Advertisement

அவளே என் பிரபாவம் FINAL  2
“இங்க வச்சிருங்க  அண்ணி..” என்று வைஜெயந்தி எடுத்து வந்த வளையல் தட்டை சொன்ன வசந்தாவிடம், 
“இன்னும் வேற ஏதாவது வேணுமா அண்ணி..?” என்று  வைஜெயந்தி  கேட்டார். 
“ஆமா அண்ணி.. சந்தனம் வேணும், இன்னும் கொஞ்சம் கரைச்சு வச்சுக்கலாம்..” என்று வசந்தா சொல்லவும், அவர் சென்று சந்தனம் எடுத்து வந்து கொடுக்க, வசந்தா எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்து கொண்டிருந்தார். 
இன்னும் சிறிது நேரத்தில் மதுவின் வளைகாப்பு ஆரம்பமாக போவதால் அதற்கான ஏற்பாட்டை  பெண்கள் பரபரப்பாக செய்து கொண்டிருந்தனர். 
சில நிமிடங்களுக்கு முன்பு தான் ரவி.. திவ்யாவின் மகனுக்கு  “ருத்ரன்..” என்று பேர் சூட்டு விழா நடத்தி முடிந்திருந்தார்கள். அடுத்து மதுவிற்கான வளைகாப்பு வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது. 
“ம்மா.. பூ அலங்காரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.. அப்பறம் மாமனாரும் மருமகனும்  பார்வையாலே கதகளி ஆடுவாங்க, அந்த கொடுமையை எல்லாம் யார் பார்க்கிறது..?” என்று வடிவேலுவையும், ப்ரேமையும் நினைத்து ரவி தலையை குலுக்கி சொல்ல, சிரித்த வசந்தா, 
“பின்ன ஆடாம இருப்பாங்களா..? எப்போவும் போல அவங்க அவங்களுக்குள்ளே தான் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க, நீ எங்களை மாதிரி ஓரமா நின்னு  வேடிக்கை  பார்க்காம உன்னை யாரு அவங்களோட  களத்துல குதிக்க சொன்னா..?”  என்று வசந்தா மகனை கிண்டலடிக்க, சிலிர்ந்தெழுந்த மகன், 
“அப்போ நான் எப்போதான்  என் தங்கச்சிக்கு  செய்ய..?” என்று ஒரு அண்ணனாக ஆதங்கத்துடன் கேட்டான். 
“நல்ல நேரம் பார்த்த நீ  உன் தங்கச்சிக்கு செய்ய..? அவங்களே எப்போ எப்போன்னு பார்த்து மோதிக்கிற ஆளுங்க, அவங்களோட போய் நீ மல்லுக்கட்டி  ஜெயிக்க முடியுமா..?”
“ஜெயிட்டோம்ல.. இந்த முறை நான்தான்  என் தங்கச்சிக்கு வளைகாப்பு செய்வேன்னு சாதிச்சிட்டேன் இல்லை..” என்று காலரை தூக்கி விட்டு சொன்னான். 
“க்கும்..  நீ சாதிச்ச..? போடா போ..  எனக்கென்ன தெரியாதுன்னு நினைச்சியா..? உன் தங்கச்சியை  உனக்கு சப்போர்ட் செய்ய வச்சு சைலண்டா சாதிச்சிகிட்டு   பெருமை வேற..” என்று நக்கலாக சிரித்தார்  வசந்தா, 
“ம்மா.. எப்படியோ இந்த முறை அந்த ரெண்டு சண்டி குதிரைங்களை ஓரம்கட்டி  நான் ஜெயிச்சுட்டேன் இல்லை, இதுவே வரலாற்று சாதனை தான் போங்க..” என்று ரவி பெருமை  பொங்க பேச, அவனை கிண்டலாக பார்த்த வசந்தா, 
“பெருமை பேசுறதெல்லாம் இருக்கட்டும், அவங்க ரெண்டு பேரும் கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திட்டு உத்து உத்து பார்த்துட்டு இருக்காங்க, தப்பி தவறி மது வளைகாப்புல ஏதாவது குறைய கண்டுபிடிச்சிட்டாங்க நீ அவ்வளவுதான்.. பார்த்துக்கோ..” என்று எச்சரிக்கை செய்தார்.
“என்ன பண்ணிடுவாங்களாம்..?”  என்று ரவி வீரப்பாக கேட்டான். 
