Advertisement

“அப்போ.. போய் அண்ணியை பார்த்துட்டு வா.. நான் உனக்கு வீடியோ கால் பண்றேன்..”
“எதுக்கு..?  அதான் நீயும் அம்மாவும் அடிக்கடி வீடியோ கால் செஞ்சு பார்த்துட்டு தானே இருக்கீங்க..?” என்று ரவி நழுவ பார்த்தான். 
“ம்ம்.. எனக்கு உன் போன்ல பார்க்கணும் ஆசை.. கிளம்புண்ணா..” என்று விடாமல் கிளப்பி விட, ரவி மனதே இல்லாமல் கார் எடுக்க வந்தான். 
“ரவி..” என்ற ப்ரேமின் குரலில் காரில் ஏறாமல் திரும்பிய ரவி, 
“சொல்லுங்க ப்ரேம்..” என்றான். 
“நீங்க மதுக்காக தான் எங்க வீட்டுக்குள்ளே போக மாட்டேங்கிறீங்கன்னு தெரியும், எங்க அம்மா மேல இருக்கிற உங்க கோவமும் எனக்கு புரியுது, ஆனா ப்ளீஸ் திவ்யாவை பத்தியும் கொஞ்சம் யோசிங்க..”
“அவகிட்ட இப்போ நிறைய வித்தியாசம் தெரியுது, மனுஷங்களை நிறைய தேடுறா..” என்று தனக்கும் விடாமல் போன் செய்து அண்ணன் உறவை எதிர்பார்க்கும் தங்கையின்  மாற்றத்தை உணர்ந்து சொன்னான். 
“எனக்கும் புரியுது ப்ரேம்.. பட் முன்ன மாதிரி மதுவை எதாவது பேசிடுவாளோன்னு கொஞ்சம் பயமா இருக்கு.. இதுவரைக்கும் நடந்த  பிரச்சனையே போதும்..” என்று ரவி சலிப்பாக சொல்ல, லேசாக சிரித்த ப்ரேம், 
“அதெல்லாம் இனி எதுவும் நடக்காது, தைரியமா திவ்யாவை பார்க்க போங்க.. உங்களை ரொம்ப எதிர்பார்க்கிறா..” என்று கணவனுக்கான தங்கையின் தேடல் உணர்ந்து சொன்னான். 
“சரி..” என்று கிளம்பிய ரவிக்கும் மனைவி தன்னை அதிகம் தேடுவது புரிந்துதான் இருக்க, மலர்ந்த முகத்துடன் விசிலடித்தவாறே மாமியார் வீடு கேட் வரை சென்று நின்றுவிட்டவன், 
“இப்போ உள்ள போகலாமா..? வேண்டாமா..? என்னதான் இருந்தாலும் அன்னிக்கு இவங்க மதுவை அப்படி பேசியிருக்க கூடாது, என் தங்கச்சி, மாப்பிள்ளை இல்லாத வீட்டுக்கு நான் போறதா..?” என்ற எண்ணத்துடன் கேட்டிற்கு வெளியேவே  நின்றுவிட்ட ரவியை நோக்கி திவ்யா ஓட்டமும், நடையுமாக வந்தாள். 
“வந்துட்டிங்களா..?” என்று முகத்தில் சந்தோசம் மின்ன, மூச்சு வாங்க நின்ற மனைவியை பார்த்த ரவிக்கு, அவளை அப்படியே கட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது. 
“ஏன் வரவேண்டாமா..? போகட்டுமா..?” என்று வேண்டுமென்றே சீண்ட, கணவனை மனத்தாங்காலாக பார்த்த மனைவி, 
“ஏன் கேட்க மாட்டிங்க..? உங்களை தினமும் எதிர்பார்த்திட்டே இருந்தேன் இல்லை, அதுக்கு தான் இப்படி கேட்குறீங்க..?” என்று சட்டென கலங்கிவிட்ட கண்களுடன்,  முகம் திருப்பி கொண்டாள். 
“ஏய்.. சும்மா சொன்னேன்டி..” என்று சிரிப்புடன் அவளின் கையை பற்றி கொள்ளும் நேரம், “மாப்பிள்ளை..” என்ற அழைப்புடன் வைஜெயந்தி வர, ரவியின் முகம் சிரிப்பை தொலைத்தது. 
