Advertisement

அவளே என் பிரபாவம் 25
“என்ன..? என்ன சொல்றீங்க..? இதோ கிளம்பிட்டோம்..” என்று வசந்தா பரபரப்புடன் போன் பேசி வைத்தவர், மகளின் ரூமிற்கு ஓடி வந்தார். 
“மருமகளுக்கு பிரசவ வலி வந்துடுச்சு போல, சுபா அக்கா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்களாம்..” என்று மகளிடமும், கணவரிடமும் சொன்னவர், 
“நாம கிளம்பலாமா..?” என்று கணவரை கேட்க, அவர் படுக்கையில் இருந்து எழும் மகளை பார்த்தார். 
“மதுமா.. நீ எங்க எழுந்துகிற..? இங்கேயே இரு, நாங்க போய் பார்த்துட்டு வந்துடுறோம்..” என்று சொல்ல, 
“நானும் வரேன்ப்பா..” என்றாள் மது ஆசையுடன். 
“வேண்டாம் மதுமா.. சொன்னா கேளு, அங்க ஹாஸ்பிடல் உனக்கு சேருமோ சேராதோ..?” என்று மகளின் உடல் நிலையை நினைத்து கவலை கொண்டு சொன்னார். 
“இருக்கட்டும்ப்பா.. அதெல்லாம் ஒன்னும் இருக்காது, போலாம்..” என்று மது கிளம்பினாள். 
“மது.. டெலிவரி ஆக எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியாது, நீ நாங்க சொன்னதுக்கு அப்பறம் கிளம்பி வாயேன்..” என்று வசந்தாவும் மறுத்தார். 
“ஆமாமாம்.. எந்நேரம் ஆகும்ன்னு தெரியாது, அதுவரைக்கும்  நீ உட்கார்ந்துட்டே  இருப்பியா..  சரிவராது..” என்று வடிவேலு உறுதியாக மறுக்க, மது கெஞ்சலாக  பார்த்தவள், 
“எனக்கு வரணும்ன்னு தோணுதுப்பா,  அண்ணன் குழந்தையை என் கையில  வாங்கணும்ன்னு ஆசை படறேன்.. பொறுமையா பார்த்து  இருந்துகிறேன்.. ப்ளீஸ்ப்பா..” என்று மது முகம் சுணங்கி சொல்ல, அதற்கு மேல் வடிவேலு மறுப்பாரா..? 
“சரி.. நீ ஏதாவது தேவைன்னா எடுத்து வச்சுக்கோ..” என்று மனைவியிடம் சொன்னவர், அடுத்த சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
“ரவி கிளம்பிட்டானா..?” என்று மனைவியிடம் வடிவேலு கேட்க, 
“ம்ம்.. இன்னும் அரை மணி நேரத்துல பிளைட் ஏறிடுவேன்னு சொன்னான், அவன்தான்  முன்னமே ஓபன் டிக்கெட் எடுத்து வச்சிருந்தான் இல்லை..” என்று கணவருக்கு பதில் சொன்னவர், மகளுக்கு குட்டி குஷன் எடுத்து முதுகு புறம் வசதியாக சாய்த்து வைத்தார். 
“உனக்கு ஏன் தான் இவ்வளவு பிடிவாதமோ..? இந்த நேரத்துல அலைச்சல் வேண்டாம்ன்னு சொன்னா கேட்கிறியா..? என்னமோ போ..” என்று சலித்துகொண்டவரின் தோள் சாய்ந்தாள் மது.
“தம்பி.. திவ்யாக்கு பிரசவ வலி வந்துடுச்சு, ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டு இருக்கோம்..” என்று சண்முகம் போன் செய்து சொல்லவும், தூங்கி கொண்டிருந்த ப்ரேமின் தூக்கம் பறந்து போனது. 
“இதோ கிளம்பிட்டேன்ப்பா..” என்று வைத்தவன், அவசரமாக முகம் மட்டும் கழுவி ரெப்ரெஷ் செய்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டான். 
