Advertisement

“நங்கை… “, த்ரிவிக்ரமன் அழைக்க.. அவனருகில் வந்தவள்.. பதவிசாக , “சொல்லுங்க “, எனவும்,
“மாமா, நம்பள இங்க வந்துட சொல்றார், நீ என்ன சொல்ற ?”, நேரடியாக வினவ…
எப்போதும் அப்பாவை எதிர்த்து பேசும் வழக்கமில்லாதவள், தலை குனிந்து , “நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவெடுக்கறீங்களோ, அப்படியே பண்ணலாம்”, வருத்தமோ, சந்தோஷமோ எதையும் வெளிப்படுத்தாத,  ஒருவித குரலில் கூறினாள்.
“ம்ச். நான் கேட்டது நீ என்ன நினைக்கிற-ன்னு ?”, கடினமாக கேட்டான்.
“அதான் சொல்லிட்…”, நிமிர்ந்து த்ரிவிக் -கைப் பார்த்தவள் பேச்சு அப்படியே நின்றது. தீவிரமாக நங்கையை முறைத்தவன் கண்கள், “இப்போ சொல்றயா இல்லையா?”என்று நங்கையை மிரட்டியது.
வெகுவாக முயன்று மனதில் தைரியத்தை வரவழைத்து, “அது அது வந்துப்பா… அங்க எல்லா மீடியா முன்னாலயும் பெரிசா பேட்டி கொடுத்தாச்சு, ஸ்கூல், யூனிவர்சிட்டி ஆரம்பிக்கறேன்னு”, மென்று விழுங்கியவள்…. , தந்தையின் கூர்மையான பார்வையில் .. பதட்டம் வர…  வேகமாக  “பின்னால அதெல்லாம் பண்றமோ இல்லையோ, இப்போ … ஆரம்பிச்சி இருக்கறத அம்போன்னு விட்டுட்டு வரமுடியாதில்லையா?, எத்தனை பசங்க? இந்த நாலு நாள்ல மட்டும், முப்பத்தேழு பசங்க வந்திருக்காங்க, இடமே பத்தலைன்னு, நம்ம வீட்டுக்கு கொஞ்சம் பெரிய  பசங்கள அனுப்பி மேனேஜ் பண்ணிருக்காங்க. இதுக்கும் மேல அட்மிஷனுக்கு வந்தவங்கள இடமில்லைன்னு திருப்பி விட்டிருக்காங்க”, திக்கி திணறி ஒருவழியாக சொல்லி விட்டாள்.
“அதென்னமா வேலை?, இங்க ஒரு நாள்ல அந்த காசை எடுத்துடலாம் “, சலித்தார் தந்தை.
“பணத்துக்காக இல்லப்பா.. அங்க நான் சம்பாதிச்ச பேருக்காக, அவங்க எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்காக நான் அங்க போணும்பா”, இப்போது குரலில் நம்பிக்கை, அதன் பிரதிபலிப்பாக பேசும் வார்த்தைகளில் தைரியம்.
“அந்த தொழில்தான் வேணும்னா இங்கயே ஆரம்பிச்சுக்கோ நல்லா”, இப்படியொரு விவாதம் தொடர்வது அவருக்கு பிடிக்கவில்லை. மகள் தன் கண் முன் இருக்கவேண்டும் என்பது ஒரு புறம் என்றாலும், மீண்டும் எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாதென்பது, தந்தையாக அவர் எண்ணம். தவறில்லையே?
“உனக்கு “… “உங்க யாருக்குமே தெரியாது …  நீங்க வந்த ரெண்டு நாளா மீடியாக்காரங்க நம்ம வீட்டை சுத்தி சுத்தி வந்தது, யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்-ஆ செக்யூரிட்டிக்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். நல்லதோ கெட்டதோ ஊர் வாயில எம்பொண்ணு விழக்கூடாதுன்னு நான் யோசிக்கறது ஏன் புரிய மாட்டேங்கிது உங்களுக்கு ? “, ஆதங்கமாக கேட்டார்.
சரி, இனி அவளது எண்ணங்களை உடைத்துப் பேசுவது என்று முடிவெடுத்து விட்டாள். “புரியுது ப்பா. ஊரென்னப்பா ஊரு?, இன்னிக்கு ஒன்னு பேசும் நாளைக்கு அதையே மாத்திப் பேசும். ஆனா.. அதுக்கு பயந்து நான் வர முடியாது.”
