Advertisement

அவளே என் பிரபாவம் 23
“என்ன மதுமா இப்படி கேட்கிற..? அது உன்னோட பணம் தாண்டா..” என்று வடிவேலு சற்று தடுமாற்றத்துடனே சொன்னார்.  
“அந்த பணத்தை எதுவும் செய்ய எனக்கு உரிமை இல்லையா..? இல்லை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையாப்பா..?” என்று மதுமித்ரா தொடர்ந்து கேட்க, பதறி போன  வடிவேலு, 
“என்னடா இப்படி எல்லாம் பேசுற..? உன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லாம இருக்குமா..?” என்று வருத்தத்துடன் கேட்டார். 
“அப்பறம் ஏன்பா அன்னிக்கு அப்படி பேசுனீங்க..? நான் அந்த பணத்தை யாருக்கோ கொடுக்கலப்பா, இவருக்கு தானே  கொடுத்தேன்.. இவர் ஒரு இக்கட்டில மாட்டுகிட்டு  தவிக்கும்  போது என்னால எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்..?” என்று மதுமித்ரா மனத்தாங்காலாக கேட்டாள். 
“ஆனால் அது எனக்கு அப்போ தெரியாதே  மதுமா, நீயும் இவரும் அப்படி தெரியற மாதிரி எதுவும் நடந்துக்கல..” 
“சரிப்பா.. அப்போ தெரியாது, ஆனா அதுக்கப்புறம் தெரியும்தானே..?” 
“தெரியும் தான், அதனாலதானே நான் இவருக்கு உன்னை கல்யாணம் செஞ்சு கொடுத்தேன், எப்போ எனக்கு தெரியாம நீ இவருக்கு பணம் கொடுத்து என்னை தள்ளி வச்சியோ அப்பவே நான் உன்னை இவருக்கு கொடுக்க சம்மதிச்சிட்டேனே..?” என்று வடிவேலு மருமகனையும், மகளையும் பார்த்து ஆதங்கத்துடன் சொல்ல, ப்ரேமிற்கு அதிர்ச்சி. 
“ஓஹ்.. இவருக்கும் இவ எதுவும் சொல்லாமதான் செஞ்சாளா..? அந்த கோவத்துல இந்த மனுஷன் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரா..?” என்று  மனைவியையும், மாமானாரையும் பார்த்தான். 
அவனின் அதிர்ச்சி பார்வை எதனால் என்று மதுவுக்குமே தெரிய தான் செய்தது. அவள் இதுவரை இதை எல்லாம் அவனிடம் சொன்னதில்லை, சொல்லவும் முடியாதே, அது இப்போது தெரிய வந்துவிட்டது,
“நான் அப்போ பேசினதுக்கு காரணம் இவங்க அம்மா உன்னை பணத்தை  வச்சு கேவலமா பேசினதால தான் மதுமா.. அது உனக்கும் தெரியும் தானே..?” 
“தெரியும்ப்பா.. ஒரு அப்பாவா நீங்க என்னை பத்தி மட்டுமே யோசிச்சு பேசிட்டிங்க, ஆனா உங்க வார்த்தை மத்தவங்களுக்கு எந்தளவுக்கு காயத்தை கொடுத்திருக்கு பார்த்தீங்களா..?” என்று மாமனாரையும், கணவனையும் பார்த்து சொன்னாள். 
“நான் உண்மையாவே அப்போ உங்களை எல்லாம் இந்த கோணத்துல வச்சு பேசல சம்மந்தி, உங்க வீட்டம்மா உங்க கடை மறுப்படியும் நல்லா ஓடினதால தான் நாங்க கல்யாணத்துக்கு ஒத்துகொட்டோங்கிற மாதிரி பேசிட்டாங்க, அதை கூட நான் பெருசா எடுத்துக்கல..”
“ஆனா என் பொண்ணை போய் பணத்து மேல ஆசைப்படுறவ அப்படிங்கிற மாதிரி பேசிட்டாங்க, அதை எப்படி என்னால பார்த்திட்டு இருக்க முடியும்..?”
“ஒரு நேரத்தில  அவ கையில சுத்தமா காசு இல்லாமல் போச்சு, வந்த ஆர்டரை முடிச்சு கொடுக்க கூட பணம் இல்லாமல் லோனுக்கு போக ரவிகிட்ட கேட்கிற வரை எங்க யாருக்கும் அது தெரியவும்  தெரியாது, சொல்லவும் இல்லை..”
“கடைசில நாங்களா தான் வற்புறுத்தி அவளுக்கு அந்த பணத்தை கொடுத்தோம், அதை கூட ஆர்டர் முடிச்சு வந்த காசுல உடனே எங்களுக்கு  ரிட்டர்ன் கொடுத்திட்டா, அவளை போய் அவங்க அப்படி பணத்தை வச்சு பேசவும் தான் என்னால தாங்க முடியாம அவ உழைப்புல தான் நீங்கன்னு பேசிட்டேன்..”
