Advertisement

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:

ஸ்ரீ குருப்யோ நம:

Koojantham Rama Ramethi maduram madsuraksharam,
Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம் 

[ஸ்ரீமத் வால்மீகி ராமாயண அயோத்யா காண்டம் துவங்குவது गच्छता (கச்சதா)  அதாவது நகர்ந்தார் / புறப்பட்டார் என்று பொருள்படும் வார்த்தையோடு; இந்த காண்டத்தில் இருந்து தான் கதைமாந்தர்கள் அனைவரும் நகர ஆரம்பிப்பார்கள்,  கூடவே கதையும் வேக நடை போடும். அதாவது சீதா ராம லக்ஷ்மணர்கள் காட்டிற்கு செல்வது, தசரதர் மேலுலகம் செல்வது, பரதன் ராமரைத் தொடர்ந்து செல்வது, பரதன் என்றாலே சத்ருக்கனனும் அடக்கமல்லாவா? ஆக, அயோத்தி மன்னரான தசரதர் மற்றும் அவர் புத்திரர்கள் அயோத்தியில் இருந்து புறப்படுவதைக் குறிக்கும்படி ‘கச்சதா’ என்று இந்த காண்டத்தை ஆரம்பித்திருப்பார் வால்மீகி. கூடவே, ஆரம்பத்திலேயே பரதனைக் கோடி காட்டி,  இந்த காண்டத்தின் இறுதியில் யார் அதிகம் பேசப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று உணர்த்தியுள்ளார். உத்தமமான பரதனைப் பற்றியும், சகோதரர்கள் என்றால் என்ன? அவர்களது தர்மம் என்ன என்பதை பற்றியும், உயிருக்கு நிகரான மகன் தொலை தூரம் போயினும்  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்,  தந்தை சொல்லை வேத வாக்கியமாக கருதுவது, அதற்கு எந்தளவிற்கு மன உறுதி வேண்டும் என்பதையும் சொல்லப் போகும் காண்டம் இது. அனைத்திற்கும் மேலாக ராமகீதை இந்த காண்டத்தில் வருகிறது.

தவிர, யார் யாரிடம் எந்த அறிவுரைகளை கேட்க வேண்டும், யாரை எந்த இடத்தில் நிறுத்தவேண்டும் என்பதையும் மறைமுகமாக கற்றுத்தரும் காண்டம் என்றால் அது இந்த அயோத்தியா காண்டம்தான். முக்கியமாக இல்லறத்தில் இருப்போர்க்கு அவரவர் கடமைகளையும் தர்மங்களையும் எடுத்துரைக்கும் காண்டம் இது என்று அறுதியிட்டுக் கூறலாம்]

1. தசரதரின் விருப்பம் & அவையோரின் ஆலோசனை :

அயோத்தியில் இருந்து புறப்பட்டு கேகேய நாட்டுக்கு சென்ற பரத சத்ருக்கனர்களுக்கு, “நமது தந்தைக்கு வயதாகி விட்டது, இந்நேரத்தில் நாம் அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்ய இயலவில்லையே”, என்ற ஒரு வருத்தத்தைத் தவிர வேறு எந்த குறையுமின்றி,  அவர்களது மாமாவான யுதாஜித் பரத சத்ருக்னர் இருவரையும் தனது சொந்த மகன்களைப்போல அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துப் பார்த்துக்கொண்டார். ஆயினும் தந்தையுடன் இருக்கவில்லையே என்ற வருத்தம் பிள்ளைகளுக்கு இருக்கத்தான் செய்தது.

[கேகேய நாட்டிற்கு சென்றுவரும்படி தந்தை தசரதர் கூற, அழைத்துச் செல்ல வந்த யுதாஜித்துடன் பரதன் கிளம்பும்போது, சத்ருக்னனை உடனழைத்துச் சென்றார். யுதாஜித் மற்றும் அவரது தந்தை அழைத்தது கைகேயியின் மகனான பரதனை, ஆனால் பரதனோ சத்ருக்கனனையும் கூட்டிக் சென்றார். அண்ணன் அழைத்தபோது, “இல்லையில்லை, உன்னைத்தான் உனது தாத்தாவும் மாமாவும் கூப்பிட்டிருக்கிறார்கள் நான் வரமாட்டேன்”, என்று சத்ருக்கனன் மறுத்துப் பேசினானா? கிடையாது. பரதன் கிளம்புவதாக தெரிந்தது, இவரும் தயாராக இருந்தார், இயல்பாக இருவருமாக சென்றனர்.

