Advertisement

AVAV 14 2 FINAL
நங்கை விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள்தான், அருகில் கணவன் இருக்க… சாய்ந்துகொள்ள அவன் தோள் இருக்க, கேட்பானேன்? மூன்று மணி நேரமும் மிக அருமையான நிம்மதியான உறக்கம். த்ரிவிக்ரமனுக்கோ, வெளியூரில் பாதியில் விட்டு வந்த வேலைக்கு அனுப்பியவன் சரியாக செய்வானா என்று குழப்பம் ஒரு பக்கம். நிறுவனங்களுக்கு மென்பொருள் திட்டமிடுதலில், அவனைத்தவிர, வேறு யார் செய்தாலும் ஏதேனும் ஒரு குறையிருப்பதாகத் தோன்றும், நண்பர்களைக்கூட அனுப்ப மாட்டான்.  வடிவைப்பை நண்பர்கள் செய்தாலும், கடைசியாக த்ரிவிக் பார்த்து, திருப்தியான பின்னர்தான் அது அந்நிறுவனத்திற்கு கைமாறும். அனைத்துமே, இவன் நேரடியாக இருந்து செய்ய வேண்டியவை.
அவ்வாறு நிற்கும் வேலைகளை மின்னஞ்சலாக அனுப்பும்படி அலுவலகத்தைப் பணித்திருந்தான். ஏற்கனவே தரவிறக்கம் செய்திருந்தபடியால்… அவற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் வேலையை முடித்தவன், அருகில் அசந்து தூங்கும் மனைவியைக் கண்டான். கைகளின் கட்டுக்கள் தெரியாதிருக்க, கையுறை அணிந்திருந்தாள், கூடவே குளிருக்கு இதமாக ஸ்வட்டரும் அணிந்திருந்ததால், வித்யாசமாக ஏதும் தெரியவில்லை.
அவனது இருக்கைக்கு பின்னால், மைத்துனனும், அவர் மனைவியும், அவர்களுக்கு பின் இருக்கையில் மாமானார். இது திட்டமிடா பயணம், நேற்றைய தினத்திற்கு முன்பு வரை.. திட்டமிடாத செயல் எதையும், அவன் செய்ததில்லை.
நங்கையை அறிவதற்கு முன்பு இருந்த த்ரிவிக்ரமனாக இருந்திருந்தால், இவ்வாறு தலைக்குமேல் நியமனம் செய்யப்பட்ட வேலைகள் அணிவகுத்துக் காத்திருந்தால், “நீங்க நங்கையை கூட்டிட்டு போங்க மாமா, எனக்கு வேலை இருக்கு “, என்று சர்வநிச்சயமாக, நிர்தாட்சண்யமாக கூறி இருப்பான். அதென்னமோ, இருவரின் குறுக்கேயும் மேகத்திரை இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அவள் கூடவே இருக்க வேண்டுமென தோன்றுகிறது. உடல் தேவைகளைக் கட்டுப்படுத்தியவனுக்கு உள்ளத்தேடல்களைக் கட்ட முடியவில்லை. இதோ, வேலைகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டு, எப்படியாவது  சமாளிக்கலாம், என்று கிளம்பிவிட்டான்.
குர்ஷரனின் வீட்டில் அவளது பெற்றோருடனும், தாத்தாவுடனும், நங்கை வாதிட்டது நினைவில் வந்தது. ஏன் குழந்தை கடத்தப்பட்டதாக புகாரினை அளித்தீர்கள் என்று நான்கையும், த்ரிவிக்ரமனும் கேட்டதற்கு, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, அதை தடுக்க நினைப்பவர்களுக்கு, நம் சமூகம் உறுதுணையாக நிற்கும் என்பதைத் தெரிவிக்க இதைவிட வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு என்னவென பதிலுரைப்பது?, இவ்வாறான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமானால், முதலில் குற்றங்கள் குறித்து புகாரளிக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும், பேர் கெட்டுவிடுமே? ஊர்பேசுமே? என்றெல்லாம் யோசித்து வாளாவிருந்தால், பதிவே செய்யப்படாத குற்றங்களின் தண்டனைகள் பற்றி யார் பயப்படுவார்? அவ்விடங்களில் குற்றச்செயல்களைத் தடுக்க வருபவர்களையும் ஊக்கப்படுத்துவது சமூகக்கடமையல்லவா?  ஆயினும், புகைப்படங்கள் எதுவும் தரவில்லையாதலால், குர்ஷரன் குறித்த விபரங்கள், ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறி வாதிட, ஏதும் மறுத்துப் பேச இயலவில்லை.
