Advertisement

அவர் மதுவுடன் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க மாட்டார், பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே அழைத்துவிடுவார், அது மணிக்கு ஒரு முறையாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார். ஆனால் இந்த இரண்டு நாட்களாக அவர் மொத்தமே ஒரு மூன்று முறைதான் அழைத்திருப்பார், அதுவும் சில நொடிகளில் முடிந்துவிட்டது என்பது இப்போது புரிந்தது. 
இந்த இரண்டு நாளும்  ஆர்டருக்கான வேலைகளில் இறங்கிவிட்டதில் இதை கவனிக்காமல் விட்டது புரிய  ஏனோ ஒரு பயம். 
அவள் சில மாதங்களாக முன்போல் தந்தையிடம் பேசுவதில்லை, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டும், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருந்தவளுக்கு அவரின் இரண்டு நாள் விலகல்  தாங்கமுடியதாகி போனது. 
அவருக்கும் இதுபோல் தானே  இருந்திருக்கும் என்ற உறுத்தலோடு,  அவரின் விலகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்..? என்ற யோசனையின் முடிவு பயத்தையும்  கொடுத்தது.  
அவள் இதுவரை அவருக்கு தெரியாமல் செய்தது என்பது ப்ரேம் பண விஷயமும், அவர்களுக்காக இவள் தயாரித்து கொடுக்கும் டிசைனும் தான்,  ஒரு வேளை அது தெரிந்திருக்குமோ..? என்ற நினைத்தவளுக்கு உடல் லேசாக தூக்கி போட, 
“மது என்னடா ஆச்சு..?”  என்று போன் பேசி முடித்து வந்த ரவி தங்கையின் பயந்த முகத்தை பார்த்து பதட்டத்தோடு கேட்டான். 
“ண்ணா.. அப்பா.. அப்பாக்கு தெரிஞ்சிருச்சுண்ணா.. அவர்.. அவர் என்னை..” என்று திக்கி பேச, 
“என்ன மது சொல்ற..? அப்பாக்கு என்ன தெரிஞ்சிருக்கு..?” என்று  ரவி யோசனையாக கேட்டான். 
“அதான்ண்ணா.. நான் காசு கொடுத்தது..” என்று மது உறுதியாக சொன்னாள். 
“இருக்காது மது, அப்பாக்கு எப்படி தெரியும் சொல்லு..?” 
“இல்லண்ணா.. அப்பாக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கு, எனக்கு அப்பாகிட்ட  போகணும்..  வா நாம இப்போவே  ஊருக்கு போகலாம்..”  என்று ஆர்டரை சுத்தமாகவே மறந்துவிட்டு கிளம்பும் தங்கையை பிடித்து வைக்க முடியாமல், தானே வொர்க்கிங் செக்ஷ்னுக்கு சென்று வேலைகளை சொன்னவன்,  தங்கையுடன் காஞ்சிபுரத்திற்கு கிளம்பிவிட்டான்.
“மது, ரவி.. என்ன இந்த நேரத்துல..? அதுவும்  சொல்லாம கொள்ளாம வந்துருக்கீங்க..?” என்று இரவு போல் வந்திறங்கிய பிள்ளைகளை பார்த்து வசந்தா ஆச்சரியத்தோடு கேட்டார். 
“ஏன்மா வரக்கூடாதா..?”  என்றவாறே அமர்ந்த கணவனையும், சோர்ந்து தெரிந்த மதுவையும் திவ்யா சந்தேகத்துடன் பார்த்தாள். 
“என்னடா இது கேள்வி..? வரக்கூடாதான்னு..?” என்று ரவி அதட்டியவர், 
“மது.. ஏன் ரொம்ப டல்லா இருக்க..?” என்று மகளின் பக்கத்தில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டு கவலையாக கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், தந்தையின் அறையை பார்த்தவள், 
“ம்மா.. அப்பா எங்க..?” என்று கேட்டாள்.
“உள்ளத்தான் இருக்கார்..”  என்று வசந்தா சொல்ல, ரவியும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். அவரின் செல்ல மகள் வந்த பிறகும் வெளியே வராமல் உள்ளேயே இருக்கும் தந்தையின் செயலில் ரவிக்கும் மதுவின் சந்தேகம் சரியோ..? என்று தோன்றியது. 
திவ்யாவிற்கும் எதோ சந்தேகம் தோன்ற நடப்பதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள். 
“நான் போய் அப்பாவை வரச்சொல்றேன் இரு..” என்று வசந்தா சென்று கணவனிடம் சொல்ல, அவரும் வெளியே வந்தவர், அமைதியாக ரவியின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, ரவிக்கு தான் அவரின் பக்கத்தில் சாதாரணமாக அமரமுடியவில்லை. 
“ப்பா..”  என்று தன் பக்கமே பார்வையை திருப்பாமல் அமர்ந்து கொண்ட தந்தையின் பாராமுகத்தில்  மதுவின் குரல் கலங்கி ஒலித்தது. 
