Advertisement

AVAV – 12 2
நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது… தீயை ஒத்த கண்களுடன்… தலை கலைந்து, அணிந்திருந்த ஆடை… பாதி வியர்வையிலும் பாதி குருதியிலும்  நனைந்திருக்க மூச்சு வாங்கியவாறு., மிக மிக ஆவேசமாக நங்கை இருப்பதும், அவளைச் சுற்றி சிறு கூட்டம் சேர்ந்திருப்பதும் தெரிய… அவளை நோக்கி விரைந்தான்.
அங்கோ… அக்காமுகனை அத்தனை அடித்தும்  இன்னமும் ஆத்திரம் அடங்காதவளாய் நின்றாள் நங்கை. சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணில், ஒருவன் கணினி பையுடன் அருகே நிற்பது தெரிய… அவனிடமிருந்து அதைப் பிடுங்கி, கீழே விழுந்திருந்தவனின் தலையில் போட எத்தனித்து, “உன்னையெல்லாம் உயிரோடவே விடக்கூடாதுடா நாயே”, கடித்த பற்களிடையே நறநறத்து கூறி, அவன் தலையில் போடப்போக.. “தீதி …”, உரத்து கூறியவன், அவள் கையைப் பிடித்து இழுத்து தடுத்திருந்தான். கூடவே, “அவன் மேலேருந்து காலை எடுங்க , என்ன பண்றீங்க  நீங்க? , இவ்வளவு கூட்டத்துல செத்து கித்து தொலைச்சான்னா என்ன ஆறது?”, என்று கடிந்தான்.
ப்ரஜனை பார்த்த நங்கைக்கு  அவன் கேட்ட கேள்வி.. மனதில் பதியவே சற்று நேரம் பிடித்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்பொழுதுதான்… தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், காலை அந்த பாதகன் மேலிருந்து எடுத்தாள்.
ப்ரஜன் குரலைக் கேட்டபின்னர் தான் அவளுக்கு தான் வீதியில் போட்டு ஒருவனை அடித்துள்ளோம் என்பதை உணர்ந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தவள், அவளைச் சுற்றி கூட்டமாய் மக்கள் இருக்க… வேடிக்கை பொருளானோமே… என்ற வருத்தம் வந்தது. நங்கைக்கு…. உடலின் வலு அனைத்தும் வடிந்தாற்போல், வெறும் கூடாகி விட்டதுபோல ஒரு உணர்வு. அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் அளவாகக் கூட பேசாதவள், அமைதியானவள் என்று வரையறை இவளுக்குப் பொருந்தாது ஆயினும், காட்சிப்பொருளாய்  அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதில் விருப்பம் இல்லாதவள். அவளது குடும்ப அமைப்பும் அவ்வாறே. ஆனால் இன்றோ..? கீழே கிடந்தவனோ பேச்சு மூச்சின்றி கிடந்தான். ஒருவேளை இறந்து விட்டானோ? என்ற சந்தேகம் வந்தது.
கைகள் பிசுபிசுக்க, என்னவென்று குனிந்து பார்த்தாள்.  இரண்டு கைகளிலும் ரத்தம் வழிந்து அது பாதி காய்ந்திருந்தது. அடிப்பதற்காக எடுத்த கட்டையில் ஆணிகள் வரிசையாக இருந்தது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.  திடீரென உண்டான பிரச்சனையில், அச்சிறுமியை பாதுகாப்பாய் மீட்பது மட்டுமே எண்ணமாயிருக்க, அவளைக் கண்ட மாத்திரத்தில் அகுழந்தை  இருந்த நிலையோ…?  கடத்தியவனின் கயமையும், அவன் தப்பிச்செல்ல முயன்றதும், அவளை வெகுண்டெழ வைத்தது.  அந்நேரத்தில் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கி.. அவனை வீழ்த்துவதிலேயே குறியாகிப்போனாள். தனது மொத்த சக்தியையும் விட்டிருக்க, அவளது வலிகளை உணரவேயில்லை. இன்னமும் அந்த நிகழ்வுகளின் தாக்கம், படபடப்பு..  உடலுக்கும் மனதுக்கும் இருந்தது. விளைவு… நடக்க முயன்ற நங்கைக்கு கால்கள் தள்ளாடியது.
