Advertisement

AVAV 14 (1)
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, “அண்ணா… இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?”, என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், “அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்”, என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்… மனைவி போனில் பேசியபோது அழுததும், நேற்று அவனை வெகுவாக தேடியதையம் அறிந்தவன்… நங்கையை பார்க்க வேண்டுமென முடிவெடுத்தான்.
தவிர அவனுக்குமே ஒரு எண்ணம்… என்னதான் செல்வாக்குள்ள அமைச்சரை தெரிந்திருந்தாலும், காவல்துறையில் மேலதிகாரியைத்  தொடர்பு கொள்ள இயலும் என்றிருந்தாலும், எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், சம்பந்தப்பட்ட துறைக்கு, சென்றது தவறோ என்று.
அந்த காணொளியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மனைவியிடம் அல்லவா முதலில் சென்றிருக்க வேண்டும்?. நான் உன்னுடனிருக்கிறேன், கவலைப்படாதே என்றல்லவா நின்றிருக்க வேண்டும்? என்பது …  நங்கை தன்னைத் தேடியிருப்பதை உணர்ந்தபின்தான்…, இத்தனை தாமதமாகத்தான் தோன்றியது.
நேற்று மாலை, விமான நிலையத்தில் அமர்ந்து யோசித்தபோது, தன் மனைவியை ஒருவன் குற்றம் சுமத்துவதா?, அவ்வாறு செய்த அவனை சும்மா விடுவதா? என்று எண்ணினானே தவிர.. அவனது மனைவி, கணவனாக…  தான் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருப்பாள் என்றிவன் யோசிக்கவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. அங்கே த்ரிவிக்ரமன், ஆணாக நின்று, அவன் என்ன செய்யவேண்டுமென தீர்மானித்தான், ஒரு மனைவியாக , நங்கை என்ன நினைப்பாள், தன்னிடம் என்ன எதிர்பார்ப்பாள் என்பதை யோசிக்க மறந்தான். ஆங்கு.. அவனிடத்து அறிவு பேசியது…  நங்கையின்பால் இருந்த அன்பு.. அவளது சுற்றங்களை வரச் சொன்னது.
தவிர.. த்ரிவிக்-கிற்கு அவ்வீடியோ செய்தி குறித்த சந்தேகம், ஒரு சதமாவது இருந்தால்தானே…, மனையாள் குறித்த இப்பழிச் சொற்கள் உண்மையா என்று யோசிக்கத் தோன்றும்? த்ரிவிக்ரமன், அவனை எந்தளவிற்கு நம்புகிறானோ அதே அளவு தன மனைவி நங்கையையும் நம்புகிறான். அதுவும்…., எதிரியைத் தேடிச்சென்ற இவனது செயலுக்கு ஒரு காரணம். என்ன ஒன்று , அவனது நம்பிக்கையை,  தன் மனைவியிடம் வெளிப்படுத்த த்ரிவிக்-கிற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.
கார் நங்கையின் வீட்டை சமீபித்திருந்தது.  வீட்டிற்குச் சென்றதும்,  நங்கையிடம் த்ரிவிக்-கிற்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே., ‘உன்னைப் பத்தி எவன் என்ன சொன்னாலும், நான் நம்பமாட்டேன். எனக்கு உன்னைத் தெரியும்”, என்பதே அது. அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லப்போவது அவனைப் பொறுத்தவரை மிகச் சிறிய வாக்கியமே. ஆனால், அது அவனது அரிவைக்கு எத்தனை வலிமை தரும்  என்பதை அவன் கண்டிப்பாக அறியான்.
+++++++++++++++++++++++
அங்கே வீட்டிலோ… நங்கைக்கு  அண்ணியிடமிருந்து, விதவிதமாக அர்ச்சனைகள் கிடைத்துக் கொண்டிருந்தது.
“நீ பண்றது நல்லால்ல நல்லா., இருக்கிற பிரச்சனைல இருந்தே எப்பிட்றா வெளிய வர்றதுன்னு தெரியாம இருக்கு.. இதுவே நம்மூரா இருந்தா நிலமையே வேற. இப்டி செஞ்சவன, நம்மாளுங்க  உண்டு இல்லைன்னு பண்ணிருப்பாங்க..”
