Advertisement

தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., “யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு பண்ணிடலாம்”, என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் மொழிய.., “ண்ணா, அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.”, எனப் பதறியவள்…. “நேத்து ஒருத்தன் எங்கிட்ட பேசினான்ண்ணா, ரெக்கார்ட் பண்ணிருக்கேன். உங்களுக்கும் அனுப்பறேன்.அவருக்கும் அனுப்பிச்சிட்டேன். எதுவா இருந்தாலும் அவர் வரட்டும்…, அவரை கேட்டுட்டு செய்யலாம்”, சொல்லி முடித்தாள்.
வீட்டில் வேளைக்கு ஆட்கள் வர… சமையல் அம்மாவிடம், தன் வீட்டினருக்கான பிடித்தங்களைக் கூறி… அதுபடி உண்டி தயாரிக்கச் சொல்லி.. குளிக்கச் சென்று விட்டாள். கைகளை இரண்டு கையுறைகள் கொண்டு மூடி இருந்ததால், தண்ணீர் படும் என்ற கவலை இல்லை. உதவிக்கு வருகிறேன் என்று சொன்ன அண்ணியையும் தவிர்த்து, தானே சமாளித்தாள்.
நேரம் சுமார் ஏழு நாற்பது எனும்போது, அவளது அறையில் போன் அடித்தது, வேகமாக வந்து எடுத்து “ஹலோ “, என்றதும்
“நங்கை..”…  ஒரு விளிப்பு… உயித்தெழ  வைக்குமா?, வைத்தது. “உங்கப்பாவ வர சொல்லி இருந்தேன் வந்துட்டாரா? “,
த்ரிவிக் மறுமுனையில்.. அவனது  குரலைக் கேட்டதும், நங்கைக்கு அப்படி ஒரு நிம்மதி…  கண்கள் தானாக கலங்க… தன் நலத்திற்காக.. அக்கறையோடு  வீட்டினரை வரவைத்துள்ளான்.
“என்னங………”, நங்கையின் தொண்டை கட்டிக் கொண்டு, குரல் வெளியே வர மறுத்தது.
“வீட்டுக்கு வக்கீல் ஒருத்தர் வருவாரு, சைன் பண்ணி அனுப்பு”,
“ம்ம்., வக்கீல் எதுக்கு? “, கேட்ட நங்கைக்கு ‘அவன் செத்துட்டானோ?’, என்று தோன்றியது. பதட்டமாக … “த்ரிவிக்…அந்த அவனுக்கு ஏதாவது ஆயிடுச்சா?”, என வினவ..
“இப்ப வரைக்கும் ஸ்டேபில் தான்,  ஹாஸ்பிடல்ல காலைல ஒரு தடவ முழிச்சிருக்கான்.  டாக்டர்ஸ் மானிட்டர் பண்றாங்க, ” என்றதும் அமைதியானாள்.
“உனக்கு வேற ஏதாவது கால் இல்ல வாட்ஸப் மெசேஜ் வந்ததா?”, என த்ரிவிக் துருவ…
“இல்லையே, ஒன்னும் வரல.. ஏன் கேக்கறீங்க?”,
த்ரிவிக், நேற்று இரவு நடந்ததையெலாம் பகிர்ந்து, “அந்த ஆள் யாருன்னு தெரில. ரியாஸோ / அமரோ வந்து சொன்னாகூட.. ப்ரூவ் பண்ண முடியாது, உனக்கு ஏதாவது யாராயிருக்கும்னு ஐடியா இருக்கா?”,கேட்டவன்..
சற்று யோசித்து … “ம்ப்ச். இல்லங்க..தெரில”, என்று நங்கை மொழிய..
ஒரு நீண்ட பெருமூச்சுடன், “டோன்ட் வொரி, எங்க போவான்? எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.. என் கைல மட்டும் அவன் கிடைக்கட்டும், அப்பறம் இருக்கு அவனுக்கு.. ” ஆறுதலாக ஆரம்பித்து வன்மமாக முடித்தான்.