இதற்கு திரு. சாகண்டி கோடீஸ்வரராவ் அவரது உபன்யாசத்தில் அருமையான உவமேயம் கொடுத்திருப்பார், ஒருவன் ஒரு விழா நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு ஆடையை தேர்ந்தெடுத்து உடுத்துக் கொள்வான் அல்லவா? அப்படி உடுக்கும்போது அவனது உடை, ‘இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தயாராக இல்லை, எனவே உன்னுடன் வருவதாயில்லை, வேறு உடை அணிந்துகொள்’ என்று மறுத்துப் பேசுவதை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லையல்லவா?. அது போல ராமர் எங்கிருந்தாலும் அங்கே லக்ஷ்மணனும், பரதன் எங்கிருந்தாலும் அங்கே சத்ருக்கனனும் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பர் (அவரவர் அந்தப்புரம் தவிர்த்து) என்று மிக அழகாக கூறி இருப்பார்]

மக்களை பிரிந்திருந்த தந்தை தசரதருக்கும்  இந்திரன் வருணனைப் போன்ற  பரத சத்ருக்னன் அருகே இல்லையே என்று மனக்குறை இருந்ததாம். அவர் தனது நான்கு புதல்வர்களையும் சமமாகவே கருதினார். ஆயினும், ராமர் தன் சிறப்பான குணங்களால், தந்தையின் மேலான அன்புக்கு பாத்திரமாகி இருந்தார்.

எப்படி இந்திரனைப் மகனாக பெற்ற அதிதி, அகம் மகிழ்ந்து தேஜஸுடன் இருந்தாரோ அது போல, நற்குணங்களை உடைய ராமரைப் பெற்றதால் அன்னை கௌசல்யாதேவியும் மிகுந்த காந்தியோடு விளங்கினார்.  அப்படி பெருமைப்படுமளவுக்கு ராமரிடம் இருந்த நற்குணங்கள் என்ன? இதோ பார்க்கலாம்.

அழகானவர்;

பராக்கிரமசாலி;

பொறாமை எனும் குணமில்லாதவர்;

தசரதருக்கு நிகரானகர் [அதாவது நடை உடை பாவனைகள் முதலாவற்றில்];

நிதானத்தை இழக்காத மனமுடையவர்;

நீதியை எந்நேரமும் கடைபிடிபவர்;

இனிய உளவாக  இன்னாது கூறல் அறியாதவர், இனிமையான வார்த்தைகளை பேசுபவர்;

யாரேனும் கடுஞ்சொற் பிரயோகித்தாலும், சுடுசொற்களை உபயோகிக்க மாட்டார்;

ஒருவர் செய்த சிறிய உதவியையும் பெரியதாக எண்ணி மதிக்கும் உணர்வினை உடையவர்;

அடுத்தவர்க்கு தீங்கிழைக்கும் காரியத்தை ஒருபோதும் மனத்தால் கூட எண்ணிப் பார்க்க முடியாதவர்;

பூர்வபாஷி, அதாவது அடுத்தவர் பேசினால் பதிலுரைப்போம் என்று காத்திராமல், தானே மனமுவந்து அவருடன் பேசி நலம் விசாரிக்கும் குணம் கொண்டவர்;

ஆயுதப்பயிற்சி முடிந்த நேரங்களில் பெரியவர்கள், அறிஞர்களுடன் பேசி தர்ம சூட்சுமங்களை தெளிவாக அறிந்து கொள்பவர்;

பொய் அறியாதவர்;

கோபத்தை வென்றவர்;

எல்லோரிடத்தும் அன்பு கொண்டவர்;

அடுத்தவர் துன்பம் காண சகியாதவர்;

வீண் பேச்சுக்களில் நாட்டமில்லாதவர்;

அகத்திலும் புறத்திலும் தூய்மையோடு இருப்பவர்;

சிறுமை என்பது எண்ணத்தில் கூட இல்லாதவர்;

ஒரு பிரச்சனையின் இருபக்கமும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு சொல்வதில் ப்ரகஸ்பதிக்கு ஈடானவர்;

பிறருக்கு அளித்த வாக்கில் நிற்கும் உறுதியை உடையவர், திடமான சரீரம், களையான முகம், மனோ வியாதி தேக வியாதி அற்ற உடல் கொண்டவர்;

வேதங்கள், உபவேதங்கள், வான சாஸ்திரம், அஸ்திர சாஸ்திரம், யுத்த சாஸ்திரம், இலக்கியம், பல்வேறு மொழிகளை  முழுமையாக கற்றவர்;

எளியவர்களுக்கு எளிமையானவர்;

தரமற்ற விஷயங்களை பேசுவதை தவிர்பதுபோல தரமில்லாதவர் சேர்க்கையையும் தவிர்ப்பவர்;

