Advertisement

“வேண்டாம்.. வேண்டாம்.. இறக்கி விடுங்க, நானே வரேன்..” என்று மித்ரா குதித்து இறங்கியவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் கணவனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள். 
“இப்போ எதுக்கு இவ்வளவு பாஸ்ட்டா போய்ட்டு இருக்கீங்க.. பங்க்ஷன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு..” என்று  கடிந்து கொண்டவளை கண்டு கொள்ளாமல் காரை விரட்டியவன், மகளின் ஸ்கூலில் சென்று காரை நிறுத்தினான். 
“மதுமா..” என்று  முன்னரே  அங்கு காத்திருந்த  வடிவேலு, மகளை பாசத்துடன் வரவேற்றார். 
“ப்பா.. எப்போ வந்தீங்க..?” என்று மகள் தந்தையை தோளோடு அணைத்து கொண்டு கேட்டாள். 
“ம்ம்.. ரெண்டு மணி நேரத்துக்கு முந்தி..” என்று  தலை மேல் கை வைத்து அமர்ந்திருந்த வசந்தா கடுப்பாக சொன்னார். 
“ஏன்ப்பா..? என்று மது  அப்பாவை பார்த்தாள். 
“இல்லைடா.. பட்டுக்குட்டியோட டான்ஸை தவறவிட்டுற கூடாது இல்லை அதான்..” என்று பேத்தியின் டேன்ஸஸை பார்க்கும் ஆவலில் சொன்னார். இன்று ப்ரேமிதா ஸ்கூல் பங்கஷனில் டேன்ஸ் ஆடுவதை பார்க்கவே மாமனாரும், மருமகனும் குதித்து கொண்டு வந்திருந்தனர்.  
“ம்மா.. வாங்கம்மா..” என்று மித்ரா இருவரையும் பார்த்து சலிப்பாக தலையை ஆட்டிவிட்டு அம்மாவை அழைத்து கொண்டு கேன்டீன் செல்ல, “மதுமா..” என்று வடிவேலு  மகளின் பின்னால் சென்றுவிட, ப்ரேம் மகளை பார்க்க அவளின் கிளாஸ் நோக்கி சென்றான். 
“ப்பா.. அடுத்து நீங்களா..?” என்று ப்ரேமிதா தந்தையை பார்த்து கண்ணை சுருக்கி கோவத்தோடு கேட்டாள். 
“ஏண்டா அம்முக்குட்டி..?” என்று ப்ரேம்  மகளின் கோவத்தில் புரியாமல் கேட்டான். 
“இப்போதான் வேலுப்பா வந்து பார்த்துட்டு போனார், அடுத்து நீங்க.. இப்படியே யாராவது வந்திட்டிருந்தா நான் எப்போ பிராக்டிஸ் செய்றது, ரெடி ஆகறது.. போங்க.. இனி யாரும் என்னை பார்க்க இங்க வரகூடாது..” என்று கண்டிப்புடன் மிரட்டியவள் உள்ளே சென்றுவிட, ப்ரேம் மகளின் கண்டிப்பில் சிரித்தபடி வந்தான். 
அவனின் மகள் உருவத்தில் மனைவியை ஓத்திருந்தாலும், குணத்தில் நேர் எதிர் தான், மதுவிற்கு யாரிடமும் கண்டிப்புடன் பேச முடியாது, அதிலும் கணவனிடமும், தந்தையிடமும் முடியவே முடியாது, ஆனால் மகள் அப்படியில்லை, யார் தப்பு என்றாலும் முகத்திற்கு நேரே பேசிவிடுவாள் 
அதிலும் தாத்தா, தந்தை என்றால் சொல்லவே வேண்டாம்.. பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கி விடுவாள். அதற்காக இருவரின் மீதும் பாசம் இல்லை என்றில்லை, அவளின் அம்மா போலே அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவள், எது என்றாலும் அப்பாவும், தாத்தாவும் தான், அதற்கு பிறகே மித்ரா, 
ஆனால் அதே சமயம் ஆண்கள் இருவரும் சேர்ந்து அம்மாவை  படுத்தினால் முதல் ஆளாக அம்மாவிற்கு சப்போர்ட் செய்தபடி நிற்பாள். சுருங்க சொன்னால் இதுவரை யாராலும் அடக்க முடியாத சண்டி குதிரைகளை ப்ரேமிதா சுலபமாக அடக்கி கொண்டிருந்தாள். 
