Advertisement

UD-21:

“என்ன அக்கா சொல்லுறீங்க…?” என்று கேட்டவளுக்கு கனவில் இருக்கிறோமோ என்னும் சந்தேகம்… 

“உண்மையா தான் சொல்லுறேன்… வா வந்து நீயே பாரு…” என்று வெளியே அழைத்து செல்ல, அங்கு போலீஸ் குவிந்திருந்தது… 

ஒருபக்கம் தேவிம்மா கத்தி கொண்டிருக்க, போலீஸ் ஒருபக்கம் பேசிக் கொண்டிருந்தது, இதில் பத்திரிகையாளர்கள் வேறு ஒருபக்கம் என்று சலசலப்பாக இருந்தது அவ்விடமே…

 

தேவிம்மா, “நீங்க நினைக்குற மாதிரி என்னை அவ்வளவு லேசுல ஒன்னுமில்லாம ஆக்க முடியாது… யாரு மேல கை வைக்க பார்க்குற…?” என்று கத்த, 

அங்கிருந்ததில் உயர் அதிகாரி போல் இருந்தவர், தேவிம்மாவிடம் “சொன்னா புரிஞ்சுக்கோங்க… நான் ஏற்கனவே சொன்னேன் உங்ககிட்ட நீங்கதான் கேட்கல… இங்க வேண்டாம், வேற எங்கையாச்சும் வச்சுக்கோங்கன்னு பலமுறை சொன்னேன்… இது மையின் ஏரியா ஜீ… அதுவும் இல்லாம ஒரு மைனர் பொண்ணை வேற வச்சு இருக்கீங்க… பொது மக்கள் கம்ளேயின்ட் பண்ணி இருக்காங்க… இதுல அந்த ரிப்போர்ட்ர் வேற டார்ச்சர் பண்ணுறான்…” என்றவன் கையெடுத்து கும்பிட்டு, 

“புரிஞ்சுக்கோங்க தேவிம்மா… என்னை என் வேலையை செய்ய விடுங்க…” என்று பவ்வியமாக கேட்க, 

கோபமாக முறைத்தவர், “ஏய்ய்ய்….” என்று கத்தும் போது அங்கு வந்த சாஸ்த்திரி சிங், 

“என்ன சார் இவங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க…?” என்று ஆரம்பிக்கும் போது, 

“உன்னை சும்மா விடமாட்டேன்….” என்று தேவிம்மா பல்லை கடிக்க, நடுவே புகுந்த போலீஸ், 

“சார் பிளீஸ்… நான் பார்த்துக்குறேன்…” என்று சமாதானம் பேசியவர், கண்களால் அங்கிருந்த பெண் போலீஸை அழைத்து கண்ஜாடை காட்ட, 

அவரும் புரிந்தார் போல் மல்லுகட்டிய தேவிம்மாவை வலுகட்டாயமாக அழைத்து சென்றார் வெளியே ஜீப்பில் ஏற்ற… 

பெண் போலீஸ் இழுத்த இழுப்பிற்கு புலம்பியபடி சென்றாலும் சாஸ்த்திரி சிங்கை முறைப்பதை மட்டும் விடவில்லை…

ஆனால் அதை அவர் கண்டுக்கொள்ளவும் இல்லை… தேவிம்மா சென்றதும், போலீஸ் திரும்பி

“இப்ப ஓகேயா சார்…?” என்று கேட்க, புன்னகைத்த சாஸ்திரி சிங்

“ரொம்ப தேங்க்ஸ் சார்… நீங்க இல்லாம கண்டிப்பா இது நடந்திருக்காது… பப்ளிக் நியூசன்ஸ் மட்டும் இல்லாம இங்க இருக்குற பொண்ணுங்க வாழ்க்கையும் இதுல இருக்கு சார்… நான் கேட்டதும் ஹல்ப் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு நன்றி சார்…” என்று கையை குழுக்க, 

போலீஸ் அதிகாரியும், “இது என் கடமை சார்… இந்த இடத்தை பத்தி ஏற்கனவே நிறைய கேஸ் வந்துச்சு… பட் ஒன்னும் பண்ண முடியல… இப்ப நீங்க கட்டாய படுத்தவும் என்னால பண்ண முடிஞ்சுது… அதுக்கு நானும் தேங்கஸ் சொல்லிக்குறேன்…” என்றதும் இருவரும் புன்னகைத்து கொள்ள, அங்கு வந்த மற்றொரு  பெண் போலீஸ்

