Advertisement

ஏனெனில் இப்போதெல்லாம் ப்ரேம் சொல்வதை தான் சண்முகம் கேட்கிறார் அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி. 
அவருக்கு மகன் அன்று பேசி சென்றது வெகுவாக மனதை பாதித்திருக்க, இனி  வரும் நாட்களிலாவது மகனுக்கு ஏற்ற தந்தையாக இருக்க  வேண்டும் என்ற எண்ணமே அவரை மகனிடம் நெருங்க வைத்திருந்தது. 
அப்படி இதுவும் கண்டிப்பாக அவன் சொல்லித்தான்  இவர் வாங்கியிருப்பார் என்று புரிய, திரும்பி பேரனை பார்த்தார், காலையில் பேர்  வைக்கும் நிகழ்வின் போது, தாய் மாமா சார்பாக ப்ரேம் அவனுக்கு போட்ட அத்தனை நகைகளும் வைரம்.
“போடு..” என்று சண்முகம் மறுபடியும்  மனைவியிடம் அழுத்தி சொல்ல,  வைஜெயந்தி லேசாக நடுங்கிய விரல்களுடன் அதை மருமகளின் கைகளில் மாட்டிவிட, மது அவரின் காலில் விழபோனாள். 
“இருக்க.. இருக்கட்டும்..” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவர், யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஓர் ஓரமாக நின்று கொண்டார். 
அடுத்து வடிவேலு வசந்தா தம்பதியை கூப்பிட, மகளின் முகத்தில் உறைந்திருந்த சந்தோஷத்தில் தானும் மகிழ்ச்சி கொண்ட தந்தை, மகளுக்கு  சந்தனம் வைத்து, தானே  வைர வளையலும்  போட்டுவிட்டார். 
“இது தெரிந்த விஷயம் தானே..?”  என்ற நொடிப்போடு கணவனை பார்த்த வசந்தா தானும் மகளுக்கு தனியாக  எடுத்து வந்த தங்க வளையல் போட்டு விட்டார்.  
“ம்மா..” என்று மது ஆச்சரியமாக அம்மாவை பார்க்க, 
“ஏன் உங்க அப்பா மட்டும் தான் உனக்கு செய்வாரா..? நான் செய்ய மாட்டேனா..?” என்று  வசந்தா கணவனை  பார்த்தபடி மிதப்பாக கேட்டார். 
“நானும்.. நீயும் ஒன்னா..?” என்று  மகளை  கர்வத்துடன் பார்த்த வடிவேலுவின் பார்வையை கண்டு கொண்ட வசந்தா, 
“நானும் நீங்களும் ஒன்னான்னு எனக்கு  தெரியாது, ஆனா என் மருமகனும்.. நீங்களும் ஒன்னு தான்னு எனக்கு நல்லா தெரியும்..” என்று   கிண்டலாக சொன்னார். 
“உன்னை..” என்று வடிவேலு மனைவியை பார்த்து பல்லைகடிக்க , 
“போதும்.. போதும் உங்களுக்கு வயசாயிடுச்சு, ஓவரா பல்லை கடிச்சீங்க  அப்பறம் இருக்கிற பல்லும் கொட்டிட போகுது..” என்று கழுத்தை  வெட்டினார். 
“ம்மா.. எங்க அப்பா எப்போவும் யங்  தான்..” என்று மது அம்மாவை முறைத்து அப்பாவை தாங்கினாள். 
“கேட்டுக்கோ..” என்று மனைவியை கெத்தாக பார்த்த வடிவேலு, மகளின் தலையை வருடி விட்டு செல்ல, ரவி தம்பதி சந்தனம் வைக்க வந்தனர். 
ரவி தங்கைக்கு சிரிப்புடன் சந்தனம் வைக்க, திவ்யாவும் மலர்ந்த முகத்துடனே சந்தனம் வைத்தவள், கணவன் கொடுத்த வைர வளையலையும் மனதாரவே போட்டுவிட்டாள். 