“உள்ள வாங்க மாப்பிள்ளை..” என்று கேட்டில் நின்றுவிட்ட மருமகனை கூப்பிட்டார்.  
“இல்லை.. பரவாயில்லை..” என்று ரவி விலகலுடன் சொன்னான். 
அருமையான மருமகளை, மாப்பிளையை புரிந்து கொள்ள முடியாமல் ஆணவத்தில் ஆடிவிட்ட எனக்கு இது தேவைதான்.. என்று எப்போதும் போல இப்போதும் வேதனை கொண்டவர், 

“நான்.. நான் வேணும்ன்னா வெளியே போயிடுறேன், நீங்க உள்ள போய் உங்க பொண்டாட்டி, பிள்ளையை பார்த்துட்டு போங்க..” என்று வெளியே நடக்கவே ஆரம்பித்துவிட்டார். 
“ம்மா..”  என்று திவ்யா ஓடி சென்று அம்மாவின் கையை பிடித்து கூட்டி வந்தாள். 
“ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க..?” என்று ரவியும் அவரின் செயலில் அதிர்ந்து தான் போய்விட்டான். 
“எனக்கு  வேற வழி தெரியல மாப்பிள்ளை, உங்க முகத்தை எல்லாம் பார்த்து மன்னிப்பு  கேட்கிற தகுதி எனக்கில்லை, என்னால என் பொண்ணு கஷ்டபடுறப்போ நான் வேறென்ன செய்யட்டும்..?”
“ஏற்கனவே என் மகனை நான்  மொத்தமா இழந்துட்டேன்..” என்று கண்ணீர் விடவே செய்தவரை, அந்த நேரத்தில் மேலும் தண்டிக்க  விரும்பாத ரவி, 
“வீட்டு மாப்பிள்ளைக்கு காபி தண்ணி எதுவும் கொடுக்க மாட்டிங்களா அத்தை..” என்று கேட்டான். 
“மாப்பிள்ளை..” என்று நம்பாமல் பார்த்தவர், அவனின் சிரிப்பில், 
“இதோ.. வாங்க.. வாங்க..உள்ள வாங்க மாப்பிள்ளை..” என்று உள்ளே கூட்டி சென்றவர், மருமகனுக்கு தடபுடல் விருந்தே தாயார் செய்ய ஆரம்பித்துவிட்டார். 
“அப்புகுட்டி..” என்று மனைவி தூக்கி வந்த பிள்ளையை தன் கையில் வாங்கி  கொண்ட ரவிக்கு முகத்தில் அவ்வளவு சந்தோசம். அவன் பிறந்த பொழுது கையில் தூக்கியது.  மறுப்படியும் இப்போது தான் தூக்குகிறான், மகன் இன்னும் வளர்ந்து, முகம் இன்னும் தெளிவாக பார்க்க அப்படியே திவ்யா போலே இருந்தான். 
“ஏய்.. உன்னை மாதிரியே இருக்கான்டி. பாரேன் அந்த முட்டை கண், பன்னு கன்னம், கொக்கி மூக்கு..” என்று பிள்ளையை கொஞ்சும் அழகில் மனைவியை வர்ணிக்க, திவ்யா  கணவனை நொந்து போய் தான் பார்த்தாள். 
“ஏங்க இப்படி..?” என்று ஆதங்கத்துடன் கேட்க, 
“ஏய்.. நிஜமாவே உன்னை மாதிரி தான் இருக்கான்..” என்றவன், மனைவியின் சுருங்கிய முகத்தில் “என்னடி..? என்ன ஆச்சு..?” என்று புரியாமல் கேட்டான். 
“ம்ம்.. நீங்க என்னையும், என் பிள்ளையையும் வர்ணிச்ச அழகில மயங்கிட்டேன் அதான் இப்படி..?” என்று திவ்யா கடுப்போடு சொன்னாள். 
“ஏய்.. அது..” என்ற ரவிக்கு சிரிப்பு வந்துவிட, மனைவியை இழுத்து தோளோடு அணைத்து கொண்டவன், மகனை தூக்கி தோள் மேல் போட்டு கொண்டான்.