“இப்போ என்னடான்னா… வெளியூர்ல வம்பு வேணாம்னு சொல்லச்சொல்ல  கேக்காம.. உங்கண்ணன் வேற பத்து தடிப்பசங்கள வரவெச்சிருக்கு. யாரும் யார் பேச்சையும் கேக்கறதில்லன்னு முடிவோட இருக்கீங்களா?”
“இதுல நீ பேட்டிங்கிற பேர்ல… இன்னும் கொஞ்சம் அவன தூண்டி விட்டு இருக்க?, பொண்ணுன்னு அச்சம் கொஞ்சங்கூட இல்லாம… வீராப்பு பேசிட்டு..?”
“அங்க விக்கித்தம்பி வேற டிபார்ட்மென்ட், டிபார்ட்மென்டா சுத்திட்டு  கிடக்கு”, ஆரம்பித்த அண்ணி முடிப்பதாகக் காணோம்.
காப்பாற்றுவார் என்று நங்கை அப்பாவைப் பார்க்க.. அவரோ என்னாகப்போகிறதோ என்ற கவலையுடன் இருந்தார். சிறிது நேரம் யோசித்தவர்..  ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக…
“நல்லா… மாப்பிள்ளைக்கு போன் போடு பேசணும்”, என்று நங்கையிடமும்…
“சின்னவனே.. வந்த ஆளுங்களை அப்படியே திரும்ப போகச் சொல்ற. ஏதாச்சும் தகறாருன்னு தெரிஞ்சுது …”, தனது அண்ணனின் மகனை மிரட்டினார்.
“நீ உடனே நம்ம எல்லாருக்கும்…”, நிறுத்தி நங்கையை பார்த்தபடி.. “மாப்பிள்ளைக்கும் சேர்த்து நைட் பிளைட்-ல சென்னைக்கு டிக்கட்டை போடு.”, என்றார் மருமகளிடம்.
“நல்லா… இன்னிக்கு நாம சென்னைக்கு போறோம்.. ஒரு ஒருவாரம் அங்க இருங்க. இங்க இந்த பரபரப்பெல்லாம் ஓயட்டும்.  அப்பறமா,  எல்லாரும் கூடி பேசி  நிதானமா, என்ன வேணா முடிவெடுத்துக்கலாம்.”, கறார் குரலில் கூறினார்.
அப்பா, கணவனை தொடர்புகொள்ளச் சொன்னதால்… தனது அலைபேசியை, அருகிலிருக்கிறதா எனத் தேடிய நங்கை…, “உங்க இஷ்டம்பா”, ஒருவித மரத்த குரலில் பதிலுரைக்க… சரியாக அதே நேரத்தில் த்ரிவிக் உள்ளே வந்தான். நங்கையின் இந்த “உங்க இஷ்டம்பா”, வின் மரத்த த்வனி, ஏனோ மனதுள் தைத்தது.
என்னவென்று அதனுள் ஆழ்ந்து போகமுடியாதவனாய்.. “வாங்க மாப்ளே”, “வாங்க தம்பி”,  மாமனாரின் குரலும், மச்சானின் குரலும் அவனைக் கலைக்க… சின்னதான தலை அசைவுடன் இதழ் நோகா புன்னகை சிந்தி, வீட்டைப் பார்வையிட்டபடி, உள் நுழைந்தான். விருந்தினர்களுக்கான படுக்கையறை விரியத் திறந்திருக்க.. அங்கிருந்த சோஃபாவில் நங்கை அமர்ந்திருந்தாள், அருகில் அண்ணி, நங்கையின் இடக்கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
கூடத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியும். ஆனால், வாயிலில் இருந்து வருபவர்கள் சற்று உள்ளே வந்தால்தான் படுக்கையறையில் நங்கை அமர்ந்திருப்பது தெரியும்.