“ப்பா, எனக்கான டெஸ்டினி அங்கதான்னு தோணுது, இப்போ ஆரம்பிச்ச ப்ளே ஸ்கூல் கூட பிளான் பண்ணி ஆரம்பிக்கல… ஏதோ ஒரு வாக்குவாதம், என்னென்னமோ பேச்சு.. ஆனா கடைசில இப்படி ஒரு க்ரீச் ஆரம்பிக்கறேன்னு முடிவு. இதுதான்-ன்னு தீர்மானிச்சு நான் பேசல.. அதுவா வந்தது. இதோ, கண் மூடி திறந்த நேரத்துல… தானா வளந்து நிக்கிது. பிசினெஸ்ன்னு பாத்தாகூட, ஆரம்பிச்ச இந்த சின்ன டைம் ஸ்பான்-லேயே போட்ட இன்வெஸ்ட்மென்ட் திரும்ப எடுத்துட்டேன். பெருமைக்கு க்காக சொல்லல்ல… “
“அதே மாதிரிதான், போன வாரம் ஏகப்பட்ட கன்ஃபியூஷன், ஆனா இன்டர்வ்யூ-ல, எனக்கே இதான் சொல்றோம்னு தெரியாம தானா வந்தது, தெரியாம சொன்னாலும், பேச்சு பேச்சுதான், நீங்க சொல்லுவீங்களேப்பா… வார்த்தைகள்-ல நிக்கணும்-ன்னு, நானும் அதையேதாம்ப்பா சொல்றேன், முடியாதுன்னு ஒரு சின்ன தாட் வந்தாலும், நான் நிறுத்திடுவேன். ப்ளீஸ் எஸ் சொல்லுங்கப்பா”., நீளமாக விளக்கம் கொடுத்தவள் மகளாக அல்லாமல், தனது பிரதி பிம்பமாக தெரிந்தாள்.
அவர் .. சென்னையில் தொழில் துவங்க முடிவெடுத்த பின்… அதற்கு, பெற்றோரிடம் கடுமையாக போராடி நின்றது நினைவலையில் வந்தது. தவிர இதுவரை தன் சொல்லுக்கு எதிர்ப் பேசாத தன் மகள் கேட்டதை கொடுத்தால்தான் என்ன என்று தோன்றியது.
“சரி மா. செய், உனக்கு என்ன தோணுதோ…  செய், என்ன வேணும் கேளு. நான் தரேன் “, முழுமனதோடு, விகசித்துக் கூறினார்.
” தேங்க்ஸ் பா.. தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ வெரி மச்”, கண்களை இறுக்க மூடி, முகம் முழுவதும் சிரிப்பால் நிறைந்திருக்க, பூரித்துச் சொன்னவள்… தந்தையின் கைகளை பிடித்து குலுக்கியவாறே, “லவ் யூ பா”, என்றுவிட்டு அண்ணியிடம் சென்றாள்.
+++++++++++++++++++++++
மறுநாளே, மதிய உணவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தந்தையிடம் முதலீடு குறித்து ஆலோசனை கேட்கவென வந்து நின்றாள். எதையும் ஒத்திப் போடும் எண்ணம் இல்லை. நங்கை, அவளிடம் உள்ள  கிலோ கணக்கில் இருக்கும் தங்கத்தில் பாதியை, பணமாக மாற்றினாலே இவள் துவங்க நினைத்துள்ள பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகத்துக்குமான இடத்தினை வாங்கிவிட முடியுமென்பது அவள் கணக்கு.
கட்டிடம் எழுப்ப.. உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய, அரசாங்கத்திடம் தகுந்த அனுமதி வாங்க, என பல செலவுகளையும் சரியான திட்டமிட்டு அதன் பின்னர், இடத்தைக்காட்டி வங்கிக்கடன் பெற்று விடலாம் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், தற்போது மேலெழுந்தவாரியாக பார்த்ததில், முதலில் கையிருக்கும் தங்கத்திற்கு வரிகட்ட வேண்டிய அவசியம் வருமோ என்ற சூழல். இரண்டாவது, விஷமாக ஏறும் நிலத்தின் மதிப்பு.
