“நம்பெருமாள்…” நகை மாளிகை குழுமத்தின், ஒற்றை இளவரசி நான்கு அண்ணன்களுக்கு அடுத்து கடைசியாய் பிறந்த பவஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா, சீரும் சிறப்புமாய் நடந்துகொண்டு இருந்தது.
திருச்சி மாநகரின் அத்தனை பெரிய தலைகளும், வந்து வாழ்த்தி, பரிசுகள் கொடுத்துவிட்டு சென்றபடி இருக்க, வந்தவர்கள் அனைவரின் கேள்வியுமே ஒன்றாகவே இருந்தது.
அது “அச்சுதன் இன்னும் வரவில்லையா?” என்பதே.
“தம்பி வேற ஒரு முக்கியமான வேலையா போயிருக்கான்…”
“அச்சுதன் அண்ணா வந்திட்டு இருக்கார்…”
“அச்சுதன் மாமா இப்போதான் வந்ததுட்டு போனார்…” என்று இப்படி ஆளுக்கு ஒரு பதிலாய், கேள்வி கேட்பவரிடம் சொல்லிக்கொண்டு இருக்க,
அச்சுதனின் அம்மா நீலவேணியோ, உங்களின் யாரின் கேள்வியும் என்னை அசைக்காது எனும்விதமாய், விழாவை தலைமை தாங்கி நின்றிருந்தார்.
பின்னே நம்பெருமாள் நகை மாளிகை குடும்பம் அண்ணன் தம்பி மூவருக்குச் சொந்தம். அதில் மூத்தாரின் மனைவி தான் நீலவேணி. திருச்சியிலேயே மொத்தம் மூன்று நகை கடைகள் உண்டு. அதுபோக தஞ்சை, கும்பகோணம், சென்னை என்று இவர்களின் நகை கடைகள் இல்லாத முக்கிய நகரங்களே இல்லை எனலாம்.
அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்டவர் நீலவேணியின் கணவர் ஸ்ரீதரன். நீலவேணி ஸ்ரீதரன் தம்பதிகளுக்கு ஒரே மகன். அவன் நம் நாயகன் அச்சுதன்.
“கிளம்பிட்டான் சுமி… வந்திடுவான்…” என்றவர் “தட்டு கணக்கு சரியா இருக்கான்னு பாரு.. ஒத்தப்படை வர்றது போல வைக்கணும்.. இரட்டை படைல இருக்கு.. ஒன்னு கூடச் சொல்லு.. இல்லை ஒன்னு கம்மி பண்ணச் சொல்லு…” என்று சொல்ல,
“ஓ! சரிக்கா நான் கவனிக்கல…” என்று வேகமாய் தன் அண்ணன் அண்ணியிடம் சொல்லச் சென்றார் சுமிதா.
சுரேந்திரன் மூன்றாவது தம்பி. அவரின் மனைவி தான் சுமிதா. இவர்களின் செல்வ சீமாட்டி தான் பவஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு அர்ஜூன்.
ஸ்ரீதரனின் இரண்டாவது தம்பி தாமோதரன். அவரின் மனைவி பாமினி. அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் பிரகாஷ் மற்றொருவன் பிராச்ந்த்.
இவர்கள் இருவரும் பந்தியில் இருப்பவர்களை கவனிக்க வேண்டு சென்றுவிட, மூத்தவர்கள் எல்லாம், விழாவிற்கு வரும் சொந்த பந்தங்களை கவனித்துக்கொண்டு இருக்க, மேடையில் பவஸ்ரீக்கு பக்கத்தில் பிரகாஷின் மனைவி அனிதா இருக்க, இவர்கள் அனைவருக்கும் மூத்தவரான நீலவேணி சற்று தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.
மேடைக்கு வருவபர்கள் எல்லாருமே, முதலில் அவரிடம் ஒரு முகமன் தெரிவித்தே, பின் பவஸ்ரீயை வாழ்த்திச் செல்ல, நீலவேணிக்குமே இன்னும் மகனைக் காணோமே என்று இருந்தது.
இத்தனை பேர் இருந்தும், அவருக்கு என்று இருக்கும் அவன் ஒருவன் வரவில்லை எனில், இந்த கூட்டத்தில் அவர் தனியொருவர் தானே.
மகனுக்கு அழைப்பு விடுத்து பார்க்க “வந்துட்டு இருக்கேன் ம்மா…” என்ற பதிலே இப்போதும் வந்தது.