“சார்…” என்றழைக்க, 

“சொல்லுங்க…” என்ற திரும்பிய அதிகாரியிடம், 

“இந்த பொண்ணுங்க….” என்று காட்டிய திசையில் பார்க்க, அங்கிருந்த பெண்களை ஒன்றாக நிற்க வைத்திருந்தனர்… 

அதை கண்டு கோபம் கொண்டவர், “கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? முதல்ல எல்லாரையும் உள்ள போக சொல்லுங்க…” என்று கத்தியவர், திரும்பி வாசலில் நின்றிருந்த பத்திரிகை ஆளுங்களை கண்டு, 

“இவங்க ஃபோட்டு எடுத்து போட்டுறுவாங்க நீயூஸ்காக… அப்புறம் இந்த பொண்ணுங்க நிலை…? கஷ்டம் சார்…” என்று சாஸ்திரி சிங்கிடம் புலம்ப, 

சிரித்தபடி, “நானும் பத்திரிகை காரன் தான் சார்…” என்க, 

“கண்டிப்பா நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்… ஆனா இவங்க எல்லாம் காசுக்காக நிக்குறாங்க… நீங்க நியாயத்துக்காக நின்னீங்க…” என்றதும் தலையசைத்து ஒப்பு கொண்ட சாஸ்திரி சிங், 

“அந்த பொண்ணுங்க…?” என்று நிறுத்த, 

“அதை அவங்க தான் முடிவு பண்ணணும்…” என்றிட, அதற்கும் தலையசைத்து ஆமோதித்தார் அமைதியாக… 

இங்கு உள்ளே வந்த பெண்களுக்குள்ளே பயங்கர சலசலப்பு, ஒருத்தி “இப்ப என்ன பண்ணுறது…?”என்று கேட்க, 

“நம்மளை விட்டுருவாங்க போல… ஆனா எங்க போறது…?” என்று மற்றொருவர் கேட்க, 

“சொந்த ஊருக்கே போக வேண்டியது தான்…” என்று சொல்ல, 

“நம்மளை ஏத்துப்பாங்களா…?” என்ற கேள்வி மற்றொருத்தியிடம்… 

இவ்வாறான பலபல பேச்சுக்கள் மத்தியில் தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை, அருகில் இருந்த லேகாவின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் கலக்கத்துடன்… 

இங்கு பாஷை தெரியாத மொழியில் அவர்கள் பேசிய அதே கேள்விதான் சின்னவளின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது… 

‘எங்கே செல்வது…? யாரிடம் கேட்பது…? எப்படி உயிர் வாழ்வது…? மீண்டும் இதுபோல் எங்காவது சிக்கி கொண்டாள்…?’ கேள்விகள் அனைத்தும் பூதம் போல் மண்டைக்குள் உருள தியாவினாள் எதுவும் சிந்திக்க முடியவில்லை… 

“ரொம்ப யோசிக்காத… விடு பார்த்துக்கலாம்…” என்ற வார்த்தை மட்டுமே லேகாவிடம் இருந்து… 

அதற்கு பதிலாக ஒரு போலி புன்னகையை சிந்திய தியா ஏதோ பேச வாய் திறக்கும் முன், உள்ளே நுழைந்தார் அந்த போலீஸ் அதிகாரியும், சாஸ்திரி சிங்கும்… 

இருவரையும் கண்டு பெண்கள் அனைவரும் எழுந்து நிற்க, 

போலீஸ் அதிகாரி, “உங்களை நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம்… இனி நீங்க உங்க இஷ்டம் போல இருக்கலாம்… சொந்த ஊர் போகணும்னு நினைக்குறவங்க தாராளமா போலாம்… உங்க பேர் ஃபோட்டோ எதுவும் வெளிய வராது… அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்… உங்களுக்கு என்ன உதவி வேண்ணுமோ அதை நீங்க தயங்காம கேட்கலாம்…” என்க, 

