Advertisement

UD-15:

“ஆறு வருஷத்துக்கு முன்னாடி… இங்கதான் கூடிட்டு வந்தான்… தப்பிக்க நிறைய முயற்சி பண்ணினேன்… ஆனா முடியலை… திரும்புவும் இவன் கிட்ட மாட்டிக்கிட்டு அதுக்கான தண்டனையா நிறைய அனுபவிச்சேன்… அப்புறம் தான் புரிஞ்சுது என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு… அமைதியாகிட்டேன்…” என்று பேசியவளிடம் இப்பொழுது அழுகை இல்லை… 

“உன் பேரன்ஸ்….?” 

“தெரியலை… என்ன பண்ணுறாங்க…? எங்க இருக்காங்க எதுவும் தெரியலை… தப்பிக்க முயற்சி பண்ணினப்ப எல்லாம் இந்த தெருவை கூட தாண்ட முடியலை… ஃபோன் பண்ண வசதியும் இல்ல…” 

“அப்ப ஆறு வருஷமா இங்கையே தான் அடைஞ்சு இருக்கியா…?” என்ற கேள்வியில் நக்கலாக இதழோரம் ஒரு புன்னகையை காட்டியவள், 

“இருந்தேன்… மூன்னு வருஷம் அப்படிதான் இருந்தேன்… தேவையானது வீட்டுக்கு வந்துரும்… கேட்டை தாண்டி வெளியே போக முடியாது… போகவும் கூடாது… அதுக்கு அப்புறம் எனக்கே இந்த நரகம் பழகிருச்சு… அவனுக்கும் அது புரிஞ்சுது போல… பார்ட்டிக்கு மட்டும் கூடிட்டு போனான்… பப், பார்ட்டி தவிர வேற எதுக்கும் நான் வெளியே போனது இல்லை…” 

“இப்ப ஃபோன் இருக்கா…?”

“இருக்கு…”

“எப்படி…? வீட்டுக்கு பேசுனியா…? இங்க நே மாட்டிக்கிட்டு இருக்கன்னு சொன்னியா…?”

“இவனே தான் வாங்கி தந்தான்… பல வருஷம் கழிச்சு… இனி எங்க போயிற போறான்னு நினைச்சு வங்கி குடுத்தான் போல… வீட்டுக்கு கால் பண்ணினேன் ஆனா கால் போகல…. தெரிஞ்ச நம்பர் எதுவும் இல்ல,,,”

“போலிஸ்க்கு சொன்னியா…?” என்ற கேள்வியில் நக்கலாக ஒரு சிரிப்பை தந்தவள்,

“இல்லிகல் வேலை செய்யுறவனுக்கு போலீஸ் பவர் இருக்காதா சார்…? என்று ஒரு பெருமூச்சை விட்டவள்.

“அவன்கூட வெளிய போன சில நாள்லையே அவன் பவரை தெரிஞ்சுகிட்டேன்….” அவள் நிலையை புரிந்து கொண்டான் வேதனையுடன்…

“ம்ம்ம்…. இந்த வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க…?” அடுத்த கேள்வி அவனிடமிருந்து…. 

“நான், கேட் வாட்ச்மேன், சமையல் செய்யுற அம்மா ஒருதர்….” தெளிவான பதில் மட்டுமே இப்பொழுது அவளிடம் இருந்து… 

“அவங்க எல்லாம் எங்க இப்ப….?” என்று புருவம் சுருக்கி கேட்கவும், 

“வாட்ச்மேன் கேட்’ல தான் இருப்பாரு… சமைக்குற அம்மா இவன் வர நாள்ல இங்க இருக்க மாட்டாங்க…” என்றதும் திரும்பிய சற்று தொலைவில் நின்றிருந்த ஏட்டை இருவிரல் காட்டி அழைக்க, 

அவர் வந்ததும், “வாட்ச்மேன் எங்கன்னு பாருங்க…” என்று கட்டளையிட, 

“எஸ் சார்…” என்றபடி விலகியதும், 

“ஏன் அப்படி மன்சூர் வர அன்னைக்கு வரது இல்ல…? இவங்களா வரது இல்லையா…? இல்ல வர வேண்டாம்னு சொல்லிட்டியா…?” 

“சின்ன கரெக்ஷன்… நான் சொல்லல… அவன் தான் சொன்னது…” என்று வார்த்தையை திருத்த, மகிழனுக்கு ஏன் என்று புரிந்தாலும் வாய் வார்த்தையாக எதையும் தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தான்… 

“ஏன்…?” 

