Advertisement

UD-22:

“தியா… தெரியாத ஊர்ல… தெரியாத பாஷைல எப்படி இங்க இருக்க முடியும் உன்னால…?” என்று அழுதபடி சின்னவளின் கண்களை துடைத்து விட, 

இவர்களின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது வேகமாக… அதில் திடுக்கிட்டு போனவர்கள், சட்டென தியாவை தனக்கு பின்னால் மறைத்து நின்றாள் பாதுக்காக்கும் பொருட்டு… 

உள்ளே இருந்து இறங்கிய சாஸ்திரிசிங்கை பார்த்த லேகாவிற்கு தன் உணர்வை வார்த்தையால் வடித்திட முடியாது போனது… ஆனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்று அறிந்துக்கொள்ளாமல் தாம் ஒருமுடிவிற்கு வர கூடாது என்றதால் அமைதியாக பல்லை கடித்து நின்றிருந்தாள்…

 

தியாவிற்கு என்னவென்று புரியவில்லை இவர் ஏன் மீண்டும் வந்திருக்கிறார் என்று யோசித்தபடி லேகாவின் உடையை இறுகபற்றியபடி நின்றிருக்க, 

சாஸ்திரி சிங் திரும்பி அந்த கட்டிடத்தையும் சுற்று புறத்தையும் ஓர் பார்வை பார்த்தவர், லேகாவிடம்

“எல்லாரும் கிளம்பிட்டாங்க போல…?” என்று கேட்க, ‘ஆம்…’ என்பது போல் தலையை ஆட்டி வைத்தாள்… 

சாஸ்திரி சிங்கிற்கு அவளது நிலை புரிந்திருந்தது, லேசாக தலையை எட்டி பின் நின்றிருந்த தியாவை பார்த்து புன்னகைத்தவர், 

“போகலாமா…?” என்று கேட்கவும், லேகாவிற்கு வார்த்தை வரவில்லை கண்ணீரை தவிர, பட்டென்று சாஸ்திரியின் காலில் விழுந்து விட்டார் கைகளை கூப்பியபடி… 

தியாவிற்கு விளங்கவில்லை… அவர் தன்னிடம் கேட்ட அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் புரிந்தது… ஆனால் ஏன் என்று புரியவில்லை… பயம்தான் வந்தது… 

இங்கிருந்து இன்னொருவரிடம் மாட்டிக்கொள்ள போகிறோமோ அதற்குதான் லேகா அக்கா தன்னை விட்டுவிடும்படி காலில் விழுந்து கெஞ்சுகிறாரோ என்னும் பயம் வந்தது… 

ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை… சாஸ்திரி சட்டென லேகாவை எழுப்பி, “என்ன பண்ணுறீங்க…?” என்று கேட்க, 

“ரொம்ப பயந்துட்டேன் சார்… சின்ன பொண்ணு… கூட கூட்டிட்டு போகவும் முடியல, தெரியாத ஊர்ல, புரியாத பாஷை, எப்படி விட்டுட்டு போறது என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்… தெய்வம் மாதிரி வந்தீங்க…?” என்று கண் கலங்கியபடி மீண்டும் கை கூப்ப, 

“ம்ம்ம்… நான் ஒன்னு கேட்கட்டா…?” என்று அவர் கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு கேட்க, 

“கேளுங்க சார்…” என்றபடி கண்களை துடைத்து கொண்டவளை பார்த்து, 

“என்ன உறவு உங்க ரெண்டு பேருக்கும்…? ஏன் இவ்வளவு அக்கறை காட்டுறீங்க…? உங்கள மாதிரி தான் இங்க இருந்த மத்த பெண்களும் ஆனா அவங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன்..?” என்ற வார்த்தைக்கு விரக்தியாக புன்னகைத்தவள், 

“எல்லாத்துக்கும் ஒரே காரணம் வலி சார்… வலி மட்டும் தான்… இதே மாதிரி தான் முதல்ல நான் இங்க வந்து மாட்டினப்ப வலியை அனுபவிச்சேன்… யாராச்சும் காப்பாத்திற மாட்டாங்களான்னு தவிச்சு இருக்கேன்… இப்ப அதே நிலைல இன்னொரு பொண்ணா…? அந்த கஷ்டமும் வலியும் வேண்டாம் சார்… மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியாது ஆனா நான் தியாவை என் தங்கச்சியா தான் பார்த்தேன்… நான் இங்க வந்தப்ப இருபத்தியொரு வயசு… ஆனா இவளுக்கு… என்ன தெரியும்னு இங்க வந்து மாட்டிக்கிட்டு கஷ்ட படணும்…?” என்று கண்ணீரை துடைத்து கொள்ள, 