கூட்டத்தில் ஒருத்தி, “சார் தீடீர்னு வந்து இப்படி சொல்லுறீங்க… இப்பவே நாங்க இந்த இடத்தை விட்டு கிளம்பியாகணுமா…?” என்று கேட்க, 

“நைய்… நைய்… நீங்க இப்பவே கிளம்பணும்னு சொல்லல… மூன்னு நாள் டைம் இருக்கு… அதுக்கு அப்புறம் தான் இந்த இடத்தை சீல் வைக்க போறோம்… அதுக்குள்ள நீங்க கிளம்பணும்…” என்றதும், அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, சாஸ்திரியின் கண்கள் தியாவின் மீது தான் இருந்தது… 

அவளோ போலீஸை பார்ப்பதும் திரும்பி பக்கம் இருந்த லேகாவை பார்ப்பதுமாக இருந்தாள்… அவர் பேசுவது புரியவில்லை என்பதை அவள் முழிப்பதை வைத்தே புரிந்து கொண்டவருக்கு லேசாக புன்னகை தோன்றியது இதழோரம்… 

“சரி… நீங்க யோசிச்சு முடிவெடுங்க…” என்று வெளியேற போக, உடன் சாஸ்திரி சிங்கும் நகர, லேகா வேகமாக ஓடி சென்று அவர்களை தடுத்தாள் கையெடுத்து கும்பிட்டபடி… 

கண்கள் கலங்கி இருந்தது, உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்டனர், ஒரு புன்னகையோடு அதை ஏற்றபடி நகர போக, 

லேகா, “சார்…” என்று அழைத்து சாஸ்திரி சிங்கை நிறுத்த, 

போலீஸ் அதிகாரி, “ஓகே சாஸ்திரி… நான் வெளியே வெய்ட் பண்ணுறேன்…” என்று நகர்ந்துவிட, 

“சொல்லுங்க… என்ன பண்ணனும் நான்…” புன்னகையோடே கேள்வி வந்தது… 

“உங்களால தான் தியா தப்பிச்சு இருக்கான்னு தெரியும்… நேத்து நீங்க தான் அவ ரூம்க்கு வந்துட்டு போனீங்க…” என்றவளுக்கு எப்படி பேசுவது என்ன சொல்வது என்று புரியவில்லை… 

தயக்கத்தோடு கையை பிசைந்து நிற்க, புன்னகைத்தவர் “பதற்றம் வேண்டாம்…எனக்கு அவ பொண்ணு மாதிரி… என்னால முடிஞ்சதை நான் செஞ்சேன் அவ்வளவு தான்…” என்க, 

கண்கள் கலங்கியவள், “சார்…. எங்களுக்கு அடுத்து என்ன பண்ணணும்னு தெரியலை… சொந்த ஊருக்கே போனாலும் போகலாம்… ஆனா தியாக்கு…” என்று அழுகையை முழுங்கியவள், 

“அவளை இங்க கொண்டு வந்து விட்டது அவளோட அப்பா…” என்ற வார்த்தையில் சாஸ்திரிசிங்கிற்கு அதிர்ச்சி தான்… 

ஆனால் வாய் திறந்து எதுவும் பேசவில்லை, லேகாவே தொடர்ந்தாள் “அம்மாவும் இல்லைன்னு சொன்னா… இவளை என்ன பண்ணுறதுன்னு தெரியலை சார்… இங்கேயே விட்டுட்டு போனா கண்டிப்பா இன்னொருதர் கைல மாட்டிக்குவா… சின்ன பொண்ணு… என் வாழ்க்கையே இங்க கேள்வி குறியா இருக்கு… இதுல தியாவை கூட்டிட்டு எங்கையும் போக முடியாது…” என்று தயக்கத்துடன் நிறுத்த, 

“ம்ம்ம்… சொல்லுங்க… நான் என்ன உதவி பண்ணணும்…?” என்று கேட்க, 

தியாவை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், சாஸ்திரி சிங்கிடம் “தியாவை நீங்க கூட்டிட்டு போவீங்களா…?” என்று கேட்டிட, யோசனையானது அவர் முகம்… 