“ரவி.. அப்பா போன் செஞ்சிருந்தாரா..?” என்று ரவிக்கு போன் செய்து கேட்டு கொண்டவன், அடுத்த சில நிமிடங்களிலே ஹாஸ்பிடலில் இருந்தான். 
“தம்பி.. நீ.. எப்படி..?” என்று சண்முகமும், வைஜெயந்தியும் மகனை பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டனர். 
“என்னப்பா..?” என்று ப்ரேம் அவர்களின் அதிர்ச்சி எதனால் என்று  புரிந்தும் சாதாரணமாக கேட்டான்.
“இல்லை.. இவ்வளவு சீக்கிரம் எப்படி..? நீ  சென்னை..?” என்று அவர் இழுக்கவும், 
“நான் சென்னையில இல்லைப்பா.. இங்க தான் இருக்கேன்..” என்று சொல்லிவிட, பெற்றவர்கள் துயரத்துடன் மகனை பார்த்தனர். 
“இங்கன்னா..?” என்று வைஜெயந்தி மகன் முகம் பார்த்து கேட்க முடியாமல் தடுமாற, அவரை வெறித்த ப்ரேம், 
“இங்கன்னா.. என் மாமியார் வீட்ல இல்லை, தனியா வீடு எடுத்து தான் தங்கிட்டு இருக்கேன்..” என்று சுள்ளென்று சொல்ல, வைஜயந்தியின் கண்ணில் நீர் தேங்கியது. 
“நான்.. நான் அந்த அர்த்தத்துல கேட்கலங்க..” என்று கணவரிடம் வேதனையுடன் சொன்னவர், தள்ளி நின்று கொண்டார்.
“ப்பா.. திவ்யா எங்க..?” என்று அம்மாவின் கண்ணீர் மனதில் ஓரம் வலியை கொடுத்தாலும், காட்டி கொள்ளாமல் அப்பாவிடம் கேட்டான். 
“இப்போ தான் உள்ள கூட்டிட்டு போனாங்கப்பா..” என்று சொல்லவும், 
“ஓஹ்.. ஏதாவது தேவையாப்பா.. வாங்கிட்டு வரணுமா..?” என்று  கேட்டான். 
“இல்லப்பா.. எல்லாம்  இருக்கு, எதாவது தேவைன்னா நீ அனுப்பியிருந்த ட்ரைவர் தான் இருக்கார் இல்லை, சொல்லி வாங்கிக்கலாம்..” என்றார், 
அட்டேக் வந்ததில் இருந்து சண்முகம் எங்கு சென்றாலும், ட்ரைவர் தான் என்பதால், திவ்யாவின் பிரசவ நேர அவசரத்துக்கு மற்றும் ஒரு ட்ரைவர் வேண்டும் என்று அவன் தான் தனியே ட்ரைவர் ஏற்பாடு செய்திருந்தான். 
“சரிப்பா..” என்று சோர்வாக சற்று தள்ளி இருந்த சேரில் அமர்ந்து கொண்டான். இரவெல்லாம் வேலை பார்த்து விட்டு  அவர் போன் செய்வதற்கு சற்று நேரம் முன்பு தான் தூங்கவே சென்றிருந்தான். தூக்கம் இல்லாமல் கண்கள் எரிய கண் மூடி கொண்டான்.
“ண்ணா.. திவ்யா எங்க..? இப்போ எப்படி இருக்கா..?” என்று வந்த வசந்தாவின் குரலில் கண் திறந்த ப்ரேம், அவரின் பின் வந்து கொண்டிருந்த  மதுவை பார்த்து கோபத்துடன் தலையை ஆட்டி கொண்டான்.  
“இவளை யார் இங்க வரச்சொன்னா..? இந்த அட்மாஸ்பியர் இவளுக்கு சேருமா..?” என்று மனைவியை பார்த்தவனுக்கு அவளிடம் தெரிந்த மாற்றம்  நிம்மதியை கொடுத்தது. 