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள், “பிரைவஸி போயிரும்னு வேண்டாம்னு சொன்னான்…” என்றவளுக்கு அவன் வரும் நாட்களின் கொடுமைகள் நினைவிற்கு வந்து போனது நொடியில்… 

“இன்னைக்கு என்ன நடந்துச்சு…?” 

“எப்பவும் போல சாந்திரம் தான் வந்தான்… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை… சோ என்னால முடியாதுன்னு சொன்னேன்… கோவம் வந்துருச்சு… அவன் கேட்டு எப்பவும் நான் நோ சொல்ல கூடாது… இது அவனோட டார்ச்சர் லிஸ்ட்டுல ஒன்னு… என்னால முடியாதுன்னு சொல்லவும் என்னை அடிச்சுட்டு ரூம்க்கு போயிட்டான்… நான் அப்படியே இங்கேயே படுத்துட்டேன்… அப்புறம் தான் நீங்க வந்தீங்க…” என்று சொல்லி முடிக்க, புருவம் சுருக்கி யோசித்தவன்

“அப்ப ரூம்ல திங்ஸ் எல்லாம் சிதறி இருக்கு…?” கண்கள் எதிரில் இருப்பவளை ஸ்கேன் செய்தது இமைக்காமல்… 

“எப்பவும் வந்ததும் ரூம்க்கு தான் போவான்… இன்னைக்கும் அப்படிதான் போனான்… என்னால முடியாதுன்னு சொன்னேன்… ஃபோர்ஸ் பண்ண டிரை பண்ணினான் அதுல தான் அப்படி ஆயிருச்சு ரூம்….” எந்த இடத்திலும் பிசிரின்றி வந்தது வார்த்தைகள்… 

“ஓஓஓ… இதுக்கு முன்னாடி ஃபோர்ஸ் பண்ணது இல்லையா…?” 

“பண்ணி இருக்கான்…  விருப்பம் இல்லாம தான் எல்லாம் நடக்கும்…” 

“அப்புறம் எப்படி இன்னைக்கு மட்டும் அடிச்சுட்டு விட்டுட்டான்…?” சந்தேகம் அவன் கண்களில்…

“வரும்போதே நிதானம் இல்லாம தான் வந்தான்… ஒரு ஸ்டேஜுக்கு மேல அவனால முடியாம போகவும் என்னை அடிச்சுட்டு பெட்டுல விழுந்துட்டான்… அவன் விழுந்ததும் நான் வெளிய ஓடி வந்துட்டேன்… அப்புறம் உள்ள போகவும் இல்ல… எதுவும் சத்தமும் கேட்கல… நீங்க வந்த பின்னாடி போய் பார்த்தா இப்படி இருக்கான்…” என்னும் போது கையில் மது பாட்டிலுடன் அங்கே வந்தான் அந்த வீட்டின் காவலாளி… 

மகிழன் அவனையும் அவன் கையில் இருக்கும் மது பாட்டில் அடங்கிய பையையும் பார்த்துவிட்டு இடது கை விரல்களை நாடியில் தாங்கியவன், 

“மழைக்கு சரக்கடிச்சா நல்லா இருக்கும்னு வாங்க போனியோ…?” அத்தனை நக்கல் வார்த்தையிலும் முகத்திலும்… 

“அய்யோ சார்… இல்ல சார்… இது எனக்கு இல்ல சார்… அய்யா தான் வாங்கிட்டு வர சொன்னாரு…” அத்தனை பதற்றம் அவன் குரலில், 

“அய்யாவா…?” கேள்வியாக பார்த்தவன், ஷிவானியின் புறம் திரும்ப, 

அவளோ, “இல்ல இது எனக்கு தெரியாது…” என்று கூறவும், 

“உங்க அய்யா எப்ப வாங்கிட்டு வர சொன்னாரு…?” 

சற்று யோசித்தவன் பின் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு, “ஒன்றை மணி நேரத்துக்கு முன்னாடி சார்…” என்று சொல்லவும், 

“அதென்ன கரெக்டா சொல்லுற டைமை…?” 