“சொல்லு மது..”  என்ற வடிவேலுவின் விலகல் பேச்சில் எல்லோரும் இவர்களையே பார்த்தனர். 
“ப்பா..”  என்ற மது எதுவும் பேசமுடியாமல், தானே சென்று அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டவள், அவரின் கையை பற்றிகொண்டாள். 
தன் கையை பற்றி கொண்ட மகளின் கையை வெறித்த வடிவேலு,  அவளின் கையை சேர்த்து பிடிக்கவும் இல்லை, தள்ளி விடவும் இல்லை..  கல் போலே அமர்ந்திருக்க, மதுவிற்கு கண்ணில் நீர் துளிர்த்தது. 
அவள் பிறந்த நொடியில் இருந்து  ஆரம்பித்த அவர்களின்  தந்தை மகள்  பிணைப்பில் முதல் முறையாக ஒரு விரிசல், விலகல், ஒதுக்கம், வருத்தம்.. எல்லாம் மிக தெளிவாக தெரிய, மது  தானே அவரின் கை மேல் இருந்த தன் கையை எடுத்து கொண்டாள்.
தந்தையும், மகளும்  அருகருகே அமர்ந்திருந்தாலும் பார்வை எங்கோ வெறித்திருந்தது, பேச்சு என்பது இருவருக்கும் சுத்தமாகவே வரவில்லை, தொண்டை, மனது இரண்டும் அடைத்திருந்தது. சில நிமிடங்கள் மிக மிக அழுத்தமான மௌனம். 
வடிவேலுவின் இறுகிய முகமும், மதுவின் கலங்கிய முகமும் பார்த்தபடி கவலையாக நின்ற வசந்தா மகனை கேள்வியாக பார்க்க, அவன் இவர் பார்வையை கவனமாக தவிர்த்து கொண்டிருந்தான். அப்படியே  சில நிமிடங்கள் கடக்க, அதற்கு மேலும் பொறுக்க முடியா வசந்தா, 
“என்னங்க..? என்ன நடக்குது இங்க..? ஏன் மதுகிட்ட பேசமாட்டேங்கிறீங்க..? ஏன் எப்படியோ இருக்கீங்க..? சொல்லுங்க..” என்று கணவனிடமே கேட்டவர், அவரின் அமைதியில், 
“மது.. நீயாவது சொல்லு, என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..? ஏன் அப்பா.. நீ.. இவ்வளவு அமைதியா உட்கார்ந்துருக்கீங்க..? என்னைத்தாண்டி ஆச்சு..?” என்று மகளிடமும் பதட்டத்துடன் கேட்டார். 
“ம்மா..”  என்ற ரவியை கோவமாக பார்த்தவர், “உனக்கு தெரியும் ரவி, என்னன்னு சொல்லு..?” என்று மகனிடம் கேட்க, 
அவன் தயக்கத்துடன், “அது பணம்.. பணம்..” என்றவாறே அம்மாவை பார்த்தவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த மனைவி தெரிய, கப்பென வாயை மூடிகொண்டான்.
“என்ன பணம்..? மதுவுக்கு கொடுத்த பணமா..? அதுக்கு என்ன இப்போ..?” என்று வசந்தா கேட்க, 
“அது.. மது பணம் அவகிட்ட இல்லை, அதான் அப்பா..” என்று வடிவேலுவை பார்த்தபடி  தடுமாறினான். அவனுக்குமே தந்தைக்கு தெரிந்திருக்கிறது என்று புரிய, மேலும் சொல்ல முடியாமல் நின்றான். 
“என்ன பணம் இல்லையா..? என்ன ரவி சொல்ற..? அவ்வளவு பணம் எப்படி இல்லாமல் போகும்..?” என்று கேட்க, திவ்யா நக்கலாக சிரித்தவள், 
“என்ன செஞ்சாங்களோ..? எல்லாம் பணமும் காலியாகி  வீட்ல இருந்து இல்லை  வாங்கியிருக்காங்க, அவங்களை போய் யார் என்ன கேள்வி கேட்க முடியும்..? அவங்கதான் உரிமைபட்டவங்களாச்சே.. என்ன வேணுமாலும் செய்யலாம்..?”  என்று கிண்டலாக சொல்ல, 
“திவ்யா..” என்று ரவி கோவமாக அதட்டினான். 
“இப்போ எதுக்கு என்னை அதட்டுறீங்க..? நானா சொன்னேன், நீங்கதானே  காசு இல்லைன்னு சொன்னேங்க..? அதைத்தானே கேட்டேன்..? தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் என்னையே அதட்டுறது..”  என்று கோவமாக பேசபவளை திரும்பி வெறித்த வடிவேலு, 
“நீ சொன்னது ரொம்ப சரிம்மா.. என் மகதான் தப்பு.. அவளுக்குதான் அது தெரியல.. கண்டிப்பா ஒரு நாள் தெரிஞ்சுப்பா..”