அவன் அவளிடம் பேசிவிட்டு சென்ற இந்த இரண்டு வார இடைவெளியில் அவளின் உடல் சற்று தேறியிருந்தது. முகமும் முன்பிருந்த அளவு சோர்ந்து இராமல் கொஞ்சம் தெளிவாக இருந்தது. 
“வாம்மா.. அவளை உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க, வலி இருக்கு..”  என்று சண்முகம் சொல்ல, 
“சரிங்கண்ணா.. நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்..” என்று பார்வையை திருப்பிய வசந்தா,  மருமகனை காணவும் கண் விரித்து, திரும்பி தன் மகளை பார்த்தார். 
“என்னம்மா சொல்றாங்க..? அண்ணி எங்க..?” என்று அம்மாவிடம் கேட்ட மகள் அவர் பார்வை செல்லும் இடத்தை கண்டு தானும் தன் பார்வையை திருப்பினாள். 
“இவரா..? இவர் எங்க..? எப்படி..?” என்று மது  கணவனை ஆச்சரியத்துடன் பார்க்க, அவளுடன் இருந்த வடிவேலுவும் மருமகனை அப்படித்தான் பார்த்து கொண்டிருந்தார். 
“மாப்பிள்ளை..”  என்று வசந்தா, மருமகனிடம் செல்ல தொடங்கவும், 
“நீ ஏன் இங்க வந்த..?” என்ற கேள்வியோடு அவனும் எழுந்து இவர்களிடம் வந்து நின்றான். 
“மாப்பிள்ளை.. நீங்க எப்படி..?” என்று வசந்தா கேட்க, 
“நான் இங்கதான் இருக்கேன் அத்தை, சென்னை போகல..” என்று மனைவியை பார்த்தவன், அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல், 
“நீ ஏன் இங்க வந்த..?” என்று மறுபடியும் கேட்டான். 
“பதில் சொல்ல முடியாது போ..” என்ற பார்வை பார்த்தவள், முகம் திருப்பி கொள்ள, ப்ரேம் பல்லை கடித்தான். 
“அது மாப்பிள்ளை.. அவளுக்கு அவங்க அண்ணன் குழந்தையை பார்க்கணுமாம்.. அதான்..” என்று வசந்தா மகளை கண்டிப்புடன் பார்த்துவிட்டு மருமகனின் கோவம் உணர்ந்து சமாதானமாக சொன்னார். 
“ம்ப்ச்.. ஏன்  அவங்க அண்ணன் குழந்தையை பிறந்ததுக்கு அப்பறம் வந்து பார்த்தா ஆகாதாம் உங்க மகளுக்கு..?” என்று மனைவியை பார்த்து கடுப்பாக கேட்டவன், பக்கத்தில் விறைத்து நின்றிருந்த மாமனாரை முறைக்கவும் தவறவில்லை. 
“நான் என்னமோ வேணும்ன்னே கூட்டிட்டு வந்தது போல முறைக்கிறதை பாரு..” என்று வடிவேலு  மனதில் சலித்து கொண்டார். 
“போய்.. உட்காரு.. போ.. எவ்வளவு நேரம் நிப்ப..?” என்று சிடுசிடுத்தவன், அவள் அடமாக நிற்கவும், தானே கை பிடித்து கூட்டி சென்று சேரில் அமரவைத்தான்.
“மது.. இங்க என்ன செய்ற நீ..?” என்று திவ்யாவின் பிரசவத்திற்காக வந்திருந்த சுபா, இவளை பார்த்துவிட்டு கண்டிப்புடன் கேட்டார். 
“அண்ணி டெலிவரிக்கு பெரியம்மா..” என்று மது சொல்லவும், அவர் திரும்பி வடிவேலுவையும், ப்ரேமையும் தான் முறைத்தார். 
“இவங்க வேற..?” என்று ப்ரேம் அலுத்துக்கொள்ள, வடிவேலு எப்போதும் போல கெத்தாக பார்த்து வைத்தார். 