அவன் பேசியத்தைக் கேட்டதும், இவளது கண்களில் கரகரவென கண்ணீர் வழிய…  நங்கையின் மன அலைப்புறுதல்களுக்கெல்லாம் ஒரே வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்து கணவனாய் நங்கைக்கு நிம்மதி அளித்தான்..”நீங்க ஏன் நைட்டே போன் பண்ணல?”, மேலும் அழுகையை அடக்கமுடியாமல் கேவல் கிளம்ப… பின்னே இரவில் எத்தனை மன அழுத்தம்?
“ஏய்… அழறியா என்ன?”, அதிர்ந்து கேட்டவனின்  மனம் பிசைந்தது. “ஏண்டா ?”,  தான் பேசாததால் வருத்தப்பட்டிருக்கிறாள் என்றுணர்ந்து குரல் தானாக கனிந்து வந்தது. “நான் நிறைய வாட்டி ட்ரை பண்ணினேன்டா, பிஸின்னு வந்தது, அப்பறம்  ரொம்ப அன்டைமா ஆயிடிச்சு. ப்ரஜன்.. மாத்திரை போட்டிருப்பாங்க, தூங்குவாங்க-ன்னு சொன்னானா, சரி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினச்சேன். ரியாஸைத் தேடி அலைஞ்சுட்டு காலைல அஞ்சு மணிக்கு தான் இங்க ஆபிசுக்கே வந்தோம், அசதில கொஞ்ச நேரம் தூங்கிட்டோம் போல., இப்போ முழிச்சதும் கால் பண்ணிட்டேன். சாரிடா”
மூக்குறிஞ்சியபடி… “ல்ல ..ஒண்ணுமில்ல..  ஏதோ ஸ்ட்ரெஸ்.. கொஞ்சம் எமோஷனாய்ட்டேன்”, சற்று நிறுத்தி, “நீங்க சீக்கிரம் வாங்க..”, தாய் மடி தேடும் பிள்ளையாய் நங்கை.
அப்படியே பறந்து அவளிடம் போகத்  துடித்த மனத்தைக் கட்டுப்படுத்தி, ” ஒரு லீட்-க்கு ட்ரை பன்றோம். கிடைச்சதும் வந்துடறேன். இவங்களே பாத்துப்பாங்க, பட் நானும் கூட இருந்தா நல்லாருக்கும்னு தோணுது. ஒரு சின்ன க்ளூ கிடைச்சா போதும்.. அவனை ‘ஏண்டா இப்படி பண்ணிணோம்’ன்னு ஓரொரு செகண்டும் நினைக்க வைக்கணும்.”, மனதின் தீ வார்த்தைகலாய் வந்தது. நெடுமூச்சுடன் “சீக்கிரம் வந்துர்றேன். ஓகே ? ”      
“ம்ம். ஓகே , வச்சிர்றேன். பை. “, அழைப்பைத் துண்டித்தாள். இந்த சில நிமிடப் பேச்சிலேயே, நங்கைக்கு யானை பலம் வந்திருந்தது.  கணவனின் அன்பிருந்தால் கடைக்கோடியிலும் வெல்லலாம். கொண்டவன் துணையிருந்தால் கூரையேறியும் சண்டையிடலாம். தெரியாமலா சொன்னார்கள்?
சிறிது நேரத்தில், “நல்லா.. வக்கீல் வந்திருக்கார், பாக்கணும்ங்கிறாரு, இருக்கச் சொல்லட்டுமா?”, அண்ணன் இவளது அறைக்கு வந்து கேட்டான். “ஆமாண்ணா, இப்போதான் அவர் போன்-ல சொன்னார். உக்காரைச் சொல்லுங்க. தோ வரேன்”
“இது தேவையாம்மா?, நான்தான் அடிச்சேன்னு, நான் சரண்டர் ஆயிடறேனே”
“ண்ணா, புரியாம பேசாதீங்க, நான் அடிச்சதை..  அங்க நிறைய பேரு பாத்திருக்காங்க, வீடியோ இருக்கு. அதுவுமில்லாம, இப்போ முன் ஜாமீனுக்குத் தான் அப்ளை பன்றோம். இதுவரைக்கும், எனக்கெதிரா யாரும் கம்ளைண்ட் பண்ணல. ஒரு சேஃப்டிக்குத்தான் இது. ஓகே ?”, என்றுவிட்டு கூடத்தில் காத்திருந்த வக்கீல் கொடுத்த ஆவணங்களில் கையெழுத்திட்டாள். பின் அவருக்கு காஃபி கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தாள்.