“ண்ணா..” என்று மது ரவியின் காலில் விழுக வர, அவசரமாக தள்ளி நின்று கொண்ட ரவி, 
“ஏய் மது..  என்ன இதெல்லாம்..?”  என்று ஆச்சரியமாக  கேட்டான். 
“நீயும் எனக்கு இன்னொரு அப்பா தான்ண்ணா..” என்று மது தன்னுடைய ஒட்டு மொத்த பாசத்தையும் ஒரே வரியில் சொல்லிவிட, ரவி கண்களில் சட்டென கண்ணீர்  தேங்கிவிட்டது. 
அவளின் ஆருயிர் அப்பா ஸ்தானத்தில் தன்னையும் நினைத்திருக்கும் தங்கையை உணர்ச்சி வசத்தோடு பார்த்தவன், அவளின் தலையை வருடி விட்டு சென்றான். 
இறுதியாக ப்ரேம் வர, மது கணவனை பார்த்து ரகசியமாக சிரிக்க, ப்ரேமும் மனைவியை கண்ணோர சிரிப்புடன் நெருங்கியவன், கைகளில் சந்தனத்தை மெலிதாக எடுத்து, லேசாக தடவி விட்டான். 
“எங்க வீட்டு பொண்ணுக்கு கிப்ட் ஏதும் இல்லையா..?” என்ற கேள்வியோடு சுபா வர, ப்ரேம் அவரை திரும்பி பார்த்துவிட்டு மனைவியை முறைத்தான். 
“அங்க என்ன முறைப்பு..? பொண்டாட்டிக்கு வெறும் சந்தனம் மட்டும் பூசிவிட்டா ஆச்சா..? ஸ்பெஷல் கிப்ட் ஏதும் கொடுக்கறதில்லையா..?” என்று கிண்டலாக கேட்டவர், 
“என்ன வசு இது..? மது கையில வெறும் நாலு வைர வளையல் தான் இருக்கு..” என்று வடிவேலுவையும் பார்த்து சீண்டினார். 
“அதுலயும்  ரெண்டு என் மகன் போட்டதுக்கா..” என்று வசந்தா கூட்டணி கிடைத்த சந்தோஷத்தில் கணவருக்கு கட்டம் கட்டினார். 
“இது வேறயா..?” என்று வடிவேலுவை கிண்டலாக பார்க்க, அவர், மனைவியையும், சுபாவையும் முறைத்துவிட்டு சென்றார். இப்படியாக நல்ல முறையில்  வளைகாப்பு முடிய, மது பண்ணை வீடு செல்ல நேரம் நெருங்கியது. 
“அண்ணி  கிளம்பலாமா..?” என்று மது திவ்யாவை கேட்டபடி காருக்கு செல்ல, வசந்தா பேரனை கையில் தூக்கி கொள்ள, ரவி தங்கையையும், அம்மாவையும் கடுப்பாக பார்த்தான். 
“என்ன ரவி.. கார் எடு.. நல்ல நேரத்துல கிளம்பனும் இல்லை..” என்று அவனின் முறைப்பை  கவனிக்காத்தவர் போல், மருமகளையும், பேரனையும் கையோடே அழைத்து கொண்டு கிளம்பினார்கள். 
***********************
“மித்ரா.. மித்ரா..” என்று கதவை தட்டி கொண்டிருந்த கணவனின் சத்தத்தில் கோவத்தோடு கதவை திறந்தவள்,
“எதுக்குங்க  நீங்க ரெண்டு பேரும் என்னையே சுத்தி சுத்தி வரீங்க..?” என்று  பிரசவ தேதி நெருங்கவும், தன்னையே கண் காணித்து வரும் அப்பாவையும், கணவனையும் பார்த்து மது சலிப்பாக கேட்டாள். 
பின் அவள் குளிக்க  சென்று சில நிமிடங்கள் தாமதம் ஆனாலும் பதறி போய் இருவரில் யாராவது ஒருவர் கதவை தட்டினால் அவளும் தான் என்ன செய்ய..?  