சாஸ்திரியின் கண்களுக்கு அவள் தெய்வமாக தான் தெரிந்தாள்… ஒருபெருமூச்சை இழுத்து விட்டவர், 

“கவலைப்படாதீங்க… இனி தியா என் பொறுப்பு… அவளை நல்லபடியா வளர்க்க வேண்டியது என் கடமை… என் பொண்ணா இனி எங்க கூட இருப்பா… நீங்க நிம்மதியா இருக்கலாம்…” என்றதும் கண்ணீரோடு புன்னகை புரிந்தவள், 

“ரொம்ப நன்றி சார்…” என்றதோடு தியாவின் புறம் திரும்ப, 

அவளோ இவர்கள் பேசியது எதுவும் புரியாது பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள் பயத்தோடு… ஆனால் அவர்களின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டு பிரச்சினை எதுவும் இல்லை என்பதை மட்டும் அறிந்துக்கொண்டாள்… 

தன் புறம் திரும்பிய லேகாவை பார்த்து முழிக்க, அவரோ “தியா… இவர் இனி உன்னை பார்த்துப்பாரு… இவங்களோடு போ…”என்றதும் அதுவரை அமைதியாக பார்த்திருந்தவளின் முகம் சட்டென கலவரம் ஆனது… 

“இல்ல அக்கா… உங்களோட…” என்று சொல்ல வந்தவள் பின் நிலை அறிந்து அமைதியாகி விடவும், 

லேகா புரிந்துக்கொண்டு, “பயப்படாம போ தியா… இவர் கூட இருந்தா தான் நீ பத்திரமா இருப்ப… என்னாலையும் உன்னை கூட்டிட்டு போக முடியாது… அப்படியே இங்கேயே விட்டுவிட்டு போகவும் முடியாது… புரிஞ்சுக்கோ… இவர் உன்னை நல்லா பார்த்துப்பார்…” என்று சொல்ல மறுப்பாக தலையை ஆட்டி வைத்தாள்… 

அத்தனை பயம் உள்ளுக்குள், அவள் சிறிது காலமாக கடந்து வந்த அத்தனை பேரும் வலியை மட்டுமே தந்து வந்தவர்கள்…. அதனால் சாஸ்திரியின் மீது நம்பிக்கை வரவில்லை என்பதை விட, பயம் என்று சொல்வது தான் சரியாக வரும்…

அதை புரிந்து கொண்ட சாஸ்திரி, “பேட்டி…” என்றழைக்க, அதிர்ச்சி மட்டுமே சின்னவளிடம், 

“பயப்படாம வா… நான் உன்னை பார்த்துக்குறேன்… படிக்க வைக்குறேன்… வரியா…?” என்று கேட்க, தியாவிற்கு முதல் வார்த்தை மகள் என்று சொன்னது மட்டும் புரிய மற்றது எதுவும் புரியாமல் திரும்பி லேகாவை பார்க்க, 

அவரோ புன்னகையுடன் அவளை பார்த்து கண்ணீர் சிந்தியவர், “படிக்க வைக்குறேன்… என் கூட வரியான்னு கேட்குறாங்க…?” என்ற வார்த்தையில் அதிர்ச்சியானவள் திரும்பி சாஸ்திரியை பார்க்க, 

அவரோ ஒரு புன்னகையுடன் அவள் தலையை நீவியபடி, “என்ன வரியா…?” என்று கேட்க, அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்…

“இங்க பாரு தியா… இந்த மாதிரி மனுஷங்க கிடைக்குறது நாம செஞ்ச புன்னியம்… இவர் இல்லைன்னா நீயும் நானும் இப்படி இங்க நின்னுட்டு இருக்க முடியாது… கடவுளே நினைச்சுட்டு இவரை நம்பி கூட போ… கண்டிப்பா பெரிய ஆளா வருவ… உன்னை படிக்க வைக்குறேன்னு சொல்லுறாங்க… இனி எல்லாம் நல்லாதாவே நடக்கும்… கவலை படாத… போ…” என்க, லேகாவின் வார்த்தை அத்தனையும் பலிக்கும் என்று அறியாமல் அவள் கூறியதை கேட்க முடிவு செய்து சாஸ்திரியுடன் செல்ல ஒப்பு கொண்டாள்… 