“மேடம் “… வாசலில் இருந்து செக்யூரிட்டியின் குரல் கேட்க… வெளியே வந்து,  அவரைக் கேள்வியாய் பார்த்தாள் .
அவரோ … தயக்கமாக மீண்டும் “மேம்”, என்க …
“என்ன விஷயம் சொல்லுங்க?”,
“வேற வேற ப்ளாக்கிற்கு விசிட்டர்ஸ் னு சொல்லி ரிப்போர்ட்டர்ஸ் உள்ள வந்திருக்காங்க,  த்ரிவிக் சார்ட்ட கால் பண்ணி கேட்டேன் அவங்கள வெளிய அனுப்பிடச் சொன்னாரு, ஆனா அவங்க கேட்க மாட்டேங்கிறாங்க.” என்க…,
நொடியில் நிலைமையை யூகித்தவள், பளிச்சென ஒரு யோசனை தோன்ற….
“நான் பேசிக்கிறேன் நீங்க போங்க”, என்றுவிட்டு அபார்ட்மென்டுக்கு கீழே குழுமி இருந்த அவர்களை நோக்கி சென்றாள். நங்கை வெளியே சென்ற வினாடியில் அறைக்குள் இருந்த அவளது அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.. அழைத்தவன் சாட்சாத் த்ரிவிக்ரமனே. ஹாலில் இருந்த அண்ணி, பேசியை எடுத்துப் பார்தது , “தம்பி, நங்கை வெளில போயிருக்கு போல.. வந்ததும் பேச சொல்றேன், ஏதாவது அவசரம்னா என்ட்ட சொல்லுங்க”,என்றார்.
மறுபுறம் த்ரிவிக், என்ன செய்வதென்று தெரியாமல், “சரி அப்பறம் பேசறேன்”, வைத்து விட்டான். உடனே கிளம்பினாலும், வீடு சென்று சேர எப்படியும் அரைமணி நேரமாவாது ஆகும். நங்கை தனியாக.. பத்திரிக்கையாளர்களை எவ்விதமாக எதிர்கொள்வாளோ? கவலை வர.. பிரஜனிடம் சொல்லிவிட்டு, கிளம்ப நினைக்க… அவனோ, தானும் உடன் வருவதாய் சொல்ல… இருவருமாக கிளம்பினர்.
நங்கையின் வீட்டிற்கு வெளியே …
“ஹலோ மேம்.. நேற்று வெளியான அந்த வீடியோ பத்தி உங்களோட கருத்து சொல்ல முடியுமா?”, என ஒரு நிருபர் கேட்க…
நிமிர்வாக.. நேர்கொண்ட பார்வையுடன் இளநகை முகத்தில் ததும்ப, ” வொய் நாட்? நல்ல கிளாரிட்டி நல்ல எடிட்டிங்”, என்று நிறுத்தி…. “உங்களுக்கெல்லாம் யாருனே தெரியாத என்னை ஓவர் நைட்ல ஃபேமஸ்  ஆக்கிருக்கே?”, இப்போது அவள் முகத்தில் முழு புன்னகை.
இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்காத நிருபர்கள்…, அவளை சற்று டென்ஷன் படுத்த, வரிசையாய் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தனர். அதுதானே அவர்களது தொழில் யுக்தி?
