Advertisement

“இது உங்க சம்மந்தி வீடு மட்டுமில்லை, உங்க தங்கச்சி வீடும் தான், காபியை குடிங்க, என் மருமகளுக்கு நாள் வேற நெருங்குது, அதுக்கு என்ன செய்யன்னு நாம பார்க்கணும் இல்லை..” என்று சண்முகத்தின் விலகலை நொடியில் உடைத்து அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பேசிய வசந்தாவை  சண்முகம் மனம் நிறைந்து பார்த்தார். 
“நீ உண்மையாவே என் தங்கச்சி தான்மா..” என்று இந்த முறை காபியை எடுத்து குடிக்க, ரவி அம்மாவை பார்த்து “:கலக்கிட்ட போ..” என்று புருவம் தூக்கினான். 
“என்னடா நடக்குது இங்க..?” என்று மதுவும், ப்ரேமும், வடிவேலுவும் தான் திகைத்து போனார்கள். 
“மாப்பிள்ளை.. உங்களுக்கும் காபி..” என்று வசந்தா ப்ரேமை பார்த்து கேட்க, “போங்க உங்களுக்கு சிலை கேன்சல்..” என்ற பார்வை பார்த்தவன், மனைவியிடம், 
“கிளம்பு வீட்டுக்கு போலாம்..”  என்றான். 
“நான் வரல..” என்ற மது எழுந்து கீழிருக்கும் ரூமிற்கு சென்றுவிட, ப்ரேம் வேறு வழி இல்லாமல் மனைவி பின்னே சென்றவன்,  
“ஏன் வரல..?” என்று கேட்டான். 
“அதான் சொன்னேனே..?” என்று மது விறைத்து பதில் சொன்னாள். 
“எது நீ கொடுத்த பணத்தை நான் திருப்பி கொடுத்துக்கா..?”
“ஆமா.. நான் யார் உங்களுக்கு பணம் கொடுக்கன்னு தானே நீங்க நான் கொடுத்த பணத்தை திருப்பு கொடுத்தீங்க..?”
“ம்ப்ச்.. நான் முதல்லே சொல்லிட்டேன், அது உங்க அப்பா பேசின பேச்சுக்காக தான் ரிட்டர்ன் கொடுத்தேன்னு..”
“அவர் பேசினா..?” என்று மித்ரா விடாமல் பேச, கோபத்துடன் தலையை கோதி கொண்ட ப்ரேம், 
“இங்க பாரு மித்ரா.. அவர் எதை நினைச்சு அன்னிக்கு அப்படி பேசினாரோ எனக்கு தெரியாது, ஆனா அவர் பொண்ணோட உழைப்புல தான் நாங்கன்னு பேசினது என்னை ரொம்ப ஹர்ட் செஞ்சது உண்மை..”
“அந்த இடத்துல என்னோட சுயமரியாதை, தன்மானம் சீண்ட பட்டதும் உண்மை.. அதுக்கான பதில் தான் இந்த பணம், இதுக்கும் நம்ம உறவுக்கும் என்ன சம்மந்தமும் இல்லை..”
“இருக்கு.. நீங்க கொடுத்த இந்த பணம் என்னோட பணம், நான் உங்களுக்காக கொடுத்த பணம், அதை நீங்க திருப்பி கொடுத்தது நான் உங்களுக்கு யாரோ தானேன்னு என்னை நினைக்க வைக்குது..”
“அதுக்கு இப்போ என்ன செய்யணுங்கிற..? நான் கொடுத்த பணத்தை திருப்பு எடுத்துக்கணுங்கிறியா..? முடியாது..” என்று ப்ரேம் கோவத்தோடு மறுக்க, அவனை தீர்க்கமாக பார்த்த மது, 
“நான் உங்களை எடுத்துக்க சொல்லவே இல்லை, எப்போ அந்த பணத்தை வச்சு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டேங்களோ அப்போவே எனக்கு அந்த பணம் வேண்டாம்ன்னு நான் முடிவெடுத்துட்டேன்.. இனி நீங்களாச்சு, அந்த பணமாச்சு, உங்க  மாமனாராச்சு..” என்று முடித்தவளை கண் மூடி திறந்து நிதானமாக பார்த்த ப்ரேம், 
“மித்ரா.. எனக்கு உண்மையாவே தெரியல, நீ  என்னை ஏதோ செய்றடி..? எனக்கே தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்காக நான் இன்னும் எவ்வளவு தான் பேஸ் பண்ணனும்..? என்னை ஏன் இப்படி படுத்துற..?”