“மத்தபடி வேறந்த தப்பான எண்ணமும் இல்லை, யாரையும் அவமான படுத்தணும்ன்னு நினைக்கல, யாரோட தன்மானத்தை, சுயமரியாதையை சீண்டணும்ன்னு நினைக்கவே இல்லை..” என்று வடிவேலு தன் தரப்பு விளக்கத்தை கொடுக்க, ப்ரேமுக்கு அவரின் பக்க நியாயம் லேசாக புரிவது போல இருந்தது, 
“ஆனாலும்..” என்று ஏனோ முழுதாக ஏற்று கொள்ள முடியாமல் ஒரு உறுத்தல்.
“ப்பா.. நீங்க எனக்காக பேசினாலும்,  சில வார்த்தைகள் தப்பு தானே..? அதிலும் இவர் சட்டையை பிடிச்சது ரொம்ப தப்பு..” என்று கணவனை பார்த்து சொல்ல, வடிவேலு சங்கடத்துடன் மருமகனை பார்த்தார். 
“அது.. உன்னை அடிக்கவும் கோவம் வந்து செஞ்சது தான் மதுமா.. அவரை அவமானப்படுத்தனும்ன்னு நினைச்சு செய்யல, இது சாத்தியமான உண்மை..” என்று ப்ரேமை பார்த்து விளக்கத்தை கொடுக்க, ப்ரேம் முகம் திருப்பி கொண்டான். 
“கோவம் வந்தா மருமகன் சட்டையை பிடிப்பாராம்..? நான்  பதிலுக்கு அவர் சட்டையை பிடிச்சிருந்தா..?” என்று உள்ளுக்குள் கொதித்தவனின் ஆதங்கம், அதே வார்த்தைகளுடன் மதுவிடம் இருந்து வந்தது. 
“கோவம் வர்றது சரிப்பா, ஆனா எதிர்ல இருக்கிற மனுஷன் யார்ன்னு தெரியாத அளவு கோவம் வர்றது தப்பு தானேப்பா..” என்று நிதானமாக கேட்க, 
“அதான் சொன்னேனே மதுமா.. உன்னை அடிக்கவும் எனக்கு தாங்கலன்னு..” என்று வடிவேலு பேச, 
“க்கும்.. ரொம்பத்தான்…”  என்ற நொடிப்பு வசந்தாவிடம் இருந்து வர, எல்லோரின் பார்வையையும் அவரின் பக்கம் திரும்பியது, 
“எப்படி எப்படி அவர் பொண்டாட்டியை அவர் அடிச்சது உங்களுக்கு தாங்கலையா..? அப்போ இதுவரைக்கும் என்னை  நீங்க அடிச்சதுக்கு எங்க அப்பா உங்களை புல்டோசர் வச்சுத்தான் புரட்டி புரட்டி  எடுக்கணும்..” என்று கடுப்பாக சொல்ல, எல்லோரின் முகத்திலும் லேசான சிரிப்பு என்றால் வடிவேலு மனைவியை பார்வையாலே எரித்தார். 
“ம்மா.. ஏன்ம்மா இப்படி..?” என்று ரவி சிரிப்புடன் அம்மாவின் பக்கம் முணுமுணுக்க,
“பின்ன என்ன ரவி..? அவர் பொண்டாட்டியை அவர் அடிச்சதுக்கு இவர் சட்டையை பிடிப்பாரா..? கொடுக்கிற விளக்கத்தை பாரு.. இவர் அவர் பொண்ணை அடிக்காமலே வளர்த்தா எல்லோரும் அப்படியே இருப்பாங்களா..?”
“என்ன தான் இருந்தாலும் மகள் வேற.. பொண்டாட்டி வேற.. எல்லாம்தான் இருக்கும்..” என்று சத்தமாகவே சொல்ல, வடிவேலு மனைவியை என்ன செய்வது என்று முறைத்து பார்க்க, ப்ரேம் அத்தையை மிகுந்த பாசத்துடன் பார்த்து வைத்தான்.
“ப்பா.. நான் உங்ககிட்ட சொல்லாம பணம் கொடுத்தது ரொம்ப தப்பு, ஒத்துகிறேன், ஆனா இவருக்கு கொடுத்தது தப்பு இல்லை, இவருக்கு மிஞ்சு என்கிட்ட எதுவும் இல்லைங்கிறது தான் உண்மை..”
“ஆனா இந்த இடத்துல ஒரு மகளா நான் உங்களை கஷ்டபடுத்தியிருக்கேன், உங்ககிட்ட எதுவும் சொல்லாமல் மறைச்சிருக்கேன், எனக்கு அந்த நேரத்துல அதை விட்டா வேற வழியும் தெரியல, உங்ககிட்ட கேட்டா நீங்க கண்டிப்பா வேண்டாம்ன்னு தான் சொல்லியிருப்பீங்க..”