” மேம் அத பத்தி கேட்கலை, அதுல சொன்ன விஷயம் உண்மைதானா?”, என்று ஒரு நிருபரும்…
“நீங்க அடிச்ச ஆளு இப்போ ஹாஸ்பிடல் இருக்கான், நீங்க அடிச்சதுக்கு ஆதாரம் இருக்கு, ஆனா போலீஸ் உங்களை அரஸ்ட் பண்ணாம, அவன் மேல கேஸ் போட்டு ட்ரீட்மென்ட் க்கு அனுப்பி இருக்காங்க. காரணம் உங்க  செல்வாக்கா? “…. என இன்னொருவரும்…
“எதுக்கு அவரை அடிச்சிங்க?”.. என்று மற்றொருவரும்…. ஏக காலத்தில் கேட்க…
மாறா மிடுக்குடன் அதே புன்னகை தவழ.., “வெல். ஃப்ரண்ட்ஸ்…  நாங்களே ப்ரஸ்ஸைக் கூப்பிட்டு ஒரு அறிவிப்பு கொடுக்கணும்னு இருந்தோம். எங்க வேலையை ஈஸி ஆக்கிட்டீங்க.. என்ன விஷயம்னா .. எங்க ப்ளே ஸ்கூல் இன்னும் விரிவடையுது, அடுத்த அகடாமிக் இயர்ல டெல்லி சவுத் & நார்த் ல ரெசிடென்சியல் ஸ்கூல்ஸ் ஆரம்பிக்க போறோம். எங்களோட  அடுத்த இலக்கு எல்லாத்துறைகளையும்  உள்ளடக்கிய யுனிவர்சிட்டி, அடுத்த வாரம் அதுக்குண்டான வேலைகளை ஆரம்பிக்கறோம்.”, யோசித்து சொல்வது போலில்லாமல்.. தடங்கலின்றி தெளிவாக.. பெருமையாய் கூறினாள்.
நங்கையில் தொழிலை  முடக்கத்தானே எதிரி முயன்றான்? ஒளிந்திருந்து  தாக்குபவனை வெளிக்கொணர வேண்டுமே? அவனது பொறாமைத்தீயைத் தூண்டினால்….?  அது அவனை தவறான நடவடிக்கை எடுக்க வைக்கலாம் , அதுவே அவனை ஊருக்கு வெளிச்சம் போட்டும் காட்டலாம். த்ரிவிக் கேட்ட க்ளுவும் கிடைக்கலாம். கல்லெறிந்து விட்டாள், பழம் கிடைத்தால் வெற்றிதானே?
“உங்க நடத்தையைப் பத்தி ……”, நிருபர்கள்…
“தோழர்களே… என்னைப் பத்தி கேள்வி கேட்கவும், கவலைப்படவும் என் கணவர் , என் குடும்பம் இருக்கு. வேற யாருக்கும் அந்த உரிமையை நான் தர விரும்பல, அதை அவரும் விரும்ப மாட்டார்.”, பேச்சைச் சற்று நிறுத்தி, இடைவெளி விட்டு நிதானமாக…”உங்களுக்கான பதில்-ன்னா… இறை/பெண் குறித்த ஒரு கவிதை சொல்றேன்…
  செதுக்கி செதுக்கி சிற்பமானேன்…
        அனல் கக்கி குளிரானேன்..
  விஷம் உமிழ்ந்து அமிழ்தானேன்…
      நீர் பொழிந்து மேகமானேன்.
  சிறுகல் தூசியோ, சிற்பமோ, 
              அனலோ, குளிரோ, 
            விஷமோ, அமிழ்தோ 
                நீரோ, மேகமோ, 
               தேர்வு உன் வசம்..
நீங்க எப்படி எடுத்துகிறீங்களோ அப்படித்தான் நான்”, என்றவள் குறுநகையுடன்… “அதுக்காக என்ன வேணா எழுதலாம்னோ சொல்லலாம்னோ அர்த்தமில்லை… என்னை எனக்குத் தெரியும்ங்கிறதால,  என்னை எதுவும் பாதிக்காது, சோ, தப்பா எடுத்துக்க மாட்டேன்… ஆனா என் ஃபாமிலி … என்னோட வெல்விஷர்ஸ்.. அவங்களை… , அவங்க நடவடிக்கைகளை நான் ஒன்னும் செய்ய முடியாது.”, என்றுரைக்க… இவ்வாறு சிரித்துக் கொண்டே  மிரட்டல் விட இவளால் மட்டும்தான் முடியும், என்றுதான் தோன்றியது கேட்பவர்களுக்கு. …
“என்ன மேம் இன்டைரக்டா மிரட்ரீங்களா?”, ஒரு பெண் நிருபர் கேட்க…
“ஃபாக்ட்ஸ் சொன்னேன், அப்பறம் … உங்க இஷ்டம்”, “நம்ம வீடு வரைக்கும் வந்திருக்கீங்க… ஒரு பத்து நிமிஷத்துல பிரேக்பாஸ்ட் ரெடியாயிடும். ப்ளீஸ் சாப்ட்டுபோங்க.”