“என்ன பண்ணுவாங்களா..? நல்லா கேட்ட போ.. போன முறை மாத்தி மாத்தி அவங்களுக்குள்ளே பொங்கல் வச்சிக்கிட்ட ரெண்டு பேரும் சேர்ந்து இந்த முறை உனக்கு பொங்கல் வச்சுடுவாங்க.. அதுவும் சாதா பொங்கல் இல்லை.. பெப்பர் தூக்கலா போட்ட பொங்கல்..” என்று சிரிப்புடன் சொன்னார். 
“ம்மா.. நீ சொல்றதிலும் பாய்ண்ட் இருக்கு, எதுக்கும் நாம இன்னொரு முறை எல்லாத்தையும் செக் செஞ்சுடலாம்..” என்று பயந்தது போல கண்ணை உருட்டி பேசிய  மகனை பார்த்த வசந்தா சத்தமாக சிரித்துவிட்டார்.
“என்ன அண்ணி..?” என்று வசந்தாவின் சிரிப்பு சத்தத்தில் அங்கு வந்த வைஜெயந்தி கேட்க, 
“ம்மா.. சொல்லிடாத, போன முறை இவங்க தான் பொங்கல் பானையை பத்த வச்சதே, இந்த முறை மொத்தமா வெடிக்க வச்சிடவே போறாங்க..” என்று ரவி தாயின் காதில் கிசுகிசுக்க, வசந்தா பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டவர், 
“ஒன்னுமில்லை அண்ணி.. உங்க அண்ணாக்கும், உங்க மருமகனுக்கும் பொங்கல் ரொம்ப பிடிக்கும், அதிலும் நீங்க செய்ற பொங்கல்ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  அதை தான் சொல்லிட்டிருந்தான்..” என்று குறும்பாக சொன்னார். 
“அப்படியா..? ஆனா மாப்பிள்ளை அப்பா நான் செஞ்ச பொங்கலை எப்போ சாப்பிட்டார்..?” என்று வைஜெயந்தி சந்தேகத்துடன் கேட்டார். 
“அது.. முன்னொரு முறை சாப்பிட்டாராம்.. இன்னும் கூட அந்த நெடி   இறங்காமா சுத்திட்டிருக்கார் பாருங்க..” என்று  தூரத்தில் விறைப்பாக முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்த கணவனை பார்த்து சொன்னார். 
“நெடியா..?” என்று வைஜயந்தி புரியாமல் கேட்டார். 
“அது.. மிளகு தூக்கலா போட்டிருப்பீங்க போல, அதை சொன்னேன்..” என்று வசந்தா சமாளிக்க, 
“ஆமாமாம்.. கொஞ்ச  நஞ்ச மிளகா போட்டிருந்தாங்க, இன்னும் கூட மாமனாரும், மருமகனும் காரம் குறையாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்து புஸ்புஸ்ன்னு இல்லை மூச்சு விட்டுக்கிறாங்க..” என்று ரவி முணுமுணுக்க, வசந்தா மகனை பார்த்து கண்ணாலே சிரித்தார்.  
“இதுல  சிரிக்க என்ன இருக்கு..?” என்று ரவியின் முணுமுணுப்பையும், வசந்தாவின் சிரிப்பையும் கண்டு கொண்ட  வைஜெயந்தி நம்பாமல் கேட்டார். 

“அது.. அட  அதை விடுங்க அண்ணி..  உங்க மருமக வளைகாப்புக்கு நேரம் ஆச்சு பாருங்க.. வாங்க  எல்லாம் எடுத்து வச்சிரலாம்..” என்று வசந்தா எல்லாவற்றையும் சரிப்பார்க்க ஆரம்பித்துவிட, ரவி உதட்டோர சிரிப்பை மறைத்தவாறே  நகர்ந்தான்.
“நீ எதுக்குடி  இப்போ  முகத்தை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்க..? நீ பார்த்த வேலைக்கு நான்தான் அப்படி இருக்கனும்..” என்று ப்ரேம் மனைவியிடம் முறைப்பாக கேட்டான்.
 பின்னே.. தனக்கு வளைகாப்பு என்று ஒன்று நடந்தால் அது  மாமியாரின் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று மதுமித்ரா உறுதியாக நின்று விட்டாள். அப்பா, கணவன் இருவரும்  கெஞ்சி, கொஞ்சி, மிரட்டியும் பயன் இல்லாமல் போக எல்லோரும் இன்று ப்ரேமின் வீட்டில் தான் பங்கஷனுக்காக கூடி  இருந்தனர். 
