Advertisement

“ப்பா.. உங்க வேலை..” என்று கேட்டபடி தங்கையை பார்த்தவனுக்கு, அவள் அப்பாவின் முகத்தை பார்க்க முடியமால் தடுமாறி கொண்டிருக்க, அதை வருத்தத்துடன் பார்த்த ரவி, 
“ப்பா..” என்று மதுவிற்காக பேச வர, 
“ரவி.. எனக்கும்.. என் பொண்ணுக்கும் இடையில பேசவரன்னா வேண்டாம்.. எங்க ரெண்டு  பேருக்கும் இடையில யார் வர்றதும் எனக்கு பிடிக்காது, அது உங்கம்மாவே இருந்தாலும் சரி..” என்று அழுத்தமாக சொல்லிவிட, மதுவுக்கு மேலும் குற்ற உணர்ச்சி. 
அவரின் நம்பிக்கையை உடைத்த பிறகும், தன்னை யாரிடமும் விட்டு கொடுக்காமல்  தாங்கும் தந்தையின் முகத்தை எப்படி பார்க்க  முடியும்..? பொதுவாக தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு சமாதானமாகலாம். 
ஆனால் இங்கு மது செய்தது ஒருவகையான நம்பிக்கை துரோகம், தெரிந்தே செய்தது, காரணம் என்னவாக  இருந்தாலும் தந்தையிடம் மறைத்தது தவறு தானே..?
அதுவும் அவர்களின் உறவில் மன்னிப்பு என்ற வார்த்தை  சாத்தியமும் இல்லை, இன்னும் சொல்ல போனால் அவள்  மன்னிப்பு வேண்டுவதை வடிவேலுவுமே  விரும்ப மாட்டார்.. மகள் என்றும் நிமிர்ந்து நிற்க வேண்டும், அது தன்னிடமே என்றாலும்.. இதை மகளிடமும் சொல்லி வளர்ந்தவர் ஆயிற்றே, 
அப்படிப்பட்ட தந்தையிடம் மன்னிப்பு.. நினைக்கவே மனம் கசந்தது.. ஆனாலும் ப்ரேம்.. என்று தந்தைக்கும், தன்னவனுக்கும் இடையில்  அல்லாடி கொண்டிருப்பவளின் மனப்போராட்டம், ரவிக்கு தெள்ளதெளிவாக புரிய, தந்தையை பார்த்தான். 
அவருக்கும் மகளின் நிலை புரியாமல் இருக்குமா..? ஆனால் ஜாதகம்.. அதில் மிக தெளிவாக சொல்லயிருந்ததே.. இருவருக்கு இடையில் பிரிவு என்பது நிச்சயமாக உண்டு என்றும், அது  மாறாததும்.. மாற்ற முடியாததும்.. என்றும். 
இல்லையேல் பரிகாரம் செய்தாவது மகளை மனகவரந்தவனோடு பிணைத்திருப்பாரே.. என்ன செய்ய..? என்று பெருமூச்சு விட்டவர், அங்கிருந்து சென்றுவிட, மது வேதனையோடு தந்தையை பார்க்க,  ரவி இயலாமையுடன்  தங்கையை தோளோடு அணைத்து கொண்டான்.
“மாப்பிள்ளை.. உங்களுக்கு ஏதவாது ஐடியா இருந்தா சொல்லுங்க, கடையில் எல்லாம் சரியாயிருக்கா..? ஏதாவது மாத்தணுமா..?”  என்று மகளுடன் வீட்டுக்கு வந்த மருமகனை தன்னோடு கடைக்கு அழைத்து வந்த சண்முகம் கருத்து கேட்க, எல்லாவற்றையும் ஆராய்ந்து  பார்த்த ரவிக்கு சண்முகத்தின் உழைப்பு ஒவ்வொரு இடத்திலும் தெரிந்த்து. 
ஒருமுறை அடிப்பட்ட அனுபவம், அவரை மேலும் மெருகேற்றியிருக்க, அது கடையின் ஒவ்வொரு இடத்திலும் மின்னியது.  