“அத்தை..” என்று ருத்ரன் நேராக அத்தையிடம் ஓடிவர, மது அண்ணன் மகனை ஆசையுடன் அள்ளி கொண்டாள். 
“ம்மா.. காலையிலா வந்தீங்களா..? இல்லை நேத்தே வந்துட்டிங்களா..?” என்று ரவி வசந்தாவை சிரிப்புடன் பார்த்து கேட்க, 
“அவ்வளவு எல்லாம் இல்லை, மதியம் தான் வந்தோம்..” என்று மகனிடம் சொன்ன வசந்தா, பேரனை மடியில் தூக்கி வைத்து கொண்டார். 
“எப்படியிருக்கீங்க மாமா.. அத்தை..” என்று திவ்யா மாமனாரிடமும், மாமியாரிடமும் நலம் விசாரித்தவள், மதுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். 
“அண்ணி.. அண்ணா எங்க..?” என்று திவ்யா அண்ணனை கேட்க, 
“வருவார். மகளை போய் பார்த்துட்டு வருவார்..” என்று மது சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் ப்ரேம். 
“மாமா..” என்று மாமனை பார்த்தவுடன் ருத்ரன் மாமன் மேல் தாவி ஏறி கொள்ள, அவனை தூக்கி கொண்ட ப்ரேம், ரவியிடமும், தங்கையிடமும் நலம் விசாரித்தான்.பெங்களூரிலுந்து நேரே  இங்கு வந்திருந்தார்கள். 
அடுத்து சண்முகம் தம்பதி வர, வடிவேலுவும், ப்ரேமும்  எப்போதும் போல் சண்முகத்திடம் மட்டும் பேசிவிட்டு, வைஜெயந்தியை பார்த்து தலை ஆட்டிவிட்டு  அமைதியாகி விட்டனர்.

“இதில எல்லாம் மட்டும் ரெண்டு பேருக்கும் ஏகப்பட்ட ஒத்துமை..” என்று சலிப்பாக நினைத்த மது, மாமனாரிடமும், மாமியாரிடமும் முறையாக நலம் விசாரித்தாள். 
“அப்பறம் அண்ணி.. எல்லாம் எப்படி போகுது..?” என்று வைஜெயந்தி வசந்தாவிடம் ஆரம்பிக்க, உஷாரான வசந்தா, 
“எதோ போகுது அண்ணி..” என்றார் கவலையாக. 
“என்ன செய்ய அண்ணி..? காலம் முன்ன மாதிரியா இருக்கு..? பாருங்களேன் நாம எவ்வளவு தூரம் டிராவல் பண்ணி களைச்சு போய் வந்திருக்கோம், ஒரு காபி தண்ணி வாங்கி கொடுக்க கூட  ஆள் இருக்கா பாருங்க,  பெரியவங்கங்கிற மரியாதை எல்லாம் இப்போ எங்கிருக்கு..? நம்ம காலத்துல நாம அப்படியா இருந்தோம்.. மாமியார்.. மாமனார்ன்னா அப்படி பயப்படுவோம்..” என்று மருமகளை தாக்கி பேசினார். 
“ஆமா அண்ணி நீங்க சொல்றதுதான் சரி.. நாம இருந்த மாதிரியா  இப்போ இருக்காங்க, ஒன்னும் சொல்றதுக்கில்லை, உங்களுதாவது பரவாயில்லை, எங்க வீட்ல எல்லாம் சொல்லவே வேண்டாம், எதோ காலம் போகுது..” என்று அவரின் மருமகளை அவர் தாக்கி பேச, வைஜெயந்தி தன்னை போல வாய் மூடி கொண்டார். 