‘மாப்ள’ என்ற அப்பாவின் அழைப்பிலேயே, த்ரிவிக்கின் வருகையை அறிந்து, ஆனந்தமாய் அதிர்ந்தவள்.., சட்டென்று எழுந்துவந்தாள்.
நங்கையை த்ரிவிக் பார்த்தான். அவளது நலுங்கிய தோற்றம், இவளைப் பிரிந்து இரண்டு நாள்தான் ஆனதா?, என்றுதான் எண்ணத் தோன்றியது. அதையும் மீறி அவள் கண்களில் ஒளி, முகத்தின் மலர்ச்சி. அது தன்னைக் கண்டதினால் என்று புரிந்தது. அவளது இதயத்தின் அதிவேகத்துடிப்பு, இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்த கணவனுக்குக் கேட்டது. உடனே மனைவியை ஆரத்தழுவி, தோள் சேர்த்துக் கொள்ள ஆசை வந்தது . இருந்தும், வீட்டிலிருக்கும் சுற்றத்தோருக்கு மதிப்பளித்து.. பேசாதிருந்தான்.
எப்போதும்போல, ஊரிலிருந்து வரும்போது கணவனின் கையிலிருக்கும் அமெரிக்கன் டூரிஸ்ட்டரை வாங்க மனைவியின் கைகள் நீள… அதைக்  நங்கையின் கையில் கொடுக்க தன்னிச்சையாக அவன் கைகள் உயர… பார்த்தவனின் கண்கள்… அதிர்ந்தது. நங்கையின் உள்ளங்கை சதை முழுவதும் தாறுமாறாக கிழிபட்டிருக்க… விரல் நுனிகளைத்தவிர, ஆங்காங்கே சதை பெயர்ந்து.. செவசெவ-த்திருந்தது. அவனது முகம் தீவிரத்தன்மை கொண்டது.
நங்கையின் அண்ணி, அப்போதுதான் நங்கையின் கைக் கட்டினைப் பிரித்து, டெட்டால் கொண்டு பஞ்சினால் ரணத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். [கூடவே நங்கைக்கு வசவும்.. இலவச இணைப்பாக… (ஒருவேளை வலி தெரியாதிருக்கவோ?)].
த்ரிவிக், பெட்டியை தானே எடுத்துக் கொண்டு, அவளைப்பார்த்து, “காஃபி எடுத்திட்டு வா”, என்றுவிட்டு விடுவிடுவென அவர்களது அறைக்குச் சென்றான்.
நங்கை, இரண்டு நிமிடத்தில்..  காஃபியுடன் அவர்களது அறைக்குச் சென்றாள். உடை மாற்றிக்கொண்டிருந்த த்ரிவிக்.. கதவின் தாள் திறக்கும் சப்தம் கேட்டு திரும்ப.. மறுநொடி அவன் மார்பில் தஞ்சமடைந்திருந்தாள் நங்கை நல்லாள். அவள் வேகத்துக்கு சற்றும் குறையாமல், த்ரிவிக்கும் அவளை இறுக்கி அணைத்திருந்தான். காம, காதல் கசடுகளேதுமின்றி கணவனும் , அவனுக்கு சற்றும் குறையாத பேருவகையுடன் மனைவியும்,   நானிருக்கிறேன் உனக்கு என்ற உறுதியான அரவணைப்பில். பேசினால் இக்கணம் களங்கப்படும். இது மொழியறியா ஆதி மனிதனின் உடல்மொழி, வார்த்தைகளில் வடிக்கயியலாத ஓர் உள்ளுணர்வு.
சிறிது நேரம் பொறுத்து, நங்கையை விடுவித்தவன் கண்கள் பணித்திருக்க, அவளது நெற்றியில் செல்லமாக முட்டி, “லூஸு” என்றான்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் படலம், நகைமுரணாக முகம் அன்றலர்ந்த மலர் போல் இருக்க.. இதழில் அவன் சொன்ன லூஸு -க்கு சிரிப்பு. இதென்ன சிறுபிள்ளை போல?.
“ஏன்?”, நங்கை கேட்டாள்.