“மாமா.. எல்லாம் சரியா இருக்கு, இந்த லேடிஸ்  சேரி செக்ஷனை மட்டும் கீழே கிரவுண்ட் புளோர்க்கு மாத்திடுங்க, அப்போதான் வயசானவங்களுக்கு எல்லாம் எடுக்க ஈஸியா இருக்கும்..”
“ மத்தபடி கடை உண்மையிலே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப மெனெக்கெட்டுருக்கீங்கன்னு நல்லா தெரியுது மாமா..” என்று சொல்ல, சண்முகமுத்திற்கு முகம் கசங்கி மலர்ந்தது. 
“நன்றி மாப்பிள்ளை.. பாதாளம் வரைக்கும் விழுந்து எழுந்திருக்கேன், இது கடவுள் எனக்கு கொடுத்த ரெண்டாவது வாய்ப்பு, இதை வீணாக்க விடமாட்டேன் மாப்பிள்ளை..” என்று உணர்ந்து சொன்னவர், 
“இதுல என்னோட உழைப்பு மட்டுமில்லை மாப்பிள்ளை, நம்ம குமார்.. ப்ரேமோட ப்ரண்ட்.. அவனுக்கும், அந்த டீலருக்கும்  கூட  நிறைய நன்றி  சொல்லணும் மாப்பிள்ளை, நமக்காகவே புது புது கலெக்ஷனா செஞ்சு தராங்க,  வேறெங்கேயும் அந்த டிசைன் எல்லாம் கிடைக்கிறதில்லை..”
“அவரை பார்த்து நானே நன்றி சொல்லணும் நினைச்சிட்டிருந்தேன், ஆனா அவரே என்னை பார்க்க போனவாரம்  நம்ம  கடைக்கு வந்திருந்தார், அன்னிக்கு பார்த்து நான் ரெகுலர் செக்கப்புக்ககாக ஹாஸ்பிடல் போயிட்டேன்..”
“உங்க அப்பா.. சம்மந்தி அவருக்கும் நம்ம  டீலரை தெரியும் போல,  வழியில பார்த்து   டீலரை நம்ம கடைக்கு  கூட்டிட்டு  வந்திருந்தார் போல..”  என்று சொல்லிக்கொண்டே போக ரவிக்கு எல்லாம் புரிந்து போனது. 
“ஓஹ்..  அப்பாக்கு இப்படிதான்  தெரிஞ்சிருக்கு.. ச்சே அந்த டீலர்கிட்ட சொல்லாம  விட்டுட்டோமே.. நல்ல வேளை மாமா அன்னிக்கு இங்க  இல்லை.. இல்லாட்டி இவருக்கு தெரிஞ்சு, ப்ரேமுக்கு தெரிஞ்சு.. மது.. அவ்வளவுதான் ஆகியிருப்பா..”  என்று மனதுள் ஆசுவாசப்பட்டவன், கிடைத்த தனிமையில் தங்கைக்கு அழைத்து சொன்னான். 
“ம்ப்ச்.. நானும் டீலரை பத்தி யோசிக்கலண்ணா..”  என்று நொந்தவள், “இப்போவே  அவருக்கு போன் செஞ்சு மாமாகிட்ட எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிடுறேன்..” என்று முடித்தவள், 
“அண்ணி எப்டியிருக்காங்க..?” என்று பொதுவாக பேசி வைத்தவள், சொன்னபடி உடனே டீலருக்கு அழைத்துசொல்லிவிட்டாள். அவரோ, 
“மது.. அப்பா அன்னிக்கே சண்முகத்துக்கிட்ட எதுவும்  சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ம்மா..”  என்றுவைத்துவிட, மது அடைத்த தொண்டையுடன் தன்னுடைய சின்ன பொட்டிக்கில் நின்று வேலை வாங்கி கொண்டிருந்த தந்தையை பார்த்தாள்.  
அவரும் அவளுடனே வசந்தாவை அழைத்துகொண்டு சென்னை வந்துவிட்டார்.. இந்த சின்ன ஆர்டருக்காக.. என்று மனதில் தோன்றிய வலியுடன் லேசாக சிரித்தாள்.  
