Advertisement

UD:2

“என்ன பா ஆச்சு… இன்னைக்கு வர முடியாது… முக்கியாமன கேஸ்ன்னு சொன்ன… இப்ப வந்து நிக்குற…?” என்று கேட்டபடி சௌந்தர்யா வீட்டின் வாசல் கதவை முழுவதும் திறந்துவிட,

அமைதியாக உள்ளே வந்த மகிழன், தொப்பென்று சோபாவில் அமர்ந்ததோடு இருக்கையின் சாய்வில் தலையை சாய்த்துக்கொண்டவனுக்கு மனம் ரணமாக இருந்தது…

அவனது நிலையை கண்டு சௌந்தர்யா, “என்னாச்சு பா…?” என்று அருகில் அமர்ந்து தலையை கோதிவிட,

ஏனோ மனம் தியாவின் நிலை மீண்டும் கண்முன்னே வந்து போனது சட்டென, அதை கட்டாயத்தின் பேரில் புறம் தள்ளியவன்,

“ஒன்னுமில்ல ம்மா… நான் போய் படுக்குறேன்… டையர்டா இருக்கு…” என்று எழுந்துக்கொள்ள,

“சாப்பிட்டியா பா… எடுத்து வைக்கவா…?” என்று கேட்கவும், அன்னையின் முகம் பார்த்தவன், சரியென்று தலையை ஆட்டவும், அவசரமாக சமையலைறைக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் சுடசுட தோசையோடு வெளியே வந்தவரின் முகம் யோசனையை காட்டியது…

“என்னப்பா ஆச்சு…?” என்று கேட்டபடி சாப்பாட்டு மேஜையின் மீது தட்டை வைக்க,

“என்னாச்சு ம்மா…? ஏன் இப்படி கேட்டுட்டே இருக்கீங்க…?” என்று அமைதியாக கேட்டதோடு தோசையை அவசரமாக உள்ளே தள்ளியவனை பார்த்ததும் புரிந்துகொண்டார் மகனை…

இரண்டே நிமிடத்தில் தட்டை காலிசெய்தவன், கையை கழுவ எழும் சமயம், “வேலைல பிரச்சனையா இல்ல கேஸ் விஷயமா யோசிக்குறீயா…?” என்ற கேள்வியில் மீண்டும் அமர்ந்தவன்,

“இந்த கேள்விக்கான காரணம் என்ன ம்மா…?” மகிழனுக்கு புரியவில்லை அன்னையின் இந்த விசாரிப்பு ஏன்னென்று…

“இல்ல இன்னைக்கு நீ கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குற அதான்…” என்றவரை புரிந்தும் புரியாமல் பார்த்து வைத்தான் மகிழன்…

தியாவால் தன் வேலை சிந்தனை என அனைத்தும் தடையானதை அறிந்தவனுக்கு வேறு காரணம் ஏதேனும் இருக்குமோ என்னும் சந்தேகம் தோன்ற அன்னையையே பார்த்திருந்தான்…

அவனது கேள்வியான பார்வையை புரிந்து, “ரொம்ப டல்லா இருக்க, எப்பவும் டியூட்டி முடிஞ்சு வந்தா குளிக்காம டேபிளுக்கு வர மாட்ட, ஆனா இன்னைக்கு அவசர அவசரமா நான் கேட்டேன்னு சாப்பாட்டை முழுங்கிட்டு எந்திரிச்சு ஓட பார்க்குற… அதான் கேட்டேன்… ஏதாச்சும் பிரச்சினையா இல்ல மூட் அவுட்டா…?” என்ற அன்னையை பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று கையை கழுவி விட்டு வர,

சௌந்தர்யா அவனது பதிலுக்காக நின்ற இடத்திலேயே நின்றிருந்தார்… மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தவன், “ம்மா…” என்று அருகில் இருக்கும் இருக்கையை கைதட்டி காட்டி அமர சொல்ல, அவரும் அமைதியாக அமர்ந்தார் ஏதோ பெரிய விஷயம் என்று புரிந்து…

“தியா…” என்று தொடங்கியவன் எவ்வாறு தொடர்வது என்று புரியவில்லை இதை அன்னை எப்படி எடுத்து கொள்ளுவார் என்னும் குழப்பம் வேறு மகிழனை சற்று நிதானமாக்கியது…

“சொல்லு டா… தியா க்கு என்ன…?” என்று எதுவும் புரியாமல் அவனையே பார்த்திருக்க, அவனோ தயங்கியபடி