எந்த ஒன்றிணைத் தாமதித்தாலும், நட்டம் இவளுக்கே. நங்கையின் முடிவைக் கேட்டவர், “உன் விருப்பம்போல செய்மா… ஆனா அம்மா போட்ட நகைகளை மட்டும் வித்துடாத. அவ உனக்குன்னு பாத்து பாத்து வாங்கினா.”, மனைவியின் நினைவில் சிறிது கலங்கியதால் மோகனசுந்தரத்தின் குரல் கரகரத்தது.
“இல்லப்பா, அம்மா, பாட்டி, நீங்க கொடுத்ததுல நகையா, இருக்கற எதையும் மாத்தப் போறதில்ல, ஆனா அரை கிலோ, ஒரு கிலோ  பார்களை கொடுத்துடலாம்னு இருக்கேன் பா.”, ஒரு நாளில் திடீரென மாரடைப்பால் விட்டுச் சென்ற தாயை மனதுக்குள் நினைத்து, அவரது உணர்வுக்கு மதிப்பளித்து, பதிலுரைத்தாள்.
“அப்பா, நாங்க ரெண்டு மூணு நாள் அவங்க வீட்டுக்கு போகலாம்னு.. “,
” தாராளமா போயிட்டு வாடா, நான் ஆபிஸ் போகணும், ரெண்டு மணிக்கு ஒருத்தருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கேன், மீட்டிங் முடிச்சதும், வந்துடறேன், என்ன? வந்ததும் சாயங்காலமா கிளம்புங்க, சரியா?”
“ஓகே பா… நீங்க கிளம்புங்க”, விடை கொடுத்தவள், நேராக அறையில் தனது கணினியுடன் அவனது வேலையில் மூழ்கி இருந்த கணவனிடம் வந்தாள்.
நங்கை, இவளது திட்டத்தினைக் கூற… ஒரு கண் கணினியிலும், மனம் முழுதும் வேளையிலும் இருக்க… அரைகுறையாக கேட்டவன்…, “ரியல் எஸ்டேட் பத்தில்லாம் எனக்கு தெரியாது, டெல்லி பத்தி சுத்தி இருக்கிறவங்க சொன்னதுதான். நம்ம பிளாட் தவிர, வேற எதோட விலையும் எனக்குத் தெரியாது.”
“என்னதான் தெரியும் உங்களுக்கு, இந்த பொட்டிய தொற்றாத தவிர… ?”, சடைத்துக் கொண்டாள்.
“பொறுமையா, அங்க போயி எல்லாத்தையும் பாத்துக்கலாம்.”
“அவசரமில்லைங்க.. ஆனா, இன்வெஸ்ட்மென்ட் மொபிலைஸ்-க்கு ஒரு ஐடியா கிடைக்குமில்ல அதான், உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.”
“தெரிஞ்சவங்க இருக்காங்க, விசாரிக்கலாம், நிதானமா செய்யலாம் ஓகே?”
“யா.. டன் டன்”, பின் திட்டமிட்டபடி, மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் சீரடி விட்டு, “இந்த அகடாமிக் இயர் முடிஞ்சதும், அங்க வந்துடுவோம்’ , என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கி கொண்டு, தலை நகரம் பயணித்தனர், தம்பதிகளிருவரும்.
இடைச் சொறுகலாக, ப்ரஜன் காதலிக்கும் கோவையைச் சேர்ந்த  பெண்ணின் பெற்றோர்களை சந்தித்துப் ப்ரஜனைப் பற்றி கூறி, வட இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற தயக்கமோ  பயமோ தேவையில்லை, அருமையான குணம் கொண்டவன், தாராளமாக பெண்ணைக் கொடுங்கள், என்று பலவாறாகப் பேசி.. அவர்களின் சம்மதத்தை வெற்றிகரமாக பெற்றாள்.