அவரது முகத்தை பார்த்தவள், அவசரமாக “சார் அவ எங்களை மாதிரி இல்ல… கரைபடியாதவ…. இங்க ஒருவாரம் இருந்தாளே தவிர சுத்தமானவ சார்…” என்றவளை, 

“சே… சே… நான் அப்படி நினைக்கவே இல்ல… இது வேற விஷயம்…” என்று தயங்கியவர், பின் நிமிர்ந்து

“நான் நாளைக்கு சொல்லுறேன்…”என்றிட, 

“சரி சார்… கொஞ்சம் நல்ல முடிவா சொல்லுங்க சார்…” என்று கையை கூப்ப, 

“கண்டிப்பா…” என்றதோடு தியாவை ஓர் பார்வை பார்க்க பாவமாக இருந்தது… 

பதிமூன்று வயது பெண், புடவை கட்டி இந்த தொழிலுக்கான தோரணையில் பேந்த பேந்த முழித்தபடி அனைவரையும் பார்த்து நின்றவளுக்கு என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று மொழியும் தெரியவில்லை தன் எதிர்காலமும் தெரியவில்லை… 

ஒரு பெருமூச்சுடன் வெளியேறி விட, லேகா மீண்டும் தியாவின் அருகில் வர, “என்ன அக்கா ஆச்சு… நீங்க என்ன பண்ண போறீங்க…? எல்லாரும் என்ன பேசுறாங்க…?” என்று படபடத்தவளை பார்த்து, 

“எல்லாம் நாளைக்கு தெரியும்… முதல்ல நீ இந்த புடவையை மாத்து…” என்று அழைத்து செல்ல, 

“ஏன் அவசரமா மாத்தி விடுறீங்க…?” என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்த லேகா, 

“இனி இது வேண்டாம்… புடவை எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்… எப்ப கட்டுனாலும் அழகா தெரிவாங்க… ஆனா இங்க கட்டுற புடவையோட அர்த்தமே வேற… இதை நாங்க அனுபவிச்சது போதும்… உனக்கு வேண்டாம் அதான் மாத்த சொல்லுறேன்…” என்க, அமைதி மட்டுமே தியாவிடம்… 

வெளியே பேச்சு குரல் பலமாக கேட்கவும், “இப்ப என்ன பண்ண போறாங்க எல்லாரும்…?”என்ற கேட்டவளுக்கு, 

லேகாவும் அதை கவனித்து, “சிலர் எங்கையாச்சும் போய் வேலை தேடி பிழைச்சுக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க… கடத்தல் மூலமா வந்தவங்க வீட்டுக்கே போலாம்னு பேசிக்குறாங்க… சிலர் காமத்திபுரா போகலாம்னு சொல்லுறாங்க…” என்றதற்கு, 

“ஓஓஓ… என்ன ஊர் அக்கா அது…?” என்று சந்தேகம் கேட்டவளை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள், 

“விபச்சாரத்துக்குனே இருக்குற ஊர்…இங்க மாதிரி இல்ல அங்க எல்லாம்… உள்ள காலை வச்சுட்டா திரும்பி கூட பார்க்க முடியாது நம்ம வந்த வழியை… போலீஸ், கோர்ட், அதிகாரம் எதுவும் அங்க செல்லுபடி ஆகாது… அது ஒரு சாம்ராஜ்யம் மாதிரி… நீ இங்க வந்தது கடவுளோட வரம்…” என்று அவள் கன்னம் வருடியவள், 

“உங்க அப்பாக்கு அந்த இடத்தை பத்தி தெரிஞ்சு இருந்தா இங்க கூட்டிட்டு வந்து வெறும் ரெண்டு லட்சத்திற்கு விட்டுட்டு போயிருக்க மாட்டாரு…” என்றதில் அதிர்ந்து பார்த்த சின்னவளை, 

“உன் மாதிரி சின்ன பொண்ணுக்கு மார்க்கெட்டுல பயங்கர காசு வரும் அங்க…”என்றவள் எழுந்து தன் உடைமைகளை சேகரித்தபடி, 

“கடவுள் தான் உன்னை காப்பாத்தி இருக்காரு… அந்த கடவுள் தான் அந்த சிங் சார் மூலமா உன்னை இங்க இருந்து விடுவிச்சு இருக்காங்க…” என்று சொல்ல, சின்னவளின் உள்ளத்தில் அனைத்தும் அழியா கோலங்களாக பதிந்தது ஆழமாக… 