அடுத்தவர் மனதை யூகிக்க வல்லவர்;

வரி வசூல் நிர்ணயம் செய்வதில் பிரஜைகள் மனம் கோணாது வகுக்க தெரிந்தவர்;

பொக்கிஷத்தில் இருக்கும் நிதியை எதற்கு எப்படி எப்போது செலவு செய்ய வேண்டும் என்பதை நன்கறிந்தவர்;

ராஜரீக விஷயங்களை மனதில் எண்ணினாலும் அதன் முக்கியத்துவம் காரணமாக ரகசியம் காப்பவர்;

அபயம் என்று எதிரியே வரினும் காக்க உறுதி பூண்டவர்;

அடுத்தவர் தவறினை அறிவது போல, தன்னைச் சேர்ந்தோரின் தவறினையும் அறிந்தவர்; [அதாவது தன்னைச் சேர்ந்தோரின் குணநலன்களை தெளிவாக அறிந்தவர்]

பரிசோ, தண்டனையோ அது நியாயமாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதை உணர்ந்தவர்;

சக்தியை உபயோகிக்க வேண்டிய நேரமெது, அமைதி காக்க வேண்டிய நேரமெது என்பதை நன்கறிந்தவர்;

கலைகளில் பேரார்வமுடையவர்; ஆசையை அடக்கியவர்; சோம்பல் எனபது அறவே இல்லாதவர்;

யானை ஏற்றம், குதிரை ஏற்றம் நன்கறிந்தவர்; …

… என்று முடிவற்று வர்ணிக்கும் குணங்களைக் கொண்ட ராமர் மக்கள் மனங்களை கவர்ந்தவராக இருந்தார்.

அவ்வாறு மக்கள் தன்னை கொண்டாடுகிறார்கள் என்று நினைத்து கர்வமில்லாதவராக இருந்தார்.

அயோத்தி மட்டுமன்றி மூவுலகும் அவர்பால் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தது, பூமியும் தன்னை ஆட்சி புரிய சிறந்த தலைவன் ராமன் என்றே கருதியது.

இத்தனை சிறப்பு மிக்க தன தவப்புதல்வன் ராமரை எண்ணியபடி இருந்த தசரதருக்கு, ஒரு எண்ணம் தோன்றியது. உலக நன்மைக்காகவே வாழ்பவனாக இருக்கும் ராமருக்கு இளவரசனாக பட்டம் சூட்டலாமே? என்பதுதான் அவ்வெண்ணம்.  பராக்கிரமத்தில் யமனையும், இந்திரனையும், அறிவில் பிரகஸ்பதியையும், தைரியத்தில் இமயமலையையும் ஒத்திருக்கும் ராமனை இளவரசனாக அமர்த்தி ராஜ்யத்தை அவர் நிர்ணயிக்கும் அழகைக் காணவேண்டாமா? அதன்பின்புதான் தான் மேலுலகம் செல்ல வேண்டுமெனவும் எண்ணிக் கொண்டார் தசரதர்.

இவ்வாறு யோசனை வந்ததும், தனது மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து ராமருக்கு இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என முடிவெடுத்திட்டார். அதே காலகட்டத்தில், பூமியிலும் வானத்திலும் தோன்றிய சில நிமித்தங்கள் (சகுனங்கள்) தனக்கு சாதகமாக இல்லாததையும் அறிந்துகொண்டார் தசரதர். இவைகள் தன்னுடைய உடல் பலவீனமடைந்து விட்டதையும், முதுமையை அடைந்து விட்டதையும் உணர்த்துவதாக அறிந்தார்.

இப்படி பற்பல எண்ணம் கொண்ட தசரதர் இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.  தூதர்களை அனுப்பி சுற்றி இருந்த நகரங்களின் தலைவர்களையும், கிராம மக்கள் பிரதிநிதிகளையும்  வரவழைத்தார். ஆனால், கேகேய ராஜாவுக்கோ, மிதிலாபுரிக்கோ தூதர்கள் சென்று வர நேரமில்லையாதலால், அவர்கள் பின்னர் வந்து ராமரை ஆசிர்வாதம் செய்யட்டும் என்ற என்னமேற்பட அவர்களை தவிர்த்தார். [நிச்சயமாக மகிழ்ச்சியான நிகழ்வாகவே இதை அவர்கள் கருதுவார்கள் என்று தசரதர் திடமாக எண்ணியதும் ஒரு காரணமாக இருக்கலாம்]