ஆட்டோவில் ஏறிய தியாவிடம், “பத்திரமா இருந்துக்கோ… நல்லா படி… எங்கையும் மனசை அலைபாய விடாத… இங்க நீ வந்தது பார்த்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துரு… இனி எல்லாமே நல்லாத தான் நடக்கும் உனக்கு… சரியா…” என்று புன்னகையும் கண்ணீருமாக பேசியவளின் கையை பிடித்தவள், 

“ரொம்ப நன்றி க்கா… நீங்க இல்லைன்னா கண்டிப்பா நான் இல்லை… எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி அக்கா…” என்று கூறியவளின் கன்னம் தட்டியவள், சாஸ்திரியை பார்த்து

“தேங்க்ஸ் சார்…” என்று கையை கூப்ப, அவரோ

“நீங்க…?” என்று கேட்கவும், 

“நான் அப்படியே என் சொந்த ஊருக்கு போறேன் சார்…” என்று கூறவும் தன் பாக்கெட்டில் இருந்து சில தாள்களை எடுத்து நீட்டியவரை பார்த்து புன்னகைத்தவள், 

“செஞ்சது தப்பான தொழிலா இருந்தாலும் என் உழைப்புல சம்பாதிச்சது கொஞ்சம் இருக்கு சார்… அது போதும் எனக்கு…” என்க, புன்னகையோடு ஏற்று கொண்டவர், 

“அப்ப நாங்க கிளம்புறோம்…” என்று விடைபெற, தியாவிற்கு மனம் தாளவில்லை லேகாவை பிரிவது… 

லேகாவிற்கும் வலித்தது தான், சிறிது காலத்தில் உயிராய் பழகியவளை பிரிய மனம் வரவில்லை ஆனால் இது வாழ்க்கையும் இல்லையே… நிதர்சனம் புரிந்தவள் அமைதியான முகத்துடன் விடை கொடுக்க, ஆட்டோ கண்ணில் இருந்து மறையும் வரை தியா தலையை வெளியே நீட்டி லேகாவை பார்த்த படி இருந்தாள் கண்ணீரோடு… 

சாஸ்திரிக்கு இவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளமுடிந்தது… கஷ்டகாலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்திருக்கிறார்கள் என்று புரிய அமைதியாக வந்தார் வீடு வந்து சேரும்வரை… 

தியாவிற்கு தன் முன் இருப்பது கோவில் போல் காட்சியளித்தது அந்த வீடு… உண்மையில் அத்தனை ரம்மியமாக இருந்தது… 

அவள் சுற்று புறத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து வந்த பெண்மணி இவளை புன்னகை முகத்துடன் வரவேற்க, அனைத்தும் நல்லதாகவே நடந்தேறியது தியாவிற்கு…

பெயர் என்ன என்று கேட்ட அனைவருக்கும் தன் உண்மை பெயரை விடுத்து தியா என்றே அறிமுகபடுத்திக் கொண்டாள்… 

இதை எப்பொழுதும் மறக்கவே கூடாது என்னும் தீர்மானம்… நினைவில் வைத்து தன் உறுதியை மேலும் மேலும் வலுப்படுத்திக்கொண்டாள்… 

சாஸ்திரியின் உதவியில் போலி ஆவணங்கள் தயார் செய்து, பள்ளியில் சேர்ந்தாள்… அத்தோடு இல்லாமல் கல்லூரியிலும் சேர்ந்தாள் கம்ப்யூட்டர் சம்மந்தமான ஆர்ட்ஸ் துரையை தேர்ந்தெடுத்து படித்தாள்…

 

யாருடனும் அதிகம் பேசி, சிரித்து பழகியது இல்லை… ஆனால் தன் வேலையை சரியாக செய்தாள்… எங்கும் யாரையும் சார்ந்திருக்க நினைக்கவில்லை…. ஒருவாரத்தில் ஹிந்தியும் முழுமூச்சாக கற்று தேர்ந்தாள்… 

