Advertisement

“என்ன சொன்ன..? அப்பா உன்னோட  சந்தோஷத்துக்காகதான் இந்த முடிவை எடுத்தார்ன்னு.. அதுபடி பார்த்தா இப்போ  நீ  ரொம்ப  சந்தோஷமா இல்லை  இருக்கணும்..” என்று அவளின் சோர்ந்த  முகத்தை  பார்த்து சொல்ல, ஓர் நொடி அமைதியாயனவள், 
“ண்ணா.. அப்பா ஒரு நாள் இல்லை ஒருநாள் கண்டிப்பா புரிஞ்சுப்பார், என்னோட சந்தோஷம் எங்க.. யார்கிட்ட இருக்குன்னு..” என்று உறுதியாக சொல்ல, நம்பிக்கை இல்லாமல்  தலையை ஆட்டிக்கொண்ட ரவி எதுவும் பேசாமல் முகம் திருப்பி  கொண்டான்.  
“ரவி.. ரெடியா..? மணவறைக்கு போகணும்..”  என்று மணக்கோலத்தில் தயாராக இருந்த மகனிடம்  வந்த வசந்தா, மது  உடன் உறவினர்கள்  புடைசூழ ரவி  மணவறைக்கு  செல்ல, திருமண சடங்குகள் ஆரம்பமாகின. 
சில நிமிடங்களில் திவ்யாவையும்  மணவறைக்கு அழைத்து வர, ரவியின் கண்கள் தங்களின் மனசுணக்கத்தையும் மீறி அவள் மீது ஆவலாக படிந்தது. திவ்யாவுமே அவளின் கல்யாண கனவுகளில் ஜொலித்தவள் ரவியை ஓரக்கண்ணால் பார்த்தாள். 
இருவருமே அந்த நிமிடங்கள் தங்களின் திருமணத்தை பற்றி மட்டுமே நினைத்து மனதார சடங்குகளை செய்ய,  ரவியின் கையில் தாலி கொடுக்கப்பட அவனும்  ஆசையுடனே திவ்வியாவின் கழுத்தில்  கட்டி அவளை தன் மனைவியாக ஏற்றுகொண்டான். 
அந்த நொடி ப்ரேம், மது இருவரின் உள்ளமும் உடன் பிறப்புகளுக்காக மகிழ்ச்சி கொண்டாலும், அவர்களின் நிலையை நினைத்து வலி தோன்றாமல் இல்லை, அதனாலே இருவரின் பார்வையும் மற்றவரை தேடியது.  
அடுத்த சில மணிநேரங்களில் எல்லா சடங்குகளும் முடிந்து திவ்யா புகுந்த வீட்டில் விளக்கை ஏற்றி அவ்வீட்டின் மருமகளாக தன்னை நிலை நிறுத்தி கொண்டாள். 
“மதுமா.. போதும் எல்லா வேலையும் முடிஞ்சது, நீ போய் ரெஸ்ட் எடு..” என்று வடிவேலு தன் கையாலே மகளுக்கு பால் கொடுத்து தூங்க சொல்லி வற்புறுத்தி கொண்டிருக்க, திவ்யாவின் பார்வையும், மகளுக்கு துணையாக வந்த வைஜெயந்தியும் பார்வையும் அவர்களை வெறுப்புடன் வெறித்தது. 
“ம்மா.. இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை, என்னமோ மகள்  வானத்துல இருந்து குதிச்சது போல என்னமா ஸீன் போடுறாரு.. தாங்கமுடியல.. பார்க்கவே வெறுப்பா இருக்கு..” என்று திவ்யா வெளிப்படையாக தன் வெறுப்பை கக்க, “ஸ்ஸ்..” என்று சுற்றும் முற்றும் பார்த்த வைஜெயந்தி, 
“திவ்யா.. இப்படி பேசிவைக்காத, அப்பறம் உனக்கு தான் கேட்ட பேர், பொறுமையா இருந்து எல்லோரையும் உன்பக்கம் திருப்பிற வழியை பாரு, இனி உனக்குத்தான் இந்த வீட்ல முழு உரிமையும் இருக்கு, அதை அந்த மதுமித்ராக்கு  காட்டு..” என்று மகளுக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் வைஜெயந்தி. 
“இங்கதான் இருக்கீங்களா..?” என்று மாலையில் தோட்டத்தில் அமர்ந்து காபி குடித்தபடி பேசி கொண்டிருந்த வடிவேலுவிடமும், மதுவிடமும் வந்து நின்றான் ரவி. 
