Advertisement

அவளே என் பிரபாவம்  3
“ஸ்வீட் எடு கொண்டாடுன்னு சொல்ற… ம்ம்.. அதுவும்  சரிதான்.. எனக்குதான் கொண்டாடவும்  நிறைய  காரணமும்  இருக்கே..” 
“முதல் காரணம் என் கல்யாணம் நின்னு போச்சு.. சூப்பர்..”
“அடுத்து  அவதான் என் வாழ்க்கையேன்னு நினைச்ச ஒரு பொண்ணுக்கு நான் முக்கியம் இல்லையாம், அவங்க அப்பாதான் எல்லாமுன்னு  என்னை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டா..  இது சூப்பரோ சூப்பர்..”
“அடுத்து எங்க பிஸ்னஸ் லாஸ் தெரிஞ்சுதான் அந்த பொண்ணு என்னை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிடுச்சாம்.. ஊரே சொல்லிட்டிருக்கு.. ம்ம்..  இதுகூட கொண்டாடபட  வேண்டிய விஷயம்தான்..”  
“இதுல ஒரு பியூட்டி என்னன்னா இது எல்லாம் தெரிஞ்சும் என்னால எதையும் ஹாண்டில் செய்ய முடியாம கோழை மாதிரி பொழைப்பை தேடி வெளிநாடு ஓடபோறேன்.. இதுக்கு  கண்டிப்பா நான் எல்லோருக்கும் ட்ரீட்டே கொடுக்கலாம் இல்லை..”
“இது எல்லாத்தையும் விட நான் கொண்டாட வேறொரு பெரிய காரணம் இருக்கு, அது என்னன்னா..?   என்கிட்ட எதோ குறை இருக்காம்..  அது தெரிஞ்சுதான் பொண்ணோட அப்பா கல்யாணத்தை நிறுத்திட்டாராம்..  கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு இல்லை..”  என்றவனை மது அதிர்ச்சியோடு பார்க்க, அவளை இறுகிய முகத்துடன் பார்த்தவன்,
“எனக்குமே இது உண்மையா இருக்குமோன்னு தோணுது, ஏன்னா இவ்வளவு நடந்தும் நான்  உன்பக்கத்துல உட்கார்ந்து ரொம்ப சர்வ சாதாரணமா பேசிட்டிருக்கேன் இல்லை..”
“இதுக்காகவே நான் ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும் தான்..  நீ சொல்றதும் சரிதான்.. கண்டிப்பா கொண்டாடிடலாம்..” என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் மிக மிக சாதரணமாக சொன்னவன், உடனடியாக கேட்டரிங் ஆளை கூப்பிட்டு  தன்  இலையில் ஸ்வீட் வைக்க சொன்னான். 
“ப்ரேம்.. ஆச்சா போலாமா..?” என்று உணவு முடிந்து மணமக்களுடன் நின்றிருந்த வைஜெயந்தி மதுமித்ராவை முறைத்து கொண்டே கேட்க, 
“நீங்க போங்கம்மா.. நான் வரேன்..” என்று அவர்களை போக சொன்னான். 
“மது.. ஏண்டா இன்னும் எதுவும் சாப்பிடாமலே இருக்க..? நான் வேணும்னா உன்னோடே இருக்கவா..?” என்று  குனிந்திருந்த மகளிடம் வசந்தா கவலையாக கேட்டார். 
ப்ரேமின்  வார்த்தைகள் ஒன்றொன்றும் முள்ளாய் குத்தி கிழிக்க, கலங்கிய கண்ணீரை பெரும்பாடுபட்டு அடக்கிகொண்டிருந்த மது  “நான்.. இதோ சாப்பிடறேன்.. நீங்க போங்கம்மா..” என்று இலையில் கைவைத்தபடி நிமிராமலே சொல்லிவிட,  மணமக்களும், அம்மாக்களும் இவர்களை ஆராய்ச்சியாக பார்த்துகொண்டே கிளம்பினர். 
“சார்.. ஸ்வீட்..”  என்று கேட்டரிங் ஆள் மூன்று வகை ஸ்வீட்டை அவனின் இலையில் வைக்கவும், ப்ரேம் உடல் இறுக ஸ்வீட்டை கையில் எடுத்தான். அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த  மது அவன் ஸ்வீட்டை கையில் எடுக்கவும், அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
அவளின் பார்வை உணர்ந்தும்  அவளின் புறம் திரும்பாமலே ஸ்வீட்டை வாயருகே கொண்டு சென்றவனின் கையை தன் கை கொண்டு பிடித்தாள் மதுமித்ரா. 