“சீக்கிரம் அச்சுதா…” என,
“ம்ம்ச்…” என்ற ஒரு கடுப்புடன், அழைப்பு துண்டிக்கப்பட, இவை அனைத்தையுமே வேடிக்கைப் பார்த்தபடி, மேடைக்கு கீழே முதல் வரிசையில் இந்த கூட்டத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே என்ற உணர்வில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அனிதாவின் தங்கை..
“ஏன் டி இப்படி உம்முன்னு இருக்க?” என்று அவளின் அம்மா ரோஜா, மகளை லேசாய் கிள்ள,
“ம்ம்ச் ரோஸ்.. நேத்து தான் நான் வந்தேன். இன்னும் ஜெட்லாக் கூட போகல.. நீ இப்படி என்னை அலங்கார பொம்மை போல அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வந்து உட்கார வச்சிட்டு, உம்முன்னு இருக்கன்னு கேள்வி வேற..” என்று நீளமாய் அம்மாவை கடிய,
“ஷ்..! எல்லாம் உன்னைத்தான் பாக்குறாங்க அர்ச்சு. நீ உள்ள வரும்போதே பார்த்த தானே எத்தனை பேர் வந்து உன்கிட்ட பேசினாங்க அப்படின்னு. சம்பந்தி வீடு டி. நம்ம வராம யார் வருவா?” என்று கேட்க,
“நம்ம இல்ல.. நீங்க.. நீயும் அப்பாவும் வந்துட்டு போயிருக்கலாம்.. என்னை வீட்ல விட்டிருக்கலாம்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,
அனிதா மேடையில் இருந்தபடியே தன்னோடு வந்து நில்லு என்று தங்கையை அழைக்க,
“அ.. அத்.. பெரியத்தை…” என்றாள் வேகமாய்.
“என்ன உன் தங்கச்சியை கூப்பிடுறியா?” என்று சொல்ல,
“அ.. ஆமா பெரியத்தை…” என்றாள் மிக பவ்யமாய்.
“கீழ போய் கூட கூட்டிட்டு வா. இப்படி மேல நின்னுட்டு சைகை பண்ணிட்டு இருக்காத.. எல்லாரும் பாக்குறாங்க பாரு…” என்று அழுத்தமாய் சொல்ல, மறுபேச்சு இன்றி மேடையில் இருந்து இறங்கியவள் தங்கையின் முன்னே வந்து நிற்க,
“என்னக்கா?!” என்றாள் அர்ச்சனா.
“என்னோட வந்து நில்லு அர்ச்சு.. ப்ளீஸ்..” என,
“ஏன்? இது உங்க வீட்டு விசேசம். நீ நில்லு..” எனும்போதே,
“அனிதா என்னாச்சும்மா? என்ன இறங்கிட்ட? பாரு பவஸ்ரீ தனியா இருக்கா…” என்று வந்துவிட்டார் பாமினி.
“அது.. அது அத்தை.. அர்ச்சனா…” என்று அனிதா பேச ,
“ஓ! அர்ச்சனாவை கூப்பிட வந்தியா. அக்காவும் தங்கச்சியும் ஜோடியா நின்னா நல்லாத்தான் இருக்கும். நம்ம வீட்ல பாரு பொண்ணுங்களே இல்லை. போம்மா அர்ச்சனா போ.. அனிதாவோட நில்லு…” என்ற பாமினி
“அண்ணி நீங்க ஏன் இங்க உக்காந்து இருக்கீங்க என்னோட வாங்க..” என்று ரோஜாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட, அர்ச்சனா வேறு வழியே இல்லாமல் அனிதாவோடு மேடை நோக்கிச் செல்ல,
“மேடை ஏறினதும், பெரியத்தை கிட்ட நின்னு ரெண்டு வார்த்தை பேசிடு…” என்று அனிதா காதினில் கிசுகிசுக்க,
‘போங்கடா நீங்களும் உங்க பந்தாவும்…’ என்று அர்ச்சனா வாய் விட்டுத்தான் சொல்லவில்லை.
மற்றபடி முகத்தினில் அதனை அப்படியே வெளிப்படையாய் காட்டிக்கொண்டு தான் மேடை ஏறிட, அவள் ஏறும்போதே அவளை எடை போடுவது போல் பார்த்த நீலவேணி “என்னம்மா வெளிநாடு வாசம் முடிஞ்சதா?” என்றார் புன்னகையோடு.