அந்த கோவம் தான் மாமனாருக்கும், மருமகனுக்கும். அதைத்தான் ப்ரேமும் இப்போது மனைவியிடம் கேட்டு கொண்டிருந்தான். மதுவுக்கும் அது புரிந்து இருந்ததால், முதலில் தான் முந்தி கொள்ள வேண்டும் என்று  வேண்டுமென்றே முகத்தை தூக்கி வைத்து இருந்தவள், கணவனை செல்லமாக சீண்டவும் செய்தாள்.  
“ம்ம்.. இப்படி ஒரு ஹாட் புருஷன் கிடைச்சா பொண்டாட்டி சூடு தாங்காமல் வதங்கி போக மாட்டாளா..?” என்று  வளைகாப்புக்கு தயாராகி முடித்தவாறே கிண்டலாக கேட்டாள். 
“இதையே நீ கொஞ்சம் ரொமேன்டிக்கா சொல்லியிருந்தா எவ்வளவு கிக்கா இருந்திருக்கும்..?” என்று பட்டு புடவை உடுத்தி, மெலிதான அலங்காரத்தில் மின்னிய மனைவியை பார்த்து குறும்பாக கேட்டான். 
“க்கும்.. ஆசைதான்..  நான் சொன்ன ஹாட் டீ கடையில எப்போவும் கொதிச்சிட்டே இருக்கிற  பாய்லர் ஹாட் தான்.. அந்த ஹாட் இல்லை.. போங்க..” என்று மது கணவனை  வம்பிழுத்தாள். 
“ஏன் உன் புருஷன் அந்த ஹாட் இல்லையாக்கும்..” என்று ப்ரேம் மனைவியை இழுத்து தன் கை வளைவில் வைத்து கொண்டு கேட்டான். 
“இல்லை.. போங்க..” என்று மது கணவனை விட்டு விலக முயல, அவளை  சேர்த்து பிடித்து நெற்றியில் முட்டியவன்,  
“அதான் மேடம் நினைச்சதை சாதிச்சிட்டிங்க இல்லை, இன்னும் என்ன கோவம்..?” என்று கன்னத்தில் இதழ் புதைத்து கேட்டான். 
“கோவம் இல்லை.. வருத்தம் தான்..” என்று  முக சுணக்கத்துடன் சொல்ல, அவளின் மூக்கை உரசியவன்,  
“என்ன வருத்தம்..? “ என்று  புரியாமல் கேட்டான். 
“வீட்டுக்கு வந்ததில் இருந்து யார்கிட்டேயும் முகம் கொடுத்து பேசாமல் இப்படி ரூம்லே அடைஞ்சு கிடந்தா எப்படிங்க..?  அத்தையும், திவ்யாயாவும் உங்களை வந்து வந்து பார்த்துட்டு போறாங்க..” என, பெரு மூச்சு விட்ட ப்ரேம், 
“அதுக்கு என்ன செய்ய மித்ரா..? சில விஷயங்கள் மாறாது, விடு..” என்றான். 
“ஏன் மாறாது..? உங்களுக்கு மாற மனசு இல்லன்னு சொல்லுங்க..”
“எப்படி மனசு இருக்கும் மித்ரா..? என்னோட லைப்ல நான் அதிகாம பாதிக்கபட்டத்துக்கு காரணம் இவங்களோட அந்த செல்ப் மைண்டட் தான். அதுதான் என்னை வலுக்கட்டாயமா கொண்டு போய் ஹாஸ்டல்ல தள்ள வச்சதும்..”
“எல்லோரையும் போல   அந்த வயசுல நானும்   வீடு.. அப்பா.. அம்மா.. தங்கச்சின்னு  சந்தோஷமா சுத்திட்டிருத்தேன்.. இவங்களோட அந்த வறட்டு கௌரத்துக்காக எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் என்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாங்க..”  
“அந்த இடத்துல ஒரு மகனா நான் அவங்களை எவ்வளவு தேடுவேன்னு கொஞ்சம் கூட யோசிக்கல,  ஒரு வருஷம் முழுசும் அவங்களை அவ்வளவு கெஞ்சி, அழுது.. ம்ப்ச்.. அவங்களுக்கு அது பெரிய விஷயமாவே தெரியல, அவங்களுக்கான என்னோட ஏக்கம் அவங்களுக்கு புரியவும் இல்லை..”