” போன்ல அப்படி அழற? “
“தப்பா எடுத்திட்டீங்களோன்னு  நினச்சு….”,
” லூஸு , உன்னப்போயி தப்பா நினைப்பேனாடீ?”, என்க…
“அதான் ஏன்?”,
‘நீ அழகு’, என்று பிறர் சொல்ல கேட்கும் பெண்கள், அதை இன்னும் ஊர்ஜிதப்படுத்த.. மேலும் மேலும், அதைக் குறித்து மற்றவரிடம் கேட்டு, இன்னின்னவாறு நீ அழகாக இருக்கிறாய் என்று அவர்கள் வாய் மொழியில் தெளிவுபடுத்துவத்தைக் கேட்டு இன்புறுவதைப்போலிருந்து , நங்கையின் கேள்வி.
மூக்கைப் பிடித்து ஆட்டி, “ஏன்னா நீ என் வொய்ஃப்டி, என் பொண்டாட்டி.”, விளையாட்டாய் பதில் சொன்னாலும், அதில் ஒரு தீவிரம் இருந்தது. நீ என் மனைவி என்ற ஒரு காரணம் போதும், உன்னை நான் நம்புவதற்கு. அழகாக சுருக்கமாகக் கூறிவிட்டான். 
“க்ஹும். க்ஹும்.. எத்தனை டீ”, என்றிவள் சினுங்க..
த்ரிவிக், தலையை சற்றே பின்னோக்கி நகர்த்தி சிரித்ததும்… நங்கை, “ஸ்ஸ்..”, என்றாள். த்ரிவிக் சட்டென விலகி,  “என்னடா”, என்று கேட்டான்.  த்ரிவிக் பின்னோக்கி நகர்ந்ததால், அவன் கழுத்தைச் சுற்றியிருந்த நங்கையின் கைகள் உராய்ந்து வலியெடுக்க… மெதுவாக கீழிறக்கியவள், “ம்ச், ஒண்ணுமில்ல… லைட்டா வலிக்குது”,  கட்டுகள் இல்லாத கைகளின் பச்சை ரணம், மீண்டும் ரத்தம் உகுக்கவா என்றது.
இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து, சுறுசுறுவென கோபம் வர, “முட்டாள்.. அறிவில்ல உனக்கு.. என்ன பண்ணிவச்சிருக்க நீ?”, த்ரிவிக் நங்கையைக் கடித்தான்.  இது, இந்த சூழ்நிலையில்..  தன்னால் ஏதும் செய்ய இயலாத ஆற்றாமையினால் வரும் கோபம். மனைவியின் மீதான அக்கறையின் மற்றோரு பரிணாமம்.
“ம்ம்.. என்புருஷன நா கட்டி பிடிச்சிட்டிருந்தேன். இதிலென்ன தப்பிருக்கு?”, என்று பகடி பேசினாள்.
அவள் பதிலில் தலையை இடவலமாய் ஆட்டியவாறு  நகைத்தவன், “சான்ஸே இல்ல.. நீ ம்யூஸியம் பீஸ்தான்டீ ..முதல்ல கைக்கு கட்டு போடு,  வா.. “, கை மணிக்கட்டை பிடித்து, அவளை  வெளியே இழுத்துச் சென்றான்..
“என்னங்க..”, அவனை நிறுத்தும் முயற்சியில் நங்கை கூப்பிட….
அவளை பேச விட்டால் ஏதாவது சொல்லி சமாளிப்பாள் என்று நினைத்து, “ச்.. பேசாத வா “, கடித்த பற்களுக்கிடையே சொன்னான் த்ரிவிக். அதுவரை அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவள், த்ரிவிக் கதவினைத் திறந்து அறையை தாண்டிச் செல்ல..,  “விக்..க் ..ரமா”, என்று அழுத்தி, பல்லைக் கடித்துக்கொண்டு நங்கை விளித்தாள்.
த்ரிவிக், திரும்பி கேள்வியாக நங்கையைப் பார்த்து, என்ன எனப் புருவம் உயர்த்த… “துண்டோட வெளிய வந்துருக்க லூஸு… “, அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்.
