Advertisement

எபிலாக் -1
நங்கை, த்ரிவிக் டெல்லி வந்த  பின் நான்கைந்து மாதங்கள் இடங்களைத் தேர்வு செய்வதில் செலவழிந்துபோக, இதனிடையே நங்கை கருவுற்றாள். வீடு கொண்டாடியது ஒரு புறமென்றால், தலைநகரும் சேர்த்துக் கொண்டாடியது.
இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கியவள், அங்கு அந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப , ஒரு வருட காலத்திற்குள் வளரும் மரங்களை நட்டு, ஏக்கர் கணக்கில் வாங்கிய நிலங்களை சீர் செய்து வளமாக்கினாள். பிள்ளைப்பேறு, அதன் வளர்ப்பு என இரண்டு வருடங்கள் உருண்டோரோட… பின்னர் அவளது கனவுகள்  ஒவ்வொன்றாக ஈடேற ஆரம்பித்தது.
நங்கைக்கு தோள் கொடுக்க, கணவன் த்ரிவிக் நிற்க, தோழனாக ப்ரஜன், மற்றும் அவனது மனைவி லதா [நம்ம கோயமுத்தூர் பொண்ணு] கூடவே இருந்தனர். பள்ளி நிர்வாகத்தினை, ஸ்ரீராமுலு தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வைதேகி, பல்கலைக்கழக மேலாண்மை குறித்து படித்து தெளிவான திட்டமிடலுடன் இருந்தார்.
பள்ளிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குப் பிறகே, நங்கை மொழிந்த பல்கலைக்கழகம் உருவானது, இரவு பகல் பாராமல், அனைவரும் உழைத்து, யூனிவர்சிட்டி நிர்மாணித்தனர்.
மாணவர்கள் குறித்த இரு கொள்கைகளில், நங்கை உறுதியாக இருந்தாள். முதலாவது… கண்டிப்பாக, இவளது பள்ளி கல்லூரிகளில் சேர்பவர்கள், கீழ்ப்படிதல் என்ற இயல்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும், எவனொருவன் கீழ்படியக் கற்றுக் கொள்கிறானோ, அவனே உத்தரவிடத் தகுதியானவனாகிறான்.
இரண்டாவதாக,  மாணவர்கள் அனைவரும் ஐந்தாம் வகுப்பிலிருந்து, கண்டிப்பாக தொழிற்கல்வி ஏதாவது ஒன்றை படித்தே ஆக வேண்டும்.நங்கையைப் பொறுத்தவரை  இயன்முறைக்கல்வி [பிராக்டிகல்], படிப்போடு சம்பந்தப்பட்டது.  இவளது குழுமத்தில் படித்த எந்த ஒரு மாணவனும், திறமையுடையவனாகவே வெளிவரவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தாள்.
காரணம்… வரவிருக்கும் பத்து ஆண்டுகளில், திறமையான இளைஞர்கள் ஐம்பது விழுக்காட்டிற்கு குறைவாக இருப்பர் என்கிற த்ரிவிக்ரமன் காண்பித்த புள்ளிவிவரக் கணக்கு. கூடவே அவன் சொன்ன ஒரு ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் ; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’, யுக்தி.  மெத்தப் படித்திருந்தாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதல்லவா?.
அதனால்.. அவளது கல்விச் சாலைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் வாசகம்
எங்கே உன் கைகளோ…. அங்கே உன் பார்வை…
எங்கே உன் பார்வையோ..  அங்கே உன் மனம்…
எங்கே உன் மனமோ .. அங்கே உன் லயிப்பு… 
எங்கே உன் லயிப்போ .. அதுவே உன் செயல்……
உனது செயலே நீ……….
யதோ ஹஸ்த; ததோ த்ருஷ்டி:
யதோ த்ருஷ்டி; ததோ மனஸ்:
யதோ மனஸ்; ததோ பாவ: [bhaava]
யதோ பாவ ; ததோ ரஸ;
+++++++++++++++++++++++++++
Epilogue 2
சரியாக நங்கை தனது பல்கலைக்கழகத்தினைத் திறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு :
அது ஒரு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி. அரங்கம் முழுவதும் பெரிய பெரிய தலைவர்கள் குழுமியிருந்தனர்.
ஆ! அதோ அங்கே யார்? அட நம் நங்கை …. கையில் ஒரு எட்டு வயது குழந்தையை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அருகே வேறு யார் நமது திரிவிக்கிரமன்தான், அவனருகே அவனையொத்த சாயலில் நின்ற சீர் நெடுமாறனாக, அவனது மகன் அமர்ந்திருந்தான். மடியில் ஒரு ஆறு வயது பையன் பிரஜன் ஜாடையுடன் மிக உரிமையாய் அமர்ந்திருந்தான்.