“அதான் பிரச்சனையான பணம் கொடுத்து எல்லாம் முடிஞ்சிருச்சு இல்லை, நீ ஏன் புதுசா ஆரம்பிக்கிற..? ஏன் என்னோட வீட்டுக்கு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கற..?”
“இது பிடிவாதம் இல்லைங்க.. உங்க மேல எனக்கிருக்கிற வருத்தம், கோவம், ஒருவகை ஏமாற்றம்..” என்று விரக்தியுடன் சொன்னவள்.
“நான் உங்களை பார்த்த நொடியில் இருந்தே  நீங்க வேற நான் வேறன்னு  நான் நினைச்சதே இல்லை, நாமன்னு நினைச்சு தான் அந்த பணத்தை உரிமையா கொடுத்தேன், ஏன் அது என்னோட கடமைன்னு கூட நினைச்சிருக்கேன்.. ஆனால் நீங்க என்னை அப்படி நினைக்கல போல..”
“அதான் அப்பா பேசிட்டார்ன்னு அந்த பணத்தை கொடுத்துட்டு என்னை கூட்டிட்டு போறேன்னு இங்கேயே விட்டுட்டு போயிட்டிங்க, இதை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை, பணத்துக்காக நீங்க என்னை விட்டு கொடுத்த மாதிரி இருந்துச்சு..” என்று கண்ணில் நீர் தேங்க சொல்ல, ப்ரேம் திகைத்து போனான். 
“என்ன என்ன பேசுற நீ..? நான் பணத்துக்காக உன்னை விட்டு கொடுத்தேன்னு தான் நீ நினைக்கிறியா..?” 
“உங்க தன்மானத்துக்கு, சுயமரியாதைக்கு தான் என்னை விட்டுட்டு போனீங்கன்னா கூட உங்க தன்மானம், சுய மரியாதை என்னோட சம்மந்த படலையா..?”
“இப்படி பணத்துக்காக சண்டை போட்டு என்னை விட்டுட்டு போறது எனக்கென்ன மரியாதையை கொடுக்கும்ன்னு நீங்க நினைக்கலையா..? உங்க பொண்டாட்டியோட கௌரவம் உங்களுக்கு முக்கியமில்லையா..?”
“என்னை நீங்க  விட்டுட்டு போனது எனக்கு எவ்வளவு வேதனையை, அழுத்தத்தை கொடுக்கும்ன்னு நீங்க உணரலையா..?” என்று கொதித்தவள், 
“உங்களோட  இந்த கேரக்ட்டருக்கு பயந்து தான் நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட இருந்து மறைச்சேன், எங்க அப்பாகிட்ட மறைச்சதும் அதுக்கு பயந்து தான்..”
“கடைசில   நான்  உங்க தன்மானத்தை, சுயமரியாதையை காப்பத்தலைன்னு  என்மேல கோவப்படுறீங்க..?”
“நம்மவங்களுக்காக நாம செய்றது அவங்க தன்மானத்தை, சுயமரியாதையை குறைக்குமா..? அப்போ அவங்க ஒன்னு இல்லையா..? வேற வேறயா..? சொல்லுங்க..” என்று கணவனை பார்த்து கோவத்துடன் கேட்டவள்,
“நான் செஞ்சது உங்களை ஹர்ட் செஞ்சிருக்குன்னு நீங்க செஞ்சதும் என்னை ஹர்ட் பண்ணியிருக்கு தான், நான் உங்களுக்கு எதையும் சொல்லலை, மறைச்சிட்டேங்கிறது தப்புன்னா.. என்னை நீங்க  இங்கயே  விட்டுட்டு போனதும் தப்புதான். என்னால அதை ஏத்துக்கவும் முடியல..”
“அதுவும் கல்யாணம் முடிஞ்சு அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த பிறகு உங்களால எப்படி என்னை இங்கயே விட்டுட்டு போக முடிஞ்சது..? அப்போ உங்களுக்கு என்னை விட உங்க தன்மானம், சுயமரியாதை தான் முக்கியம்ன்னா..  நான் தோத்து போயிட்டேன்னு தானே அர்த்தம்..?” என்று தன்னுடைய இத்தனை நாள் ஆதங்கத்தை, கோவத்தை ஏமாற்றத்தை கொட்ட, ப்ரேமிற்கு என்ன பேச என்று கூட தெரியவில்லை.