“வாண்ணா.. உனக்கு காபி..” என்று கேட்டவாறே அவனுக்கும் காபி ஊற்றி கொடுத்த மதுவிடம் வாங்கி கொண்டு அவர்களுடனே அமர்ந்துவிட்டவன், 
“என்னப்பா ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கீங்க..?”  என்று தங்கையின் முகத்தில் தெரிந்த அதிருப்தியை பார்த்தவாறே கேட்டான். 
“நானே உன்கிட்ட பேசணும்ன்னு தான் இருந்தேன் ரவி, அது நம்ம சம்மந்தி கடை இருக்குல்ல அது சேலுக்கு வருது போல, அதை பேசாம நாமளே வாங்கிட்டா என்ன..?” என்று சொல்ல, ரவி தங்கையை பார்த்தவன், 
“அது சரியா வராதுப்பா..” என்றான் பட்டென. 
“ஏண்டா.. நீயும் மது மாதிரியே சொல்ற, அந்த கடை நம்மதை போல மெயின்லே இருக்கு, கொஞ்சம் கஷ்டப்பட்டா அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்துடலாம்..” என்று வடிவேலு விடாமல் சொன்னார். 
“ப்பா..  ஏன் இப்படி  அவசரபடுறீங்க..? பார்க்கலாம் இருங்க..” என்று மது பொறுமையாக சொல்ல, 
“இல்லைடா.. அந்த கடையை உனக்காகத்தான் வாங்கலாம்ன்னு பார்க்கிறேன், ரவிக்கு ஒரு கடை,  உனக்கு ஒரு கடை இருக்கட்டும்..” என்று வடிவேலு சொல்லவும், மதுவுக்கு விரக்தி சிரிப்பு. 
“ப்பா.. எனக்குத்தான் சென்னையில இருக்கு இல்லை, அதுவே போதும், இது வேண்டாம்.. இனி அதை பத்தியே பேசாதீங்க..” என்று முடிவாக சொன்னவள், 
“அதோட நமக்கு அவங்க கடையை விக்கறாங்கனு  உறுதியாவும் தெரியாது, யாரோ சொன்னாங்கன்னு  பேசாதீங்கப்பா, முன்னபோல இல்லை, அவங்க நமக்கு  இப்போ சம்மந்தி, தப்பா போயிட்டா எல்லோருக்கும் கஷ்டம்..” என்று சொல்லவும், பெருமூச்சு விட்ட வடிவேலு, 
“எனக்கு நம்பிக்கையான இடத்துல இருந்து தகவல் வந்தது, அதனாலதான் கேட்டேன், சரி பார்க்கலாம்..”  என்றவரின் போன் ஒலிக்க எடுத்து பேசியவர், 
“நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்..” என்று பிள்ளைகளிடம் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டார். 
“மதுமா.. என்னடா இது எல்லாம்..? ஒன்னும் சரியாபடல..”  என்று ரவியை தயக்கத்துடன் பார்த்த மது, 
“ண்ணா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள்.
“என்ன மது..?   என்கிட்ட என்ன தயக்கம்..? என்னன்னு  சொல்லு..?”  என்று தங்கையிடம் பொறுப்பாக கேட்டான். 
“அது.. நீ உன்னோட கடமையை செய்யணும்..” என்றாள். 
“ஓஹ்.. யாருக்கு..?” என்றான் கூர்மையாக. 
“உங்க மாமியார் வீட்டுக்கு..” என்று மது சிரிப்புடன் சமாளித்தாள். 
“ஓஹ்.. அப்படி, சரிதான், அப்பறம் மதுமா அது என்னோட மாமியார் வீடு மட்டும் தானா..? இல்லை..” என்று இழுக்க, 
“உனக்கெப்படி தோணுது..?” என்றாள். 
“எனக்கா..? அது உனக்குத்தான் முதல்ல மாமியார் வீடு போல தோணுது..” என்றுவிட்டான். 
“புரிஞ்சா சரிண்ணா..” என்று மது சிரிப்புடன் ஒத்துக்கொள்ள, அவளை கவலையாக பார்த்தவன், 
“அப்பா.. அவர் எப்படி உன்னோட ஆசைக்கு  சரி சொல்வார்..? உன் விஷயத்துல அவர் ஒரு பெர்சன்ட் கூட ரிஸ்க் எடுக்க மாட்டார், அப்படி இருக்க இது நடக்குமா..? அவரோட பெரிய பலவீனமே நீதான் மதுமா..” என்று ரவி அண்ணனாக கவலை கொண்டான்.
