மரவுரியினை இடுப்பிலும் மற்றொன்றை மார்பிலுமாக அணிந்துகொண்டார். லக்ஷ்மணன் அண்ணனை பின் பற்றினார். தனக்குரிய ஆடையை கையில் எடுத்துக் கொண்ட சீதை அதை எப்படி அணிவது என்பது அறியாமல், பலர் முன்னால் இந்த சந்தேகத்தை எப்படி கேட்பது என்று நாணி, மெதுவாக ராமரிடம் கூச்சதோடு,”இவற்றை எப்படி அணிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு தெரிய வில்லையே?” என்றார்.

ராமரோ சற்றும் தயங்காமல், சீதையின் ஆடையின் மீதே இந்த மரவுரிகளை அணிவித்தார். இந்தக் கண்ட மக்கள் மனம் உருகியது. சீதை, ஜனக நந்தினி, ஜனகர் கண்ணுக்குள் வைத்து வளர்த்தப் பேரழகுப் பதுமை, அந்நாட்டு இளவரசி, இங்கே இன்று மரவுரியை தரிப்பதும்,  அதை அயோத்திச் செம்மல், தர்மத்தின் மறுவுருவும் சீதையின் கணவனுமான ராமரே அவருக்கு அணிவிப்பதையும் பார்த்து அங்கிருந்தவர்கள் கலங்கி நின்றனர்.

“ராமா! சீதை காட்டுக்குப் போகவேண்டுமென கைகேயி கேட்கவுமில்லை, அவள் மரவுரி அணிய வேண்டியதுமில்லை, தவிரவும் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற கானகம் செல்ல வேண்டியது நீதானே தவிர, சீதை எங்கும் செல்ல வேண்டிய அவசியமென்ன? நீ வரும்வரை அவள் இங்கே உனக்கு பதிலாக எங்கள் கண்முன் இருக்கட்டும்” என்று அனைவரும் முறையிட்டனர்.

ஆனால் எதையும் செவிமடுக்காமல், ராமர் சீதைக்கு மரவுரியை அணிவிக்கும் காரியத்தில் முனைப்பாய் இருந்தார். இதைக் கண்ட வசிஷ்டர், “துர் குணம் கொண்டவளே, நல்ல வழியில் நடக்கத் தெரியாதவளே, குடும்பத்தை அழிக்க வந்தவளே கைகேயி! சீதை எங்கும் செல்ல மாட்டாள், அவள் இந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கப் போகிறாள். மனைவி என்பவள் கணவனின் பாதி அல்லவா? எனவே ராமனின் தர்மபத்தினியான வைதேகி நாடாள்வாள். இது என் முடிவு”

“அல்லாமல் நான் சொல்வதையும் மீறி சீதை காட்டுக்கு போக நினைத்தால், அவளோடு கூட நாங்கள் அனைவரும் ராமரை பின் தொடர்வோம். இந்த நாட்டின் சேனைகள், செல்வ வளங்கள், நகரமே அவனோடு செல்லும். அவ்வளவு ஏன்? பரதனோடு சத்ருக்கனனும் இதே மரவுரியைத் தரித்து ராமனின் பின் செல்வர். நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், பரதன் இந்த அரசுரிமையை ஏற்றுக்கொள்வான் என்று. ஆனால், அவன் தசரத மைந்தன். மனமுவந்து அளிக்காத எதையும் அவன் பெற்றுக்கொள்ள மாட்டான், தவிர உன்னைத் தாய் என்றழைப்பதற்குக் கூட பரதன் விரும்ப மாட்டான். அவன் தர்மம் தெரிந்தவன், நீ வானத்திற்கு எகிறிக் குதித்தாலும், தர்மத்திற்கு விரோதமாக நடக்க மாட்டான்.”

“எதை உன் மைந்தனுக்கு தர நினைத்து  ராமனை காட்டுக்கு அனுப்புகிறாயோ அந்த உன் எண்ணம் ஈடேறப்போவதில்லை. ராமன் காட்டுக்கு செல்லும்போது அனைவரும் பரதன் உள்பட, அவனைப் பின் தொடந்து செல்வார்கள். அவனுக்கு நல்லது என்று நினைத்து நீ செய்தது பெரும் தீமையில் முடியப்போகிறது. போகட்டும் இப்போதாவது சீதையின் கையில் உள்ள மரவுரிகளை பெற்றுக்கொண்டு அவள் அணியத்தகுந்த ஆடை ஆபரணங்களை கொடு. விதேக நாட்டு மன்னனின் மகள் மரவுரி அணியத் தக்கவள் அல்ல”