பின் மதியத்திலேயே, அவர்களுடனான சந்திப்பு முடிந்ததால், மோகனசுந்தரம் திட்டமிட்டபடி இரவு விமானத்தில் அனைவரும் கிளம்பிவிட்டனர்.
நங்கை குடும்பத்தினர் அனைவரும் சென்னை வந்து சேரும் போது , இரவு மணி பதினொன்றானது. இவர்களை கூட்டிச் செல்ல. நங்கையின் பெரியண்ணன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல், தானே டொயாட்டோவுடன் வந்து விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கூறினான்.
அதிக பயணப்பொதிகள் ஏதும் இல்லாததால், விமானம் வந்திறங்கிய பத்து, பதினைந்து நிமிடங்களில், அனைவரும் வெளியே வந்து விட்டனர். ஒரு போன் செய்ததும், வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்த பெரியண்ணன வந்து விட்டார். கிட்டத்தட்ட நடுநிசியானதால், அதிக வாகன நெரிசலின்றி இருக்க, மோஹனசுந்தரத்தின் வீட்டிற்கு செல்லும் ஒருமணிநேர பயணத்தை, அரைமணி நேரமாகச் சுறுக்கியது.
வண்டியில் சலசலத்தவர்கள், வீடு வந்து சேர்ந்ததும், பெரியண்ணி விழித்திருந்து இவர்களுக்கு ஊர்க்கண் பட்டுவிட்டதாகக் கூறி, அந்த நேரத்திலும் நங்கையையும் த்ரிவிக்ரமனையும் அமரவைத்து, திருஷ்டி சுத்திப் போட்டார். அவர், ‘நாளைக்கு எல்லாக் கதைகளும் பேசலாம். இப்போ போய் தூங்குங்க’ எனவும்…, அசதியிலும், அரைத்தூக்கத்தில் இருந்த அனைவரும் உறங்கவென அவரவர் அறைகளுக்குச் சென்றனர். நங்கை, மாடிக்குச் செல்ல… த்ரிவிக் உடன் சென்றான்.
த்ரிவிக் உடை மாற்றி, படுக்கைக்கு வந்ததும் நங்கை, அவளது ஸ்வெட்டர், கையுறையை கழட்டியவாறு. “அவங்க கம்பளைண்ட் குடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல தெரியுமா?”, என்று சொல்லி கட்டிலில் அமர்ந்தாள்.
“ஆனா, அவங்க சொன்ன காரணம் சரிதானே?, சோ அவங்க பண்ணினதுதான் கரெக்ட்.”
“ம்ம்ம் .சரிதான்.. ஆனா, அந்தக் குட்டிக்கு பியூச்சர்-ல ஏதாவது ப்ராபளம் வந்தா?”
“அவளுக்கு இப்போதான் அஞ்சு வயசு, கொஞ்சநாள்ல இதெல்லாம் மறந்துடுவா, இப்போவே  சொசைட்டி ரொம்ப முற்போக்கா மாறிட்டு இருக்கு, இன்னும் அவ காலத்துல… இது ஒண்ணுமில்லன்னு ஆயிடும். இப்போ நாம தூங்கலாமா?”
“நான் பிளைட்-ல நல்லா தூங்கிட்டேன், இப்போ ரொம்ப பிரெஷ்ஷா இருக்கு.”
“நான் நேத்திலேர்ந்து தூங்கலை, வெரி டயர்ட். குட் நைட்.”, த்ரிவிக் கொட்டாவி விட்டு, கண்களை மூட…
“சரியான சாமியார்”, அவன் காதில் கேட்கமாறு வேண்டுமென்றே முணுமுணுத்தாள்.
கேட்டவன் … “சாமியாராக்கினவங்க அதைச் சொல்லக் கூடாது, பேசாம பட்றீ”, கண்களைத் திறக்காமல் த்ரிவிக்.