தியாவை சுத்தி எத்தனை மாறினாலும் உள்ளுக்குள் தினமும் ஓடிக்கொண்டிருந்த ராஜின் எண்ணங்களும் தன்னை விட்டுசென்ற விடுதியின் நாட்களும் அளியாத நியாபகங்களாய் மண்டைக்குள் உருண்டு கொண்டிருந்தது நொடிகளும் நாட்களும் தவறாமல்… 

அடுத்தடுத்து வந்த நாட்களில் தன்னை செதுக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினாள் தியா… எங்கும் யாரிடமும் தன் உண்மை அடையாளத்தை காட்டிக்கொள்ள நினைக்கவில்லை… 

இன்னும் சொல்ல போனால் அதை பத்திரபடுத்தினாள் உள்ளுக்குள்… அது வெளிவரும் நேரம் அவள் பலியாக்க நினைத்தவர்களின் முன் வர வேண்டும் என்பது  மட்டும் அவள் முடிவாக இருந்தது… 

****** 

கையில் இருந்த இரத்தம் சற்று காய்ந்து போயிருந்தது… கண்களில் இப்பொழுது கண்ணீர் இல்லை , உடலில் தளர்வில்லை…. மாறாக நான் சாதித்தே விட்டேன் என்னும் நிறைவு தெரிந்தது அவள் முகத்தில்… 

அவளுக்கு எதிரில் அமர்ந்து அனைத்தையும் கேட்டுகொண்டிருந்தவன் பார்வை முழுவதும் தியாவின் மேல் தான் இருந்தது… 

அவள் வார்த்தையின் வழி வந்த வலிகளை தன் பார்வையால் உணர முடிந்தான் அந்த காதல் காவல் அதிகாரி… 

மகிழனுக்கும் வலித்தது, அவள் சொல்ல முடியாத, மற்றொருவன் முன் சொல்ல கூடாது விஷயங்களை இப்பொழுது சொல்ல முடியாது திணறியபொழுது என்று அனைத்து வலியையும் உணர்ந்து கொள்ள முயற்சித்தான்… 

அவள் அதன்பின் சற்று அமைதியாகி விட, ஒருபெருமூச்சுடன் தன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டவன், தியாவிற்கு எதிரில் கீழே பாதி உயிராக கிடத்தவனை பார்த்தவனுக்கு அத்தனை கோபம் வந்தது தான் ஆனால் எதுவும் பேசவோ அல்லாது அடிக்கவோ தோன்றவில்லை மகிழனுக்கு… 

எழுந்து மருத்துவபெட்டியை எடுத்து வந்து தியாவின் அருகில் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தவன், 

“கையை குடு…” என்று அவள் கையை பிடிக்க வர, 

சட்டென கையை இழுத்துக்கொண்டவள், “தேவையில்லை… எப்பவும் போல சொல்லுறேன் ஒழுங்கா போயிரு அதுதான் உனக்கு நல்லது…” என்று எச்சரிக்க, 

“என் மேல அவ்வளவு அக்கறையா… என்னோட நல்லது பத்தி எல்லாம் யோசிக்குற…” என்று நக்கலடித்தபடி அவள் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காயத்தை சுத்தம் செய்ய முயற்சிக்க, 

“எதுக்கு இப்படி பண்ணுற…? இவ்வளவு நேரம் நான் சொன்னது புரிஞ்சுதா இல்லையா…?” கையை உருவிக்கொள்வதில் அவள் கவனம் என்றால், அவளது காயத்தில் மருந்திடுவதில் அவன் கவனம் என்றிருந்தான்…

“ரொம்ப நல்லா புரிஞ்சுது… நீ ஒரு சுயம்புன்னு புரிஞ்சுக்கிட்டென்… உன்னை எப்படி ஹான்டில் பண்ணணும்னு தெரிஞ்சுக்கிட்டென்…” என்றவனை பார்த்து பல்லை கடித்தவள், 

“நான் பிராஸ்டியூட் வரை போனவ…” என்று கத்த, 

“அதை நீ பண்ணியே இருந்தாலும், நான் இப்ப பிடிச்சதை விட்டிருக்க மாட்டேன்…” என்று அவனது பிடியை இன்னும் இறுக, தியாவிற்கு வலித்தது… 

“ஸ்ஸ்ஸ்….” என்ற முனுங்களோடு, கையை விடுவிக்க போராட, நான் விடுவேனா என்று அவளையே பார்த்திருந்தான் மகிழன்… 