“என்னை விட இவங்களுக்கு இவங்க வறட்டு கௌரவம் தான் முக்கியமாங்கிறதே நாளாக நாளாக எனக்குள்ள ஒரு வடுவா மாறிடுச்சு, என்னவோ அந்த ஹாஸ்டல் லைப் எனக்கு கடைசி வரை சந்தோஷத்தை கொடுக்கல, எனக்குள்ள ஒரு வெறுமையை, ஒதுக்கத்தை  தான் கொடுத்துச்சு, எனக்கும் அந்த வயசுல அதை ஓவர்கம் பண்ணவும் தெரியல..”
“ஆனா.. இதுல  என்னை அதிகம் பாதிச்சது என்னோட அந்த வெறுமையை, ஒதுக்கத்தை கூட இவங்களால கண்டு பிடிக்க முடியலங்கிறது தான்..” என்று கசங்கிய முகத்துடன் சொன்ன கணவனை ஆறுதலாக அணைத்து கொண்ட மது, 
“தப்புதான்.. உங்க மேல அந்த ஹாஸ்டல் லைஃபை இவங்க திணிச்சிருக்க கூடாது, அதுவே உங்களை ரொம்ப பாதிச்சிருக்கு, புரியுது, ஆனா அதுக்காக இப்போ அவங்களை தள்ளி வச்சு தண்டிக்கிறது தப்பு தானே..?” என்று பொறுமையாக  புரிய வைக்க முயன்றாள். 
“மித்ரா நான் எப்போவும்  அவங்களை தண்டிக்க நினைச்சதே இல்லை, என்னால அவங்களோட ப்ரீயா இருக்க முடியாம போனாலும், அவங்க மேல நான் வச்ச பாசத்துல குறை இல்லை..”
“என்னோட லைப்ல அவங்களுக்கான முக்கியத்துவமும் எப்போவும் உண்டு, ஆனா அவங்களுக்கு தான் நான் அப்படி  இல்லையோன்னு தோணுது..” என்று சொல்லிவிட, 
“என்ன பேசுறீங்க நீங்க..? அப்படி எல்லாம் இருக்காது..” என்று மது உறுதியாக மறுத்தாள்.
“நான் அப்படித்தான் பீல் பண்றேன்..” என்று ப்ரேம் உண்மையாகவே சொன்னவன். 
“ஏன் இப்போ லாஸ்ட்டா நடந்த பிரச்னைக்கும் அவங்களோட அந்த சொந்த விருப்பு, வெறுப்பு தான் காரணம். அந்த இடத்துல ஒரு மகனா அவங்க என்னை பத்தி ஒரு பர்ஸனட் கூட யோசிக்கல, அதுவே ஒரு அம்மாவா அவங்க மொத்தமா சருக்குன இடம். அதை என்னால எப்படி ஏத்துக்க முடியும்..?” என்று விரக்தியாக கேட்டான்.
“ஆனா  இப்போ அவங்க அவங்களோட தப்பை உணருறாங்க.. அதை பாருங்களேன்..” என்று  வைஜெயந்தியின் ஏக்க பார்வையை கண்டு கொண்டு சொன்னாள். 
“அவங்க மேல இப்போவும் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை மித்ரா, நான் ஒன்ஸ் அவங்களோட பேட்ச் அப் ஆயிட்டா அவங்க மறுபடியும் உன்னை சீண்டத்தான் செய்வாங்க, எனக்கு அது நல்லாவே தெரியும்..”
“இருக்காதுங்க..” என்று மது மறுக்க, சிரித்த ப்ரேம், 
“அவ்வளவு சீக்கிரம் யாரோட ஒரிஜினல் கேரக்டரும் மாறாது மித்ரா, அவங்களோட இந்த மாற்றம் நிரந்தரம் இல்லை.. அதை பியூச்சர்ல நீயே புரிஞ்சுப்ப..” என்று அம்மாவை உணர்ந்தவனாக சொன்னான். 
“ஆனா..” என்று மது மறுபடியும் பேச ஆரம்பிக்க, 
“மித்ரா.. போதும்.. நீ எவ்வளவு பேசினாலும் என்னால சில விஷயங்களை ஏத்துக்க முடியல.. விட்டுடு..”  என்று ப்ரேம் சற்று கோபத்துடன் சொல்ல, மது கணவனின்  கோவம்  உணர்ந்து அவனை ஆதரவாக  அணைத்து கொண்டாள். 