அடுத்த இரண்டு தினங்கள் கடந்த நிலையில் லேகாவிற்கு கவலை பிடித்து கொண்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை… 

தியாவின் முகத்தை பார்ப்பதும் எதையோ யோசிப்பதும் என்று இருந்தவளுக்கு கவலை ஏறிக்கொண்டே போனது… 

உண்மையில் தியாவின் நிலையும் அதுதான்… அனைவரும் அவர்களது உடைமைகளை எடுத்து வைக்க, தான் எதை எடுத்து வைப்பதென்று தெரியவில்லை… 

அதற்கும் மேலாக எங்கே செல்வதென்று தெரியவில்லை… என்னையும் உடன் அழைத்து செல்லுங்கள் என்று லேகாவிடம் கேட்க ஏன்னோ மனம் வரவில்லை… அவரும் தன்னிடம் இதைபற்றி எதுவும் பேசாதது ஒருபக்கம் வலியை தந்தது… 

ஆனால் அதை தவறாக நினைக்க தோன்றவில்லை அவளுக்கு காரணம் தன் தந்தையே தன்னை இந்த சாக்கடையில் தள்ளிவிட்டு சென்றிருக்க யாரென்று அறியாத ஒருவார பழக்கத்தில் தெரிந்தவரிடம் போய் என்னை அழைத்து செல் என்று கேட்க ஏனோ மனம் வரவில்லை… 

உள்ளுக்குள் அமைதி போராட்டம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது… ஒருசிலர் முன்னமே கிளம்பி இருக்க, மிச்ச சொச்சமாக ஐந்து பேர் மட்டும் இருந்தனர் அவ்விடத்தில்… 

சொன்னது போல் காலை பதினோரு மணி அளவில் போலீஸுடன் சில அதிகாரிகள் வந்து இருந்தவர்களையும் வெளியேற்றிவிட்டு அவ்விடத்தை சீல் வைத்தார்… 

முடிந்தது அவர்கள் கடந்துவந்த ஒரு அத்தியாயம் முடிந்தது… இனி அடுத்து அவர்கள் தங்கள் வழியை பார்த்து செல்ல, தியா முற்றிலும் உள்ளுக்குள் உடைந்து போனாள்… 

கையில் சிறிய துணி மூட்டை, அதுவும் லேகாவும் மலையாள பெண்ணும் அவளுக்கு கொடுத்தது… கையில் காசில்லை… தெரிந்தவர் யாரும் இல்லை… அருகில் இருக்கும் ஒரு பற்றுகோலும் இப்பொழுது இல்லாமல் போயிவிடும் அடுத்து…? 

கேள்வி பூதாகரமாக நின்றது தியாவின் முன்… ஏன்னோ அழுக தோன்றவில்லை மாறாக வெறி தோன்றியது தந்தை என்னும் மிருகத்தின் மேல் வெறி தோன்றியது… 

‘உன் சாவு என் கையில் தான்…’ என்னும் சபதம் எடுத்த நேரம், அவள் கையை பற்றினாள் லேகா… 

திரும்பி பார்த்தவளின் விழிகளுக்கு தெரிந்தது, லேகாவின் கண்ணீர் முகம் தான்… புரிந்து கொண்டாள் இது விடை பெறும் நேரம் என்று… 

“போயிட்டு வாங்க அக்கா… பத்திரம்…” என்று சொல்லவும், வாய்விட்டு அழுந்தவள் தியாவை இழுத்து அணைத்துக் கொண்டாள்… 

“எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல தியா…” என்று அழுக, 

“அக்கா ஒன்னுமில்ல அழாதீங்க… நான் என்னை பார்த்துப்பேன்… நீங்க கவலைப்படாதீங்க… இந்த நரகத்துல இருந்து தப்பிச்சுட்டேன்… இதுவே போதும்… இனி எங்கையாச்சும் வேலை பார்த்து வாழ்ந்திருவேன்…” என்ற வார்த்தையில், உள்ளம் உருகி போனது லேகாவிற்கு… 

தொடரும்…. 

 

 

 

 

Advertisement