த்ரிவிக்ரமன்,  அலுவலகத்தில் ஃபார்மல் உடை , வீட்டிற்கு வந்தால் ஷார்ட்ஸ் டீ ஷர்ட் என்றிருப்பவன், பனியனுடன் கூட வெளியே சுற்றாதவன், இவ்வாறு இடுப்பில் துண்டுடன் வெளியே வர…, நிச்சயமாய் அவன் சுயத்தில் இல்லை என்பதை புரிந்து நங்கை சொன்னாள். கூடவே அவனின் லூஸு விளிப்பையும் அவனுக்கே திருப்பினாள்.
‘சட்’, தன கையாலேயே நெற்றியில் தட்டி,  ஒரு நொடி அசடு வழிந்தவன்.. கூடத்தில் அமர்ந்து இவர்களைப் பார்த்தவாறிருந்த மாமனாரையும் ப்ரஜனையும்  கண்டு, நொடியில் முகம் மாற்றினான். முறைப்பாக [ கெத்தாக ??]  நங்கையைப் பார்த்து, “போ போய் கட்டு போடு”, என்றான்.
அதற்குள் அடுத்த அறையிலிருந்து அண்ணி வரும் அரவம் கேட்க.. நொடியில் அவனது அறைக்குள் அந்தர்த்யானமானான்.
நங்கை, ப்ரஜனுக்கு சிற்றுண்டி கொடுத்து உபசரித்தாள். பின் அவன் விடைபெற..  காலை உணவு முடிந்த பின், மோகனசுந்தரம்  அனைவருக்கும் சென்னை செல்ல, பதிவு செய்திருப்பத்தைச் சொல்லி, கூடவே ‘ஒரு வாரம் ரிலாக்ஸ்டா இருங்க, மிச்சத்தை அங்க முடிவு பண்ணிக்கலாம்’, என்றுரைத்து மறுத்துப் பேச முடியாதவாறு முடித்துவிட்டார். 
அதற்குள் வைதேகியும், ஸ்ரீராமுலுவும், நங்கையிடம் பேசியிருந்தனர்.  இருவரும் கிளம்பி டெல்லி வருவதாக கூற… அவர்களிடமும் மோகனசுந்தரம் பேசி, நங்கையையும், த்ரிவிக்-கையும் சென்னை அழைத்துவருவதாக சொல்லி, அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டார். 
த்ரிவிக், அவனது அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கான மாற்று ஏற்பாடுகளை, திட்டமிட , அவனது கணினியில் அமர்ந்தான். நங்கை.. இன்னும் ஒரு படி மேலே போய்.. அவளது காரியதரிசியை வீட்டிற்கே வரப் பணித்தாள். பின் அவருடன் பேசி, ஒரு வாரம் தான் இல்லாது சமாளிக்குமாறு அறிவுறுத்தி.. நேற்று நிகழ்ந்ததைப் போல்.. இன்னொரு முறை நிகழக்கூடாதென வலியுறுத்தி, அவரை அனுப்பி வைத்தாள்.
++++++++++++++++++
கோபம், துவேஷம், பொறாமை இவை உடன்பிறப்புக்கள்.. எந்த ஒன்று வந்தாலும்,  மற்றிரண்டும் பின்னோடே வந்துவிடும். கோபம், எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்குகிறது. எங்கு துவேஷம் இருக்கிறதோ, அங்கு தெளிவு காணாமல் போகிறது. எங்கு பொறாமை நுழைகிறதோ, அது அவன் முடிவுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.
சூரஜ் தாக்கூர், டெல்லியின் பிரதான பகுதிகளில் மழலையர் பள்ளிகள் நடத்தி வருபவன். தமிழ் உட்பட பல மொழிகளை, அந்தந்த பிராந்திய ஏற்ற இறக்கங்களுடன் பேசத்தெரிந்தவன். இத்தனை வருடத்தில், எத்தனை பிள்ளைகளின் பெற்றோரைப் பார்த்திருப்பான்? அவரவர்க்குத் தகுந்தாற்போல் பேசி அவர்களை வாடிக்கையாளர் ஆக்குவதில் விற்பன்னன். பேச்சில் கவனமெடுத்தவன்.. சிறிது சேவைத்தரத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம். என் செய்ய?