அவள்  தன் கையை பிடிக்கவும்  திரும்பி பார்த்த ப்ரேமையே உறுதியாக பார்த்த மது, அவன் கையில் இருக்கும்  ஸ்வீட்டை  அவன் கையாலே தன் வாயில் ஊட்டிகொண்டாள். 
அவளின் திடீர் செயலில்  ப்ரேம் அவளையே  அதிர்ச்சியாக பார்க்க, அவனை பார்த்தவாறே தொண்டையை எரித்து கொண்டு செல்லும் ஸ்வீட்டை ஒரே மூச்சாக முழுங்கியவள், 
“நீங்க இந்த ஸ்வீட்டை சாப்பிட வேண்டியதில்லை, நான்தான்.. நான் மட்டும் தான் சாப்பிடணும்.. எனக்குதான் அதுக்குள்ள முழு காரணமும் இருக்கு..” என்றவள், எதுவும் சாப்பிடாமல் எழுந்து கொள்ள போகவும், பட்டென அவளின் கையை பிடித்தான். 
“உட்காரு.. சாப்பிட்டு போ.. ருசிக்கு சாப்பிடலன்னாலும் பசிக்கு சாப்பிட்டு தான் ஆகணும்..” என்றவன் அவளை ஊடுருவி பார்த்தவண்ணம்,
“உயிர் வாழனும் தானே..!!  நீ உங்க அப்பாக்காக..!!   நான் உனக்காக..!!”   என்று நிறுத்தி நிதானமாக சொன்னவனின் கை இலையை விட்டு தள்ளி வந்துவிட,  தான் சாப்பிடாமல் அவனும் சாப்பிடமாட்டான் என்று புரிந்து அமர்ந்துவிட்டாள்.  
இவள் சாப்பிட ஆரம்பிக்கவும் தானும் சாப்பிட்ட ப்ரேமின் கண்கள் இவள் புறம் இருக்க, அவள்  உணவை முழுங்க முடியாமல் திணறவும், கசங்கிய முகத்துடன் தண்ணீரை அவளின் பக்கம் வைத்தான். 
மதுவும் மறுக்கமல் குடித்தவள்  அவளையே பார்த்து கொண்டிருக்கும் ப்ரேமின் பக்கம் திரும்பாமலே  இலையில் இருந்த உணவை எடுத்து அப்படியே முழுங்கி கொண்டிருந்தாள். 
என்னதான் தடுத்தாலும் அணையை உடைத்து சீறிவரும் ஆறை போல அவளின்  கண்ணில் அடைபட்ட இருந்த கண்ணீர் ஒற்றை துளியாய் இலையில் விழுந்துவிட, துடித்துபோன ப்ரேம் அவளின் கண்ணீரை துடைக்கும் சமயம், 
“மதுமா..” என்ற வசந்தாவின் குரல் அவர்களுக்கு அருகில் ஒலித்தது. 
“அது.. மதுவோட அப்பா அவளை தேடுறார்..” என்று ப்ரேமை பார்த்து சங்கடத்துடன்  சொன்னவர், மகளை பார்க்க, அவள் அதற்குள் தன் சமாளித்திருத்தவள், “வரேன்மா..”   என்று ப்ரேமை பார்க்காமலே எழுந்து அன்னையுடன் சென்றுவிட்டாள். 
அவளின் ஒற்றை துளி கண்ணீர் தன் வார்த்தைகளின் வலியை சொல்ல, தன்னை தானே நொந்து கொண்டவனின் கோவம், ஏமாற்றம் மட்டும் தீர்ந்தபாடில்லை.
 
ரிசப்ஷன் முடியவே நடுஇரவு ஆகிவிட,  விடியற்காலை முகூர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தபடியால்  அதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்துவிட்டனர். மேடை அலங்காரம் மதுமித்ராவின்  பொறுப்பு என்பதால் அவள் அதை மேற்பார்வை பார்த்துகொண்டிருக்க, மகளுடன் இருந்த வடிவேலு, 
“மதுமா.. அதான் என்ன என்ன செய்யணும்..? எப்படி செய்யணும்..? சொல்லிட்ட இல்லை, போடா போய் தூங்கு, அப்பா இருந்து பார்த்துகிறேன்..” என்று  தானும் தூங்க செல்லாமல் மகளுடன் இருந்து கொண்டவர்  மகளை வற்புறுத்தி கொண்டிருந்தார்.  