“ஆனா என்னோட பலமே அப்பா தான்ண்ணா.. இது கண்டிப்பா நடக்கும்.. எத்தனை வருஷம் ஆனாலும்..” என்று உறுதியாக தன் நிலைப்பாட்டை சொல்லிவிட, மதுவை பற்றி தெரிந்ததால் இதற்கு மேல் பேசி பயனில்லை என்று புரிந்த ரவி, 
“சரி சொல்லு.. நம்ம  மாமியார் வீட்டுக்கு என்ன கடமையை செய்யணும்…?” என்றான். 
“அது.. முதல்ல நீ  உன் மச்சான்கிட்ட பேசணும், அப்பறம் நம்ம டீலர்கிட்ட பேசணும், அப்பறம்  பேங்க்ல பேசணும்.. அப்பறம்..” என்று அவள் தொடர்ந்து சொல்ல, கேட்டிருந்த ரவி பொறுமையில்லாமல் இடையிட்டான். 
“மது.. நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?”  என்ற ரவியின் கேள்விக்கு, உறுதியாக தலையசைத்த மதுமித்ரா, 
“நிச்சயமாண்ணா.. நான்  நல்லா தெளிவா யோசுச்சு தான் பேசுறேன், அவசரப்பட்டோ, நிதானம் இல்லாமலோ, யோசிக்காமலோ பேசல..” என்றாள் மிக தெளிவான குரலில்.  
“எனக்கு இது பிடிக்கல மது, உன்னோட ட்ரீமை இப்படி சிதைக்கிறது..? ம்ஹூம்.. வேண்டாம், இதுக்கு வேற வழி எதாவது இருக்கான்னு பார்ப்போம்..” என்றான். 
“ண்ணா.. எப்போ ப்ரேம் என்னோட வாழ்க்கையில வந்தாரோ அதுல இருந்தே எல்லாமே என்னோடதா..  இல்லாம  எங்களோடதா மாறிடுச்சு, அவருக்கு இல்லாததன்னு என்கிட்ட எதுவும் இல்லை..”, 
“ப்ளீஸ்ண்ணா.. இதுல  எதுவும் மறுத்து சொல்லாத, அப்புறம் உன்னை மீறி செஞ்சதா ஆயிடும்..” என்று தீவிரமாக சொல்ல, அவளின் பேச்சு உள்ளர்த்தம் புரிந்து சிரித்தவன், 
“ம்ம்.. அந்தளவு ஆயிடுச்சா.. இருக்கட்டும், சொல்லு.. என்ன செய்யலாம்..?” என்று தங்கையின் உறுதியான முடிவு புரிந்து வேறு வழியில்லாமல் தன்னையும் சேர்த்து கொண்டான். 
“தேங்க்ஸ்ண்ணா..”  என்று முழுவதுமாக தன்னுடைய யோசனையை சொன்ன மதுவை மெச்சுதலாக பார்த்த ரவி,  
“ம்ம்.. நல்ல பிளான் தான் மது, சரி.. முதல்ல ப்ரேம்கிட்ட பேசிடுறேன் இரு..” என்று ப்ரேமிற்கு கால் செய்தவன், முதல் சில நொடிகள் பொதுவாக பேசினான்.  
“அப்பறம் ப்ரேம்.. நம்ம கடையை பத்தி கொஞ்சம் பேசணும்.. பேசலாமா..?” என்று தயக்கத்துடன் நிறுத்திய ரவியிடம், 
“ஏன் இவ்வளவு தயக்கம் ரவி..? என்ன பேசணுமோ பேசுங்க..” என்று ப்ரேம் சொல்லவும், ரவி  மது சொல்லிய முதல் பகுதியை மட்டும் சொல்ல, சற்று நேரம் அமைதியாக இருந்த ப்ரேம், 
“ரவி.. பக்கத்துல இருக்கிற உன் தங்கச்சிகிட்ட போனை கொடுங்க..” என்றான் நிதானமாக. 
“ப்ரேம்.. அது.. நான்தான்..” என்று திக்கிய ரவியிடம், 
“எனக்கு தெரியும் ரவி, அவகிட்ட போனை கொடுங்க..” என்ற ப்ரேமின் உறுதியில், உதட்டை பிதுக்கி தங்கையிடம் போனை கொடுத்தான் ரவி. 
“ஹலோ..” என்ற மதுவிடம், 
“மதுமித்ரா..  எனக்கு உன்னோட எந்த  உதவியும்   தேவையில்லை..  எங்க கடையை என்ன செய்யணும்ன்னு எங்களுக்கு தெரியும்..”  என்றான் விலகளுடன்.

Advertisement