இவர்களின் போராட்டத்தை நிமிர முடியமால் நிமிர்ந்து ஓர் பார்வை பார்த்தவன், உயிர் போகும் வழியில் தரையில் சரிந்தான் மயக்கத்தில்… 

ஆனால் அதை இருவரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை விட, பெரிதாக கவனிக்க நினைக்கவில்லை என்பதே உண்மை… 

சற்று நேரம் போராடி பார்த்தவள் பின் உடல் சோர்வால் அமைதியாகி விட, சிறு வெற்றி புன்னகை மகிழனிடம்… 

‘அது…’ என்பது போல் ஓர் பார்வை பார்த்தவன், அவளது கைகளுக்கு மருந்திட்டான் அமைதியாக… ஆனால் அந்த அமைதியை கலைத்தாள் தியா சில நிமிடங்களில்….

“எப்படி நான் இங்க வந்து இந்த கூட்டத்ததோடு வந்து சேர்ந்தேன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா…?” என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன், 

“வேண்டாம்…” என்றுவிட்டு தன் வேலையை பார்க்க, 

“வேண்டாம்னு சொன்னாலும்… உன் போலீஸ் மூளை எப்படின்னு யோசிக்குமே…” என்று கேட்டவளை பார்த்து கள்ளசிரிப்பு சிரித்தவன், 

“நீ தான் என் பியூட்டின்னு பேஸ்மென்டை ஸ்டிராங் ஆக்கிட்டே இருக்க அழகி…” என்று ஒற்றை கண்ணை சிமிட்ட, முறைத்து வைத்தாள் பெண்ணவள்… 

“நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசிட்டு இருக்க…” கடுப்பு அவள் குரலில், 

“என்ன பேசிட்டேன்…?” என்றுபடி மருத்திட்டு கட்டிட்டவன், அவளை நிமிர்ந்து பார்த்து, 

“என்னை என் அம்மாக்கு அடுத்து என் திங்கிங்கை கெஸ் பண்ணுறது நீ மட்டும் தான் தியா…” என்று அவள் கண் பார்த்து சொல்ல, 

பெண்ணவளுக்கு எதிர்த்து பேச நாயெழவில்லை, எங்கோ எதையோ இழந்ததை எதிரில் இருப்பவன் மீண்டும் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க காத்திருக்கிறான் என்று உள்மனம் அடித்து சொன்னது… ஆனால் தன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள்…? 

ஏதோ பேச வாய் திறக்கும் முன், வெளியே ஆம்புலன்ஸும் போலீஸ் ஜீப்பின் சத்தமும் கேட்க வாயை மூடிக்கொண்டாள் இறுக்கமாக… 

அதை கவனித்தவன், “இதுவரைக்கும் நீ விஷத்தை தான் ருசிச்சு இருக்க அதுல நீ சாகாம இப்ப இங்க நிக்குறன்னா அதுக்கு காரணம்…” என்றபடி எழுந்து நின்று தன் கூலரை அணிந்து கொண்டவன், தன் பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்தபடி, 

“இனி தேன் அமுதை உருசி பார்க்கணும்னு தான்… அதுவும் என்னால…” என்க, 

“அதுக்கு நான் சரின்னு சொல்லணும்…” என்று முறைத்தவளை பார்த்து சிரித்துவைத்தவன், 

“குழந்தைகளுக்கு நல்லது எதுன்னு தெரியாது… அவங்களுக்கு லைட்டா அந்த நல்லதை ருசி பார்க்க வச்சுட்டா தானா விரும்பி கேட்பாங்க…” என்றவனுக்கு பதில் கூறும் முன் உள்ளே நுழைந்தான் பிரவீண்… 

அதில் நமட்டு சிரிப்பொன்றை சிரித்தவன், பிரவீண் புறம் திரும்ப தியாவிற்கு தான் கோபம் உச்சிக்கு சென்றது… 

‘சொன்னால் புரிந்துக்கொள்ளாமல் பேசுறவனே என்ன பண்ணுறது …’ என்று பல்லை கடிக்க, மகிழன் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை… 

அங்கிருந்த நிலையை சட்டென யூக்கித்து கொண்ட பிரவீண், மகிழனின் புறம் திரும்பி, 

“சார்….” என்று பேசும் முன், 

“அரெஸ்ட் ஹர்…” என்ற அதிகாரம் வந்தது மகிழனிடம் இருந்தது…

தொடரும்…. 

Advertisement