“ம்ம்.. அதெல்லாம் உனக்கு புரியாது, விடு..  இந்தா இந்த ஜுஸ் குடி..” என்று கணவன் நீட்டிய ஜுஸை முறைப்புடன் பெற்று கொண்டவள், பெட்டில் அமர்ந்து குடிக்க, ப்ரேம் எப்போதும் போல அவள் கால் வீக்கத்திற்கு சூடு தண்ணி வைத்து நீவி விட்டான். 
“போதும்.. விடுங்க..” என்று கணவனை கூப்பிட்டு தோள் சாய்ந்தவளுக்கு எதோ போல் தான் இருந்தது. ஆனால் சொன்னால் இருவரும் அதை பெரிது படுத்தி விடுவார்கள்.. என்று அமைதியாக கணவனின் தோளில் சாய்ந்து கண் மூடி கொண்டாள். 
“மதுமா..” என்று  மகள் இன்னும் ரூமை விட்டு வெளியே வராததில் வடிவேலு கவலையுடன் கூப்பிட்டார். 
“வரேன்ப்பா..” என்ற மதுவின் குரலில் தெரிந்த சோர்வில் தந்தைக்கும் கணவனுக்கும் யோசனை. 
“என்ன செய்து..?” என்று சட்டென உள்ள வந்துவிட்ட வடிவேலுவும், ப்ரேமும் ஒரே நேரத்தில் பதட்டத்துடன் கேட்டனர்.  
“ஒன்னுமில்லை.. கொஞ்சம்..”  என்று மது சொல்லி கொண்டிருக்கும் போதே அடிவயிற்றில் இருந்து லேசா வலி ஆரம்பிக்க, பனி குடம் உடைந்து கால் வழியாக தண்ணீர் வெளியேறியது. 
“என்ன..? என்ன இது..? தண்ணீ.. எங்கிருந்து வருது..?” என்று பயந்து போனவர்கள். 
“அத்தை.. வசந்தா..”  என்று  கத்த மகளின் ரூமிற்கு ஓடி வந்த வசந்தா, பனி குடம் உடைந்திருப்பதை  கண்டு கொண்டார். 
“ஐயோ.. பனி குடம் உடைஞ்சிருச்சு.. சீக்கிரம்.. சீக்கிரம்.. ஹாஸ்பிடல் தூக்குங்க..” என்று முன்னரே தயாராக வைத்திருந்த பேகை எடுத்து கொண்டு வசந்தா காருக்கு ஓட, ப்ரேம் மனைவியை கையில் ஏந்தி கொண்டு காருக்கு விரைந்தான். 
“ஏங்க.. காரை எடுங்க.. எடுங்க..” என்று வடிவேலு  காரை எடுக்காமல் முகம் வெளிற, கை கால்கள் நடுங்க, வலியில் துடிக்கும் மகளை பார்த்து கொண்டிருப்பதில் கணவனை கத்தினார். 
“நான்.. என்னால் முடியாது..” என்று கண்கள் கலங்கி நடுங்கும் கையை காட்டிய வடிவேலுவை கண் விரித்து பார்த்த ப்ரேம், தானே சென்று காரை எடுத்தான்.  
வடிவேலு மகளின் காலை எடுத்து மடியில் வைத்து கொண்டு, மகளின் வலியில் கலங்கியவாறே  பயணிக்க, ப்ரேம் முன் கண்ணாடி வழியே மனைவியின் வலியை பார்த்து  தானும் துடித்துபடி காரை ஓட்டி  கொண்டிருந்தான். 
வசந்தா காரில் வரும் போதே சுபாவிற்கு போன் செய்து சொல்லிவிட்டதால்  அவர் தயாராக இருக்கவும், மது நேராக லேபர் வார்டுக்குள் கொண்டு செல்ல பட்டாள். 
“அப்பா.. ஏங்க..” என்று வார்டுக்குள் செல்லும் முன் மது, இருவரையும் கூப்பிட்டவள், வலியிலும்  இருவரையும் பார்த்து மலர்ந்து சிரித்தாள். 
“மதுமா..”  என்று வடிவேலு நடுங்கும்  விரல்களுடன் மகளின் தலையை தடவி விட, ப்ரேம் கண்கள் கலங்க மனைவியின் கைகளை அழுத்தினான். 