கண்ணை உறுத்தாத நிறத்தில் பட்டுச் சேலை கட்டி, சின்னதாய் ஒரு வைர அட்டிகை மட்டும் போட்டு, பார்ப்பதற்கு ‘ரிச் & சிம்பிளாக..’ வந்திருந்தவளை பார்த்தவருக்கு ஒரு நல்ல அபிப்ராயமே வந்திருந்தது.
“ஆமா ஆன்ட்டி… நீங்க எப்படி இருக்கீங்க?” என்று வரவழைத்த புன்னகையோடு அர்ச்சனா பதில் பேச,
“நல்லா இருக்கேன் ம்மா.. நேத்து தானே வந்த.. ஜெட்லாக் கூட போயிருக்காது. அதான் டல்லா இருக்கியோ?” என்று அவள் கீழே அம்மாவிடம் புலம்பியதை, இவர் கேட்க,
விழிகள் விரித்தவள் “ஐம் ஆல்ரைட் ஆன்ட்டி…” என்று சொல்ல, அனிதா தான் இவர்கள் இருவர் பேசுவதையும் பே என்று பார்த்து இருந்தாள்.
அனிதா – டிப்பிக்கல் மருமகள்.
பின்னே அவளுக்கும் பிரகாஷிற்கும் காதல் திருமணம். அச்சுதன் இருக்கையில் பிரகாஷிற்கு எப்படி முடிப்பது என்று குடும்பத்தில் அனைவரும் தயங்க, அனிதாவின் வீட்டிலோ, முதல் பெண்ணுக்கு இப்போது முடித்தால் தான் அடுத்து சின்னவளுக்கும் முடிக்க முடியும் என்று வரன்கள் பார்க்க ஆரம்பித்து இருக்க, அனிதாவோ பிரகாஷிடம் தினமும் சண்டை தான்.
அர்ச்சனா – அனிதாவின் அப்பா, கார்மேகன். நல்ல மனிதர். சிறந்த தொழிலதிபரும் கூட. அவருக்குச் சொந்தமாக திருச்சியில் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் இருக்க, அதுபோக தனியாய் கன்ஸ்ட்ரக்சன் கம்பனி ஒன்றும் வைத்திருந்தார்.
“அச்சுதன் அண்ணாக்கு முடியாம, எனக்கு எப்படி கேட்கிறது?” என்று பிரகாஷ் அனிதாவை சமாதானம் செய்ய,
“உங்க அண்ணன் கதை தான் இந்த ஊருக்கே தெரியுமே. அவர் இப்போதைக்கு கல்யாணமும் பண்ண மாட்டார்…” என்று பதிலுக்கு அனிதாவோ சண்டை.
இவர்களின் சண்டை நடந்தது என்னவோ கார்மேகத்திற்கு சொந்தமான ஒரு ரிசார்ட்டில் தான். நகை கடை விளம்பர ஷூட்டிங் என்று இவர்கள் எல்லாம் அங்கே வந்திருக்க, அனிதா அங்கே வந்துவிட்டாள்.
இவர்கள் இருவரின் பேச்சும், அச்சுதன் கண்ணில் பட, நேராய் சித்தப்பா தாமோதரனிடம் பேசிவிட்டான் “எனக்காக பார்க்க வேணாம். பிரகாஷிற்கு முதல்ல முடிங்க…” என்று.
அதன்பின்னரே இவர்களின் திருமணம் வெகு விமர்சையாய் ஓராண்டு முன்புதான் நடந்திருந்தது. அதுவும் திடீரென்று ஏற்பாடாகி இருக்க, அக்காவின் திருமணத்திற்கு கூட அப்போது அர்ச்சனாவால் வரமுடியவில்லை.
சொல்லப்போனால், அர்ச்சனா இங்கேயே இல்லை. அமெரிக்காவில் இருந்தாள். அவளின் மேற்படிப்பிற்காக அங்கே சென்றிருந்தாள். பி ஆர்க் இங்கே முடித்தவள், மேற்படிப்பை அங்கே படிக்கவேண்டும் என்று சொல்ல, அமெரிக்காவில் தான் ரோஜாவின் தங்கை முல்லை வசிப்பதால், இவர்களும் அனுப்பிவிட்டனர்.
சென்றவள் மூன்றாண்டுகள் கழித்துதான் வந்தாள். அக்காவின் திருமணத்திற்கு கூட வர முடியவில்லை.