நங்கை நல்லாள், இவனுக்கு தொழிற்முறை போட்டியாக மாற… முதலில் ஃபிரான்சீஸ் தொடர்பை ஏற்படுத்தி, பின் தனது பணபலத்தால்.. அவளுடைய பள்ளியையும் சொந்தமாகிக் கொள்ள நினைத்தான். அதற்கு நங்கை ஒப்புக்கொள்ளாதாது மட்டுமன்றி.. இவனது விடுதி பிள்ளைகள் பலரும் அங்கு மாறுதலாக… மக்களிடம் நங்கையின் நம்பிக்கையைக் குலைத்தாக வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதற்கு தோதாக, ரியாஸ் அவன் கண்களில் பட.. அவனுடன் பேசியதில், எதிரிக்கெதிரி நண்பன் என்றானான்.
த்ரிவிக் வெளியூர் சென்ற நேரத்தில், ரியாஸின் நண்பன் அமர்ஜோத்  [வேன் டிரைவர்/அடிபட்டவன்], குர்ஷரனைக் கடத்தச் செல்லும்முன், சரியான நேரத்தில்.. ரியாஸ் அக்குழந்தையின் அம்மாவின் அலைபேசியை திருட, பின் அமர் ஜோத்தால் அக்குழந்தை வதைபடுவதை…  ரியாஸ் காணொளிபடுத்தி.. சூரஜிடம் கொடுத்து.. நங்கையை சிக்கலில் மாட்டி விடுவதென்று திட்டமிட…, ஹும் … நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் …. ? மனிதனின் திட்டமிடுதல்கள், நிச்சயமாக இறையருள் என்ற ஒன்று இருந்தாலன்றி சாத்தியமாகாது.
த்ரிவிக்கின் வெளியூர் பயணம், மொபைலை திருடுவது, குழந்தையைக் கடத்துவது, ஒதுக்குப்புறமான பாழடைந்த வீட்டிற்கு கொண்டு செல்வது வரை அனைத்தும் சரியாகச் செல்ல, ரியாஸ் வீடியோ எடுக்க வரும் நேரம், யாரும் எதிர்பாராமல் தாமதமானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் நங்கை அமர்ஜோத்தினை கண்டுபிடித்து, குழந்தையைக் காப்பாற்றி, தப்பிச் செல்ல நினைத்த அவனையும் சராமாரியாகத் தாக்கி நிலை குலைய வைத்தாள். அமர்ஜோத் தெருவில் மயங்கி விழுந்த அந்த சமயம், அவ்விடம் வந்த ரியாஸ், சரி இதையாவது பதிவு செய்வோம் என்று,  நங்கை..அமர் ஜோத்-தை அடிப்பது, ப்ரஜன் வந்து நங்கையை அழைத்துச் செல்வது.. இவற்றை படமாக்க… பின் அதைத் திரிக்கும் வேலைகளை சூரஜ் செவ்வனே செய்தான்.
த்ரிவிக்ரமன் நங்கை நல்லாள் திருமணத்தை வாழ்த்தி பத்திரிகையில் வந்த புகைப்படத்தை கடைசியாக அந்தக் காணொளியுடன் இணைத்தான்.
நங்கையின் கையில் அமர்ஜோத் அகப்படுவான், என கண்டிப்பாக சூரஜ் நினைக்கவில்லை.  அதே நேரத்தில், கண்முன்னே அடிபடுவது உயிர் நண்பன் என்ற போதும், ரியாஸ் அதைக் காணொளிப்படுத்தினானே தவிர, அவனைக் காப்பாற்ற விழையவில்லை. தானும் மாட்டிக்கொண்டால் என்னாவது ..? ஆஹா!! என்னே அவன் நட்பு..!! 
தன் பதிவினை சூரஜிற்கு அனுப்பி, பேசியபடி அதற்குண்டான தொகையையும் பெற்றுக்கொண்டு.. ரியாஸ் தலைமறைவாகிவிட்டான்.