அவளுக்குத்தான்  இது மிகப்பெரிய ஆர்டர், ஆனால் வடிவேலுவிற்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை, அவரை  பொறுத்தவரை இப்போது செய்து கொண்டிருப்பது மிகச்சின்ன ஆர்டர்தான்.. 
இவளுடையது எல்லாம் ஆயிரம் எண்ணிக்கை டெலிவரிலே முடிந்துவிடும், அவருடைய ஆர்டர் எல்லாம் லட்சங்களில் இருக்கும்.. உதாரணமாக பல ஸ்கூல் யூனிஃபார்ம், கம்பெனி யூனிஃபார்ம்..  என்று மிக பெரிய அளவில் இருக்கும், 
ஆனாலும் இதையும் நின்று அவளுக்காகவே  பார்த்து பார்த்து செய்யும் அவரை நெருங்கவே மதுவிற்கு முடியவில்லை, துணிவும் இல்லை, முகமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  
“மேம்.. எல்லாம் அனுப்பியாச்சு.. சூப்பர்..”  என்று கடைசி நாளில் ஆர்டரை வெற்றிகரமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் மீனா குதிக்க, மற்றவர்களும் கைதட்டி தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். 
இதை எல்லாம் பார்த்தபடி நின்றிருந்த வடிவேலுவிற்கு, “இதுக்கேவா..?”   என்று லேசாக சிரிப்பு வந்துவிட, அதை பார்த்துவிட்ட மகள், அவரின் மனவோட்டத்தை புரிந்து தங்களின் மனப்பிணக்கை மறந்து, 
“ப்பா..”  என்று செல்லமாக சிணுங்கி அவரின் தோள் சாய்ந்து கொண்டாள். இதை எதிர்பார்க்கா வடிவேலு மகளை அணைக்க முடியாமல் தடுமாற, அதிலே மதுவிற்கு அன்றைய நிலை ஞாபகம் வர, அவளே வலியுடன்  விலகி கொண்டாள். 
அன்றைய இரவு உணவு எப்போதும் போல் அமைதியாக நடக்க, “வசந்தா.. நாம நாளைக்கு ஊருக்கு கிளம்பனும்..” என்று வடிவேலு மகளை பார்த்தபடி சொன்னார். இருவரும் இந்த ஒரு வாரமாக மகளுடனே அவளின் பிளாட்டில் தங்கி கொண்டிருந்தனர். 
“ரவி.. நாளைக்கு இங்க வந்துதான் பெங்களூர் போறதா சொல்லயிருக்காங்க..” என்று வசந்தா சொல்ல, 
“ஓஹ்..” என்ற வடிவேலு, “சரி.. அப்போ அவன் வந்து போனதுக்கு அப்பறம் கிளம்பிடலாம்..” என்று எழுந்து சென்றுவிட, மது அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அமர்ந்துவிட்டாள். 
இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், ஒன்றாக வேலை பார்த்தாலும் தேவைக்கு மட்டுமே பேசி கொண்டிருந்தனர். வடிவேலுவிற்கு மகள்  மேல் ஏமாற்றம், வருத்தம், மெலிதான கோவம் என்றால் மதுவிற்கு குற்றஉணர்ச்சி.. 
இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருக்க, அந்நேரம் ப்ரேம் மதுவிற்கு அழைத்தான். மது எப்போதும் அவனின் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால் இப்போதும் சைலண்ட்டில் போட்டுவிட்டாள். 
ஆனால் ஏனோ இம்முறை ப்ரேம் விடாமல் அடிக்க,  மதுவிற்கு  என்னமோ ஏதொன்று என்ற தவிப்பு எழ, தந்தையை தயக்கத்துடன் பார்த்தாள். மகளின் முகத்தை பார்த்த வடிவேலு சுருங்கிய முகத்துடன்  எழுந்து ரூமிற்குள் சென்றுவிட, மது உடனே ப்ரேமின் காலை அட்டென்ட்  செய்தாள். 
“மித்ரா..” என்ற ப்ரேமின் குரலில் தெரிந்த சோர்வில் யோசனையான  மது, 
“என்ன ஆச்சு..? ஏன் இப்படி விடாம கூப்பிடுறீங்க..? ஒன்னும் பிரச்சனையில்லயே..? ஆர் யூ ஓகே..?” என்று கேட்டாள்.