“தியா ஹாஸ்பிடல்ல இருக்கா…” என்க,

“ஹாஸ்பிடல்லையா…? ஏன் என்னாச்சு…?” லேசான பதற்றம் அவரிடம்…

“அது…” என்று நெற்றியை தேய்த்தபடி தயங்கியவன், முழுவதையும் சொல்லி முடித்தான் அன்னையின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை கவனித்தபடி…

“ம்ம்ம்… பாவம் தான்…” என்றதோடு எழுந்து கொண்டவரை புரியாது பாரத்தவன்,

“என்ன ம்மா அமைதியா போறீங்க…?” என்ற கேள்வியில் நின்றவர்,

“வேற என்ன பண்ண சொல்லுற…? டைமாச்சு தூங்க வேண்டாமா…?” என்று கேட்கவும், முறைத்து வைத்தான் பல்லை கடித்தபடி…

“என்ன டா முறைக்குற…?”

“பின்ன… நான் என்ன சீரியல் கதையா சொன்னேன்… பாவம்தான்னு கமென்ட் சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போறீங்க…” என்று முறைத்தபடி நின்றவனை பார்த்து அவன் அருகில் வந்தவர்…

“உங்க அப்பா என்னை விட்டு போனப்ப, ரொம்ப வலிச்சுது… சுத்தி இருந்தவங்க ஆறுதல் சொன்னாங்க… ஆனா அதுக்கு மேல எதுவும் இல்ல… என் வலியை யாராலும் வாங்கிக்க முடியாது… சொல்லணுமே பேசணுமேன்னு பேசுறவங்க தான் இங்க அதிகம்… அனுதாப படுறனால எதுவும் ஆக போறது இல்ல… ஆறுதல் சொன்னா மனசுக்கு இதமா இருக்கும் அவ்வளவுதான்… அதை சொல்லி கேட்குற நிலைல இப்ப தியாவும் இல்லை…” என்றவரின் வார்த்தையில் உள்ள நிதர்சனத்தை புரிந்தவன் அமைதியாக நிற்க,

அவன் அருகில் வந்தவர் மெல்லிய நிதானமான குரலில், “அவளுக்கான ஆறுதல் இனி அவ வாழ போற வாழ்க்கைல தான் இருக்கு… முக்கியமா நீ முடிவு பண்ண போறதுல தான் இருக்கு… நடந்து முடிஞ்ச விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி ஒன்னும் ஆக போறது இல்லை… இதுல நான்னு இல்ல வேற யாரும் சொல்லவோ முடிவெடுக்கவோ ஏதும் இல்ல…” என்றவர் அவனது யோசனை முகத்தை கண்டு,

“என்ன பண்ண போற நீ…?” என்று கேட்கவும் அன்னையை திரும்பி பார்த்தவன்,

“ம்ம்ம்… முதல்ல கேஸ் விஷயம் முடியட்டும் ம்மா…” என்றதோடு முடித்துக்கொள்ள, சிறு புன்னகையை சிந்தியவர்,

“ம்ம்ம்… போய் படு…” என்றவர் சமையலறைக்குள் நுழைந்துக்கொள்ள, யோசனையுடனே தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டான்…

தன் குளியலை முடித்துக்கொண்டு தலையை துவட்டியபடி வந்தவன், அலைபேசியை எடுத்து கான்ஸ்டபிளுக்கு அழைப்பு விடுக்க, ரெண்டாவது ரிங்கிலேயே எடுத்தவர்,

“சார்…” என்ற குரலில் அத்தனை பவ்யம்…

“கண்டிஷன் என்ன…?” என்ற மகிழனுக்கு,

“சார்…. டிரிப் ஏறிட்டு இருக்கு சார்… பிளட் லாஸ், டிஹைடிரேஷன் எல்லாம் சேர்ந்து பீவர் மயக்கம் வர காரணம் சார்… மார்னிங் ஓகே ஆகும்னு சொல்லுறாங்க சார்…” என்றதற்கு,

“ம்ம்ம்… கூடவே இருங்க… நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும்… எந்த பிரச்சினையும் வர கூடாது…” என்று எச்சரிக்கை விடுக்க,

“எஸ் சார்… சியூர் சார்…” என்று அழைப்பை துண்டிக்கவும், பிரவீண் அழைக்கவும் சரியாக இருந்தது…

“சொல்லுங்க பிரவீண்…”