கால்கள் பின்ன.. களைத்த விழிகளுடன் இருந்த அவளைப் பார்த்த ப்ரஜனுக்குமே மனது பிசைந்தது. எத்தனை ஆளுமையான பெண்?, இப்போது எப்படி இருக்கிறாள்? என்ற நினைவு. “ஒன்னும் இல்ல.. வாங்க  வீட்டுக்குப் போகலாம்”, என்று அவளை தன் தோளோடு அணைத்தவாறு தாங்கி நடக்க …
கழிவில் ஊரும் புழுவைப் போல தரையில் கிடப்பவனை ஒரு பார்வை பார்த்து…, “இவனை……?,” என பிரஜனிடம் கேட்க…
“பக்கத்து ஸ்டேஷன்லேர்ந்து இன்ஸ்பெக்டர் வர்றார். என் ஃப்ரெண்ட் அவர் கிட்ட பேசிட்டான். ஏதாவது கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவாங்க”, என்று பேசியவனுக்கு ‘அதுக்கு முதல்ல அவன் உயிரோட இருக்கணும்’ என்ற நினைவில் மனம் பதைத்தது. காரணம் அடி வாங்கியவன் வேரற்ற மரம் போல் கிடந்தான். ஒரு சின்ன அசைவுமில்லை. சுற்றிலும் இத்தனை கூட்டம் வேறு, என்னாகுமோ என பயமாய் இருந்தது, என்னதான் காவல்துறையில் நண்பனிருந்தாலும், நங்கை அடித்ததை இக்கூட்டமே அல்லவா வேடிக்கை பார்த்திருக்கிறது? கலக்கத்தினை வெளியே காண்பிக்காமல் நடந்தான்.
இது தற்செயலாக நடந்த நிகழ்வாய் அவனுக்கு தோன்றவில்லை, த்ரிவிக்ரமன் ஊரில் இல்லையென்பதையும், சிறுமியின் பெயர் தெரிந்துகொண்டு .. எந்த நேரம், எப்படி அழைத்தால் அக்குழந்தையை விடுவார்கள் என்பதையும் கணக்கிட்டு, அதே நேரத்தில் அச்சிறுமியின் அம்மாவின் கைபேசியை களவாடி… என அனைத்தும் மிக நன்றாக ஆற அமர திட்டமிடப்பட்ட செயல்களே.  இது இங்கிருக்கும் ஒருவன் மட்டும் செய்த செயலாக இருக்க முடியாது. இத்தோடு நிற்குமா, இல்லையெனில்.. அந்த முகம் காட்டா எதிரிகளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்..? நண்பனிடம் கூறி, தீர விசாரித்து, யாருடைய வேலை இது என்று அறிந்து,.. அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலவாறாக யோசித்தான்.
நங்கை சற்று ஆசுவாசமானதும் உடனடியாக இது குறித்து பேச நினைத்தான். நடந்தவாறே “கார் சாவி கொடுங்க”, என்று நங்கையிடம் கேட்க,  அவளோ மலங்க மலங்க விழித்தாள், அவள் வந்த வேகமென்ன? அவசரமென்ன? வண்டியிலிருந்து சாவி எடுக்கும் அளவிற்கா அவளது எண்ணவோட்டம் இருந்தது?  காரின் கதவையே மூடினாளா இல்லையா என்பது தெரியாது, இதில் சாவியை எங்கே?
தெரியாதென்று இடவலமாய் தலையை ஆட்டினாள்.
“ம்ஹூம்…… “, பெருமூச்சோடு கூடி இருந்த மக்களைத் தாண்டி சென்றவனின் காதுகளில்,
          “பொண்ணுன்னா அடக்க ஒடுக்கம் வேணும். எப்படி பஜாரி மாதிரி அடிக்கிறா பாரு?”,
           “அவ மதராஸி, கல்யாணமானவ.. கூட போறவன் நம்மூர்காரன்… என்ன கசமுசாவோ யாருக்கு தெரியும்?”,
என்பதைப் போன்ற பேச்சுக்கள் .. இவர்கள் கடந்ததென்னவோ நாற்பதடி கூட இல்லாத தூரம்…. அதற்குள் இப்படியான அனுமானங்கள். காதில் விழும் அவச்சொற்களைக் கேட்ட ப்ரஜன்…  ஐயோ என்றானது. நங்கை அந்தக் கயவனை அடிக்கும்போதுதானே கூட்டம் கூடியது? அதற்கு முன் நிகழந்தவைகளைத்தான் மூன்றாம் பேருக்குக் தெரியாமல் அவள் மறைத்திருந்தாளே? ப்ரஜன் திரும்பி நங்கை முகத்தைப் பார்க்க.. அவள் முகமோ தீவிர சிந்தனையில் இருந்தது, பார்த்தவனுக்கு  ஓரளவு நிம்மதி.