“இல்ல சார்… நான் மேட்ச் பார்த்துட்டு இருந்தேன்… அய்யா இன்டர்காம்ல ஃபோன் பண்ணி குடிக்க வாங்கிட்டு வர சொன்னாரு… அப்ப டைம் பார்த்தேன்… போயிட்டு வரதுக்குள்ள மேட்ச் முடிஞ்சுருமேன்னு… அதான் ஒன்றைமணி நேரம்னு சொன்னேன் சார்…” என்று விளக்கம் அளிக்கவும், 

இருக்கையில் இருந்து எழுந்தவன், “எப்பவும் உன் கிட்ட தான் வாங்கிட்டு வர சொல்லுவாரா உங்க அய்யா…?” என்று கேட்டபடி வீட்டை நோட்டம் விட, காவலாளி, 

“இல்ல சார்… எப்பவாச்சும் தான் கேட்பாரு சார்… இன்னைக்கு அவரு வரும்போதே குடிச்சுட்டு தான் வந்து இருந்தார்…” என்று நிறுத்த, 

“ம்ம்ம்…” என்னும் போது பிரவீண் வந்தவன், 

“சார்… வீட்டை சுத்தி மொத்தம் ஆறு கேமரா சார்…” என்றதும் சற்று ஆச்சரியம் தான் மகிழனுக்கு…

“அதுல ஒன்னு ஒடைஞ்சு இருக்கு சார்…” என்னும் போதே, 

“வாட் ஒடைஞ்சு இருக்கா..?” என்றவன் ஷிவானியின் புறம் திரும்பி பார்க்க, 

அவளோ, “நேத்து மழைல, பக்கத்துல இருந்த மரத்தோடு கிளை ஒன்னு ஒடைச்சு அது மேல சாஞ்சுடுச்சு…” என்றதும் திரும்பி காவலாளியை, அவனும்

“ஆமா சார்… நான் தான் ஒடைஞ்ச கிளையை எடுத்து ஓரமா போட்டேன்…” என்றிட, 

அவன் அருகில் சென்றவன், “உன் மேல இவ்வளவுதான் நம்பிக்கையா உங்க அய்யாக்கு… இத்தனை சிசிடிவி கேமரா…?” என்ற கேள்வியில் காவலாளியின் கண்கள்  தன்னை போல் ஷிவானியின் மீது பதிய, அவளோ எந்த உணர்ச்சியும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தாள் ஏதேதோ எண்ணங்களில்… 

இதை கவனித்த மகிழன், “என்ன பார்வை எங்கையோ போகுது… என்ன விஷயம் சார்…?” என்று அவன் தோளில் கை போட்டு வேறு பக்கம் திருப்பி கேட்க, 

“சார்… அது மேடம் இங்க இருந்து தப்பிச்சு போக முயற்சி பண்ணாங்க… நிறைய முறை இப்படி பண்ணவும் கோபத்துல அய்யா வீட்டை சுத்தி கேமரா வச்சுட்டாங்க சார்…” என்றதும் திரும்பி ஷிவானியை பார்க்க, அவளிடம் எந்த மாற்றமும் இல்லை…

“ஓஓஓ…” என்றவன் பிரவீண் புறம் திரும்பி, “ஏதாச்சும் கிடைச்சுதா…?” என்று கேட்க, 

“சந்தேகம் படும்படி எதுவும் இல்ல சார்…” என்றதில் நெற்றியை தேய்த்தவன், 

“ம்ம்ம்…” என்றதோடு மீண்டும் அவ்வரைக்குள் நுழையும் சமயம் பாரன்சிக் நிபுணர்கள் வர, அனைவரும் மகிழனை கண்டு, 

“சார்…” என்று வணக்கம் வைத்தவர்களிடம், 

“ம்ம்ம்… ரொம்ப முக்கியமான கேஸ் இது…. எதுவும் மிஸ் ஆயிற கூடாது…” என்று எச்சரிக்கை செய்ய, 

“சியூர் சார்…” என்றபடி தங்கள் வேலையை பார்க்க தொடங்கினர்… 

சற்று நேரம் மகிழனும் அவ்வரையை நோட்டமிட்டான்… சிதறிய துணிகள், வலையல், நைட்லேம்ப், காகிதங்கள் அதில் அத்தனையிலும் கவிதைகளாக இருக்க, மேக்கப் சாதனங்கள் என்று அறையே சின்னாபின்னாமாகி இருந்தது… 

பட்டும் படாமல் சிதறி கிடந்த காகிதங்களில் ஒன்றை திருப்பி படித்து பார்த்தான், வாரத்தையின் கோர்வையில் பெண்ணின் வலியை நன்றாக உணர முடிந்தது… 

மற்றொரு காகிதத்தை எடுத்து பார்த்து அதுவும் அதே போல் இருக்க, ஒருபெருமூச்சோடு எழுந்தவன் திரும்பி சடலமாக தரையில் கிடந்த மன்சூரை பார்த்து, 

“வயசான காலத்துல இதெல்லாம் தேவையா உனக்கு…?” என்று உற்று பார்த்தான் நன்றாக… 

பின் வெளியே வந்தவன், “பிரவீண்….” என்றழைக்க, 

“சொல்லுங்க சார்…” என்று வந்து நின்றவனை முறைத்தபடி, 

“சிசிடிவியை நல்லா செக் பண்ணுனியா…?” என்று கேட்கவும், 

முதலில் குழம்பியவன் பின் எங்கோ எதையோ நாம் தவறவிட்டுவிட்டோம் என்று புரிந்து, “எஸ் பார்த்தேன்…” என்றதோடு, 

