Advertisement

அவளே என் பிரபாவம் 9
“நான் என்ன சொல்ல வரேன்னா..? மது அந்த பணத்தை..”  என்று இரவு தூங்க ரூமிற்கு வந்தபிறகும் திவ்யா விடாது அந்த பணத்தை பற்றி பேச, கடுப்பான ரவி, அவளை மேலே பேசவிடாமல்,
“வேண்டாம் திவ்யா.. எதுவும் பேசாத.. நீ  பேசினவரைக்குமே போதும்..”  என்ற  கோபக்குரல் மனைவியை உசுப்பேற்ற, 
“ஏன்..? நான் ஏன் பேசக்கூடாது..? அப்படியென்ன நான் இல்லாததை பேசிட்டேன்..? உங்க தங்கச்சி செஞ்சதை தானே கேட்டேன், அதுக்கு போய் எல்லோரும் என்னையே பழி சொல்றீங்க..?” என்று மல்லுக்கு நின்றவளை எரிச்சலாக பார்த்தவன், 
“திவ்யா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ, அந்த பணம்.. அது மதுவோட சொந்த உழைப்பு..  இதை பத்தி பேச உனக்கு மட்டுமில்லை எனக்குமே எந்த ரைட்ஸும்  இல்லை, அப்பா சொன்னார்தானே..?” என்று கேட்க,
“சரி.. அது அவ உழைப்பு, ஆனா இப்போ வீட்ல இருந்து  கொடுத்த பணம், அது நம்மதுதானே..?” என்று கேட்டவளை நக்கலாக பார்த்த ரவி, 
“என்ன சொன்ன..? நம்ம பணமா..? அது  எப்படிமா நம்ம பணமாகும்..?  நான் ஒன்னும் உழைச்சு எங்க அப்பாகிட்ட கொடுத்து வைக்கலியே, இன்னும் சொல்ல போனா இதுவரைக்கும் எங்க அப்பா என்கிட்ட இருந்து ஒரு ரூபா கூட வாங்கினதில்லை..”
“அப்படி இருக்கிறப்போ வீட்ல கொடுத்த பணம்  எப்படி நம்ம பணமாகும்..?  ஒருவேளை எங்க அப்பாகிட்ட   நீ எதாவது கொடுத்து வச்சிருந்தியா என்ன..? என்று கேட்டுவிட, திவ்யாவின் முகம் கன்றி போனது, 
“அப்போ எனக்கு கேட்க எந்த உரிமையும் இல்லையா..?”  என்று விடாமல் கேட்டாள். 
“உரிமை..? என்ன உரிமை..? என் தங்கச்சியை சும்மா சும்மா நோண்டிட்டே இருக்கிற உரிமையா..?  என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு நீ இப்படி ஆடிட்டிருக்கிற..?”
“ நீ என்னை  நல்ல பொண்டாட்டியா தாங்கி உன் முந்தானையில முடிஞ்சுக்கலாம்ன்னு நினைக்கிறியா..?  வீணா பகல் கனவு காணாத, இப்போ வந்த உன்னையே நான் இவ்வளவு பொறுத்து போறப்போ, என் தங்கச்சி.. என் ஒரே இரத்த சொந்தத்தை  எப்படி தாங்குவேன்..?”
“இங்க பாரு திவ்யா.. உனக்காக  எல்லாம் நான் என் பேமிலியை, என் தங்கச்சியை விட்டு கொடுப்பேன்னு கனவுல கூட நினைக்காத, அது எந்த காலத்திலும் நடக்காது..” என்று அழுத்தமாக சொல்ல திவ்யா பதில் சொல்ல முடியாமல் மெலிதான பயத்துடன் கணவனை பார்த்தாள். 
“அப்பறம் இந்த வீட்டு பணத்தை பத்தி எல்லாம் நீ பேசவே கூடாது,  இது எல்லாம் எங்க அப்பாவோட உழைப்பு, அவரோட சொந்த சம்பாத்தியம், அதை அவர் யாருக்கு வேணுமானாலும் கொடுப்பார், அதை பத்தி கேட்க எனக்கே ரைட்ஸ் இல்லாதப்பா உனக்கு எங்கிருந்து வந்தது..?”
“மறுபடியும் இதை பத்தி பேசி அசிங்கபட்டுக்காத, எங்க அப்பா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டார்..” என்று எச்சரிக்கையாக சொல்லி படுத்திவிட, திவ்யா வாயடைத்து நின்றாள். 
“அந்த மதுவை பற்றி பேசினாலே சண்டைதான்..”  என்று வெறுப்புடன் முணுமுணுத்து படுத்துக்கொண்டவளுக்கு கணவனை எப்படி மலையிருக்குவது என்ற மலைப்பு உண்டானது, ரவிக்கு அவ்வளவு லேசில் கோவம் வராது, வந்தால் போகவும் போகாது.. 