“போடி..” என்று பதிலுக்கு அணைக்காமல் விறைப்பாக நின்ற கணவனை மது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக  அணைத்து  கொள்ளவும், 
“ஏய்.. இறுக்காதடி..  உள்ள பேபிக்கு மூச்சு முட்ட போகுது..” என்று ப்ரேம் பதறி போய் அவசரமாக மனைவியை விலக்கினான். 
“போங்க.. உங்களை போய் ஆசையா கட்டிபிடிச்சேன் பாருங்க என்னை சொல்லணும், இப்போ எல்லாம் உங்களுக்கு என்னை விட என் பேபி தான் முக்கிமா இருக்கு..” என்று கடுப்பாக பொரிந்துவிட்டு  செல்ல, ப்ரேம் சிரிப்புடன் தலையை கோதி கொண்டான்.
“ப்பா..” என்ற மகளின் அழைப்பில் அதுவரை கேட் பக்கம் முகத்தை திருப்பி அமர்ந்திருந்த வடிவேலு திரும்பி மகளை பார்த்தவர், கண்கள் கலங்க வேகமாக எழுந்து நின்று விட்டார்.  
“மதுமா..” என்று மேடிட்ட வயிற்றோடு வளைகாப்பு அலங்காரத்தில் ஜொலித்த மகளை ஆசையாக பார்த்த தந்தையின்  காலில் விழபோகவும் பதறி போன மனிதர், 
“மதுமா..  பேர பிள்ளையை வயித்துல வச்சுக்கிட்டு என்ன செய்ற நீ..?” என்று அவளை காலில் விழுகாமல் தூக்கி நிறுத்தியவர், அன்பாக கடிந்து கொண்டார். 
“ப்பா.. வரவர எல்லோருக்கும் என்னை விட என் பேபி தான் முக்கியமா தெரியறாங்க..” என்று மது சிணுங்கலுடன் கணவனையும், தந்தையையும்  பார்த்து கேட்டாள். 
“என்ன மதுமா.. இப்படி சொல்லிட்ட..? என் பேரபிள்ளை உன் ரத்தம்டா, உங்களை விட இந்த உலகத்துல அப்பாக்கு எதுவுமே முக்கியம் இல்லைடா..” என்று ஆதங்கத்துடன் சொல்ல,  
“தெரியும்ப்பா.. என் அப்பாவை எனக்கு தெரியாதா..?” என்ற கர்வத்தோடு அப்பாவை தோளோடு அணைத்து கொண்டாள். 
“க்கும்.. ரொம்பத்தான்..” என்ற கணவனின் முணுமுணுப்பை அவனின்  இதழசைவிலே கண்டு கொண்ட மனைவி, உதடு சுழித்து முகம் திருப்பி கொண்டாள். 
“மது.. நேரம் ஆச்சு பாரு, மனையில் உட்காரு.. வா..” என்ற வசந்தாவின் அழைப்பில் மது கணவனை பார்த்துவிட்டு தந்தையை  பார்க்க, புரிந்து கொண்ட ப்ரேம், பெரு மூச்சோடு தலையை அசைக்க, மது கணவனை பார்த்து மலர்ந்து சிரித்தாள். 
“மது..” என்று வசந்தா மறுப்படியும் கூப்பிட, மது தந்தையின் கையை பற்றி கொண்டு  அவரை பார்க்க, அவர் மருமகனை பார்த்தார். 
அவன் சாதாரணமாக நிற்கவும், சந்தோஷத்தோடு மகளின் கையை பற்றி கூட்டி சென்று மனையில் அமரவைக்க, சடங்குகள் ஆரம்பமாகின. 
“சண்முகம் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வாப்பா..” என்று சடங்குகள் முடியவும் இருபக்க வீட்டின் பெரியவர்கள் மதுவிற்கு சந்தனம் வைத்து முடிக்க, அவ்வீட்டின் மூத்த தலை முறை பெண் சண்முகம் தம்பதியை கூப்பிட்டார். 
தங்களை பார்த்து மலர்ந்து சிரித்த மருமகளுக்கு சண்முகம் நிறைந்த மனதுடன் சந்தனம் வைத்து ஆசீர்வதிக்க, வைஜெயந்தி மருமகளின் முகத்தை பார்த்தும் பார்க்காததுமாக சந்தனம் வைத்து முடித்தார்.
“இதை மருமகள் கையில போடு..” என்று சண்முகம் கொடுத்த தங்கம் வளையலை பார்த்த வைஜெயந்தி வேதனையுடன்  திரும்பி மகனைத்தான் பார்த்தார். 

Advertisement