இச்சமூகத்தில் … பெண் என்பவள் எப்போதும் பேசுபொருள்தான், யார் வேண்டுமானாலும், எவ்விதமாகவேனும், உண்மையோ பொய்யோ, உள்ளதோ அல்லதோ எதுவாயினும் பேசலாம். எதிராக தட்டிக் கேட்டால், வரும் ஒரே பதில் “நீ ஏன் மற்றவர்கள் பேசுவது போல் நடக்கின்றாய்?”, என்பதுதான். முதலில் அவளை…. அவள் பின் புலத்தை, அவள் நடத்தையைக் கூறுபோட்ட பின்னர் தான் நிகழ்வுகள் ஆராயப்படும். முடிவென்னவோ ஒன்றுதான். இருக்கிறதோ இல்லையோ என்ற வதந்தி ஆரம்பிக்கப்படும், பின் அதுவே திரிந்து அப்படித்தான் போல என்று பரவும்.
இவ்வாறான பழிகளுக்கு பயந்தே, வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் / முடக்கப்படும் பெண்கள் எத்தனை கோடியோ?
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”, என்ற பாரதியின் வார்த்தைகள்… இன்றுவரை கனவாகவே உள்ளது. இருபத்தியோறாம் நூற்றாண்டு… விஞ்ஞான சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் உச்சத்தில் உள்ள காலமல்லவா? கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும், மனிதர்கள்/சொந்தங்கள் தொடர்பில் இருக்கவென, கண்டுபிடிக்கப்பட்ட  அலைபேசி எனும் சாதனம், புல்லாங்குழல்  அடுப்பூத பயன்படுவதைப்  போல… தன் சுயம் மறந்து…  புறணி பேசத்தான் கண்டுபிடிக்கப்பட்டதோ என எண்ணும் அளவிற்கு…  தற்போது அதில் ஹேஷ்யங்களே பிரதானமாய்.
ஹும்ம்ம்… நல்லவேளையாக நங்கை இதையெல்லாம் உள்வாங்கும் மனநிலையில் இல்லை, ஊராரின் பார்வை துளைப்பதை மட்டுமே உள்ளுணர்வு உணர்த்தியது, அதைக்கூட புறம் தள்ளி….  அப்பெண்பிள்ளை மட்டுமே அவளின் சிந்தனையில் இருந்தாள்.  அவர்கள் வீட்டில் இந்நிகழ்வை எவ்விதமாய் எடுத்துக் கொள்வார்களோ?, மனதளவில் அக்குழந்தையை முடமாக்கி  விடுவார்களோ?, என்பதுபற்றி சிந்தனை ஓடிக் கொண்டு இருந்தது.
இருவரும் காரின் அருகில் சென்றதும், சாவி காரிலேயே பொருத்தியவாறு இருந்ததைக் கண்ட ப்ரஜன், நொடியில் வண்டியை எடுக்க, நேரம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்றான். துருப்பிடித்த ஆணிகளால் ஏற்பட்ட காயம் அல்லவா, அவ்வாறே விட்டால் செப்டிக் ஆகும் வாய்ப்புள்ளதால் நேரே மருத்துவமனை விரைந்தான்.
சிகிச்சைகள் முடிந்த பின், அவர்கள் வீடு சேர்வதற்குள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. வீட்டினைப் பார்த்த நங்கைக்கு, காலையில் தான் இங்கிருந்து அலுவலுக்குச் சென்றோமா? என்பதுபோல தோன்றியது. ஏதோ ஒரு யுகம் கடந்து வீடு வந்ததைப்போல் இருந்தது. மருத்துவமனையில் இரண்டு கைகளிலும் கட்டு போட்டு விட்டிருந்தனர்.  நங்கையிடம் கேட்டு, வீட்டு  சாவியை வாங்கி(அது ஆட்டோமேட்டிக் லாக் என்பதால், தானாகவே பூட்டிக் கொள்ளும்), ப்ரஜன் வீட்டைத் திறந்து மின்விளக்கை உயிர்ப்பித்தான். நங்கைக்கு கைகளில் ட்ரெஸ்ஸிங் செய்யும்போதே, அவள் இரவில் சாப்பிடுவதற்கென உணவினை பார்சல் செய்து ஹோட்டலிலிருந்து வாங்கி வந்திருந்தான்.