“இப்போ சம்சாரியாகச் சொல்றேன். ஓகேவா? “, அவன் காதருகில் கிசுகிசுக்க….
சின்னதாக பெருமூச்சு விட்டு.. ஆதரவாக அவளை அணைத்தவாறு, “ம்ப்ச்., கை காயம் சரியாகட்டும்”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்….?”, மெல்லிய சிணுங்கலுடன் நங்கை கேட்க….
கண்களைத் திறந்து அவளைப் பார்த்து, “அடியேய், உன்னோட…. “, என்று சிரித்த விக்ரமனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
நங்கை அவளது கெத்தை விடாமல்.. “ம்ம்ம்.. என்னோட… ?”, என்று புருவம் உயர்த்த… த்ரிவிக்ரமனின் மொத்தமும் அவுட்…
அவளை இழுத்து மேலே போட்டு, “முடில … ரொம்ப பேசற ..நீ…”, கட்டிக் கொண்டு சிரித்தான். அதற்குமேல் முன்னேறும் எண்ணமெல்லாம் இல்லை.
அதைப் புரிந்தவளாய்.. அவன் மார்பிலிருந்து தலையை தூக்கி, கண்ணடித்தவாறு…, “காந்தக் கண்ணழகா.. லுக்கு விட்டு  கிக்கு ஏத்தும் முத்து பல்லழகா..”, பாட்டு பாட..
இப்படி ஒரு பாட்டு இருப்பது தெரியாத த்ரிவிக்… “யாரு …. நானா லுக்கு விடுறேன்?”, அவனுக்கு நங்கை அடிக்கும் லூட்டியை பார்த்து சிரிப்பு பொங்கியது..
அடுத்த வரியான, “முத்தம் ஒன்னு தாடா”, நங்கை பாட…
“டா… வா…உன்ன…..”, குனிந்து அவள் இதழ் கொய்ய…, தன்நிலை இழந்தவள் இருக்க..மற்றொரு கையால் கனகாரியமாக முந்தானையை கொண்டு கைகளை கட்டினான்..
அப்புறம் பாட்டு …..
சாரி….. மறந்து போச்சு..
அடுத்து வந்த நான்கு நாட்களும், விருந்து உபசாரங்களில் கழிய, இதற்கிடையே த்ரிவிக்கின் பெற்றோர்களும் வந்து சென்றனர். த்ரிவிக் நங்கை மனம் குளிரும்படி… இருவரும், விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்து விட்டதாகவும், இனி மகன், மருமகள், மற்றும் பேரப்பிள்ளைகளுடன்தான், அவர்கள் காலம் என்று முடிவெடுத்து விட்டதாகவும் கொசுறு செய்தியாக கூறினர்.
மறுநாள், விடுமுறை தினமாதலால், அனைவரும் ஹாலில் குழுமி இருக்க… மோகனசுந்தரம் பேச்சைத் துவக்கினார்…
“என்ன முடிவெடுத்திருக்கீங்க மாப்ளே?”
“நாங்க என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க மாமா?”,
“டெல்லி வேண்டாம், இங்க சென்னைலேயே என்னோட பிசினெஸ் இருக்கு, அண்ணன் பசங்க தான் பாக்கறாங்க, ஆனா அவங்களுக்கும் வேற வேற ஊர்ல பிரான்ச் வெச்சு கொடுத்திருக்கேன். பாக்டரியையும், ஹெட் ஆபிஸும் நான் பாக்கறேன். அதை இனிமே நீங்க பாருங்க.. இல்ல இந்த லைன் பிடிக்கலையா, சொல்லுங்க, உங்க பிசினெஸையே இங்க ஆரம்பிக்கலாம், பணத்தைப் பத்தி கவலை வேணாம்”,  நயமாக கூறினார்.
“மாமா, சப்போஸ் இங்க பிசினெஸ் ஆரம்பிக்கனும்னு முடிவெடுத்தாலும் எனக்கு உங்க பணம் தேவைப்படாது, டெல்லில, சென்ட்ரல் கவர்ன்மென்ட் ப்ரொஜெக்ட்ஸ் சிலது என்னை நம்பி இருக்கு. என்னைன்னா நான் மட்டுமில்ல, என் பிரிண்ட்ஸ்-ம் சேர்த்துதான். அவங்களை கன்சல்ட் பண்ணாம, தன்னிச்சையா முடிவெடுக்க முடியாது”, இவன் நிறுத்தவில்லை… அதற்குள்…மோகனசுந்தரம் குறுக்கிட்டு  “அவங்களும் இங்க வரட்டும் மாப்ளே, நான் தனியா நீங்க வரணும்னு சொல்லவேயில்லை”
“எல்லாம் சரிதான் மாமா, நங்கை என்ன சொல்றான்னு நாம கேக்கவேயில்லயே?”