நங்கை நல்லாள்…..  நின்றாள்… பேசினாள்… (செ)வென்றாள். இது நேர்மையானவர்களின் நிமிர்வு. அஃதல்லாதோர்க்கு வராத ஓர் உடல்மொழி.
இதைக் காரில் வரும்போதே லைவ் டெலிகாஸ்ட்-டில் பார்த்துக்கொண்டிருந்த த்ரிவிக்கும், ப்ரஜனும்… ப்ரம்மித்தனர் என்றுதான் சொல்லவேண்டும். “தீதி … கலக்கிட்டாங்க “, காரை ஒட்டிய ப்ரஜன் கூறினான்.
“ஹேய்.. உன் தோஸ்த்துக்கு போன் போடு.. எனக்கோ இல்ல நங்கைக்கோ வர்ற கால்ஸ் ட்ராக் பண்ண சொல்லு.. “, த்ரிவிக் பரபரத்தான்..
“ஒவ் வாவ்.. விக்கிண்ணா… இது அவனுக்கான ட்ராப்-பா?, செம செம”, என்று உற்சாகமாக கூவ…
“மே பி…, “, என்று சிரித்தவன். “டேய் .. என்னை அண்ணா-ங்கிற… நங்கைய தீதிங்கிற?”, மேலும் சிரித்தான்.
அதற்குள் ப்ரஜன் கால் செய்திருந்தான். ரிங் போக, அடுத்தவனுக்கு விபரம் சொல்லி விட்டு… வீடு நோக்கி இருவரும் சென்றனர்.
பத்து நிமிடத்தில்… தெரியாத என்னிலிருந்து த்ரிவிக்ரமனுக்கு அழைப்பு வர, இருவரும் கூர்மையானர்கள். உடனடியாக ப்ரஜன் நண்பனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான். த்ரிவிக் எடுத்ததும், “ஏய்.. உன் பொண்டாட்டிக்கு அறிவே இல்லையா? அவ பேரே நாறிட்டு இருக்கு. ஊருக்கே பேட்டி குடுக்கறா? நாங்க ஸ்கூல் ஆரம்பிக்கப் போறோம், யூனிவர்சிட்டி ஆரம்பிக்கப் போறோம்னு.. ஒழுங்கு மரியாதையா.. எல்லாத்தையும் மூடிட்டு ஊருக்குப் போகச் சொல்லு… இல்ல.. தினமும் அவளைப்பத்தி ஒரு வீடியோ ரிலீஸாகும்”, படபடவென பொரிந்தான் அந்த முகம் காட்ட பயந்து, முதுகில் தாக்கும் கோழை.
நங்கையை ஒருமையில் பேசும் அவனது குரல்வளையை நெறிக்க ஆசை வந்தது விக்ரமனுக்கு. ஆனால் .. “என்னது? பேட்டி குடுக்கறாளா?” அதிர்ச்சியாக காண்பித்துக் கொண்டான்.
“ஆமா… இப்போதான் பேசி முடிச்சா. என்னவோ பிளே ஸ்கூல் எக்ஸ்பான்ஷனாம்,  யூனிவர்சிட்டி கட்டப் போறாளாம்…….. ,  …………………. “, இரண்டு நிமிடத்துக்கு மேல் இடைவிடாது பொருமினான். இவர்களுக்கும் அவன் அதிகம் பேச வேண்டும், அப்போதுதானே அவனது அலைபேசி சிக்னலை வைத்து அவனைப் பிடிக்க முடியும்?
அதற்குள் பிரஜனின் மொபைல் மெசேஜ் வந்திருப்பதாய்க்காட்டி  ஒளிர…, “ஒற்றை கட்டை விரல்” வந்தது. பார்த்த இருவரும் புன்னகைத்தனர்.
அரிவை அறிவான்….

Advertisement