“என்ன செய்ய..? நாளைக்கு அம்மா வீட்டுக்கு வேற போலாம்னு நினைச்சிருந்தேனே..?”  என்ற யோசனையுடனே படுத்துவிட்டவள், மறுநாள் காலை எழுந்ததே எட்டு மணிக்குத்தான்.
“அச்சச்சோ..” என்று அரக்கபறக்க எழுந்தவளுக்கு லேசான தள்ளாட்டம் ஏற்பட, சமாளித்து கிளம்பி கீழே வந்தாள். 
“சாரி அத்தை.. தூங்கிட்டேன்..”  என்று வசந்தாவிடம் சென்று  மன்னிப்பு கேட்க, அவளுக்கு பதில் சொல்லும் மனம் இல்லாமல் காலை உணவு தயார்  செய்து கொண்டிருந்தார் வசந்தா. 
“அத்தை..”  என்று புதிதான அவரின் புறக்கணிப்பில் மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறியபடி ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்த கணவனை பார்த்தாள். 
அவன் எதுவும் பார்க்காததுபோல்  மிகவும் சீரியசாக படித்து கொண்டிருந்தாலும், மனம் அம்மாவின் கோவத்தை புரிந்து கொண்டது. “எந்த தாய்க்கு தான் மகளை நோகவைக்கும் மருமகளை மன்னிக்க தோன்றும்..? அதுவும் திவ்யாவை போல் வேண்டுமென்றே மகளை சீண்டும் மருமகளிடம் பேசதோன்றும்..? 
இதை ஏதும் புரிந்து கொள்ளாமல் தன்னுள்ளே வாழும் திவ்யா, “அப்படியென்ன எல்லோருக்கும் என் மேல கோவம்..? அவ செஞ்சதை தானே  கேட்டேன், அது ஒரு குத்தமா..? என்று மனதுள் அப்போதும் மதுவை அர்ச்சித்தபடி நின்று கொண்டிருந்தவளுக்கு  மறுபடியும் லேசான தள்ளாட்டம்  உண்டாக பக்கத்தில் இருந்த சேரை பிடித்து நின்றவளுக்கு அதற்கு மேல் என்ன நடக்கிறது என்று புரியும் முன் கீழே விழுந்திருந்தாள். 
“திவ்யா.. திவ்யா..”  என்று மருமகள்  கீழே சாயவும், பதறிபோன வசந்தா மருமகளை ஓடி சென்று தாங்கி கொண்டு எழுப்பியவர், “ரவி..”  என்று மகனுக்கு குரல் கொடுத்தார். அவன் “திவ்யா..” என்ற அம்மாவின் சத்தத்திலே ஓடிவந்திருந்தவன், மனைவியை தன் கையில் ஏந்தி சென்று சோபாவில் படுக்க வைத்தான். 
வசந்தா தண்ணீர் தெளித்து எழுப்ப, சோர்வாக எழுந்து அமர்ந்தவளை  தன் மேல் சாய்த்து தண்ணீர்  குடிக்க வைத்த வசந்தாவின் முகம் பலகணக்குகளை போட்டு மலர்ந்தது. அவர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி தான் என்று புரிய கண்ணில் நீர் தேங்கியது, 
“திவ்யா.. நீ எப்போ கடைசியா தலைக்கு ஊத்தின..?” என்று மருமகள் சிறிது தெளியவும் எதிர்பார்ப்போடு கேட்க, ரவிக்கும், திவ்யாவிற்கும்  உண்மை புரிய   முகம் சந்தோஷத்தில் மின்னியது. 

“அத்தை..”  என்று அவரை அணைத்து கொண்டு கண்ணீர் விட்டவளை வசந்தாவும் தன்னோடு சேர்த்தணைத்து கொண்டார். திருமணம் முடிந்து வருடத்திற்கு மேலான பிறகும் தாய்மை பேரை பெற முடியாமல் துடித்திருந்தவளுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் ஆறாக வழிந்தோடியது. ரவிக்கும் மனம் நிறைந்து போக, மனைவியை காதலாக பார்த்தான். 
“என்னம்மா ஆச்சு..?”  என்று வந்த மதுவிற்கும், வடிவேலுவுக்கு நல்ல செய்தி சொல்லபட இருவரின் முகமும் மலர்ந்து போனது. மது உடனே  உள்ளே ஓடி சென்று ஸ்வீட் கொண்டுவந்து  ரவிக்கு கொடுத்தவள், தந்தைக்கும்  கொடுக்க, அவரும் மகளை வருத்தாமல் எடுத்து கொண்டார். 
அடுத்து தன்  தாய்க்கும் ஊட்டியவள், இறுதியாக தயக்கத்துடன் திவ்யாவிற்கு கொடுக்க, மறுக்க தோன்றாமல்  மகிழ்ச்சியுடன் எடுத்து கொண்டாள். 