தசரதரின் சபையை விரைந்து அடைந்த மந்திரிகள், நகரத்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் வந்து சேர, அனைவர்க்கும் தகுந்த ஆசனங்களைக் கொடுத்து அமரவைத்து அவர்களுடைய நலனை விசாரித்து அறிந்தார். தசரதர் அப்போது புடைசூழ அமர்ந்திருக்கும் தேவேந்திரனைப்போல இருந்தார். குசலோபரிகள் முடிந்தபின், தனது காத்திரமான கம்பீரமான, சற்றும் இனிமை மாறாத, மன்னர்களுக்குண்டான கணீர்க் குரலில் அவையோர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“இந்த அயோத்தி ராஜ்ஜியத்தை தனது பிள்ளையை காப்பதுபோல என் முன்னோர்கள் பேணி பாதுகாத்தனர் என்பது நீங்கள் அறிந்ததே, நானும் என்னால் இயன்ற அளவு இந்நாட்டு மக்களை அன்புடனும் அக்கறையுடனும் கண்போல் பாவித்து வருகிறேன். ஆயினும் என் உடல் தளர ஆரம்பித்து விட்டது, எனது புலன்கள் வெண்கொற்றக் குடையில் அமர்ந்து அரசை நடத்தியது போதும், சற்று ஒய்வு வேண்டுமென கேட்கின்றன. என் மனமோ கடமை கடமை என்று சதா ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. ஆகையால் அவையோர்கள் உங்கள் அனைவரின் சம்மதத்தைப் பெற்று இந்நாட்டு மக்களைக் காக்கும் பொறுப்பை எனது மூத்த மகனான ராமரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். வீரத்தில் இந்திரனையும், மதி நுட்பத்தில் ப்ரஹஸ்பதியையும் நிகர்த்தவன் ராமன், அரசனுக்குரிய அனைத்து தகுதிகளும், நற்குணங்களையும் பெற்ற அவனை, இளவரசனாக நியமித்து, நம் நாட்டு மக்களை பற்றிய கவலையில் இருந்து சற்று விலகி இருக்க எண்ணம் கொண்டுள்ளேன்.”

“தீர ஆலோசித்த பிறகே இந்த முடிவினை எடுத்துள்ளேன், எனது இந்த முடிவு சரியென நீங்கள் நினைத்தால், இதை வழி மொழியுங்கள். மாறான கருத்துக்கள் கொண்டிருந்தால், வேறு என்ன மார்க்கம் உண்டு என்பதை எனக்கு ஆலோசனையாக அளியுங்கள். எவ்வித விருப்பு வெறுப்புமற்று, சார்பு நிலை கொள்ளாமல் எடுக்கப்படும் தீர்மானங்களே உலகத்திற்கு நன்மை பயக்கும். உங்களது முடிவினை ஏற்க சித்தமாக இருக்கிறேன்”, என்று கூறினார் தசரதர்.

[இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், அன்று நடந்தது முடியாட்சி, தந்தை அதன் பின் தனயன் முடி சூட்டிக் கொள்வது என்பது வழமையான ஒன்று. ஆனால், தசரதர் மகனுக்கு இளவரசு பட்டம் ( நன்கு கவனிக்கவும். மன்னனாக கூட அல்ல) அளிக்க அவையோரின் அனுமதி பெற்று செய்ய நினைக்கிறார். அது மட்டுமன்று, அவர் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறார். சார்பு நிலையின்றி எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு நன்மை பயப்பவையாக இருக்கும் எனும் கருத்தையும் பதிவிடுகிறார். அதாவது, என் மகன் என்பதற்காக இல்லாமல், அவன் குணநலன்களை சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்குமாறு அவையோரிடம் அறிவிக்கிறார் தசரதர். இது முடியாட்சி என்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இன்றைய நிலையை சற்றே எண்ணிப் பார்த்தால், அன்றைய முடியாட்சியே சாலச் சிறந்தது என்றுதான் தோன்றுகிறது]

தசரதர் இங்ஙனம் சொல்லி முடிப்பதற்குள், மொத்த அரண்மனையே அதிரும்வண்ணம், அவையோரிடமிருந்தும் கூடியிருந்த மக்களிடமிருந்தும் வானளாவ ஆரவாரம் எழுந்தது.  “ஆஹா! ஆஹா!”, “வாழ்க! வாழ்க!”, “ஜெய விஜயீபவ!”, போன்ற கோஷங்களும் விண்ணதிர எழுப்பப்பட்டது.