“ஊப்ப்ப்..” என்று  இயலாமையுடன் தலையை கோதி கொண்டவன், மனைவியை பார்த்தான். அவளும்  அவனை தான் பார்த்து கொண்டிருக்க, அவளின் அருகில் சென்று நின்றவன்,
“மித்ரா.. உண்மையிலே எனக்கு என்ன சொல்லன்னே தெரியல, நான் இது போல  எல்லாம் யோசிச்சதே இல்லை.. உன்னை நான் இங்க விட்டது உன்னை ரொம்ப பாதிச்சிருக்குன்னு தெரியுது..”
“ஆனா நான் நீ சொன்னது போலெல்லாம் இல்லைடி, என்னோட வாழ்க்கையில நீ எங்கேயும் இல்லாமல் இல்லை, நீ இல்லாமல் நான் இல்லை, இது தான் உண்மை..”
“எனக்கு  நீ எவ்வளவு முக்கியங்கிறதை சொல்ல கூட எனக்கு தெரியல, அதுக்கான வார்த்தைகள் கூட இல்லைன்னு தான் சொல்லுவேன்..” என்று மனதில் தோன்றியதை சொன்னவன், அவளின் கையை பற்றி கொண்டான். 
“எனக்கு நீ இல்லாமல் இருக்க முடியலைன்னு தான் இவ்வளவு சீக்கிரம் பணத்தை ரெடி செஞ்சு எடுத்துட்டு ஓடி வந்தேன்.. ப்ளீஸ்.. கிளம்பு வீட்டுக்கு போலாம்..” என்று கேட்க, அவனின் கையை விலக்கியவள், 
“நான் வரலைங்க..” என்றுவிட்டாள். 
“மித்ரா.. புரிஞ்ச்சுக்கோ, இது இப்போதைக்கு தீர கூடிய பிரச்சனை இல்லை, பேச பேச போயிட்டே தான் இருக்கும், கிளம்பு வீட்டுக்கு போலாம்..” என்று வற்புறுத்தி கூப்பிட, மித்ராவிடம் முழு அமைதி. 
“மித்ரா.. போதும், இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது, முதல்ல கிளம்பு நம்ம வீட்டுக்கு போவோம்.. ஏதா இருந்தாலும் அங்க போய் பேசிக்குவோம்..”  என்று மனைவியை நெருங்கி நின்றான். 
“இல்லைங்க.. நான் வரல..” என்று மித்ரா மறுபடியும் மறுக்க, ப்ரேமின் இழுத்து வைத்த பொறுமை பறந்தது. 
“நீ என்னடி வரமாட்டேன்னு சொல்றது..” என்று சீறியவன், மனைவியை கையில் ஏந்தி நடக்க ஆரம்பிக்க, கணவனின் காலரை இழுத்த மனைவி, 
“இதுவரைக்கும் நான் உங்ககிட்ட இருந்து எதுவும் கேட்கல, இப்போ கேட்கிறேன், எனக்கான ஸ்பேஸ் கொடுங்க,என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..” என்றாள் அழுத்தமாக. 
“மித்ரா.. மித்ரா.. என்ன பேசுற நீ..? நான் என்ன உனக்கு ஸ்பேஸ் கொடுக்கல..? இல்லை என்ன உன்னை புரிஞ்சுக்கல..?” என்று ஆற்றாமையுடன் மனைவியின் முகத்தை பார்த்து கேட்டவன் அங்கேயே நின்றுவிட்டான். 
“நான்.. நீங்க.. அப்பா எதோ ஒரு இடத்துல மாத்தி மாத்தி மத்தவங்களை ஹர்ட் பண்ணியிருக்கோம், அப்பாவோட பக்கம் என்னன்னு உங்களுக்கு தெரியணும்ன்னுதான் உங்க முன்னாடியே நான் அவர்கிட்ட பேசினேன்..”
“என்னால எப்படி  உங்களை விட்டு கொடுக்க முடியாதோ..? அப்படி அப்பாவையும்  என்னால விட்டு கொடுக்க முடியாது, எனக்கு நீங்களும் வேணும், அவரும் வேணும். நான் என்ன செய்யட்டும்..” 
“இது காலத்துக்கும் இப்படியே போக முடியாது இல்லை, நாளைக்கு மறுபடியும் உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தா பாதிக்க பட போறது நான் தான், இதுக்கு என்ன தான் முடிவு..?”
“நம்ம மூணு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டு கொடுக்கணும், இல்லை உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு புரிதல் வரணும், என்ன செய்யலாம்..? எனக்கு தெரியல.. சொல்லுங்க..” என்று கேட்ட மித்ராவின் கேள்விக்கு என்ன பதில்..?

Advertisement