“உன் ஆர்டர் முடிஞ்சிருச்சா..?” என்று அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் கேட்டவனிடம்,

“முடிஞ்சது.. நீங்க எப்படி இருக்கீங்க..?”  என்று கேட்டாள்.  
“இருக்கேன்..  எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”  என்றவன், 
“நான் செஞ்சிட்டுருக்கிற ப்ராஜெக்ட் இன்னும் கொஞ்ச வாரத்துல முடிஞ்சுடும்.. அதுக்கப்பறம்.. அந்த ப்ராஜெக்ட்டோட எக்சிடென்க்ஷனுக்காக என்னை கேட்கிறாங்க..” என்று சொல்ல, அவன் எங்கு வருகிறான் என்று புரிய மதுவிடம் மௌனம். 
“மித்ரா.. நான் சொன்னது கேட்டுச்சா..? அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும் சொல்லு..? என்று அழுத்தமாக கேட்டான். 
“அது எத்தனை வருஷம் ஆகும்..?” என்று மது கேட்க,
“அது போகும் ஒரு ரெண்டு மூணு வருஷம்..” என்று சொல்ல, மதுவிற்கு மலைப்பு. 
“சொல்லு.. என்ன செய்யட்டும்..? நீ சொல்றதைத்தான் செய்ய போறேன், அது எதுவாக இருந்தாலும் சரி.. நீயே சொல்லு..?” என்று அவளின் பதிலிலே நின்றான். 
“உங்களுக்கு என்ன தோணுது..?” என்று மது கேட்க,  
“எனக்கு என்ன தோணுது..? இப்போவே சென்னை கிளம்பி வந்து உன்னை தாலி கட்டி தூக்கிட்டு வந்திடனும்ன்னு தோணுது.. செய்யவா..?” என்று கோவத்தோடு கேட்க, மது என்ன சொல்லுவாள்..? அதே மௌனம். 
“மித்ரா.. எனக்கு பதில் வேணும்.. இப்படியே அமைதியா இருந்த கொன்னுடுவேன்.. என்ன செய்யட்டும் சொல்லு..” என்றவனின் குரல் போனை தாண்டி ஹாலில் ஒலித்தது. 
“ஷ்ஷ்.. ஏன் இப்படி கத்துறீங்க..?”   என்று அப்பாவின் ரூமை எட்டி பார்த்து கேட்டவளிடம், 
“எப்படி என்னால பொறுமையா பேசமுடியும்..? இப்படி தான்  வரும்.. நீ சொல்லு..? உன்னோட பதில்ல தான் என்னோட முடிவு இருக்கு..” என்று லேசான எதிர்பார்ப்போடு கேட்க, அதை புரிந்து மதுவிற்கு ஏதும் செய்ய முடியா இயலாமை கோவமாக மாற, 
“இப்படி உடனே சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்ன செய்யட்டும்..?” என்று  கோபத்துடன் வெளிப்பட கேட்டாள். 
“சரி.. நான் நாளைக்கு கால் பண்றேன்.. பதில் சொல்லு.. இந்த முறையாவது என்னை நினைச்சு முடிவெடு.. இதுக்கும் மேலயும் என்னால  வெய்ட் செய்ய முடியாதுடி..”  என்று வைத்துவிட, வசந்தா சோர்ந்து போய் அமர்ந்திருந்த மகளிடம் வந்தார். 
“மது.. என்னடா ஆச்சு..?”  என்று பரிவாக  கேட்க, மது மறைக்க தோன்றாமல் எல்லாவற்றையும் சொன்னாள். 
“இப்போ என்னடா பண்றது..?” என்று வசந்தா மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையாக கேட்க, 
“தெரியலம்மா..”  என்ற மதுவின் குரலில் தெரிந்த  வெறுமை, உள்ளே இருந்து எல்லாவற்றையும் கேட்டபடி இருந்த வடிவேலுவிற்கு புரிந்தது.

Advertisement