“நான் ஓகேதான்.. ரெண்டு  பேரும் தைரியமா இருங்க.. உங்க குட்டி ஏஞ்சலை வரவேற்கணும் இல்லை..” என்று வலியில் பல்லை கடித்து சொன்னவள், இருவரின்  கைகளிலும் முத்தம் வைத்து உள்ளே சென்றாள். 
“மதுமா..” என்று வடிவேலு, ரூம் வாசலிலே நின்றுவிட, ப்ரேம் உடலும் மனமும் துடிக்க, கைகளை இறுக கட்டி கொண்டு தள்ளி நின்றான். 
“வசு.. மதுவை செக் பண்ணிட்டேன், பனிக்குடம் உடைஞ்சதால எந்த பாதிப்பும் இல்லை, குழந்தைக்கு தேவையான தண்ணி இருக்கு.. பார்த்துக்கலாம், நார்மல் டெலிவரி ஆக வாய்ப்பு இருக்கு..” என்று சுபா வெளியே வந்து  சொல்லி செல்ல  மூவரும் ஆசுவாசப்பட்டனர். 
அடுத்த ஒரு மணி நேரம் வடிவேலுவையும், ப்ரேமையும் துடிக்க வைத்துவிட்டு ஜுனியர் மதுமித்ரா அழுகையுடன் வெளியே வந்தாள். அவளின் அந்த அழுகை சத்தம் ப்ரேம் உடலை சிலிர்க்க வைக்க, பார்வை தானாகவே வடிவேலு பக்கம் சென்றது. 
அவரின் கண்களில் கண்ணீர் வழிய, முகம் முழுதும் புன்னகையில் விரிந்திருக்க, “மதுமா.. மதுமாவும் இப்படி தான் அழுதுட்டே பிறந்தா.. குரலும்.. இதே குரல்தான்..” என்று சொல்ல, வசந்தா கணவனை புருவம் சுருக்கி பார்த்தவர், 
“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை, எல்லா குழந்தையும் அழுதுட்டே தான் பிறக்கும், எல்லா குழந்தைங்க குரலும் கொஞ்சம் ஒரே மாதிரி தான் இருக்கும்..” என்று கிண்டலாக சொன்னார். 
“என் மதுமா குரல் எனக்கு தெரியாதா..? அங்க கேளு.. எப்படி விட்டுட்டு  லேசா அழுறான்னு.. இந்த மாதிரி என் பொண்ணும் அழுதா,  எனக்கு தெரியாதா..?” என்று எகிறி கொண்டு மனைவியிடம் சண்டைக்கு நிற்க, ப்ரேம் முகத்தில் ஓர் இதமான சிரிப்பு. 
“இவர் அப்பாவா கிடைக்க மித்ரா கண்டிப்பா கொடுத்து வச்சிருக்கணும்..” என்று  மனைவியிடம் சண்டை போட்டு கொண்டிருக்கும் மாமனாரை பார்த்த ப்ரேமுக்கு மகள் மேல் அவர் வைத்திருக்கும் எல்லையில்லா பாசம்  புரிவதாய்..!!
“நானும் என் மகள் மேல இதைவிட அதிகமா பாசம் வைப்பேன்..” என்று மாமனாரை பார்த்து  உதடு சுழித்தவன், சுபா  மகளை தூக்கி வரவும் வேகமாக அவரிடம் சென்றான். 
“குட்டி மது பிறந்திருக்கா..” என்று சுபா குழந்தையை காட்டி சொல்ல, 
“அது எனக்கு எப்பவோ தெரியும்..” என்று மருமகனை பார்த்து மிதப்பாக சொன்னார்  மாமனார், 
“இந்தாங்க குழந்தையை பிடிங்க..” என்று சுபா குழந்தையை கொடுக்க, வடிவேலு, ப்ரேம் இருவரும் ஒரே நேரத்தில்  கை  நீட்டி அடுத்த  உரிமை போரை  வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தனர்.  

Advertisement