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” என்று முணுமுணுத்த சுபா, 
“நீ ரொம்ப நேரம் இங்க இருக்க  முடியாது, பெட்டர் வீட்டுக்கு போ.. குழந்தையை பொறுமையா பார்த்துக்கலாம்..” என்று டாக்டராக அறிவுறுத்த,  

“இல்லை பெரியம்மா.. இன்னும் கொஞ்ச நேரம் தானே.. நான் பார்த்துட்டே போறேன்..” என்று மது முடிவாக சொன்னாள். 
“என்னவோ செய்.. இங்க எல்லோருக்கும் பிடிவாதம் தான்..” என்று வடிவேலு, ப்ரேம், மது மூவரையும் பார்த்து பொதுவாக சொன்னவர், 
“வசு.. நான் போய் உன் மருமகளை பார்த்துட்டு வரேன்..” என்று தங்கையிடம் சொல்லி சென்றார். 
“இதெல்லாம் தேவையா மதுமா..? பாரு.. சுபாவே உன்னை வீட்டுக்கு போக சொல்றாங்க..” என்று வடிவேலு மகளிடம் மனத்தாங்கலாக சொன்னார். 
“இருக்கட்டும்ப்பா..” என்ற மது கணவனின் பக்கம் பார்வையை திருப்ப, அவன் அவர்களுக்கு எதிரில் இருக்கும் சேரில் சென்று அமர்ந்தான். 
“வசு.. டெலிவரி ஆக  இன்னும் கொஞ்ச நேரம் எடுக்கும், நார்மல் தான் ஆகும்ன்னு நினைக்கிறேன், பார்க்கலாம்..” என்று சுபா வெளியே வந்து வசந்தாவிடம் சொல்ல, அதுவரை ஓரமாக அமர்ந்திருந்த வைஜெயந்தி எழுந்து இவர்களிடம் வந்தார். 
“டாக்டர்.. திவ்யா எப்படி இருக்கா..? ரொம்ப அழுகிறாளா..?” என்று மகளை நினைத்து கவலையுடன் கேட்டார். 
“அவ தைரியமா தான் இருக்கா, வலி இப்போதான் அதிகமாக ஆரம்பிக்குது..”  என்று சுபா சொல்லி செல்ல, வசந்தா வைஜெயந்தியை பார்த்து ஆறுதலாக சிரித்தார். 
அவரும் வந்ததில் இருந்து அவரை பார்த்து கொண்டுதான் இருந்தார். ஒரு ஓரமாக குனிந்தபடி கண்ணீர் சிந்தி கொண்டிருந்தார். ஏன் இப்படி..? என்று பெரு மூச்சோடு அவரை பார்த்திருந்தார். 
அவர் இதுவரை மகளிடம் நடந்து கொண்ட முறை, பேசிய பேச்சு எதையும் வசந்தாவால் ஒத்துக்கொள்ள முடியவில்லை  என்றாலும், இதை காரணமாக வைத்து அவரை தள்ளி வைப்பதையும் ஏற்று கொள்ள முடியவில்லை. 
“யார் தான் சரி..? எல்லோரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கதான் செய்யும்.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.. என்ன செய்ய..?”
“இவர் மகனுக்கு மட்டுமில்லை, மகளுக்கும் மாமியார் தான், எளிதில் தள்ளி வைக்க  கூடிய சொந்தம் இல்லையே..?” என்ற உண்மையை உணர்ந்து வைஜெயந்தியிடம் பேசவும் செய்தார். 
“கவலைப்படாதீங்க சம்மந்தி.. எல்லாம் நல்லா படியா நடக்கும்..” என்று அவரின் கையை பிடித்து சொல்ல, வைஜயந்தி அதற்கு மேல் தாங்க முடியாமல் அவரின் கையில் முகம் புதைத்து கதறி விட்டார். 
“என்ன ஆச்சு சம்மந்தி..? ஏன் இப்படி அழறீங்க..?” என்று வசந்தா பதறிபோய் கேட்க, மது எழுந்து அவர்களிடம் வந்தவள், 
“என்ன ஆச்சும்மா..?” என்று அம்மாவிடம் கேட்டாள். 