அப்பெண் முகத்தில் நல்ல திருத்தமான அழகோடு, அறிவுக்களை சொட்டியது. வீட்டைச் சுற்றிக் காண்பிப்பதாக கூறி தனியாக நங்கையை அழைத்துச் சென்றவள், “அக்கா… அவங்க சொன்னாங்க, நீங்க எப்படியும் எங்க பேரன்ட்ஸ்-சை கன்வின்ஸ் பண்ணிடுவீங்கன்னு, நான் நம்பவேயில்ல, தேங்க்ஸ் கா..  ஐம் ஆன் கிளவுட் நைன் “, கட்டிப் பிடித்து கன்னத்தில்  இச். இச். கொடுத்தவளை, விஷமாகமாக பார்த்து புன்னைகைத்து, ‘ப்ரஜனை நினச்சு எனக்கு கொடுக்கிறயா?, முத்தத்தோட நிறுத்திக்கோம்மா… “எனவும்…
“க்கா, போங்கக்கா.. “, என்று வெட்கியவள்.. “உங்களைப்பத்தி நிறைய சொல்லுவாங்க, உங்க மேனரிசம், நாம சிம்பிளாத்தான டிரஸ் பண்ணுவோமா,  நம்ம மாதிரி நீங்களும் சிம்பிளா, ஆனா எலகண்ட்டா டிரஸ் பண்ணுவீங்கன்னு.. நிறைய சொல்லுவாங்க..”, ப்ரஜனைப் பற்றி பேசும்போது அவளது முகம் மிளிர்ந்தது.
“ப்ரஜன ரொம்பப் பிடிக்குமோ ?”, கேட்க.. கோவைப் பழமென சிவந்து சிரித்தாள்.
டெல்லி சென்றவளுக்கு, வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது, வீடியோ பரபரப்பெல்லாம் முடிந்திருக்கும் என்ற எண்ணத்தில் நிதானமாக வந்தவர்கள், இப்படி மாட்டிக் கொண்டனர். போக்ஸோ-வில் சூரஜ் தாக்கூர் மற்றும், அமர்ஜோத் உடனடியாக கைது செய்யப்பட, இரு நாட்களுக்கு பிறகு, உத்தரபிரதேசத்தில் ரியாஸ் கைதாகினர். புகார் தெரிவித்தவர்கள், வெளிச்சத்திற்கு வந்து நடந்தவைகளை விளக்க, தலைநகரம் நங்கையைத் தூக்கிவைத்துக் கொண்டாடியது.
இதன் தாக்கமாக.. நங்கை த்ரிவிக், சென்னை சென்றுவிட்டதாகத் தெரிய, அங்கும் மீடியாக்காரர்கள் மோகனசுந்தரத்தின் வீட்டை அணுகினர். ஆனால், இவர்கள் அங்கு வரவேயில்லை என்று சாதித்து விட்டார், மனிதர். அங்கு தொல்லைகள் இல்லாமல் இருந்தவர்களுக்கு,  இங்கு ஒளிந்து கொள்ள இயலாமல் போனது. கேமரா பிளாஷ்களில் இருந்து தப்பிக்க… நங்கை த்ரிவிக்-கின் முதுகுக்கு பின் ஒண்டினாள்.
பழி சொன்னபோது துணிந்து நின்றவளால், புகழ் சேரும்போது கேமராவின் முன் நிற்க துணிவு வரவில்லை. நங்கையை விட்டு த்ரிவிக்ரனைப் பிடித்துக் கொண்டனர். “நீங்க யாரவது அப்படியொரு சூழ்நிலைல இருந்திருந்தா என்ன செய்வீங்களோ அதைத்தான், என் மனைவியும் செய்தாங்க. அவங்களை பெரிய்ய ஹீரோ ஒர்ஷிப் குடுத்து சங்கடப்படுத்தாதீங்க ப்ளீஸ்…, அவங்களுக்கு அது பிடிக்காது….”, என்று தான் மனதில் நினைப்பதையே சொன்ன கணவனை கண்ணிமைக்காது பார்த்தாள்.
அவன் கையை நீட்டி… “போலாமா?”,  என்று கேட்க…, கண்களில் காதல் நிறைய…, மனமுவந்து, “உங்க இஷ்டம் …. “, என்று புன்னகை சிந்தி அவனுக்கு கைகொடுத்தாள்.
அவனது அரிவையான நங்கையை முற்றும் அறிந்தவனாக…… கணவனாக……  அவளை காப்பவனாக… அரணாக நின்றான் த்ரிவிக்ரமன்.

Advertisement