ஏதோதோ பேசிக்கொண்டிருந்த பரஜன், த்ரிவிக் இருவரும், நங்கை நல்லாள் என்ற அழைப்பு வர… நங்கை எழுந்து சென்றதும், “அண்ணா இப்போவாவது தீதி  தோழியா எதிரியான்னு புரிஞ்சுகிட்டீங்களா?”.
“ம்ம்ம்… என்று கண்ணை மூடி யோசித்த த்ரிவிக், “அவ என் தோழி ப்ளஸ் எதிரி, எந்த நேரம் எப்படி இருப்பான்னு தெரியும்னு சொல்ல முடியாது,  திடீர்னு திட்டுவா அப்பறம் அவளே சரியாயிடுவா, ஆனால் ஒரு விஷயம் கட்டாயம் தெரியும். என் வொய்ஃப் செஞ்சா அது சரியாத்தான் இருக்கும்.”, பதில் சொன்ன த்ரிவிக்-கின் முகத்தில் கர்வத்துடன் கூடிய பெருமை இருந்தது.
ப்ரஜன் கேட்டான் “எனக்கு ஒரு கேள்வி, மேடம் தமிழ்ல உறுதிமொழி சொல்லி பதவியேத்துப்பாங்களா இல்ல வேற லாங்குவேஜ்-லயா? “
“சந்தேகமே வேண்டாம் நிச்சயமா தமிழ்லதான்”, த்ரிவிக்ரமன் அறுதியிட்டுக் கூறினான்.
“ஏன்? ஏற்கனவே சொல்லிட்டாங்களா?”, ப்ரஜன் கேட்க..
“எங்கடா பேசறதுக்கே அவ பி.ஏ. கிட்ட அப்பாயின்மென்ட் வாங்க வேண்டியிருக்கு , மேடம் அவ்ளோ பிஸி, நைட் வர்றா, பசங்க என்ன பண்ணினாங்க, வீட்ல என்ன நடந்ததுன்னு கேள்வி கேக்கத்தான் அவளுக்கு நேரம் சரியா இருக்கு.. நைட் நான் தூங்கறதுக்கு முன்னயே அவ தூங்கிடறா. இதுல எங்க பேசறது? “, கொஞ்சம் கேலி போல பேசிக்கொண்டிருக்கும்போதே நங்கையை பதவியேற்க அழைத்திருந்தார்கள். அங்கு சென்றவள், “நங்கை நல்லாள் த்ரிவிக்ரமன், ஆகிய நான்  ……………………”, என்று தெள்ளு தமிழில் உறுதி மொழியளித்து, பாராளுமன்ற உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதயேற்றாள். ஆம்.
அன்று நடந்த அந்நிகழ்வு…. ஊடகங்களின் உதவியால், நங்கையை இந்த இடத்தில் நிறுத்தியது. தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமின்றி,  ஆட்சியாளர்கள், நங்கையை நேரடியாக ராஜ்யசபை உறுப்பினர் ஆக்கினர்.
தனக்கு தகுதியோ, அனுபவமோ இல்லை என்ற அவளது எதிர்ப்புகள், ஒன்றுமில்லாமல் போயின.  அவள் பள்ளி, பல்கலைக்கழகத்தின்  ஒழுக்கக் கோட்பாடுகள், விதிமுறைகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், உணவு மேலாண்மை… என்றவற்றை பார்த்த அரசாங்கம், “உன் திறமை, ஆக்கப்பூர்வ எண்ணங்கள்,  தன்னலமில்லா குணம், இந்த பிள்ளைகளோடு மட்டும் நின்றுவிடாமல், ஒட்டு மொத்த நாட்டின் எதிர்கால தலைமுறைக்கே தேவை”, என்று அவளை பதவியிலமர்த்தி அவள் திறமைகளை பரீட்சித்துப் பார்க்க முடிவு செய்தது. ஆம் பரிட்சைதான்.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பலராலும் விமர்சிக்கப்படும், என்பதை அறிந்தும்… அவ்விமர்சனங்கள் நேர்மறையோ, எதிர்மறையோ…. அனைத்தையும் தாங்கி,  தாண்டி கடமையை செய்ய வேண்டும் அதற்கு அர்ப்பணிப்பான மனம், எப்பக்கமும் சாயாத மனஉறுதி வேண்டும். நங்கை நல்லாளின் உறுதிதான் ஊரறிந்ததாயிற்றே?
இவளுக்கான கடவுள் நிர்ணயித்த இலக்கினை… வந்தடைந்தாள் நம் நங்கை நல்லாள்.
அவள் பாரதம் போற்றும் நங்கை ஆனாள்.
முற்றும்.

Advertisement