அனிதாவிற்கு அதெல்லாம் மனதினில் இல்லை. தங்கை அவளுக்கு பிடித்த படிப்பிற்காக சென்றிருக்கிறாள். நான் எனக்கு பிடித்த வாழ்கைக்காக காத்திருக்கிறேன் என்கிற நிலையில் இருக்க, தொழில் முறையில் கொஞ்சம் இரண்டு குடும்பங்களுக்கும் பழக்கம் என்றாலும், கார்மேகத்திற்கு கொஞ்சம் யோசனை தான்.
“ப்பா.. ப்ளீஸ் ப்பா..” என்று அனிதா வீட்டினில் பேசும்போதே, தாமோதரன் பேசிவிட்டார் பெண் கேட்டு.
அப்போதும் கூட கார்மேகம் “வீட்ல பேசிட்டு, யோசிச்சு சொல்றோம்..” என்றான் சொன்னார்.
மாப்பிள்ளையும், அவர் குடும்ப பின்னணியும் திருப்தி என்றாலுமே கூட உடனே சம்மதம் சொல்லவில்லை. இரு பெண் பிள்ளைகளும் தான் தங்களின் வாழ்விற்கான அர்த்தம் என்று இருப்பவர். என்னவோ மகள் காதல் என்று வந்து நின்றதுமே சிறிது ஏமாற்றமே..
ஆனால் அர்ச்சனாவோ அப்பாவிடம் “ஏன் ப்பா.. இதே மாப்பிள்ளை நீங்க பார்த்திருந்தா எல்லாம் உடனே பண்ணிருப்பீங்க தானே…” என்று பேச,
“அதுக்கில்லடா.. அவங்க ஆளுங்க நிறைய.. ஒரு சின்ன விசயம்னா கூட எல்லாரும் கூடி நிப்பாங்க.. அனிதா எல்லாத்துக்கும் இழுத்து பிடிக்கணும். நம்ம வீட்ல சொகுசா வளர்ந்துட்டா…” என்று சொல்ல, அப்பாவின் கோணமும் சரிதான்.
ஆனால் இறுதியாய் காதல் வெல்ல, திருமணமும் நடந்தது.
அனிதா பல கனவுகளோடு கணவன் வீட்டினில் கால் பதிக்க, அங்கே கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள், வேலைகள், மருமகளாய் அவளின் பொறுப்புகள் என்று எல்லாம் மூச்சு முட்ட வைக்க, அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கவே இன்னமும் அவள் அலைமோதிக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால் அர்ச்சனாவோ மிக மிக இயல்பாய் நீலவேணியோடு நின்று பேச, அனிதா அதிசயமாய் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“சரிம்மா போய் பவஸ்ரீ கிட்ட நில்லுங்க…” என்று நீலவேணி இருவரையும் அனுப்ப,
“ஹாய்…” என்று ஒரு புன்னகை சிந்தி, அர்ச்சனா பவஸ்ரீயை பார்த்து பேச,
“ஹாய் சின்ன அண்ணி…” என்று அவளும் பதிலுக்கு பேசியவள் “அண்ணி.. இன்னும் அச்சண்ணா வரலை?” என்று பாவமாய் கேட்க,
“வந்துட்டு இருக்கார் ஸ்ரீ… நீ சிரிச்ச மாதிரி இரு…” என்று அனிதா சொல்ல,
‘என்னடா இது பில்டப் எல்லாம் பெருசா இருக்கே..’ என்று எண்ணியவள், “யாரு க்கா?” என்று அக்காவிடம் கேட்க,
“எங்க பெரியத்தான்.. அச்சுதன் அத்தான்.. அவர் தான் இன்னும் வரல.. அதான் எல்லாம் கேட்கிறாங்க…” என்று சொல்ல,
“ஓ! அவரா.. இப்போ ஓகே வா? நல்லாகிட்டாரா?” என்று இவளும் பேச,
“நல்லா எல்லாம் ஆகிட்டாரு.. ஆனாலும் அப்பப்போ கொஞ்சம் பிரச்சனை தான்…” என்று அனிதாவும் சொல்ல,
“என்னவாம்?!” என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மண்டபத்தில் ஒரு சலசலப்பு.
அனைவரும் பட்டென்று பரபரப்பானது போல தெரிய, அங்கே இங்கே என்று நின்றிருந்த வீட்டு பெரியவர்கள் எல்லாம், முன்னே நடக்க, பந்தியில் பார்த்துக்கொண்டு இருந்த பிரகாஷும், பிரசாந்தும் கூட வேகமாய் முன்னே ஓடி வர, அர்ஜூன் எங்கிருந்து வந்தான் என்றே தெரியாது வர, அனைவருக்கும் நடுநாயகமாய் நடந்து வந்தான் அச்சுதன்.