“சிசிடிவி செக்கிங் ரூம் அந்த பக்கம் சார்… நீங்களும் பாருங்க சார்…” என்க, 

“நானே எல்லாத்தையும் பார்க்கணும்னா உன் கிட்ட எதுக்கு மேன் வேலையை குடுக்குறேன்…?” என்று கத்தியபடி பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்தான் வேகமாக… 

அங்கிருந்த கணினியில் அன்றைய நாள் முழுவதும் நடந்ததை வேகமாக ஓட்டி பார்த்தவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை… 

‘யாராச்சும் வந்திருந்தாவது விசாரிக்கலாம்… இன்னைக்கு முழுக்க ஒருதரும் வரலை… ஆதாரமா எதுவுமில்லை… அப்புறம் எப்படி….?’ என்று யோசித்தவனுக்கு உள்ளம் கொதித்தது… 

“ஒரு சிசிடிவி ஒடைச்சு இருக்குன்னு சொன்னீங்களே அங்க போய் பார்த்தீங்களா…?” என்றபடி எழுந்து வீட்டை விட்டு வெளியே வர, 

“ஆமா சார்… அது இந்த பக்கம் இருக்கு சார்…” என்று பிரவீண் வழி காட்ட, மழை விட்டுடிருந்ததால் தெளிவாக அனைத்தையும் கவனித்தபடி நடந்தான் பல எண்ணங்களுடன்….

“சார்… இதுதான் அந்த கேமரா…” என்று காட்டியதை பார்த்தவனுக்கு நன்றாகவே தெரிந்தது அது உண்மையில் சுவரை ஒட்டி வளர்ந்திருந்த மரத்தின் கிளை ஒடிந்து தான் விழுந்திருக்கிறது என்று… 

‘கண்டிப்பா இது வழியா தான் வந்திருக்கணும்…’ என்று எண்ணியவன் கண்களை சுழற்றி பார்க்க, மதில் சுவர் தான் தெரிந்தது பதினைந்தடி இடைவெளியில்… 

அருகில் சென்றவன் அதில் ஏறி மறுபக்கம் குதித்ததோடு சாலையின் இருபுறமும் பார்த்தவனுக்கு கொலை செய்தவன் வெளியே சென்றதின் வழி தெரிந்தது… 

ஆனால் உள்ளே எவ்வாறு வந்திருக்க கூடும், தோட்டத்தில் இருந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே கல் இருந்தாலும் சாலையில் இருந்து ஏறுவதற்கு வாயிப்பில்லை அவனது அனுமானத்தில்… 

‘ஏன் இப்படி செய்யணும்… காரணம் என்னவா இருக்கும்…?’ என்று யோசித்தபடி கேட்டின் வழியாக உள்ளே சென்றவனின் மூளை சூடாகியது ஏகத்திற்கும்… 

“சார் எல்லாம் முடிஞ்சுது…” என்று பாரன்சிக் நிபுணர்கள் சொல்லணும், 

“ம்ம்ம்….” என்றபடி பின்னங்கழுத்தை தேய்த்தவன், பார்வையால் பிரவீணை அழைத்து, 

“போஸ்ட்மார்டம்க்கு அனுப்பிருங்க…” என்று சொல்லவும், 

“எஸ் சார்…” என்றதோடு நகரந்துவிட, ஷிவானியிடம் வந்தான் மகிழன்… 

எங்கு அமர்ந்தாளோ அந்த இடத்தை விட்டு இம்மியளவும் நகராமல் அமர்ந்திருந்தாள் அமைதியாக… 

“எதுக்கு மன்சூரை கொலை பண்ண…?” என்று கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள், 

“நான் எதுக்கு பண்ணனும்…?” தடுமாற்றம் இல்லாத எதிர்கேள்வி…..