“தெரியல மது..” என்று வசந்தா சொல்லவும், 
“அத்தை.. ஏன் இப்படி அழறீங்க..?” என்று மது நேரடியாக அவரிடம் கேட்டுவிட, வைஜயந்தியின் அழுகை ஓர் நொடி நின்று இன்னும் அதிகரித்தது. 
இத்தனை மாதம் அனுபவித்து கொண்டிருந்த வேதனை, ஒதுக்கம், குற்ற உணர்ச்சி மொத்தமும் கண்ணீராக வெளியேற, வசந்தாவும், மதுவும் தான் அவரை சமாதானம் செய்து கொண்டிருக்க, ஆண்கள் மூவரும் அதை உணர்ச்சியே இல்லாமல் சாதாரணமாக பார்த்து கொண்டிருந்தனர். 
ஒரு கணவனாக சண்முகத்திற்கு மனைவியின் அழுகை சிறிதும் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், அதிலும் மகன் சொந்த  வீடிருக்க, தனியே வீடு எடுத்து தங்கியிருந்தது தெரிந்து இன்னும் இன்னும் வேதனை கொண்டிருந்தவருக்கு மனைவியின் அழுகையில் வருத்தம் ஒன்றும் தோன்றவில்லை. 
“இத்தனை வருட ஆட்டத்திற்கும் சேர்த்து இப்போது அனுபவிக்கிறாள், அவளை கண்டிக்காத குறைக்கு நானும் அனுபவிக்கிறேன்..” என்ற உண்மையை மனதார ஏற்று கொண்டவருக்கு மனைவியின் அழுகை எப்படி பாதிக்கும்..? 
இவருக்கு இப்படி என்றால் வடிவேலுவுக்கு சொல்லவே வேண்டாம்.. “பேசறதை எல்லாம் பேசிட்டு  அழுதா சரியாகிடுமா..?” என்ற கோவம் தான் அவரிடம். 
அவரின் மகன் ப்ரேமோ அவர் கதறும் போது ஓர் நொடி பார்த்தவன், அதற்கு பிறகு அப்படியே கண் மூடி கொண்டான். முகம் இறுகியிருக்க என்ன நினைக்கிறான் என்றுகூட தெரியவில்லை. 
“இப்படி அழுறாங்களே எழுந்து வந்து ஒரு வார்த்தை பேசலாம் இல்லை..” என்று கணவனை ஆதங்கத்துடன் பார்த்த மதுவிற்கு அவனின்  தொண்டை வேகமாக வேகமாக ஏறி இறங்குவதிலே அவனின் நிலையில்லா மனது  புரிந்தது. 
“போதும் சம்மந்தி.. எவ்வளவு நேரம் தான் அழுவீங்க..?” என்று வசந்தா வைஜெயந்தியை  ஆறுதலாக சமாதானம் செய்தவர், மது கொண்டு வந்த கொடுத்த தண்ணீர் பாட்டலை அவரிடம் கொடுத்தார். 
வைஜெயந்தியும் மறுக்காமல் வாங்கி குடித்தவர், மதுவை பார்க்க கூட முடியாமல் குறுகி போய் ஓரமாக அமர்ந்துகொண்டார்.
“வசு.. இன்னும் ஒரு மணி நேரமாவது  ஆகும்ன்னு நினைக்கிறேன்..” என்று வெளியே வந்த  சுபா, மதுவை பார்க்க அவள் அவசரமாக வேறு புறம் பார்வையை திருப்பி கொண்டாள். 
“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு அவளை இங்க இப்படி உட்கார வச்சிருக்க போறீங்க..?  தேவையில்லாத நேரத்துல தான் ரெண்டு பேரும் குதிப்பீங்களா..?” என்று வடிவேலுவையும், ப்ரேமையும் பார்த்து நக்கலாக சொல்லி செல்ல இருவரும் மதுவை முறைப்புடன் பார்த்தனர். 

Advertisement