“உங்களை மீறி எதுவும் செஞ்சதா இருக்க கூடாதுன்னு தான் நான் உங்ககிட்ட சொல்லாமல் கொடுத்தேன், அது கண்டிப்பா தப்பு தான், என்னை மன்னிச்சிருங்க..” என்று இத்தனை நாளாக நினைந்திருந்ததை இன்று தந்தையிடம் சொல்லி கை குவித்து மன்னிப்பு கேட்க, துடித்து போன வடிவேலு, 
“என்ன மதுமா இதெல்லாம்..? நீ யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்கிறதை நான் விரும்ப மாட்டேன்னு உனக்கு தெரியாதா..? என் பொண்ணு எப்போவும் கெத்தா தலை நிமிர்ந்து தான் நிக்கணும், அது என்கிட்ட ஆனாலும் சரி..”  என்று மகளின் கையை இறக்கி உணர்ச்சிவசபட, 
“ஆமாமாம்..” என்ற கிண்டல் சத்தம் மறுபடியும் வசந்தாவிடம் இருந்து வர, எல்லோரும் அவரை பார்த்தனர். 
“என்ன மது நீ..? உன் புருஷனுக்கு நீ கொடுத்த காசை பத்தி இவருக்கு ஏன் விளக்கம் கொடுத்திட்டு இருக்கே..?  அவர் காசையா எடுத்து கொடுத்த, உன் சம்பாத்தியத்தை தானே கொடுத்த..”
“இவர் என்னமோ பொண்டாட்டி கையில் இருந்து காசே வாங்காத மாதிரி பேசிட்டிருக்காரு, இதுவரை என்கிட்ட இருந்து இவர் வாங்கியிருக்க  காசுக்கு நான் ஒரு பேங்க்கே வச்சிருக்கலாம்..”
“அவ்வளவு வங்கியிருக்காரு, இதுவரை ஒத்தை ரூபா கூட திருப்பி கொடுத்ததில்லை..” என்று மறுபடியும் நக்கலாக சொல்ல, வடிவேலு மனைவியை குதறி விடும் கோவத்தோடு பார்க்க, ப்ரேம் அத்தைக்கு சிலையே வைக்கும் பக்தியோடு பார்த்தான். 
“ம்மா.. கலக்குற போ..” என்று ரவி அடக்க முடியா சிரிப்புடன் சொல்லிவிட, வடிவேலுவின் முறைப்பு மகனுக்கு இடம் பெயர்ந்தது.
“ம்மா..” என்று மது அதட்ட, 
“நீ சும்மா இருடி, எப்போ பார்த்தாலும் எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துட்டே இருந்தா நீ  எப்போ நிம்மதியா வாழறது..? வயித்துல பிள்ளையை வச்சுக்கிட்டு கூட இவருக்கு நீ விளக்கம் கொடுக்கணுமாக்கும்..”,  
“ஏன் அவர் பெத்து வளர்த்த புள்ளையை பத்தி அவருக்கு தெரியாது,  அவர் கை காமிச்ச மாப்பிள்ளை மேலதானே நீ ஆசைப்பட்ட, அதுல என்ன தப்பை கண்டுக்கிட்டாராம் இவர்..?”
“எல்லாத்துக்கும் சும்மா சும்மா போட்டி போட்டுக்கிட்டு நின்னா ஆச்சா..? நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா..? அதுக்கான வழி என்னன்னு ஒரு அப்பாக்கு தெரியாதா..?” என்று கணவனை  வாங்கியவரின் பார்வை மருமகன் மேல் நிலைத்தது, 
“புருஷனுக்கு ஒரு கஷ்டம் வரும் போது தாங்குற மனைவி கிடைக்கிறது  சந்தோஷமான விஷயம் தானே.. அதை அனுபவிக்காம ஆராய்ச்சி பண்ண கூடாது..”
“யாரோ எதோ கேட்டாங்கன்னு பொண்டாட்டிகிட்ட விறைப்பா இருக்க கூடாது, ஆமா என் பொண்டாட்டி எனக்கு கொடுத்தா, உனக்கென்னன்னு கேட்டுட்டு போயிட்டே இருக்கணும்.. அதைவிட்டு இதெல்லாம் தேவையா..?” என்று மருமகனையும் தாக்கியவர், 
“ண்ணா.. நீங்க முதல்ல உட்காருங்க, மறுபடியும் சூடா காபி எடுத்துட்டு வரேன்..” என்று சண்முகத்திற்கு மறுபடியும் சென்று சூடாக காபி எடுத்து வந்து கொடுத்தவர், 
“உங்களுக்கு தெரியாதாண்ணா.. வீடுன்னா எல்லாம் தான் இருக்கும், இன்னிக்கு சண்டை வரும், நாளைக்கே சமாதானம் ஆகிடும், அதுக்காக நம்ம உறவை நாம விலக்கி வைக்கணுமா..?”
“இவங்க எல்லாம் மாற மாட்டாங்க, இவங்களை பார்த்தா நமக்கு தான் நிம்மதி போகும், இவங்க இன்னிக்கு அடிச்சுக்குவாங்க, நாளைக்கு வேற வழியில்லாமல் சேர்ந்துப்பாங்க, நமக்கு என்ன..? விடுங்கண்ணா நீங்க..?”

Advertisement