“சார்… டாக்டர்ஸ் இப்ப தான் பேசுனாங்க…” என்றவன், சற்று தயங்கி

“கொஞ்சம் கஷ்டம்னு சொல்லுறாங்க சார்… கண்ணாடி பொருளால திரும்ப திரும்ப அடிச்ச இடத்துலேயே அடிச்சு இருக்காங்க… காயம் ஆழமா இறங்கி இருக்கு… அது இடது கண்ணை பாதிச்சு இருக்கு… கண் பார்வை வருமான்னு இப்போதைக்கு சொல்ல முடியாதுன்னு சொல்லுறாங்க… அதுவும் இல்லாம தலைல பயங்கர அடி… பிரைவட் பார்ட்டுலையும் பலமான அடி… சோ அதோட சைடு அபெக்ட் வேற இருக்குன்னு சொல்லுறாங்க… மூளைக்கு போற நரம்பு ஒன்னு பாதிச்சு இருக்குன்னு சொல்லுறாங்க சார்…” என்று சொல்லி முடிக்க,

“ம்ம்ம்… உயிர் பிழைக்க எவ்வளவு சான்ஸ் இருக்கு…?” என்று கேட்ட மகிழனின் மூளை படு வேகமாக வேலை செய்தது…

“முழுசா சொல்லல சார்… ஒன்னு அப்படியே உயிர் பிழைச்சாலும் பழைய மாதிரி இருக்க முடியுமான்னு தெரியாது இன்னொன்னு கோமா போக சான்ஸ் இருக்கு… சோ பிப்ட்டி பிப்ட்டி சொல்லுறாங்க சார்… எதுவும் ஆசிப் கண் முளிக்குறதை வச்சு தான் சொல்ல முடியும்னு சொல்லுறாங்க…” என்றிட,

“ம்ம்ம்… வாட் அபௌட் மன்சூர் ரிப்போர்ட்…?” என்று கேட்டிட,

“சார் அது நாளைக்கு ஆகும் சார்… வெய்டிங் பார் ரிப்போர்ட் சார்…” என்றிட,

“ம்ம்ம்…” என்றதோடு அமைதியாகி போகவும், பிரவீண்

“சார்…” என்று அழைக்க,

“எஸ்…”

“நெக்ஸ்ட் சார்…?” என்று கேட்கவும்,

“நத்திங்… முடிஞ்ச அளவுக்கு அங்கேயே இருந்து மன்சூரோட ரிப்போர்டை வாங்கிட்டு வாங்க… அதை பார்த்துட்டு நாளைக்கு டிசைடு பண்ணலாம்…” என்றிட,

“எஸ் சார்… வச்சுறேன் சார்…” என்று அழைப்பை துண்டித்துவிட, யோசனையோடு அமர்ந்து விட்டான் மகிழன்….

மறுநாள் காலை பொழுது விடிந்தது நிதானமாக யாருக்கும் காத்திறாமல்….  ஆனால் அந்த நிதானம் மகிழனிடம் இல்லை அத்தனை அவசரம் அவனிடம்…

“என்ன டா அதுக்குள்ள கிளம்பிட்ட…?” என்ற தமிழ்செல்வனுக்கு,

“முக்கியமான கேஸ்… அதான்…” என்றவன் முகத்தில் அத்தனை தீவிரம்… அதையும் விட யோசனை தான் அதிகம்…

‘எப்படி இது சாத்தியம்…? இவ நாம நினைக்குறதை விட பயங்கரமா இருக்கா…’ என்று யோசனை மட்டும் அவன் மண்டைக்குள்…

அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவன், நேராக சென்று நின்றது தியா இருந்த மருத்துவமனையில் தான்…

“இப்ப எப்படி இருக்கு உடம்பு…?” என்ற கேள்விக்கு தியாவிடம் இருந்து பதிலில்லை…

“உன்கிட்ட தான் கேட்டேன்…” குரல் சற்று கடினமாக வரவும், கோபமாக திரும்பியவள்,

“உங்களுக்கு என்ன சார் கவலை அதைபற்றி…?” என்றதும்,

பேண்ட் பாக்கெட்டில் இருகைகளையும் நுழைத்து கொண்டு நின்றவன், பேச வாய் திறக்கும் முன், சரியாக டாக்டர் வரவும் அமைதியாகி,

“எல்லாம் ஓகே தானே டாக்டர்…?” என்று அவரிடம் திரும்பிவிட, தியாவிற்கு ஏன்னென்று தெரியாத உணர்வு…