“ப்பா.. நீங்கதான் போய் தூங்கணும், டேப்லெட் சாப்பிட்டிருக்கீங்க இல்லை, மயக்கமா வரும், முழிக்க கூடாதுன்னு தெரியும் இல்லை, போங்க.. போய் தூங்குங்க..” என்று அவருக்கு ஹை பிபி உண்டு என்பதால்  மது கண்டிப்பாக சொல்லி கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்தான் ரவி. 
“ஏன் ரவி..? தூங்கலையா..?” என்று வடிவேலு மகனிடம் கேட்க, அவனின் கண்களோ தங்கையின் மேலே இருந்தது. 
“இல்லப்பா தூக்கம் வரல..” என்றவன், “நீங்க போய் தூக்குங்கப்பா, நான் மதுவோட இருக்கேன்..” என்று மறுத்த அவரை பிள்ளைகள் வற்புறுத்தி அனுப்பிவிட, அவரும் முனங்கி கொண்டே தூங்க சென்றார். 
“மது.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று தந்தை சென்றவுடனே ரவி கேட்க, அவன் எதை பற்றி பேச போகிறான் என்று புரிந்தது.  
“நாளைக்கு பேசலாம், எனக்கும் உன்கிட்ட பேசணும்ண்ணா..” என்று சுற்றிலும்  வேலை செய்து கொண்டிருந்த ஆட்களை கண்ணால் காட்டி சொன்னாள். 
“ம்ம்..” என்று விட்டவனுக்கும் இங்கு ப்ரீயாக பேசமுடியாது என்று புரிய தங்கையின் கூற்றை ஏற்றுகொண்டான். 
“சார்.. காபி..”  என்று இருவர் கொண்டு வரவும், ரவி காபியை எடுத்து கொள்ள, மது எதுவும் வேண்டாம் என்றுவிட்டாள். அவளுக்கு தெரியும் இது ப்ரேமின் வேலை என்று, அதனாலே மறுத்துவிட, மேலிருந்து பார்த்து கொண்டிருந்த ப்ரேம் வேகமாக கீழிறங்கி வந்தான். 
“என்கிட்ட கொடுங்க..”  என்று கேட்டரிங் ஆட்களின் கையில் இருந்த ட்ரேயை தான் வாங்கி சென்று  மதுவின் முன் நீட்டினான். 
“இல்லைங்க.. வேண்டாம்..” என்றவாறே அவனின் கையில் இருந்த ட்ரேயை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டவளின் உள்ள குமுறலை புரிந்து கொண்ட ப்ரேம் தவிப்புடன் தலையை கோதிகொண்டான். 
ரவி இவர்களையே உன்னிப்பாக கவனித்து  கொண்டிருக்க மதுவிடம் நெருங்க முடியாமல்  இறுகி போய் கைகட்டி நின்றவனின் கண்கள் தன்னை பார்க்க மறுக்கும் மதுவை வெறித்தது. 
இருவரின் முகங்களிலும் தெரிந்த தவிப்பு, துடிப்பு ரவியை வருத்த, அவன் அங்கிருந்து செல்லும் சமயம், ப்ரேமே அங்கிருந்து சென்றுவிட்டான். 
“மது.. ஏண்டா இப்படி..?” என்று இருவரின் தவிப்பையும் புரிந்து வேதனையுடன் தங்கையிடம் கேட்டான் ரவி. 
“எனக்கும் தெரியலைண்ணா.. ஏன் இப்படி ஆச்சுன்னு..?” என்று மதுமித்ரா செல்லும் ப்ரேமின் முதுகை பார்த்தவாறே அண்ணனிடம் சொன்னாள். 
“ம்ப்ச்..” என்று தலையை ஆட்டிக்கொண்ட ரவி, “இது எல்லாம் அப்பாவாலதான்..” என்று தந்தையின் மேல் தன் கோவத்தை காட்ட, அவனை கண்டிப்புடன் பார்த்த மது, 
“ண்ணா.. அப்பாவை எதுவும் சொல்லாதீங்க, அவர் ஏன் இப்படி முடிவெடுத்தார்ன்னு நமக்கு நல்லா தெரியும், என்னோட வாழ்க்கை  சந்தோஷமா இருக்கனும்ன்னுதான், சோ.. ப்ளீஸ்ண்ணா..”  என்று சொல்ல, அவளை ஆதங்கமாக பார்த்த ரவி, 

Advertisement