“சின்னப் பொண்ணு அவ, அவளுக்கென்ன தெரியும்? செய்-ன்னா செய்ச்சிட்டு போறா.. இல்லன்னா உங்க இஷ்டம் பா,ன்னு சொல்லுவா.. நீங்க சொல்லுங்க மாப்ள.?”
“இல்ல மாமா, அவளுக்கு  நல்லாவே தெரியும், எதை எங்க எப்படி பண்ணனும், எப்படி பேசணும்-னு அவளுக்கு தெரியும், இப்போ நான் உங்க பிசினெஸ் பாக்கணும்னு நினைக்கிற நீங்க, ஏன் நங்கையை பாத்துக்கச் சொல்லல? அவ பிளானிங் பக்காவா இருக்கும். அவளை விட்டிருந்தா, இன்னமும் ரெண்டு பாக்டரியே ஆரம்பிச்சு இருப்பா.. சரி அதை விடுங்க.., உங்களுக்கு நங்கை முடிவு தேவைப்படாம இருக்கலாம், பட் எனக்கு நங்கை என்ன யோசிக்கிறான்னு தெரியணும்”, தீர்மானமாக கூறினான். சற்று தள்ளி,  ஊஞ்சலில் அண்ணிகளுடன் அமர்ந்திருந்தவள் முகத்தில் பெருமை.
“அப்போ ஏற்கனவே பேசி முடிவு பண்ணிடீங்கன்னு சொல்லுங்க?”, மண்ணச்சநல்லூரில் இருக்கும் காடு கழனியை விட்டு விட்டு, அதன் அருகே திருச்சியில் மோகனசுந்தரத்தின் தொழிற்சாலையில் தயாராகும் கட்டுமான கம்பிகளின் கிடங்கு, விற்பனைப்பிரிவுகள் என சொந்தமான தொழில் இருந்தும், சென்னைக்கும் திருச்சிக்குமாக அலைந்து கொண்டிருக்கும்   ஆதங்கத்துடன் கூறினார், பெரியண்ணன். த்ரிவிக் சென்னை பொறுப்பை ஏற்றால், இவர் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று நிம்மதியாக இருக்கலாமே?
“சே சே.. நாங்க இன்னும் அந்த டாபிக்கே ஆரம்பிக்கல” அவசரமாக கூறியவன் “உங்கள நம்ப வைக்கணுங்கிறதுக்கு சொல்லல, நிஜமா இன்னமும் அந்த யோசனைக்கு போகவேயில்ல”, என்றான் த்ரிவிக் உண்மைக்குரலில். ஆனால் அவனுக்குத் தெரியும், நங்கை இதற்கு உடன்பட மாட்டாளென்று.
“ஏண்டி.. எதையாவது பேசி கீசி, தம்பிய சம்மதிக்க வச்சி  நம்மூருக்கே வந்துடலாமில்ல? வடக்கையும் தெக்கயும் எம்புட்டு நாளுக்கு அலையறது?”, இது நங்கையிடம், அருகே அமர்ந்திருந்த பெரியண்ணி.
“நாங்க பேசவேயில்லண்ணி.”, என்றாள் நங்கை யதார்த்தமாக.
நங்கையின் பின் மண்டையில் செல்லமாக தட்டி., “அய்ய…, கூறு கெட்டவளே..  பேச்ச பாரு பேச்ச?”, என்று மிகவும் சிவந்து வெக்கப்பட்டார்.
‘இவ்ளோ வெக்கப்படற அளவுக்கு நாம என்னடா சொன்னோம்?” என்றானது நங்கைக்கு. பின் அவரது எண்ணவோட்டம் புரிந்து, ‘ச்சு. சும்மாயிருங்கண்ணி”, என்றாள்.

Advertisement