பார்வையை தன்னை சுற்றி இருப்பவர்களிடம் திருப்பிக் கொண்டாள், ‘நாம மட்டும் தான் இப்படி யாரும் இல்லாம இருக்கோம்..’  என்ற எண்ணத்தில் பார்வையை சுழற்ற,

அனைவரும் யாரோ ஒருவர் துணையுடன் அந்த மருத்துவமனையில் வருவதும் போவதுமாக இருப்பதை கண்டு ஒரு பெருமூச்சுதான் வந்தது…

“ஒன்னும் பிரச்சினை இல்ல சார்… கொஞ்சம் வீக்கா இருக்காங்க… அவ்வளவுதான்… மத்தபடி ஷீ ஈஸ் ஓகே…” என்றதும்,

“தேங்க்ஸ் டாக்டர்…” என்று கைகுழுக்கியவன், அவரிடம் விடைபெற்று,

பெண் காவலரிடம், “இவங்களை கூட்டிட்டு போங்க… நான் வரேன்…” என்றுவிட்டு நகர்ந்து விடவும்,

தியா அமைதியாக எழுந்து வெளியே ஜீப்பிற்கு செல்ல, மகிழனுக்கு அடுத்து என்ன என்னும் சிந்தனை மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது…

அதில் தியாவின் அமைதியும், கோபத்தையும் அதன் பொருளையும் உணர தவறினான்… பிரவீணிடம் பேசிவிட்டு சில நிமிடங்கள் கழித்து வெளியேறிய சமையம், ஜீப்பின் அருகில் கையை கட்டியபடி எங்கோ வெறித்தபடி நின்றிருந்தவளை கண்டு புருவம் சுருக்கியபடி வந்தவன்,

“ஏன் தனியா நிக்குற…?” என்ற கேள்வியோடு பார்வையை சுழற்றியவனுக்கு தியாவின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்று விட்டான் ஒரு நொடி…

“பதிமூணு வயசுல இருந்து தனியா தான் நிக்குறேன்… வீட்டுல, பிராஸ்டியூட் வீட்டுல, படிக்குற இடத்துல, வேலைல, அப்பாட்மென்டுல, இப்ப ரோட்டுல, நாளைக்கு ஜெயில்ல…” என்று சட்டென சொல்லிவிட்ட பின்தான் வார்த்தையின் பொருள் உணர்ந்தாள்…

நேற்றில் இருந்து மனதை அழுத்திய விஷயம் இப்பொழுது சட்டென வெளியே வந்துவிட, இறுக கண்களை மூடி திறந்தவள், சில நொடியில் தன்னை நிதானித்து

“ஒரு அம்மா கீழ விழுந்துட்டாங்க… அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போயிருக்காங்க அந்த லேடி போலீஸ்…” என்று விட்டு வண்டியில் ஏறிக்கொண்டாள் எதுவும் நடக்காதவாறு…

ஆனால் மகிழனுக்கு தான் மனம் பொருக்கவில்லை… எத்தனை வலியை அனுபவித்து இருந்திருந்தால் இப்படியான வார்த்தை அவள் வாயில் இருந்து வந்திருக்கும்…

எதுவும் பதில் பேசவில்லை, அன்னை சொன்னது போல் பேசி எதுவும் ஆக போவதில்லை என்பதை உணர்ந்து அமைதியாக சென்று வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான்…

“சாரி சார்… ஒரு அம்மா விழுந்….” என்று முடிக்கும் முன் கை காட்டி அவரின் பேச்சை நிறுத்தியவன்,

“உங்களுக்கு ஹெல்ப்பிங் டென்டென்ஸி அதிகம்னு நிறுப்பிக்க நேரம்காலம் இருக்கு… அக்கியூஸ்டை இப்படி விட்டுட்டு நீங்க பாட்டுக்கு போறீங்க… எங்கையாச்சும் தப்பி ஓடியிருந்தா யார் பொறுப்பு…? ஒழுங்கா வேலை செய்ய முடியலைன்னா வேலைக்கு வர கூடாது… செய்யுற வேலையோடு பொறுப்பு தெரிஞ்சு செய்யணும் எதையும்… இல்லைன்னா சமூக சேவை செய்யுற வேலைல சேர்ந்து இருக்க வேண்டியது தானே… உங்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தா…? இதுல உங்களை நம்பி எப்படி ஒரு பொறுப்பை கொடுக்குறது…?” என்று கத்தவும், தலையை குனிந்து கொண்டவர்,