“புருஷன்  மனைவியை வர்ணிக்கும் போது உண்மையை சொல்ல கூடாதுங்கற கோட்பாடை மறந்துட்டேன்..” என்று சிரிக்க, திவ்யா கோபத்துடன் கணவனை விட்டு விலக முயன்றாள். 
“ஏய் தள்ளாதடி.. கையில பிள்ளை இருக்கான்..” என்று இருவரையும் தன் அணைப்பிலே வைத்து கொண்டான். 
“போங்க.. ரொம்பத்தான்..” என்று நொடித்தவள், தானாகவே கணவனின் தோள் சாய்ந்து விட்டாள். ரவியும் நிறைவுடன் மனைவியை அனைத்து கொண்டவன் அவளின் கண்ணீர் சட்டையை நினைக்க, 
“ச்சு.. என்னடி..? இப்போ ஏன் அழுகிற..?” என்று அதட்டலாக கேட்டான். 
“இல்லை.. நீங்க வீட்டுக்குள்ளே வரவே மாட்டேங்களோன்னு நினைச்சேன்..” என்று விம்மினாள். 
“ம்ம்.. வரக்கூடாதுன்னு தான் நினைச்சிருந்தேன், ஆனா அத்தை அப்படி செய்யவும்..” என்று பெரு மூச்சு விட்டான். 
“அம்மா உண்மையிலே இந்த கொஞ்ச மாசத்துல ரொம்ப  அனுபவிச்சிட்டாங்க, நிறைய அழுகை, அப்பாகிட்ட நிறைய திட்டு, அண்ணன் அம்மா கிட்ட பேச கூடமாட்டேனு ஒதுக்கி வச்சதுன்னு அதிகமா  பட்டுட்டாங்க..” 
“அவங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அத்தை  அம்மாகிட்ட முகம் திருப்பாம பேசறது தான்..” என்று சொல்ல, ரவிக்கு அம்மாவை  நினைத்து எப்போதும் போல பெருமை. 
“ம்ம்.. என்னையும் அவங்களும், மதுவும் சேர்ந்து தான் இங்க தொரத்தி விட்டாங்க..”

“தெரியும்..” என்று திவ்யா சொல்லவும், அவள் சரியாக கேட்டுக்கு வந்ததின் காரணம் புரிந்தது. 
“மதுக்கு உங்க மேல டவுட், எங்க நீங்க அப்படியே திரும்பி போயிடுவீங்களோன்னு..” என்று திவ்யா மது போன் செய்து சொன்னதை சொல்ல, 
“என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்கா..” என்று தங்கையை நினைத்து சிரித்தான்.
“மாப்பிள்ளை..” என்ற சண்முகத்தின் குரலில் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை..” என்று தான் வந்ததை தெரிந்து கடையில் இருந்து அவசரமாக கிளம்பி வந்திருக்கிறார். என்று புரிய, மாமியாரை பார்க்க, அவரும் புரியாமல் கணவரை பார்த்து கொண்டிருந்தார். 
“ப்ரேம் போன் செஞ்சான் மாப்பிள்ளை..” என்று அவர்களின் சந்தேகத்திற்கு விடை சொன்னார். 
“மாப்பிள்ளை.. சாப்பிடலாமா..?” என்று வைஜெயந்தி விருந்து  தயார் செய்து கூப்பிட, எல்லோரும் ஒரே குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர். மிக நீண்ட மாதத்திற்கு பிறகு அவ்வீட்டில் எல்லோரின் முகமும் மலர்ந்திருந்தது. 
“மாப்பிள்ளை.. பேரனுக்கு பேர் வைக்கணும்..” என்று சண்முகம் கேட்கவும், 
“நான் அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்றேன் மாமா..” என்றுவிட்டவன் மாலை வரை  மனைவியுடனும், மகனுடனும்  இருந்துவிட்டு மாலை ஸ்னேக்ஸையும் முடித்தே கிளம்பினான். 