“அப்பறம்.. அவ வச்சிருந்த பணம் எல்லாம் அவளோட இத்தனை வருஷ உழைப்பு, அதை அவ என்ன செஞ்சான்னு கேள்வி கேட்கிற ரைட்ஸ் யாருக்கும் இல்லை, என்னையும் சேர்த்துதான்.. சரிதானே மது..?”   என்ற வடிவேலுவின் கேள்விக்கு  மதுவின் கண்ணில் இருந்த கண்ணீர் உருண்டு அவளின்  பிணைந்த கையில் விழுந்தது. 
“ப்பா..” என்று பேசவந்த மகளை  விரக்தியாக பார்த்து சிரித்தவர், 
“இவங்களுக்காகவா என்னை தள்ளி வச்ச..?” என்ற கேள்வியை தாங்கி பார்க்க, மதுவின் முகம் கசங்கி போனது.
“ண்ணா.. எப்போ பார்த்தாலும் அந்த மதுவுக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருப்பீங்களே.. இப்போ பாருங்க, அவ வச்சிருந்த பணத்தை எல்லாம் என்ன பண்ணான்னு தெரியலை,  ஏதோ ஆர்டர் செஞ்சு கொடுக்க கூட  கையில் சுத்தமா காசு இல்லாம வீட்ல இருந்து வாங்கியிருக்கா..”  என்று ப்ரேமிற்கு போன் செய்து , திவ்யா நக்கலாக சொல்ல, அவனுக்கு அதிர்ச்சி. 
“என்ன சொல்ற..? மதுகிட்ட காசு இல்லையா..?” என்று கேட்டான். 
“ஆமாண்ணா… அத்தை சொல்றதை பார்த்தா நிறைய காசு வச்சிருந்திருப்பா போல, இப்போ இல்லைன்னு ரொம்ப சாதாரணமா சொல்லி வீட்ல இருந்து காசு வாங்கிக்கிட்டா..”  என்று நொடித்த தங்கையின் பேச்சில் கோவம் கொண்ட ப்ரேம், 
“திவ்யா..  என்ன பேசிட்டிருக்க நீ..? அது  அவங்க அப்பா சம்பாத்தியம்,  அவர் அவரு மகளுக்கு கொடுக்கிறாரு.. உனக்கென்ன வந்தது..? நீ உன் வேலையை  பாரு..? தேவையில்லாம  எதுவும் பேசாத, உனக்கு அந்த உரிமையும் இல்லை. அது அவங்க விஷயம்..” என்று கண்டிப்போடு வைத்துவிட்டவன், அடுத்த  நொடி மதுவுக்கு அழைத்துவிட்டான். 
அவள் எப்போதும் போல் எடுக்கவில்லை. “ச்சு..” என்றவன், அடுத்த நொடி தன் கணக்கில் இருந்து  மருத்துவ அவசரத்துக்காக  வைத்திருந்த சில லட்சங்களை உடனடியாக மதுவின் அக்கவுண்டிற்கு அனுப்பினான்.  
அன்றிரவு போல் மதுவுக்கு மெசேஜ் வரவும் எடுத்து பார்த்தவள்,ப்ரேம் அனுப்பியிருந்த பணத்தை காணவும் உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள். 
“மித்ரா..” என்ற பல மாதங்களுக்கு பிறகான ப்ரேமின் ஏக்க குரல் மதுவிற்கு சிலிர்ப்பை கொடுக்க, கண்மூடி அதை அனுபவித்தவள்,
“எனக்கு எதுக்கு  காசு அனுப்பியிருக்கீங்க..?” என்று யாரோ போல்  கேட்டாள். 
“ம்ப்ச்.. அதைவிடு, எப்படி இருக்க..? ஏதாவது பிரச்சனையா..?” என்று கனிவாக கேட்டான். 
“நான் கேட்டேனே..? எதுக்கு என் அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்வர் செஞ்சிருக்கீங்க..?” என்று அதையே திரும்ப கேட்க, 
“ம்ப்ச்.. நான்தான் அதை விடுன்னு சொல்றேன் இல்லை,  திரும்ப திரும்ப அதையே ஏன் கேட்கிற..?” என்று அதட்டினான். 
“எனக்கு வேண்டாம்.. நான் ரிட்டர்ன் அனுப்புறேன்..” என்று சொல்ல, கோபம் கொண்ட ப்ரேம்,
“என்ன ரிட்டர்ன் அனுப்புறியா..? ஒழுங்கா எடுத்து யூஸ் பண்ணு, அனுப்பினா கொன்னுடுவேன்..” என்று கோவமாக மிரட்டினான். 
“வேண்டாங்க.. வடிவேலு மகளுக்கு நீங்க ஏன்  காசு கொடுக்கணும்..? நான் அனுப்பிடுறேன்..”  என்று கட் செய்துவிட, ப்ரேம் கோவமாக போனை தூக்கி போட்டான்.

Advertisement