இதை எல்லாம் பக்கத்து டேபிளில் அமர்ந்தபடி கேட்டு  கொண்டிருந்த இளையவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். அதிலும் மது கணவனை பார்க்க, அவன் நான் சொன்னேனா என்பது போல கண்ணாலே சிரித்து கொண்டிருந்தான். 
வைஜெயந்தி சில வருடங்களில் மறுபடியும் மாமியார் அவதாரம் எடுக்க, மது அவரை சமாளிக்கிறாளோ இல்லை, வசந்தா அருமையாக சமாளித்து கொண்டிருந்தார்.
“நெக்ஸ்ட் பர்பமானஸ் பை ப்ரேமிதா..” என்ற அறிவிப்புக்கு மாமனாரும், மருமகனும் எழுந்து நின்று ஜோராக கை தட்ட, மற்றவர்கள் தலையில் அடித்து கொண்டு அமர்ந்திருந்தனர். 
அப்போது மட்டுமில்லாமல் ப்ரேமிதா டேன்ஸ் ஆடி முடிக்கும் வரை, கை தட்டி கொண்டே நின்றிருந்தவர்கள், அவள் மேடை இறங்கவும்தான் ஓய்ந்து போய் அமர்ந்தனர். 
“ப்பா.. வேலுப்பா.. நான் எப்படி ஆடுன..?” என்று ப்ரேமிதா இருவரிடமும் வந்து ஆவலாக கேட்க,
“சூப்பரா சூப்பர்..” என்று இருவரும் வானளவு புகழ்ந்து தள்ள, ப்ரேமிதா இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள். 
“நான் இந்தளவு எல்லாம் ஒன்னும் ஆடல..” என்று உதடு பிதுக்கி சொன்னவள், மற்ற எல்லோரிடமும் செல்லம் கொஞ்சியபடி அவர்களின் ECR  வில்லா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் அங்கேயே தங்கும் அளவு வீடு பெரியதாகவே ப்ரேம் பார்த்து பார்த்து கட்டியிருந்தான். 
குமார் மூலமாக கணவன் தனக்காக வாங்கிய வில்லா விற்ற விஷயத்தை தெரிந்து கொண்ட மது, மறுபடியும் அதே இடத்தில் அவனுக்காக இடம் வாங்கி  கொடுக்க, ப்ரேம்  வீடு கட்டி போன மாதம் தான் இங்கு குடியேறி இருந்தனர். 
இரவு உணவை ஹோட்டலில் ஆர்டர் கொடுக்க, உணவு வந்தவுடன் எல்லோரும் ஓர் இடத்தில அமர்ந்து சாப்பிட்டனர். ப்ரேமிதா எப்போதும் போல் தாத்தா.. தந்தைக்கு இடையில் உட்கார்ந்து சாப்பிட, இருவரும் ஆளுக்கொரு வாயாக அவளுக்கு ஊட்டி கொண்டிருந்தனர். 
“தாத்தா..  இது அப்பா  டர்ன்..” என்று மறுபடியும் கொடுத்த தாத்தாவை செல்லமாக மிரட்டிய பேத்தி, அப்பாவிடம் வாங்கி கொண்டாள். இப்படியே இரவு உணவு முடிந்து பீச் ஓரம் நடந்தவர்கள், அங்கங்கு அமர்ந்து கொண்டனர். 
ப்ரேம் மகளை மடியில் தாங்கி, அவள் பேசுவதை கேட்டு  கொண்டிருக்க, மது அவளின் அப்பாவின் கையை பற்றிபடி நடந்து கொண்டிருந்தவள், “போதும்ப்பா.. கால் வலிக்கும்..” என்று தந்தையை அமரவைத்தாள். 
“தாத்தா..” என்று பேத்தி இவர்களை நோக்கி ஓடிவர, மது திரும்பி கணவனை பார்த்தாள். அவன் தனியே அமர்ந்து  கொண்டிருக்க, இவள் சிறிது நேரம் தந்தை, மகளுடன் இருந்துவிட்டு கணவனிடம் சென்றாள். 