பின்னர் வசிஷ்டர் முதலான மந்திரி பிரதானிகளும், நகர முக்கியஸ்தர்களும் கூடிப்பேசி , ஏகமனதாக, “மகாராஜா! இத்தனை வருட காலங்களாக இந்த நாட்டை நீங்கள் காப்பாற்றி வந்துள்ளீர்கள். இப்போது உங்களது வயது மூப்பின் காரணமாக, ராமருக்கு இளவரசு பட்டம்  சூட முடுவெடுத்துள்ளீர். வயது முதிர்வை உத்தேசித்து தங்கள் எடுத்தது சரியான முடிவுதான், நாங்கள் அனைவரும் முழு மனதாக இதற்கு ஒப்புதல் அளிக்கிறோம், யானை மீதமர்ந்து வெண்கொற்ற குடையின் கீழ், ராமர் யுவராஜாவாக நகர்வலம் வருவதைக் காண ஆவலாயிருக்கிறோம்”, என்றனர்.

சாதாரண மனிதனாக இருந்தால் அவையோரின் இந்த பதிலுக்கு அகமகிழ்ந்து போயிருப்பார்கள், ஆனால் தசரதராயிற்றே! தர்மம் தவறாது பிரஜைகளை தன் சொந்த பிள்ளைகளைப்போல பார்த்துக் கொண்டவராயிற்றே! அவர் சற்றே துணுக்குற்றார். “சபையில் இருக்கும் அனைவருக்குமாய் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். இதுவரை எனது ராஜ்ய பரிபாலனத்தில் ஏதேனும் குறை கண்டீர்களா? ஒருவர்கூட ராமர் வேண்டாம், நீங்களே ஆட்சியை தொடருங்கள் என்று கூறவில்லையே? என்னைவிட ராமன் எந்த வகையிற் சிறந்தவன் என்று நீங்கள் கருதி ஏகோபித்த ஆதரவினை தெரிவித்துள்ளீர்கள் என்பதை நான் அறியலாமா?” என்று கேட்டார் தசரதர்.

தசரதரின் இந்த கேள்வியை கேட்ட அவையோர்கள், அவருக்கு ராமரின் சிறப்புகள் என்னென்ன என்பதை (ஏற்கனவே மேலே நாம் ராமரின் குண இயல்புகளாக நாம் கண்டதை கூறி இன்னமும் சில பல விஷயங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே சுருக்கமாக அவற்றைக் காண்போம்)

“ராமர், பெரியோர்களை மதிக்க தெரிந்தவர்; நல்லொழுக்கம் என்றால் என்ன என்பதை ராமரிடமிருந்து அனைவரும் கற்கலாம்; எளியோர்க்கு எளிமையானவர்; மற்றவர்கள் உயர்வினைக் கண்டு பொறாமை பட தெரியாதவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி அறியாதவர்; உத்தமமான பிராமணர்களை மதிப்பவர்; காப்பாற்றுங்கள் என்று வந்த எவரையும் கைவிடாதவர்; யுத்தத்தில் வெற்றியைத் தவிர வேறொன்று அறியாதவர்;  கிராம நகர மக்கள் எதிர் படுவோர் அனைவரையும்  சந்தித்து பேசி நலம் விசாரிப்பவர்; மனத் தளர்வினை அறியாதவர்; இந்நாட்டில் அனைத்து வயதுடைய பெண்களும் தினந்தோறும் ராமர் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமளவிற்கு பெண்களால் மதிக்கப்படுபவர்; இத்தனை சிறப்புக்களை பெற்ற ராமர் உன்னதமான உங்கள் குலத்துதித்தது எங்கள் நன்மைக்கே என்று நாங்கள் கருதுகிறோம். எனவே தான் அவர் யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோமேயன்றி உம்மில் பிழையில்லை. மக்களின் நன்மைக்காக நீங்கள் உத்தேசித்துள்ளதை செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

“உங்கள் கருத்து என் மனதை மகிழ்விக்கிறது. உங்கள் மனப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்கி   விரைவிலேயே  ராமனுக்கு இளவரசராக பட்டம் சூட்டப்படும்”, என்று தசரதர் அனைவருக்கும் அறிவித்தார். அங்கிருந்த ரிஷி வசிஷ்டரையும், வாமதேவரையும் பார்த்து, “பல்வகை மலர்கள் பூக்கும் விசேஷமான மாதமாகிய சித்திரை மாதமிது, தவிரவும் ராமர் பிறந்த மாதமும் இதுவே. தற்செயலாக இவை இரண்டும் ஒரே மாதத்தில் அமைந்துள்ளது. எனவே, பட்டாபிஷேக விழாவிற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்”, என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

இவ்வார்த்தைகளைக் கேட்டதும், அவையோர்கள் மற்றும் மக்கள் பலத்த ஆரவாரம் செய்தனர். அவர்களது உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

ஜெய் ஸ்ரீராம்.

Advertisement