“சாரி சார்… இனி இப்படி ஆகாது…” என்றதற்கும்,

“இப்ப எதுவும் ஆகலைன்னு தைரியத்துல வார்த்தை வருது… இதுவே ஏதாச்சும் ஆகி இருக்கணும்… அப்புறம் தெரிஞ்சு இருக்கும் இந்த மகிழன் யாருன்னு…” என்று திட்டியபடி கையை முறுக்க, இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்தபடி நின்றவரை பார்த்து, மகிழன்

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்குறதா உத்தேசம்…?” என்று மீண்டும் கத்தவும், வேகமாக சென்று ஏறிக்கொண்டார் வண்டியில்…

அவரை முறைத்தபடி கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டவன், ஜீப்பின் சைடு மிரரில் எதர்ச்சையாக பார்வையை செலுத்த, தியாவின் கலங்கிய கண்கள் அகபட்டது மகிழனுக்கு…

வலிக்கிறது தான் பெண்ணவளுக்கு, மகிழனின் வார்த்தை உதாசீனம் என அனைத்தும் வலித்தது… உள்ளுக்குள் உடைந்து கொண்டே போனாள்…

இத்தனை வருடம் கட்டிகாத்து வந்த தைரியம் மன உறுதி அனைத்தும் மகிழனிடம் தகர்வதை தியாவாள் உணர முடிந்தது…

இத்தனை வருடமும் தனிமையில் இருந்தவள், சாஸ்திரியின் அறவணைப்பில் இருந்த போதும், தனிமையை உருவாக்கி கொண்டாள்… எந்த இடத்திலும் பலவீனமாகி விட கூடாது என்று… ஆனால் மகிழன் அதை உடைத்து உள்ளுக்குள் ஒரு துணையாய் உருவாகி இருக்க, இப்பொழுது அவன் செய்கைகள் பெண்ணவளுக்கு வலியை தந்தது…

இரவெல்லாம் தனிமையில் மருத்தவமனையில் இருந்தது, காலை கடமைக்கென்று நலம் பற்றி கேட்டது, அக்கியூஸ்ட் என்ற பெயர் என அனைத்தும் அவளை வலிக்க வலிக்க உடைத்துக் கொண்டிருந்தது…

‘நான் என்ன தப்பு பண்ணினேன்…?’ என்ற பல வருட கேள்வி இன்றும் அவள் மண்டைக்குள் ஓடியதில் கண்களின் கண்ணீரை கவனிக்க மறந்தாள்…

அதன் விளைவாக, அது மகிழனின் கவனித்தில் விழுந்தது எதர்ச்சையாக… புரிந்துக் கொண்டான் தான்… தன் வார்த்தையின் காரணமாக தான் இருக்கும் என்று யூகித்தான்… ஆனால் அமைதி மட்டுமே அவனிடம்…

வார்த்தைக்கு சக்தி அதிகம்… அது உபயோகிக்கும் இடத்தில் சரியாக சென்று சேரவில்லை என்றால் அனைத்தும் தவறாகிவிடும்… இங்கு மகிழன் விஷயத்திலும் அதுவே நிகழ்ந்து கொண்டிருந்தது…

அடுத்த முக்காலமணி நேரத்தில் கோர்ட் வாசலில் நின்றது அவர்களது வண்டி… கீழே இறங்கி நின்ற தியாவிற்கு வார்த்தையில் வடித்திட முடியாத உணர்வு…

மன்சூரையும், ஆசிப்பையும் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நொடியில் இருந்தே இதற்கும் தயாராக நின்றவள் ஆனால் நடுவில் வந்த மகிழன் அனைத்தையும் தலைகீழாக மாற்றி இருந்தான்…

ஆனால் இப்பொழுது அவனே அதை உடைக்கையில் தியாவாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை… மேலும் மேலும் அழுகை வரும்போல் இருக்க, மெல்ல கண்களை திருப்பி மகிழனை பார்க்க, ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமே காட்சியளித்தான்…

நிதர்சனம் புரிந்தது, முன்தினம் கையில் இட்ட மருந்து மனிதாபிமானதின் அடிப்படையில் செய்த செயல்… அத்தோடு அனைத்தும் முடிந்தது என்னும் எண்ணம் அவளிடம்…

அனைத்தும் முடிந்தது என்று கோர்ட் படியில் காலை வைத்தவளுக்கு இனி சந்திக்க போகும் துயரங்கள் அறியாமல் போனது கஷ்டமே…

தொடரும்….

 

 

 

 

 

Advertisement