இப்போது நங்கை சற்று தெளிந்திருந்தாள்.  ஒரு நெகிழ்ச்சியான முக பாவத்துடன், “ரொம்ப தேங்க்ஸ் பிரஜன். நிஜமா.. இன்னிக்கு நீங்க இங்க இல்லன்னா என்ன ஆகியிருக்குமோ தெரியாது. தேங்க்ஸ்ங்கிறது ரொம்ப சின்ன வார்த்ததான். பட்.., வேற சொல்ல தெரில.”, என குரல் தழுதழுக்க சொன்னவள்…, “அவர் இருந்திருந்தா கண்டிப்பா உங்கள தொந்தரவு பண்ணி இருக்க மாட்டேன். I seriously don’t know how to express my gratitude”, என்க…
“ஹோ… தீதி, நமக்குள்ள இதெல்லாம் தேவையில்ல, சோட்தோ”, என்றுரைத்து.. “ஆங்… நான் த்ரிவிக்குக்கு கால் பண்ணி மேட்டர் என்னன்னு சொல்லிட்டேன், ரொம்ப டீட்டெயிலா சொல்லலை. அதுக்கே ரொம்ப டென்ஷானாகிட்டார். இந்நேரம் அவர் வந்திட்டு இருப்பார்-னு நினைக்கிறேன்”.
“ஓ !!…”, என்று புருவம் உயர்த்திய  நங்கையின் மனதில்… பயமா? அலைப்புறுதலா? என இனம் காண இயலாத ஓர் உணர்வு , த்ரிவிக் என்ன சொல்வானோ?  திரிவிக்ரமனின் இல்லாளாக மனம் குழம்பினாள். இவள் சம்பந்தப்பட்ட விஷயம் மூன்றாம் நபர் மூலமாக அல்லவா அவனைச் சென்றடைந்தது? எப்படி எடுத்துக் கொள்வான்? என பலவாறான சிந்தனைகள். எதுவாகிலும் கணவன் என்றும் என்னுடன் பக்கபலமாய் இருக்கவேண்டும் என்பதாக, ஒரு சாதாரண மனைவியின் அலைப்புறுதல் இருந்தது. கோடி பேர் கூட வரினும் கொண்டவன் போல் வருமா என்ன?
“ஓகே நான் வீட்லேர்ந்து அண்ணிய அனுப்பிவைக்கிறேன், அதுவரைக்கும் நீங்க பாத்துக்குவீங்களா? கிளம்பட்டா?” என்ற பிரஜனிடம்…..
“இல்லல்ல…  ப்ளீஸ் வேணாம், அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க. நானே பாத்துப்பேன்.விரலெல்லாம் நல்லா அசைக்க முடியுது. ஐ வில் டேக் கேர். நீங்க நைட் சாப்பாடு வாங்கி குடுத்துடீங்க, இனி சாப்பிட்டு படுக்கறதுதான். தவிர அவரும்  வந்துடுவாரு சொன்னீங்க, யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே”, என்று சற்று தன்மையாகவே கூறினாள். அவள் கூறியதைப் போல உள்ளங்கை மற்றும் விரல்களின் அடிப்பகுதியில்தான் ஆணிகள் அழுத்தமாக இறங்கி இருந்தன. விரல்களின் மேற்புறத்தில் பாதிப்பு சற்று குறைவே.
“ம்ம்ம்..”, என்று சிறிது யோசித்து.. “ஓகே தீதி, நான் நாளைக்கு வர்றேன். பை. “, என்று விடைபெற்றான். வெளியே நன்றாக இருட்டி இருந்தது. நங்கை உடல் அசதியைதர .. கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து ஆசுவாசமாய் அவளது அலைபேசியை எடுத்து திரிவிக்கிரமன் நம்பருக்கு அழைத்தாள். “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு உள்ளார்.” என்று பதில் வந்தது… “ம்ப்ச்…”, சலித்தவள்….  கீழே வைக்கப்போக.. சரியாக அதேநேரம் வாட்ஸ் அப்பில் இருந்து ஒரு செய்தி வந்திருப்பதாக ஒளிர்ந்தது. … மெதுவாக அதை திறந்து பார்த்தவளது அதிர்வினை… உலகில் உள்ள எந்த ரிக்டர் அளவுகோல் கொண்டும் அளக்க முடியாது.
“கள்ளக்காதல் அதன் உச்சம் தொட்டது. தட்டி கேட்டவனின் அவல நிலை”, என்ற கொட்டை எழுத்தோடு, இரண்டு மணி நேரம் முன் நடந்தவைகள்.. தெளிவாக ஆங்காங்கே தணிக்கை செய்யப்பட்டு தெளிவாக, நங்கை ஒருவனை அடிப்பதும், ப்ரஜன் அவளைத் தோளோடு அணைத்தவாறு கூட்டிச் செல்வதும், நங்கை த்ரிவிக்ரமன் இருவரின் திருமண புகைப்படமும் இருந்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டு இருந்தது. விழிகள் நிலை குத்த பதினைந்து நொடிகளே ஓடிய அந்த வீடியோவினை பார்த்த நங்கைக்கு,  சட்டென உலகத்தின் இயக்கமே  நின்றுவிட்டது போல தோன்ற…. ஸ்தம்பித்திருந்தாள்

Advertisement