“காரணம் நிறைய இருக்கே…” என்று திமிராக பார்த்தவனை புரியாமல் பார்த்து வைத்தாள் பெண்ணவள்… 

“இவன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக, பணத்துக்காக, பழிவாங்க…” என்றவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள், 

“நான் என் வாழ்க்கையை இழந்து ஆறு வருஷம் ஆச்சு… இத்தனை வருஷம் முயற்சி பண்ணாததையா. எல்லாத்தையும் இழந்த பின்னாடி பண்ண போறேன்…? பணம்… அது மட்டுமே வாழ்க்கை இல்ல சார்… அப்படியே இருந்தாலும் இந்த பணத்தால என் எதிர்காலத்தை வாங்க முடியாது…” என்று பேசியவளை ஒரு மெச்சும் பார்வை பார்த்தவன், 

“கிளெவர் மூவ்… பட் இதை நம்ப நான் முட்டாள் இல்ல… இந்த கொலை நீ தான் பண்ணி இருக்க, பட் தனியா இல்ல யாரோ ஹல்ப் பண்ணி இருக்காங்க… யாரது…? இப்படி இந்த கொலையை பண்ணீங்க….” என்ற கேள்வியில், 

“ம்ப்ச்ச்…” என்று சலித்துக்கொண்டவள் ஒரு பெருமூச்சுடன், 

“நீங்க நினைக்குற மாதிரி இல்ல சார்…” என்று சொன்னதையே திரும்பி சொல்ல, இருக்கையில் இருந்து எழுந்தவன், 

“ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லிட்டா அது உண்மையாகாது… விசாரணைக்கு கூப்பிடும் போது வரணும்…” என்றபடி திரும்பி ஒரு ஏட்டை அழைத்தவன், 

“வீட்டை சுற்றி ஆளுங்க இருக்கட்டும்… முக்கியமா வாசல்லையும் சிசிடிவி ஒடைச்ச ஏரியாவுளையும் கவர் பண்ணுங்க…” என்று சற்று தனிந்த குரலில் உத்தரவிட்டு கிளம்பினான் வெளியே… 

உடன் வந்த பிரவீணிடம், “நான் வேற வேலையா போறேன்… நீ கூட இருந்து போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வாங்கிட்டு வா… எங்கையும் தப்பு நடந்துற கூடாது… இது கண்டிப்பா கொலை தான்… ஷிவானியோட ஃபோன் கால் டிரேஸ் பண்ண சொல்லு… ஏதாச்சும் தப்பு நடக்க வாய்ப்பிருக்கலாம் சோ பீ அலர்ட்… ரிப்போர்ட் வந்ததும் கால் மீ…” என்றபடி தன் வண்டியில் ஏற, 

பிரவீண், “எஸ் சார்…” என்று சலியூட் வைக்க, தலையசைத்து அந்த மரியாதையை ஏற்று கொண்டவன் வேகமாக பறந்தான் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கு நடுவில்… 

குளியலறைக்குள் இருந்து தலையை துவட்டியபடி வந்த தியாவிற்கு அத்தனை கலைப்பு… அது அவளது முகத்திலும் அப்பட்டமாக தெரிய, 

சோபாவில் தலையை பின் பக்கமாக சாய்த்து காலை எதிரில் இருந்த மேஜையின் மீது வைத்தவளுக்கு அதுவே பயங்கர சுகமாக இருந்தது… 

சிறிது நேரம் அதே வாக்கில் படுத்திருந்தவளின் வயறு நான் இங்கு தான் இருக்கின்றேன் என்று கத்தவும், 

“யாரு எப்படி இருந்தாலும் நீ மட்டும் கரெக்டா வேலை பார்க்குற…” என்று வயிற்றை தடவியபடி நிமிர்ந்தவள், 

“ம்ம்ம்…. இந்த மழைக்கு ஏதாச்சும் சாப்பிட்டா நல்லா தான் இருக்கும்… ஆனா என்ன பண்ணுறது…?” என்று புலம்பியவளுக்கு சட்டென நினைவிற்கு வந்தது மகிழனின் வீட்டில் உண்ட வெங்காய பக்கோடா…

“ம்ம்ம்…. சாப்பிட்டா நல்லாதான் இருக்கும்… ஆனா யாரு அது செய்யுறது… பேசாம நூடுல்ஸ் இருக்கான்னு பார்ப்போம்…” என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு சமையலறை நோக்கி கால் எடுத்து வைக்கவும் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது… 

‘யாரா இருக்கும்…?’ என்று எண்ணியபடி மணியை பார்க்க, அது எட்டேகால் என்று காட்டியது… 

கதவின் துழைவழியாக பார்த்தால் ஒருவரும் இருப்பது போல் இல்லாமல் போகவும், பிள்ளைகள் யாரேனும் விளையாடுகிறார்கள் என்று எண்ணி திரும்ப போக, மீண்டும் அழைப்பு மணி ஓசை கேட்கவும், 

“ம்ப்ச்ச்…” என்று சலிப்புடன் கதவை திறக்க, அதற்காகவே காத்திருந்தது போல் உள்ளே நுழைந்தான் அவன்…

தொடரும்….

Advertisement