தான் இத்தனை தூரம் சொன்ன பின்னரும், வாளா நின்ற கைகேயியைப் பார்த்து, “சரி, தசரதரிடம் நீ கேட்ட வரம் என்ன? ராமன் மரவுரி தரித்து பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தானே? கணவனின் அடி பற்றி செல்லும் சீதை மரவுரி தரிக்க வேண்டிய கட்டாயமென்ன? அவளுக்கு தகுந்த ஆடை ஆபரணங்கள், வாசனாதி திரவியங்கள் ஆகியவற்றை சீதையின் பணிப்பெண்கள் கொண்டு செல்லட்டும். சீதை குறித்து நீ யாதொரு வரமும் கேட்கவில்லை என்பதை மனதில் கொள்” என்றார் கண்டிப்புடன்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாலுமே, ராமரை பின் தொடரவோ, மரவுரி அணியும் முடிவிலிருந்தோ சீதை மாறவில்லை. இந்த காட்சிகளைக் கண்ட அங்கிருந்தவர்கள் மன்னரை சபித்தனர். அந்த சாபம் தசரதரின் காதிலும் விழுந்தது.

இதுவரை மக்கள் மனம் கோணாமல் நடந்து, ‘வாழ்க!’ என்ற அவர்களின் வாழ்த்தினை மட்டுமே கேட்டுப் பழகிய தசரதர், இப்போது நடக்கும் இந்த காரியத்தால் அவர்களின் நிந்தையைக் கேட்க வேண்டியதாயிற்று. மனம் வெறுத்து, ‘கைகேயியினால் இப்படிப்பட்ட அநியாயத்திற்கு ஆளாகி, உலகத்தோரால் நிந்திக்கப்பட்டவனாய் நான் இன்னமும் எதற்கு உயிர்வாழ வேண்டும்?’ என்று பெருமுச்சுவிட்டார்.

தாங்கொணா துக்கத்தோடு தசரதர், “கைகேயி, சீதையின் உரிமைகள் பற்றி வசிஷ்டர் கூறியது அனைத்தும் நியாயமானவை. நீ தந்த மரவுரியைக் கையில் வாங்கி மான் போல் மருண்டு நின்ற சீதையைக் கண்டும் உனக்கு மனம் இரங்கவில்லையா?  ஒருவேளை ராமன் மீது உனக்கு பகை இருந்தாலும் சீதை உனக்கு என்ன கெடுதி செய்தாள்? மென்மையான வார்த்தைகளை மட்டுமே அறிந்தவளாக, கணவனின் அடியொற்றி நடக்க வேண்டுமென்ற பண்பினால் அவள் காட்டுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறாள். அவளுக்குத் தகுந்த ஆடை ஆபரணங்களை தண்டு அனுப்பு. இந்த கொடுமையான காட்சியை பார்த்த எனக்கு உயிர் வாழ்வதில் விருப்பமில்லை, எனது ஊழிக்காலம் நெருங்கி விட்டது,  கைகேயி, கடுமையான வரத்தினை என்னிடமிருந்து பெற்றாய், அதோடு திருப்தி அடையாமல், சீதையையும் மரவுரியோடு காட்டிற்கு அனுப்ப எண்ணினால், கடும் நரகமே உனக்கு கதி என்பதை நினைவில் நிறுத்து” என்று கூறி, சுற்றியிருந்தோரை காண நாணி அவமானத்தால் தலை குனிந்து அமர்ந்திருந்தார் மன்னர் தசரதர்.

வனம் செல்ல தயாராகி நின்ற ராமர், தசரதரைப் பார்த்து, “அரசே, இதோ இங்கு இருக்கும் எனது தாயார் கௌசல்யா தேவி உங்கள் வார்த்தைக்கு மாற்றாக ஒரு கருத்தும் சொல்லாதவர். மிகவும் மென்மையானவர். நான் வரும்வரை, அவர் உயிரை பத்திரமாக காப்பது தங்கள் கடமை. என் பிரிவுத்துயர் அவர்களை வாட்டி அதனால் எமலோகம் போகாத வண்ணம் அவரிடம் நீங்கள் சற்று விஷேச அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

தசரதர் கௌசல்யையின் நிலையை நினைத்து மேலும் அதிக துயருற்றார். தவமிருந்து பெற்ற தனது ஒரே மகன், அவனுக்கு பட்டாபிஷேகம் என்று அவர் மகிழ்ந்திருந்த நிலையில் இப்போது இப்படி மரவுரி தரித்து, காட்டுக்கு செல்ல தயாராக நிற்கும் ராமனைக் காண, கௌசல்யா எப்படி மனம் நொந்திருப்பாள், என்று நினைத்து மேலும் வருந்தி, மூர்ச்சித்தார் தசரதர்.

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே:

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம் :

சர்வம் ஸ்ரீ உமாமஹேஸ்வர பரப்ரஹ்மார்ப்பணமஸ்து:

Advertisement