“என்ன அப்பாகிட்ட செல்லம் கொஞ்சியாச்சா..?” என்று மனைவியை பார்த்து உதடு சுழித்து கேட்டவன், அவளின் கை கோர்த்து எப்போதும் போல நடக்க செய்தான். 
“ஏன் நீங்க இவ்வளவு நேரம் உங்க மகளை கொஞ்சிட்டு இருக்கல..?” என்று மித்ரா கிண்டலாக கேட்டாள். 
“இது வேறயா..?” என்று லேசாக சிரித்தவன், அவளின் கையை இறுக பற்றி கொண்டான். 
“என்னவாம்..?” என்று கணவனின் இறுக்கத்தில் மனைவி சிரிப்புடன் கேட்டாள். 
“இல்லை.. உன் கொலுசு பழஸாயிடுச்சு, மாத்தணும்..” என்று கண் சிமிட்டி குறும்பாக சொன்னான். 
“எது..? போன வாரம் தான் மாத்தின கொலுசு உங்களுக்கு பழசு ஆயிடுச்சா..?” என்று இடையில் கை வைத்து முறைப்பாக கேட்டாள். 
“ஆமாம்டி மித்து குட்டி..” என்று அவளின் வெற்றிடையில் கை நுழைத்து, தன்னோடு இறுக்கி கொண்டவன், அவளின் நெற்றி முட்டினான். 
“ஸ்ஸ்.. எல்லோரும் இங்கதான் இருக்காங்க..” என்று கணவனின் இடை வருடலில் கூசி சிலிர்த்த மது கணவனை விலக்க முயன்றாள். 
“ச்சு.. இருட்டுல ஒன்னும் தெரியாது..” என்று மேலும் மனைவியை சிவக்க வைத்து கொண்டிருந்தான். 
“போதும்.. விடுங்க..” என்று கணவன் எல்லை மீறவும், தடுத்தவள், வேகா எட்டு எடுத்து வைத்து முன்னால் நடக்க, காலில் சுருக்கென எதோ குத்தியது. 
“ஆஆ..” என்று வலியில் முணங்கி அமர்ந்த  மனைவியிடம், பதட்டத்துடன் நெருங்கிய ப்ரேம், 
“என்னடி ஆச்சு..?” என்று அவளின் பாதத்தை கையில் ஏந்தி குத்திருத்த தேங்காய் சில்லை எடுத்தவன்,  சிவந்திவிட்ட இடத்தை லேசாக வருடிவிட்டான். 
“சரியா போச்சு..” என்ற மித்ரா கணவனை பக்கத்தில் அமரவைத்து கொண்டு அவனின் தோள் சாய்ந்தாள். 
“வேலுப்பா..” என்று பேத்தி பேசிய பேச்சுக்களை மனம் குளிர கேட்டு கொண்டிருந்த வடிவேலுவின் பார்வை மகளை தேட, சற்று தூரத்தில் ப்ரேம் மகளின்  பாதத்தை கையில் ஏந்தியிருப்பதை பார்த்துவிட்டு சங்கடத்துடன் முகம் திருப்பி கொண்டார். 
அவரின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையின் அர்த்தமான மகளின் மறுஉருவம் கொண்ட பேத்தியை உச்சி முகர்ந்தவருக்கு, மகளை சிறுவயதில் உச்சி முகர்ந்த உணர்வு. 
அங்கு மனைவியை தோள் சாய்ந்திருந்த ப்ரேமின் மனதிலும்  மனைவியின் ஆட்சியே..!!  இவள் இல்லையென்றால் தன் வாழ்வு எப்படி இருந்திருக்கும்..? நிச்சயமாக இவ்வளவு உயிர்ப்பாக இருந்துருக்காது என்பது உறுதி..!! 
இப்படியாக ஆண்கள் இருவருக்கும் மதுமித்ரா என்பவளே அவர்களின் பலம்..!!
அவர்களின் மேன்மை..!!
அவர்களின் கீர்த்தி..!!
அவர்களின் ஒளி..!!
அவளே அவர்களின்  பிரபாவம்..!!
                                                        ( அவளே என் பிரபாவம் )

Advertisement