அர்ஜூன் வந்து “அண்ணா…” என்று கட்டிக்கொள்ள,
“என்னடா நீ? நான் வராம எங்க போவேன்…” என்று அவனை ஆரத் தழுவியவன்,
“என்ன சித்தப்பா நீங்களும் வந்து நிக்கிறீங்க.. போங்க.. போய் வேலையை பாருங்க…” என்று ஆளுக்கு ஒன்றாய் பேசி வர,
பிபி சகோதரர்களிடம் “என்னடா எல்லாம் ஓகே வா?” என்று கேட்க,
“நீ வந்துட்ட தானே ண்ணா இனி எல்லாம் ஓகே தான்…” என்று.. புன்னகையோடு சொல்ல, வீட்டு ஆண்கள் அனைவரும் ஒன்று போல் பட்டு வேஷ்டி சட்டையில், பேசிக்கொண்டு ஒன்றாய் நடந்து வரும் அழகே தனியாய் தான் இருந்தது.
அதற்குள் மேடையில், நீலவேணி அருகில் பாமினியும், சுமிதாவும் வந்து நின்றுவிட,
“நம்ம அச்சுதன் வந்தா தான் நிறைவா இருக்கு…” என்று சொன்னது நீலவேணி இல்லை. பாமினி சொல்ல, அதனை சுமிதாவும் ஆமோதிக்க,
அர்ச்சனா தான் இதனை எல்லாம் பார்த்து ‘என்னடா இது.. ஹீரோக்கு குடுக்கிற பில்டப் விட இது பெரிய பில்டப்பா இருக்கே…’ என்று பார்க்க,
அச்சுதன் மண்டபத்தினுள் வந்தவன், மேடைக்கு வரும் முன்னே, அவனோடு எழுந்து கை குலுக்கி, வந்து முகமன் பேசி, என்று ஆளாளுக்கு வந்து பேச, அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டே தான் வந்தான் அச்சுதன்.
அர்ச்சனாவின் பார்வையும் அவன் மீது தான் இருந்தது.
‘அப்படியென்ன இவன்?’ என்கிற ஆராய்ச்சி பார்வை மட்டுமே அவன் மீது வீசி நின்றிருக்க,
“பவஸ்ரீ இப்போ ஹேப்பியா?” என்று அனிதா கேட்க,
“ஆமா அண்ணி…” என்று சொல்லியவள் அப்போது தான் நிறைவாய் புன்னகைத்தாள்.
அர்ச்சனா சுதாரித்தவள் “அக்கா இனி நீ பாரு.. நான் கீழ போறேன்…” என்று இறங்கப் போக,
“நில்லு அர்ச்சு…” என்று அனிதா அவளை நிறுத்தப் பார்க்க,
“இல்லக்கா இருக்கட்டும்… எல்லாரும் மேல தான் வர்றாங்க..” என்றவள், மேடையி இருப்பக்கமும் இருந்த படிகளில், ஒரு பக்கம் இறங்கிக்கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் அச்சுதன் தன் குடும்பத்தினரோடு மேலே ஏறிக்கொண்டு இருந்தான்.
அவன் மேடை ஏறியதும் தான் தாமதம் “அண்ணா…” என்ற அழைப்போடு பவஸ்ரீ ஓடிச் சென்று அவனை இறுக கட்டிக்கொள்ள,
“என்னடா குட்டிம்மா நான் வராம இருப்பேனா..” என்றவன்,
“எங்க தங்க இளவரசிக்கு இந்த அண்ணனோட கிப்ட்…” என்றுசொல்லி, ஒரு வைர ப்ரேஸ்லெட் அணிவிக்க, அனைவரின் முகத்தினிலும் அத்தனை மகிழ்ச்சி.
அதன் பின்னர் தான் பிரகாஷ் கூட அனிதாவிடம் “நம்ம கிப்ட் எடுத்துட்டு வா…” என்று சொல்லி, அவர்களின் பரிசை கூட கொடுத்தனர்.
இதனை எல்லாம் அர்ச்சனா பார்த்துக்கொண்டே தான் இருந்தாள், மகள் கீழே வந்ததுமே, ரோஜாவும் வந்து அமர்ந்துவிட “எங்கம்மா போன?!” என்றாள்.
“எத்தனை சொந்தம் வந்திருக்காங்க டி.. பேச வேணாமா…” என்றவர் “எல்லாரும் உன்னைத்தான் கேட்டாங்க..” என்று சொல்ல,