“வசந்தா.. நம்ம பேமிலி டாக்டருக்கு போன் செஞ்சு அப்பாயிண்ட்மென்ட் போட்டுடுறேன்.. காலையிலே போய் பார்த்துட்டு வந்துடுங்க..” என்ற வடிவேலு, 
மருமகளிடம் “பார்த்துக்கோம்மா..” என்று தலையை தடவி பாசமாக சொல்லவிட்டு செல்ல, திவ்யாவிற்கு  சந்தோஷத்தோடு பெருமையாகவும் இருந்தது. 
வடிவேலு சொன்னது போல் ஹாஸ்பிடல் சென்று பார்த்தவர்களுக்கு திவ்யா  கருவுற்றிருப்பது கன்பார்ம் ஆக, அவளின் பிறந்த வீட்டாருக்கு தகவல் சொல்லபட, அவர்களும் உடனே கிளம்பி சம்மந்தி வீடு  வந்தனர். 
ப்ரேமும் போன் செய்து தங்கையை சீராட, புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டும் அவளை தாங்க, திவ்யாவிற்கு இறங்கிய கிரீடம் மறுபடியும் மேலேறி போனது போல் ஆனது,
“சம்மந்தி.. ஒரு நாலு நாளைக்கு பொண்ணை என்னோட கூட்டிட்டு போறேன்..”  என்று சண்முகம் கேட்க, வடிவேலு வசந்தாவையும், ரவியையும் பார்த்தவர், அவர்களின் ஒப்புதல் தெரிய,

“சரிங்க.. தாராளமா கூட்டிட்டு போங்க..”  என்றுவிட்டார். 
“சந்தோசம் சம்மந்தி..” என்ற சண்முகம், “மாப்பிள்ளை நீங்களும் வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்.. நீங்க அங்க நம்ம வீட்ல வந்து தங்கி மாசக்கணக்காகுது,  வாங்க மாப்பிள்ளை..” என்று மருமகனையும் கூப்பிட, ரவி சங்கடத்துடன் வீட்டினரை பார்த்தவன், மறுக்க முடியாமல் “சரி..” என்றுவிட்டான். 
“ம்மா.. அவர் நம்ம வீட்டுக்கு வர ஒத்துக்குவார்னு நான் நினைச்சே பார்க்கலை.. எத்தனை டைம் கெஞ்சியிருக்கேன் தெரியுமா..? வரவே மாட்டார், இப்போ பாரேன்..”  என்று பிறந்த வீடு செல்ல கிளம்ப மேலேறி வந்த திவ்யா உடன் உதவிக்கு வந்த தன் அம்மாவிடம் சந்தோசகமாக சொன்னாள். 
“பின்ன இந்த வீட்டு வாரிசை சுமந்திட்டிருக்கிறதுன்னா சும்மாவா..? இனிமே பாரு எல்லோரும் உன் கைக்கு வந்துருவாங்க..” என்று வைஜெயந்தி மகளை தூக்கிவைத்து  பேச, திவ்யாவிற்கு மேலும் பெருமை கூடி போனது.  
அவளின் அந்த பெருமை  அகம்பாவமாய் மாறும் நாள் தான் அவளுக்கு வினை வந்து சேரும் என்று தெரியாமல் பெருமைபட்டு கொண்டிருந்தாள். 
“மது.. தனியா சமாளிச்சிப்ப இல்லை, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு, அந்த சரக்கு வேற கொஞ்சம் சரியில்லைன்னு சொன்னாங்க, அதை என்னன்னு பார்க்கணும், நான் வந்தா உனக்கு உதவியா இருக்கும் இல்லை.. ஏன் என்னை போக சொன்ன..?”  என்று தங்கையிடம் மனத்தாங்கலாக கேட்டான் ரவி. அவன் சண்முகம் கேட்கவும் தங்கையை தான் பார்த்தான், அவள் போகச்சொல்லி சைகை காட்டவும் தான் சரியென்றிருந்தான். 
“ண்ணா..  இந்த ஆர்டரை எல்லாம் மறந்துடு,  இதை நான் பார்த்துகிறேன், நீங்க அண்ணியை பாருங்க, ரொம்ப நாள் எதிர்பார்த்து, ஏங்கி போய் கிடைச்சிருக்கு, அதை அனுபவிங்க, நீங்களும் சந்தோஷமா இருங்க, அண்ணியையும் சந்தோஷமா வச்சுக்கோங்க..” என்று மது மகிழ்ச்சியுடன் அண்ணனின் கைபிடித்து சொல்லி கொண்டிருக்கும் பொழுது,  
“மது சொல்றது சரி ரவி.. நீ மருமகளை பார்த்துக்கோ, ஆர்டரை  நான் பார்த்துகிறேன்..” என்று அங்கு  வந்த வடிவேலு சொல்லவும், ரவிக்கு ஆச்சரியம் என்றால், மதுவுக்கு குற்ற உணர்ச்சி. 

Advertisement