“இங்கேயே தங்கலாம் இல்லை..” என்று திவ்யா பூனை  குட்டியா கணவனை உரசி கொண்டே கேட்டதில், மனைவியை அணைத்து கொண்ட ரவி, 
“நாளைக்கு காலையில பெங்களூர் கிளம்பனும்..” என்று கிளம்பவும், கணவனின் சட்டையை பிடித்த நிறுத்தியவள், 
“என்னை உங்களோட கூட்டிட்டு போக மாட்டிங்களா..?” என்று ஏக்கத்தோடு கேட்டாள். அவள் எதை கேட்க கூடாது என்று நினைத்தானோ அதையே அவள் கேட்டுவிட்டாள். 
“ம்ம்.. கூட்டிட்டு போறேன்,  இன்னும் கொஞ்ச  நாள் போகட்டும்..” என்று நாசூக்காய் மறுக்க, மனைவியின் கண்ணில் நீர் நின்றது. 
“நீங்க இன்னும் என்னை நம்பலை  இல்லை..” என்று அழுதவளிடம், 
“திவ்யா.. நான் கூட்டிட்டு போறேன் சரியா.. அழாதா..” என்று பொதுவாக சொல்லியே கிளம்பிவிட்ட கணவனை திவ்யா வேதனையோடு பார்த்தாள். 
“ம்மா.. யாரோ மாமியார் வீட்டுக்கே போக மாட்டேன்னு சொன்னாங்களே.. அவங்களை நீங்க எங்கேயாவது பார்த்தீங்களா..?” என்று இரவில் வந்த அண்ணனை பார்த்து மது குறும்பாக கேட்டாள். 
“உனக்கு தெரியாதா மது.. அந்த ஐந்து கடல்லே இல்லையாம்..? என்ன ரவி..?” என்று வசந்தாவும் கிண்டலடிக்க, ரவிக்கு முகத்தில் வெட்க சிரிப்பு தான். 
“போங்க என்னை கிண்டல் செஞ்சிங்க இல்லை, உங்களுக்கு அத்தை கொடுத்துவிட்ட சிக்கன் ப்ரை கிடையாது..” என்று வைஜெயந்தி கொடுத்திவிட்டதை காட்டி சொல்ல, மது சிரிப்புடன் அதை பார்த்தாள். 
ப்ரேமிற்கு அது பிடிக்கும் என்பதாலே கொடுத்து விட்டிருக்கிறார் என்று புரிய, இரவு உணவின் போது  மது கணவனுக்கு அதை பரிமாறினாள். 
“என்ன..? திடீர் சிக்கன்..” என்று கேட்டு கொண்டே சாப்பிட்டவனுக்கு அதன் சுவையில் யார் செய்தது என்று புரிய, ஓர் நிமிடம் நின்று முழுங்கியவன், அதை அப்படியே ஒதுக்கிவிட்டான். 
அதில் மதுவுக்கு வருத்தம் எல்லாம் இல்லை. அந்த ஓர் வாய் அவன் முழுங்கியதே இப்போதைக்கு  போதும் என்றே நினைத்தாள். 
“ப்பா.. தம்பிக்கு பேர் வச்சிரலாமா..?” என்று ரவி கேட்டான், 
“ம்ம். நாங்களும் உன்கிட்ட எத்தனை நாளா கேட்டுட்டே இருந்தோம், எப்படியோ இப்போவாவது ஒத்துக்கிட்டியே.. எப்போ வைக்கலாம்..?” என்று பொதுவாக  மருமகனை பார்த்து  கேட்டார். 
“ஏங்க.. அடுத்த வாரத்துல மதுக்கு ஏழாம் மாசம் ஆரம்பிக்க போகுது, வளைகாப்பும், பேர் வைக்கிற பன்க்ஷனும் ஒன்னா வச்சிரலாம் இல்லை, என்ன சொல்றீங்க மாப்பிள்ளை..?” என்று மருமகனிடமும் கேட்டார். 
“ம்ம்.. நல்லா ஐடியா தான் அத்தை.. அப்படியே செஞ்சுடலாம்..” என்று ப்ரேம் ஏற்று கொள்ள, இரண்டு பங்கஷனுக்கும் ஒரே நாள் குறிக்கபட்டது.

Advertisement