ஒற்றை வீடியோ அனுப்புவதற்காக, சூரஜ் எத்தனை முன்னேற்பாடுகளை செய்திருந்தான்?  நங்கையின் தைரியமான பேட்டியில்… அத்தனையும் தரைமட்டமானது. இவனது திட்டம், இவனே எதிர்பாராத திருப்பமாக, நங்கையை பிரபலப்படுத்தியது. எந்த தொழிலை முடக்க நினைத்து செய்தானோ அதுவே, அவளது தொழிலின்  விளம்பரமானது. இதை கண்டு அவன் பொறாமைத்தீயில் வெந்து போக.., மூளை அதன் செயல்திறனை இழந்தது.
அப்போதும் மிச்சம் மீதிருந்த உள்ளுணர்வின் எச்சரிக்கையினால்.. அவனுடைய அலைபேசியில் இருந்து த்ரிவிக்கிற்கு அழைக்காமல், அவனது ஓட்டுனரின் எண்ணிலிருந்தே பேசினான்.
என்ன பிரிவின் கீழ், யார் கொடுத்த புகாரின் பேரில் என்னைக் கைது செய்கிறீர்கள், என்று சூரஜ் கைதாக முரண்டு பிடித்து கேட்க.., தலையில் இடியாய் இறங்கியது காவலர்களின் மறுமொழி. அமர்ஜோத்-தினால் கடத்தப்பட்ட குழந்தையான குர்ஷரன் கவுர்-ன் பெற்றோர்கள்,  ‘குழந்தையை கடத்தியதாக’, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சூரஜ் கைது என்று அவர்கள் தெரிவிக்க.. மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானான்.
அக்குடும்பம் சற்று பழமையில் ஊறிய குடும்பம், தவிர போலீஸ், கோர்ட் கேஸ் என்று எந்த வம்பினையும் விரும்பாத குடும்பம் என்று தெரிய வந்ததால்தான், சூரஜ்… குர்ஷரனை தேர்ந்தெடுத்ததே.. அவர்களே இதன் பின் விளைவுகளைக் குறித்து கவலை கொள்ளாமல், இப்படி புகாரைக் கொடுத்திருப்பார்கள் என்பதை நம்ப இயலாமல்தான் போனான்.
அதற்குப்பிறகும், காவல் துறை அதிகாரியிடம்,  நங்கையிடம் அவனது ட்ரைவர் பேசியிருக்கலாம் என்று சூரஜ் சாதிக்க… அங்கிருந்த காவலர் ஒருவர், வீட்டிலிருந்த CCTV கருவியைப் பார்த்ததும், அதன் பதிவினைக் காணச் சென்றார். சூரஜின்  துரதிர்ஷடம்.. அவன் வீட்டின் கண்காணிப்பு கருவியிலேயே ட்ரைவரிடமிருந்து மொபைலை வாங்குவது, பின்னர் சூரஜ் பேசியது, மணி நிமிடம் நொடி உட்பட அனைத்தும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது கடவுள் செயலன்றி வேறென்ன? 
ப்ரஜன் மற்றும் த்ரிவிக்ரமன் வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில்  மேற்சொன்ன நிகழ்வுகள் நடக்க…. விஷயம் கேள்விப்பட்ட  த்ரிவிக் மற்றும் நங்கை, அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் சொல்ல இயலாது. வீடியோ குறித்து வெளியானபோது, அவப்பெயர் வந்ததே என்றுதான் நங்கை கவலை கொண்டாளேயன்றி, பயம் வரவில்லை அவளுக்கு. ஆனால் இப்போது, அப்பெண் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என நங்கை பயந்தாள். பிரஜன் த்ரிவிக்ரமன் மற்றும் நங்கை மூவரும் அவர்கள் வீட்டிற்கே சென்றனர்.
அங்கு அவர்கள் புகார் அளிக்கச் சொன்ன காரணம், இவர்கள்  மறுமொழி பேசக்கூட முடியாததாக இருந்தது.
அரிவை அறிவோம்..[/QUOTE]

Advertisement